Advertisement

அத்தியாயம் – 24
மகன் கோபிநாத்தும், புருஷோத்தமனும் பேசுவதைக் கேட்டு அப்படியே நின்றுவிட்ட கோமளவல்லியின் மனம் சட்டென்று அந்த நாள் நினைவுக்கு செல்ல, அனிச்சையாய் கலங்கத் தொடங்கிய கண்களைக் கடிவாளமிட்டு அடக்கினார்.
“இல்லை… நான் கலங்க மாட்டேன்… எதற்குக் கலங்க வேண்டும்… என்னை வேண்டாமென்று உதாசீனப் படுத்திய ஒருவருக்காய் என் கண்ணீரை வீணாக்க மாட்டேன்… அதற்கான தகுதியை அந்த மனிதர் என்றோ இழந்து விட்டார்…” என்று நினைத்ததும் இளகத் தொடங்கிய மனம் மீண்டும் கடினப்பட்டு விட பழையது போல் ஒரு நிமிர்வான புன்னகை வந்து இதழில் ஒட்டிக் கொண்டது.
“கையில் குழந்தையுடன் நின்ற எனக்கு மாமனார், மாமியாரின் அன்பும் பாதுகாப்பும் கிட்டாமல் இருந்திருந்தால் என் வாழ்க்கை எந்தத் திசையில் எப்படியெல்லாம் மாறி இருக்குமோ… கணவனை இழந்த, விவாகரத்து செய்து தனியே வாழும் பெண்ணிற்கு இந்த சமூகத்தில் என்னவெல்லாம் துன்பங்கள் காத்திருக்கின்றன… அப்படி இருக்கும்போது கணவன் என்னை வேண்டாமென்று வேறு ஒருத்தியுடன் வாழத் தொடங்கியதை அறிந்து எத்தனை பேர் என்னைப் புச்சமாய் பார்த்திருப்பார்கள்… எனது தனிமையை அவர்களுக்கு சாதகமாக்கிக் கொள்ள முயற்சி செய்திருப்பார்கள்… அதை எல்லாம் கடந்து என் இத்தனை வருடத் தனிமையை ஒரு தவம் போல் கழித்திருக்கிறேன்… அப்படியிருக்க நான் ஏன் கலங்க வேண்டும்… நெவர்…”
“அந்தக் காலத்துப் பெண்கள் போல் கணவன் தன்னை விட்டு வேறொரு பெண்ணை நாடிச் சென்றாலும் அவனுக்காக உருகிக் கொண்டு அவன் திரும்பி வருவதற்காகக் காத்திருக்க நான் கண்ணகியோ, நளாயினியோ இல்லை… நான் கோமளவல்லி… ஒரு சுயம்புவாய் என்னை நானே உருவேற்றிக் கொண்டு நிமிர்வுடன் வாழ்ந்து வருபவள்… எனக்குள் இந்தக் கலக்கம் தேவையில்லாதது… என் வாழ்வில் கணவன் என்பது ஒரு முடிவுரை மட்டுமே…”
அவர் மனம் தன்னைத் தானே சுயம் அலசி தெளிவு கொள்ள நிமிர்வுடன் அங்கிருந்து சென்றவர் உற்சாகத்துடன் அடுக்களைக்குள் நுழைந்தார். ஏதாவது இனிப்பு சாப்பிடத் தோன்றவே கேசரி செய்வதற்கான பொருட்கள் இருக்கிறதா  என்று பார்த்தவர் மணக்க மணக்க கேசரி செய்யத் தொடங்கினார்.
அன்றைய மீதிப் பொழுது அழகாய் சிரிப்பும், அரட்டையுமாய் கழிய இரவு உணவு முடிந்து உறங்க சென்றனர். ரகு விடியற்காலை பிளைட்டில் வருவதாகக் கூறியிருந்தான்.
விடிந்தால் ரகுவைக் காணப் போகும் குஷியில் இரவெல்லாம் உறங்காமல் புரண்டு கொண்டே இருந்த ஐஷு விடியற்காலையில் உறங்கிப் போயிருந்தாள். உறக்கத்தில் அருகிலிருந்த கோமுவின் மீது கையைப் போட்டு லேசாய் அணைத்துக் கொண்டு உறங்கிக் கொண்டிருந்தவள் மனதுக்குள் ரகு காலையில் வந்து விடுவானே என்று அலாரம் அடிக்க சட்டென்று கண் விழித்தவள் திகைத்தாள்.
