Advertisement

அத்தியாயம் – 23
மதிய உணவு முடிந்து அனைவரும் அரட்டை அடித்துக் கொண்டிருக்க ஐஷுவும் அவர்களுடன் அமர்ந்திருந்தாலும் அவள் முகத்தில் ஒரு சுரத்தே இல்லாமல் இருப்பதை கோமு கவனித்துக் கொண்டிருந்தார். புருஷுவும், மேனகாவும் வீட்டுக்கு வரும்போதே சமயம் ஒரு மணியைத் தொட்டிருக்க கையோடு உணவு வேலையை முடித்துவிட்டு கதை பேசத் தொடங்கி விட்டனர்.
“ஐஷு மா… ரகுக்கு நாலு நாள்ல பிறந்தநாள் வருதுல்ல, அவனுக்கு டிரஸ் எடுக்கப் போனப்போ உனக்கும் இந்த சேலை வாங்கிட்டு வந்தேன்… பிடிச்சிருக்கா பாரு…” மேனகா ஒரு கவரைக் கொடுக்க, மென்னகையுடன் வாங்கிக் கொண்ட மருமகள், “ஓ… ரகுக்கு பிறந்தநாள் வருதா… நமக்குத்தான் எதுவும் தெரியலை…” சற்றே குற்றவுணர்வு தோன்றினாலும்,
“இந்த ரகு இன்னும் கால் பண்ணவே இல்லையே… என்னவாருக்கும்…” என யோசித்துக் கொண்டிருந்தாள்.
“என்ன ஐஷு, யோசிச்சிட்டிருக்க… சேலையைப் பிரிச்சுப் பாரும்மா…” மேனகா சொல்ல கவரைப் பிரித்தாள். மெரூன் நிறத்தில் தங்க நிற வேலைப்பாட்டுடன் அழகாய் பளிச்சிட்ட டிஸைனர் சேலையைக் கண்டதும் அவள் முகம் மலர்ந்தது.
“சூப்பரா இருக்கு அத்தை… இந்தக் கலர்ல ஒரு டிசைனர் சேலை வாங்கணும்னு நினைச்சிட்டு இருந்தேன்…”
“ஓ அப்படியா…” ஆச்சர்யமாய் கேட்டவர், “நீ ரகுகிட்ட சொல்லி இருந்தியா… அவன்தான் இந்த மாதிரி செலக்ட் பண்ண சொன்னான்…” என்றார் புன்னகையுடன்.
“இ..இல்ல அத்தை… நான் எதுவும் சொல்லலை…”
“பார்றா… பொண்டாட்டிக்கு எது பிடிக்கும்னு அவ சொல்லாமலே என் பிள்ளை தெரிஞ்சு வச்சிருக்கான்…” புருஷூ சொல்ல மற்றவர்கள் சிரிக்க ஐஷுவுக்கு கூச்சமாய் இருந்தாலும் அது ஒரு சந்தோஷத்தைக் கொடுத்தது. அவன் அருகாமைக்காய் மனம் ஏங்கியது.
“சேலை ரொம்ப சூப்பரா இருக்கு மேகி… ஐஷூக்கு பொருத்தமா இருக்கும்…” என்றார் உஷா. நண்பர்கள் வெளியே நாற்காலியில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க உஷாவும் மேனகாவும் வீட்டிலிருந்து செய்து வந்திருந்த பலகாரங்களை எடுத்து வைத்துக் கொண்டிருந்தனர்.
“ஐஷு, ரகு கால் பண்ணானா…” மேனகா கேட்கவும், “ப்ச்… இல்ல அத்தை… காலைல டிரை பண்ணினேன், நாட் ரீச்சபிள் வந்துச்சு… இப்ப சுவிட்ச் ஆப் வருது…” அவள் முகத்தில் தெரிந்த வாட்டம் கோமுவிற்கு காரணத்தை உணர்த்தியது.
