Advertisement

அத்தியாயம் – 9
“ஐஷூ…” பின்னில் ஒலித்த ரகுவரனின் குரலில் சட்டென்று திரும்பினாள் ஐஸ்வர்யா.
“ஓ, நம்ம பழைய போட்டோ பார்த்திட்டு இருக்கியா… வா சாப்பிடலாம்…” முகத்தில் மாறாத புன்னகையுடன் அன்போடு அழைத்தவனை அதிசயமாய் பார்த்தாள்.
“இவனை அவ்ளோ கேவலமா கழுவி ஊத்தியும் எப்படி இப்படி சிரிச்சுட்டே இருக்கான்… இவன் லூசா… இல்ல, என்னை லூசாக்க டிரை பண்ணறானா…” யோசனையுடன் பார்க்க அவன் உதட்டைச் சுளித்து கிண்டலாய் சிரித்தான். “சந்தேகமே வேண்டாம்… எனக்குப் பிடிச்சவங்க, நான் நேசிக்கிறவங்க விஷயத்தில் நான் லூசு தான்…” அவர்கள் பேசுவது பெரியவர்கள் காதில் விழுந்துவிடுமோ என்று அவள் ஹாலை நோக்க, “எல்லாரும் பக்கத்துக்கு ரூம்  பால்கனியில் நின்னு பேசிட்டு இருக்காங்க… டோன்ட் வொர்ரி…” என்றவனை திகைப்புடன் நோக்க தொடர்ந்தான்.
“உன் மைன்ட்ல என்ன ஓடிட்டு இருக்குன்னு புரியுது பேபி… நீ என்னை எவ்ளோ கழுவி ஊத்தினாலும் நான் உன்னை லவ்விட்டே தான் இருப்பேன்… இது இன்னைக்கு நேத்து வந்த லவ் இல்ல செல்லம்… நீ பொறந்ததில் இருந்து என் மனசுல தோணின லவ்… அதை நீ வேணும்னா புரிஞ்சுக்காம இருக்கலாம்… ஆனா, என் லவ் எனக்கு பெருசுதான்…” தோளைக் குலுக்கிக் கொண்டே சொன்னவனை வியப்புடன் அவள் பார்க்க சிரித்தான்.
“சும்மா லவ்வு லவ்வுன்னு சொல்லறியே… லவ் பண்ணுற பொண்ணோட சந்தோசம் தான் முக்கியம்னு நினைச்சிருந்தா அன்னைக்கு நான் சொன்னப்பவே கல்யாணம் வேண்டாம்னு சொல்லிருக்க வேண்டியது தான…” என்றாள் கிண்டலாக.
“இங்க பாரு ஐஷூ… உனக்கு என்னைப் பிடிச்சிருக்கோ இல்லையோ, இந்த ஜென்மத்துல நாம தான் புருஷன் பொண்டாட்டி… நாம நேசிச்சவங்க சந்தோஷத்துக்காக எதை வேணும்னாலும் பண்ணலாம்… நானும் அதை தான் பண்ணறேன்… என்னை விட வேற யாராலும் உன்னை சந்தோஷமா வச்சுக்க முடியாது… அது இப்ப உனக்குப் புரியலைன்னாலும் போகப் போகப் புரிஞ்சுப்ப…” தெளிவான குரலில் கூறியவனின் முகத்தில் தெரிந்த நம்பிக்கை அவளுக்கு ஆச்சர்யமாய் இருக்க அவனே தொடர்ந்தான்.
“என்னை ஒரு நல்ல நண்பனா நினைச்சு இயல்பா பழகு…”
“அப்பவும் பிடிக்கலேன்னா…” வேண்டுமென்றே அவள் கேட்க அவள் கண்களையே குறுகுறுவென்று பார்த்தவன், “நிச்சயம் பிடிக்கும்… இப்ப சாப்பிட வா…” என்று அவள் கையை இயல்பாய் பிடித்து அழைத்து வந்தான்.
