Advertisement

அத்தியாயம் – 16
டானியல் ஜெஸ்சி தம்பதியரைப் பற்றி நினைத்துக் கொண்டே துணிகளை மடக்கி வைத்துக் கொண்டிருந்த ஐஷு அலைபேசியில் ஒளிர்ந்த அன்னையின் அழைப்பில் புன்னகைத்தாள்.
“ஹலோ அம்மா, எப்படி இருக்கீங்க…”
“நாங்க நல்லாருக்கோம்டி செல்லம்…”
“ம்ம்… அதானே நான் போனதும் விட்டது தொல்லைன்னு எல்லாரும் சந்தோஷமா தான் இருப்பீங்க…”
“ச்சே… என்னடி இப்படி சொல்லற… நீ இல்லாம வீடே உறங்கிப் போன போல நிசப்தமா இருக்குன்னு உன் அப்பாவும் நானும் சொல்லிட்டு இருக்கோம்… சரி, நீயும் மாப்பிள்ளையும் சந்தோஷமா இருக்கீங்களா…” என்ற அன்னையின் குரலைக் கேட்டதும் உற்சாகமானது.
“ஏன், சந்தோஷமா இல்லேன்னா ரெண்டு கிலோ சந்தோஷத்தை மதுரைல இருந்து சென்னைக்கு அனுப்பி விடப் போறிங்களா…” என்றாள் எகத்தாளமாய்.
“என்னடி பேச்சு இது… உனக்கு போன் பண்ணதுக்கு நான் மாப்பிள்ளைக்கு அழைச்சே பேசி இருக்கலாம்… நாங்க எல்லாரும் அடுத்த வாரம் அங்கே வரலாம்னு இருக்கோம்… அதை சொன்னா நீ சந்தோஷப் படுவியேன்னு நினைச்சு கூப்பிட்டா கேலி பண்ணிட்டு இருக்கே…” அவர் குரலில் வருத்தம் ஒலிக்கவும் ஐஷு தணிந்தாள்.
“சரி, சரி கோச்சுக்காதம்மா… தனியா உக்கார்ந்து போர் அடிக்கும்போது நீ போன் பண்ணியா… அதான் சும்மா வம்பு பேசிட்டு இருந்தேன்… நாங்க நல்லாருக்கோம்… அப்பா, கோமு என்ன பண்ணுறாங்க… கோமுவை அடுத்த மாசம் ஐ செக்அப் கூட்டிட்டுப் போகணும்… மறந்திடாதிங்க…”
“ம்ம்… சரிடி… அப்புறம், வந்து…” என்றவர் தயக்கத்துடன் கேட்காமல் நிறுத்த அவளே கேட்டாள்.
“என்னம்மா, ஏதோ கேக்க நினைச்சிட்டு தொண்டைக்குள்ள முழுங்கிக்கற… என்னன்னு கேளு…” என்றாள் மகள்.
“அதுவந்து… மாப்பிள்ள கூட நீ சந்தோஷமாதான இருக்கே… ரெண்டு பேருக்கும் எதும் பிரச்சனை இல்லையே… அவர் உன்னை நல்லா பார்த்துக்கறாரா…”
அன்னை கேட்க வந்த விஷயம் அரைகுறையாய் புரிய அது ஒரு அன்னையின் தவிப்பு என்பதை உணர முடிந்தது. எத்தனை சினிமா பார்த்திருக்கிறாள்.
“அம்மா, உன் மாப்பிள்ள என்னைத் தரைல நடக்க விடாம தாங்கறார் போதுமா… இப்ப உனக்கு சந்தோஷமா… சரி, அடுத்த வாரம் வரும்போது எனக்கு பால்கோவா செய்து கொண்டு வா… சாப்பிடனும் போல இருக்கு…” மகளின் பதிலில் மனம் மகிழ்ந்த உஷா, “சரிடி செல்லம்… மாப்பிள்ளை ரொம்ப நல்லவர்… அவர் மனசு கோணாம நடந்துக்க… சரி, நான் வச்சிடட்டுமா…” என்றவர் அழைப்பைத் துண்டிக்க அவள் கேலியாய் சிரித்தாள்.
