Advertisement

அத்தியாயம் – 6
“ஹாய் ஐஷூ…” சொல்லிக் கொண்டே தன் அருகில் வந்த தோழி கிருத்திகாவிடம் புன்னகைத்தாள் ஐஸ்வர்யா.
“கான்டீன் போகலாம் வரியா…” கிருத்தி கேட்கவும், அருகில் அமர்ந்திருந்த கீதாவும் அவர்களுடன் சேர்ந்து கொண்டாள்.
“ஏய் கிருத்தி… நம்ம ஐஷூக்கு மேரேஜ் பிக்ஸ் ஆகிருக்கு தெரியுமா… இன்னைக்கு அவளை ட்ரீட் வைக்க சொல்லிடுவோம்…” என்ற கீதாவை எரிச்சலுடன் பார்த்தாலும் ஐஷூ எதுவும் சொல்லவில்லை.
“வாவ், கங்கிராட்ஸ் ஐஷூ… மாப்பிள்ளை யார், அபிஷேக்கா, இல்ல ஹ்ரிதிக் ரோஷனா…” என்றாள் சிரித்துக் கொண்டே.
“ஹூம் சல்மான்கான்…” கடுப்புடன் சொன்னவளை நோக்கி சிரித்த கீதா, “ஏண்டி அலுத்துக்கற… மாப்பிள்ள போட்டோ கேட்டாலும் இல்லன்னு சொல்லற… நீயாச்சும் மாப்பிள்ளைய பார்த்தியா இல்லியா…” என்றாள் யோசனையுடன்.
அவள் கேட்கவும், “இவளுகளுக்கு அந்த கருவாடு தான் மாப்பிள்ளைன்னு தெரிஞ்சா என்னைக் கழுவிக் கழுவி ஊத்துவாங்களே… என்ன சொல்லலாம்…” என யோசித்தவள் சமாளிப்பாய் புன்னகைத்தாள்.
“அதுவந்து… நான், கல்யாணம் முடிஞ்ச பிறகு தான் மாப்பிள்ளை முகத்தையே பார்ப்பேன்னு வீட்ல சொல்லிருக்கேன்… அதனால வீட்ல அப்பா, அம்மா எந்த மாப்பிள்ளையை ஓகே சொன்னாலும் எனக்கும் ஓகேன்னு சொல்லிட்டேன்…” என்றாள் அவள்.
அவளை நம்பாமல் பார்த்த கிருத்தி, “அதுக்காக அவங்க வீட்ல இருந்து உன்னைப் பார்க்க வந்தப்பவும் பார்க்காமயா இருந்த… நம்பற மாதிரி இல்லையே…” எனவும் கடுப்பானாள்.
“நீங்க நம்பினாலும் சரி, நெம்பினாலும் சரி… இதான் உண்மை… கான்டீன் போகலாம்னு சொல்லிட்டு கத பேசிட்டு இருக்காம வாங்க… வடை வாங்கித் தரேன்… இல்லேன்னா வடைய காக்கா தூக்கிட்டு போயிடப் போகுது…”
சொல்லிக் கொண்டே எழுந்து அவள் முன்னில் நடக்க, எங்கே வடை போய்விடுமோ என்ற பயத்தில் தோழியரும் தொடர்ந்தனர். “கிருத்தி, இவ சொல்லுறது நம்பற மாதிரி இல்லையே… ஒருவேள வாயிலயே வடை சுடுறாளோ…” என்றாள் கீதா.
“ம்ம்… இருக்கலாம்… வா, விட்டுட்டுப் போயிடப் போறா…” என்ற கிருத்தி அவளைத் தொடர கீதாவும் சென்றாள். வடை சொல்லிவிட்டு மேசையை சுற்றி மூவரும் அமர்ந்தனர்.
“ஐஷூ, நான் ஈவனிங் உன் வீட்டுக்கு வந்து மாப்பிள்ளை போட்டோவ பார்த்திட்டு தான் வீட்டுக்குப் போவேன்…”
“எதுக்கு, நானே பார்க்காத மாப்பிள்ளைய பார்த்தே தீரணும்னு உனக்கு என்ன அவசியம்… நீங்களும் கல்யாணத்துக்குப் பார்த்தா போதும்…” என்றாள் கீதாவிடம்.
