Advertisement

அத்தியாயம் – 4
“உஷா எப்படி இருக்கே…” முன்னில் நின்ற தோழியைக் கண்ட சந்தோஷத்தில் மேனகா ஓடி வந்து உஷாவைக் கட்டிக் கொள்ள, கோபி, நண்பன் காரிலிருந்து இறங்குவதற்கு உதவி செய்ய ஓடி வந்தார்.
“நான் பார்த்துக்கிறேன் அங்கிள்…” பின்னிலிருந்து கேட்ட குரலில் கோபிநாத் திரும்ப ரகுவரன் புன்னகையுடன் நின்று கொண்டிருந்தான்.
“மாப்பிள… எப்படிப்பா இருக்கே…”
“நல்லாருக்கேன் அங்கிள்…” என்றவன் சொல்லிக் கொண்டே தந்தையை ஒரு பக்கம் பிடித்துக் கொள்ள அவர் சிரமப்பட்டு மெல்ல இறங்கவும் அதைக் கண்ட கோபியின் கண்கள் தன்னிச்சையாய் கலங்கின.
“புருஷூ… என்னாலதானடா இப்படி…” என்ற நண்பனின் முதுகில் செல்லமாய் அடித்து அணைத்துக் கொண்டார்.
“டேய், இப்படி ஆகணும்னு விதி இருக்கு ஆயிருச்சு… இதுல உன் தப்பு என்ன… உஷா நல்லாருக்கியாமா…” என்றவர் பின்னில் வந்து நின்ற கோமளவல்லியைக் கண்டதும் வணக்கம் கூறினார்.
“வணக்கம் மா… எப்படி இருக்கீங்க…”
“ஐ ஆம் பைன்… வாட் அபவுட் யூ மை டியர் சன்…” என்றவர் “ஹாய் மேகி…” என்று நலம் விசாரித்துக் கொண்டே காரில் இருந்து இரண்டு மூன்று பெரிய பைகளை இறக்கி வைத்துக் கொண்டிருந்த ரகுவரனைக் கண்டதும் புன்னகைத்தார்.
“ஹேய், யூ ரகு… ஹவ் யூ மை டியர் யங் பாய்…” என்று கையை நீட்ட, “ஐ ஆம் ஆல்வேஸ் ஹாப்பி கிரேன்ட்மா… வாட் அபவுட் யூ…” என்று கேட்டு அவர் ஸ்டைலில் கை குலுக்கியவனை ஏனோ அவருக்கு உடனே பிடித்தது. போட்டோவில் கண்டதை விட சற்று நன்றாகவே இருந்தான். “புன்னகை மாறாத முகம்… காலேஜ் ஸ்டூடண்ட் போன்ற உடல்வாகு… அப்படியொன்றும் மோசமில்லை…”
மனதுக்குள் அவனைக் கணித்துக் கொண்டிருந்தவரைக் கண்டு புன்னகைத்தவன், “என்ன கிரேன்ட்மா… நான் பாஸ் ஆகிருவேனா…” என்று கேட்க அவன் தோளில் தட்டி புன்னகைத்தவர், “கம்…” என்று முன்னில் நடக்க அவனும் தொடர்ந்தான். மற்றவர்கள் உள்ளே சென்றிருந்தனர்.
கோமளவல்லியின் இயல்பும் குணமும் முன்னமே இவர்களுக்குத் தெரியுமாதலால் அவரது அரைகுறை ஆங்கிலமும் சுரிதாரும் இயல்பாகவே தோன்றியது. கணவர் விட்டுச் சென்றாலும் கலங்கி மூலையில் அமர்ந்துவிடாமல் தன்னம்பிக்கையுடன் தனக்காய் ஒரு பாதையை வகுத்துக் கொண்டு அதில் மாறாமல் வாழும் அவர்மீது அவர்களுக்குத் தனி மரியாதை இருந்தது. ரகுவிடமும் உஷா சொல்லி இருந்ததால் அவனுக்கும் அவர் மீது மதிப்பு இருந்தது.