அருகில் ரகு நல்ல உறக்கத்திலிருக்க அவன் மீது அணைவாய் கையைப் போட்டுக் கொண்டு படுத்திருந்தாள் ஐஸ்வர்யா. காட்சியை நம்ப முடியாமல் கனவோ என்றெண்ணி கண்ணைத் தேய்த்துக் கொண்டு மீண்டும் பார்க்க நிஜம் தான் என்றது கண்கள்.
“இவன் எப்ப வந்தான்… அதும் என் பக்கத்துல வந்து படுத்தது கூடத் தெரியாம தூங்கிட்டு இருந்திருக்கேன்…” நொந்து கொண்டவள் டைம் பார்க்க அது ஐந்து மணியைக் காட்டியது.
“ஓ… டைம் அஞ்சு ஆகிடுச்சா… காலிங் பெல் அடிச்சது கூடத் தெரியலையே…” என்று வருந்திக் கொண்டே எழுந்து அமர்ந்தவள் உறங்கும் கணவனையே நோக்கினாள்.
உதட்டில் உறைந்த புன்னகையுடன் ஒரு கையைத் தலைக்கு மேல் கொடுத்து மறு கையை நெஞ்சின் மீது வைத்து அமைதியாய் உறங்கிக் கொண்டிருந்தான்.
“பச்சப்புள்ள போலத் தூங்குறதப் பாரு… என்ன தைரியத்துல என் பக்கத்துல வந்து படுத்த… உன்னை…” என்று மனதுக்குள் அவனோடு பேசிக் கொண்டிருந்தவள் இதழ்கள் புன்னகைக்க, அடுத்த நொடி அவளது முகம் அவனது நெஞ்சை முத்தமிட்டிருக்க அவனது அணைப்புக்குள் இருந்தாள் ஐஷு.
திகைத்தவள் தன்னை விடுவிடுவித்துக் கொள்ளத் திணற மேலும் இறுக்கிக் கொண்டான் அவன். “ஐஷு, ப்ளீஸ்…” அவனது கெஞ்சலான குரல் அவளை அமைதிப்படுத்த தன் நெஞ்சின் மீது கிடந்தவளை சுகமாய் அணைத்துக் கொண்டு அப்படியே கிடந்தான் ரகுவரன்.
அவள் மெல்ல முகத்தை உயர்த்த முயல அவனது கைகள் மீண்டும் முகத்தை அமர்த்த கடுப்பானவள், “டேய் மூச்சு முட்டுது, என்னை விடுடா…” என்று கடுப்புடன் சொல்ல கண் விழித்தவன் பேந்தப் பேந்த விழித்துக் கொண்டு, “ச்சே… இதெல்லாம் கனவில்லையா…” என்று கேட்க நறுக்கென்று இடுப்பிலேயே கிள்ள துள்ளியவன் அவளை விடுவித்தான்.
“சாரி ஐஷு, நான் கனவுன்னு நினைச்சு கட்டிப்புடிச்சுட்டேன்…” என்று அசடு வழிய எழுந்து அமர்ந்தான்.
“அச்சோ… நானும் கூட நினைவோட தான் செய்யறான்னு ஒரு நிமிஷம் சந்தோஷப் பட்டுட்டேனே… லூசுப் பய கனவுன்னு நினைச்சு செய்துச்சாம்…” என்று மனதுக்குள் அவனை திட்டிக் கொண்டிருந்தாள் அவள்.
“நீ எப்ப வந்த, எனக்குத் தெரியவே இல்லையே…”
“நாலு மணிக்கு வந்தேன்… எல்லாரும் தூங்குவிங்கன்னு அம்மாக்கு போன் பண்ணி கதவைத் திறக்க சொன்னேன்…” “ஓ… அதைக் கூட எனக்குப் பண்ண முடியாதோ…” என மனம்  முரண்டு பிடித்தாலும் கேட்காமல் விட்டாள். அவளது அமைதியைக் கண்டு யோசித்தவன் தான் அருகில் படுத்தது பிடிக்கவில்லையோ என நினைத்து விளக்கம் கூறினான்.