“ஓ… ஒருவேளை டவர் பிராப்ளமோ என்னவோ, அங்கே மீட்டிங் தொடங்கி இருந்தா மொபைலை அணைச்சு வச்சிருப்பான்… பிரீயாகிட்டு கூப்பிடுவான்…” என்றவர், “ஐஷு, ஜெஸ்சிமா வீட்ல தானே இருக்காங்க… நானும், உஷாவும் பார்த்திட்டு வந்திடறோம்…” என்றவர், ஒரு பாத்திரத்தில் சிறிது பலகாரத்தை எடுத்துக் கொண்டு தோழியை அழைத்துச் செல்லவும் ஐஷு அமைதியாய் அவளது அறை நோக்கி நகர்ந்தாள்.
கதவை வெறுமனே சாத்திவிட்டு கட்டிலில் அமர்ந்தவள் மேசை மீதிருந்த அவனது போட்டோவைக் கையிலெடுத்துப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“அடேய், உன்னை மாதிரி அட்டுப் பையனுக்கு லட்டுப் பொண்ணு பொண்டாட்டியா வந்தும் இப்படிக் கண்டுக்காம டீல்ல விடறியே… இது நியாயமா…” அவள் கேட்கவும் மனசாட்சி விழித்துக் கொள்ள, “அவன் கண்டுக்காம தான் கிளம்பும்போது உன் உதட்டுல அவன் உதட்டை ஒட்ட வச்சிட்டுப் போனானா…” என்று கேள்வி கேட்க அந்த முதல் முத்தத்தை நினைத்து மனம் சிலிர்த்தவள் சிணுங்கினாள்.
“அது ஏதோ உணர்ச்சி வசப்பட்டு கொடுத்துட்டான் போலருக்கு… அப்படி என் மேல காதல் உள்ளவன் டைம் கிடைக்கும் போதெல்லாம் எனக்கு போன் பண்ணி கொஞ்ச வேண்டாமா…” மறுகேள்வி கேட்டவளிடம், “உனக்கு அவன் மேல லவ் வந்ததும் இப்படில்லாம் யோசிக்கறியே… உன் மேல காதலோட அவன் எத்தனை வருஷமா காத்திருக்கான்… கொஞ்சம் பொறுமையா இரு…” என்ற மனசாட்சியிடம், “இருந்தாலும் நீ ஓவராதான் அவனுக்கு வக்காலத்து வாங்கற… நாட்டாமைனு மனசுல நினைப்பா… கிளம்பு…” என்று விரட்டினாள். மனதில் அவன் மேல் பொங்கிய காதலை உடனே அவனிடம் சொல்லத் துடித்த இதயத்தை கட்டுப்படுத்த முடியாமல் தவித்தவள் கண்ணை மூடி படுத்துக் கொண்டாள்.
சிறிது நேரத்தில் அவளது தலையில் மிருதுவான கரம் படிந்து வருடிக்கொடுக்க கண்ணைத் திறந்தவள் கோமுவைக் கண்டதும் திகைத்தாள்.
“கோமு…” என்று எழப் போனவளின் தலையைத் தன் மடியில் வைத்துக் கொண்டவர், “ஐஷு டியர்… வாட் ஹாப்பன் டு யூ… ஒய் ஆர் யூ டல்… உன் ராகுவை ரொம்ப மிஸ் பண்ணறயா…” மென்மையாய் அவள் தலை வருடிக் கொண்டே கேட்டார் கோமளவல்லி.
அந்த வார்த்தைகள் மனதை இதமாக்க அவரிடம் தன் மனநிலையை சொன்னாள் ஐஸ்வர்யா.