வீழ்வதில்
தவறில்லை…
வீழ்ந்தே கிடப்பது
தான் தவறு…
மேனகா, பாட்டியைப் பற்றிக் கூறியபோது இப்படிதான் ரகுவிற்கு தோன்றியது. அனைவரும் சோபாவில் அமர்ந்ததும் “உஷா, எங்க என் மருமகளைக் காணோம்… எங்களைப் பார்க்க அவ வாசல்ல ரெடியா காத்திருப்பான்னு நினைச்சேன்…” சிரித்தபடி மேனகா கேட்க, “அவ ரூம்ல தான் இருக்கா மேகி… போயி பாரு… நான் ஜூஸ் எடுத்திட்டு வரேன்…” என்று அவளது ரூமைக் காட்டிவிட்டு உஷா அடுக்களைக்குள் நுழைய மேனகா கையில் மல்லிகைப் பூவுடன் ஐஷூவின் அறைக்கு சென்றார்.
நண்பர்கள் இருவரும் பேசிக் கொண்டிருக்க ரகுவரன் துணை இல்லாததால் வெறுமனே வீட்டைப் பராக்கு பார்த்துக் கொண்டிருந்தாலும், “ஐஷூ ஏன் எங்களைப் பார்க்க வெளிய வராம இப்படி உள்ள உக்கார்ந்து இருக்கா…” என நினைத்துக் கொண்டிருந்தான்.
“ரகு… சென்னை லைப் எல்லாம் எப்படிப் போகுது… பிளாட் எடுத்துத் தங்கி இருக்கேன்னு சொன்னாங்க… கூட பிரண்ட்ஸ் இருக்காங்களா…” என்றார் கோபிநாத்.
“இல்ல அங்கிள், நான் தனியா தான் தங்கி இருக்கேன்…”
“ஓ… அப்ப வீட்டுவேலை, சாப்பாடுக்கெல்லாம் ஆளிருக்கா…”
“டேய் கோபி, ரகுவுக்கு ஹோட்டல் சாப்பாடெல்லாம் பிடிக்காது, அவனே சுயமா சமையல் செய்து சாப்பிடறான்… வீட்டையும் அவனே கவனிச்சுப்பான்… இவன் நம்மளப் போல இல்ல, ஒரு வித்தியாசமான பாச்சிலர்… தம், தண்ணின்னு எந்தப் பழக்கமும் இல்ல, அதனாலயே கூட பசங்களைத் தங்க வச்சுக்கல… அவன் வேலைகளை அவனே பார்த்துக்கணும்னு நினைப்பான்…” புருஷு மகனைப் பற்றி பெருமையாய் கூற கோபிநாத் ஆச்சர்யமாய் கேட்டுக் கொண்டிருந்தார். அவர்களுடன் அமர்ந்திருந்த கோமளவல்லி திகைப்புடன் புருவத்தைத் தூக்கினார்.
“ஓ நம்ம ஐஷூ எடுத்த பொருளைக் கூட எங்காச்சும் போட்டுட்டுப் போவா… சமையல்ல சொல்லவே வேணாம், சுத்தம்… வீட்டை கவனிக்கறதுல விருப்பமே இல்ல… அவளுக்கு இப்படி ஒருத்தன் தான் சரியா இருப்பான்…” பாட்டி மனதுக்குள் ரகுவைப் பற்றி எடை போட்டுக் கொண்டிருக்க அவன் புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தான். அதற்குள் உஷா ஜூஸ் டம்ளர்கள் நிறைந்த டிரேயுடன் அங்கே வர அனைவரும் எடுத்துக் கொண்டனர்.
“மேகி ஐஷூ ரூம்ல இருக்காளா…” என்றவர் மகளின் அறைக்கு செல்ல அது தாளிடப்பட்டிருந்தது.