“நான் ஹால்ல படுத்துக்கறேன்னு தான் சொன்னேன் ஐஷுமா… கிரேன்ட்மா தான் ஒத்துக்கல, இங்க படுக்க சொல்லிட்டாங்க…” என்றவனை, “கோமுக்குப் புரிஞ்சது இந்த கொத்தவரங்காய்க்குப் புரியலையே…” என மானசீகமாய் தலையிலடித்துக் கொண்டு அவனைப் பார்த்தாள்.
“சரி, நீ தூங்கு ஐஷு… உனக்கு டிஸ்டர்பா இருந்தா நான் வேணும்னா கீழ படுத்துக்கட்டுமா…” என்றவனைக் கண்டு,
“இவனுக்குப் பெரிய தியாகின்னு நினைப்பு… ரொம்பதான் ஓவரா போறான்…” என கடுப்பாய் வந்தாலும் காட்டிக் கொள்ளாமல், “இல்ல பரவால்ல, இங்கயே படுத்துக்க…” என்று உதடுகள் முந்திக் கொண்டு சொல்ல மனதுக்குள் தன்னைத் தானே அசிங்கமாய் திட்டிக் கொண்டு ஓரமாய் ஒதுங்கிப் படுத்துக் கொண்டாள்.
கண்ணை மூடிக் கொண்டவளுக்கு அவன் தன்னையே பார்த்துக் கொண்டிருப்பது போலக் குறுகுறுக்க சட்டென்று கண்ணைத் திறந்து அவனைப் பார்க்கவும் அவன் படக்கென்று திரும்பிப் படுக்க, “திருட்டுப் பூனை, சொந்தப் பொண்டாட்டியையே நேராப் பார்க்காம எப்படிப் பார்க்கறான் பாரு…” அதற்கும் திட்டியவளின் மனம் அவனது அருகாமைக்காய் ஏங்க, தானாக நெருங்கிச் செல்ல முடியாமல் ஈகோ முரண்டு பிடிக்க, உறக்கம் வருவேனா என்று அடம் பிடித்ததில் எழுந்து அமர்ந்தாள்.
அடுக்களையில் பாத்திரத்தின் சத்தம் அன்னையோ, அத்தையோ எழுந்து விட்டதை உணர்த்த, எழுந்து குளியலறைக்குள் நுழைந்து கொண்டாள். காலை       உணவு முடிந்த நேரத்தில் தான் ரகு எழுந்து வந்தான். சாப்பிட்டு சந்தோஷமாய் அனைவருடனும் பேசிக் கொண்டிருக்க இந்த ஞாயிற்றுக் கிழமை எல்லாருமாய் மகாபலிபுரம் சென்று வரலாம் எனத் தீர்மானித்தனர்.
ஐஷுவின் பார்வை ஆவலாய் அடிக்கடி அவனை நோக்க அவனோ அதை உணராமல் மற்றவர்களிடம் சிரித்துப் பேசிக் கொண்டிருக்க அதை கோமு கவனித்துக் கொண்டிருந்தார்.
மதிய உணவுக்குப் பின் சிறிது வேலை இருப்பதாக ரகு அலுவலகம் சென்று விட்டான். மாலை சிற்றுண்டிக்கு அவனுக்குப் பிடித்த வாழைப்பூ வடை செய்யும் வேலையில் இரண்டு அன்னையரும் முனைப்பாய் இருக்க ஐஷுவிற்கு ஏனோ அனைவரும் அருகில் இருந்தும் தனியாக இருப்பது போலவே தோன்ற அமைதியாய் சென்று உறங்கி விட்டாள்.
மாலையில் எழுந்தவள் பிரஷாகி வரும்போது ஹாலில் சுமிதா, வித்யாவின் பேச்சுக் குரல் கேட்டது. அவர்களுடன் ஜெஸ்சியும் இருக்க, இவளைக் கண்டதும் சிரித்தனர்.
“என்ன ஐஷு, நல்ல தூக்கம் போலருக்கு…”
வித்யா கேட்கவும் கூச்சமாய் உணர்ந்தவள், “இ..இல்லக்கா லைட்டா தலை வலிக்கிற போல இருந்துச்சு… அதான் கொஞ்சம் தூங்கினேன்…” என்றாள்.
