Advertisement

அத்தியாயம் – 3
லெட் இட் கோ, லெட் இட் கோ…
கான்ட் ஹோல்ட் இட் பாக் எனிமோர்
லெட் இட் கோ, லெட் இட் கோ…
டர்ன் அவே அண்ட் ஸ்லம் தி டோர்…
இயர் போன் வழியே காதில் வழிந்த புரோசன் படத்தின் பாடலுக்கு கழுத்து நரம்புகள் புடைக்க கண்ணை மூடி உணர்ச்சிப் பிழம்பாய் பாடிக் கொண்டிருந்தார் கோமளவல்லி. அறைக்கதவைத் திறந்து பேத்தி உள்ளே வந்ததைக் கூட அறியாமல் கத்திக் கொண்டிருந்தவரை சாரி, பாடிக் கொண்டிருந்தவரின் அருகே வந்தவள் அலைபேசியில் மெல்ல வெளியே கசிந்து கொண்டிருந்த பாடலை உள்வாங்கிக் கொண்டு அவர் கையிலிருந்த மொபைலைப் பறிக்க, பாட்டி நெற்றிக் கண்ணைத் திறந்தார்.
“ஐஷூ, வாட் ஈஸ் திஸ்… வாட் அ பியூட்டிபுல் சாங்.. கிவ் மி அ போன்…” என்றவரை கோபமாய் முறைத்தாள் ஐஸ்வர்யா.
“கோமு, வரவர உன் அட்டகாசம் ஓவர் ஆகிட்டே வருது… உன் வயசுக்கு உனக்கு இங்க்லீஷ் பாட்டு… அதும் புரோசன் பாட்டு கேக்குதா… இதெல்லாம் உனக்கே த்ரீ மச்சா தெரியல… எல்லா வீட்லயும் குழந்தைங்க கிட்ட தான் எப்பப் பாரு போனோட சுத்தாதேன்னு சொல்லுவாங்க… இங்க அப்படியே ஆப்போசிட்… நம்ம வீட்டுல நீதான் அதிகமா மொபைல் யூஸ் பண்ணற…” என்றாள் கடுப்புடன்.
பேத்தியின் முகத்தில் ஓடிய யோசனை வரிகளைக் கண்டவர், “ஓகே, வாட் ஈஸ் த மேட்டர் பேபி…” என்றார்.
சிறிது தயங்கியவள், “கோமு, அந்த ரமா சொன்னதைப் பத்தி நீ என்ன நினைக்கறே…” என்றாள்.
“ரமா, ஹூ ஈஸ் ரமா… ஐ நோ ராமா ஒன்லி…” என்றதும் முறைத்தவள், “கடுப்பேத்தினா நான் பேசலை போறேன்…” என்று கிளம்பியவளின் கையைப் பிடித்தவர், “ஐஷூ, என்ன சொல்ல வந்தியோ அதை ஓப்பனா சொல்லு… எதுக்கு சுத்தி வளைக்கற…” என்றார்.
“ப்ச்… அதான் கோமு, நேத்து பிள்ளையார் கோவில்ல இருந்து வரும்போது என் பிரண்டு ஒருத்தியைப் பார்த்தோமே… அவ சொன்னதைப் பத்தி தான் கேக்கறேன்…” என்று சொல்லவும் புன்னகைத்தார்.
“ம்ம்… என் அழகுப் பேத்தியோட குருவி மூளை வேலை செய்யத் தொடங்கிருச்சு போலருக்கே…” என நினைத்துக் கொண்டே குழந்தைத்தனம் மாறாத முகத்துடன் மனதில் உள்ளதை பளிச்சென்று முகத்தில் காட்டும் கண்ணாடி போல் வளர்ந்த குழந்தையாய் நின்ற பேத்தியின் கை பிடித்து கட்டிலில் அமர்த்தினார்.
