Advertisement

அத்தியாயம் – 26
அழகாய் பாப் செய்யப்பட்ட நரைத்த முடியுடன் காதிலும் கழுத்திலுமாய் வெண்முத்து பளிச்சிட வெளிநாட்டவர்க்கே உரித்தான ரோஸ் நிற மேனிக்குப் பொருத்தமாய் மிடி போன்ற உடை அணிந்து இதழில் மாறாத புன்னகையுடன் உள்ளே வந்த பெண்மணியைத் தொடர்ந்து வந்த வயதான நபரைக் கண்டதும் கோமுவின் கண்கள் முதலில் திகைத்து அதிர்ச்சிக்கு சென்று முகத்தில் இறுக்கத்தைக் கொடுத்தது.
பளிச்சென்ற வெள்ளைத் தலையும் வெளிநாட்டு வாசத்தால் மேலும் சிவப்பேறிய உடலும் டக் செய்யப்பட்ட பேன்ட் ஷர்ட்டும், கண்ணில் கூலருமாய் உள்ளே நுழைந்த அவரது முன்னாள் கணவர் சந்திரசேகர் இந்நாள் சந்தரைக் கண்டதும் மனம் கடினப்பட்டு போக சட்டென்று அங்கிருந்து பால்கனிக்கு சென்று விட்டார் கோமு. அவரது மனம் வேதனையிலும், எதிர்பாராமல் அவரை அங்கு கண்ட அதிர்ச்சியிலும் துடித்துக் கொண்டிருந்தது.
ஜெஸ்சியைக் கண்டதும் ரகுவும், ஐஷுவும் அவர்களை வரவேற்க சென்றதால் கோமுவை கவனித்திருக்கவில்லை.
“வாங்க ஆன்ட்டி… வாங்க அங்கிள்…” வரவேற்ற ரகுவும், ஐஷுவும் அந்தப் புதியவர்களை நோக்க,
“இவங்க ஏஞ்சலினா, யூஎஸ்ல டான்ஸ் ஸ்கூல் வச்சிருக்காங்க… என் பையன் வீட்டுக்குப் பக்கத்துல இருக்காங்க… இவர் மிஸ்டர் சந்தர், நம்ம ஊரு தான்… மேரேஜ் ஆகி இப்ப யூஎஸ் சிடிசனா மாறிட்டார்…” என்று அறிமுகப்படுத்த பளிச்சென்று சிரித்த ஏஞ்சலினா,
“எல்லார்க்கும் வண்க்கம், இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ரகு…” என்று அவன் கையில் ஒரு மலர்ப் பூங்கொத்தைக் கொடுக்க, அவர் பேசிய கொஞ்சு தமிழில் வியப்புடன் கையை நீட்ட, “கட்வுள் உங்களை ஆசிர்வதிப்பார்…” என்ற ஏஞ்சல், “ஆம் ஐ ரைட் சந்தர்…” என்று கணவரிடம் கேட்க, “யா, யூ ஆர் ரைட்…” என்றவர் ரகுவின் கையைப் பற்றி பிறந்தநாள் வாழ்த்து சொல்ல நன்றி கூறினான் ரகு.
“ஹலோ, யங் லேடி… யூ ஆர் லுக்கிங் கார்ஜியஸ் இன் திஸ் சாரி…” என்ற ஏஞ்சலினா மனதில் தோன்றியதை பட்டென்று ஐஷுவை நோக்கி சொல்ல, அவள் புன்னகைத்தாள்.
“தேங்க்ஸ் ஆன்ட்டி… ப்ளீஸ் கம்…” என்று அவர்களை அழைத்துக் கொண்டு பெற்றோர்களிடம் சென்றாள்.
கோபிநாத் ஏதோ போன் வந்ததென்று வெளியே சென்று பேசிக் கொண்டிருக்க ரகுவின் பெற்றோர்களுக்கும், உஷாவுக்கும் அவர்களை அறிமுகப்படுத்திவிட்டு சாப்பிட அழைத்துச் சென்றாள். வேறு யாருடனோ பேசிக் கொண்டிருந்த டானியலும் அவர்களுடன் சேர்ந்து கொள்ள அவர்களுக்கு வேண்டியதை பரிமாறுமாறு சொல்லிவிட்டு ரகு அழைக்கவே அவனிடம் சென்றாள் ஐஷு.
