Advertisement

அத்தியாயம் – 21
அடுத்த நாள் காலையில் ரகு ஏழு மணிக்கு கிளம்ப வேண்டும் என்று கூறியிருந்ததால் ஐஷுவும் ஆறு மணிக்கே அலாரம் வைத்து எழுந்திருந்தாள். குளித்து புத்தம் புதிய பூவாய் ஹாலுக்கு வர ரகுவின் விழிகள் அவளை வியப்பும் ரசனையுமாய் நோக்கின.
அவனை நோக்கி மென்மையாய் புன்னகைத்தவள், “டைம் ஆகப் போகுது… இன்னும் குளிக்கப் போகலையா…” என்று கேட்க, “இதோ கிளம்பிட்டேன் ஐஷு… நீ ஏன் நேரமா…” என்று கேட்டவனின் விழிகள் ஆவலுடன் நோக்க, 
“இல்ல, சும்மா… நீ போ…” என்றவள் அவன் குளிக்க சென்றதும் சாப்பிட ஏதாவது செய்து வைக்கலாம் என்று அடுக்களைக்கு செல்ல அங்கே உணவு மேசையில் இரண்டு ஹாட் பாக்ஸ் மூடி வைத்திருக்க திறந்தவள் அதிசயித்தாள். ஒன்றில் பிரட் ரோஸ்டும் மற்றொன்றில் வெஜ் பிரைடு ரைஸும் அவளை நோக்கி அன்பாய் சிரித்தன.
அதைக் கண்டதும் உருகியவள் அவன் அன்பை எண்ணி வியக்க கண்ணோரம் சந்தோஷத்தில் கண்ணீர் துளிர்த்தது. 
“அவன் கிளம்பிட்டா நான் கஷ்டப்படுவேன்னு சாப்பிட எல்லாத்தையும் ரெடி பண்ணி வச்சிருக்கானே ராஸ்கல்… இவன் அன்பை எவ்ளோ உதாசீனப் படுத்திருப்பேன்…” என்றவள் மனம் அவளையே குற்றவாளியாக்கியது.
நெகிழ்ச்சியுடன் நின்றவள் அவனுக்கு என்ன உதவி செய்வது என்று புரியாமல் அமைதியாய் ஹால் ஜன்னல் அருகே சென்று நின்றாள். இனி அவனைக் காண நான்கு நாட்கள் ஆகுமென்பதே மனதுக்குள் போராட்டமாய் இருக்க மனதின் வருத்தத்தை முகத்தில் மறைக்க முடியாமல் வெளியே எங்கோ வெறித்துக் கொண்டு இருந்தாள். 
சிறிது நேரத்தில் ரகு உபயோகிக்கும் பர்ப்யூமின் மணம் அவன் தயாராகி விட்டான் என்பதை உணர்த்தியது. அந்த மணம் அவளை நெருங்கி வர, குளிர்ந்த அவனது கைகள் தன் தோளில் படிவதை உணர்ந்த மனம் படபடத்தது.
ஜன்னல் கம்பியை அவள் விரல்கள் இறுக்கமாய் பற்றிக் கொள்ள அவள் தோள் வளைவில் முகம் வைத்தவன், “ஐஷூ… நீ தனியா இருந்துப்பியா… பயம் இல்லையே…” என்று நாப்பதாவது முறையாய் கேட்க அவள் மனம் சொல்லவொணா துக்கத்தில் கலங்கியது.
அந்த அமைதி அவனுக்கும் தவிப்பைக் கொடுக்க பின்னிலிருந்து மெல்ல அவளை அணைத்துக் கொண்டான். ஆயிரம் வார்த்தைகள் சொல்லாத ஆறுதலை, நம்பிக்கையை அந்த அணைப்பு அவளுக்கு உணர்த்திக் கொண்டிருக்க, சிறிது அசைந்தாலும் அவன் விலகிவிடுவானோ என்ற எண்ணத்தில் அப்படியே நின்று கொண்டிருந்தாள் அவள்.
