Advertisement

அத்தியாயம் – 25
“ஐஷு டார்லிங்…” குரலில் தேன் தடவியது போல் இனிமையாய் ஒலித்தது ரகுவின் குரல்.
“ம்ம்…” பதிலுக்கு கிறக்கத்துடன் அவன் டார்லிங்கின் குரல்.
தன் நெஞ்சில் பூமாலையாய் கிடந்தவளின் கூந்தலில் விரல்களால் துளாவிக் கொண்டிருந்தவன் கண்கள் கனவில் மிதப்பது போல் சுகமாய் மூடிக் கிடந்தன. அவனது நெஞ்சில் செல்லமாய் விரலில் கோலமிட்டுக் கொண்டிருந்தவளின் கண்களும் சுகமாய் கிறங்கியிருந்தன.
“நடக்கறதெல்லாம் நிஜம் தானான்னு என்னால இன்னும் நம்பவே முடியலை ஐஷுமா…” அவன் குரலில் இன்னும் வியப்பின் மிச்சம் மீதி ஒட்டியிருக்க சட்டென்று “ஆ…” என்று அலறினான். அவனது நெஞ்சத்து ரோமத்தை செல்லமாய் பிடித்து இழுத்து நடப்பது கனவல்ல என்று உணர்த்தினாள் அவனது செல்ல ராட்சசி.
“ஏய், என்னடி பண்ணற வலிக்குது…” அவன் சொல்லவும் வலித்த இடத்தில் அவள் இதழ் பதிக்க, புன்னகைத்தவன், “இப்ப அங்க வலிக்கலை… வேற இடத்துல வலிக்குது…” எனவும், “எங்க வலிக்குது…” என்றாள் அவள்.
தன் உதட்டின் மீது விரலை வைத்து மெல்லத் தடவியவன், “இங்கே…” என்று குறும்பாய் சிரிக்க, “ச்சீ… போடா…” என்றாள் அவள் சிணுங்கலுடன்.
“என்னது டாவா…” 
“ம்ம்… நீ என்னை ஏன் டி சொல்லி கூப்பிட்ட…” அவன் அருகில் அமர்ந்து கொண்டே அவள் கேட்க, “அது லவ்ஸ்டி செல்லம்…” என்றான் அவளது மூக்கைப் பிடித்து  செல்லமாய் ஆட்டிக் கொண்டே.
“அப்ப இதும் லவ்ஸ் தாண்டா கருவாட்டுப் பையா…” அவனது தலையில் செல்லமாய் முட்டிக் கொண்டே சொன்னவளை இழுத்து நெஞ்சோடு அணைத்துக் கொண்டான் ரகு.
சில நிமிஷங்கள் மௌனமாய் கழிய, மெல்ல தலையைத் தூக்கியவளை மீண்டும் அழுத்திக் கொண்டான்.
இந்த நிமிடம் இந்த நிமிடம்
இப்படியே உறையாதா…
இந்த நெருக்கம் இந்த நெருக்கம்
இப்படியே தொடராதா…
இந்த மௌனம் இந்த மௌனம்
இப்படியே உடையாதா…
இந்த மயக்கம் இந்த மயக்கம்
இப்படியே நீளாதா…
“இப்படியே நீண்டுட்டு இருந்தா மகாபலிபுரம் போனவங்க எல்லாம் திரும்பி வந்திருவாங்க… என்னை விடு… நான் போயி குளிச்சிட்டு வரேன்…” சிணுங்கியவளை கண்ணில் வழியும் காதலுடன் ஆர்வமாய் பார்த்தான் ரகுவரன்.
“ஐஷு…”
“ம்ம்ம்…”
“நிஜமாலுமே உனக்கு என்னைப் பிடிச்சு தான் ஒத்துகிட்டியா… இல்ல, நமக்கு வாய்ச்சது இவ்ளோ தான்… போனாப்போகுது ஏத்துப்போம்னு உன் மனசைக் கன்வின்ஸ் பண்ணிட்டியா…” என்றவனின் விரல்கள் எதேச்சையாய் நீண்டு அவள் மனத்தைக் குறி பார்த்து வர சட்டென்று பாதி வழியில் மடக்கிப் பிடித்தவள் முறைத்தாள்.