“ப்ச்… தெரியல கோமு… அவன் பக்கத்துல இருந்த வரைக்கும் சரியாப் புரியல… ஆனா அவனில்லாத இந்த ஒரு நாள் ஒரு யுகம் மாதிரி தவிப்பா இருக்கு… என் மேல அவன் வச்சிருக்கிற அன்பு, எனக்காக அவன் பார்த்துப் பார்த்துப் பண்ணற விஷயங்கள் எல்லாம் பிரம்மிக்க வைக்குது… அதை அவன் கூட இல்லாத நேரத்தில் நல்லா உணர முடியுது…”
“ம்ம்… ரகுவோட காதலை உன் மனசு பீல் பண்ண ஆரம்பிச்சிருச்சு ஐஷு டியர்… அதான் இப்படி…”
“அழகுதான் முக்கியம்னு நினைச்ச எனக்கு அவனோட ஒவ்வொரு செய்கையும் இப்ப அழகாத் தோணுது… ஒரு குழந்தை மாதிரி என்னைக் கொண்டாடறான்… என் அப்பா, அம்மா போல கேரிங்கா பார்த்துக்கறான்… நல்ல ஒரு பிரண்டா அட்வைஸ் பண்ணறான்… மனசு முழுக்க காதலை வச்சிட்டு என் காதலுக்காக காத்திருக்கான்… அழகு உருவத்தில் இல்லை… அன்பு காட்டுற மனசு தான் அழகுன்னு நான் புரிஞ்சுகிட்டேன்… இதை உடனே அவனுக்கு சொல்லனும்னு மனசு தவிக்குது…”
சொல்லும்போதே குரல் இடற அவளது தவிப்பை கோமுவால் உணர்ந்து கொள்ள முடிந்தது. அவளது மனநிலையை மாற்ற எண்ணியவர், “வாட் கான் வீ டூ டியர்… அன்பு ஒன்றுதான் அநாதை…” என்று சோகமாய் சொல்ல முதலில் திகைத்தவள் குபீரென்று சிரித்து எழுந்துவிட்டாள்.
“ஹாஹா கோமூ…” என்று கத்தியவள், “நான் எவ்ளோ சீரியசாய் சொல்லிட்டு இருக்கேன்… நீ எங்கயோ பிடிச்ச ஸ்டேடஸ் மெசேஜை சொல்லி காமெடி பண்ணிட்டு இருக்கியா… உன்னை….” என்று கழுத்தை நெறிப்பவள் போல செல்ல, “அச்சோ, வேண்டாம்டி ஐஷு… டோன்ட் கில் மீ… அப்புறம் என் லட்சியம் நிறைவேறாம செத்து, பேயா உன்னைச் சுத்தி அலைஞ்சிட்டு இருப்பேன்…” என்றார் முகத்தில் பாவனையுடன்.
அதைக் கேட்டு சிரித்த ஐஷு, “ஹாஹா கோமு… சான்சே இல்ல… நீ ஒரு மாஸ்டர் பீஸ்… அந்த MM க்கு எப்படித்தான் உன்னைவிட்டுப் போக மனசு வந்துச்சோ…” என்றாள்.
“MM… ஹூ ஈஸ் திஸ்…” என்றார் அவர் யோசனையுடன்.
“எல்லாம் அந்த மாங்கா மடையன், என் தாத்தாவை தான் சொல்லறேன்…” என்றவள் இயல்புக்கு திரும்பியிருக்க கோமுவின் இதழில் புன்னகை மிளிர்ந்தது.
“ஹாஹா, ஐஷு ரிடர்ன்… இப்படி உன்னைப் பார்த்தா தான் இயல்பா இருக்கு… மனசை சோகமா வச்சுட்டு தவிக்கிற ஐஷு உன் முகத்துக்கு செட் ஆகல… எதுன்னாலும் சொல்லிடனும்… உன்னோட இந்த மாற்றம் எனக்கு ரொம்ப ஹாப்பியா இருக்குடா செல்லம்… ரகு ஈஸ் வெரி ஜென்டில்… அவனை நீ மிஸ் பண்ணிடக் கூடாதுன்னு தான் உன்னைக் கன்வின்ஸ் பண்ணி கல்யாணத்துக்கு சம்மதிக்க சொன்னேன்… இல்லேன்னா உனக்குப் பிடிக்காத இந்தக் கல்யாணம் வேண்டாம்னு நானே நிறுத்தி இருப்பேன்…” என்ற கோமுவை நெகிழ்வுடன் நோக்கினாள் பேத்தி.