அவனது கைகள் மெல்ல அவளைத் தன்னை நோக்கித் திருப்ப குனிந்து நின்றவளின் வாடிய முகத்தை தன் ஒரு விரலால் நிமிர்த்தியவன், அழகு முகத்தை குறுகுறுவென்று நோக்கிக் கொண்டிருந்தான். அவளது விழிகள் நிலம் நோக்கி இருக்க அவனைக் காணவும் தயங்கி நின்றவளை நெஞ்சோடு சேர்த்து அணைத்துக் கொண்டான்.
மறுப்பேதும் சொல்லாமல் அவன் நெஞ்சில் முகம் புதைத்துக் கொண்டவளுக்கும் அந்த அணைப்பு தேவையாய் இருக்க சிறிது நேரம் அமைதியாய் கழிந்தது.
“ஐஷுமா… என்னடா, தனியா இருக்க பயமாருக்கா…” என்றவன் அவள் நெற்றியில் மென்மையாய் இதழ் பதித்து இமைச் சிப்பிகளில் முத்திரை பதிக்க, அவன் செயல் எதற்கும் மறுப்பில்லாமல் அமைதியாய் இருந்தவளின் மனம் தன்னைத் தேடுவதை உணர்ந்த ரகுவுக்கு அவளை விட்டுச் செல்ல மனமின்றி தவித்துப் போனான்.
என்ன சொல்ல ஏது சொல்ல,
கண்ணோடு கண் பேச வார்த்தையில்ல!
என்னென்னவோ உள்ளுக்குள்ள 
வெள்ள சொல்லாம, என் வெட்கம் தள்ள!
சட்டென்று ரகுவின் அலைபேசி ரிங் டோனை வெளியிட வருணின் அழைப்பில் கலைந்தவன் அதை எடுத்தாலும் அவளைத் தன் கை வளைவுக்குள்ளேயே வைத்திருந்தான்.
“டேய் மச்சான், நான் வீட்டுல இருந்து கிளம்பிட்டேன்… நீ நேரா ஏர்போர்ட் வந்திடறியா…” என்றான் வருண்.
“ம்ம்… நானும் ரெடிடா… ஒரு அஞ்சு நிமிஷத்துல இங்கிருந்து கிளம்பிடுவேன்…” என்ற ரகு பேசிக் கொண்டே அவளையும் அழைத்துக் கொண்டு உணவு மேசைக்கு நகர்ந்தான்.
“ஓகே மச்சான், லேட் பண்ணாம வந்திடு…” என்ற வருண் அழைப்பைத் துண்டிக்க தன் கை வளைவுக்குள் வாடிய ரோஜாவாய் நின்றவளை நோக்கியவன், “ஐஷுமா, உனக்கு காலைல, மதியத்துக்கு சாப்பாடு ரெடி பண்ணி வச்சிட்டேன்… நைட் மட்டும் பிரட் வச்சு அட்ஜஸ்ட் பண்ணிக்க… காலைல அம்மா, அத்தை எல்லாம் வந்திருவாங்க… நீ சமைக்கறேன்னு கைல காயம் பண்ணிக்காத… நான் கிளம்பட்டுமா…” என்றவன் சாப்பிடவில்லை என்பதை உணர்ந்தவள், “இன்னும் நீ சாப்பிடலியே…” என்று கேட்க கைகடிகாரத்தைப் பார்த்தவன், “லேட்டாகிடுச்சு, டிராபிக்ல மாட்டினா அவ்ளோதான்… நான் கிளம்பறேன்…” என்றவனை அமர்த்தி பிளேட்டில் பிரட் ரோஸ்டை வைத்து ஒரு கிளாஸில் பாலை ஊற்றினாள்.
“ப்ளீஸ் சாப்பிடு…” என்றவளின் குரலில் என்ன உணர்ந்தானோ வேகமாய் எடுத்து வாய்க்குள் திணித்துக் கொண்டவன் பாலைக் குடித்து உள்ளே தள்ளினான்.