“ஹூக்கும், உங்க மாப்பிள்ள ரொம்பத்தான் நல்லவரு, கனவுல வந்தா மட்டும் அப்படியே காதல் நாயகனா மாறிடுவாரு…” சட்டென்று தனக்குள் ஒலித்த மைன்ட் வாய்ஸ் கேட்டு அவளுக்கே சற்று அதிர்ச்சியாய் இருந்தது. 
குழந்தைகள் பார்க்கில் விளையாடிக் கொண்டிருக்க அவர்களை வேடிக்கை பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தாள் ஐஸ்வர்யா. சுமிதாவும் வித்யாவும் பேசிக் கொண்டிருக்க சுவாதி கையில் ஒரு கோப்பையுடன் அவர்களிடம் வந்தாள்.
“அக்கா, எனக்கு மருதாணி வச்சு விடறீங்களா…” என்றவள் கோப்பையை நீட்ட நெகு நெகுவென்று அரைக்கப்பட்ட மருதாணி பசுமையாய் மணத்தது.
அதை மூக்கருகே வைத்து வாசம் பிடித்த வித்யா, “ஹப்பா, என்னவொரு மணம்… என்னதான் மெஹந்தில விதவிதமா கையில வச்சிட்டாலும் மருதாணியை அடிச்சுக்க முடியாது… எங்கிருந்து கிடைச்சுது சுவாதி….” என்றாள்.
“ஊருல இருந்து அத்தை வந்திருந்தாங்க… கொண்டு வந்து கொடுத்தாங்கக்கா… எல்லாருமே வச்சுக்கலாம்… நிறைய இருக்கு…” என்றாள் புன்னகையுடன்.
“ம்ம்… சூப்பர்… எனக்கும் மருதாணி ரொம்பப் பிடிக்கும்…” என்ற சுமிதா, “என்ன புதுப் பொண்ணே… உனக்கும் மருதாணி பிடிக்குமா…” எனக் கேட்க, “பிடிக்கும்க்கா…” என்றாள் ஐஷு.
“சரி நீயும் வா… நாங்க ரெண்டு பேரும் உங்களுக்கு வச்சு விடறோம்…” என்று சொல்ல அவர்களிடம் அமர்ந்து கை நீட்டினாள். பெரியவர்கள் இருவரும் சிறியவர்களின் விரலில் தொப்பி தொப்பியாய் மருதாணி வைத்து கையில் ஒரு வட்டமும் அதைச் சுற்றி குட்டி வட்டங்களும் வைக்க,
“ஆயிரம் புது டிஸைன் வந்தாலும் இதுதான் மருதாணிக்கு ஒரிஜினல் டிஸைன்…” என சிரித்துக் கொண்டே கதை பேசிக் கொண்டு இருவரின் கையிலும் வைத்து விட்டனர். அப்போது வேலை முடிந்து பைக்கில் வந்த ரகுவரன் அவர்களைக் கண்டு அங்கே வந்தான்.
“அட, என்ன எல்லாரும் இங்கே அரட்டையா…”
“வா ரகு… உன் பிரியசகி இங்க இருக்கறதைப் பார்த்துட்டு வந்தியா… பசங்க விளையாடிட்டு இருந்தாங்க… அதான் அவங்களைப் பார்த்துட்டு அப்படியே மருதாணியும் போட்டுட்டு இருக்கோம்…” சுமிதா சொல்ல புன்னகைத்தான்.
“ஐஷுக்கு மருதாணி ரொம்பப் பிடிக்குமே…” என்றவன் அவளை ஆவலுடன் நோக்க அவள் மௌனமாய் இருந்தாள். அதை கவனித்த சுவாதி, “என்ன ரகுண்ணா… ஐஸ் சூடா இருக்கு போலருக்கு…” என்று சொல்ல வித்யா சிரித்தாள்.
“கல்யாணமாகி வந்த கையோட புருஷன் ஹனிமூன் கூட்டிட்டுப் போகாம ஆபீஸ் பேகை மாட்டிட்டு திரிஞ்சா எந்த ஐஸா இருந்தாலும் கொதிக்கதான் செய்யும்…” என்று கிண்டலடிக்க, ரகு ஆவலாய் மனைவியை பார்த்தான்.