“நைஸ் யங் கபிள்ஸ்…” என்ற ஏஞ்சலினா, “சந்தர், டிட் யூ நோட்டிஸ் தட் கேர்ள்… ஷி ஈஸ் லைக் யூ…” என்று சொல்லிக் கொண்டே இந்தியன் உணவை ரசித்து ருசிக்கத் தொடங்க அவர் சொன்ன பிறகு ஐஷுவை கவனித்த சந்தரின் முகம் ரத்தத்தைத் தொலைக்க வெளிறிப் போன முகத்துடன் யோசனையில் ஆழ்ந்தார்.
பார்ட்டிக்கு வந்தவர்கள் சாப்பிட்டுக் கிளம்பத் தொடங்க ரகு அன்னையுடன் பேசிக் கொண்டிருந்த ஐஷுவிடம் வந்தான்.
“ஐஷு, அழைச்சவங்க எல்லாரும் வந்தாச்சுன்னு நினைக்கறேன்… இனி நம்மளும் சாப்பிட்டா முடிச்சிட்டுக் கிளம்பிடலாம்…” என்று சொல்ல, “சரி ரகு…” என்றவள்,
“அம்மா, இந்த கோமு எங்கே…” அந்த ஹால் முழுதும் பார்வையை ஓட்டியவள் கேட்க, “நான் பார்க்கலையே ஐஷு… உங்களோட தான பேசிட்டு இருந்தாங்க…” என்றார் உஷா.
அதற்குள் கோபிநாத்தும் அங்கே வர “அப்பா, கோமு எங்கே, உங்ககிட்டே ஏதும் சொல்லிட்டுப் போனாங்களா…” என்று கேட்ட மகளிடம், “இல்லையேம்மா…” என்றார் கோபிநாத்.
“ஓ… இங்க காணோமே…” என்றாள் சிறு பதட்டத்துடன்.
“சரிம்மா, பதட்டப்படாத… ஒருவேளை தலை வலின்னு வீட்டுக்குப் போயிருப்பாங்களோ என்னவோ, நான் போயி அழைச்சிட்டு வரேன்… நீங்க சாப்பிடத் தொடங்குங்க…” என்றவர் அன்னையைத் தேடி வீட்டுக்கு செல்ல,
“அதான் அண்ணா அழைச்சிட்டு வரேன்னு சொன்னாரே… வீட்டுக்குத் தான் போயிருப்பாங்க… நீங்கலாம் சாப்பிடப் போங்க… உஷா, உனக்கு சாப்பிட்டு டேப்லட் போடணும்ல… என்னங்க, உங்களுக்கும் மாத்திரை சாப்பிட டைம் ஆச்சே…” என்ற மேனகா, அவர்களை வற்புறுத்தி சாப்பிடும் இடத்திற்கு அழைத்துச் சென்றார்.
சற்று நேரத்தில் திரும்பி வந்த கோபிநாத், அன்னை வீட்டில் தலைவலியென்று படுத்திருப்பதால் அவருக்கான உணவை போகும்போது கொண்டு போகலாம் என்று கூறினார்.
“இந்த கோமுக்கு சொல்லிட்டுப் போறதுக்கென்ன… நான் காணம்னு பயந்தே போயிட்டேன்…” அதுவரை சாப்பிடாமல் காத்திருந்த ஐஷு சொல்லவும் மேனகா சிரித்தார்.
“அவங்க என்ன சின்னக் குழந்தையா ஐஷு, காணாமப் போறதுக்கு… சரி, நீயும் வந்து சாப்பிடு… முடிச்சிட்டுக் கிளம்புவோம்…” என்று அவர்களுடன் சாப்பிட அமர்ந்தார். நிறையப் பேர் கிளம்பியிருந்தனர்.
அதற்குள் சாப்பிட்டு முடித்து வந்த டானி தம்பதியர், “டின்னர் சூப்பரா அரேன்ச் பண்ணி இருக்கீங்க ரகு, எந்த காட்டரர்…” என்று விசாரிக்க சொல்லிக் கொண்டிருந்தான் ரகு.
“டெலிஷியஸ் புட்ஸ்… ஐ லைக் இந்தியன் புட்ஸ் வெரி மச்…” என்று ஏஞ்சலினா சொல்ல, “ஆமா, எனக்கும் ரொட்டி சாப்பிட்டு செத்துப் போயிருந்த நாக்குக்கு இன்னைக்கு உயிர் வந்த போல இருந்துச்சு… தேங்க்ஸ் பார் தி டேஸ்டி டின்னர்…” என்றார் சந்தர் ரகுவிடம்.