“என்னடா ஐஷுமா சொல்லற, தலை வலியா… என்ன மேகி, மருமகளை கவனிக்க மாட்டியா…” என்றார் புருஷோத்தமன்.
“அச்சோ, அப்படி பெருசா எல்லாம் இல்லை மாமா…” என்று சமாளித்தவள், “பிள்ளைங்க எல்லாம் எங்கேக்கா… ரெண்டு நாளா இந்தப் பக்கமே காணோம்…” என்றாள் அவர்களிடம்.
“அவங்களுக்கு இப்ப எக்ஸாம் டைம் மா… அதான் கொஞ்சம் படிக்க உக்கார வச்சுட்டோம்…” என்ற வித்யா, “ஐஷு… இதுல மல்லிகைப் பூ இருக்கு… விலை கம்மியா இருக்குன்னு அவர் நிறைய வாங்கிட்டு வந்துட்டார்… கட்டி வச்சுக்கமா…” என்று ஒரு கவரில் உதிரியாய் இருந்த மல்லிகை மொட்டுகளை நீட்ட வாங்கிக் கொண்டாள்.
“குடு ஐஷு, நான் கட்டி வைக்கிறேன்…” என்ற கோமுவிடம் அதைக் கொடுத்தாள்.
“ரகு இன்னைக்கும் ரெஸ்ட் எடுக்காம ஆபீஸ் போயாச்சா…” என்று ஜெஸ்சி கேட்க, நாளைக்கு லீவ் போடறேன்னு சொல்லி இருக்கான் ஜெஸிம்மா…” என்றார் மேனகா. சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு அவர்கள் கிளம்பினர்.
“ஐஷு பேபி, கம் ஹியர்…” அறைக்குள் இருந்து கோமுவின் குரல் கேட்க அவள் அங்கே சென்றாள். அழகாய் பூவைத் தொடுத்து சரமாக்கி இருந்த கோமு, “இந்தா, இதை உன் அம்மாவுக்கும், அத்தைக்கும் கொடுத்திட்டு வா…” என்று அவர்களுக்கு முதலில் சிறிது பூவைக் கொடுக்க சொல்ல அவளும் அதே போல் செய்து விட்டு வந்தாள்.
“ஐஷு, உன் அத்தை ஒரு சேலை வாங்கிட்டு வந்தாளே… அதை உடுத்துட்டு வா…” கோமு சொல்லவும் திகைத்தவள், “எதுக்கு கோமு, நாம எங்காச்சும் வெளிய போறோமா…” என்றாள் அவள்.
“வெளியே போனா மட்டும் தான் சேலை உடுக்கணுமா… எனக்கு உன்னை சேலை கட்டிப் பார்க்கணும் போல இருக்கு… நீ கட்டிட்டு வா… நான் சடை பின்னி விடறேன்…” எனவும், “சடையா, அதெல்லாம் வேண்டாம்… லூஸ் ஹேர் தான் இப்ப பேஷன்…” என்றாள் பேத்தி.
“எப்பப் பார்த்தாலும் முடியக் கட்டாம இப்படி லூசு மாதிரி விரிச்சுப் போட்டுத் திரியறதுக்குப் பேர் தான் லூஸ் ஹேரா… இப்படி இருந்தா எப்படி பூ வைப்ப…” என்று கேட்கவும் முறைத்தவள், “அதை சாமிக்கு வச்சிடு கோமு…” என்று சொல்ல இப்போது கோமு முறைத்தார்.
“அடிச்சேன்னா… வயசுப் புள்ள லட்சணமா தலை சீவிப் பூ வைக்காம வியாக்யானம் பேசிட்டு… போயி குளிச்சிட்டு சொன்னதை செய்…” அவர் சற்று குரலை உயர்த்தவும் முனங்கிக் கொண்டே எழுந்தவள் குளியலறைக்குள் நுழைந்து கொண்டாள். சிறிது நேரத்தில் குளித்து வந்தவள் புடவையை உடுத்துக் கொண்டு வர மெச்சுதலாய் பார்த்தவர், அவளை அமர்த்தி தளர்வாய் முடியைப் பின்னலிட்டு மல்லிகைச் சரத்தை வைத்து விட்டார்.
