Advertisement

அத்தியாயம் – 27
சந்தரும் மற்றவர்களும் திகைப்புடன் கோமுவை நோக்க புன்னகையுடன் தொடர்ந்தார் கோமளவல்லி.
“ஹி ஈஸ் கோபிநாத்… சன் ஆப் கோமளவல்லி…” அழுத்தமாய் அதே நேரம் புன்னகை மாறாமல் மகனை முன்னாள் கணவனுக்கு அறிமுகப்படுத்த, சந்தரின் கண்கள் அதிர்ச்சியுடன் கோபிநாத்தைத் தழுவ, கோபிநாத்தின் கண்களோ அவர் யாரென்ற கேள்விக்குக் கிடைத்த பதில் தேடலில் வெறுப்புடன் நிலம் நோக்கித் தாழ்ந்திருந்தது.
எங்கேயோ பார்த்தது போலிருந்த அந்த முகம் யாரென்று இப்போது புரிந்திருந்தது. ஆயிரம் கனவுகள் கண்ணில் மின்ன வெட்கமும், கூச்சமுமாய் கழுத்தில் மாலையுடன் நின்று கொண்டிருந்த சின்ன வயது கோமளவல்லியின் அருகே மிடுக்காய் அழகனாய் நின்று புகைப்படத்தில் போஸ் கொடுத்துக் கொண்டிருந்த அவள் கணவர் தான் அவர்.
மகனுக்குப் புரிந்து கொள்ளும் வயது வந்ததுமே அவர்களின் வாழ்க்கையைப் பற்றி கோமளவல்லி தெளிவாய் கூறிப் புரிய வைத்திருந்தார். ஒரு முறை பரணில் எதையோ தேடிய சின்ன வயது கோபிநாத்தின் கையில் பெற்றோர் இணைந்து நின்ற புகைப்படம் கிடைத்தது. அன்னையிடம் அதைப் பற்றிக் கேட்க நினைத்தாலும், அவர் மனம் வருந்துமோ என்று நினைத்த கோபிநாத் அதைப் பற்றி எதுவும் கேட்காமல் அங்கேயே போட்டுவிட்டார்.
தனது வலியும், வேதனையும் பிறரை பாதிக்காமல் தனக்குள்ளேயே ஒதுக்கிக் கொண்டு அன்னையும், தந்தையுமாய் வளைய வரும் அன்னையே அவரது கடவுள். அதற்குப் பிறகு தந்தையின் புகைப்படத்தைக் காணக் கூட கோபிநாத் நினைத்ததில்லை. இப்போது அவரைக் கண்டதும் சற்று ஐஸ்வர்யாவின் ஜாடையில் இருந்தவரை எங்கேயோ பார்த்தது போல் தோன்றியதில் அதிசயமில்லை.
சந்தர் திகைப்புடன் கோமளவல்லியைப் பார்த்துக் கொண்டிருக்க அவர் இயல்பாய் தொடர்ந்தார்.
“உஷா, ஐஷு, கம் ஹியர்…” என்று உள்ளே நோக்கி குரல் கொடுக்க அவர்களுடன் மேனகாவும் அங்கு வந்தார். அதற்குள் ஆபீஸ் செல்ல ரகுவும் புறப்பட்டு வந்தான்.
“ஷீ ஈஸ் உஷா, மை டாட்டர் இன் லா… அண்ட் ஷீ ஈஸ் மை ஒன் அண்ட் ஒன்லி கிரேன்ட் டாட்டர் ஐஸ்வர்யா… திஸ் ஈஸ் மை லவ்லி பாமிலி…” என்று நிறுத்தியவர், “உஷா, கிவ் சம் பிளாக் காபி டு மிஸ்டர் சந்தர்…” என்றார்.
