Advertisement

அத்தியாயம் – 28
சில நாட்களுக்குப் பிறகு.
உனக்காக வாழ நினைக்கிறேன்…
உசுரோட வாசம் பிடிக்குறேன்…
பொடவ மடிக்கையில்
உன்னதான் மடிக்கிறேன்…
ஒரு நூறு வருஷம் பேச நினைச்சு
தோளில் தூங்கிடுவேன்…
உனக்காக… உனக்காக…
மனதில் உள்ள பாடலை அலைபேசி ரிங் டோனாய் வெளியிட துணியை மடக்கி வைத்துக் கொண்டிருந்த ஐஷு புன்னகையுடன் அதைக் காதுக்குக் கொடுத்தாள்.
“ஹலோ கோமு… என்ன பண்ணிட்டு இருக்கே…”
“என்ன பண்ணுறனா… சாப்பிட்டு, தூங்கி, எழுந்து மறுபடி சாப்பிட்டுன்னு செம போரிங்கா இருக்கு… எப்பதான் இந்த கொரோனா பிரச்சனை சரியாகுமோன்னு கவலையா இருக்கு…” அவர் குரலில் கவலை தெரிந்தது.
“ம்ம்… இங்கயும் அப்படித்தான் கோமு… யாரும் வெளிய வரக் கூடாதுன்னு சொன்னதால நம்ம அபார்ட்மென்ட்ல யாரையும் வெளிய விடறதில்லை… யாருக்கு என்ன பொருள் வேணும்னாலும் லிஸ்ட் சொல்லிட்டாப் போதும்… கடைல இருந்து டெலிவரி வந்திடும்… இல்லேன்னா வாட்ச்மேன் எல்லார் வீட்டுக்கும் வாங்கிட்டு வந்திருவார்… ஒரு நாள் இந்த ரகுக்கு லீவ் கிடைக்காதான்னு ஏங்கினது போயி இவ்ளோ நாள் லீவ் கிடைச்சும் எங்கயும் போக முடியலை… அதும் வொர்க் இன் ஹோம்னு சொல்லி எப்பப் பார்த்தாலும் லாப்டாப்பும் கையுமா உக்கார்ந்துட்டு இருக்கான்… எனக்கு தான் செம போரிங்கா இருக்கு…” சலிப்புடன் கூறினாள்.
“ம்ம்… கொத்துக் கொத்தா உசுரைக் கொல்லுற இந்த கொள்ளை நோய் எப்பதான் சரியாகுமோ… இங்க மதுரைல யாருக்கெல்லாமோ இருக்காம்… அதும் வயசானவங்களுக்கு வந்தா அப்புறம் அவ்ளோதான்னு சொல்லுறாங்க… அதைக் கேட்டதில் இருந்து உன் அப்பாவும் அம்மாவும் என்னை ரூம் விட்டே வெளிய வரக் கூடாதுன்னு சொல்லி குழந்தையைப் பார்த்துக்கற போல பார்த்துக்கறாங்க…” அவர் சொல்லவும் ஐஷு யோசித்தாள்.
“கோமு, உன் மனசைக் கொன்னுட்டுப் போன உன் புருஷனுக்கும் இந்தக் கொள்ளை நோய் வந்திருக்காம்…” ஜெஸ்ஸி சொன்ன விஷயத்தை சொல்லலாமா என யோசித்தவள் வேண்டாம் என்று விட்டு விட்டாள்.
“உன் கருவாட்டுப் பயகிட்ட சொல்லி சீக்கிரம் ஒரு குட்டி ஐஷுவையோ, குட்டி ரகுவையோ ரெடி பண்ணுவியா… அதை விட்டுட்டு போரிங்னு சொல்லிட்டு இருக்க… இந்த மாதிரி ஏதாச்சும் கொள்ளை நோய் வந்து என்னைக் கொண்டு போறதுக்கு முன்னாடி என் கொள்ளுப் பேரங்களையும் பார்த்திட்டா திவ்யமா செத்துப் போவேன்ல…” அவர் சிரித்துக் கொண்டே சொன்னாலும் ஐஷுவிற்கு கோபம் வந்தது.
