Advertisement

அத்தியாயம் – 19
‘வேண்டுதலா?? எதுக்கு?? யாருக்காக??’ என்ற கேள்வி அடுத்தடுத்து அவளுக்குள் எழுந்ததை உள்ளேயே விழுங்கினாள்.
ஏனெனில் இன்னமும் அவர்களின் உறவில் பெரிதாய் எந்த மாற்றமும் வந்திருக்கவில்லை. அன்று அவள் மாறனின் வரவைப் பற்றியும் அதன் பின் நடந்ததை சொல்லி முடித்த பின் ஆளுக்கொரு யோசனையாய் அவர்கள் கலைந்து சென்றனர்.
தனுஷ் மீண்டும் எங்கோ கிளம்பிச் சென்றுவிட்டான் அன்று. அவன் தந்தையிடம் போன் செய்து சொல்லியிருப்பான் போலும் என்பது அவள் கணிப்பு.
இரவு வெகுதாமதமாய் வீட்டிற்கு வந்தவன் அவர்கள் அறைக்குள் சத்தமில்லாமல் நுழைந்தான். விளக்கணைத்து இரவு விளக்கு மட்டுமே ஒளிரவிட்டு புவனா கண் விழித்தே தான் படுத்திருந்தாள் அவன் வரவிற்காய்.
வந்தவன் குளியலறை சென்று முகம் கழுவி வந்தான். அவள் விழித்திருப்பதை காணவும் செய்தான், அதற்கு மேல் ஏதும் பேசவில்லை, அவளுக்கு முதுகுக்காட்டி படுத்துவிட்டான்.
அவனுக்குள் நிறைய குழப்பங்கள் கேள்விகள், எதுவும் தெளிவில்லாமல் ஓடிக் கொண்டிருந்தது. ஒரு புறம் மாறன் திருமண மண்டபத்தில் இருந்து ஓடியதற்கு காரணம் தன் தந்தையாய் இருப்பாரோ என்ற எண்ணம்.
இன்னொரு புறம் புவனாவிற்கும் மாறனுக்குமான உறவுநிலை. மாறனுடனான அவளின் திருமணம் நின்றபிறகு தானே இவர்களின் திருமணம் நடந்தது.
இன்னமும் மாறன் பற்றி முடிவாய் எதுவும் அவனுக்கு தோன்றவில்லை, இருவரும் அது குறித்து மனம்விட்டு பேசியிருக்கவில்லையே!!
புவனாவின் மனம் தற்போது தன் புறம் சாய்ந்திருப்பதை உணர்ந்தே தானிருந்தான். ஆனால் அது மாறனுடனான அவளின் திருமணம் நின்றதிற்கு பின்னே என்று எண்ணி அவன் மனம் கசப்பை உணர்ந்தது.
அந்த எண்ணமே அவனுக்குள் கட்டுக்கடங்காமல் பெருவலியையும் கொடுத்தது. அவளுக்கு தன்னை பிடிக்கிறது என்று உணர்ந்து ஒரு புறம் மகிழ்ந்தாலும் இப்போது மாறன் விஷயத்தின் பின்னே தன் தந்தை இருக்கிறார் என்று நினைக்கும் போது அவனுக்கு அது கலவரத்தையே கொடுத்தது.
புவனாவிற்கு இது தெரிந்தால் அவள் எவ்வாறு நடந்துக்கொள்வாள் என்று தெரியவில்லை அவனுக்கு. அவளிடம் இப்போது பேசும் மனநிலையில் அவனில்லை.
ஆனால் அவளோ அவன் எதுவும் பேசுவான் என்று எண்ணி அவன் முகத்தையே தான் பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் வீட்டிற்கு வந்ததும் அவளை அணைத்தவனின் செயல் அவள் மீதான அவனின் அக்கறையை காட்டியது.