“ரெண்டு பேரும் என்ன பண்ணறாங்க உள்ளே…” யோசித்தவர், “மேகி, வந்து ஜூஸ் எடுத்துக்க…” என்று குரல் கொடுக்க, “அங்க வச்சிரு உஷா… அஞ்சு நிமிஷத்துல வந்துடறோம்…” மேனகா பதில் குரல் கொடுக்க புரியாமல் நின்றார்.
அவரைக் கண்ட புருஷோத்தமன், “என்னமா உஷா, என் ரோஜாக்குட்டியை கண்ணுல காட்ட மாட்டேங்கற… மேகி எங்க, மருமகளைப் பார்த்ததும் அவளோடவே செட்டில் ஆகிட்டாளா…” என்று கேட்க “இப்ப வந்திருவாங்க அண்ணா…” பதில் சொன்னாலும் உஷாவுக்கும் புரியவில்லை. ரகுவோ தவிப்பை மறைத்து புன்னகையுடன் அமர்ந்திருந்தான்.
மேகி சொன்னதுபோல் ஐந்தே நிமிடத்தில் கதவு திறக்கப்பட அவருடன் வந்தது தன் மகள் தானா என்று தன்னைத் தானே கிள்ளிப் பார்த்துக் கொண்டார் உஷா.
“அடர் ரோஜா வண்ணத்தில் அழகாய் சேலையுடுத்து தளரப் பின்னிய தலையில் தாராளமாய் பூ வைத்து தேவதையாய் தன் முன்னில் வந்தவளை திகைப்புடன் உஷா, கோபிநாத்துடன் கோமளவல்லியும் நோக்கியிருக்க, ரகுவரனின் கண்களோ பிரமிப்பில் இமைக்கவும் மறந்தன. அவளை அழைத்து வந்து கணவனின் முன்னில் நிறுத்திய மேனகா, “இந்தாங்க உங்க ரோஜாக்குட்டி… கண் நிறையப் பார்த்துக்கோங்க…” என்று புன்னகைக்க,
“ரோஜாக்குட்டி… கண்ணம்மா… எப்படிடா இருக்கே என் செல்லம்…” என்று எழுந்திருக்க முயன்ற புருஷோத்தமன் தடுமாற ஐஷூ பிடித்துக் கொண்டாள்.
“அச்சோ, அங்கிள் பார்த்து…” என்றவளின் கன்னத்தை இரு கைகளாலும் ஏந்தியவருக்கு முதன்முதலில் அவளைப் பிரசவித்ததும் “என் மருமகளை நான்தான் முதல்ல எடுப்பேன்…” என்று ஆசையோடு தூக்கியது நினைவில் வர கண் கலங்க அவள் கையைப் பிடித்துக் கொண்டார்.
“இப்பவும் என் ரோஜாக்குட்டி அப்படியே தான் இருக்கா… உனக்கு இந்த மாமாவை நினைவில்லையா செல்லம்…” என்று கேட்க அவரது முகத்தில் தெரிந்த அன்பும் குரலில் வழிந்த பாசமும் மனதை உருக்க நெகிழ்ச்சியோடு நோக்கியவள், இல்லையென்று தலையாட்டினாள்.
அதைக் கேட்டதும் முகம் வாடியவர், “எல்லாத்துக்கும் மாமா மாமான்னு சொல்லுவியே செல்லம்… மாமா தான் சோறு ஊட்டி விடணும்… அத்தை மடில நான்தான் படுப்பேன்னு ரகுவை எழுப்பி விடுவியே… ரகு கூட தான் தூங்குவேன்னு அடம் பிடிச்சதெல்லாம் மறந்திடுச்சா…” என்று கேட்க, அப்போதுதான் ரகுவின் நினைவு வந்தவள் அவன் தன்னையே பார்த்துக் கொண்டிருப்பதை உணர்ந்தாலும் அவனைத் திரும்பிப் பார்க்கத் தயங்கி மௌனமாய் நின்றாள்.
