Advertisement

அத்தியாயம் – 10
“வலது காலை எடுத்து வச்சு உள்ளே வாம்மா…” உறவுக்காரப் பெண் ஒருத்தி ஆரத்தி எடுத்து முடிக்க மேனகாவின் குரலில் நிமிர்ந்த ஐஷூ அவர் சொன்னபடியே காலை எடுத்து வீட்டுக்குள் வைத்தாள். மனதுக்குள் ஒருவித கலக்கம் நிறைந்திருக்க முகம் வாடியிருந்தாள்.
மணமக்களை பூஜையறைக்கு அழைத்துச் சென்றவர், “ஐஷூ, சாமிக்கு விளக்கேத்தி கும்பிட்டுக்கங்க மா…” என்றதும் பொம்மை போல் அவர் சொன்னதை செய்தாள்.
இருவரையும் சோபாவில் அமர வைத்து, “அக்கா, பால் பழம் எடுத்துட்டு வாங்க…” என்று உறவுப் பெண்மணியிடம் மேனகா கேட்க, அடுத்த நிமிடம் கைக்கு வந்தது.
முக்கியமான பெரியவர்கள் மணமக்களுக்கு பால், பழம் கொடுக்க அமைதியாய் வாயைத் திறந்து வாங்கிக் கொண்டவளுக்கு பயங்கரமாய் தலை வலித்தது.
“என்னடா, ஒரு மாதிரி இருக்க… டயர்டா இருக்கா…” மேனகா கேட்கவும் தலையாட்டியவளின் கண்ணில் முணுக்கென்று கண்ணீர்த் துளி எட்டிப் பார்த்தது.
“அச்சோ… அதான் புள்ள வாடின ரோஜா போல இருக்கு… மேகி, போதும் மா… அவளைக் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்க அனுப்பு…” புருஷோத்தமன் கூற, “சரிங்க…” என்ற மேனகா, “வாம்மா… கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடு…” என்று மாடியில் இருந்த ஒரு அறைக்கு அழைத்துச் சென்றார்.
அவளது நகைகளை கழற்ற உதவியவர் அலமாரியில் எடுத்து வைத்துப் பூட்டினார். அப்போது அங்கே வந்த ரகுவரன், “அம்மா, ஐஷூவ இந்த தலைவலி மாத்திரையைப் போட்டுக்க சொல்லுங்க…” என்றவன் மாத்திரையுடன் தண்ணீர் குப்பியையும் நீட்ட வாங்கியவர் புன்னகைத்தார்.
“”ஐஷூ, ஹோமப் புகை உனக்கு சேரலை போலருக்குமா… உன் சூட்கேஸ் இங்க தான் இருக்கு… பட்டு சேலைய மாத்திட்டு இந்த தலைவலி மாத்திரையைப் போட்டுக்க… தைலம் எதுவும் வேணுமா…” அன்போடு அவள் நெற்றியில் கை வைத்துப் பார்த்துக் கேட்க, “வேண்டாம் அத்தை… கொஞ்சம் தூங்கினா சரியாகிடும்…” என்றாள் மருமகள்.
“சரி படுத்துக்க, நான் அப்புறம் வரேன்…” என்றவர், “டேய், வாடா…” என்று மகனையும் இழுத்துச் செல்ல அவன் பரிதாபமாய் அவளைப் பார்த்துக் கொண்டே சென்றான்.
“என்னக்கா, உங்க மருமகப் பொண்ணு ரொம்ப சைலன்ட் போலருக்கு… ஏன் ரகு, எங்ககிட்ட எல்லாம் பேசக் கூடாதுன்னு சொல்லி வச்சிட்டியா என்ன…” உறவுப் பெண் ஒருத்தி கிண்டலாய் கேட்க ரகு சிரித்தான்.
“அப்படிலாம் இல்லக்கா, அவ கொஞ்சம் டயர்டா இருப்பா போலருக்கு…” என்றவன் தந்தையிடம் சென்றான்.