“சரி அத்தை…” என்று தலையாட்டிச் சென்ற உஷாவுக்கும் ஏதோ சரியில்லை என்பதைத் தவிர வேறு எதுவும் புரியாததால் இங்கேயே கவனித்துக் கொண்டிருந்தார். வருடங்கள் பலவானாலும் தனக்குப் பிடித்த பிளாக்காபியை மறக்காமல் சொன்ன கோமுவின் முகத்தை ஏறிடவே தயங்கிய சந்தர் கோமுவின் இயல்பான பேச்சில் பிரம்மித்து மௌனியாய் நின்றார். நடப்பது எதுவும் புரியாவிட்டாலும் கோமுவின் முகத்தில் எதையோ சாதித்த ஒரு திருப்திப் புன்னகை நிலவுவதைக் கண்ட ஐஸ்வர்யா அமைதியாய் ரகுவின் அருகே நின்றாள்.
“கோமளா… அது…” என்று தயக்கத்துடன் தொடங்கியவரை, கை காட்டித் தடுத்தவர், “நோ சந்தர், பாஸ்ட் ஈஸ் பாஸ்ட்… டோன்ட் டாக் அபவுட் இட்…” என்றார் அதே நிமிர்வுடன். அங்கிருந்த எல்லாரும் கோமுவை அதிசயமாய் பார்த்துக் கொண்டிருக்க கோபிநாத், சந்தரை ஏறிட்டும் நோக்கவில்லை.
உஷா பிளாக் காபியைக் கொடுக்க நடுங்கும் விரல்களால் வாங்கிக் கொண்டவரிடம்,  “ஓகே, யூ கீப் டாக்கிங்… ஐ ஆம் லீவிங்…” எப்போதும் தப்பும் தவறுமாய் ஆங்கிலம் பேசிக் கொண்டிருக்கும் கோமுவிற்கு இன்று தான் பேசியது சரியா, தவறா என்ற எந்தக் குழப்பமும் வரவே இல்லை. தான் சொல்ல வந்ததை சொல்லிவிட்டு அவரது எந்த பதிலையும் கேக்காமல் தன் பாட்டில் சென்று விட்ட அன்னையைப் பெருமையுடன் நோக்கினார் கோபிநாத்.
யாரும் எதுவும் பேசிக் கொள்ளாமல் மௌனமாய் சில நிமிடங்கள் கழிய, எல்லாரது பார்வையும் தன்னைக் குத்திக் கிழிப்பதைப் போல உணர்ந்த சந்தர் தயக்கத்துடன் கோபிநாத்தை ஏறிட்டார்.
“கோ…கோபி… எப்படிப்பா இருக்க…”
சட்டென்று நிமிர்ந்து அவரைப் பார்த்தவர், “நான் கோபிநாத், சன் ஆப் கோமளவல்லி… நிச்சயம் நல்லாதான் இருப்பேன்…” என்று சொல்லிவிட்டு அதற்கு மேல் அங்கே இருக்காமல் எழுந்து உள்ளே சென்றுவிட மற்றவர்களை ஏறிடவும் முடியாமல் அந்த வயதான மனிதர் என்றோ செய்த குற்றத்துக்காய் தலை குனிந்து நின்றார்.
இப்போது விஷயத்தைப் புரிந்து கொண்டிருந்த ஐஷுவின் முகத்திலும் கோபத்தின் கனல் ஜொலித்துக் கொண்டிருக்க அவளது இறுகிய முகத்தைக் கண்ட ரகு, அவள் எதுவும் சொல்லி விடுவாளோ என பயந்து கண்ணாலேயே “அமைதியாய் இரு…” என்று ஜாடை காட்டினான்.
அதற்கு மேல் அங்கே இருக்க முடியாமல் தளர்வுடன் எழுந்து கொண்டார் சந்தர். உடன் எழுந்த டானியலும் மற்றவர்களிடம் பார்வையாலேயே தனது வருத்தத்தைத் தெரிவித்துவிட்டு அவருடன் வீட்டுக்கு சென்றார்.