“ஹஹா… அப்ப அவ சின்னக் குழந்தை தானே… அதான் எல்லாம் மறந்திருப்பா…” என்றார் கோமளவல்லி.
“ம்ம்… இருக்கும் மா… என்றவர், “என் ரோஜாக்குட்டி எப்பவும் சந்தோஷமா இருக்கணும்…” என்று அவள் தலையில் கை வைத்து கூறிவிட்டு, “மேகி ஆன்ட்டியையும் மறந்துட்டியா… சரி, உன் ரகுவையாச்சும் நினைவிருக்கா…” என்று கேட்க, அவள் விழித்தாள்.
“நீங்க பஞ்சாப்க்கு கிளம்பிப் போகும்போது ரகுவை விட்டு வர மாட்டேன்னு இவ அழுத அழுகை எனக்கு இப்பவும் காதுக்குள்ளேயே இருக்கு… காலமும் சூழ்நிலையும் எப்படி எல்லாமோ மாறினாலும் இப்ப மறுபடி எல்லாரையும் பார்க்க முடிஞ்சதுல ரொம்ப சந்தோஷமாருக்கு…” என்றவரிடம், “சரிங்க… ரொம்ப உணர்ச்சி வசப்படக் கூடாதுன்னு டாக்டர் சொல்லி இருக்கார்ல…” என்றார் மேனகா.
“ஏன்மா, புருஷூ உடம்புக்கு ஏதும் பிராப்ளமா…” கேட்ட கோபிநாத்திடம், “அவ கிடக்கறா… அதெல்லாம் எனக்கு ஒரு பிராப்ளமும் இல்ல கோபி… இப்ப என் மருமகளையும் பார்த்தாச்சு… இந்த சந்தோஷத்துல உடம்புல எந்த பிராப்ளம் இருந்தாலும் மாறிடாதா என்ன…” புருஷோத்தமன் சிரித்தார்.
“அட என்னங்க நீங்க…” கணவரைக் கடிந்து கொண்ட மேனகா, “அண்ணா, அவருக்கு ரெண்டு மாசம் முன்னாடி ஒரு மைல்டு அட்டாக் வந்துச்சு… ஹார்ட்க்கு போற ரத்தக் குழாய்ல ஏதோ பிளாக் இருக்காம்… எந்த அதிர்ச்சியான செய்தியும் கேக்கக் கூடாது, ஓவரா உணர்ச்சிவசப்படக் கூடாதுன்னு டாக்டர்ஸ் சொல்லி இருக்காங்க… இப்போதைக்கு மருந்து, மாத்திரைன்னு கொடுத்திருக்காங்க… ஆறு மாசம் கழிச்சும் அந்த பிளாக் போகலைன்னா சர்ஜரி பண்ணனும்னு சொல்லி இருக்காங்க…” என்றார் மேனகா கவலையுடன்.
“அடக் கடவுளே… நான் அங்க வந்தப்ப சொல்லி இருந்தா உங்களை அலைய விடாம நாங்க அங்கே வந்திருப்போமே…” என்று கவலைப்பட்டவரிடம், “ரொம்ப நாள் கழிச்சு பார்க்கறோம்… உடனே இதை சொல்ல வேண்டாம்னு இவர் தான் தடுத்துட்டார் அண்ணா…” என்றார் மேனகா.
“ம்ம்… நீ உடம்பைப் பார்த்துக்க புருஷூ… இது விளையாட்டில்லை…” என்ற கோபிநாத்திடம், “ப்ச்… போச்சு… உன்னையும் பயமுறுத்தி விட்டுட்டாளா… எனக்கு எந்த பிராப்ளமும் இல்லைடா… இப்ப உங்க எல்லாரையும் பார்த்த சந்தோஷத்துல இன்னும் பெட்டரா பீல் பண்ணறேன்…” என்ற நண்பனின் கையை ஆதரவாய் பிடித்துக் கொண்டார் கோபி.