“நீதானே பார்க்கக் கூடாதுன்னு இருக்கே… நாங்க பார்த்தா என்ன…” என்றாள் கீதாவும் விடாமல்.
“ஆஹா விட மாட்டா போலருக்கே…” என யோசித்தவள் முறைப்புடன் கேட்டாள்.
“நீயெல்லாம் ஒரு பிரண்டா… என்னோட மாப்பிள்ளையை நான் பார்க்காம நீ பார்த்து சைட் அடிக்கலாம்னு நினைச்சா எனக்கு பீல் ஆகாதா…” கேட்டவளை விநோதமாய் பார்த்தாள்.
“ஓ… மாப்பிள்ள ரொம்ப அழகோ… நாங்க அவரை சைட் அடிச்சிருவமோன்னு ப்ரொடக்ட் பண்ணறியா… அதுசரி, உன் நிறத்துக்கும், அழகுக்கும் உன்னை விட்டுட்டு எங்களைப் பார்க்க அவருக்கு என்ன கண்ணு தெரியாதா…”
அவள் தன் அழகைப் பாராட்டவும் சற்றுத் தணிந்தவள், “அதுக்கில்ல கீது, நீங்களும் என்னைப் போலவே எங்க கல்யாணத்துக்கு தான் அவரை முதல்ல பார்க்கணும்னு ஆசையாருக்கு…” என்று ஐஸ்வர்யா சொல்லவும், “சரி விடுடி, அவதான் இவளோ சொல்லறாளே… நாமும் அவரைக் கல்யாணத்துக்கே பார்த்து சைட் அடிச்சிப்போம்…” என்றாள் கிருத்தி.
“அதுக்கு உங்களை எல்லாம் கல்யாணத்துக்கு அழைச்சா தானே…” என்று மனதுக்குள் நினைத்துக் கொண்ட ஐஷூ, “சூப்பர்டி கிருத்தி, உனக்கு இன்னும் ரெண்டு வடை வேணும்னாலும் சொல்லட்டுமா…” என்றதும் கீதா பாவமாய் பார்க்க, “சரி, உனக்கும் தான்…” என்றவள் சிரித்தாள்.
“ஹப்பா, எப்படில்லாம் சமாளிக்க வேண்டி இருக்கு… இவங்களுக்கு எல்லாம் மறந்து கூட பத்திரிக்கை வச்சிடக் கூடாது… அப்புறம் என் இமேஜ், டேமேஜ் ஆயிடும்…” என யோசித்துக் கொண்டே வடையை சாப்பிடத் தொடங்கினாள்.
இரவு வேலை முடிந்து பிளாட்டுக்குத் திரும்ப நேரமாகி விட குளித்து பிரட் ஜாமுடன் இரவு உணவை முடித்துக் கொண்டு டீவியை உயிர்ப்பித்து சோபாவில் அமர்ந்தான் ரகுவரன். வேலை பிஸியில் மறந்திருந்த ஐஷூவின் நினைவு சுகமாய் மனதை ஆக்கிரமிக்க புன்னகைத்துக் கொண்டான்.
அவளது கோபமான பேச்சு கூட தனக்கு குதூகலத்தையே கொடுப்பதை யோசித்து சிரித்தான்.
“என் ஐஷூ இப்பவும் வளர்ந்த குழந்தையாவே இருக்காளே… எப்படில்லாம் பேசறா… என்னை முறைச்சு முறைச்சுப் பார்க்கிற அந்தக் கண்ணை அப்படியே…” யோசிக்கும்போதே மியூசிக் சானலில் உருகலாய் ஒலித்த பாடல் மனதுக்குள் நுழைய கண்களை டீவியில் பதித்தான்.
“கண்கள் தாண்டி போகாதே
என் ஆருயிரே… என் ஓருயிரே…
ஒரு காதலிலே மொத்தம் ஏழு நிலை
இது எந்த நிலை என்று தோன்றவில்லை…
என் ஆறறிவில் ரெண்டு காணவில்லை…
என் ஆருயிரே… என் ஓருயிரே…
வந்து சேர்ந்துவிடு… என்னை சேர விடு…
இல்லை சாகவிடு….”