“நான் இவனை அவ்ளோ இன்சல்ட் பண்ணிட்டு இருக்கேன்… இவன் என்னடான்னா வாங்க பழகலாம் ரேஞ்சுல சொல்லிட்டுப் போறான்…” அவளைக் கண்டதும் அருகில் வந்த மேனகா, “ஐஷூமா… நம்ம ரகு சமையலை சாப்பிட்டதில்லையே… சூப்பரா சமைப்பான்… சரி வாங்க… இப்ப சாப்பிட்டு கடைக்கு கிளம்பினா தான் சரியாருக்கும்…” எனவும் மற்றவர்களும் அமர்ந்தனர்.
“ஏன் ரகு, பக்கத்து பிளாட் சைலண்டாருக்கே… ஜெஸிம்மாவும் பிரான்சிஸ் அப்பாவும், இல்லயா…” கேட்ட அன்னையிடம், “அவங்க வேளாங்கண்ணி போயிருக்காங்க மா… நாளைக்கு தான் ரிட்டர்ன்…” என்றான் ரகு.
“ஓ…” என்றவர், “பக்கத்து பிளாட்ல ஒரு சூப்பர் தம்பதி இருக்காங்க… ரொம்ப அன்பான ஜாலியான ஜோடி… இந்த வயசிலயும் அவ்ளோ சுறுசுறுப்பா இருப்பாங்க… எல்லாரோடவும் நல்லாப் பழகுவாங்க… அவங்க பொண்ணு, பையன் எல்லாம் வெளிநாட்டுல இருந்தாலும் இவங்க மட்டும் இங்க இருக்காங்க… பொங்கல், தீபாவளின்னு நம்ம பண்டிகையும் கொண்டாடுவாங்க… கிறிஸ்துமஸ்க்கு கேக் வெட்டி, ரம்சானுக்கு பிரியாணியும் செய்வாங்க… பண்டிகைன்னாலே சந்தோஷம் தானேன்னு எல்லா மதத்தோட பண்டிகையும் கொண்டாடுவாங்க… இங்கே உள்ள குழந்தைங்க எல்லாம் அவங்களுக்கு ரொம்ப பெட்… நம்ம ரகுவை ரொம்பப் பிடிக்கும்… அவங்க இருந்தா இந்த புளோரே கலகலன்னு இருக்கும்…” என்றார் மேனகா.
“ஓ… நல்ல மனுஷங்க நம்மை சுத்தி இருந்தாலே நமக்கு நல்ல பாஸிடிவ் பீல் கிடைக்கும்…” என்றார் கோபிநாத்.
“சரி, சாப்பிடுங்க மாமா…” ரகுவரன் சொல்லவும் சாப்பிடத் தொடங்கினர்.
சாம்பார், பொறியல், ரசம், தயிர் என்றாலும் திருப்தியாய் ருசிக்கும்படி செய்திருந்தான் ரகுவரன். சாப்பிட்ட ஐஷூவிற்கு உண்மையிலேயே அதிசயமாய் இருந்தது.
“இவன் நிஜமாலுமே இஞ்சினியரிங் தான் படிச்சானா… இவ்ளோ சூப்பரா சமைச்சிருக்கான்… ஒருவேள, ஓவரா பேசுற நம்ம நாக்கை கவர் பண்ணறதுக்காக முன்னமே ஹோட்டல்ல வாங்கி வச்சிருப்பானோ…” சந்தேகத்துடன் யோசித்தாலும் “ஹோட்டல்ல இவ்ளோ சூப்பராவா சமைச்சுக் கொடுப்பாங்க…” என்றும் தோன்றாமலில்லை.
அனைவரும் அவன் சமையலை ஆஹோ, ஓஹோவென்று மெச்ச அவள் மட்டும் அமைதியாய் சாப்பிட்டாள்.
“மாப்பிள, சும்மா சொல்லக் கூடாது… என் பொண்ணு ரொம்பக் குடுத்து வச்சவ… இப்படி சமைச்சுப் போட்டிங்க, ரெண்டே மாசத்துல அவ குண்டாகிடுவா…” என அன்னை அவளைக் கிண்டல் செய்ய, “ஹூக்கும்… அப்ப ஏன் சொந்த சமையலை சாப்பிட்டும் உன் மாப்பிள இப்படி தொத்தலா இருக்கப் போறார்…” மனதுக்குள்ளேயே கேட்டுக் கொண்டாள்.