“இப்ப ஒண்ணும் பிராப்ளம் இல்லையே அண்ணா…” என்றார் உஷா கவலையுடன்.
“அதெல்லாம் ஒண்ணும் இல்லமா… இப்ப எனக்கு ஒரே ஒரு ஆசை மட்டும்தான்… நம்ம பிள்ளைங்க கல்யாணத்தையும் பார்த்துட்டா அப்புறம் என்ன ஆனாலும் கவலை இல்லை…” அவர் சொல்லவும் மேனகாவின் முகம் வாடிப் போக, “அப்பா, என்ன பேசறீங்க… பாருங்க அம்மா எப்படி பீல் பண்ணறாங்க…” அதுவரை அமைதியாய் இருந்த ரகுவின் உதடுகள் வார்த்தையை உதிர்க்க அவனைப் பார்க்காமலே இருந்த ஐஷூ நிமிர்ந்து பார்த்தாள்.
“நீங்க எப்பவும் எங்க கூடவே இருக்கறது தான் எங்களுக்கு சந்தோஷம் பா…” என்ற மகனைப் பெருமையுடன் பார்த்தவர், “பார்த்தியா உன் மாப்ள எப்படிப் பேசறான்னு… சில நேரம் அவனுக்கு நான் அப்பாவா, எனக்கு அவன் அப்பாவான்னு கூட எனக்கு டவுட் வந்திரும்… சரிப்பா, உன் அம்மாவை நான் வருத்தப்பட வைக்கலை… நான் நூறு வயசு வரைக்கும் நல்லாருப்பேன்… போதுமா…” என்று சிரித்தார்.
சூழ்நிலை சோகமாய் மாறுவதை உணர்ந்த பாட்டி நடுவில் புகுந்தார். “மேகி, டோன்ட் பீல் மா… எவ்ரிதிங் ஈஸ் கோயிங் டு பைன்… வாட் ஈஸ் இன் அவர் ஹேன்ட்ஸ்… காட் ஒன்லி நோஸ்… பி ஹாப்பி மை டியர்ஸ்…” அவரது ஆங்கிலம் சட்டென்று புரியாமல் முழித்து பிறகு புரிய புன்னகைத்த மேனகாவும் பேச்சை மாற்றினார். 
“ரகு, என் மருமகளைப் பார்த்தியா… ரோஜாப் பூவுக்கு சேலை கட்டின போல அழகா இருக்கால்ல… ஐஷூ, இதான்மா ரகு… அவன் இன்னும் உன்னை மறக்கவே இல்லை…” என்றார்.
புருஷுவையும், மேகியையும் ஐஷூக்குப் பிடித்தது. ஆனால் ரகுவைக் கண்டால் மட்டும் முகம் இஞ்சி தின்ற குரங்கு போலானது. அவளையே பார்த்துக் கொண்டிருந்த ரகு, “ஹாய் ஐஷூ… எப்படி இருக்க…” என்று கேட்க, “ஏன் கண்ணு குருடா… முன்னாடி தான இருக்கேன்… அப்படியே முழுங்குற போல பார்க்கத் தெரியுது… நான் எப்படி இருக்கேன்னு மட்டும் தெரியலையா…” மனசுக்குள் கவுன்டர் கொடுத்துக் கொண்டே வெறுமனே அவனை நோக்கிப் புன்னகைத்தாள்.
“ஐஷூ, நீ வேணும்னா மாப்பிள்ளைக்கு நம்ம வீட்டை சுத்திக் காட்டேன்…” தந்தை சொல்லவும், “ஆமா இவர் பெரிய அரண்மனையைக் கட்டி வச்சிருக்கார், சுத்திக் காட்ட…” என்று உதட்டுக்குள் முனங்கிக் கொண்டே பாட்டியை நோக்க, அவர் புருவத்தைத் தூக்கி என்னவென்று கேட்டார்.