வந்தவன் எதுவும் பேசாமல் படுத்தது மனதிற்கு கஷ்டமாகவே இருந்தது. அவன் பேசலைன்னா என்ன நாம பேசுவோம் என்று எண்ணியவள் எழுந்து அமர்ந்தாள் இப்போது.
அவளின் அரவம் முழுதும் அவன் உணர்ந்தே தானிருந்தான். மெதுவாய் அவள் புறம் திரும்பியவன் ‘என்ன’ என்பதாய் ஒரு பார்வை கொடுக்க “எங்க போயிட்டீங்க ரொம்ப நேரமா ஆளே காணோம்??”
“எனக்கு வேலையிருந்துச்சு அதான் வெளிய போயிட்டேன், எனக்கு தூக்கம் வருது. காலையில சீக்கிரம் எழுந்து காந்திபுரம் மார்கெட் போகணும் குட் நைட்” என்று மேற்கொண்டு பேச்சை வளர்த்தாமல் படுத்துவிட்டான் அவன்.
அவளுக்கு தான் புஸ்சென்று ஆனது. கொஞ்சம் அழுகையும் வருவது போல தோன்றியது. கண்களின் ஓரம் நீர் கசிந்து லேசாய் தலையணையை கூட நனைத்திருந்தது. “போடா” என்று திட்டிக்கொண்டு ஏதேதோ எண்ணியவாறே உறங்கிப் போயிருந்தாள் அவள்.
‘அன்னைக்கு இவரு ஓடி வந்து கட்டிப்பிடிச்ச ஸ்பீட் பார்த்தா எல்லாம் சரியாகிடும் நினைச்சா. மறுபடியும் முத இருந்து ஆரம்பிக்குறாரு. இதுல என்ன வேண்டுதல்ன்னு கேட்டா மட்டும் பதில் சொல்லிடுவாரா என்ன… ஒரு வேளை பதில் சொல்லிட்டா, கேட்டு தான் பார்ப்போமே’ என்று எண்ணியவள் அவனிடம் கேட்டாள்.
“என்ன வேண்டுதல்??”
“வேண்டுதல் அவ்வளவு தான். என்ன ஏதுன்னு எல்லாம் உன்கிட்ட சொல்லிட்டு இருக்க முடியாது” என்றான் முகத்தில் அடித்தது போல்.
———————
வீட்டின் அழைப்பு மணி விடாது ஒலிக்க அறையில் படுத்திருந்த வேணுகோபால் எழுந்து வெளியே வந்து கதவை திறந்தார்.
மிதிலா அங்கு நின்றிருந்தார். “உள்ள வா மிதிலா” என்றழைத்து உபசரித்தார்.
“புவனா இல்லையா??”
“வெளிய போய் இருக்கா, ஏதோ வேலை இருக்குன்னு”
“இன்னைக்கு லீவ் தானே அவளுக்கு. அதான் பார்த்திட்டு கொஞ்ச நேரம் பேசிட்டு போகலாம்ன்னு வந்தேன்” என்று சங்கடமாய் பார்த்தார் மிதிலா.
“எங்களை எல்லாம் பார்த்தா ஆளா தெரியலையா. மருமக தான் கண்ணுக்கு தெரியுது போல, நீ எனக்கு தானே பிரண்டு” என்றார் அவர்.
“ஹ்ம்ம் என்ன பொறாமையா வேணு. புவனாவை அன்னைக்கு தேடிப்போனப்போ பார்த்தது, அதுக்கு பிறகு பார்க்கலை. அதான் பார்க்கலாம்ன்னு வந்தேன்”
“இன்னைக்கு லீவ் தான். நான் தான் அவங்கம்மா வீட்டுக்கு ஒரு எட்டு போயிட்டு வாங்கன்னு அனுப்பி வைச்சேன். அன்னைக்கு புவனாவை தேடி அவங்க வீட்டுக்கு வேற போன் பண்ணி பேசுனோம்ல, அதான் போய் பார்த்திட்டு வாங்கன்னு சொன்னேன்”
“சரி தான்”
“அப்போ நான் கிளம்பறேன் வேணு” என்று எழுந்தார் மிதிலா.