“ஐஷுமா… பத்திரமா இருந்துப்ப தானே…” தனது பாகை எடுத்துக் கொண்டே அவன் வினவ, “ம்ம்… நீயும் பத்திரமாப் போயிட்டு வா…” என்றாள் குனிந்து கொண்டே. அவளது வருத்தம் தன்னைப் பிரிவதால் வந்ததென்று உணர்ந்தவன் மனதுக்குள் சந்தோஷ ஊற்று பொங்க சட்டென்று அவளை அணைத்தவன் இதழ்கள் அவளது இதழில் அழுத்தமாய் ஒரு கவிதை வரையத் தொடங்க, எதிர்பார்க்காத அந்த முதல் முத்தத்தில் தவித்தவள் முகம் குங்குமமாய் சிவந்திருக்க, கண்ணை மூடி நின்றவளை மெல்ல விடுவித்தான்.
மலரோடு உறவாடும் தென்றலாய்
இதழோடு இதழ் தீண்டும் போது
இமையேனோ இதமாய் சிணுங்கி 
என்னைக் கொல்கிறது கண்ணாளா…
அவள் முகத்தைக் கையில் தாங்கி கண்களில் காதலைக் கலக்க விட்டவன், “டேக் கேர் பேபி… சீக்கிரம் வந்திடறேன்…” என்று சொல்லிவிட்டு நிற்காமல் வேகமாய் கதவைத் திறந்து வெளியேற இமைக்கவும் மறந்து நோக்கி நின்றாள். அவன் சென்று சிறிது நேரம் கடந்த பின்னும் அப்படியே நின்றவளின் மனம் ஒரு நிலையில் இல்லாமல் தவித்தது.
“என் மீது இத்தனை பிரியமும், காதலும் வைத்திருப்பவனை இத்தனை நாள் புரிந்து கொள்ளாமல் இருந்து விட்டேனே…” என்றவளை நோக்கி கேலியாய் சிரித்தது மனசாட்சி.
“இப்ப மட்டும் அவன் கருவாடு மாதிரி தெரியலையா… அவன் கொடுக்கிற முத்தத்தை ரசிக்கற… விட்டுட்டு இருக்க முடியாம தவிக்கிற…” என்றதும் சிலிர்த்துக் கொண்டாள்.
“அது, நான் சின்னப் பொண்ணு, ஏதோ புரியாம அழகுதான் பெருசுன்னு நினைச்சுட்டேன்… நீயாச்சும் புத்தி சொல்லிக் கொடுத்திருக்கணும்… அப்பெல்லாம் என்னை உசுப்பேத்தி ரணகளம் பண்ணிட்டு இப்ப நக்கல் பண்ணறியா…” அவள் கோபமாய் எதிர்கேள்வி கேட்க மனசாட்சி சிரித்தது.
“சரி, சரி… நான் நக்கல் பண்ணலை… இந்த ராகு எப்ப உனக்கு ரகுவா மாறினான்னு குழப்பத்துல கேட்டுட்டேன்…”
“எப்படின்னா, இப்பதான் அவன் என் மேல வச்சிருக்கிற அன்பை முழுசாப் புரிஞ்சுகிட்டேன்… என்னை ஒரு குழந்தை போல பார்த்துக்கறான்… என் மேல எவ்ளோ லவ் வச்சிருந்தா வேற எந்தப் பொண்ணையும் ஏத்துக்காம இருந்திருப்பான்…”
“ஓ… அப்ப நீ ரகுவை லவ் பண்ணத் தொடங்கிட்டியா…”
“அட, ஆமாப்பா ஆமா… இன்னுமா உனக்கு சந்தேகம்…”
“அப்படின்னா அவன்கிட்ட நேரடியா மனசிலுள்ளதை சொல்லிட வேண்டியதுதான…” என்றது மனசாட்சி.