மெல்ல தலையை ஆட்டி உதட்டைப் பிதுக்கியவள், பிடிக்கலை என்பது போல் கூற கண்ணைச் சிமிட்டியவர், “ஐஷூ, ரகுவைக் கூட்டிட்டுப் போ மா… உங்களுக்குள்ள ஏதாச்சும் பேசறதுக்கு இருக்கும்ல…” என்றார் அழுத்தமாய்.
“ரகு போடா…” என்ற மேனகா, “அந்த கிப்ட் எடுத்துகிட்டியா…” என்று மகனிடம் நினைவுபடுத்த தலையாட்டியவன் ஐஷுவின் பின்னில் நடந்தான். அவள் பின்னில் செல்லும்போதே மனம் ஜிவ்வென்று ஒரு நிலையில்லாமல் பறக்க அந்த புதுவித உணர்வு மனதுக்கு மிகவும் சுகமாகவும், இம்சையாகவும் உணர்ந்தான். அவள் பூஜா ரூம் முன்னில் நிற்க அவனும் நின்றான்.
“இதான் எங்க வீட்டு பூஜா ரூம்… இங்கே தான் சாமி சிலை, போட்டோஸ் எல்லாம் வச்சி பூஜை பண்ணுவோம்…” என்றவளை அவன் விநோதமாய் பார்க்க, “பார்த்துட்டீங்களா வாங்க…” என்று பாட்டியின் அறைக்கு அழைத்துச் சென்றாள்.
“இதுதான் பாட்டியோட ரூம்… பாட்டி இங்க தான் தூங்குவாங்க, பாட்டு கேப்பாங்க, புக் படிப்பாங்க… டான்ஸ் கூட ஆடுவாங்க…” என்றவள் அடுத்து பெற்றோரின் அறைக்கு செல்ல அவன் சிரித்துக் கொண்டான். “ஓஹோ, மேடம் என்னைக் கடுப்படிக்க டிரை பண்ணறாங்களோ… ஐஷூ பேபி… என்கிட்டயே வா…” என நினைத்துக் கொண்டான்.
“இது உங்க அப்பா, அம்மா பெட் ரூம், இங்கதான் அவங்க தூங்குவாங்க… அப்படிதானே…” எனவும் முழித்தவள், “ம்ம்…” என்று அடுத்து அவளது அறைக்கு அழைத்துச் சென்றாள்.
“இதான் உன்னோட பெட்ரூமா… நீ இங்கதான் படுத்துப்பியா…” ஆசையோடு அவளது கட்டிலைத் தொட்டுப் பார்த்துவிட்டு சுற்றிலும் பார்வையைச் சுழற்ற சுவரிலும் மேசையிலுமாய் அவளது புகைப்படத்தைக் கண்டவன், “என்ன அழகான ரோஜா…” என்றபடி அவள் புகைப்படத்தை வருட, “பார்த்து, கைல முள் குத்திடப் போகுது…” என்றாள் அவள்.
“இது என் வீட்டு ரோஜா… முள் குத்தினாலும் வலிக்காது…” அவன் போட்டோவையே பார்த்துக் கொண்டு கூற, உதட்டைப் பிதுக்கினாள் ஐஸ்வர்யா.
சட்டென்று அவளிடம் திரும்பியவன், “ஐஷூ… நிஜமாலுமே உனக்கு எதுவுமே நினைவில்லையா… ரகு, ரகுன்னு என் பின்னாடியே சுத்திட்டு இருப்பியே… நான் ஸ்கூல் போறேன்னு சொன்னாக் கூட நானும் கூட வருவேன்னு சொல்லுவ… மாமா உனக்கு என்ன சாப்பிட வாங்கிட்டு வந்தாலும் உடனே எனக்கு கொண்டு வந்து கொடுத்திட்டு தான் சாப்பிடுவே… உப்பு மூட்டை ஏறிகிட்டு ப்ளீஸ் இன்னும் ஒரு ரவுண்டு போகலாம்னு கெஞ்சுவ… உனக்குப் பிடிச்ச ஏதாச்சும் நான் பண்ணினா “என் செல்ல ரகுன்னு கன்னத்துல முத்தமெல்லாம் கொடுத்து கொஞ்சுவ…” அவன் உணர்ச்சிவசப்பட்டு ஒவ்வொன்றாய் சொல்லிக் கொண்டிருக்க அவள் மண்டைக்குள் மூளையை இடவலமாய் உருட்டியும் எந்த நினைவும் வரவில்லை.