“வந்ததும் கிளம்பறே ஒரு காபி சாப்பிட்டு போ மிதிலா”
“அய்யோ வேணாம்டா சாமி”
“என்ன நான் நல்லா தான் காபி போடுவேன்”
“அது எனக்கு தெரியும். எப்போ பார்த்தாலும் உங்க கையால சாப்பிட்டு ஒரே போர்”
“என் மருமக சொல்ற மாதிரியே சொல்றே”
“உண்மை தானே சொல்லி இருக்கா. இன்னைக்கு ஒரு சேஞ்சுக்கு நான் உங்களுக்கு டீ போடுறேன்”
“டீ??”
“ஏன் உங்களுக்கு டீ பிடிக்குமே வேணு”
“பிடிக்கும் அது எங்கம்மா போடுறது”
“நானும் நல்லாவே போடுவேன். குடிச்சுட்டு சொல்லுங்க” என்றவர் நேரே சமையலறை நுழைந்தார்.
அங்கிருந்த பொருட்களை ஒவ்வொன்றாய் திறந்து பார்த்தார். தேவையானவற்றை எடுத்துக் கொண்டார். பிரிட்ஜில் வைத்திருந்த பாலை கொண்டு வந்தார் வேணு.
“தேங்க்ஸ்” என்றுவிட்டு அவர் எதையோ தேட “இதோ இருக்கு” என்று பால் பாத்திரம் வடிகட்டி எல்லாம் எடுத்துக் கொடுத்தார் அவர்.
“இதுக்கு நீங்களே போட்டு இருக்கலாம்” என்று முணுமுணுத்தார் மிதிலா.
“அதைத்தான் நானும் சொன்னேன்”
“அதான் நீங்க எல்லாம் எடுத்து கொடுத்தாச்சுல. இனி நான் பார்த்துக்கறேன்”
“அந்த சுகரு”
“அது எனக்கு தெரியும் நீங்க போங்க”
“எதுக்கு என்னை விரட்டுற நீ” என்று சொன்னாலும் வெளியே சென்றுவிட்டார் அவர்.
வெளியில் வானம் கொஞ்சம் கொஞ்சமாய் இருண்டுக்கொண்டே வந்தது. இன்னும் சிறிது நேரத்தில் மழை பொழியும் அறிகுறி. இதமான காலநிலை அது. சரியாய் மிதிலாவும் சூடான மசாலா தேநீருடன் வந்து சேர்ந்தார். 
“நல்ல கிளைமெட்ல, மொட்டை மாடியில போய் குடிப்போமா. செமையா இருக்கும்” என்றார் மிதிலா ஆர்வமாய்.
வேணு அவரை ஒரு மாதிரி பார்த்தாலும் சரியென்று சொல்ல மிதிலா கையில் இருந்த ட்ரேயுடன் படியேறினார்.
“வேணு என் ஹேண்ட்பேக்ல புவனாக்கு பிடிக்குமேன்னு அவல் மிக்சர் வாங்கிட்டு வந்தேன், அதையும் எடுத்திட்டு வாங்களேன்” என்றுவிட்டு போனார்.
மொட்டை மாடியின் பிடி சுவற்றில் சாய்ந்து அமர்ந்த வேணுவிடம் டீ கோப்பையை நீட்டினார் மிதிலா. அதை பருகியவர் முகம் பலவித பாவங்களை காட்டியது.
காற்று மெதுவாய் வீச உடன் லேசான சாரல் அடித்து சூழ்நிலை ரம்மியமாயிருந்தது. “உனக்கு எப்படி இந்த டீ போட தெரியும்??”
“ஏன் நல்லாயில்லையா??”