“ஐஷூ மா, இப்ப உனக்கு என்ன கன்பியூஷன்… அந்தப் பொண்ணு சொன்னதையே நினைச்சிட்டு இருந்தியா… பாவம், வாழ வேண்டிய வயசுல கைல ஒரு குழந்தையோட இப்படி நிக்கறதைப் பார்த்தா பாவமா தான் இருக்கு… ஹூம், இதே போல தான் நானும் அன்னைக்கு நின்னேன்… ஆனா அந்தப் பொண்ணு சொன்ன வார்த்தை ரொம்ப ரொம்ப சத்தியமான வார்த்தை… அதை என் அனுபவத்துல உணர்ந்திருக்கேன்…”
“என்ன சொல்லற கோமு…”
“வெறும் புற அழகு நிரந்தரமில்லாதது… மனசுல அன்பும், நேர்மையும், நல்ல பண்பும் உள்ள ஒருத்தனை தான் நல்ல ஆண்மகன்னு சொல்ல முடியும்… ஆணோட அழகு வெளித் தோற்றத்தில் இல்லை… தன்னை நம்பி வர்றவளை அவ மனசு நோகாம அன்பா அரவணைச்சு கடைசி வரை உனக்கு நானிருக்கேன்னு தோண வைக்குற அந்த மேன்மை தான் ஒரு ஆணோட மிகப் பெரிய அழகு… அப்படிப்பட்ட அன்பு   மட்டும் தான் எப்பவும் நிலையா இருக்கும்… இதை நீயும் புரிஞ்சுக்கணும் ஐஷூ… உன்னை இந்த ரகுவரனையே கல்யாணம் பண்ணிக்கோன்னு நான் கம்பெல் பண்ண மாட்டேன்… ஆனா அவன் புற அழகை வச்சு நிராகரிக்க நினைக்காதேன்னு தான் சொல்லறேன்…”
“ம்ம்… அதெல்லாம் எனக்குப் புரியுது கோமு, ஆனா அவனைப் பார்த்தாலே எனக்குப் பிடிக்க மாட்டேங்குதே…” குழந்தை போல உதட்டைப் பிதுக்கிக் கூறியவளை புன்னகையுடன் நோக்கினார்.
“நீ ஏன் அவனைக் கல்யாணம் பண்ணிக்கப் போறவன்னு நினைச்சுப் பார்க்கற… உன் புருஷூ மாமா பையன், மேகி அத்தை பையன்னு பிரண்ட்லியா நினைச்சுக்க… அவங்க முதல்ல நேர்ல வந்து பார்க்கட்டும்… அப்பவும் உனக்குப் பிடிக்கலேன்னா நீ உறுதியா வேண்டாம்னு சொல்லிடு…”
அவர் சொல்லவும் சிறிது யோசித்தவள், “சரி கோமு… நீ இவ்ளோ சொல்லறதால நான் ஓகே சொல்லறேன்… ஆனா, பிடிக்கலேன்னா பிடிக்கலைன்னு சொல்லிடுவேன்… அப்புறம் நீங்க யாரும் வருத்தப்படக் கூடாது… அப்பாட்ட சொல்லிடு…” கண்டிஷன் போட்டவளை, “என் செல்லம்… உன் டாடி கேட்டா ரொம்ப ஹாப்பி ஆகிடுவான்…” என்றவர் எழுந்து மகனைத் தேடிச் செல்ல அப்போதும் யோசனையுடனே தனது அறைக்கு சென்றாள் ஐஸ்வர்யா.
“இதெல்லாம் சரியா வருமா… புருஷூ அங்கிள் பத்தி அப்பா நிறைய சொல்லிருக்கார்… மேகி ஆன்ட்டி, ரகு பத்தியும் சொல்லிருக்கார்… ஆனா அவங்களோட பழகினதெல்லாம் எனக்கு நினைவே இல்லையே…” என யோசித்தாள்.
“ஹூம், இவன் ரகுவா… இல்ல, என்னைப் பிடிக்கப் போற ராகுவான்னு தெரியலையே கடவுளே… யோவ் ஜி, என் பியூச்சர்ல ஏதாச்சும் கேம் விளையாடின, அப்புறம் உன் பிரண்ட்ஷிப்பை டைவர்ஸ் பண்ணிடுவேன் சொல்லிட்டேன்… நீதான் எந்தத் திருவிளையாடலும் பண்ணாம இந்தப் பிரச்சனைக்கு ஒரு நல்ல சொல்யூஷன் தரணும்…” அவளது அறையில் ஒரு செல்பில் உக்கார்ந்திருந்த குட்டி கணபதியிடம் மிரட்டலாய் கூறியவள், படிக்க வேண்டிய புத்தகத்தை எடுத்துக் கொண்டு நகர்ந்தாள்.
“உஷா, வேர் ஈஸ் மை சன்… ஒன் குட் நியூஸ் பார் யூ…” மதுரை மல்லியை அழகாய் சரமாக்கிக் கொண்டிருந்த உஷா அத்தையின் குரலில் நிமிர்ந்தார்.