“கோமு, ஏன் இப்படில்லாம் பேசற… பிள்ளைகளை பெத்து உன் கைல கொடுத்து வளர்க்க சொல்லிட்டு நான் ஹாயா இருக்கலாம்னு பார்த்தா, நீ சாகறதைப் பத்திப் பேசிட்டு இருக்க… அப்படில்லாம் உன்னை சும்மா விட மாட்டேன்… தேவை இல்லாம சாவைப் பத்திப் பேசாத… நான் கடுப்பாகிருவேன்…” அவள் கோபமாய் சொல்ல, சிரித்தார்.
“சரிடி… கோபப்படாத… நான் அப்படில்லாம் உங்களை நிம்மதியா இருக்க விட்டுட்டு சீக்கிரம் போயிட மாட்டேன் போதுமா…” என்றதும், “ம்ம்… அப்படி சொல்லு கோமு…” என்றவள், “எண்ணம் போல வாழ்க்கைன்னு நீதான சொல்லுவ… நல்லதே நினைப்போம், நல்லதே நடக்கும்… இந்த கொரோனா எல்லாம் கடந்து இன்னும் நூறு வருஷம் நீ தில்லானா ஆடத்தான் போற…”
“ஹாஹா, பாருடா, பிள்ளைப் பூச்சி எல்லாம் பன்ச் பேசுது…” கோமளா சிரிக்க, “ரொம்ப கிண்டல் பண்ணாத… நான் கோமுவோட பேத்தியாக்கும்…” என்றவளின் குரலில் பெருமை மின்னியது.
அவள் சொன்னதைக் கேட்டு கோமு சிரிக்க, “சரி கோமு… கவனமா இருங்க… நான் அப்புறம் பேசறேன்…” என்றவள் அழைப்பைத் துண்டிக்க அவள் பேசுவதைக் கேட்டுக் கொண்டே லாப்டாப்பில்  கண்ணை வைத்திருந்த ரகுவரன் அதை கீழே வைத்துவிட்டு அவளிடம் வந்தான்.
“என்ன, கோமுகிட்ட என்னைப்பத்தி ரிப்போர்ட் பண்ணிட்டு இருக்க…” கேட்டுக் கொண்டே அவளைத் தன்னை நோக்கி இழுக்க, “ஹூக்கும், இவ்ளோ நேரம் இங்க ஒருத்தி இருக்கறதே தெரியல… இப்ப மட்டும் என்னவாம்… அந்த லாப்டாப்பையே கட்டிக்க வேண்டியது தான…”
“அதெப்படி செல்லம்… அதைக் கட்டிகிட்டா எனக்கு புள்ளை பெத்துத் தராதே… அதுக்கு பொண்டாட்டி தான வேணும்…”
“இந்தப் பேக்சுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்ல…”
“அத்தான் வேற எதுலடி செல்லம் குறைச்சல்… நீ சொன்னா சரி பண்ணிக்கிறேன்…” அவன் கண்ணடித்துக் கொண்டே வில்லங்கமாய் கேட்க முறைத்தவள் அடிக்க கையை ஓங்க அவளை இழுத்து மார்பில் சாய்த்துக் கொண்டான்.
“சொல்லித் தரவா… சொல்லித் தரவா…
மெல்ல மெல்ல வா வா வா அருகே வா…
அவள் காதுக்குள் அவன் குரல் கிறக்கமாய் ஒலிக்க அவள் கூச்சத்தில் நெளிந்தாள்.
“இப்ப ஒண்ணும் சொல்லித் தர வேண்டாம்… முதல்ல சாப்பிட வா…” அவனது கை விரல்கள் அத்து மீறத் தொடங்கவே சட்டென்று விலகினாள்.
“ஹூம், ஓகே… சாப்பிட்டு சொல்லித் தரேன்…” என்று சொல்லவும், “ஆமா, பெரிய காதல் மன்னன்னு நினைப்பு…” சொல்லிக் கொண்டே கிச்சனுக்குள் நுழைந்தவளைப் பின் தொடர்ந்து வந்தவன், “ஆமா, அதுல உனக்கு இன்னும் டவுட் இருக்கா… நான் பாக்குற பொண்ணை எல்லாம் லவ் பண்ணுற காதல் மன்னன் இல்லை மா… வாழ்க்கைல ஒரே ஒரு பொண்ணை மட்டுமே காதலிச்சு கல்யாணம் பண்ணிக்கிற காதல் மன்னன்…” என்றான் பெருமையுடன்.