“ஐஷு, அத்தை என்ன பண்ணறாங்கன்னு போயி பாரு…” உஷா மகளிடம் சொல்ல அவள் கோமுவிடம் சென்றாள். கண்கள் மூடி கட்டிலில் சாய்ந்திருந்தவர் காதில் இயர் போன் இசையை வழிய விட்டுக் கொண்டிருந்தது. அவரிடம் சென்று அமர்ந்தவள் அவர் ஒரு காதிலிருந்த இயர் போனை எடுத்து தன் காதில் வைத்துக் கொண்டாள்.
மாலைப் பொழுதின் மயக்கத்திலே
நான் கனவு கண்டேன் தோழி…
மனதில் இருந்தும் வார்த்தைகள் இல்லை…
காரணம் ஏன் தோழி…
காரணம் ஏன் தோழி…”
சுசீலாவின் குரல் இனிமையாய் வழிந்து கொண்டிருக்க கண்ணோர ஈரத்தை வேகமாய் உள் இழுத்துக் கொண்டு கண்ணைத் திறக்காமலே படுத்திருந்தார் கோமு.
ஐஷுவும் இயர்போனை அவரது காதிலேயே சொருகிவிட்டு அமைதியாய் இருக்க கண்ணைத் திறந்தார்.
“என்னடா செல்லம்…” என்று கேட்க, அவரை ஒட்டி அருகில் படுத்துக் கொண்ட பேத்தியின் தலையைக் கோதி விட்டுக் கொண்டே, “நான் சரியா பேசினேனா…” என்றார்.
“நீ எப்பவுமே சரியா மட்டும் தான் பேசற கோமு… உன்னை நினைச்சா எனக்கு ரொம்பப் பெருமையா இருக்கு… உனக்கு துரோகம் பண்ணிட்டுப் போன ஒரு மனுஷன்கிட்ட அதைப் பத்தி எந்த விளக்கமும் கேட்காம, நீ சொல்ல நினைச்சதை மட்டும் சொல்லி நான் சந்தோஷமா இருக்கேன்னு சொல்லாம சொன்ன பார்த்தியா… இதை விட ஒரு பெரிய தண்டனை அந்த பெரிய மனுஷனுக்கு கிடைக்காது…”
“ஹாஹா… நான் எதுக்கு கலங்கணும்… இந்த மண்ணுல பிறந்த எல்லாப் பெண்களுக்கும் சுய மரியாதை ரொம்ப முக்கியம்… வாழ்க்கைல என்னைத் தோற்கடிச்சிட்டு ஓடிப் போன ஒரு மனுஷன் முன்னாடி நான் தோற்கல, என் தோல்வியை வெற்றியா வாழ்ந்து காட்டிருக்கேன்னு சொல்லறது தானே பெருமை… நானும் அதைத்தான் பண்ணி இருக்கேன்… இப்பதான் எனக்கு நிறைவா இருக்கு… இதை விட்டு சண்ட போட்டு, அந்தாளு விளக்கம் கொடுத்து, அழுது புலம்பி என்ன பண்ணாலும் முடிஞ்சு போன என் வாழ்க்கைப் பக்கங்கள் மறுபடி தொடங்கப் போகுதா என்ன…”
“நடந்ததை நான் மன்னிக்கப் போவதும் இல்லை, மறக்கப் போவதும் இல்லை… ஆனா, அதை ஏத்துகிட்டு போக முடியும்… என்னை வேண்டாத யாரும் எனக்கும் வேண்டாம்… நீங்கதான் என் உலகம்… நீங்க மட்டும் எனக்குப் போதும்…” என்று அவர் சொல்லும்போது கண்ணைத் துடைத்துக் கொண்டே உள்ளே வந்தார் கோபிநாத்.
“அம்மா… நீங்க சொன்னது தான் சரி… உங்க உலகத்துல உங்க மகனா இருக்க மட்டுமே நான் ஆசைப்படறேன்… இதுதான் ஒரு மகனா நான் உங்களுக்கு கொடுக்கிற கௌரவம்…” என்ற கோபிநாத்தை புன்னகையுடன் நோக்கியவர் அவர் தோளில் தட்டிக் கொடுத்தார்.