“ஏய் லூசு, நேத்திருந்து எத்தன தடவை தான் இப்படி நம்பிக்கையில்லாம கேப்ப… அப்படி எல்லாம் எந்த ஒரு விஷயத்துக்கும் நாங்க கன்வின்ஸ் ஆக மாட்டோம்… பார்த்ததும் பிடிக்கலைன்னு சொன்னது என்னவோ உண்மைதான்… அதுக்காக உன்னோட அன்பை அவ்ளோ ஈஸியா என்னால விட்டுக் கொடுக்க முடியுமான்னு யோசிச்சா முடியாதுன்னு தோணுச்சு… நீ சொன்ன மாதிரி பார்க்கப் பார்க்க பிடிச்சுது… உன்னைப் பார்க்காதப்ப எனக்கு பைத்தியமே பிடிச்சுது… அப்பதான்… இந்த கருவாட்டுப் பையன் மேல எனக்கு எம்புட்டு லவ்வுன்னு என்னாலேயே புரிஞ்சுக்க முடிஞ்சுது…” என்றாள் கொஞ்சலுடன்.
“ம்ம்… லூசு, கருவாட்டுப் பையன்… ஒவ்வொருத்தியும் புருஷனை எவ்ளோ அழகா செல்லப் பேரு வச்சு கூப்பிடறாங்க… இவ்ளோ தானா இன்னும் இருக்கா…”
“ஹாஹா, கோச்சுக்காதடா கொத்தவரங்கா… கோணல் மாணலா இருந்தாலும் நீ என்னோட குர்க்குரே தான்… உன்னை யாருக்கும் விட்டுக் கொடுக்க மாட்டேன்… அப்புறம் கோமு சொன்னதை யோசிச்சுப் பார்த்தேன்… அதுதான் உன்னை நான் விரும்ப முக்கியமான காரணம்…”
அவள் சொல்லி நிறுத்தவும் ஆவலுடன் நோக்கியவன், “பாட்டி என்ன சொன்னாங்க ஐஷு டார்லிங்…” என்றான்.
“அதுவா, அது வந்து…” இழுத்தவள் கட்டிலிலிருந்து இறங்கிக் கொண்டே, “உலகம் பூரா தேடினாலும் உன்னை மாதிரி ஒரு இளிச்சவாய்ப் புருஷன் யாருக்கும் கிடைக்க மாட்டான்… ஒழுங்கு மரியாதையா குடும்பம் நடத்தி குழந்தை குட்டியப் பெத்துக்கோன்னு சொன்னாங்க…” என்று சொல்லிவிட்டு வேகமாய் குளியலறைக்குள் சென்று தாளிட்டுக் கொண்டாள்.
அவள் சொன்னதும் சரியாய் புரியாமல் மறுபடி மனதுக்குள் யோசித்து புரிந்து கொண்டவன், “ஏய் பொண்டாட்டி, கதவைத் திறடி… சீக்கிரமே ஏற்பாடு பண்ணிடலாம்…” அவன் சிரிப்புடன் கதவைத் தட்ட, “முடியாது மாமோய்… நீயும் பக்கத்துக்கு பாத்ரூம்ல போய் சீக்கிரம் குளிச்சிட்டு வா…” என்று குரல் கொடுக்க சிரித்துக் கொண்டே டவலை எடுத்துக் கொண்டு அடுத்த அறையின் குளியலறைக்கு சென்றான் ரகுவரன்.
உள்ளம் இந்த புது மாற்றத்தில் குளிர்ந்து கிடக்க சூடேறிக் கிடந்த உடலை குளிர்ந்த நீர் தழுவிச்சென்று குளிரவைத்தது.