அவன் பாவனையைக் கண்டு அவளுக்கு சிரிப்பு வர, தோசைக் கல்லை அடுப்பில் வைத்துவிட்டு அவனைப் பார்க்க சிரித்தான்.
அவன் தோசை ஊற்ற அவள் ஊட்டி விட இருவருமாய் சாப்பிட்டு முடித்தனர்.
ஐஷு இப்போது ரகுவுக்கு சமையலில் உதவி செய்யத் தொடங்கி இருந்தாலும் தனியே சமைத்தால் நன்றாகும் அளவுக்கு இன்னும் முன்னேறவில்லை.
இருவரும் சாப்பிட்டு முடித்ததும் ரகு மீண்டும் லேப்டாப்புடன் அமர ஐஷுவுக்கு கடுப்பாய் வந்தது.
“எப்பப் பார்த்தாலும் ஆபீஸ் வொர்க்… கொஞ்சமாச்சும் பொண்டாட்டியைக் கொஞ்சலாம், பேசலாம்னு தோணுதா… சரியான தத்தி…” என்று மனதுக்குள் பாதியும் முனகலில் மீதியுமாய் அவள் திட்டிக் கொண்டிருக்க ரகுவிற்கு புரியவே செய்தது. இருந்தாலும் முக்கியமான மெயில் ஒன்றை அனுப்ப வேண்டி இருந்ததால் அதில் கவனத்தை வைத்திருந்தான். அப்போது அவனது அலைபேசி சிணுங்க அன்னையின் அழைப்பைக் கண்டவன் எடுத்து நலம் விசாரித்துவிட்டு, “ஒரு முக்கியமான வேலையா இருக்கேன் மா… உங்க மருமக கிட்டப் பேசுங்க…” என்று அவளிடம் கொடுத்து விட சிறிது நேரம் மாமியாரிடம் கடலை வறுத்துக் கொண்டே நேரத்தைக் கடத்தினாள் மருமகள். இறுதியில் ரகுவிடம் கொடுத்தவள், “இந்தா, அத்தைக்கு என்னமோ சொல்லணுமாம்…” என்று அலைபேசியை நீட்ட வாங்கி காதில் வைத்தான் ரகுவரன்.
“டேய் ரகு, வீட்ல எப்பப் பார்த்தாலும் ஆபீஸ் வொர்க் பார்த்துட்டு இருக்கியாமே… பாவம் என் மருமக, நீ ஆபீஸ் போனாலும் தனியா உக்கார்ந்திருப்பா… இப்ப வீட்ல இருந்தும் ஆபீஸ் வேலையே கட்டிட்டு அழுறதுக்கா அவளை உனக்கு கட்டி வச்சோம்…” என்று கேட்க, அருகில் அப்பிராணியாய் முகத்தை வைத்துக் கொண்டு நின்றவளை நோக்கியவன், “அடிப்பாவி… பேசச் சொன்னா பத்த வச்சிட்டு வந்திருக்கே…” என்பது போல் நோக்க அவளோ ஒன்றும் அறியாதது போல் நகத்தை ஆராய்ந்து கொண்டிருந்தாள்.
“ரகு, உனக்கு எத்தனை தடவை சொல்லிருக்கேன்… பாவம், சின்னப் பொண்ணு டா… பீல் பண்ண வைக்காம நல்லாப் பார்த்துக்க… என்னதான் வீட்ல வேலைன்னாலும் ஒரு டைம் வச்சுக்க… அவளைக் கண்டுக்காம இருக்கறது சரியில்லப்பா…” அன்னையின் அட்வைஸ் தொடர பரிதாபமாய் முழித்தான் ரகுவரன்.