ஷாருக்கான் மனீஷாவை நினைத்து காதலில் உருக, வைரமுத்துவின் வார்த்தைகளுக்கு உயிர் கொடுத்துக் கொண்டிருந்த ஸ்ரீனிவாசின் குரல் A.R. ரஹ்மானின் இசையில் வழுக்கிக் கொண்டு அவன் உயிரை உரசியது. உள்ளுக்குள் ஒரு புதிய ஹார்மோன் உத்வேகத்துடன் சுரக்க, உடனே அவளை அழைக்கும் எண்ணம் உதயமானது.
கடிகாரத்தைப் பார்த்தவன், “இந்த நேரத்தில் கூப்பிட்டா ராட்சஸி போனை எடுப்பாளா…” என யோசிக்க, “கூப்பிட்டது நீன்னு தெரிஞ்சா எந்த நேரத்திலயும் அவ எடுக்க மாட்டாளே… அப்புறம் எதுக்கு பில்டப்பு…” என்றது மனக்குரல்.
“சரி, கொஞ்சம் அடக்கி வாசிப்போம்… நாளைக்குப் பார்த்துக்கலாம்…” என நினைத்தவன் மீண்டும் பாடலில் லயிக்கத் தொடங்கினான். அவன் மனதைப் புரிந்து கொண்டு ஒளிபரப்புவது போல் எல்லாப் பாடலும் காதலாகவே கசிந்துருகிக் கொண்டிருக்க சுகமான உணர்வில் திளைத்தவன் சிறிது நேரத்திற்குப் பிறகு அதை அணைத்துவிட்டு உறங்க சென்றான். உறக்கத்திலும் அவள்  கண்ணை உருட்டி அவனை முறைக்க, அந்தப் பார்வை உயிரைத் தீண்டுவதை உணர்ந்தான். கண்கள் தாண்டிப் போகாதே… என் ஆருயிரே… என் ஓருயிரே…” உறக்கத்தில் முணுமுணுத்துக் கொண்டே புரண்டு கொண்டிருந்தான் ரகு.
உன் நினைவென்ற தொட்டிலில்
என்னை நானே தாலாட்டுகிறேன்…
நிலவை காட்டி சோறூட்டும் அன்னையாய்
உன் நினைவைக் காட்டி
நித்திரையை அழைக்கிறேன்…
**********************
“உஷூ, கொஞ்சம் தண்ணி கொடு…” சொல்லிக் கொண்டே அன்னையின் அருகில் சோபாவில் அமர்ந்தார் கோபிநாத்.
“என்னங்க, போன விஷயம் நல்லபடியா முடிஞ்சுதா…” கேட்டுக் கொண்டே தண்ணீர் சொம்பை கணவரிடம் நீட்டினார் உஷா.
“ம்ம்… மண்டபம் பார்த்துட்டேன்… பெருசா, நல்லாருக்கு… சீக்கிரமே அட்வான்ஸ் கொடுக்கலன்னா வேற யாராச்சும் புக் பண்ணிடுவாங்க… நாளைக்கு நாம ஜோசியரைப் பார்த்துட்டு வந்திடுவோம்… ஐஷூக்கு இன்னும் காலேஜ் முடியாததால நம்ம சொந்தக்கரங்களை மட்டும் அழைச்சு சிம்பிளா நம்ம வீட்டுலயே நிச்சயம் வச்சுக்கலாம்… அப்புறம் ரெண்டு மாசம் கழிச்சு கல்யாணத்துக்கு எல்லாரையும் அழைச்சு சிறப்பாப் பண்ணிடலாம்னு புருஷு சொன்னான்… எனக்கும் அதான் சரின்னு தோணுது… நீங்க என்ன நினைக்கறீங்கம்மா…” என்றார் அன்னையிடம்.
“தட்ஸ் குட்… அப்படியே பண்ணிடலாம்…” என்றார் கோமளா.
“சரிம்மா, ஆனா ஐஷூவ நினைச்சா தான் எனக்கு கொஞ்சம் கவலையாருக்கு… கல்யாணம்ங்கிறது ஒரு பொண்ணுக்கு மனசுல எத்தனை சந்தோஷத்தையும் கனவுகளையும் கொடுக்கிற விஷயம்… இவ இப்படி ஏனோ தானோன்னு இருக்குறதைப் பார்த்தா பயமாருக்கு… நம்ம கட்டாயத்துக்கு வேண்டி சம்மதிச்சாலும் மனசார இந்த வாழ்க்கையை அவ ஏத்துக்கணுமே… அவ இப்பவும் சின்னப் பிள்ளைங்க போலவே யோசிக்கறா…” என்றார் கவலையுடன்.