“எனக்கு ரகு வேணும்… நான் ரகுவை விட்டு வரமாட்டேன்னு அழுதுட்டே நீ சொன்னது இப்பவும் எனக்கு நினைவிருக்கு… உனக்கு நான்னா அவ்ளோ பிடிக்கும்… எனக்கும் நீன்னா ரொம்ப உசுரு ஐஷூ… என் அப்பா, அம்மாக்கு பெண் குழந்தைன்னா ரொம்பப் பிடிக்கும்… உன்னை தான் அவங்க மகளைப் போல நினைக்குறாங்க… உன்னை மறுபடி பார்க்க எத்தன வருஷமா காத்திருக்கேன்… உனக்கு ஏன் எல்லாமே மறந்து போயிருச்சு…” அவன் கேட்க அவள் மௌனித்தாள். அவன் ஒவ்வொரு வார்த்தைகளும் இதயத்திலிருந்து வர அவளுக்கே கஷ்டமாய் இருந்தது.
“ஐஷூ, என்னோட சின்ன கிப்ட்…” என்றவன் சதுர வடிவில் கலர் பேப்பர் சுற்றிய ஒரு பரிசுப் பெட்டியைக் கொடுக்க, “எதுக்கு இதெல்லாம்… வேண்டாம்…” மறுக்க மனதில் தோன்றினாலும் வார்த்தைகள் தொண்டையிலேயே நிற்க வாங்கிக் கொண்டவள் அடுத்த பிட்டைப் போட்டாள்.
“சாரி ரகு, நீங்க இவ்ளோ சொல்லறீங்க… எனக்கு எதுவுமே நினைவில்லை… ரொம்ப கில்ட்டியா இருக்கு…” என்றாள் வருத்தமாய் முகத்தை வைத்துக் கொண்டு.
“ச்சேச்சே… இதுக்கு எதுக்கு ஐஷூ பீல் பண்ணற… நீ அப்ப ரொம்ப சின்னப் பொண்ணு… அதான் மறந்திட்ட போலருக்கு… அதனால என்ன, கல்யாணத்துக்குப் பின்னாடி நாம ஒண்ணா தானே இருக்கப் போறோம்… அப்ப ஒவ்வொண்ணா உனக்கு நினைவு வர வச்சிடறேன்…” என்றவனை, “ஆஹா, நீ அப்படி உன் பிட்டைப் போடறியா…” என சுதாரித்துக் கொண்டாள்.
“ரகு நீங்க சொல்லறதெல்லாம் சரிதான்… நம்ம ரெண்டு பாமிலியும் இனி பழைய போல நட்பா இருக்கப் போறோம்… நாம ரெண்டு பேரும் பிரண்ட்லியா பழகப் போறோம்… ஆனா இந்த கல்யாணம்லாம் எதுக்கு… அதெல்லாம் வேண்டாமே… எனக்கு நீங்கதான் இந்த விஷயத்துல ஹெல்ப் பண்ணனும்…” என்றாள் ஐஸ்வர்யா.
“என்ன ஹெல்ப்…” என்றான் அவன் யோசனையுடன்.
“அதுவந்து… இந்த கல்யாணத்துல உங்களுக்கு விருப்பம் இல்லேன்னு நம்ம பேரன்ட்ஸ் கிட்ட சொல்லணும்…” என்றாள் அவள்.