அவளோ அவனைக் கண்டு கொள்ளாமல் முகத்தை திருப்பிக் கொள்ள, “என்னக்கா, ஐஷுவை எல்லாப் பொண்ணுகள மாதிரி நினைச்சிங்களா… அவ அப்படில்லாம் இல்லை… அவ போகணும்னு சொன்னா நாளைக்கே நான் எங்கேன்னாலும் டிக்கட் போட்டுட மாட்டேனா…” என்றான் ரகு.
“அதானே… ஐஸ் ஐஸ்னு நீ உருகுன உருகல்ல இந்த ராயல் அவன்யூவே காஷ்மீரா மாறிப் போனதை நான் மறந்துட்டேன்…” என்று சிரித்தார் அவர்.
“போங்கக்கா, கிண்டல் பண்ணிட்டு… இனி நாளைக்கும் மறுநாளும் லீவ் தான்… அவளோடவே இருக்கப் போறேன்…” ஆசையுடன் கூறியவன்,
“ஐஷு, நான் மருதாணி வச்சு விடட்டுமா…” என்று கேட்க, “இல்ல, சாப்பிடற கைல வேண்டாம்…” என்று மறுத்தாள் அவள்.
“ஏன், சாப்பிடற கைல வச்சா உன் ஆசைப் புருஷன் ஊட்டி விட மாட்டானா என்ன… அதுலயும் வச்சுக்க ஐஷு…” என்றாள் சுமிதா.
“அதெல்லாம் சந்தோஷமாவே ஊட்டி, கொடைக்கானல் எல்லாம் விடுவேன்… ஆனா, அவளுக்கு வேண்டாம்னா வேண்டாம்…” என்றான் அவன்.
“பாருடா… பொண்டாட்டி மேல உள்ள அக்கறைய… கொஞ்சம் கூட விட்டுக் கொடுக்க மாட்டியே…” என்று சுமிதா சொல்ல அனைவரும் சிரிக்க ஐஷுவிற்கு கூச்சமாய் இருந்தது.  அதற்குள் ஊஞ்சலில் விளையாடிக் கொண்டிருந்த சங்கரும், சூர்யாவும் அவனை அழைக்க அங்கே சென்றான்.
“ரகு அங்கிள்… எங்களை ஊஞ்சல்ல ஆட்டி விடறீங்களா…”
“ஓகே… டா குட்டீஸ்…” என்றவன் அவர்களை ஊஞ்சலில் அமர்த்தி உந்தி விட்டுக் கொண்டிருக்க ஐஷு எதேச்சையாய் அவனைப் பார்த்துவிட்டு,
“சரிக்கா… நான் வீட்டுக்குப் போறேன்…” என்று எழுந்தாள்.
“ரகு இங்கதானே இருக்கான்… என்ன அவசரம்…”
“இல்ல, பாட்டி கால் பண்ணறேன்னு சொல்லி இருந்தாங்க… மொபைல் சார்ஜ்ல போட்டு வந்தேன்…” என்றாள் அவள்.
“சரிம்மா… மருதாணி காலைல எடுத்தாப் போதும்… அது சிவக்கறதுலயே ரகு மேல நீ எவ்ளோ லவ் வச்சிருக்குன்னு தெரிஞ்சிடும்…” வித்யா சொல்ல தலையாட்டி எழுந்தவள் ரகுவை தயக்கமாய் நோக்க அவனும் உடன் வந்தான்.
மற்றவர்கள் முன்னில் அவனைக் கொஞ்சாவிட்டாலும் அவள் விட்டுக் கொடுக்காமலே நடந்து கொண்டது ரகுவுக்கு நிம்மதியாய் இருந்தது.
“ஐஷு மா… நாளைக்கு புல்லா நாம வெளியே சுத்தப் போறோம்… முதல்ல கோவில் போறோம்… அடுத்து மால்க்கு போயி உனக்குப் பிடிச்சதெல்லாம் வாங்கறோம்… அப்படியே ஒரு மூவி பார்க்கறோம்… நாளைக்கு புல்லா ஹோட்டல்ல சாப்பிடறோம்… ஹாப்பி தானே…” ஆவலுடன் கேட்டுக் கொண்டே லிப்டுக்குள் நுழைந்தவனிடம் சம்மதிக்கவும் தோன்றாமல் மறுக்கவும் முடியாமல் மௌனித்தாள். காலையிலிருந்து அவளது நினைவுகள் அந்த கனவைப் பற்றியே சுற்றிக் கொண்டிருக்க ஒரு மாதிரி குறுகுறுப்பாய் தவிப்பாய் உணர்ந்தாள். அன்று முழுதும் தனிமை கிடைக்கும் போதெல்லாம் மனதை அந்தக் கேள்வி குடைந்து கொண்டே இருந்தது.