“ரொம்ப நல்லாயிருக்கு, எங்கம்மா கையால குடிச்ச பீல் எனக்கு. அதே பெர்பெக்ட் டீ” என்றார் வேணு,
“தேங்க்ஸ். அத்தை ஐ மீன் உங்கம்மாகிட்ட தான் கத்துக்கிட்டேன்”
“எப்போ??”
“எப்பவோ…”
“ஏன்??” அவர் சாதாரணமாய் தான் கேட்டார்.
“உனக்கு பிடிக்கும்ல அதான் அப்போ கத்துக்கிட்டேன்” என்று வாய் தவறி மனதில் உள்ளதை சொல்லியிருந்தார் மிதிலா.
மிதிலாவின் பதில் அவரை குழப்ப வேணு வேறொன்றும் பேசவில்லை. தான் பேசியது பிறகே புரிந்த மிதிலா வேணுவை நிமிர்ந்து பார்க்கவுமில்லை.
வேகமாய் டீயை அருந்தி முடித்தவர் “நான் கிளம்பறேன் வேணு. டைம் ஆச்சு” என்றுவிட்டு கீழே இறங்க “மழை ஸ்டார்ட் ஆகப்போகுது மிதிலா, கொஞ்சம் வெயிட் பண்ணு” என்றார்.
“இல்லை இப்போவே கிளம்பினா நல்லா பெய்யறதுக்குள்ள கிளம்பிடுவேன்” என்று அவர் சொல்லி முடிக்கவும் மழை சோவென்ற இரைச்சலோடு கொட்டவாரம்பித்தது.
அதற்குள் இருவருமே கீழே இறங்கி வந்திருந்தனர். அடித்த மழையில் மின்சாரம் வேறு துண்டிக்கப்பட்டு விட சிறிது நேரம் அங்கே இருள் மட்டுமே.
மிதிலா வாசலை நோக்கி வந்தவர் வெளி வராந்தாவில் நின்றுக்கொண்டார்.
“மிதிலா நீ உட்காரு, நான் பவர் பேக்கப் ஆன் பண்ணுறேன்” என்று இருட்டில் வேணு எங்கோ செல்ல சிறிது நேரத்தில் ஹாலில் இருந்த டியூப்லைட் வெளிச்சத்தை உமிழ்ந்தது.
“உள்ள வா” என்று மீண்டும் அழைத்தார் அவர்.
“இல்லை வேணு. நா… நான் இங்கவே இருக்கேன், மழை விட்டதும் உடனே கிளம்பிடுறேன்” என்று பிடிவாதமாய் மறுத்தார் மிதிலா.
“என்னாச்சு உனக்கு. இரு நான் தேவாக்கு போன் பண்ணுறேன், அவன் உன்னை கார்ல கூட்டிட்டு போய் விடுவான்”
“வேணாம் ப்ளீஸ் அவங்க இப்போ தான் ஒண்ணா வெளிய போய் இருக்காங்க. எதுக்கு அவங்களை டிஸ்டர்ப் பண்ணிட்டு” என்று மறுத்தார் அவர்.
“அப்போ உள்ள வா” என்றார் வேணுகோபால்.
மிதிலாவுக்கு தர்மசங்கடமாய் போனது. உள்ளே செல்லவும் அவருக்கு மனமில்லை, வாய் தவறி கண்டதும் உளறி வைத்துவிட்டோம் என்ற குற்றவுணர்வு அவருக்கு.
வீட்டில் வேறு யாருமில்லை என்று மனம் கண்டதும் யோசித்து குழம்ப, வேணுகோபால் வேறு உள்ளே வருமாறு மீண்டும் மீண்டும் சொல்ல ஒரு முடிவுடன் வாசலுக்கு சென்று மழையில் நனைந்தவாறே வண்டியை எடுத்துவிட்டார்.
“நான் கிளம்பறேன் வேணு. நின்னுட்டே இருந்தா மழை அதிகமாகும் போல” என்றுவிட்டு அவர் பதிலைக் கூட பெறாமல் கிளம்பிச் சென்றேவிட்டார்.