மகனின் தோளில் ஆதரவாய் தட்டிய கோமளவல்லி, “யூ டோன்ட் வொர்ரி மை சன்.. ஷீ வில் அன்டர்ஸ்டான்ட் வாட் ஈஸ் லைப் ஈஸ்…” என்றார்.
“அத்தை, அவ கொஞ்சமாச்சும் கலகலப்பா இருக்காளா… எப்பவும் ரூமுக்குள்ள உக்கார்ந்துட்டு… கல்யாணப் பொண்ணு போலவா இருக்கா…” என்றார் உஷா.
“ஹஹா… எவ்ரிதிங் வில் சேஞ்ச்… ஷீ ஆல்சோ… யூ லுக் அட் தி மேரேஜ் வொர்க்ஸ்… ஐ வில் டேக் கேர் ஆப் ஹர்…”
“ஓகே மா… நகை ஆர்டர் பண்ணனும், துணி எடுக்கணும்… நிச்சயத்துக்கு யாரெல்லாம் அழைக்கணும்னு லிஸ்ட் எடுக்கணும்… நிறைய வேலை இருக்கு… எதெல்லாம் எப்பப்ப பண்ணனும்னு நீங்க முடிவு பண்ணிட்டு சொல்லுங்க…”
“குக்கிங் யாருன்னு டிசைட் பண்ணிட்டியா…” என்றார்.
“வைகாசில நிறைய முகூர்த்தம் இருக்குமே… நம்ம மணி ஐயர் கிடைப்பாரான்னு தெரியலைம்மா… நாளைக்கு ஜோசியரைப் பார்த்தா தான் நம்ம தேதிக்கு கேட்க முடியும்…”
“ம்ம்… வெல்… எவ்ரிதிங் ஈஸ் கோயிங் டு பைன்…”
“சரிம்மா… டயர்டா இருக்கு… கொஞ்சநேரம் படுத்திருக்கேன்…” சொல்லிவிட்டு சோர்வுடன் அறைக்கு சென்றார் கோபிநாத்.
“என்னங்க, உடம்புக்கு என்ன பண்ணுது… சாப்பிட ஏதாச்சும் கொண்டு வரட்டா…” அக்கறையாய் கேட்டுக் கொண்டே கணவனின் பின்னில் சென்ற மருமகளை கவலையாய் நோக்கினார் கோமளவல்லி.
மகளைப் பற்றிய கவலை மகனை வாட்டுகிறது எனப் புரிந்து கொண்டார். ஒரே ஒரு மகளென்று நிறையவே நேசத்தையும் செல்லத்தையும் கலந்து கொட்டி வளர்த்திருந்த அழகு மகள். அவளது விருப்பத்தை தனது நட்பிற்காக தூக்கி எறிந்து விட்டோமோ என்ற குற்றவுணர்வு அவரை அலைக்கழித்தது. அன்பான அருமையான குடும்பத்தில் வாழ்க்கைப்படப் போவது புரியாமல் இப்படி ஏனோ தானோவென்று இருக்கிறாளே என்ற வருத்தம் அவர் மனதை வருத்தியது. அவர் மனது கோமளவல்லிக்கும் புரியவே செய்தது. எழுந்தவர் ஐஷுவின் அறைக்கு சென்றார். ஏதோ எழுதிக் கொண்டிருந்தவள் நிமிர்ந்தாள்.
“ஐஷூ… வாட் ஆர் யூ டூயிங் பேபி…”
“ம்ம்… பார்த்தா தெரியலையா கோமு… துணி துவைச்சிட்டு இருக்கேன்…” என்றாள் இடக்காக.
“ஓ… அதான் ஒயிட் குரோ மல்லாக்கப் பறக்குதா…” கேட்ட பாட்டியை நோக்கி முறைத்தவள் பிறகு சிரித்தாள்.
“கோமு… எப்படி உன்னால எப்பவும் இப்படி ரிலாக்ஸா இருக்க முடியுது… எனக்கு ஆச்சர்யமா இருக்கு…” என்றவள், “தயவுசெய்து தமிழ்ல பதில் சொல்லு…” என்றாள்.