“அதெப்படி… எல்லாத்துக்கும் ஒரு நேரம் காலம் வர வேணாமா… அவனே என் காதலைப் புரிஞ்சுகிட்டு என்னைப் பார்த்து எப்ப லவ் யூ சொல்லுறானோ அப்ப தான் என் காதலை அவன்கிட்ட சொல்லுவேன்…” என்றாள் அவள்.
“இப்ப மட்டும் உன் காதலைப் புரியாமலா உனக்கு முத்தமெல்லாம் கொடுத்திட்டுப் போயிருப்பான்…”  மனசாட்சியின் கேள்வியில் நாணியவள், “அட ஆமால்ல… இல்லேன்னா என்னை நெருங்கி வந்திருக்க மாட்டானே… அவன் பூனேல இருந்து வந்ததும் சொல்லிடறேன்…” என்றாள்.
“ம்ம்… குட் கேர்ள்…” என்ற மனசாட்சி விடைபெற்றது.
மனம் லேசாக வீட்டுக்குள் சுற்றி வந்தவளின் அலைபேசி சிணுங்கவும் எடுக்க உஷா அழைத்திருந்தார். “ஐஷு, என்னடி பண்ணற… டிபன் சாப்பிட்டியா, மாப்பிள்ளை பூனே கிளம்பிட்டாராமே… கவனமா, பத்திரமா இரு… நாங்க காலைல அங்கே இருப்போம்…” என்றவர் கணவரிடம் கொடுக்க தந்தையுடன் சிறிது நேரம் பேசிவிட்டு வைக்க அடுத்து மேனகாவும் அழைத்து அதையே விசாரிக்க அடுத்து புருஷோத்தமன் பேசினார்.
சிறிது நேரத்தில் ஜெஸ்சி வந்து விசாரிக்க, “ஆஹா, இந்த லூசு ரகு நான் ஊருக்குப் போறேன்னு உலகம் பூரா போஸ்டர் ஒட்டிட்டு தான் கிளம்பிருப்பான் போலருக்கு…” என நினைத்தாலும் தன் மீதுள்ள அன்பும் அக்கறையுமே காரணம் எனப் புரிந்ததால் சந்தோசமே தோன்றியது.
வீட்டுக்கு வருமாறு அழைத்த ஜெஸ்சியிடம் பிறகு வருவதாகக் கூறியவள், மனம் ஏனோ தனிமையை நாட பசிக்கவும் மறந்து சோபாவில் அமர்ந்திருந்தாள். 
“ரகு இப்ப பிளைட் ஏறி இருப்பானா, ஏர்போர்ட் போயிட்டு எனக்குக் கூப்பிடணும்னு தோணுச்சா பாரு…” என அவனையே எண்ணங்கள் சுற்றிக் கொண்டிருக்க எழுந்தவள் பேருக்கு சாப்பிட்டு கோமுவை அலைபேசியில் அழைத்தாள்.
எதிர்ப்புறம் உற்சாகமாய் கோமுவின் குரல் ஒலித்தது.
“ஹலோ ஐஷு பேபி… என்ன இந்த நேரத்துல எனக்கு கால் பண்ணி இருக்கே… புருஷன் இல்லாம போர் அடிக்குதா…” அவரது கேள்வியில் உண்மையிலேயே அசந்து போனவள் அதைக் காட்டிக் கொள்ளாமல் பேசினாள்.
“ப்ச்… ஏன், இல்லேன்னா நான் உனக்கு போன் பண்ண மாட்டேனா.. சரி, வச்சிடட்டுமா…” என்றாள் வருத்தத்துடன்.
“அடடா, வாட் அபவுட் மை பேபி… ஒய் யூ லைக் ஆங்ரி பேர்ட்…” என்றார் அவர்.