“சரி சரி போதும், இந்த சென்டிமென்ட் சீன் ரொம்ப போர் அடிக்குது… சீனை மாத்துங்க…” என்று ஐஷு சொல்லவும், “உங்க உலகத்துல எங்களுக்கும் இடமிருக்கா கிரான்ட்மா…” என்ற ரகுவும் அங்கே வர அவர் புன்னகைத்தார்.
“ஹாஹா… எங்க உலகத்தை மேலும் அழகாக்க வந்த ஆண் தேவதை நீ…” என்று கோமு சொல்ல, ஐஷு முறைத்தாள்.
“ஓ… அப்ப நானு…” என்று கேட்கவும், “தேவதைக்கு ஆப்போஸிட் என்ன…” என்றார் கோமு சிரிப்புடன்.
“ம்ம்… என்னை பெண் தேவதைன்னு சொல்லறியா… குட் கோமு…” என்று பாட்டியைப் பேத்தி பாராட்ட, “இல்லடா ஐஷு, நீ தப்பா யோசிச்சிருக்க… தேவதைக்கு ஆப்போசிட் டெவில் தானே…” என்று ரகு சொல்ல அனைவரும் சிரிக்க ஐஷு காண்டாகி அவனை அடிக்க செல்ல அவன் எழுந்து ஓட அவள் துரத்திக் கொண்டு சென்றாள்.
“டேய், ரோஜாக்குட்டி, பார்த்துடா… எங்காச்சும் இடிச்சுக்காத…” புருஷு மருமகள் ஓடுவதைக் கண்டு குரல் கொடுக்க, ரகுவின் எதிரில் வந்த மேகி அவனைப் பிடித்துக் கொண்டார்.
“எம்மா மருமகளே, இந்தா உன் புருஷனைப் புடிச்சுக்க…” என்று மகனைப் பிடித்துக் கொடுக்க, “மாட்டினியா…” என்ற ஐஷு அவன் காதைத் திருக, “ஏன்மா, அவளுக்கு மாமியார் மாதிரி நடந்துக்காம எனக்கு வில்லி மாதிரி நடந்துக்கறீங்க… நீங்க எல்லாம் ஒரு அம்மாவா…” என்று பொங்கிய ரகு ஐஷுவின் கையிலிருந்து நழுவி அறைக்குள் ஓட, “என் அத்தையைப் பார்த்து என்ன கேள்வி கேட்ட… உன்னை…” என்று ஐஷுவும் துரத்திக் கொண்டே ஓட சட்டென்று அவன் கதவை சாத்தவும் திகைத்தாள்.
“இப்ப எதுக்கு கதவை சாத்தற… அச்சோ, எல்லாரும் என்ன நினைப்பாங்க…” உதட்டை சுளித்து சலித்துக் கொண்டவளின் முகத்தருகே தன் முகத்தைக் கொண்டு சென்றவனை கண்ணை உருட்டிப் பார்த்தவள், “வேணாம் ரகு, ஆபீஸ்க்கு டைம் ஆச்சு… விளையாடாத…” என்று கூற, “இவ்ளோ நேரமா என்னை அடிக்கத் துரத்தின, எங்க இப்ப அடி பார்க்கலாம்…” என்று அவள் உதட்டை வில்லங்கமாய் நெருங்க, “டேய் புருஷா, அநியாயம் பண்ணாத… எதுவா இருந்தாலும் நைட் பார்த்துக்கலாம்… இப்பக் கிளம்பு…” என்று சரண்டர் ஆக, “ம்ம்… இது என் பொண்டாட்டிக்கு அழகு…” என்றவன் சட்டென்று அவளை இழுத்து அணைத்து இதழில் ஒரு முத்திரையை வைத்து விலக திகைத்து நின்றவள், “ச்சீ… ரவுடி ரகு…” என்று வாய்க்குள் முனங்க, “என்னாது ரவுடியா… இரு நைட் கவனிச்சுக்கறேன்…” என்று சொல்லிக் கொண்டே அவன் வெளியே செல்ல ஒரு நிமிடம் நின்று நிதானித்துக் கொண்டு புன்னகையுடன் வெளியே வந்தாள்.