“ரகுவுடன் எப்படி இப்படி கனவு வந்தது… என் ஆழ்மனது அவனை ஏற்றுக் கொண்டு விட்டதா… வெறும் வீம்புக்கு தான் பிடிக்கவில்லை என்று சொல்கிறேனா…” என்ற கேள்வி மண்டைக்குள் மாறி மாறித் தோன்றி இம்சை செய்தது. இரவு அந்தப் பாடலைக் கண்டதால் வந்த கனவென்று அவளால் ஒதுக்க முடியவில்லை. அவனுடன் தோன்றிய நெருக்கமும் அந்த ஸ்பரிசம் செய்த மாயாஜாலத்தில் தான் கண் மூடி மயங்கியதும் உண்மை போலவே ஒரு தவிப்பைக் கொடுக்க யாரிடமும் சொல்ல முடியாமல் குழம்பினாள்.
தன் அருகே ஏதும் பேசாமல் யோசனையுடன் நின்றவளைக் கண்ட ரகு, லிப்டில் நுழைந்து தங்கள் தளத்தின் எண்ணை அமர்த்திவிட்டு அவளையே பார்த்தான்.
“ஐஷு… என்னடா, ஏதோ குழப்பமாவே இருக்க…” அந்தக் குரலில் கலைந்தவளுக்கு அவனது இதமான கேள்வி ஒரு ஆறுதலைக் கொடுத்தது.
அவளது மௌனத்தைக் கண்டவன், “வீட்டு நினைப்பு வந்திருச்சா ஐஷு… இந்த ரெண்டு நாள் வேணும்னா உன் வீட்டுக்குப் போயிட்டு வரலாமா… பிளைட்ல போகலாம்…” என்றான் ஆறுதலுடன். அதற்குள் லிப்ட் அவர்கள் தளத்தில் நிற்க வெளியே வந்தவர்கள் வீட்டுக்குள் நுழைந்தனர்.
“என்னாச்சு ஐஷு… ஏன் டல்லா இருக்க… உடம்புக்கு சரியில்லையா… அப்பா, அம்மாவை மிஸ் பண்ணறியா… சொல்லுமா, நாளைக்கு டிக்கட் புக் பண்ணிடறேன்…”
“இ..ல்ல… வேண்டாம்… அடுத்த வாரம் அவங்களே வரேன்னு சொல்லி இருக்காங்க…” என்றாள் அவள்.
“நீ ஏன் இன்னைக்கு சைலன்டா இருக்க… என்னோட சரிக்கு சரி சண்ட போடுற ஐஷுவுக்கு என்னாச்சு…”
கேட்டுக் கொண்டே சோபாவில் பாகை வைத்தவன், “நீ உக்காரு… நான் காபி எடுத்திட்டு வரேன்…” என்றான்.
“இல்ல எனக்கு வேண்டாம்…” என்றவள் அறைக்குள் நுழைந்து கொள்ள அவன் புரியாமல் யோசித்தான். தனது அறைக்குள் நுழைந்து குளியல் முடித்தவன் கோமுவை அலைபேசியில் அழைத்தான்.
“ஹலோ மை டியர் பாய்… ஹவ் யூ…” உற்சாகமாய் கோமுவின் குரல் ஒலிக்க பொதுவாய் அனைவரின் நலத்தையும் விசாரித்து முடித்தான்.