“அதெல்லாம் ஒண்ணும் இல்ல, உன்னோட பேசணும்னு தோணுச்சு, அதான் கூப்பிட்டேன்…” என்றவளின் குரலில் ஒரு வருத்தம் தெரிய கோமு புரிந்து கொண்டார். “ஒய் பேபி, டூ யூ மிஸ் ரகு…” என்று கேட்க அவள் சிணுங்கினாள்.
“ஹலோ, நான் இப்ப மிஸ் ரகு இல்ல, மிசஸ் ரகு…” என்றவள், “அதனால அவனை மிஸ் எல்லாம் பண்ணல… நீங்க நைட் கிளம்ப எல்லாம் எடுத்து வச்சாச்சா கோமு… அப்புறம் பால்கோவா கேட்டேனே… செய்தாச்சா…” இயல்பாய் இருப்பது போலக் காட்டிக் கொண்டாள்.
அது கோமுவுக்கும் புரிய அவரும் அதைப் பற்றி கிளறாமல் நேரில் பேசிக் கொள்ளலாம் என்று எப்போதும் போல் பேசத் தொடங்கினார்.
“மில்க் கோவா ரெடி பேபி… ஜஸ்ட் நவ் ஐ ஹாட் பிரிபேர்டு…”
“ஓ… சூப்பர்… உன்னோட சோதனை எலிக்கு கொடுத்துப் பார்த்தாச்சா… என்ன ரிசல்ட்…” என்று பேத்தி கேட்க பாட்டி சிரித்தார்.
“ஹாஹா… டோன்ட் டெல் டெஸ்டிங் ரேட்… ஹி ஈஸ் மை லவ்லி சன்…” என்றார் சிரிப்புடன்.
“சரி, சரி… டேஸ்ட் பண்ணிப் பார்க்கறோம்னு எல்லாத்தையும் தீர்த்திடாம பேக் பண்ணி கொண்டு வாங்க…” என்றவளிடம் புன்னகைத்தவர் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு, “ஓகே பேபி… சீ யூ டுமாரோ மார்னிங்…” என்று வைத்தார். இத்தனை நாளும் ரகு அலுவலகத்திற்கு செல்லும்போது சாப்பிட்டு, தூங்கி, டீவி பார்த்து, வீட்டைக் கிளீன் பண்ணி என்று பொழுதைப் போக்கி வந்தவளுக்கு இன்று ஏனோ ஒவ்வொரு நிமிடமும் நகர்வேனா என்று சண்டித்தனம் செய்தது. வீட்டைக் கூட்டிப் பெருக்கியவள் டீவியை வைத்துக் கொண்டு அமர காட்சிகள் கண்ணில் பதியாமல் கண்ணாமூச்சி ஆடியது. 
சிறிது நேரத்தில் அழைப்புமணி ஒலிக்க கதவைத் திறந்தவள் முன்னில், வித்யா கையில் ஒரு சின்ன டப்பாவுடன் நின்று கொண்டிருந்தாள். ஜெஸ்சியும் ராகவியும் அவளோடு பேசிக் கொண்டிருக்க இவளிடம் டப்பாவை நீட்டிய வித்யா, “பனீர் கிரேவி செய்தேன்… நீ தனியா இருக்கோம்னு பிரைடு ரைஸ்க்கு ஏதும் செய்திருக்க மாட்டேன்னு கொண்டு வந்தேன்மா…” என்று கொடுக்க, “டேய் ரகு…” என்று அலுத்துக் கொண்டாள்.
சிறிதுநேரம் அவர்களுடன் பேசிக்கொண்டிருந்ததில் பொழுது போக மதிய உணவை முடித்துவிட்டு கட்டிலில் சாய்ந்தாள். உறக்கம் வராவிட்டாலும் காலை முதல் நடந்த நிகழ்வுகளை அசை போட்டுக் கொண்டிருக்க சுகமாய் இருந்தது. 