காலையில் அனைவரும் மகாபலிபுரம் புறப்பட ரகு எதோ வேலை இருப்பதாக சொல்லிவிட்டான். ஐஷுவும் தலை வலிப்பதாகக் கூறி வீட்டிலேயே இருந்துவிட்டாள். அவர்கள் இருவரின் நெருக்கமும் பார்வைத் தீண்டல்களும் பெரியவர்களுக்கு ஏதேதோ கதையை சொல்லாமலே உணர்த்த இளசுகளை வற்புறுத்தாமல் தனிமையில் விட்டு பெரியவர்கள் மட்டும் டாக்ஸியில் கிளம்பி இவர்களின் கிறக்கமும் மயக்கமும் பகல் முழுதும் தொடர்ந்தது.
இரவு உணவை வெளியே முடித்துக் கொண்டே அவர்கள் வீடு திரும்ப இருவரின் முகத்தில் தெரிந்த இணக்கமும் தெளிவும் அவர்களுக்கும் சந்தோஷத்தைக் கொடுத்தது.
“டேய் ரகு, நாளான்னிக்கு உன் பிறந்தநாளுக்கு என்ன பண்ணலாம்… ஏதாச்சும் பிளான் வச்சிருக்கியா…” மேனகா கேட்க ஐஸு யோசனையுடன் அமர்ந்திருந்தாள்.
“எனக்கு எந்தப் பிளானும் இல்லை மா… லீவ் வேணும்னா எடுக்கறேன்… மத்ததெல்லாம் நீங்க பிளான் பண்ணுங்க…” என்று ரகு சொல்லிவிட்டான்.
கல்யாணம் முடிந்த பிறகு வரும் முதல் விசேஷம் என்பதால் ரகுவின் பிறந்தநாளை மிகவும் விசேஷமாய் கொண்டாட வேண்டுமென்று ஐஷு சொல்லவும் பெரியவர்களும் சம்மதித்தனர். அவர்களின் அபார்ட்மெண்டில் சின்னதாய் விசேஷம் நடத்தும் அளவுக்கு பெரிய ஹால் ஒன்று இருந்தது. அங்கே உள்ளவர்களின் வீட்டு விசேஷங்களை அங்கே வைத்து கொண்டாடுவதே வழக்கம். அடுத்தநாள் காலையில் ராயல் அவென்யூவில் உள்ள அனைவரையும் ரகுவின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு வருமாறு ஐஷுவும் ரகுவும் சென்று அழைத்தனர்.
ஐஸ்வர்யா ஒவ்வொன்றையும் பார்த்துப் பார்த்து ஆவலுடன் செய்து கொண்டிருந்தாள். ரகு அணிய வேண்டிய டிரஸ், மாலையில் வெட்ட வேண்டிய கேக், டின்னர் என்று ஆர்வமாய் விசாரித்து அடுத்த நாளுக்கு ஏற்பாடு செய்தாள். அவளது உற்சாகத்தைக் கண்டு மேனகாவும் அவள் பொறுப்பிலேயே விட்டுவிட்டார்.
ரகுவுக்கு பரிசளிப்பதற்காய் கோபியும், உஷாவும் பிரேஸ்லெட் வாங்கியிருக்க அவள் அழகாய் ஒரு செயினை லாக்கெட்டுடன் வாங்கி வந்திருந்தாள். பிறந்தநாளன்று லீவெடுக்க வேண்டுமென்பதால் ரகு அன்று ஆபீஸ் சென்றுவிட்டான். 
அவளது உற்சாகத்தையும் பரபரப்பையும் கண்டு கோமுவுக்கு சந்தோஷமாகவும் சிரிப்பாகவும் இருந்தது.
“எப்படி இருந்த என் பேத்தி இப்படி மாறிட்டாளே…” என்பது போல ஒரு பார்வையை அவள் மீது வீசிக் கொண்டே அவள் அருகில் வந்து அமர்ந்தார். அவள் முனைப்பாய் ஏதோ செய்து கொண்டிருக்க என்னவென்று எட்டிப் பார்த்தவர் உதட்டைப் பிதுக்கி புருவத்தை மேலே தூக்கினார்.