ரகு சாப்பிட அமரவும் ஐஷு அவனை கவனிக்க உஷா கோமுவைத் தேடிச் சென்றார்.
“அத்தை, நீங்க இன்னும் டிபன் சாப்பிடவே இல்லையே… வாங்க…” என்று அழைக்க, தான் வருத்தப்படுவேனோ என்று நடந்த எதற்கும் விளக்கம் கேட்காமல் தன்னைச் சுற்றி வரும் அந்த நேசங்களை எண்ணி நெகிழ்ந்தார் கோமு.
அமைதியாய் இருந்தவரின் கை தொட்டு, “வாங்க அத்தை…” என்று உஷா மீண்டும் அழைக்க புன்னகைத்தார்.
“எஸ் கமிங்…” என்றவர் எழுந்து சாப்பிட செல்ல அந்த வீட்டில் புதிதாய் எந்த ஒரு சம்பவமும் நடக்கவே இல்லாதது போல் எல்லாரும் இயல்பாய் இருந்தனர். ஆனாலும் அனைவர் மனதிலும் அந்த சந்தரின் சந்திப்பு ஓடிக் கொண்டுதான் இருந்தது.
ரகு ஆபீஸ் கிளம்ப, புருஷுவும், மேனகாவும் ஒரு டாக்சி புக் செய்து மேனகாவின் சித்தி வீடு சென்னையில் இருந்ததால் அவர்களைக் காணக் கிளம்பினர். அடுத்தநாள் இரவு கோபிநாத் குடும்பத்திற்கு ரயிலில் டிக்கட் புக் பண்ணி இருக்க புருஷுவும், மேனகாவும் மறுநாள் காலையில் டாக்ஸியில் கிளம்புவதாகப் பிளான் பண்ணி இருந்தனர்.
உஷா சமையலில் மும்முரமாய் இருக்க ஐஷு துவைத்த துணிகளை மடக்கி வைத்துக் கொண்டிருந்தாள். பூ கட்டிக் கொண்டிருந்த கோமு, டீவியில் கண்ணைப் பதித்திருந்த மகனிடம், “கோபி… நாளைக்கு எத்தனை மணிக்கு நமக்கு ட்ரெயின்…” என்று கேட்க பதில் சொன்னவர் அழைப்பு மணி அடிக்கவும் எழுந்து கதவைத் திறந்தார்.
வெளியே ஜெஸ்சி நிற்க அவர் பின்னில் அந்த வெளிநாட்டுப் பெண்மணியும் நின்றிருந்தார். சற்று திகைத்த கோபிநாத் பிறகு இயல்பாய் வரவேற்றார்.
“வாங்க…” அதற்குள் வந்தது யாரென்று மற்றவர்களும் எட்டிப் பார்க்க ஜெஸ்ஸியுடன் உள்ளே வந்த பெண்மணியைக் கண்டு கோமுவின் புருவம் யோசனையாய் உயர்ந்தது. ஆனால் ஐஷுவின் முகமோ கோபத்தில் சிவந்திருந்தது.
பொதுவாய் “வாங்க ஆன்ட்டி…” என்றுவிட்டு அன்னையிடம் சென்று நின்று கொண்டாள். தயக்கத்துடன் உள்ளே வந்த ஏஞ்சலினாவைப் புன்னகையுடன் ஏறிட்ட கோமு, “ப்ளீஸ்…” என்று சோபாவைக் காட்ட இருவரும் அமர்ந்தனர். கோபிநாத்தும் அன்னையின் அருகே அமர்ந்து கொண்டார்.