“ஹஹா ஐஷூ டியர், எந்தப் பிரச்னை வந்தாலும் அதை மூளைக்கு எடுத்துட்டுப் போயி யோசிக்கணும்… மனசுக்குள்ள கடத்தி விட்டோம்னா அவ்ளோதான்… அது நம்மளை யோசிக்க விடாம பல கேள்வி கேட்டு அதுலயே நம்மை மூழ்கடிச்சிடும்… இப்ப உன் அப்பாவையே எடுத்துக்கயேன்… நண்பனோட நட்பை ஒதுக்கவும் முடியாம, உன்னோட விருப்பத்தை கேக்கவும் முடியாம, நான் செய்தது சரியா தப்பான்னு மனசை வருத்திகிட்டு கிடக்கான்… பார்க்கவே பாவமாருக்கு…” என்று பிட்டைப் போட்டார்.
“என்ன சொல்லற கோமு… அப்பாக்கு என்னாச்சு…” அவளது பதட்டம் மனதுக்கு நெகிழ்ச்சியைக் கொடுக்க பேத்தியின் அருகில் அமர்ந்து அவள் கையைப் பிடித்துக் கொண்டார்.
“ஐஷூ டியர்… உன் மேல உன் பேரன்ட்ஸ் எவ்ளோ அன்பு வச்சிருக்காங்கன்னு உனக்கே தெரியும்… உனக்கு அவங்க நல்லதைத் தவிர வேற எதுவும் பண்ண மாட்டாங்க… உன்னோட கல்யாணம் அவங்களுக்கு திருவிழா மாதிரி எத்தனை சந்தோஷத்தைக் கொடுக்கணும்… நீ இந்த வீட்டு செல்லக்குட்டிடா… நீ இப்படி உன் கல்யாணத்துக்கு சந்தோஷமே இல்லாம எதுலயும் கலந்துக்காம ரூம்லயே உக்கார்ந்துட்டு இருந்தா அவங்க மனசு எவ்ளோ பாடுபடும்… பாவம் உன் அப்பா… உன்னைப் பத்தின கவலைல என் மகன் உடம்புக்கு எதுவும் வந்திடக் கூடாதேன்னு பயமாருக்கு…”
“நீ என்ன சொல்லற கோமு…”
“ஆமாடா செல்லம்… நீ கலகலன்னு சந்தோஷமா இருந்தா அவனுக்கும் நிறைவா இருக்கும்… கல்யாணத்துக்கு ஓகே சொல்லி இதான் உன் வாழ்க்கைன்னு தீர்மானிச்ச பிறகு எதுக்கு இப்படி வேண்டா வெறுப்பா இருக்கணும்… உன் அப்பாவோட சந்தோஷம் உன் கைல தான் இருக்கு…” பாட்டி சொன்னதை யோசிக்கையில் அவளுக்கும் எல்லாம் சரியாகவே தோன்றியது.
எதிலும் கலந்து கொள்ளக் கூடாதென்று அவள் நினைக்கவெல்லாம் இல்லை… ஆனாலும் ரகுவை முழுமனதோடு அவளால் ஏற்றுக் கொள்ள முடியாமலே விலகி நின்றாள். தனது விலகல் தன் தந்தையின் மனதை பாதிக்கிறதென்பதை யோசிக்கையில் அவளுக்கும் வருத்தமானது.
அவளை யோசிக்க விட்டு அமைதியான கோமுவின் பார்வை செல்பில் குட்டி கணபதியின் அருகிலிருந்த போட்டோ பிரேமின் மீது விழ வியப்பில் கண்களை விரித்தார். எழுந்து அதை எடுத்தவர் அதை அப்படியும் இப்படியும் திருப்பிப் பார்த்துக் கொண்டே “வாவ் வொண்டர்புல்… இதென்ன புதுசாருக்கு…” என்று கேட்க,
“அது அந்த ராகு கொடுத்த கிப்ட் கோமு… ஆளு சோப்ளாங்கியா இருந்தாலும் கிப்ட் செலக்சன் சூப்பரா தான் இருக்கு… வேண்டாம்னு திருப்பி அனுப்பிருப்பேன்… என் போட்டோ எதுக்கு அவனுக்கு அனுப்பனும்னு வச்சுகிட்டேன்…” என்றவளை நோக்கிப் புன்னகைத்தவர்,
“உன்னையே அவனுக்குக் கொடுக்கப் போற, உன் போட்டோவை அனுப்ப மாட்டியோ… நல்லாவே சமாளிக்கற பேபி…” என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டே “லவ்லி கிப்ட்… இப்படி ஒரு ஐடியா எப்படி வந்திச்சோ… பட், சூப்பரா இருக்கு… அந்தப் பையன் கிட்ட நிறைய டாலன்ட் இருக்கும் போலருக்கு…” என்று பாராட்டினார் கோமு.