அவர்களை கவனித்துக் கொண்டிருந்த கோபிநாத், “இவரை எங்கோ பார்த்த போல இருக்கே…” என்று நினைவடுக்கில் தேடிக் கொண்டிருந்தார். ஆனால் சட்டென்று நினைவு வராமல் ஆட்டம் காட்டிக் கொண்டிருந்தது.
அவர்கள் சென்றபின்னும் யோசனையுடனே அமர்ந்திருந்த நண்பனிடம், “என்ன கோபி, ஏதோ யோசனைலயே இருக்க…” என்று கேட்டார் கோபிநாத்.
“இல்ல, அந்தப் பெரியவரை எங்கயோ பார்த்த போல இருந்துச்சு… எவ்ளோ யோசிச்சும் கிடைக்க மாட்டேங்குது… ஆமா, அவர் யாரு அவங்களுக்கு…” என்றார்.
“அந்த ஓல்ட் கபிள்ஸ் ரெண்டு பேரும் ஜெஸ்சி ஆன்ட்டி வீட்டுக்கு வந்திருக்கிற விருந்தாளிங்க மாமா… யூஎஸ்ல இருக்க அவங்க மகனுக்கு ரொம்ப வேண்டியவங்க போலருக்கு…” என்று விளக்கினான் ரகுவரன்.
“ம்ம்… சரி, சாப்பிட்டு கிளம்புவோம்…” என்றவர் சாப்பிட்டு முடிக்க, ஐஷு கோமுவுக்கு வேண்டிய உணவைப் பார்சல் ஆக்கி இருந்தாள். “ரகு, இங்க எல்லாம் செட்டில் பண்ணிட்டு வாங்க… நான் கோமுக்கு சாப்பாடு கொடுக்கப் போறேன்…” என்றவளுடன் அன்னையரும் சேர்ந்து கொள்ள ஆண்கள் மட்டும் அங்கிருந்து பார்த்துக் கொண்டனர்.
“கோமு…” வீட்டுக்குள் நுழைந்த ஐஷு அழைத்துக் கொண்டே பாட்டியைத் தேடி அறைக்கு செல்ல லைட் கூடப் போடாமல் இருட்டாய் இருந்தது.
லைட்டின் சுவிட்சைத் தட்டியவள் கண் மூடிக் கிடந்தவரின் நெற்றியில் கை வைத்து, “என்ன கோமு, ரொம்ப தலைவலிக்குதா… சாப்பிட்டு மாத்திரை போட்டுக்கலாம்…” என்றதும் மௌனமாய் எழுந்து அமர்ந்தார் கோமு.
சாப்பாடு வேண்டாமென்றால் அதற்கும் ஆயிரம் கேள்வி வரும் என்பது தெரியுமாதலால் எதுவும் சொல்லாமல் அமைதியாக உண்டவர் ஐஷு கொடுத்த மாத்திரையையும் வாங்கி விழுங்கிக் கொண்டார்.
அவளை யோசனையுடன் பார்த்தவள், “என்னாச்சு கோமு, ஏன் என்னமோ போல இருக்கே… நீ நார்மலா இல்லையே…” என்று கேட்க, “உன் அப்பாவைக் கூப்பிடு…” என்றார். புரியாமல் பார்த்தவள் அப்போதுதான் ரகுவுடன் வீட்டுக்குள் நுழைந்த தந்தையை அழைத்து வந்தாள்.
“என்னம்மா, இப்ப தலைவலி எப்படி இருக்கு…” என்று மகனும், “சூடா காபி தரட்டுமா அத்தை…” என்று மருமகளும் கேட்க மறுப்பாய் தலையாட்டியவர், “நாளைக்கே நாம ஊருக்கு கிளம்பலாம் கோபி…” என்றார் மகனிடம்.
அவரைக் கேள்வியுடன் பார்த்த கோபிநாத், “ரெண்டு நாள் கழிச்சு நமக்கு டிக்கட் ரிசர்வ் பண்ணி இருக்கோமே அம்மா… நாளைக்கே ஏன் போகணும்… அதும் இல்லாம நாளைக்கு ரிசர்வேஷன் கிடைக்காதே…” என்றார். 
“ஜெனரல் டிக்கட்ல கூடப் போயிக்கலாம் கோபி… எனக்கு இங்க இருக்கற ஒவ்வொரு நிமிஷமும் மூச்சு முட்டற போல இருக்கு…” என்றார் எங்கோ வெறித்துக் கொண்டு.