சாப்பிட்டு அனைவரும் துணிக்கடைக்கு கிளம்பினர்.
விதவிதமாய் பளிச்சிட்ட வண்ண வண்ணப் பட்டுப் புடவைகள் மேசையில் விரித்து வைக்கப்பட்டிருக்க, “ஐஷூ, உனக்குப் பிடிச்ச புடவைய செலக்ட் பண்ணிக்கோ…” என்ற மேனகா, “டேய் மவனே, எனக்கு எப்பவும் போல நீயே செலக்ட் பண்ணிக் கொடுடா…” என்றார் ரகுவரனிடம்.
“ஏன் மேகி, உனக்கு மாப்பிள்ளையா சேலை செலக்ட் பண்ணுவார்…” உஷா ஆச்சர்யமாய் கேட்க, “ஆமா உஷா… அவன் சூப்பரா ஆளுக்குத் தகுந்த போல புடவை செலக்ட் பண்ணுவான்…” என்றார் மேனகா பெருமிதத்துடன்.
“ஓ… அப்ப எனக்கும் மாப்பிள்ளையே புடவை செலக்ட் பண்ணட்டும்…” என்ற உஷா, “ஐஷூ, உனக்குடி…” என, “நான் பார்த்துக்கறேன்…” என்றாள் கடுப்பாய் கண் சாடையிலேயே. ரகு புன்னகையுடன் புடவைகளுக்கு நடுவில் நின்று ஒவ்வொன்றையும் எடுத்து விரித்துப் பார்க்க ஐஷூ உதட்டைச் சுளித்தாள்.
“போச்சுடா… இந்தப் பய லேடீசைக் கவர் பண்ணுற அனைத்து உத்திகளையும் கரைச்சுக் குடிச்சிருப்பான் போலருக்கே… ஒரு டிபார்ட்மென்ட் விடாம எல்லாத்துலயும் மார்க் ஸ்கோர் பண்ணிட்டே வந்தா நம்மளை வீட்டுக்குப் போனதும் இந்த உஷா கழுவிக் கழுவி ஊத்துமே… அவன் எடுக்கிறதை விட நல்ல சேலையை செலக்ட் பண்ணி நம்ம திறமையைக் காட்டிடணும்…” என மனதில் சூளுரைத்துக் கொண்டாள்.
“அந்த சேலையை எடுங்க…” ராக்கில் இருந்த புடவையைக் காட்டி அவனுக்குப் போட்டியாய் ஆவலோடு களத்தில் இறங்கவும் செய்தாள். கோபிநாத்தும் புருஷோத்தமனும் ஏதோ பழைய விஷயம் பேசி சிரித்துக் கொண்டு ஓரமாய் நாற்காலியில் அமர்ந்திருந்தனர். தங்க ஜரிகைகளுடனும், சீக்வன்ஸ் வொர்க் வைத்தும், டிசைனர் சாரி மாடலிலுமாய் பலவித வண்ணத்தில் கண்ணைப் பறித்த புடவைகளைத் தரம் பிரிக்கத் தெரியாமல் விலையை வைத்து அதன் தரத்தை தீர்மானிக்க எண்ணியவள் விலையுயர்ந்த சேலைகளில் பிடித்த கலரைத் தேடி எடுத்து தன் மேல் வைத்துப் பார்த்தவள் ரகுவை நோக்க அவன் வேண்டாமென்பது போல் தலையாட்டினான்.
“இவன் என்ன சொல்லுறது… ஒரு புடவை கூட என் இஷ்டத்துக்கு எடுக்கக் கூடாதா… இந்த சேலை நல்லாதானே இருக்கு…” என மனதுக்குள் சிணுங்கிக் கொண்டே வேறு பார்த்துக் கொண்டிருந்தாள்.