“ஹூக்கும்… போதும் போதும்…” என்றவளிடம், “ஓகே ஐஷூ பேபி நீ யோசி… அப்பாவுக்கு வேண்டியாச்சும் கொஞ்சம் கலகலன்னு இருக்க டிரை பண்ணு…” என்றார்.
“ம்ம்… சரி கோமு, அப்பாக்கு வேண்டிதான் கல்யாணத்துக்கே சம்மதிச்சேன்… இதை செய்ய மாட்டேனா… நான் பார்த்துக்கறேன்…” என்றாள் அவள்.
“ஓகே குட் கேர்ள்… நாளைக்கு உனக்கு லீவ் தானே… என்னைக் கொஞ்சம் பியூட்டி பார்லர் கூட்டிப் போறியா…” எனவும், “இப்ப எதுக்கு கோமு உனக்கு பியூட்டி பார்லர்…” என்று முறைத்தாள் அவள்.
“நெக்ஸ்ட் வீக் உனக்கு எங்கேஜ்மென்ட் பிக்ஸ் பண்ணறதா கோபி சொல்லிருக்கான்… அதுக்குதான்…”
“அதுக்கு நாந்தான பார்லர் போகணும்… நீ எதுக்கு…”
“இல்ல, பங்க்ஷன்க்கு நிறைய அழகான பாய்ஸ் எல்லாம் வருவாங்க… அவங்க முன்னாடி பிகரா இருக்கணும்ல… அப்பதான் உனக்கு அம்மாவா ல இருந்து அக்காவா க்கு பிரமோஷன் கொடுக்க முடியும்…” என்ற பாட்டியை நோக்கி முறைத்தவள், அதை யோசித்து பக்கென்று சிரித்து விட்டாள்.
“ஹஹா… கோமு, உனக்கு சப்ஸ்டியூட்டே கிடையாது… சான்சே இல்ல, நீ வேற லெவல் கோமு…” என்று வாய் விட்டு சிரித்தவளை நோக்கி அமைதியாய் புன்னகைத்தவர்,
“எப்பவும் இப்படி சிரிச்சுட்டே இரு… அதான் என் ஐஷூ பேபியோட அழகின் ரகசியம்… மைன்ட் இட் பேபி…” என்றவர், “ரகு கால் பண்ணா கிப்ட் சூப்பரா இருக்குன்னு நான் சொன்னேன்னு சொல்லிடு…” என்று சொல்லிக் கொண்டே அங்கிருந்து கிளம்ப ஐஷூ யோசித்தாள்.  
“இந்த கருவாடு அன்னைக்கென்னமோ அப்படிப் பண்ணிருவேன்… இப்படிப் பண்ணிருவேன்னு சொல்லுச்சு… இப்ப ஒரு போனைக் கூடக் காணோம்… அடுத்த நாளே சென்னை போயிட்டதா அத்தை சொன்னாங்களே…” என யோசித்தவள், “ஒருவேளை கிப்ட் கொடுத்தா மயங்கிப் போயி நானே கால் பண்ணுவேன்னு கணக்குப் போட்டிருக்குமோ… அதெல்லாம் நடக்காதுன்னு அந்த பயபுள்ளைக்கு எப்ப தான் புரியப் போகுதோ…” என நினைத்துக் கொண்டாள்.
மேனகாவும், புருஷுவும் தினமும் போன் பண்ணி ரோஜாக்குட்டியை விசாரித்துக் கொண்டிருக்க ரகு அன்று அழைத்த பிறகு பேசவே இல்லை. ஆனாலும் அவனது குரல் மட்டும் அவள் காதுக்குள் ஒலித்துக் கொண்டேயிருந்தது.
என்னை நெருங்காதே
என்ற பிறகு அழைத்திடாத
உன் அழைப்பை
ஆராய்ந்து கொண்டிருக்கிறேன்…
வேண்டாமென்றே வேண்டுவதும்
மாட்டேனென்றே
மாட்டிக் கொள்வதும் தான்
காதலின் எழுதா விதியோ…

Advertisement