“என்னமா, என்ன சொல்லறிங்க… உடம்புக்கு எதுவும் முடியலையா… டாக்டர் கிட்ட போகலாமா…” மகன் அக்கறையுடன் கேட்க கண்ணில் துளிர்க்கத் தொடங்கிய கண்ணீரைத் தனக்குள்ளேயே விழுங்கிக் கொண்டவர் எதுவும் சொல்லாமல் இருக்க அவர்கள் குழம்பினர்.
“ப்ச்… என்னை எதுவும் கேக்காதப்பா… டிக்கட் இருக்கான்னு பாரு…” என்றவர் மீண்டும் அமைதியாகிவிட கோமுவின் பேச்சும் செயலும் ஐஷுவுக்கு ஆச்சர்யத்தைக் கொடுத்தது.
“எதிலும் எப்போதும் நெவர் மைண்டாக இருக்கும் கோமுவா இது… ஏன் மனசுக்குள் எதையோ கடித்துப் பிடித்துக் கொண்டு வெளியே காட்டாமல் தவிக்கிறார்…” என யோசித்தாள்.
கோபி ரகு, புருஷுவிடம் அன்னை சொன்னதைச் சொல்ல அவர்களும் யோசித்தனர்.
“என்னண்ணா, அம்மாக்கு எதுவும் வருத்தமா… ஏன் உடனே கிளம்பனும் சொல்லுறாங்க…” என்றார் மேனகா வருத்ததுடன்.
“அதெல்லாம் இல்லைமா, எதையோ மனசுக்குள்ளே வச்சு அலட்டிட்டு இருக்காங்க… என்னன்னு கேட்டா சொல்லவும் மாட்டாங்க… சில நேரம் அம்மா இப்படித்தான்… மனசைக் குழப்பிட்டு அப்புறம் தானே யோசிச்சு தெளிவாகிடுவாங்க… ஒருவேளை காலைல இந்த எண்ணம் மாறினாலும் மாறும்…”
கோபிநாத் சொன்னது மிகவும் சரியாக இருந்தது. கோமுவின் கலங்கிய மனம் காலையில் தெளிந்திருந்தது.
எப்போதும் போல காபிக்கு அடுக்களைக்கு வந்த மாமியாரை இன்முகத்துடன் நோக்கிய உஷா, “இதோ தரேன் அத்தை… தலைவலி போயிடுச்சா…” காபி கலக்கிக்கொண்டே கேட்டார்.
“ஹாஹா… யூ நோ உஷா, தலைன்னு ஒண்ணு இருந்தா வலி வரத்தானே செய்யும்… அதுக்காக தலையைக் கழற்றி வைக்கவா முடியும்… ச்சீ போன்னு நாம தான் விரட்டி விடணும்…” புன்னகையுடன் சொன்ன மாமியாரை எப்போதும் போல் அதிசயமாய் பார்த்தாள் மருமகள்.
“என்ன உஷா, அப்படிப் பார்க்கறே…” காபியை சுவைத்துக் கொண்டே அவர் கேட்க, “இல்ல, கல்யாணம் ஆகி வந்த புதுசுல இருந்தே நீங்க எனக்கு ஒரு அதிசய மனுஷியா தான் தோணறீங்க அத்தை…” என்றார் உஷா.
“ஏன், எனக்கு நாலு கை அஞ்சு கால் இருக்கா… ஹாஹா…”
“ஹாஹா… போங்க அத்தை, கிண்டல் பண்ணிட்டு… நேத்து உங்களைப் பார்க்கவே கஷ்டமா இருந்துச்சு… இப்படிப் பார்க்க தான் எங்களுக்குப் பிடிக்கும்…” என்ற மருகளின் தோளில் கோமு அன்பாய் தட்டிக் கொடுக்க, அவர்கள் இருவருக்கும் நடுவில் வேகமாய் வந்து நின்றாள் பேத்தி.
“இங்க என்ன நடக்குது, இல்ல என்ன நடக்குதுன்னேன்…”
“ஏண்டி, பார்த்தா தெரியலையா… ஊரு உலகத்துல என்னன்னமோ நடந்திட்டு தான் இருக்கோம்… ஆனா நாங்க இப்ப நின்னுட்டு இருக்கோம்…” உஷா சொல்லவும், கோமு மருமகளை மெச்சுதலாய் பார்க்க, ஐஷு திகைத்தாள்.