அவள் ரகுவுக்கு பரிசளிப்பதற்காய் வாங்கி இருந்த செயின் டாலரில் அவர்கள் இருவரின் சின்ன வயது போட்டோவை குட்டியாக்கி டாலருக்குள் அடைக்கும் முனைப்பில் இருக்க சிரித்துக் கொண்டே அவள் அருகில் அமர்ந்தார்.
கோமு, “அழகாருக்கில்ல…” கேட்ட பேத்தியை திருப்தியுடன் நோக்கி சிரித்தவர், “ரொம்ப அழகாருக்கடி செல்லம்…” என்று கன்னத்தை வழித்து திருஷ்டி கழிக்க,
“அச்சோ, என்னைச் சொல்லலை கோமு… இந்த லாக்கெட் அழகாருக்கில்ல…” என்றவளை நோக்கி சிரித்தார்.
“ஹூம்…” என்றவர்,
மயங்குகிறாள் ஒரு மாது…
தன் மனதுக்கும் செயலுக்கும்
உறவுமில்லாது
மயங்குகிறாள் ஒரு மாது…
என்று பாடலை முணுமுணுக்க அதைக் கேட்ட ஐஷுவின் முகம் வெட்கத்தில் சிவக்க, “ப்ச்… இப்ப எதுக்கு இந்த பாட்டு கோமு…” என்றாள் செல்ல முறைப்புடன்.
“சும்மா தான் பாடினேன் ஐஷு… ஏன், நீ மயக்கமா இருக்கியா என்ன…” என்றார் அடிக்கண்ணால் அவளைப் பார்த்து.
“போ கோமு, உனக்கு எப்பவும் கிண்டல் தான்…” சிணுங்கிய பேத்தியைக் காணவே நிறைவாய் இருந்தது அவருக்கு. அவள் தலையில் கோதி விட்டவர், “இப்படி உன்னைப் பார்க்க எனக்கு எவ்ளோ சந்தோஷமா இருக்கு தெரியுமா… கையில கிடைச்ச அழகான வாழ்க்கையை வாழாம தொலைச்சிடுவியோன்னு கொஞ்சம் பயமா இருந்துச்சு… இப்பதான் எனக்கு நிம்மதி…” என்றார் நெகிழ்ச்சியுடன்.
“ப்ச்… அதெப்படி கோமு, எனக்கு நல்லது கேட்டது சொல்லிப் புரிய வைக்க தான் நீ இருக்கியே… அப்படி என்னை விட்டுடுவியா என்ன…” என்றவள், “ஆமா, நீ இங்க வந்த பின்னாடி அதிகமா இங்லீஷ் பேசறதில்லையே… ஏன்…” என்று பேச்சை மாற்றினாள்.
“என் இங்லீஷைக் கேட்டு உன் அபார்ட்மென்ட் ஆளுங்க தெறிச்சு ஓடிடக் கூடாதுல்ல அதான்…” என்று சிரித்தார்.
“ஐயே, மத்தவங்க என்ன நினைப்பாங்கன்னு யோசிக்கறது கோமுவோட வழக்கம் இல்லையே…” என்றாள்.
சிறிது நேரம் மௌனித்தவர், “ம்ம்… இட்ஸ் ட்ரூ… கோமு ஆல்வேஸ் கோமு… ஐ வில் நாட் சேன்ஞ் பார் எனி ஒன்…” என்று பழையபடி சிரித்தவரை அணைத்துக் கொண்டவள் அவர் கன்னத்தில் முத்தமிட, சிரித்தார்.
“ஆஹா, ரகு வில் கம் டு பைட்… தீஸ் கிஸ்ஸஸ் பிலாங்க்ஸ் டு ஹிம்…” என்று சிரித்தவரை முறைத்தவள், “என் கோமுக்கு கொடுத்தது போக உள்ள மிச்ச முத்தம் தான் ரகுக்கு…” என்ற பேத்தியை அணைத்து நெற்றியில் முத்தமிட்டவர், “ஹாஹா, லவ் யூ டியர்…” என்றார்.