“ச்சோ ஸ்வீட்… லவ் யூ கோமு…” என்று அவர் கன்னத்தில் முத்தமிட்டு கட்டிக் கொண்டவளை நோக்கி புன்னகைத்தார்.
“என் பேரன் வரும்போது கொடுக்கறதுக்கு மிச்சம் மீதி ஏதாச்சும் பாக்கி வைடிம்மா…” என்று சொல்ல, “ஹாஹா… போ கோமு…” என்றவள் நாணத்துடன் விலகிக் கொண்டாள்.
“பார்றா… என் பேத்திக்கு வெக்கமெல்லாம் வருது…” என்று கிண்டல் செய்ய, “அச்சோ, போதும் கோமு…” சிணுங்கினாள்.
அப்போது ஹாலிலிருந்த அவளது அலைபேசி சிணுங்கியது.
“உனக்காக வாழ நினைக்கிறேன்…
உசுரோட வாசம் புடிக்கிறேன்…”
என்று ரகுவிற்காய் அவள் செட் பண்ணி வைத்திருந்த பாடலை அது ஒலிபரப்பி அழைத்தது யாரென்பதை உணர்த்த வேகமாய் சென்று எடுத்து அறைக்கு வந்தவளின் முகத்தில் தெரிந்த ஆர்வமும், சந்தோஷமும் அது யாரென்பதை வெளிச்சமிட சந்தோஷமாய் தலையாட்டிக் கொண்ட கோமு அவளுக்குத் தனிமை கொடுத்து அடுத்திருந்த அறைக்குள் நுழைந்து கொண்டார்.
“ஹ..ஹலோ…”
“ஹலோ ஐஷுமா… எப்படி இருக்க…”
“ம்ம்… நல்லாருக்கேன்…”
“சாரிடா… இங்கே நல்ல மழை… சிக்னலே இல்ல, போன் பண்ண… அதான் கூப்பிடலை… நேத்து நல்லா தூங்கினியா, சாப்டியா… எல்லாரும் வீட்டுக்கு வந்துட்டாங்க தானே…”
“ம்ம்… வந்துட்டாங்க…”
“வீடே கலகலன்னு நிறைஞ்சிருக்கும்ல… எல்லாரையும் பார்த்த சந்தோஷத்தில் என் நினைவே இருந்திருக்காது உனக்கு… எப்படியோ நீ ஹாப்பியா இருந்தா சரி…” அவன் சொல்லவும் அவளுக்குக் கோபமாய் வந்தது.
“முட்டாள், கருவாடு… கொத்தவரங்கா… இவனைப் பார்க்காம நான் இங்க தவிச்சிட்டு இருக்கேன்… அவங்க வந்ததால நான் ஹாப்பியா இருப்பேன்னு சொல்லுது பாரு லூசு…” அவள் மனதுக்குள் அவனை செல்லமாய் திட்டிக் கொண்டிருக்க அது புரியாமல் அவன் பேசிக் கொண்டிருந்தான்.
“ஐஷு… இங்க அடிக்கடி பவர்கட்… மழைல சிக்னல் வேற கிடைக்க மாட்டேங்குது… போன் கிடைக்கலேன்னா பயப்படாத… நான் கேப் கிடைக்கும்போது பேசறேன்… ஓகே டேக் கேர்…” சொல்லும்போதே அவனது வாய்ஸ் பிரேக் ஆக விட்டு விட்டுக் கேட்டது.
“ஓகே மா… நான் எல்லாரையும் கேட்டதா சொல்லு… நேர்ல வந்து பேசிக்கறேன்…” என்பதற்குள் அழைப்பு கட்டானது.