“வாசல்ல தான் இருக்கார் அத்தை… என்ன விஷயம்…” என்றார் ஆவலுடன். “அவனையும் அழைச்சிட்டு வா… சொல்லறேன்…” என்று பிகுவுடன் கூறியவரை, “என்ன குட் நியூஸ்… ஒருவேள ஐஷூ ஓகே சொல்லிட்டாளோ…” என யோசித்ததும் ஒரு சந்தோஷப்பரபரப்பு தொற்றிக் கொண்டது.
வாசலில் ரோஜாச் செடியின் பழுத்த இலைகளை வெட்டி விட்டுக் கொண்டிருந்த கோபிநாத் மனைவியின் அழைப்பில் திரும்பினார்.
“என்னங்க, அத்தை உங்களைக் கூப்பிடறாங்க… சீக்கிரம் வாங்களேன்… அனேகமா ஐஷூ ஓகே சொல்லிட்டான்னு நினைக்குறேன்…” என்றதும் அதே உற்சாகம் அவரையும் தொற்றிக் கொள்ள, “அப்படியா… என்ன இருந்தாலும் என் அம்மாவுக்கு சாமர்த்தியம் ஜாஸ்தி தான்…” என்று பாராட்டிக் கொண்டே மனைவியுடன் அன்னையைத் தேடிச் சென்றார்.
மடியில் காலண்டரை வைத்துப் பார்த்துக் கொண்டிருந்த கோமளவல்லி, “கோபி, வர்ற சன்டே நாள் நல்லாருக்கு… அன்னைக்கே புருஷூ பாமிலியை நம்ம வீட்டுக்கு வர சொல்லிடேன்…” என்றார்.
“என்னம்மா சொல்லறீங்க, ஐஷூ ரகுவைக் கட்டிக்க ஒகே சொல்லிட்டாளா…” சந்தோஷத்துடன் கேட்டார் கோபிநாத்.
“ஹேய் வெய்ட் மை சன்… ஓவர் எக்சைட்மென்ட் ஈஸ் நாட் குட் பார் ஹெல்த்… இப்போதைக்கு அவங்க இவளைப் பார்க்கறதுக்குதான் ஓகே சொல்லிருக்கா… சப்போஸ் நேர்ல பார்த்தும் அந்தப் பையனை அவளுக்குப் பிடிக்கலைன்னா தென் நாம போர்ஸ் பண்ண வேண்டாம்… அப்புறம் பக்குவமா சொல்லிக்கலாம்… சில பொண்ணுகளுக்கு போட்டோல பார்த்ததும் பையனைப் பிடிச்சிடாது… நேர்ல பார்த்த பிறகு பேசிக்கலாம்…” என்றார் பெரிய மனுஷியாக. அன்னை சொன்னதை யோசித்தவர், “சரிம்மா… புருஷூகிட்ட வரசொல்லி நான் இன்பார்ம் பண்ணிடறேன்…” என்றார்.
“என்னங்க, அத்தை இப்படி சொல்லறாங்க… நாம அவ்ளோ சொல்லியும் ஏன் ஐஷூக்குப் புரிய மாட்டேங்குது… நாம நம்ம பொண்ணுக்கு கெடுதலா பண்ணப் போறோம்…” புலம்பிக் கொண்டே கணவனின் பின்னில் சென்றார் உஷா.
“சரி பார்த்துக்கலாம் உஷு… முதல்ல அவங்க நம்ம வீட்டுக்கு வரட்டும்… கல்யாணப் பேச்செல்லாம் அப்புறமா பேசிக்கலாம்…” என்றவர் நண்பனை அழைத்தார்.
அலைபேசியில் ஒளிர்ந்த நண்பனின் எண்ணைக் கண்டதும் முகம் மலர்ந்தார் புருஷோத்தமன்.
“மேகி… கோபி கூப்பிடறான்…” நாற்காலியில் அமர்ந்தபடியே அடுக்களையை நோக்கிக் குரல் கொடுக்க சமையலில் இருந்த மேனகா கையைத் துடைத்துக் கொண்டு வேகமாய் கணவனிடம் வந்தார்.