“ரகு… ரோஜாக்குட்டி என்ன பண்ணறா… பாவம் சின்னப் பொண்ணு, சடங்கு சம்பிரதாயம்னு டயர்டாகிட்டா போல… அம்மாவை எதாச்சும் குடிக்க கொடுக்க சொல்லு…”
“அவ மாத்திரை போட்டு தூங்கறாப்பா… எழுந்ததும் குடுக்க சொல்லறேன்…”
“ம்ம்… சரி தூங்கட்டும்… உனக்கு இன்னும் எவ்ளோ நாள் லீவ் இருக்கு… எப்ப சென்னை போகணும்…”
“ஒருவாரம் தான் இருக்குப்பா… நாலு நாள்ல கிளம்பினா தான் சரியாருக்கும்… ஐஷுவுக்கும் அங்கே பக்கத்துல எல்லாம் பழக்கி விடணும்… நான் ஆபீஸ் போயிட்டா அவ தனியா சமாளிக்கணுமே…” என்றவன், “ரெண்டு நாள் கழிச்சு அவ வீட்டுக்கு விருந்துக்குப் போயிட்டு அங்கிருந்து அப்படியே நாங்க சென்னை கிளம்பிடட்டுமா…” சொன்ன மகனை யோசனையுடன் பார்த்தவர், “அதுக்குள்ளே கிளம்பறேன்னு சொன்னா எப்படி ரகு… என் மருமக இப்பதானே இங்கே வந்திருக்கா… கொஞ்சநாள் இங்கே எங்களோட பழக வேண்டாமா…” என்றார் ஆவலுடன்.
“அதெப்படிங்க… கல்யாணமாகி பொண்டாட்டியை இங்கே விட்டுட்டுப் போனா அங்க அக்கம் பக்கத்துல கேக்க மாட்டாங்களா… அதும் புதுப் பொண்டாட்டியை விட்டுட்டு உங்க பிள்ளைக்கு அங்க வேலை ஓடுமான்னு முதல்ல கேட்டு சொல்லுங்க…” என்று நமுட்டு சிரிப்புடன் சொல்லிக் கொண்டே அவர்களிடம் வந்தார் மேனகா.
“ஏன் நம்ம பையனும் இந்த விஷயத்துல என்னைப் போலவே இருக்கானா…” என்ற கணவனை கண்ணை உருட்டி மேனகா முறைக்க புருஷூ சிரிப்புடன் மகனை நோக்கிக் கண்ணடித்தார். பெற்றோரின் விளையாட்டைக் கண்டு ரகுவரன் சிரித்தான்.
“அம்மா சொல்லுறதும் ஒரு விதத்துல சரி தானேப்பா… ஐஷுவை இங்கே விட்டுட்டு நான் மட்டும் எப்படி அங்க தனியா… போர் அடிக்காதா…” என்று கேட்டுக் கொண்டே குனிந்து நகத்தை தீவிர ஆராய்ச்சி பண்ணிக் கொண்டிருந்த மகனைக் கண்டு சிரித்தனர் பெற்றோர்.
“உன் பையன் சொல்லுறதைக் கேட்டியா… இவ்ளோநாள் ஐயா கூட்டமா இருந்த போல, தனியா போர் அடிக்குமாம்…”
“போங்கப்பா, நீங்க என்னைக் கிண்டல் பண்ணறீங்க…” என்றவன் அங்கிருந்து நகர மேனகா கணவனின் காதைப் பிடித்து செல்லமாய் திருகினார்.
“பையன் முன்னாடி எதைப் பேசறதுன்னு விவஸ்தை வேண்டாம்…” என்று கேட்க, “ஆ… விடுடி… என் மகன் நிறைய விஷயத்துல என்னைப் போல இருக்கானே… பொண்டாட்டி விஷயத்துலயும் அப்படி தான் இருப்பானோன்னு நினைச்சுக் கேட்டுட்டேன்… ஹிஹி…” என்று வழிய செல்லமாய் தலையில் அடித்துக் கொண்டே சிரித்துச் சென்றார் மேனகா.
அவர்கள் எப்போதும் அப்படித்தான்… யார் முன்னிலும் அன்பை வெளிப்படுத்திக் கொள்ளத் தயங்கியதே கிடையாது… அவர்களின் அன்னியோன்யத்தையும் அன்பையும் காணும் போதெல்லாம் ரகுவின் மனதிலும் குடும்ப வாழ்க்கையைப் பற்றி சந்தோஷமாய் ஒரு கனவு ஓடிக் கொண்டிருக்கும்.