“மீ டூ லவ் யூ கோமு…” என்று சொல்லும்போதே ரகு அங்கே வர, “கிரேன்ட்மா, கடைசில நீங்களே எனக்கு வில்லியா வந்துட்டிங்களே…” என்றான் ரகு வருத்தத்துடன்.
“வில்லி… என்ன சொல்லற ரகு…” கோமு கேட்க, “பின்ன, எனக்கு கிடைக்க வேண்டிய லவ்வும் கிஸ்சும் எல்லாம் நீங்க வாங்ககிட்டா எனக்கு என்ன மிச்சம் மீதி இருக்குமாம்…” என்று முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டான் ரகு.
“ஹஹா… நாட்டி கைஸ்… ஐஷு, உன் புருஷனுக்கு கொடுக்க வேண்டியதைக் கொடுத்து சமாதானப்படுத்து… நான் போறேன்…” என்றவர் அறையை விட்டு ஓடியே விட்டார்.
அவனை முறைத்தவள், “கோமு கிட்ட இப்படிதான் இங்கிதமே இல்லாமப் பேசறதா…” என்று கேட்க,
அவள் கையைப் பிடித்து தன்னை நோக்கி இழுத்தவன் நெஞ்சோடு அவளை இறுக்கிக் கொண்டே, “பின்ன, இத்தனை நாளா எனக்குக் கிடைக்க வேண்டியதே இன்னும் முழுசா குடுத்து முடிக்கலை… இதுல பாட்டி வேற பங்குக்கு வந்தா நான் பாவம் தானே…” என்றான் அவள் காது மடலை செல்லமாய் கடித்துக் கொண்டே.
கூச்சத்தில் நெளிந்தவள், “இருந்தாலும் நீ ரொம்ப மோசம்…” என்றவள் அவன் நெஞ்சத்தில் கை வைத்து விலக்க முயல அவனது அணைப்பு இறுகிக் கொண்டே போனது.
“இந்த விஷயத்தில் நான் ரொம்ப மோசம்னே வச்சுக்கயேன்… நானும் எவ்ளோ நாள் தான் நல்லவனாவே இருக்கிறது…” சொல்லிக் கொண்டே அவள் இதழை நோக்கிக் குனிய, “டேய் வேண்டாம்… ஹால்ல எல்லாரும் இருக்காங்க…” என்றவள், “அச்சோ அத்தை…” என்றதும் அவன் சட்டென்று அவளை விட்டு விலக, “ஹாஹா… எப்படி…” என்று பழிப்புக் காட்டியவள் அடுத்த நிமிடம் வெளியே ஓடிவிட, “அடியே என்னையா ஏமாத்திட்டா ஓடற… இதுக்கும் சேர்த்து நைட்டு கச்சேரி வச்சுக்கறேன்…” என்று சிரிப்புடன் சொல்லிக் கொண்டாலும் மனதில் நிறைவாய் உணர்ந்தான். அவனது பார்வை மேசையில் புதிதாய் இடம் பிடித்திருந்த புகைப்பட பிரேமின் மீது படிய ஐஷுவும் ரகுவும் கல்யாணக் கோலத்தில் காமிராவுக்காய் சிரித்துக் கொண்டிருந்தனர்.
அதை எடுத்து முத்தமிட்டவன், “மை ஸ்வீட் ரசகுல்லா… இத்தனை நாள் இந்த லவ்வை எல்லாம் எங்க ஒளிச்சு வைச்சிருந்தாளோ… என் செல்ல ராட்சசி…” என்று சொல்லிக் கொண்டிருக்க அமைதியாய் அவர்கள் நடவடிக்கையைப் பார்த்துக் கொண்டிருந்த பிள்ளையாருக்கு கடுப்பானது.