“இந்த ரகு ஒரு போன் கூட பண்ணாம என்ன பண்ணிட்டு இருப்பான்… அழைச்சுப் பார்க்கலாமா…” என யோசித்தவள் அழைத்தாள். அது நாட் ரீச்சபிள் என்று ஆங்கிலத்தில் சொல்லிவிட்டு ஹிந்தியில் மறு ஒலிபரப்பு செய்தது. “ச்சே… இது வேற…” என்று முகத்தை சுளித்தவள் சிறிது நேரம் பாட்டு கேட்டுக் கொண்டிருந்தாள்.
மாலையில் குழந்தைகள் பார்க்குக்கு அழைக்க அவர்கள் விளையாடுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவள் வீடு திரும்பியதும் மீண்டும் தனிமை ரகுவின் நினைவுகளை மீட்டெடுத்துக் கொண்டது. ஜெஸ்சி, இரவு அங்கு வருமாறு அழைத்தும் அன்பாய் மறுத்து விட்டாள். மீதமிருந்த பிரைடு ரைசை லேசாய் சூடு பண்ணி இரவு உணவை முடித்துக் கொண்டவள் மனம் ஒருவித கலக்கத்திலேயே இருந்தது..
அப்போது செல்லமாய் சிணுங்கிய அவளது செல்போன் ரகுவின் எண்ணைக் காட்ட தாமரையாய் முகம் மலர்ந்தவள் ஆவலுடன் போனை எடுத்துக் காதுக்குக் கொடுத்தாள்.
“ஐஷுமா…” ரகுவின் கம்பீரமான குரல் ஒருவிதக் குழைவுடன் காதுக்குள் உரச அவளது தேகம் சிலிர்த்தது. பதில் சொல்லாமல் அப்படியே அவள் மௌனித்திருக்க மீண்டும் அவன் அழைத்தான்.
“ஐஷு, சாப்பிட்டியா…”
“ம்ம்…”
“சாரிடா, இங்க வந்ததும் அழைச்சிட்டுப் போயிட்டாங்க, சிக்னலும் இல்ல… அதான் உன்னைக் கூப்பிட முடியல…”
“ம்ம்…” 
“கதவெல்லாம் சரியா லாக் பண்ணிட்டியா, சிலிண்டர் ஆப் பண்ணியா… எல்லாம் கவனமாப் பார்த்துக்கடா…”
“ம்ம்…”
“நீ தனியா தூங்கிக்குவ தான… பயமில்லையே…”
“ம்ம்…”
அவன் ஏதாவது ஆசையாய் பேசுவான் என்று காத்திருந்தவள் அக்கறையாய் மட்டும் பேசியதில் கடுப்பாகி, “ம்ம்…” மட்டும் சொல்லிக் கொண்டிருக்க அவன் புன்னகைத்தான்.
“அத்தானை ரொம்ப மிஸ் பண்ணற தான…” என்று கேட்கவும், “ம்ம்ம்…” என்றவள் கையை உதறிக் கொண்டு, “அதெல்லாம் ஒண்ணும் இல்ல, சீக்கிரம் போன வேலையை முடிச்சிட்டுக் கிளம்பி வா…” என்றாள் புன்னகையுடன்.
“ம்ம்… மிஸ் யூ பொண்டாட்டி…” வெகு நாளைக்குப் பிறகு ஒலித்த அவனது அழைப்பைக் கேட்டவளின் இதழ்கள் புன்னகை சிந்த, “நானும் மிஸ் யூ டா புருஷா…” என்று மனதுக்குள்ளேயே சொல்லிக் கொண்டாள்.
“ஓகே ஐஷு டார்லிங்… பத்திரமா இரு… பை…” என்றவன் “ப்ச்…” என்று அழுத்தமாய் ஒரு முத்திரையைப் பதிக்க அவள் காதுகள் கூசி உடல் சிலிர்த்துக் கொண்டது. அழைப்பு துண்டிக்கப்பட்டும் அதையே பார்த்துக் கொண்டிருந்தவள் இதழ்களில் ஒரு புன்னகை ஒட்டிக் கொள்ள எழுந்தவள் ரகுவின் அறைக்குள் நுழைந்தாள்.