“அடிப்பாவி, உனக்காக இத்தன வருஷம் காத்திட்டு இருந்தவனப் பார்த்து இப்படி சொல்ல சொல்லறியே…” என நினைத்துக் கொண்டு அமைதியாய் அவளையே பார்த்தான்.
“ப்ளீஸ், எனக்காக இந்த ஹெல்ப் பண்ணுங்களேன்…” என்றவளை குழந்தை புரியாமல் கேட்பதாகவே தோன்றியது.
“ஏன் ஐஷு… உனக்கு என்னைப் பிடிக்கலையா…” கேட்கும் போதே இதயத்துக்குள் இரத்தம் வடிந்தது.
“சின்ன வயசுல உங்களைப் பிடிச்சிருக்கலாம்… அதுக்காக இப்பவும் பிடிக்கணுமா என்ன…” என்றவள், “உனக்கும் எனக்கும் ஏதாவது மேட்ச் இருக்கா… என் கலர் என்ன, உன் கலர் என்ன… என் பேரைப் பார்த்தியா உலக அழகி பேரு… அதுக்கேத்த போல அழகாவும் இருக்கேன்… உன் பேரு கூட ரகுவரன்னு வில்லன் பேரு… அதுக்காக நீ வில்லத்தனமா நடந்துக்கணுமா என்ன… டீசன்டா கல்யாணம் வேண்டாம்னு சொல்லிட்டாப் போதும்…” என்றாள் அவள் சமத்தாக.
அவள் பிடிக்கவில்லை என்றது  வலித்தாலும் சொன்ன காரணம் குழந்தைத் தனமாய் இருக்கவே யோசித்தவன் கிண்டலாய் சிரித்தான்.
“என்னது கல்யாணம் வேண்டாம்னு சொல்லறதா… சின்ன வயசுல இருந்து உன்னையே நினைச்சுட்டு, உனக்கு என்னைப் பிடிக்கணுமேன்னு தண்ணி, தம்முன்னு எதையும் தொடாம, பாச்சிலர் லைப்கான ரூல்சையும் மீறி 100% அக்மார்க் நல்ல பையனா வாழறது இந்த உலகத்துல எவ்ளோ கஷ்டம் தெரியுமா… நாங்க உங்களையே நினைச்சிட்டு இருந்தா, நீங்க ஈசியா கலர் இல்லேன்னு சொன்னா போயிடுவோமா… கறுப்பு நம்ம தேசியக் கலர் மா… அதை முதல்ல புரிஞ்சுக்க… இங்க பாரு ஐஷூ, காதலுக்காக  எதை வேணும்னாலும் விட்டுக் கொடுக்கலாம்… ஆனா, காதலையே விட்டுக் கொடுத்து தியாகிப் பட்டம் வாங்கிட்டு தேவதாஸா சுத்த எல்லாம் என்னால முடியாது… ஐஸ்வர்யான்னு பேரு வச்சதால உன்னை நீ உலக அழகியா நினைக்கலாம்… ஆனா எனக்கு எப்பவும் நான்தான் ஹீரோ… வில்லன் ரகுவரனை மட்டும் தான உனக்குத் தெரியும்… ஹீரோ ரகுவரனை இனி பாரு, நீ என் பொண்டாட்டிங்கறது விதி யாராலும் மாத்த முடியாது…”சொன்னவன் பாக்கெட்டில் இருந்த கண்ணாடியை எடுத்துப் போட்டுக் கொண்டு வெளியே செல்ல அவள் பேந்தப் பேந்த விழித்துக் கொண்டு, “இப்ப இங்க என்ன நடந்துச்சு… நான் எங்க இருக்கேன்…” என்னும் ரேஞ்சில் மலைத்துப் போய் நின்றிருந்தாள்.
உனக்குப் பிடித்தமானதை
தேடி அலைந்தேன்…
உனக்கோ என்னையே
பிடிக்காதென்பது அறியாமல்…

Advertisement