சற்று நேரம் கழித்து மேனகா ஐஷூவை பார்க்கச் செல்ல அவள் வெறுமனே கண் மூடிப் படுத்திருந்தாள்.
கதவின் ஓசையில் திரும்பிப் பார்த்தவளைக் கண்டு, “என்ன ஐஷூ, தூங்கலையா…” என்று கேட்க, “என்னமோ, தூக்கம் வரலை அத்தை… சும்மா கண்ணு மூடிப் படுத்திருந்தேன்…” என்றவள் எழுந்து அமர்ந்தாள்.
“புது இடம்ல அதான்… இப்ப தலைவலி எப்படி இருக்கு… காபி தரட்டுமா…” கேட்டுக் கொண்டே அவள் தலையைக் கோதிக் கொடுக்க, “குளிச்சா தேவலாம் போலருக்கு… குளிச்சிட்டு காபி குடிக்கறேன்…” என்றாள்.
“சரிம்மா… உனக்கு வேண்டியதெல்லாம் அந்த அலமாரியில் இருக்கும்… எது வேணுமோ எடுத்துக்க… நான் காபி கொண்டு வரேன்…” என்றவர் நகர்ந்தார். அவர் காட்டிய அலமாரியைத் திறந்தவள் அவள் எப்போதும் உபயோகிக்கும் எல்லாப் பொருட்களும் அங்கேயும் இருக்கக் கண்டு திகைத்தாள்.
தேவையானதை எடுத்துக் கொண்டு குளியலறைக்குள் நுழைந்தவள் குளித்து வரவும் பிளாஸ்கில் சூடான காபியுடன் மேனகா அங்கு வந்தார்.
“ஆஹா ரோஜாக்குட்டி குளிச்சதும் பளிச்சின்னு ஆகிடுச்சே…” சொல்லி சிரித்தவரிடம் அவளும் புன்னகைத்தாள்.
“என் ரோஜாக்குட்டியை போயி பார்த்தியா, கவனிச்சியா, அவளுக்கு காபி கொடுத்தியான்னு உன் மாமா என்னை கீழே இருக்க விட மாட்டேங்கிறார்… அவருக்கு நீன்னா அவ்ளோ இஷ்டம்…” பெருமையாய் சொல்லிக் கொண்டே அவள் கையிலிருந்த டவலை இயல்பாய் வாங்கி நீர் சொட்டிக் கொண்டிருந்த அவள் கூந்தலைத் துவட்டத் தொடங்க ஐஷுவுக்கு அன்னையின் நினைவு வந்தது. காபியை கோப்பையில் ஊத்தி அவளிடம் நீட்ட வாங்கிக் கொண்டாள். சூடான தேவாமிர்தமாய் சுகமாய் உணர்ந்தாள்.
ஈரக் கூந்தலை கையாலேயே கோதிவிட்டு தளர்வாய் ஈர ஜடை பின்னி முடியை விரித்து விட்டவர், “இப்ப தலைவலி பரவாயில்லையா…” எனக் கேட்க, “ம்ம்… பரவால்ல அத்தை…” என்றவளுக்கு உண்மையிலேயே நன்றாக இருந்தது. “சரி கீழே போகலாமா… சொந்தக்காரங்க எல்லாம் உன்னோட பேசணும்னு நினைப்பாங்க…” எனவும் தலையாட்டி நடந்தாள்.
கீழே ஒருபக்கம் உறவுக்கார இளசுகள் கலகலத்துப் பேசிக் கொண்டிருக்க, சிறுசுகள் விளையாடிக் கொண்டிருந்தனர். பெண்கள் மசாலாவோடு அடுத்த வீட்டு விசேஷத்தையும் அரைத்துக் கொண்டிருக்க கலகலப்பாய் இருந்தது.
அவர்களிடம் மேனகா மருமகளை அழைத்துச் சென்று ஒவ்வொருவரையும் அறிமுகப்படுத்தினார். அவர்கள் இவள் குடும்பத்தைப் பற்றி ஒவ்வொன்றும் விசாரிக்க அவள் பொறுமையாய் பதில் சொல்லிக் கொண்டிருந்தாள்.