“ச்ச்சே… லூசு மடையன்… ஏதாச்சும் ரொமான்ஸா பேசுவான்னு நினைச்சா சாப்டியா, தூங்கினியான்னு லிஸ்ட் போட்டுட்டு… ஒருத்திக்கு கிளம்பும்போது இச் கொடுத்துட்டுப் போனமே, அதுக்கு அவ எந்த மறுப்பும் சொல்லாம வாங்கிகிட்டாளே… அவளும் நம்மை விரும்பத் தொடங்கி இருப்பாளோன்னு அந்த ஆட்டு மூளை யோசிக்குதா பாரு… இவன்லாம் செமினார்ல என்னத்த கிழிக்கப் போறானோ… மவனே நேர்ல வா… உன்னை சுத்தல்ல விட்டு கதிகலங்க வைக்கறேனா இல்லையா பாரு…” மனதுக்குள் புலம்பியவள் தன்னை நோக்கிக் கொண்டிருந்த பிள்ளையாரிடம், “யோவ் ஜி, நீயாச்சும் அந்த சூனாப் பானாக்கு இதெல்லாம் சொல்லிக் கொடுக்க மாட்டியா… எனக்கு வாய்த்த அடிமை இப்படியா உப்புச் சப்பில்லாத கிறுக்கனாய் இருக்க வேண்டும்…” என்று தலையிலடித்துக் கொண்டு ஹாலுக்கு சென்றாள்.
சிறிது நேரத்தில் எதையோ பேசி சிரித்துக் கொண்டே வீட்டுக்கு வந்தனர் மேனகாவும் உஷாவும்.
“ஐஷு, என்னடா பண்ணற… ஜெஸ்சிமா உன்னைக் கேட்டாங்க… இந்த ரகு இன்னும் எனக்கு ஒரு போன் கூடப் பண்ணலையே…” கவலையுடன் அவர் சொல்லவும், “கொஞ்சம் முன்னாடி போன் பண்ணினார் அத்தை… அங்கே மழைல சிக்னல் சரியா இல்லையாம்… நாளைக்குப் பேசறேன்னு சொல்ல சொன்னார்…” என்றாள். “ஓ… இந்தப் பயலுக்கு அம்மா ஊருல இருந்து வந்தாச்சான்னு விசாரிக்க நேரம் கிடைக்கலை… பொண்டாட்டிய கூப்பிட்டு விஷயத்தை  சொல்லிருக்கான் பாரு… இந்த ஆண் வர்க்கமே இப்படித்தான் போல…” என்று சிரித்துக் கொண்டே சொல்ல, “ஹாஹா… அது அப்படிதான் மேகி… உன் அண்ணா, என் அண்ணா எல்லாம் கல்யாணமான புதுசுல இப்படிதானே இருந்தாங்க…” என்று வழி மொழிந்தார் உஷா. 
“ஐஷு, பாட்டி எங்கே…” உஷா மகளிடம் கேட்க, “ரூம்ல இருக்காங்க மா…” என்றவள், “அத்தை, கோமு செய்த பால்கோவா ருசி பார்க்கறிங்களா…” என்று மாமியாரிடம் கேட்டுவிட்டு இருவருக்குமாய் சிறு கிண்ணத்தில் போட்டு ஸ்பூனுடன் கொண்டு வந்தாள்.
“ரகுக்கு பால்கோவா ரொம்பப் பிடிக்கும்மா… நான் சுகர் வந்திருமோன்னு அதிகமா ஸ்வீட் சாப்பிடறதில்லை…” என்றவர் அதை ருசித்துவிட்டு, “பிரமாதமா இருக்கே… ரகு கைல கிடைச்சா முடிச்சிட்டு தான் வைப்பான்…” என்றார் சுவைத்துக் கொண்டே. அதை மனதுக்குள் குறித்து வைத்துக் கொண்டாள் மருமகள். உஷாவும் வந்துவிட அவரும் சிறிது வாய்க்குள் போட்டுக் கொண்டார்.
“என்னதான் கடைல வாங்கினாலும் கோமு பால்கோவா போல வராது அத்தை… எனக்கு ரொம்பப் பிடிக்கும்…” என்ற ஐஷு வஞ்சகமில்லாமல் உள்ளே தள்ளிக் கொண்டிருந்தாள்.