———————
“வாங்க… வாங்க…” என்று தன் மகளையும் மருமகனையும் அன்போடு அழைத்தார் புவனாவின் தந்தை சக்திவேல்.
“கனி யாரு வந்திருக்கான்னு பாரேன். பாலாஜி இங்க வா” என்று எல்லாரையும் அழைத்துவிட்டார் அவர்.
“என்னம்மா நாங்க தானே வந்திருக்கோம். என்னவோ வீட்டுக்கு விருந்தாளி வந்த மாதிரி அவங்களை இப்படி ஓடி வரவைக்குறீங்க” என்றான் தனுஷ்.
“நீங்க எங்களுக்கு ஸ்பெஷல் தானே மாப்பிள்ளை” என்றார் அவர். அதற்குள் கனியமுதுவும் வந்தவர் அவர்களை வரவேற்றார். புவனாவின் தம்பி பாலாஜி வந்தவன் தன் தமக்கையை பார்த்து மட்டும் நலம் விசாரித்துக்கொண்டான்.
“ஏன் புவனா உன் போன் சரியில்லைன்னா உடனே சரி பண்ண மாட்டியா. பாவம் உன் மாமனார் பயந்து போய் போன் பண்ணார் அன்னைக்கு” என்று அன்னை தன் மகளை கடிய அவளோ தன் அன்னையின் மீதான கோபம் இன்னமும் தீராதவளாய் அவரை முறைத்து பார்த்தாள்.
‘அன்னைக்கு நான் வேணுமின்னே தான் கல்யாணத்தை நிறுத்தினேனான்னு கேட்டுட்டு இப்போ ரொம்ப தான் அக்கறை’ என்று மனதிற்குள் நொடித்துக் கொண்டாள்.
“என்ன மாப்பிள்ளை மொட்டை எல்லாம். எதுவும் வேண்டுதலுங்களா??” என்றார் சக்திவேல்.
“ஆமாங்க மாமா”
“சொல்லியிருந்தா நாங்களும் உங்களோட கோவில்க்கு வந்திருப்போம்ல” என்றார் அவர்.
“இங்க எங்களையவே கூட்டிட்டு போகலையாம், இது இவங்களை கூப்பிடலைன்னு வேற கவலையாம்” என்று தெளிவாக முணுமுணுத்தாள் புவனா.
“என்ன?? என்ன சொல்றா மாப்பிள்ளை இவ”
“அவர் திடிர்னு தான் மொட்டை அடிச்சுட்டு வந்து நின்னார். என்னன்னு கேட்டா வேண்டுதல்ன்னு சொன்னார். அவ்வளவு தான் எனக்கு தெரியும்” என்று அவனை போட்டுக் கொடுத்தாள் தன் தகப்பனிடம்.
“அது வந்துங்க மாமா, தப்பா எடுத்துக்காதீங்க. வேண்டுதல் வெளிய சொன்னா பலிக்காது, எல்லாம் நல்லபடியா முடியட்டும் நான் சொல்றேன்”
“நம்ம நினைச்சது நடந்ததும் தானே தானே மாப்பிள்ளை எல்லாரும் வேண்டுதல் நிறைவேத்துவாங்க. நீங்க என்னவோ புதுசா சொல்றீங்க”
“அப்புறம் செய்யறதுல என்ன இருக்கு மாமா. முன்னாடி செய்யறதுல எனக்கு ஒரு நம்பிக்கை”
“ஒரு வேளை…” என்று அவர் இழுக்க “நடக்கும் மாமா” என்று முடித்துவிட்டான் அவன்.
“புவனாவுக்கு இன்னைக்கு லீவ் தான். இங்க இருக்கட்டும் மாமா, எனக்கு வெளிய கொஞ்சம் வேலையிருக்கு முடிச்சுட்டு ஹோட்டல்க்கு போயிட்டு மதியம் போல வர்றேன்” என்றான் அவன்.