“சாரி, நாங்க உங்களை டிஸ்டர்ப் பண்ணிட்டோமா… இவங்க உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்னு சொன்னாங்க… அதான் கூட்டிட்டு வந்தேன்…” என்றார் ஜெஸ்சி தயக்கத்துடன்.
“நோ பிராப்ளம் ஜெஸ்சி… குட் யூ ஹாவ் சம் காபி ஆர் டீ…” என்று கோமு இயல்பாய் கேட்க ஜெஸ்சி ஏஞ்சலை நோக்க, “நோ தேங்க்ஸ், ஜஸ்ட் நவ் வி ஹாட்…” என்றார் அவர்.
“ஓகே…” என்ற கோமளா அவரை நோக்க, சற்றுத் தயங்கிய ஏஞ்சலினா, மெல்லத் தொடங்கினார்.
“பர்ஸ்ட் அப் ஆல், ஐ சே ஸாரி…” கை கூப்பி சொன்னவர் ஆங்கிலத்தில் தொடர நாம் தமிழில் வாசிப்போம்.
“எனக்கு உங்கள் உணர்வுகளைப் புரிந்து கொள்ள முடிகிறது… உங்களுக்கு சொந்தமான ஒன்றை அபகரித்துக் கொண்டதற்கு வருந்துகிறேன்… இனி எத்தனை சாரி சொன்னாலும் அதை சரி பண்ண முடியாது… சந்தர் என்னைப் பொறுத்தவரை நல்ல அன்பான மனிதர் தான்… ஆனாலும் அவர் உங்களுக்கு செய்தது பெரும் துரோகம்… அந்தப் பாவத்திற்கு தான் கடவுள் எங்களுக்கு ஒரு குழந்தையைக் கொடுக்கவில்லை போலும்… நிறைய சம்பாதித்தும் சொத்துக்கள் சேர்த்தும் அனுபவிக்க பிள்ளை இல்லை… இப்போது நாங்கள் இந்தியா வந்தது கூட இங்கே உள்ள ஒரு அநாதை ஆசிரமத்தைத் தத்தெடுத்துக் கொள்ள தான்… வாழ வேண்டிய வயதில் ஒரு பெண்ணை அநாதரவாய் விட்டுச் சென்றதற்கு மன்னிப்பாய் ஆசிரமத்தில் உள்ள நிறையக் குழந்தைகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறோம்… வயதான காலத்தில் இப்படி எதுவும் புண்ணியத்தைத் தேடிக் கொண்டால் தானே…” என்றவரை திகைப்புடன் நோக்கிய கோமளவல்லியின் கண்களில் அவரைக் குறித்து ஒரு மெச்சுதல் தெரிந்தது.
“எனக்காக வருந்த வேண்டாம்… நான் சிறப்பாக, மகிழ்வாகவே வாழ்ந்துவிட்டேன்… உங்களுடைய செயல் உண்மையில் பாராட்டுதலுக்குரியது… உங்கள் மூலமாய் நிறைய குழந்தைகளின் வாழ்வில் வெளிச்சம் வரட்டும்… நல்ல விஷயத்திற்கு என் வாழ்த்துகள்…” என்றவரின் கண்ணில் உண்மையான சந்தோசம் தெரிந்தது.
“நன்றி கோமளா, எங்களுக்கு ஒரு சின்ன விண்ணப்பம்…” என்றார் ஏஞ்சலினா.
கோமு என்னவென்பது போல் நோக்க, “அந்த ஆஸ்ரமத்திற்கு கோமளா டிரஸ்ட்… என்று உங்கள் பெயரை சூட்ட விரும்புகிறோம்… உங்கள் அனுமதி வேண்டும்…” என்றார்.