“கோபி… உன் போனை எதிர்பார்த்துட்டே இருந்தோம்… என்ன சொல்லறா எங்க மருமக… எல்லாரையும் எப்ப நேர்ல பார்ப்போம்னு ரொம்ப ஆசையா இருக்கு… அம்மா நல்லா இருக்காங்களா… எங்களை எல்லாம் ரோஜாக் குட்டிக்கு நினைவிருக்கா…” ஆவலுடன் கேட்ட நண்பனுக்கு பதில் சொன்னவர், “வர்ற சன்டே நீங்களே அவளை நேர்ல பார்க்கதானே போறீங்க… அப்ப நேர்லயே பேசிக்கோங்க… சரி புருஷூ, சன்டே சீக்கிரம் நம்ம வீட்டுக்கு கிளம்பி வந்திருங்க… பத்திரமா வாங்க… சிஸ்டர் கிட்டேயும் மாப்பிள கிட்டயும் சொல்லிடுடா… நான் வச்சிடறேன்…” என்றவர் போனை வைக்க மேனகா புன்னகையுடன் நின்றார்.
“நான் ரகுவை அழைச்சு சொல்லிட்டு வரேங்க…” என்றவர் மகனை அழைக்க செல்ல புருஷோத்தமன் சிரித்தார்.
“அதானே… உடனே உன் மகனுக்கு சொல்ல ஓடிடுவியே…” அவனை சனிக்கிழமையே இங்க வந்திடச் சொல்லு மா…”
“ம்ம்… சரிங்க…” என்ற மேனகா அலைபேசியை எடுத்துக் கொண்டு நகர்ந்தார். அவர் அழைக்கும்போது அவனது எண் அணைத்து வைக்கப்பட்டிருக்க கடிகாரத்தைப் பார்த்தவர், “அட, இந்த நேரத்துல கான்பிரன்ஸ்ல இருப்பேன்னு சொல்லி இருந்தானே… சரி, வரட்டும்…” என்றவர், “கால் மீ…” என்று மெசேஜ் மட்டும் அனுப்பிவிட்டு தனது வேலையைப் பார்க்கத் தொடங்கினார்.
மனதுக்குள் சன்டே அங்கே செல்லும்போது என்னவெல்லாம் செய்ய வேண்டும்… ஐஷுவுக்கு என்ன வாங்கிச் செல்ல வேண்டும்… என்றெல்லாம் யோசனை ஓடிக்கொண்டிருக்க அவர்களுக்கு என்னவெல்லாம் பிடிக்கும் என்ற லிஸ்ட்டை யோசித்துக் கொண்டிருந்தார்.
கான்பரன்ஸ் முடிந்து தனது காபினுக்கு வந்த ரகுவரன் கழுத்தில் இருந்த டையை சற்று தளர்த்திக் கொண்டு அமர்ந்தான். அலைபேசியை எடுத்து ஆன் பண்ணவும் அன்னையின் தவறிய அழைப்பையும், மெசேஜையும் கண்டவன், “ஆபீஸ்டைம்ல அம்மா அழைக்க மாட்டாங்களே… என்னவாருக்கும்…” யோசித்துக் கொண்டே அழைத்தான்.
“அம்மா, கால் பண்ணீங்களா…”
“ஆமாடா ரகு, கோபி கோபி அண்ணன் கால் பண்ணாரு… நம்மள சன்டே மதுரைக்கு வர சொல்லிருக்காங்க… நீ சனிக்கிழமை கிளம்பி இங்கே வந்திடுப்பா… இப்பவே சொன்னா தானே உனக்கு ஆபீஸ்ல லீவ் சொல்ல வசதியாருக்கும்…” என்றார் உஷா.
அன்னை சொன்னதும் மனதுக்குள் ஒரு குளிர் மழை தூவ, “ஓ… சூப்பர்மா… நான் இப்பவே லீவ் சொல்லிடறேன்…” என்றவனின் குரலில் வழிந்த உற்சாகம் மேனகாவுக்கும் சந்தோஷத்தைக் கொடுத்தது.  
“ஐஷூக்கு நல்லதா ஒரு கிப்ட் வாங்கணும்டா… என்ன வாங்கலாம்னு யோசிச்சுட்டு இருக்கேன்…” 
“அவ்ளோதானே, டோன்ட் வொர்ரி மா, அதை நான் பார்த்துக்கறேன்…” என்றான் மகன்.
“ம்ம்… சரிப்பா, நீ வொர்க் பாரு… நான் நைட் பேசறேன்…” என்றவர் போனை வைக்க அதற்குப் பின் ரகுவின் மனமோ வேலையில் பதியாமல் நிலையின்றித் தவித்தது.