ரகு அதற்குள் அவனது தேர்வை முடித்திருக்க, உஷாவும், மேனகாவும் புன்னகையுடன் அவன் தேர்வு செய்த சேலையை தங்கள் மேல் வைத்து கண்ணாடியில் அழகு பார்த்துக் கொண்டிருக்க கடுப்பானாள்.
“கல்யாணம் எனக்கா, அவங்களுக்கான்னே தெரியலை… வந்ததும் அவங்களுக்கு எடுத்திட்டு இருக்காங்க…” யோசித்து எரிச்சலுடன் அவள் அவர்களைப் பார்த்துக் கொண்டிருக்க, அவள் அருகில் ரகுவின் குரல் கேட்டது.
“ஐஷூ, இந்த சேலை உனக்கு ரொம்ப அழகாருக்கும்… வச்சுப் பாரேன்…” என்றவன் அவள் மேல் அந்த சேலையை வைக்க மெரூன் கலரில் தங்க நிற ஜரிகைகள் கொத்துக் கொத்து இலைகளாய் தொங்க முந்தானையில் அழகான வேலைப்பாடுடன் சீக்வன்ஸ் வேலை செய்யப்பட்டிருக்க உண்மையிலேயே மிகவும் அழகாய் அம்சமாய் இருந்தது அந்தப் புடவை. ஆனாலும் கடுப்பிலிருந்தவள், “வேற பார்க்கலாம்…” என்று முகத்தை திருப்பிக் கொண்டாள்.
“மேடம், சார் செலக்ஷன் சூப்பர்… இது லேட்டஸ்ட்டா வந்த டிசைன் மேம்… அதிகம் மூவிங்ல உள்ள டிசைன்… அதுவும் இந்த மெரூன் கலர் தான் எல்லாரும் விருப்பப்பட்டு கேட்டு வாங்குறாங்க… நீங்க வேணும்னா கட்டிப் பாருங்களேன்…” என்றார் அங்கு விற்பனையில் இருந்தவர்.
“இல்ல, நீங்க வேற எடுங்க…” அவள் சொல்லவும், “வேற டிஸைன் காட்டுங்க சார்…” என்றான் ரகுவும். அவரும் விதவிதமாய் பல டிஸைன்களை எடுத்துக் காட்டியும் ரகு எடுத்த சேலையை விட எல்லாமே சுமாராகத்தான் தெரிந்தது. “ச்சே… வீம்பு பிடிக்காம அதையே எடுத்திருக்கலாமோ…” என மனதுக்குள் யோசிக்கும்போதே அருகில் நின்று சேலையைப் பார்த்துக் கொண்டிருந்த இரண்டு பெண்கள், “சார், அந்த சேலையை எடுங்க…” என்று ரகு தேர்வு செய்த சேலையைக் கேட்க, “எடுத்துக்கவா சார்…” ரகுவிடம் அவர் கேட்க அவன் தலையாட்டுவதற்குள், “இந்தப் புடவையை நாங்க தான் செலக்ட் பண்ணி வச்சிருக்கோம்ல… அவங்களுக்கு வேற காட்டுங்க…” என்றாள் வெடுக்கென்று அந்தப் புடவையை எடுத்து வைத்துக் கொண்டு.
ரகு உதட்டுக்குள்ளேயே சிரிக்க, “ஹலோ… நக்கலா சிரிக்க வேண்டாம்… எனக்கு அந்த புடவை நல்லாருக்கும்னு தோணினதால எடுத்துக்கறேன்னு சொன்னேன்…” என்றவளை நோக்கி உதட்டைப் பிதுக்கி தலையாட்டினான் ரகுவரன்.