“உங்க பாட்டி ரொம்ப மாடர்னா இங்க்லீஷ் எல்லாம் பேசிட்டு இருக்காங்களே… வெளிநாட்டுல இருக்காங்களா…” ஒருத்தி கோமுவைப் பற்றி ஆவலுடன் கேட்க என்ன சொல்வதென்று ஐஷூ யோசிப்பதற்குள் ரகுவரன் அங்கே ஹாஜரானான்.
“அத்தை, இங்க்லீஷ் பேசணும்னு நமக்கு ஆசை இருந்தாப் போதுமே… எதுக்கு வெளிநாட்டுக்குப் போகணும்… பாட்டியும் அப்படி தான்… இல்ல ஐஷூ…” என்று கேட்க, “போச்சு, பொஞ்சாதி சத்தம் கேட்டதும் உன் பிள்ளை எங்கிருந்தோ வந்து குதிச்சுட்டான்மா…” என்று மேனகாவிடம் கிண்டலாய் சொல்ல எல்லாரும் சிரிக்க ஐஷூ கூச்சத்துடன் குனிந்து கொள்ள ரகு இடத்தைக் காலி பண்ணினான்.
நேரம் கலகலப்புடன் நகர இரவு உணவு முடிந்து அவளை அழகான சாப்ட் சில்க் சேலை உடுப்பித்து மிதமான அலங்காரத்துடன் கையில் பால் சொம்பைக் கொடுத்து ரகுவின் அறைக்கு கொண்டு வந்து விட்டனர்.
கதவைத் திறந்து அலங்கரிக்கப்பட்டிருந்த அறைக்குள் நுழைந்தவள் மனதை அதுவரை இருந்த மெல்லினம் விடை பெற்று வல்லினம் முற்றுகையிட அவளையே ஆவலுடன் பார்த்துக் கொண்டிருந்த ரகுவை முறைத்துக் கொண்டே முன்னே சென்று நின்றவள், “இந்தா… உனக்கு கொடுக்க சொன்னாங்க… குடிச்சு உடம்பைத் தேத்து…” என்று பால் சொம்பை நீட்ட சிரிப்புடன் வாங்கிக் கொண்டான்.
“ஹப்பா, என்னமா இவ்ளோ நேரம் ஆக்ட் குடுத்தே… என்னா பணிவு, அடக்க ஒடுக்கம்… மரியாதை… நான் கூட ஒரு நிமிஷம் அடடா… நாம போட்ட டீல் வீணாப் போயிருமோ… தாலி மேஜிக்ல நீயும் மாறிட்டியோன்னு கன்பியூஸ் ஆகிட்டேன்… என்ன இருந்தாலும் உனக்குள்ளயும் ஒரு நடிகையர் திலகம் ஒளிஞ்சிருக்கா… இந்த அப்ரோச் எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு பொண்டாட்டி…” என்றவனை கோபமாய் முறைத்தவள்,
“அதான் தெரிஞ்சிடுச்சுல்ல… என்ன இருந்தாலும் மாமாவும் அத்தையும் பாவமாச்சே… அவங்க வருத்தப்பட்டா என் அப்பா, அம்மா, கோமுவும் வருத்தப் படுவாங்களேன்னு கொஞ்சம் பார்த்து நடந்துகிட்டேன்… அதையே அட்வான்டேஜ் எடுத்துகிட்டு சாந்தி முகூர்த்தம்ங்கற பேர்ல என் பக்கத்துல வந்தா அப்புறம் உனக்கு சாந்தி இல்லாமப் பண்ணிருவேன் ஜாக்கிரதை…” மிரட்டியவளைக் கண்டு பயப்படுவது போல் கைகளை விரித்து தலையாட்டினான்.
“ச்சேச்சே, இந்த ரகுவரன் அவ்ளோ சீப்பெல்லாம் கிடையாது… ஆனா ஒரு டவுட்…” என்று அவளை நோக்க, “என்ன…” என்பது போல் பார்த்தாள் அவள்.
“இந்த சாந்தி, சாந்தின்னு சொல்லிட்டு இருக்கியே… அது யாரு… அவங்களை ஏன் எனக்கு இல்லாமப் பண்ணனும்… எனக்குதான் நீ இருக்கியே…” என்று கேட்டவனை முறைத்தவள் தலையணையை எடுத்து வீசினாள்.