“வேர் ஈஸ் ஐஷு பேபி… ஷீ ஈஸ் நாட் காலிங் மீ டுடே…”
“அதை சொல்ல தான் கூப்பிட்டேன் கிரேனி… இன்னைக்கு காலைல இருந்து உங்க பேத்தி ஆளே ரொம்ப சைலன்டா இருக்கா… நான் எது சொன்னாலும் சிலிர்த்துகிட்டு சண்டைக்கு நிக்கறவ இப்படி அமைதியா இருக்கக் காரணம் என்னன்னு உங்களுக்கு ஏதாச்சும் தெரியுமா…”
“ஓ… வ்வாட் ஹாப்பன்டு ஹெர்… ஐ டோன்ட் நோ…”
“சரி… அவளை அழைச்சுப் பேசிப் பாருங்க கிரேன்ட்மா… எனக்கு ரொம்ப கஷ்டமாருக்கு…” என்றவனிடம், அவர் பேசிக் கொள்வதாகக் கூற அழைப்பைத் துண்டித்துவிட்டு இரவு உணவுக்கு சப்பாத்தி பிசைய சென்றான்.
மௌனமாய் கட்டிலில் படுத்திருந்த ஐஸ்வர்யா அலைபேசி சிணுங்கவே காதுக்குக் கொடுத்தாள்.
“ஹலோ… சொல்லு கோமு…” வழக்கமாய் அவள் குரலில் வழியும் உற்சாகம் தொலைந்திருப்பதை உணர்ந்தவர், “ஐஷு பேபி… வாட் ஆர் யூ டூயிங்… ஒய் யூ டோன்ட் கால் மீ… யூ பர்கட்டன் ஆல் ஆப் அஸ்… பீலிங் வெரி சாட்…” என்றார்.
“சாப்பிட்டு அழைக்கலாம்னு நினைச்சேன்… எதுக்கு கூப்பிட்ட கோமு…” என்றாள் பேத்தி. அவள் மனது இயல்பாய் இல்லை என்பதை அவளது அடுத்தடுத்த வார்த்தைகள் உணர்த்த கோமு யோசித்தார்.
இட்ஸ் டைம் பார் சைலன்ஸ்…
வாட் அ பர்டன் ஆன் தி யங் மைன்ட்…
சவுண்ட்ஸ் இன் தி மைன்ட்…
சைலன்ஸ் இன் தி லிப்ஸ்…
ஆஸ்க் தட்ஸ் ஒய்…
மெல்லிய குரலில் அவர் பாட இல்லை கேட்க ஆல்ரெடி குழம்பியிருந்த ஐஷு புரியாமல் விழித்து பின் தெளிந்தாள்.
“அச்சோ கோமு… நீ வேற ஏன் இந்த மாதிரிப் பாட்டெல்லாம் பாடிக் கொல்லற…” சலித்துக் கொண்டாள்.
“ஓகே, என் ஐஷு பேபிக்கு என்னாச்சு… நார்மலாவே இல்லையே…” என்றவரிடம், “அதெல்லாம் ஒண்ணும் இல்ல கோமு…” என, “ஒண்ணும் இல்லேன்னு வாய் தான் சொல்லுது… ஆனா மனசு வேற சொல்லுதே…” என்றார் அவர்.
அவள் மனதை உறுத்திக் கொண்டிருந்த கேள்வியையே அவரும் கேட்க மௌனமானாள்.
“ம்ஹூம்… நீ சரியில்ல, ரகு எதாச்சும் திட்டினானா… உன் விருப்பம் இல்லாம ஏதும் உபத்திரவம் கொடுக்கிறானா… கூப்பிடு அவனை… சின்னப் பொண்ணை கஷ்டப்படுத்தவா கல்யாணம் பண்ணி அழைச்சிட்டுப் போனான்… இப்பவே உன் அப்பா அம்மாகிட்ட சொல்லி அவன் பேரன்ட்ஸ் கிட்ட பேச சொல்லுறேன்…” கோபமாய் கேட்டார் கோமு.
“அச்சோ கோமு… எதுக்கு இப்பப் பொங்கற… ரகு எதுவும் பண்ணல… நீயா கற்பனை பண்ணிக்காத…”
“பின்ன, உன் மௌனத்துக்கு என்னதான் காரணம் பேபி…”
“அது.. வந்து, காலைல ஒரு கனவு கண்டேன்… என்ன கனவுன்னு கேக்காத, சொல்ல மாட்டேன்… அதான் அதை யோசிச்சு கொஞ்சம் குழப்பமா இருந்துச்சு…” என்று மனதில் உள்ளதை சொல்லியும் சொல்லாமல் சொல்லி முடித்தாள்.