எப்போதும் போல அறை பளிச்சென்று இருக்க அவனது கட்டிலில் ஆவலுடன் அமர்ந்தாள். கட்டில் அருகே இருந்த மேசையில் அவளும், ரகுவும் உள்ள சின்ன வயதுப் போட்டோ அவளை நோக்கி சிரித்தது. ஆவலுடன் அதைத் தடவியவள் விழிகள் சுவர் ஹாங்கரில் தொங்கிக் கொண்டிருந்த ரகுவின் டீஷர்ட்டின் மீது படிய ஆசையுடன் அதை எடுத்துப் போட்டுப் பார்த்தாள்.
நீயில்லா தனிமை போக்க
உன் நினைவுகளையே 
என் ஆடையாக 
உடுத்துக் கொள்கிறேன்…
கண்ணாடி முன் நின்றவளின் மனம் சின்னக் குழந்தை போல சந்தோஷிக்க முகமோ நாணத்தில் சிவந்து அவள் அழகு முகத்தை மேலும் அழகாக்கியது. அவனது அலமாரியைத் திறந்து நோக்க சீராய் அடுக்கி வைக்கப்பட்டிருந்த உடைகள் கண்ணில் சிரிப்பை வரவழைத்தது.
“இருந்தாலும் நீ இவ்ளோ நல்ல பையனா இருக்கக் கூடாதுடா ரகு… என் அலமாரியைத் திறந்து பார்த்தா நீ என்னை உடனே டைவர்ஸ் பண்ணாலும் ஆச்சர்யமில்லை…” என்று தன்னைத் தானே வாரிக் கொண்டவள் ஒரு ஓரத்தில் இருந்த டைரி கண்ணில் படவும் ஆர்வத்துடன் எடுத்தாள்.
“ஏய் ஐஷு அடுத்தவங்க டைரியைப் படிக்கறது அநாகரிகம்னு உனக்குத் தெரியாதா…” அங்கிருந்த குட்டிப் பிள்ளையார் சிலை அவளை நோக்கி முறைக்க யோசித்தாள்.
“யோவ் ஜி, இதை நீ ரகுகிட்ட வேணும்னா சொல்லலாம்… நமக்கு இந்த நாகரிகம், அநாகரிகம் எல்லாம் தெரியாது… எது தோணுதோ அப்படியே பண்ணுவோம்… உனக்கே தெரியும்… பேசிக்கா நான் ரொம்ப நல்லவ எல்லாம் கிடையாது… அதுக்காக வேஷம் போடவும் மாட்டேன்… சோ இந்த அட்வைஸ் மூட்டையைத் தூக்கி அந்தப்பக்கமா வச்சிட்டு சைலன்டா நான் பண்ணறதை வேடிக்கை மட்டும் பாரு…” என்றவள் அந்த டைரியுடன் கட்டிலில் சாய்ந்தாள்.
அதைத் திறந்தவள் கண்ணில் பட்ட முதல் வாசகமே இதழில் புன்னகையைக் கொடுக்க பார்வையை ஓட்டினாள்.
என் ரோஜாப் பெண்ணே…
என் இரவில் கனவாய் நீ
என் பகலில் நினைவாய் நீ
என்னை வதைத்தே கொல்லும்
இதயத்தின் தேவதை நீ…
அடுத்த பக்கத்தைத் திருப்பியவள் விழிகள் ஆச்சர்யமாய் விரிந்தன.
குவளை விழி கொண்டு 
குறுகுறுன்னு பார்த்தவளே…
சிவந்த கன்னத்தில் 
ரோஜாப்பூ அணிந்தவளே…
அல்லிப்பூ விழியில் 
மல்லிப்பூவாய் சிரிப்பவளே…
தங்கவிரல் கொண்டு எனைத் 
தழுவும் நாள் எப்போது…

Advertisement