“ஹாஹா… ஓகே ஓகே… கூல் பேபி… ஜோக்ஸ் அபார்ட், நிஜமாலுமே நீ எல்லார்கிட்டயும் சந்தோஷமா இயல்பா பேசினது, நடந்து கிட்டது எனக்கு ரொம்பப் பிடிச்சது… என்னதான் உனக்கு என்னைப் பிடிக்கலைன்னு சொன்னாலும் அது மத்தவங்களுக்கு தெரியாத போல அவங்க மனசு வருத்தப்படக் கூடாதுன்னு பார்த்து நடந்துகிட்ட பக்குவம் ரொம்பப் பிடிச்சிருக்கு… இப்ப தான் உன் மேல உள்ள லவ்வு கூட எக்கச்சக்கமா அதிகமாகுது… தேங்க்ஸ் பொண்டாட்டி…” கண்களிலும் வார்த்தையிலும் காதல் வழிய அவளை நோக்கிக் கூறியவனை “அட, இவன் என்ன ஜென்மம்டா சாமி…” என்றே தோன்ற அமைதியாய் இருந்தாள்.
“சரி ஐஷு, இப்ப ஒரு டீல் பேசலாமா…” அவன் கேட்கவும் என்னவென்பது போல் பார்த்தாள்.
“இப்படி உக்காரு…” எனவும் அவன் முன்னில் அமர்ந்தாள்.
“ஐஷூ, உன்னைப் பார்க்குற வரைக்கும் எனக்குள் தேங்கிக் கிடந்த காதல் இப்பவும் பிரவாகமா பொங்கிட்டே தான் இருக்கு… இந்த உலகத்துல யாருமே லவ் பண்ணி இருக்காத அளவுக்கு உன்னை என் கண்ணுக்குள்ள வச்சு தாங்கணும்னு தான் என் மனசு நினைக்குது… ஆனா, அதெல்லாம் உனக்குள்ளும் வரணும்… வரும்னு எனக்கு நம்பிக்கை இருக்கு… நீயா விருப்பப்பட்டு என்னை நெருங்குற வரைக்கும் புருஷன்கிற உரிமையை உன்கிட்ட நான் எடுத்துக்க மாட்டேன்… ஆனா நீ என்னை ஒரு பிரண்டா ஏத்துகிட்டு இயல்பாப் பழகணும்…” நிதானமாய் கூறினான்.
அவன் சொன்ன வார்த்தைகள் ஒவ்வொன்றும் மனதுக்குள் எதிரொலிக்க அவள் யோசித்தாள்.
“எல்லார் முன்னிலும் இவனோடு சண்டை போட முடியாது… எப்பவும் நடிக்கவும் முடியாது… அதுக்கு போனாப் போகுதுன்னு இந்த ஊசிப் பட்டாசை பிரண்டா ஒத்துக்க வேண்டியது தான்…” அவள் மனதுக்குள் யோசித்துக் கொண்டிருக்க அவன் அவளையே பார்த்திருந்தான்.
“டீல் என்னமோ நல்லா தான் இருக்கு… ஆனா, உன்னை எப்படி நம்பறது…” என்றாள் நம்பாத பார்வையுடன்.
“ஏன்மா, என்னோட லவ்வை நம்பி உன்னை நான் பொண்டாட்டியாவே ஏத்துகிட்டேன்… உன் மேல உனக்கு நம்பிக்கை இல்லையா… உன் பிரண்டா இருக்கக் கூட நான் லாயக்கு இல்லையா…” அவன் குரலில் இருந்த வருத்தம் அவளுக்கு ஒரு மாதிரி இருக்க தழைந்தாள்.
“ஓகே, டீலுக்கு சம்மதிக்கிறேன்…” அவள் சொல்லவும் சந்தோஷமாய் ரகுவரன் கையை நீட்டி, “பிரண்ட்ஸ்…” என்று கேட்க, அவளும் புன்னகைத்து கை பற்றி குலுக்கினாள்.
“வாவ்… சூப்பர்… தேங்க் யூ ஐஷு…” என்றவன், “ஆனா, மத்தவங்க முன்னாடி மட்டும் கொஞ்சம் அப்படி இப்படி நடந்துகிட்டா கண்டுக்காத…” என்றான் கெஞ்சலுடன்.