“ஆஹான், மாமியார் சப்போர்ட் கிடைச்சதும் மருமகளுக்கு கொடுக்கு முளைக்குது… இதெல்லாம் மாமியார், மருமக எத்திக்ஸ்க்கு ரொம்ப தப்பாச்சே…” அவள் சொல்லிக் கொண்டிருக்கும் குளித்து வந்த மேனகா, ”என்னடா தப்பு… என்று கேட்க, “எங்கே இப்ப சொல்லு பார்ப்போம்…” என்பது போல் உஷாவும் கோமுவும் லுக் விட ஐஷு பம்மினாள்.
“அ..அதுவந்து, அத்தை… இந்த கோமு ரொம்பதான் மருமகளைக் கொஞ்சிட்டு இருந்துச்சா, அதான் என்னைக் கொஞ்ச என் அத்தை வரட்டும்… அவங்க இல்லாதப்ப நீங்க மட்டும் இப்படிக் கொஞ்சிக்கறது தப்புன்னு சொல்லிட்டு இருந்தேன்…” என்று சமாளித்தாள் அந்தப் புதிய மருமகள்.
“ஹாஹா… அவ்ளோதான, என் மருமகளை நான் கொஞ்சாம, என் கண்ணு… என் மூக்கு… என் செல்லம்…” என்று சொல்லும்போதே சிரிக்க, எல்லாரும் சேர்ந்து சிரித்தனர். அவர்கள் சிரிப்பைக் கேட்டு ஹாலிலிருந்து புருஷோத்தமன் குரல் கொடுத்தார்.
“என்ன காலைல எல்லாரும் ஒண்ணா சேர்ந்து கிட்சன்ல சிரிச்சிட்டு இருக்கீங்க… இங்க வந்து சொன்னா நாங்களும் சிரிப்போம்ல…” என்று சொல்லவும் செய்தித்தாளில் கண் பதித்திருந்த கோபிநாத்தும் ஏறிட்டுப் பார்த்தார். ரகு வழக்கம் போல் காலையில் வாக்கிங் போயிருந்தான்.
“கோமு, அப்ப ஊருக்கு…” ஐஷு இழுக்க,
“ரிசர்வ் பண்ணின நாள்லயே போயிக்கறோம்…” என்றார் கோமு. “ஹே… என் செல்ல கோமு…” என்று கட்டிக் கொண்டு கொஞ்ச பேத்தியை வாஞ்சையுடன் பார்த்தார்.
முதலில் தடுமாறினாலும் “இவர்கள் தான் என் உலகம்… தான் செய்த துரோகத்தைப் பற்றி சிறிதும் குற்றவுணர்வு இல்லாமல் சந்தோஷமாய் வளைய வரும் யாரோ ஒருவருக்காய் என் உலகத்தை விட்டு நான் விலகி ஓட மாட்டேன்…” என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டார்.
கணவன் தனக்கு செய்த துரோகத்தைத் தாண்டியும் அவர் மனதில் சின்னதாய் எங்கேயோ ஒட்டிக் கொண்டிருந்த எதிர்பார்ப்பை அவர் உணர்ந்திருக்கவில்லை. தன்னை விட்டுச் சென்றதற்கு என்றாவது ஒரு நாள் மனதார வருந்துவார் என்று நினைத்திருந்தார். அது அவர்கள் இருவரையும் சந்தோஷமான தம்பதியராய் நேரில் கண்ட நொடியில் பொய்த்துப் போயிருந்தது. தான் கஷ்டப்பட்டு படித்த ஆங்கிலம் கேலி செய்ய, அவரோ வெளிநாட்டு மனைவிக்கு தமிழ் சொல்லிக் கொடுத்தது உறுத்தியது.
இரவு முழுதும் அந்த வலியின் நீற்றல் மனதில் இருந்தாலும் பிறகு அவரது பக்கம் இருந்து யோசித்துத் தெளிந்தார்.
எந்த ஒரு மனிதனும் தன் பக்கத்தில் இருந்து மட்டுமே யோசிக்கும்போதுதான் எதிர்ப்பக்கத்தில் இருப்பவர்களின் சாதாரண செயலும் பெரும் குற்றமாய் தோன்றும். அதுவே எதிர்ப் பக்கத்தில் நின்று யோசிக்கும்போது மற்றவர் நியாயத்தைப் புரிந்து கொள்ள முடியும். ஒரு பாசிடிவ்வான முடிவை நம்மை எடுக்க வைக்கும்… அதுவே நிறைவைத் தரும்… கோமுவின் நிலையும் இப்போது அதுவே.