“என் ஐஷூவை நேரில் பார்க்கப் போகிறேன்… என்னைப் பார்த்ததும் அவ எப்படி ரியாக்ட் பண்ணுவா… எனக்குள் அவளைப் பத்தின நினைவுகள் பசுமையா இருக்கிற போல அவள் மனசுலயும் நான் இருப்பேனா…” யோசித்துத் தவித்தவன் சிரித்துக் கொண்டான்.
“ச்சே… ரொம்ப யோசிக்கறமோ… இவ்ளோ நாள் காத்தாச்சு… எதுவா இருந்தாலும் பார்த்துக்கலாம்…” என நினைத்ததும் மனம் லேசாக அவள் முகம் மனதில் நிழலாடியது.
உலகமெங்கும் தேடினேன்
உன்னத பரிசொன்றை
உன் காலடியில் வைத்திட…
உனை நினைத்து துடிக்கும்
என் இதயத்தைத் தவிர
விலை மதிப்பானது
வேறொன்றும் காணேன்…
உனக்கு பரிசாய்
எனைக் கொடுத்திடவே
விரும்புகிறேன் பெண்ணே…
மனதில் ஓடிய வரிகளை எண்ணி சிரித்துக் கொண்டான் ரகு.
“டேய் ரகுவரா… உனக்கு கூட காதல்ல கன்னாபின்னான்னு கவிதை எல்லாம் தோணுது…” தனக்குள் சிரித்துக் கொண்டு அமர்ந்திருந்தவனின் தோளில் தட்டினான் வருண்.
“டேய் மாப்ள… என்னடா, கண்ணைத் திறந்துட்டே கனவு கண்டுட்டு இருக்கே… மூஞ்சில டன் கணக்குல வழியுது… கனவுல யாரு, அனுஷ்காவா, நயன் தாராவா…” என்றவனை நோக்கிப் புன்னகைத்தவன், “டேய் வருண்… ஏண்டா அந்த ஆண்டிகளை எல்லாம் டிஸ்டர்ப் பண்ணற… எனக்கு எப்பவும் என் ஐஸ்வர்யா மட்டும் போதும்…” என்றான்.
“என்னது ஐஸ்வர்யா வா… அவங்க இவங்களை விட ஓல்டு டா…” என்ற வருணை முறைத்தவன், “நான் என்னோட ஐஷுவை சொன்னேன்…” என்றான் ரகுவரன். வருணுக்கும் இவனது குழந்தைக் காதல் பற்றி தெரியுமாதலால் “ ஓ… அந்த ஐஷூவா… என்னடா, எப்ப மீட் பண்ண போறீங்க…” என்றான் அவன் ஆவலுடன்.
“சன்டே போறோம் டா அவ வீட்டுக்கு… அவளுக்கு ஒரு சூப்பர் கிப்ட் வாங்கணும்… அதான் என்னன்னு யோசிச்சுட்டு இருக்கேன்…” என்றான் நண்பனிடம்.
“சூப்பர் மச்சி… கிப்ட் எல்லாம் கொடுத்து கலக்கப் போற… ஆல் தி பெஸ்ட்… நல்லா யோசிச்சு சூப்பர் கிப்ட் வாங்குடா…” என்றவன் தன் வேலையைத் தொடர்ந்தான்.
இரு குடும்பங்களும் காத்திருந்த ஞாயிற்றுக் கிழமையும் எப்போதும் போல உற்சாகத்துடன் விடிந்தது. உஷாவும் கோபிநாத்தும் உற்சாகமாய் ஒவ்வொன்றும் செய்து கொண்டிருக்க ஐஸ்வர்யாவின் மனதிலும் சிறு பரபரப்பு இருந்தாலும் அவள் வெளியே காட்டிக் கொள்ளாமல் இயல்பாய் இருப்பது போல இருந்தாள்.
அடுக்களையில் நெய்யில் வறுபடும் முந்திரி, திராட்சையின் மனம் வீடெங்கும் நிறைந்திருக்க யோகா முடித்து மாடியிலிருந்து வந்த கோமளவல்லி, “உஷா, கிவ் சம் காபி…” என்றபடி தனது அறைக்கு செல்ல, வேகமாய் காபி கலந்து எடுத்துக் கொண்டு மாமியாரின் அறைக்கு ஓடினார் உஷா. காபியை வாங்கிக் கொண்டவரிடம், “அத்தை, ஒரு சின்ன ரிக்வஸ்ட்… இன்னைக்கு மட்டும் நீங்க சுரிதார் போடாம சாரி உடுத்துக்கறீங்களா ப்ளீஸ்…” என்றார்.