முன்னில் வந்து பார்த்தவர், “என் ஐஷு பேபி லுக்கிங் லைக் ஏஞ்சல்…” என்று பாராட்ட அவள் புன்னகைத்தாள். அதற்குள் மேனகா செய்யும் வடையின் மணம் மூக்கைத் துளைக்க,
“கோமு, அத்தை வடை செய்யத் தொடங்கிட்டாங்க போலருக்கு… சூப்பர் ஸ்மெல்…” என்று மணம் பிடிக்க, “ஹாஹா… போ, போயி சேலை நல்லாருக்கான்னு உன் அத்தை கிட்டக் கேளு…” என்றவர் அவளை அனுப்பினார்.
“அத்தை…” அழைத்துக் கொண்டே வந்தவள் ஹாலில் வடையை மொக்கிக் கொண்டிருந்த ரகு அதை முழுங்கவும் மறந்து கண்கள் விரிய நோக்குவது கண்டு திகைத்தாள்.
“அடடே ரோஜாக்குட்டி, என்ன இது அதிசயமா சேலை கட்டி இருக்க… மேகி, இங்க பாரு உன் மருமகளை…” என்றார் புருஷோத்தமன் உற்சாகத்துடன்.
அவளைக் கண்ட மேனகாவும், உஷாவும் வியப்புடன் கண்களை விரிக்க, “அட, இது நான் வாங்கின சேலையா… உனக்கு ரொம்ப நல்லாருக்கு ஐஷு…” என்றார் மேனகா.
“ஆமா உஷா, உன் மருமகளுக்கு ரொம்பப் பொருத்தமா வாங்கி இருக்கே…” என்று உஷாவும் சொல்ல, “டேய் ரகு, எப்படி உன் அம்மா செலக்சன்…” என்று மகனைக் கேட்க அவன் சுற்றம் மறந்து அவளை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்க புருஷோத்தமன் கோபியிடம் காட்டி சிரித்தார்.
“அடேய் மவனே… இப்படி அப்பட்டமா உன்னோட நயாகரா பால்சைத் திறந்து விடறியே, அவ உன் பொண்டாட்டிடா… கொஞ்சம் அடக்கி வாசி…” என்று சொல்லவும் சுதாரித்தவன் மனசில்லா மனசோடு தனது பார்வையை அவளிடமிருந்து மாற்றிக் கொண்டான்.
“ஐஷு, இந்தா வாழைப்பூ வடை எப்படி இருக்குன்னு டேஸ்ட் பாரு…” என்று அவளிடம் ஒரு பிளேட்டை மேனகா நீட்டவும் தான் அவளுக்கு உயிரே வந்தது.
“இந்த ரகு எப்ப வந்தான்… எப்பப் பார்த்தாலும் பூனை மாதிரியே வர வேண்டியது… எனக்கு முன்னாடி வந்து வடைய மொக்கிட்டு வட போச்சே ஸ்டைல்ல ஒரு லுக்கு வேற…” என்றவள் அவனைக் கண்டு கொள்ளாமல் வடையை உள்ளே தள்ளினாள்.
“ரகு, ரெண்டு பேரும் அப்படியே எங்காச்சும் வெளிய போயிட்டு வாங்களேன்… பாவம் ஐஷு, நீ இல்லாம ரொம்ப போர் அடிச்சிருக்கும்…” என்று அன்னை கூற “அப்படியா…” என்பது போல் அவன் அவளைப் பார்க்க அவளோ “வடை மட்டுமே இப்போதைய விடை…” என்பது போல் உள்ளே தள்ளிக் கொண்டிருந்தாள். அவனுக்கும் அவளது அசர வைத்த அழகை அருகாமையில் ரசிக்கத் தோன்றவே, “சரிம்மா…” என்றவன் எழுந்து அறைக்கு சென்றான். உடை மாற்றி வந்தவனுடன் அவளும் செல்ல இருவரும் அருகில் இருந்த கோவில் ஒன்றுக்கு சென்றனர். ஏனோ மனதுக்குள் ஆயிரம் வார்த்தைகள் இருந்தாலும் உதட்டில் வார்த்தைப் பஞ்சம் வந்திருக்க இருவரும் அமைதியாகவே இருந்தனர்.