கணவர் என்ற உரிமையில் இத்தனை நாளாய் கனன்று கொண்டிருந்த தார்மீகக் கோபம் கூட இந்த நொடியில் நீர்த்துப் போயிருந்தது. “அவருக்குப் பிடித்தமான வாழ்க்கையை மகிழ்ச்சியாய் வாழ்ந்திருக்கிறார்… நானும் அவரின்றி துவண்டுவிடவில்லை… எனக்கான வாழ்க்கையை சிறப்பாய் வாழத்தான் செய்திருக்கிறேன்… நிரந்தரமில்லா இந்த வாழ்வில் எதற்கு இந்த கோபமும் துவேஷமும்…” என்றுதான் அவருக்குத் தோன்றியது.
அந்த எண்ணமே மனதில் உள்ள கோபத்தையும் வெறுப்பையும் விலக்கி நிறுத்த எப்போதும் போல் ஒரு நிமிர்வைக் கொடுத்திருந்தது.
ஜாகிங் சென்றிருந்த ரகு வீடு திரும்ப, அவனைக் கண்ட கோமு, “போ உன் கருவாட்டுப் புருஷன் வந்தாச்சு… அவனைப் போயி கொஞ்சு…” என்று பேத்தியின் காதில் கிசுகிசுக்க அவரை முறைத்தவள், “வேண்டாம் கோமு, அவனை நான் என்ன வேணும்னாலும் சொல்லுவேன்… ஆனா நீ சொல்லக் கூடாது…” என்று கண்ணை உருட்டி மிரட்டியவளைப் “போடி…” என்று தள்ளி விட்டார்.
அவர்களை சிரிப்புடன் நோக்கிக் கொண்டே வந்த ரகு, “என்ன கிரான்ட்மா, இன்னைக்கு நம்ம வீட்டுல கருவாட்டுக் குழம்பா… என்ன கருவாடு…” என்று கேட்க, கோமு பொங்கி வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு ஐஷுவை நோக்க, “அச்சோ என் மக்கு, மங்குனிப் புருஷா… உனக்கு வேற யாரும் ஆப்பு வைக்க வேணாம்… நீயா ஆப்பைத் தேடிப் போயி உக்கார்ந்துக்குவ…” என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டே அவன் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு அவர்களின் அறைக்குள் நுழைந்தாள். அவர்களை நினைத்து சிரித்துக் கொண்டே குளிக்க சென்ற கோமு திரும்பி வருகையில் ஹாலில் பேச்சுக் குரல் கேட்டது.
தனது கிராப் முடியை ஒதுக்கிக் கொண்டவர் சுரிதாரின் மீது துப்பட்டாவை அணிந்து கொண்டு ஹாலுக்கு செல்ல அங்கே அமர்ந்திருந்தவர்களைக் கண்டதும் இத்தனை நேரம் இருந்த நிமிர்வு சட்டென்று ஜெர்க்காக, கோமுவைக் கண்டு விட்ட அவரும் அதிர்ச்சியுடன் எழுந்து நின்றிருந்தார். 
“கோ…கோமளா…” அவரது முதிர்ந்த கண்கள் உன்னிப்பாய் அவரை உள்வாங்கி மெல்ல அந்தப் பெயரை உச்சரிக்க அருகில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த கோபிநாத்தும், புருஷோத்தமனும், டானியலும் திகைப்பும், அதிர்ச்சியுமாய் திரும்பிப் பார்த்தனர். ஒரு நிமிடம் ஜெர்க்கானாலும் அடுத்த நிமிடமே இயல்புக்கு திரும்பிய கோமுவின் முகத்தில் மென்னகை ஒன்று பரவியது.
“ஹலோ மிஸ்டர் சந்தர், ஹவ் ஆர் யூ…” இயல்பாய் கோமு அவரை நலம் விசாரிக்க தான் காண்பது கனவா, நினைவா என்று புரியாமல் அதிர்ச்சியில் பேச்சிழந்து கலங்கிய கண்களுடன் நின்றிருந்தார் சந்தராகிய சந்திரசேகர்.
வினை ஒன்று
விதைத்தால்
திணை ஒன்று
முளைப்பதில்லை…
ஆனால் என்றோ
விதைத்த துரோகத்தின்
விதை இன்று
நம்பிக்கையின்
மரமாய் வளர்ந்து
நிழல் பரப்பி
நிற்பது தான் ஆச்சர்யம்…

Advertisement