“ஓ… இவ்ளோதானா… நானே ஒரு நிமிஷம் ரகுதான் காரணமோன்னு பயந்து போயிட்டேன்… அவனால எதுவும் பிராப்ளம் இல்லையே… உன்னை நல்லாப் பார்த்துக்கிறானா…”
“ம்ம்… அதெல்லாம் எந்தப் பிராப்ளமும் இல்லை கோமு…” உதடுகள் இப்படி சொன்னாலும் மனது அவன் தான் பிராப்ளம் என்றது. கோமுவிடம் பேசியதும் அவள் மனம் சற்று லேசாகி இருந்தது.
“ம்ம்… சரி, நீ கண்டதையும் யோசிச்சு குழம்பாதே… தனியா உக்கார்ந்துட்டு இருக்காம ரகுவுக்கு சமைக்க எதும் ஹெல்ப் பண்ணு…” என்றார் கோமு.
“ம்ம்… அவன் செய்யறதை எல்லாம் நல்லா சாப்பிட்டு ஹெல்ப் பண்ணறேன் கோமு…” என்றவளிடம் பழைய உற்சாகம் திரும்பியிருக்க நிம்மதியுடன் புன்னகைத்தார்.
“ஹஹா… நாட்டி பியூட்டி….” அவர் சிரிக்க,
“ஹிஹி… நீ நாட்டி பாட்டி…” என்றாள் அவளும் குறும்புடன்.
“ஹாஹா… பை பேபி…” என்றவர் அழைப்பைத் துண்டித்தார். ரகு அவளிடம் ஏதோ கேட்பதற்காய் அறைக் கதவைத் திறக்க முயல, அவளும் அதே நேரத்தில் கதவைத் திறந்து வெளியே வர இருவரின் நெற்றிகளும் செல்லமாய் இடித்துக் கொண்டன.
அவளுக்கு சட்டென்று சினிமாவில் கண்ட கொம்பு முளைக்கும் வசனம் நினைவுக்கு வர, நெற்றியைத் தேய்த்துக் கொண்டிருந்த ரகுவின் நெற்றியில் சற்று பலமாய் முட்ட, “ஆ…” என்று அவன் அலறவும் “ஒரு தடவை முட்டினா கொம்பு முளைக்குமாம்…” என்று சொல்லிச் செல்ல அவனுக்கும் அந்த திரைப்படம் மனதில் வந்து உதட்டில் புன்னகையைக் கொடுத்தது.
அவன் அவளையே பார்த்துக் கொண்டு அப்படியே நின்றிருக்க, “ஹலோ… உடனே ட்ரீம்லான்ட்க்கு போயிட வேண்டாம்… கொம்பு முளைச்சா பார்க்க கண்ணறாவியா இருக்குமேங்கிற நல்லெண்ணத்துல மட்டும் தான் இப்படி பண்ணேன்… சரி, நான் ஏதாவது கிட்சன்ல ஹெல்ப் பண்ணனுமா…” என்றாள் எல்லாம் தெரிந்த ஏகாம்பரி போல.
அசடு வழிவதை புன்னகையில் மறைத்துக் கொண்ட ரகு, “சப்பாத்திக்கு தொட்டுக்க ஆனியன் கிரேவி செய்யவான்னு கேக்க தான் வந்தேன்…” என்றான்.
“ஆனியன் கிரேவி… ம்ம், எனக்குப் பிடிக்கும்… செய்யலாமே…”
“ஓகே, நீ இந்த வெங்காயத்தை மட்டும் கட் பண்ணிக் கொடுத்திடு… நான் சப்பாத்தி தேக்கறேன்…” என்றவனிடம், “இல்ல, அது வந்து ஆனியன் கட் பண்ணா கண்ணு எரியும்… நீ அதைப் பண்ணிடேன்… சப்பாத்தி நான் தேய்க்கறேன்…” என்றாள் நளனின் சிஷ்யை என்ற நினைப்பில். யோசித்தவன், “சரி…” என்று அடுக்களைக்கு செல்ல அவளும் தொடர்ந்தாள்.
மலரும் வரை அறிவதில்லை
மலரின் மணம்…
உணரும் வரை உயிர்ப்பதில்லை
காதலின் குணம்…

Advertisement