“ரெண்டு பேரும் அடிச்சிகிட்டுக் கிடக்கும்போது மட்டும் நான் உங்க கண்ணுக்குத் தெரிஞ்சேன்… இப்ப நான் ஒருத்தன் இங்க இருக்கறதே உங்களுக்கு நினைவில்லையா…” என்பது போல் முறைத்துக் கொண்டிருந்தார். செல்பில் ஏதோ எடுப்பதற்காய் வந்த ரகு சட்டென்று என்ன நினைத்தானோ பிள்ளையாரைப் பார்த்தவன் சல்யூட் வைத்தான்.
“எங்க என் வாழ்க்கையும் உன்னைப் போல ஒத்தையாவே முடிஞ்சிருமோன்னு கவலைப்பட்டுட்டு இருந்தேன்… நல்லவேளை, காப்பாத்திக் குடுத்திட்ட… தேங்க்ஸ் பிள்ளையாரப்பா…” என்று சொல்ல அவர் சமாதானமானார்.
அன்று இரவு சரியாய் பனிரண்டு மணிக்கு ஐஷு கொடுத்த பரிசுச் சங்கிலியில் மனம் கனிந்த ரகு மிகவும் சந்தோஷமாய் உணர்ந்தான். அவனது ரோஜாக்குட்டியை எப்போதும் நெஞ்சுக்குள் சுமந்தாலும் இப்போது நெஞ்சைத் தொட்டுக் கொண்டே இருக்கப் போகிறாளே… அவளை அணைத்து நிறுத்தாமல் முத்தமிட அவள் திணறினாள்.
பிறந்தநாளுக்கு அவள் கொடுத்த பரிசோடு அவளையும் சேர்த்தே பரிசாகப் பெற்றுக் கொண்டே விடுவித்தான் அவளது கள்வன்.
காலையில் குடும்பத்துடன் கோவிலுக்கு சென்று வந்தனர்.  மதியம் அன்னையரின் கையால் சைவ விருந்து வடை பாயசத்துடன் அமர்க்களப்பட்டது.
சிறிது ஓய்வுக்குப் பிறகு அந்த ஹாலை அலங்கரிக்கும் வேலையில் ஆளுக்கொன்றாய் செய்து கொண்டிருந்தனர். பெரிய வட்ட வடிவ கேக் ரகுவின் வெட்டலுக்காய் காத்திருக்க ஹோட்டலிலிருந்து வந்திருந்த உணவுவகைகள் ஒரு மேசையில் அணிவகுத்து சுகமாய் நாசியில் நுழைந்து இரைப்பையின் இயக்கத்தை வேகமாக்கியது.
ஐஷு சேலையில் தேவதையாய் ஜொலிக்க அவள் தேர்ந்தெடுத்த உடையில் பாந்தமாய் அருகில் நின்றான் ரகு. அனைவரும் வரத் தொடங்க வரவேற்று அமர்த்திக் கொண்டிருந்தனர். சுவாதி, வித்யா ரேவதி மற்றவர்கள் எல்லாம் குடும்பத்துடன் வந்திருக்க ஜெஸ்சி, டானியலை மட்டும் காணாததால் ஐஷு விசாரித்தாள்.
“எங்கே ஜெஸ்சி ஆன்ட்டியும், டானி அங்கிளையும் இன்னும் காணோம்…” என்று கேட்க, “அவங்க வீட்ல யாரோ கெஸ்ட் வந்திருப்பாங்க போலருக்கு… அப்புறம் வரேன்னு சொன்னாங்க ஐஷு…” என்றாள் வித்யா.
“ஓ… கெஸ்ட் வந்தா அவங்களையும் அழைச்சிட்டு வர்றது தானே…” என்றவள் அலைபேசியில் ஜெஸ்சிக்கு அழைத்தார்.