“ம்ம்… அது நீ நடந்துக்கறதைப் பொறுத்தது…” என்றாள்.
“ஓகே, ஓகே… நீ கட்டிலில் படுத்துக்க… நான் சோபாவில் படுத்துக்கறேன்… குட் நைட்…” என்றவன் தலையணையுடன் சோபாவுக்கு செல்ல, “சரி, இந்தப் பாலை என்ன பண்ணுறது…” என்றாள் அவள்.
“அதை நீயே குடிச்சிடேன்…” என்று அவன் சொல்ல, “ஐயோ இவ்ளோ என்னால குடிக்க முடியாது ரகு…” என்றவளை அவன் திகைப்புடன் நோக்க, “என்ன…” என்றாள் அவள்.
“இப்ப என்ன சொல்லி என்னைக் கூப்பிட்ட…”
“ரகுன்னு… ஏன், அதான உன் பேரு… மாத்திட்டாங்களா…” என்றவளை நோக்கி அவன் சிரிக்க அவளுக்கும் சிரிப்பு வந்தது. மனம் லேசாக அவள் உதட்டில் படாமல் சொம்பைத் தூக்கிப் பிடித்துக் குடித்த பாலின் மீதியை மனதுக்குள் தேவாமிர்தமாய் உணர்ந்தாலும் அதை வெளியே காட்டாமல் இயல்பாய் குடித்து காலி செய்தான் ரகு.
டீலில் கூறியபடி இருவரும் நட்போடு பழகத் தொடங்க, சில நேரம் பெற்றோரின் முன்னில் மட்டும் உரிமையாய் கொஞ்சுபவனை முறைத்தே கட்டுக்குள் நிறுத்திக் கொண்டாள் ஐஷு. ரகுவின் பெற்றோர் அவளிடம் காட்டிய அன்பும், மகளாய் கொண்டாடிய விதமும் மனதை நெகிழ்த்த மதுரைக்கு மறுவீட்டுக்கு கிளம்புகையில் அவர்களையும் உடன் வரும்படி வற்புறுத்தி அழைத்தாள்.
“மறுவீட்டுக்கு கிளம்பும்போது நாங்க எதுக்கு ரோஜாக்குட்டி… நாங்க வந்தா காதல் ஜோடிகளுக்கு நடுவுல கரடி போல ஆயிடாதா… நீங்க மட்டும் போயிட்டு வாங்கடா…” என்று சிரித்தார் புருஷோத்தமன். அங்கிருந்து அவர்கள் அப்படியே சென்னை கிளம்புவதாகப் பிளான் பண்ணி இருந்தனர்.
“அடுத்தமாசம் கண்டிப்பா ரெண்டு பேரும் இங்க வந்திருங்க… குடும்பத்தோட நம்ம குலதெய்வம் கோவிலுக்குப் போயிட்டு வந்திடலாம்… டைம் ஆச்சு… பார்த்து பத்திரமா போயிட்டு வாங்க… அங்க போயிட்டு கூப்பிடுங்க…” என்று அன்போடு அனுப்பி வைக்க இவர்கள் டாக்சியில் கிளம்பினர்.
வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த ஐஷூ சிறிது நேரத்தில் உறங்கத் தொடங்க, தன் அருகே கண் மூடிக் கிடக்கும் தோழியை காதலியை, மனைவியை ஆவலோடு பார்த்துக் கொண்டிருந்தான் ரகுவரன். மனதுக்குள் பிடித்த அந்தப் பாடல் சுழலத் தொடங்கியது.
தோழியா என் காதலியா யாரடி என் கண்ணே…
தோழியா என் காதலியா யாரடி என் கண்ணே…
மடி மீது தூங்கச் சொல்கிறாய்…
தோள் மீது சாய்ந்து கொள்கிறாய்…
நெருங்கி வந்தால் நண்பன் என்கிறாய்…
ஓ ஓ ஓ பெண்ணே…
ஏனடி என்னைக் கொல்கிறாய்…
உயிர்வரை சென்று தின்கிறாய்…
மெழுகுபோல் நான் உருகினேன்…
என் கவிதையே எனை காதல் செய்வாய்…

Advertisement