“ஒய் உஷா, தே ஆர் கமிங் டு சீ மை கிரான்ட் டாட்டர்… நாட் மீ… ஒய் ஷுட் யூ ஹாட் லாட் ஆப் டென்ஷன்… டோன்ட் வொர்ரி மை டியர் டாட்டர்… ஆல் ஈஸ் வெல்…”
அவரது பதிலைக் கேட்டதும் உஷாவின் முகம் சுருங்கிப் போக, “கோ, கெட் ரெடி… டைம் ஈஸ் அப்…” என்றார் கோமு.
“கடவுளே… இவங்க இம்சை தாங்கவும் முடியல, இவங்க இல்லாம இருக்கவும் முடியல… என்னதான் பண்ணறதோ…” மனதுக்குள் புலம்பிக் கொண்டே சென்றார் உஷா.
“உஷூ… இன்னும் கொஞ்ச நேரத்துல அவங்க இங்க வந்திருவாங்க… ஐஷூ ரெடியாகிட்டா தானே…” என்ற கணவரிடம், “ரெடியாகிட்டு இருக்காங்க…” என்று பதில் கூறியவர், மகளின் அறைக்குள் நுழைய அவள் அன்னை வைத்த சேலையைக் கட்டாமல் சுரிதாரில் இருந்தாள்.
“என்னடி ஐஷூ இது… நான் பார்த்துப் பார்த்து உனக்கு எடுத்து வச்ச சேலையைக் கட்டிக்காம இப்படி சுரிதார்ல நிக்கற… உன் அப்பாவைப் பெத்தவங்க தான் நான் சொன்னதைக் கேட்க மாட்டாங்கன்னா நான் பெத்த நீயும் அப்படியே தான் இருக்க…” எரிச்சலுடன் கூறிய அன்னையை அசால்ட்டாய் பார்த்தவள், “போதும்… போதும்…” என்றாள்.
“எனக்குன்னு வந்து சேர்ந்தாங்களே…” வார்த்தையை வெளியே விடாமல் கஷ்டப்பட்டு மனதுக்குள் பிடித்து வைத்த உஷா, “ஐஷூ மா, ப்ளீஸ்டி செல்லம்… இன்னைக்கு ஒரு நாளைக்கு அம்மா ஆசைக்கு சேலை கட்டிக்கோ… இந்த சேலை உனக்கு ரொம்ப அழகாருக்கும்…” என்று கெஞ்ச, “அதெல்லாம் முடியாது மா… என்னை சுரிதார்ல பார்க்க விருப்பம் இருந்தா அவங்க பார்க்கட்டும்… இல்லேன்னா வேண்டாம்னு சொல்லிடட்டும்…” என்ற மகளை ஓங்கி அறையும் ஆத்திரம் வந்தாலும் சூழ்நிலை கருதி பொறுத்துக் கொண்டார்.
“சரி, சரி… இன்னும் கொஞ்சம் நல்ல டிஸைனர் சுரிதாராச்சும் போடேன்…” என்று கெஞ்சிய அன்னையைக் கண்டு பாவம் தோன்ற, “சரி… போட்டுக்கறேன்…” என்றாள் மகள்.
“என் செல்லம்… நீ எவ்ளோ பெரிய அழகின்னாலும் கொஞ்சமாச்சும் இப்படி பண்ணினா தானே இன்னும் அழகா தெரிவ…” என்று ஐஷுக்கோ ஐஸ் வைத்துவிட்டு நகர்ந்தார்.
சிறிது நேரத்தில் வாசலில் கார் சத்தம் கேட்க கோபிநாத்தும், உஷாவும் வேகமாய் வெளியே சென்றனர். தனது அறையில் இருந்த ஐஸ்வர்யாவின் இதயம் காரணமே இல்லாமல் அதிக வேகத்துடன் துடித்துக் கொண்டிருந்தது. அவளது அறை ஜன்னலில் வீட்டின் முன்பக்கம் தெரியாது. கார் திறக்கும் ஓசையைத் தொடர்ந்து கலகலவென்ற பேச்சும் சிரிப்பும் காதில் விழுந்தாலும் சரியாய் புரியவில்லை. வெளியே சென்று பார்க்கவும் தயக்கமாய் இருக்க காத்திருந்தாள்.
பிடித்தமில்லை
என்றாலும்
படபடக்கிறது இதயம்…
உன் வரவை
எதிர் நோக்கி…
வெல்வது மதியா…
என் விதியா என்று…

Advertisement