அன்றைய பொழுது பேச்சும் சிரிப்புமாய் அழகாய் கழிய இரவு உணவு முடிந்து படுக்கைக்கு வந்தனர். கோமு ஐஷுவுடன் ரகுவின் அறையில் படுத்துக் கொள்ள ஆண்கள் இருவரும் ஹாலிலும், உஷா, மேனகா இருவரும் மற்ற அறையிலும் படுத்துக் கொண்டனர். உறக்கம் வராமல் வெகு நேரம் போனை உருட்டிக் கொண்டிருந்தவளைக் கண்டு சிரித்த கோமு அமைதியாய் நித்திரையில் ஆழ்ந்தார்.
அடுத்தநாள் காலையில் வடபழனி முருகனைக் காண வேண்டுமென்று பெண்கள் கிளம்ப, ஐஷுவுக்கு பெரிதாய் விருப்பம் இல்லாவிட்டாலும் அத்தையின் வார்த்தையை மறுக்க முடியாமல் உடன் வர சம்மதித்தாள். காலையிலேயே சமையலை முடித்துவிட்டு அவர்கள் கிளம்பி இருந்ததால் கோமு ஓய்வெடுக்க, வழக்கம் போல் நண்பர்கள் பழைய கதை பேசி அமர்ந்திருந்தனர்.
அப்போது அவர்களைக் கண்டு டானியலும் பேச்சில் கலந்து கொள்ள அன்றைய அரசியல் முதல் இன்றைய அரசியல் வரை அலசி கருத்துகளை சொல்லிக் கொண்டிருந்தனர். நடுவில் டானியலைத் தேடி வந்த ஜெஸ்சி அவர்கள் காரசாரமாய் அரசியல் பேசிக் கொண்டிருப்பதைக் கண்டு தேநீரும் ஆனியன் பக்கோடாவும் எடுத்து வந்தார்.
“எதுக்கு மா… உங்களுக்கு சிரமம்…” புருஷு கேட்க, “அதனால என்ன… டீயைக் குடிச்சிட்டு இன்னும் தெம்பா பேசலாம் இல்லையா…” என்றவர் சிரித்தார். அப்போது டானியலின் அலைபேசி ஒலிக்க, அதில் ISD அழைப்பைக் கண்டவர், “ஜெஸ்சி, நம்ம ஷாம் கால் பண்ணறான்…” என்றார் புன்னகையுடன்.
மகனின் அழைப்பு என்றதும் பரபரப்பான ஜெஸ்சி, “எடுத்துப் பேசுங்க…” என்று சொல்வதற்குள் அலைபேசியை காதில் பொருத்தி ஹலோ சொல்லி பேசத் தொடங்கி இருந்தார் டானியல். அவரது முகம் மகிழ்ச்சியைக் காட்ட அடுத்து ஜெஸ்சியிடம் கொடுக்க அவரும் பேசினார்.
“எங்க மகன் ஷாம் தான் கால் பண்ணான்… அவனுக்கு ரொம்ப வேண்டிய ஒருத்தர் ரெண்டு நாள்ல இந்தியா வராராம்… இங்கே வேண்டிய அரேஞ்ச்மென்ட்ஸ் எல்லாம் பண்ணிக் கொடுக்க சொன்னான்…”
“ஓ… அவங்க இங்கே வந்துட்டுப் போயி ஒரு வருஷம் இருக்கும்ல…” என்றார் புருஷோத்தமன்.
“ம்ம்… இந்த டைம்ல தான் போன வருஷம் குடும்பத்தோட வந்திட்டுப் போனாங்க… இப்பவும் வரதுக்கு டிரை பண்ணிட்டு தான் இருந்தான்… ஆனா விசா கிடைக்க கொஞ்சம் லேட் ஆகும் போலருக்கு… கிடைச்சதும் வரோம்னு சொன்னான்…”
“ஓ, சூப்பர் மா… பிள்ளைகளை எல்லாம் வெளிநாட்டுல விட்டுட்டு உங்களுக்கு இங்கே ரொம்ப போரிங்கா இருக்கும்ல…” கோபிநாத் கேட்கவும் சிரித்த ஜெஸ்சி, “அதான் எல்லாத்துக்கும் மூத்த இந்தப் பெரிய பிள்ளை இருக்கே… இதை சமாளிக்கவே எனக்குப் பெரும் கஷ்டமா இருக்கு…” என்று டானியலை சொல்ல அவர்கள் சிரித்தனர்.