அவள் கையிலிருந்த புடவையைக் கண்டு ஆவலுடன் வந்த மேனகாவும் உஷாவும், “வாவ்… அருமையான கலர்… உனக்கு ரொம்பப் பொருத்தமா இருக்கும்… இதை நீயா செலக்ட் பண்ணே…” என்று கேட்க, “ஆமாம்மா… உங்க மருமக ரொம்ப நல்லா புடவை செலக்ட் பண்ணறா…” என்று கடைக்காரரை நோக்கிக் கண்ணடிக்க, ஐஷூவின் முகத்தில் சந்தோஷம் படர்வதைக் கண்ட கடைக்காரர், “ஆஹா நேக்கான பிள்ளையா தான் இருக்கான்… இவன் பிழைத்துக் கொள்வான்…” என சிரித்துக் கொண்டார். சேலையை அவள் மீது வைத்து கடைக்காரப் பெண் அழகாய் உடுத்து காண்பிக்க ஐஷுவே அசந்து போகுமளவு பொருத்தமாய் இருந்தது.
ஆவலுடன் அவளையே பார்த்த ரகுவரன் வேகமாய் மொபைலில் அவளைக் கிளிக்கிக் கொண்டு பாட்டிக்கு வீடியோ கால் செய்தான்.
“ஹலோ டார்லிங்… சீ யுவர் ஐஷு பேபி…” என்று அவளைக் காண்பிக்க, “வாவ்… ஷீ ஈஸ் சோ கார்ஜியஸ்… லவ்லி செலக்சன்…” என்றார் கோமளவல்லி. கடையில் உள்ள அனைவரும் தன்னையே பார்ப்பது போலத் தோன்ற ஐஷு கூச்சமாய் உணர்ந்தாள். ரகு பாட்டியுடன் பேசிக் கொண்டிருக்க அடுத்து வேறு சில முக்கியமான உறவினர்களுக்கும் ஆண்களுக்கும் வேண்டிய உடைகளை எடுத்துக் கொண்டு சல்வார் செக்ஷனுக்கு சென்று பாட்டிக்கும் ஐஷுவிற்கும் வேண்டியதை வாங்கிக் கொண்டனர்.
நேரம் ஏழு மணியைத் தாண்டியிருந்தது. ரகுவின் பெற்றோர் அன்று அங்கேயே தங்குவதால் இவர்களையும் தங்கும்படி கூற மறுத்தவர்கள், கோமளவல்லி அங்கே தனியே இருப்பதைக் காரணம் காட்டி மதுரை கிளம்பினர்.
அவர்களிடம் விடை பெறுகையில் ரகு ஆவலுடன் தன்னையே பார்ப்பதை உணர்ந்தவள் மெல்ல அவனை ஏறிட்டு, “வருகிறேன்…” என்பது போல் தலையாட்டினாள்.. இத்தனை நேரம் அவன் உடனிருக்கையில் தள்ளி நின்ற மனம் கிளம்பும் நேரத்தில் எதையோ விட்டுச் செல்வது போல் தோன்றுவதன் காரணத்தை அவள் உணரவில்லை.
நாட்கள் அழகாய் நகர ஐஷுவின் கல்லூரிப் படிப்பு முடிந்து கல்யாண தினமும் வந்தது. ஐஸ்வர்யா தனது கல்லூரித் தோழியர் யாருக்கும் அழைப்பிதழ் கொடுக்கவே இல்லை. தந்தை அதைப்பற்றிக் கேட்டபோதும் அவசியமில்லை என்று மறுத்து விட்டாள். ஆனாலும் கோபிநாத் கிருத்திகா, கீதாவை மட்டும் அவருக்கு நன்கு தெரியுமாதலால் வீட்டுக்கு சென்று அழைத்திருந்தார்.
அதற்கு முதலில் கோபித்தாலும், “இவன்தான் புருஷன்னு உலகமே தெரியப் போகுது… இனி அவங்களுக்குத் தெரிஞ்சா என்ன…” என்று மனதைத் தேற்றிக் கொண்டாள் ஐஷூ.
“கெட்டி மேளம்… கெட்டி மேளம்…” மங்கள வாத்தியம் முழங்க, சொந்த பந்தங்கள் வாழ்த்தி அட்சதை, தூவ மனம் நிறைந்தவளின் அருகில் மாங்கல்யத்துடன் நெருங்கியவன் குனிந்திருந்தவளின் காதில் “ஐ லவ் யூ ஐஷூ…” என்று கூற, திகைத்து நிமிர்ந்தாள். அவள் கண்களில் தன் காதல் வழியும் கண்களைக் கலக்க விட்டவன் கழுத்தில் மூன்று முடிச்சிட்டு மனையாளாக்கிக் கொண்டான்.