“ஆன்ட்டி, கேக் வெட்ட டைம் ஆச்சு… சீக்கிரம் அங்கிளை அழைச்சிட்டு வாங்க…” எனவும் அவர் எதோ சொல்ல,
“சரி, கேக் வெட்ட நாங்க காத்திருக்கலை… டின்னர் சாப்பிட இங்கே வந்திடணும்… உங்க வீட்டு விருந்தாளியையும் கண்டிப்பா அழைச்சிட்டு வாங்க…” என்று சொல்லி அலைபேசியை வைத்தாள் ஐஷு.
அனைவரும் சூழ்ந்து நின்று ஹாப்பி பர்த்டே பாட, கேக்கை வெட்டி முதலில் மனைவிக்கு ஊட்டினான் ரகு. அவளும் அவன் வாயில் கேக்கை வைக்க வேண்டுமென்றே அவள் விரலையும் சேர்த்து மெல்லக் கடித்தவனை காதலான கோபத்துடன் முறைத்தாள் ஐஷு. அதற்குள் மற்றவர்களும் கேக் ஊட்டி விடத் தொடங்க கரகோஷமும் சந்தோசமுமாய் இனிதாய் விழா நடக்கத் தொடங்கியது.
மாமனார் கொடுத்த பிரேஸ்லெட் ரகுவின் கையை அலங்கரிக்க, ஒவ்வொருவரும் கொடுத்த பூங்கொத்தையும் பரிசுப் பொருளையும் வாங்கிக் கொண்டு நன்றி சொன்னான் ரகு. அவனைப் பல விதத்திலும் அலைபேசி காமிராவில் கிளிக்கிக் கொண்டாள் ஐஸ்வர்யா.
அதைக் கண்ட ராகவி, “ஐஷு நீயும் போயி ரகு அண்ணா கிட்ட நில்லு… நான் போட்டோ எடுக்கறேன்…” என்று வாங்கிக் கொள்ள அவனுடன் இணைந்து நின்றவளின் முகம் சந்தோஷத்தில் பேரழகியாய் காட்ட அவளில் ஒரு கண்ணும் வரும் விருந்தினரில் மறு கண்ணுமாய் நின்று பேசிக் கொண்டிருந்தான் ரகுவரன்.
அடுத்து டின்னர் தொடங்க, பரிமாறுவதற்காய் மேசையின் அருகே காத்திருந்தனர் ஹோட்டல் சிப்பந்திகள். மகளின் முகத்தில் தெரிந்த சந்தோஷம் கண்டு பெற்றவர்களும் மகனின் மனம் போல அமைந்த வாழ்வைக் கண்டு மேனகா, புருஷோத்தமனும் மனதுக்குள் நிம்மதி கொள்ள அனைவரும் கையில் தட்டுடன் சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.
ஐஷு வழக்கம் போல கோமுவிடம் ஏதோ சிரித்துப் பேசிக் கொண்டிருக்க ரகுவும் அவர்களுடன் இருந்தான்.
“எப்படியோ நான் சொன்ன மாதிரி இந்த சுள்ளான் என் பேத்திய சாச்சுப் புட்டானே…” என்று கோமு கலாய்க்க, “ஹூம்… அதுக்கு நான் கொஞ்ச நஞ்சப் பாடா பட்டேன்…” என்று ரகு பெருமூச்சு விட ஐஷுவுடன் கோமுவும் சேர்ந்து சிரிக்க சட்டென்று அவர் பார்வை கூர்மையாக முகம் கடினப்பட்டது. ஜெஸ்சியுடன் ஒரு வெளிநாட்டுப் பெண்மணி உள்ளே வர அவரைத் தொடர்ந்து வந்த வயதான நபரைக் கண்டதும் அவரது கண்கள் குத்திட்டு நோக்கின.
எனது வசந்த காலங்கள்
முழுவதையும் களவாடிச் சென்ற
இறந்த காலமாய் அவனை
நினைத்திருந்தேன்… மீண்டும்
ஒரு இலையுதிர் காலமாய்
எதற்காக இந்த நிகழ்காலம்…
பதில் தருமோ எதிர்காலம்…

Advertisement