“சரிம்மா, சரிம்மா… விடுங்க, இனி பார்த்துக்கறேன்…” என்றவன் அழைப்பைத் துண்டித்து விட்டு ஐஷுவை நோக்கினான்.
“ஏய் வாலு, உன் அத்தை கிட்ட என்ன சொல்லி வச்ச…” கேட்டுக் கொண்டே அவளை நெருங்க, பின்னில் நகர்ந்தவள், “நான் என்ன சொல்லப் போறேன்… உங்க பிள்ளைக்கு எப்பவும் வேலையே தீர மாட்டேங்குது… பாவம், என்னோட பேசக் கூட நேரம் இல்லன்னு சொன்னேன்… அது ஒரு குத்தமா…” கேட்டவளை எட்டிப் பிடித்தவன் தன்னை நோக்கி இழுத்தான்.
சிணுங்கிக் கொண்டே அவன் நெஞ்சில் குத்தியவள், “அதுக்கு இப்ப என்னவாம்…” என்று கேட்க,
“குத்தம் சொன்னதுக்கு தண்டனை கொடுக்க வேண்டாமா…” என்றவன் அவள் உதட்டை நெருங்க, அடுத்த நொடியை உடலும் உணர்வும் எதிர்பார்த்தாலும் உதடுகள் மட்டும் மறுப்பாய் சிணுங்க, அந்த அழகான முகத்தில் தெரிந்த உணர்வுகளை ரசனையோடு நோக்கினான் ரகுவரன்.
எதிர்பார்த்தது கிடைக்காமல் நிமிர்ந்தவள், “என்ன லுக்கு…” என்று உதட்டைச் சுழித்துக் கேட்க புன்னகைத்தான்.
“ஒவ்வொரு நாளும் நீ எனக்கு புதுசா தெரியற பொண்டாட்டி…” என்றான் காதலுடன்.
“ஓஹோ… தெரியும், தெரியும்…” என்றவள் முகம் சட்டென்று அவஸ்தையாய் மாற அவனை விட்டு விலகினாள்.
சாப்பிட்டதெல்லாம் தொண்டைக்கு படையெடுக்க வயிற்றில் ஒரு கையும் தொண்டையில் ஒரு கையுமாய் வாஷ்பேசினைத் தேடி ஓடினாள் ஐஸ்வர்யா. ஒன்றும் புரியாத ரகுவும் வேகமாய் அவளிடம் சென்றான்.
“அச்சோ என்னாச்சுமா…” முதுகில் நீவிக் கொண்டே வாந்தி எடுத்துக் கொண்டிருந்தவளிடம் பதட்டமாய் கேட்டான்.
கண்ணில் நீர் நிறைந்திருக்க முகமெல்லாம் சிவந்து சோர்ந்து நின்றாள். வேகமாய் கண்ணாடி டம்ளரில் தண்ணீர் எடுத்து வந்து நீட்ட வாங்கி குடித்தவளை யோசனையுடன் நோக்கியவன் முகம் மலர்ந்தது.
அவள் கையைப் பிடித்துவந்து சோபாவில் அமர்த்தி மின் விசிறியைச் சுழல விட்டவன் அருகில் அமர்ந்தான்.
“உஸ்ஸ்…” பெரிய மூச்சுகளை எடுத்துக் கொண்டு தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டிருந்தவளின் கையை அன்போடு எடுத்துக் கொண்டவன், “ஐஷு மா… சரி வா, டாக்டர் பார்த்திட்டு வந்துடலாம்…” என்றான் ரகு.
“ப்ச்… அதெல்லாம் வேண்டாம்…” என்றாள் அவள் சோர்வுடன்.
“எனக்குப் புரிஞ்சிருச்சு… நீ ஏன் வாமிட் பண்ணினேன்னு… அதானே…” என்றான் அவன் கண்ணை சிமிட்டி. ஒரு நிமிடம் புரியாமல் அவன் சொன்னதை யோசித்தவள் தலையிலடித்துக் கொண்டாள்.