அழகு தேவதையாய் கல்யாணக் கோலத்தில் ஜொலித்துக் கொண்டிருந்த தோழியின் அருகே கல்லூரி மாணவனுக்கு பட்டு வேஷ்டி கட்டி விட்ட போல நின்ற ரகுவைக் கண்டு கிருத்திகாவும், கீதாவும் முதலில் திகைத்தாலும் அவன் இனிமையாய் அவர்களோடு பேசுவதைக் கண்டு அவர்களும் இயல்பாய் பேசினார்கள். மணப்பெண் தோழியராய் அவர்களே அருகே நின்றனர். கல்யாணம் முடிந்து சடங்குகள் தொடர்ந்து கொண்டிருக்க புகைப்படமும், வீடியோவுமாய் படமாக்கிக் கொண்டிருந்தனர். அது முடிந்ததும் பெற்றோரின் காலிலும் பாட்டியின் காலிலும் விழுந்து ஆசி பெற்றுக் கொண்டனர்.
“ரோஜாக்குட்டி… தேவதை போல இருக்கடா செல்லம்… உங்க ஆசையையும் எங்களோட வாக்கையும் கடவுள் நல்லபடியா நிறைவேத்திக் கொடுத்துட்டார்… ரெண்டு பேரும் நூறு வருஷத்துக்கு சந்தோஷமா வாழணும்…” மனமார வாழ்த்தினார் புருஷோத்தமன். கோபிநாத்தும் உஷாவும் கல்யாணம் நல்லபடியாய் முடிந்த சந்தோஷத்தில் கண்கலங்க நின்றிருந்தனர்.
“உஷா, கோபி… வாட் ஈஸ் திஸ்… இட்ஸ் டைம் டு பி ஹாப்பி… ஒய் யூ டிஸ்டர்ப் யுவர் ஐஸ்…” என்று அவர்களின் தோளில் தட்டிக் கொடுத்தவர், “சியர்ஸ் மை டியர்ஸ்…” என்றார் சந்தோஷத்துடன்.
ரகுவரனின் நண்பர்களும், உடன் பணி புரிபவர்களும் வந்திருக்க அவர்களை ஐஷுவிற்கு அறிமுகப்படுத்தி வைத்தான் ரகு. அவள் அனைவரிடமும் புன்னகை முகமாய் இருந்ததே ரகுவிற்கு சந்தோஷமாய் இருந்தது.
“டேய் மச்சான்… நீ ஏன் உன் லவ்வுக்காக அவ்ளோ பீல் பண்ணேன்னு இப்ப புரியுது டா… சிஸ்டர் போட்டோ விட நேர்ல ரொம்ப அழகா இருக்காங்க… யூ ஆர் லக்கி…” என்று காதைக் கடித்தான் வருண். இளையவர்கள் மேடையில் புகைப்படம் எடுத்துக் கொண்டிருக்க கிண்டலும் கேலியுமாய் மண்டபம் கலகலத்தது.
புகைப்படத்துக்கு போஸ் கொடுத்து மணமக்கள் டயர்டாக விருந்துண்ண அழைத்துச் சென்றனர். அவர்களுடன் கீதா, கிருத்திகாவும் இருக்க ஒருவருக்கொருவர் ஊட்டி விடச் சொல்லி அலும்பு செய்து கொண்டிருந்தனர்.
ரகு ஆசையோடு செய்ய ஐஷு கடனே என்று செய்து கொண்டிருந்தாள். ஆனாலும் பெரியவர்களின் மனம் வாடக் கூடாது என்பதற்காக புன்னகையுடனே இருந்தாள். எல்லாம் முடிந்து வீட்டுக்கு கிளம்பியவர்கள் பால் பழம் கொடுக்கும் சடங்கையும் முடித்தனர்.