இருவரும் சீக்கிரமே வீடு திரும்பவும் அவர்கள் முகத்தில் எந்த உற்சாகமும் இல்லாததைக் கண்ட பெரியவர்கள் மனதில் பெரிதாய் ஒரு கேள்வி எழுந்தது. அவர்கள் அனைவருமே ரகு இல்லாத சமயத்தில் ஐஷுவின் முகத்தில் தோன்றிய தவிப்பையும், வெறுமையையும் நன்றாக உணர்ந்திருந்தனர். அவனைக் கண்ட பின்பு தான் அவளது முகத்தில் முன்னைப் போல் ஒரு தெளிவு வந்திருந்தது.
ரகுவின் பேச்சும் உற்சாகம் இல்லாமல் இருக்கவே சீக்கிரமே இரவு உணவை முடித்து, “ரகு, நீ ரொம்ப டயர்டா தெரியற… ரெண்டு பேரும் சீக்கிரம் போயி தூங்குங்க…” என்று கோமு சொல்லவும், “ஆமாப்பா… ஐஷு போமா…” என்றார் மேனகா.
“சரிம்மா…” என்ற ரகு அவனது அறைக்கு செல்ல, மறுக்க முடியாமல் ஐஷுவும் அவனைத் தொடர்ந்தாள்.
அறைக்குள் சென்ற ரகு அமைதியாய் கட்டிலில் அமர்ந்திருக்க ஐஷு ஜன்னலருகே சென்று இருட்டில் எங்கோ மின்னிக் கொண்டிருந்த தெரு விளக்கைப் பார்த்துக் கொண்டு நின்றாள். சிறிது நேரம் தன்னையே பார்த்துக் கொண்டிருந்தவன் கட்டிலில் இருந்து எழுந்து தனை நோக்கி வருவதை உணர்ந்ததும் மனதுக்குள் ஒரு சுகமான அவஸ்தை பரவ இதயம் எதிர்பார்ப்புடன் படபடத்தது.
“ஐஷு…” மனதில் உள்ள காதலையும் தாபத்தையும் ஒன்றாய் குழைத்து வெளியே வந்த அவனது குரல் சுகமாய் இதயத்தைத் தீண்டியதில் உடலெங்கும் சிலிர்த்தது. அவள் பின்னில் நெருங்கி நின்றவன் விரல்கள் தயக்கத்துடன் நீண்டு ஜன்னல் கம்பியைப் பற்றியிருந்த அவள் விரல்களை அமர்த்த அவளது பெண்மை தவிக்கத் தொடங்கியது.
அவளது மௌனத்தை சம்மதமாய் எடுத்துக் கொண்ட ரகுவின் நெருக்கம் அதிகமாக அவனது உடல் முழுதும் அவளை உரச அணைத்துக் கொண்டவன் இதழ்கள் அவள் கழுத்து வளைவில் பதிந்து முத்தமிட்டு, “ஐஷு… யூ ஆர் லுக்கிங் கார்ஜியஸ்… இன்னைக்கு நீ என்னை ரொம்ப தவிக்க வைக்கிற… ப்ளீஸ், எனக்கு இப்போதே நீ வேண்டும்…” என்று கிறக்கத்துடன் ஒலிக்க அவனது அருகாமைக்காய் ஏங்கியவள் அதற்கு மேல் தாங்க முடியாமல் திரும்பி அவன் நெஞ்சத்தில் தஞ்சம் கொண்டாள்.
அவளை மேலும் இறுக்கிக் கொண்டவன் இதழ்கள் ஐஷு, ஐஷு என்று மந்திரம் சொல்ல, அவளை உப்பு மூட்டையாய் தூக்கிக் கொண்டவன் கட்டிலை நோக்கிச் சென்றான். அவளது பெண்மை தவிப்புடன் அவனது தேடலை உள்வாங்கிக் கொள்ளத் தொடங்க இருமனதின் சங்கமத்தில் அவனது ஆருயிர் ஓருயிராய் கலந்திருந்தாள்.
கண்களில் நிறைந்து
கருத்தினில் கலந்தவள்
இதயத்தில் உறைந்து
இணையென மிளிர்ந்தாள்…
ஈருயிர் ஓருயிராய் கலந்திட
ஆருயிரானாள் அன்னமவள்…

Advertisement