“அச்சோ என் மக்கு, மடசாம்பிராணி புருஷா, இது அந்த வாந்தி இல்ல… ஸ்நாக்ஸ் சாப்பிட்டது ஏதோ சேராம மதியத்துல இருந்து ஒரு மாதிரி இருந்துச்சு… இப்ப அதுதான் வாந்தி எடுத்தேன்…”அவள் சொல்லவும் அவன் அசடு வழிய, “அய்யே… என் மன்மத ராசாவுக்கு ஆசையப் பாரு…” என்றாள் அவன் கன்னத்தில் இடித்துக் கொண்டே.
“ஏன்… எனக்கு ஆசை இருக்காதா… உன்னைப் போல ஒரு குட்டி ரோஜாப்பூவை எனக்கே எனக்குன்னு பெத்துத் தர்றதுல உனக்கு என்ன கஷ்டம்…” கேட்டுக் கொண்டே அவள் தோளில் கையிட்டு தன்னோடு சேர்த்துக் கொண்டான் ரகு. இரு கைகளின் வளையத்துக்குள் அவளைக் கொண்டு வர அவன் நெஞ்சில் சுகமாய் சாய்ந்து கொண்டாள்.
“பெத்துக் கொடுக்கலாம்… ஆனா என்னைப் போல இல்லை…”
“அப்புறம் என்னைப் போலவா… எனக்கு பெண் குழந்தை தான் பிடிக்கும்…” என்றான் ரகு.
“சரி சரி, பொண்ணையே பெத்துக்கலாம்… ஆனா நம்ம கோமுவைப் போல அவளை தைரியமான பொண்ணா தன்னம்பிக்கையோட வளர்க்கணும்…” சொன்னவள் கண்களில் ஒரு கனவு தெரிந்தது.
“ம்ம்… கரக்ட்… அழகுல உன்னைப் போலவும் அறிவுல அவங்களைப் போலவும் இருக்கணும்…” என்றான் ரகு.
“அப்ப, எனக்கு அறிவில்லைன்னு சொல்லற…” அவள் கேட்கவும், “இதுல டவுட்டு வேற…” என்று மனதில் நினைத்தாலும் சொல்லாமல் சிரித்தவன்,
“அப்படி இல்லடா செல்லம்… உன்னோட அறிவு வேற லெவல்… கோமுவோட  அறிவுல நிதானமும் கலந்திருக்கும்… அதான் சொன்னேன்…”
“ம்ம்… கோமுவைப் போல எதுக்கும் கலங்காத, தன்னம்பிக்கையான பெண்ணா அவளை வளர்க்கணும்… அப்புறம் உன்னைப் போல ஒரு குட்டி ரகுவையும் பெத்துக்கணும்… பெண்களை மதிக்கிற நேசிக்க மட்டுமே தெரிந்த ஆண்மகனா அவனை வளர்க்கணும்…”
“ம்ம்… ரெண்டையும் ஒண்ணா ரெடி பண்ணிடலாமா…”
கேட்டுக் கொண்டே மூக்கை அவளது கழுத்தில் உரச கூச்சத்தில் நெளிந்தவளை அணைத்துக் கொண்டான். அதற்குப் பின் அங்கே உதடுகள் வேறு பேசிக் கொண்டிருக்க வார்த்தைகள் எல்லாம் மௌனியாகிப் போயின.
ஆருயிராய் உயிரில் கலந்து ஓருயிராகிக் கொண்டிருந்தனர் இருவரும்.
சீக்கிரமே ஒரு குட்டி கருவாட்டுப் பையனோ, குட்டிரோஜாப் பூவோ அவர்கள் அன்பின் அடையாளமாய் அந்த வீட்டை ஆள வரப் போகிறதென்ற நம்பிக்கையுடன் சந்தோஷமாய் விடை பெறுவோம்.
சொல்லாத நேசம் எல்லாம்
சுகமான கவிதையென
நெஞ்சுக்குள் குடியிருக்க
சொல்லி விட்ட நேசத்தின்
சுவடுகளில் சுகம் தேடிப்
பயணம் செய்யும் பயணிகளாய்…
ஆருயிரில் தேக்கி வைத்த
நேசமெல்லாம் ஓருயிரான
அவளுக்குள் தஞ்சமன்றோ…
…………….சுபம்……………..

Advertisement