“அட… என்னம்மா சொல்லறீங்க, இவரும் உங்களுக்குப் பிள்ளை தானா…” என்று புருஷூ கேட்க, “ஹாஹா… நான் அவளுக்குப் புள்ளையோ இல்லையோ… ஆனா சரியான தொல்லை… சரி, நீங்க கண்டின்யூ பண்ணுங்க… நாங்க வரோம்…” என்ற டானியல் மனைவியின் தோளில் கையிட்டு அவரையும் அழைத்துக் கொண்டு அவர்களின் வீட்டுக்கு செல்ல நண்பர்கள் புன்னகையுடன் பார்த்தனர்.
“வயசானாலும் ரெண்டு பேரும் ரொம்ப அன்னியோன்யமா இருக்காங்க… நல்ல புரிதலான தம்பதியர்…” என்று கோபிநாத் சொல்ல, “வயசு கூடக் கூடத்தான் உண்மைலேயே கணவன், மனைவிக்குள்ளே ஆழமான புரிதலும், காதலும் வருது… நம்ம கூட முன்ன விட இப்போதானே மனைவியை அதிகம் நேசிக்கிறோம்…” என்றார் புருஷோத்தமன்.
“உண்மைதான் புருஷூ…” என்ற கோபிநாத் ஆமோதிப்பாய் தலையாட்டிவிட்டு ஏதோ யோசித்துக் கொண்டிருந்தார்.
“என்ன யோசிக்கற கோபி…”
“நண்பன் கேட்கவும் நெடிய பெருமூச்சை வெளியிட்டவர், “அம்மாவை யோசித்தேன்…” என்றார்.
“ம்ம்… உண்மைலேயே உன் அம்மா ரொம்ப கிரேட் கோபி… வாழ வேண்டிய வயசுல கைல குழந்தையோட துணை இல்லாம எவ்வளவு கஷ்டப் பட்டிருப்பாங்க… இப்ப வரைக்கும் தனிமை தானே அவங்களுக்குத் துணை… அவங்க மனசுலயும் எத்தனை ஆசைகள், ஏக்கங்கள், ஏமாற்றங்கள் இருந்திருக்கும்… உங்ககிட்டே எதையும் காட்டிக்காம, எப்பவும் சிரிச்சுகிட்டு ஒரு இரும்பு மனுஷி மாதிரி இருக்காங்க… உண்மைலயே ஷீ ஈஸ் வெரி கிரேட்…” என்றார் புருஷோத்தமன் மெச்சுதலாய்.
“ம்ம்… ஆமா புருஷூ, என் அம்மாவைப் பத்தி நினைக்கும் போதெல்லாம் மனசு ரொம்ப கனத்துப் போகும்… அவங்க வயித்துல பிறந்தது எனக்கு எப்பவும் பெருமை தான்…” என்ற கோபிநாத்தின் கண்கள் கலங்கி குரல் நெகிழ்ந்திருந்தது. அவர்களிடம் ஏதோ கேட்க வந்த கோமுவின் காதில் அந்தப் பேச்சு விழவே சிலையாய் நின்றிருந்தார்.
உனைப் பிரிந்த போதே
புதிதாய் பிறந்துவிட்டேன்…
எனக்கான நேசங்கள்
உன் பேரில் எழுதப்படவில்லை…
எனக்கான அரவணைப்பில்
உன் விரல்கள் நீளப் போவதில்லை…
எனக்கான பிரிதல்கள்
உனைச் சுடப் போவதுமில்லை…
எனக்கான எதுவுமே
நீயின்றிப் போகையில்
உனக்கான நானாய்
காத்திருப்பதில் அர்த்தமென்ன…
உனைப் பிரிந்த போதே
புதிதாய் பிறந்துவிட்டேன்…
உணர்வுகள் மரித்து
உயிரை மட்டும் சுமந்து…

Advertisement