“சரி உஷா, நாங்க கிளம்பட்டுமா… நல்ல நேரம் முடியப் போகுது…” மேனகா சொல்லவும் அதுவரை இருந்த புன்னகை முகத்தில் காணாமல் போக மகளைப் புகுந்த வீட்டுக்கு அனுப்பும் பிரிவுத் துயர் சூழ கண் கலங்கினார் உஷா. அதைக் கண்டு கோபியின் கண்களும் கலங்க, அவர்களைத் தேற்றினார் கோமளவல்லி.
“கோபி, அவங்க சந்தோஷமா கிளம்பட்டும்… ரெண்டு நாள் கழிச்சு மறுவீட்டுக்கு மறுபடி வரத்தானே போறாங்க…” வார்த்தை பலமாய் இருந்தாலும் அவர் குரல் உடைந்திருக்க அவர் வருத்தத்தை மறைத்துக் கொண்டு தன்னைத் தேற்றுகிறார் எனப் புரிந்து கொண்டார் கோபிநாத். அதுவரை அமைதியாய் இருந்த ஐஷு பெற்றோரின் கண்ணீரைக் கண்டதும் கண்ணீர் விடத் தொடங்கினாள்.
ஒவ்வொரு பெண்ணுக்கும் புகுந்த வீடென்பது மறுஜனனம் போலத்தானே… புதிய மனிதர்கள், புதிய சூழ்நிலை என்று புதிய எல்லாவற்றுக்கும் பழக்கப்பட்டுப் பொருந்திக் கொள்ளும் இரண்டாம் ஜனனம். பிறந்த வீட்டில் வளர்ந்த சூழ்நிலை மாறி புது வீட்டில் தன்னைப் பொருத்திக் கொள்ளும் புது முயற்சி.
அவர்களைத் தவிப்புடன் பார்த்த ரகுவரன், “மாமா, என்ன இது… நீங்களே கலங்கினா எப்படி… அவ என்ன புது மனுஷங்க வீட்டுக்கா வாழப் போறா… உங்க வீட்ல அவ எப்படி இருந்தாலோ அதே போல அங்க வந்து இருக்கப் போறா… நான் பார்த்துக்கறேன் மாமா…” என்று சொல்லவும் ஆறுதலாய் அவன் கையைப் பற்றிக் கொண்டார்.
பேத்தியைக் பிரியும் வருத்தத்தில் சற்றுத் தள்ளி நின்று மனதுக்குள் அழுது கொண்டிருந்தவரைக் கண்ட ஐஸ்வர்யா,
“கோமு…” என்று கட்டிக் கொண்டு கண்ணீர் விட, பனித்த விழிகளைத் துடைத்துக் கொண்டு புன்னகைத்தவர், அவளை அணைத்துக் கொண்டு நெற்றியில் முத்தமிட்டார்.
“யூ ஆர் கோயிங் டு பி எ பியூட்டிபுல் வோர்ல்ட்… சியர் அப் மை டியர்… ஆல்வேஸ் ஸ்மைல்…” என்றார்.
அவர் மனது Slipping through my fingers all time என்ற Mammaa Mia ஆங்கிலப் படத்தின் பாடலை சோகமாய் தமிழில் மொழிமாற்றம் செய்து பாடிக் கொண்டிருந்தது.
என் விரல் பிடித்து வளர்ந்தவள்
எனைவிட்டுப் புது உலகிற்கு
பறந்து செல்கிறாய்…
என்னோடான உன் ஒவ்வொரு
நிமிடத்தின் உணர்வுகளையும்
மனதில் படம் பிடித்து
வைத்துக் கொள்ள முயற்சிக்கிறேன்…
உன் மனதிலுள்ளதை உண்மையில்
நான் உணர்ந்து பார்க்கிறேனா…
ஒவ்வொரு முறையும் உனைத்
தெரிந்து கொள்வதில் நான் மிகவும்
நெருக்கமாய் உணர்கிறேன்…
நீ வளர்ந்து கொண்டே இருக்கிறாய்…
என் விரல் விட்டுப் பறக்கிறாய்…

Advertisement