“கொஞ்சம் ரெஸ்ட் எடுத்திட்டு அப்புறமா போங்க மாப்பிள்ளை” என்றவர் மனைவியை முறைக்க வேகமாய் கையில் பழசாறுடன் வந்தார் அவர்.
“எதுக்கு அத்தை?? இப்போ வேணாமே…”
“அம்மா அவர் இப்போ ஜூஸ் சாப்பிட மாட்டார். கொஞ்ச நேரம் ஆகட்டும்” என்றாள் புவனா.
“சக்தி நான் கொஞ்சம் ரெப்ரஷ் பண்ணணும்” என்று அவளிடம் சொல்ல “ஹ்ம்ம் வாங்க” என்று அவனை அழைத்துக்கொண்டு மாடியில் இருந்த அறைக்கு சென்றாள் அவள்.
தன் மாமனாரிடம் லேசாய் தலையசைத்து அவளுடன் சென்றவன் “நீ போயிட்டே இரு” என்றுவிட்டு “பாலாஜி” என்று குரல் கொடுக்க அவன் வேண்டாவெறுப்பாய் ஓடி வந்தான்.
“உன்கிட்ட பேசணும் வா” என்று அவனை தன்னோடு மாடிக்கு அழைத்து சென்றான்.
“சக்தி நீ அத்தைக்கிட்ட சொல்லி எனக்கு காபி கொண்டு வா” என்று தன் மனைவியை கீழே விரட்டினான்.
“உட்காரு” என்று பாலாஜியை பார்த்து சொல்ல “பரவாயில்லை” என்றான் அவன் ஒற்றைச் சொல்லாய்.
“உனக்கு என் மேல என்ன கோபம்??”
“அப்படிலாமில்லை”
“உனக்கு என்னை பிடிக்கலை சரி தானே”
“தெரியலை” என்றான் உண்மையாய்.
“ஏன்??”
“நான் இதை எக்ஸ்பெக்ட் பண்ணலை”
“உடனே கஷ்டமா இருந்து இருக்கும் ஓகே. ஆனா இத்தனை மாசமாச்சு. இன்னமும் உனக்கு அப்படியே தான் இருக்கா”
“எவ்வளோ நாள் ஆனா என்ன… நீங்க எங்களோட மாறன் மாமா ஆகிடுவீங்களா” என்று விட்டான் அவன்.
“மாறன் உங்கக்காவை கல்யாணம் பண்ணிக்கலைன்னு உனக்கு வருத்தமா”
“நீங்க கல்யாணம் பண்ணிக்கிட்டீங்களேன்னு தான் வருத்தம்”
“உங்கக்காவுக்கு என்னை பிடிச்சு கல்யாணம் பண்ணியிருந்தா கூட இதே தான் சொல்வியா” என்றான் அவன்.
“என்ன சொல்றீங்க” என்றான் அவன் புரியாத பாவனையில்.
“உங்கக்காகிட்ட இதுக்கான பதிலை கேளு. அவளுக்கு பிடிக்காம எதுவும் நடக்கலை” என்றான் தன் மச்சினனிடம்.
இதற்கு புவனா அவனிடத்தில் என்ன பதில் சொல்வாள் என்ற அவனுக்குமே ஆர்வமாக தானிருந்தது. அவளின் பிடித்தம் அவனறிந்த ஒன்று தான். அதை அவள் மற்றவரிடத்தில் சொல்லியதில்லை. இன்று அதை தெரிந்து கொள்ளும் எண்ணம் அவனுக்குமே வந்திருந்தது.
இனி அவன் வாழ்க்கையை அப்படியே தொடர அவனுக்குமே விருப்பமில்லை. வாழ்வின் அடுத்த கட்டத்தை நோக்கி செல்ல வேண்டும் என்று எண்ணியிருந்தான்.
அதற்கு முன்னதாக அவ எதிர்பார்த்த விஷயங்கள் நடக்கவேண்டும் என்பதே அவன் பிரார்த்தனையாய்.

Advertisement