“என் பெயரை எதற்கு…” என்று ஒரு நிமிடம் யோசித்தவர், “ஒருவேளை என்னை அறியாமல் அந்த இளம் வயதின் வேதனையில் என் மனது இவர்களை ஏதேனும் சபித்திருக்குமோ… அதனால் தான் குழந்தை இல்லாமல் போயிற்றோ என்னவோ…” என யோசித்தவர், மகன், மருமகள், பேத்தியின் முகத்தை நோக்க அவர்கள் முகத்திலும் வெறுப்பு மறைந்து ஒரு ஆர்வம் தெரிந்தது.
“சரி, சம்மதிக்கிறேன்…” கோமளவல்லி சொல்லவும் ஜெஸ்சி, ஏஞ்சலினா இருவரும் சந்தோஷித்தனர்.
“ரியல்லி யூ ஆர் கிரேட் அண்ட் டிபரன்ட்… நான் சந்தித்த பெண்களிலேயே சிறப்பான பெண்மணி… உங்களை சந்தித்ததில் மிகவும் பெருமைப்படுகிறேன்…” மனம் நெகிழக் கூறிய ஏஞ்சலின் கையில் தட்டிக் கொடுத்தார் கோமு.
கோபிநாத், ஐஷு, உஷாவை ஒரு பார்வை பார்த்தவர், “யூ ஹாட் லவ்லி பாமிலி, தட்ஸ் யுவர் சக்சஸ்… தேங்க்ஸ் பார் எவ்ரிதிங்… சி யூ… பைபை…” என்றவர் எழுந்து கொள்ள கோமு ஒரு புன்னகையை மட்டும் பதிலாகக் கொடுத்தார்.
அவர்கள் சென்றதும் கோமுவின் அருகில் வந்த ஐஷு, “அடுத்தவ புருஷனைக் கல்யாணம் பண்ணும்போது தப்புன்னு தெரியாமலா பண்ணி இருப்பாங்க… அப்ப யோசிக்காம  இப்ப எங்கிருந்து இந்த ஞானோதயத்தை வாங்கிட்டு வந்தாங்களோ…” என்றாள் முகத்தை சுளித்துக் கொண்டு.
“ஐஷு செல்லம், என் வாழ்க்கை இப்படிதான்னு கடவுள் ஒரு கணக்கு போட்டு வச்சிருக்கும்போது யாரால அதை மாத்த முடியும்… கைவிட்டுப் போன சந்தோஷத்தை நினைச்சிட்டு வாழ்க்கையைத் தொலைக்கறதை விட கைல இருக்கற வாழ்க்கையை சந்தோஷமா மாத்திக்கறது தானே புத்திசாலித் தனம்… ஒரு காலத்துல நான் குறைச்சல்னு தானே என்னை விட்டுட்டுப் போனார்னு நான் வருத்தப்பட்டிருக்கேன்… இப்ப அது இல்லை… நிறைவா வாழ்ந்திருக்கேன்னு உணர்றேன்…”
கம்பீரமான குரலில் தெளிவாய் அவர் சொல்லவும், “நீங்க சொன்னது ரொம்ப சரி அத்தை… பெண்கள் உங்களைப் போல தைரியமா, வாழ்க்கையைத் துணிந்து எதிர்கொள்ளணும்… ஒரு பெண்ணா உங்களை நினைச்சு கர்வப்படறேன்…” உஷா சொல்லவும் நிறைவாய் புன்னகைத்த அன்னையை நெகிழ்ச்சியுடன் நோக்கினார் கோபிநாத்.
“என்ன கோமு, டோட்டலா தமிழுக்கு மாறிட்ட…” ஐஷு கிண்டல் செய்ய “இனி எனக்கு ஆங்கிலம் அவசியமில்லை கண்மணியே…” என்று செல்லமாய் அவள் தலையில் குட்டினார் கோமளவல்லி.
நன்றி சொல்கிறேன் உனக்கு
எனக்குள் உள்ள என்னை
எனக்கே உணர்த்திச் சென்றதற்கு…
உனது விலகலில் தான்
உண்மையில் நான் வாழ்ந்திருக்கிறேன்…
வாழ்க்கை என்பது வாழத்தானே…

Advertisement