Advertisement

அத்தியாயம் – 20
அடுத்து வந்த இரு நாட்களும் அழகாய் கழிய சமையலில் உதவி செய்கிறேன் என்று ரகுவுக்கு அதிக வேலை கொடுத்துக் கொண்டிருந்தாள் ஐஷு. முதல் நாள் வெங்காயம் கட் பண்ணுகிறேன் என்று விரலைக் கட் பண்ணி அவனைப் பீதியாக்கியவள் அடுத்த நாள் தோசை சுடுகிறேன் என்று கையை சுட்டுக் கொண்டு டெண்ஷனாக்கினாள்.
சமையலோடு அவளையும் அவ்வப்போது கவனிக்க வேண்டி வந்ததால் எப்போதும் நேரமாய் சமையலை முடித்துக் கிளம்பும் ரகு அவளது சமையல் ஒத்தாசையால் தாமதமாய் கிளம்பி அரக்கப் பறக்க சாப்பிட்டு ஓடிக் கொண்டிருந்தான். ஆனாலும் இருவருக்குள்ளும் ஒரு புரிதலான தோழமை உருவாகி இருந்தது. 
முத்தம் கொடுத்த சுஷ்மிதாவின் கன்னத்தில் அறைந்தவள் வாங்கிய தன்னை என்ன செய்யப் போகிறாளோ என்று ரகு பீதியிலிருக்க அவளோ அதைப்பற்றிப் பேசவே இல்லை. 
அலுவலகத்தில் அவசரமாய் முடிக்க வேண்டிய வேலைகளை முடித்து நிமிர்ந்த ரகுவின் மனது கிட்டிய சிறு இடைவெளியில் அவளைப் பற்றிய நினைவுகளில் சுற்றிக் கொள்ள உதட்டுக்குள்ளேயே சிரித்துக் கொண்டான் ரகு.
முன்தினம் இரவு இருவரும் சேர்ந்து சப்பாத்தி செய்ய முடிவெடுக்க, ஐஷு தான் சப்பாத்தி செய்வதாகக் கூறியவள் அலைபேசியை எடுத்து வந்து நோண்டிக் கொண்டிருக்க குருமாவுக்கு தயார் செய்து கொண்டிருந்த ரகு, “என்ன ஐஷு…  மாவு பிசையலையா….. நான் வேணும்னா பிசைந்து தரட்டுமா…” என்று கேட்க, “ஹலோ, நாங்களும் யூ டியூப் பார்த்து சப்பாத்தி செய்வோம்… வெயிட் பண்ணு…” என்று சொல்ல அவன் அதிர்ச்சியோடு பார்த்தான்.
“என்னது, மாவு பிசைய யூ டியூபா… இன்னைக்கு கோதுமை தோசை தான் நமக்கு…” என யோசித்துக் கொண்டிருக்க அவள் வீடியோவைப் பார்த்து வேண்டிய பொருட்களை எடுத்து வைத்துக் கொண்டு கொஞ்சம் கொஞ்சமாய் மாவில் தண்ணீர் தெளித்து, phd செய்ய முயன்று கொண்டிருந்தாள்.
அதைப் பார்த்தவன் பொங்கி வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டு திரும்பிக் கொண்டான். பாத்திரத்தைச் சுற்றிலும் அங்கங்கே மாவு சிதறிக் கிடக்க ஒரு வழியாய் பிசைந்த மாவை சப்பாத்திக் கட்டையை வைத்து தட்டிக் கொண்டிருந்தவள் அவனை அழைத்தாள். 
“ரகு… இது ஏன் பசை போல ஒட்டிக்கிது…” பரிதாபமாய் கேட்டவளைக் கண்டு அவனுக்குப் பாவம் தோன்ற இன்னும் சிறிது மாவைப் போட்டு பிசையச் சொல்ல இப்போது சற்று கெட்டியான பதத்தில் சரியாய் வரவும், “ஐ… நான் மாவு பிசைஞ்சுட்டேனே…” என்று சந்தோஷமாய் கூறியவளைக் கண்டு புன்னகைத்தான்.
“ஐஷு, உனக்கு தெரியாம சொதப்பப் போறேன்னு நினைச்சா, சமாளிச்சிட்டியே…” என்றான் மெச்சுதலாக.
“ஹலோ, நாங்க எந்த ஒரு விஷயத்துலயும் இறங்க மாட்டோம்… செய்யணும்னு இறங்கிட்டா சரியா செய்யாம விடமாட்டோம்…” என்றாள் பெருமையுடன்.
“ம்ம்… சூப்பர்…” என்று பாராட்டியவன், அடுத்து அவள் அதை உருளைகளாக உருட்டத் தொடங்க குருமாவை கவனித்தான்.
அவள் உணவு மேசை மீது சப்பாத்தியைத் தேய்த்துக் கொண்டிருக்க தயாரான குருமாவை இறக்கி வைத்தவன் தோசைக் கல்லை அடுப்பில் வைத்துவிட்டு தேய்த்த சப்பாத்தியை எடுக்க வர அங்கே பரந்து விரிந்திருந்த உலக மேப்பைக் கண்களில் சிரிப்பு மின்ன நோக்கினான்.
ஆசியா, ஆஸ்திரேலியா, சைனா, ஸ்ரீலங்கா கூட இருக்க அடுத்து தேய்ப்பது எந்த கண்டமாய் இருக்கும் என யோசித்துக் கொண்டிருந்தவன், “ஓ சைனாவா…” என்று வாய்விட்டுக் கூற அவள் முறைத்தாள்.
“இல்ல கொரோனா… முதல் தடவை பண்ணும்போதே இந்த அளவுக்குப் பண்ணி இருக்கனேன்னு பாராட்டுறத விட்டுட்டு கிண்டல் பண்ணினா கடிச்சு வச்சிருவேன்…” சொன்னவள் முகத்தில் விழுந்த முடிக்கற்றையை மாவுக் கையால் ஒதுக்கிக் கொள்ள மாவு முகத்தில் அப்பிக் கொண்டது.
அதை கவனித்த ரகு, “ஐஷு… இங்க பாரு…” எனவும், என்னவென்று நிமிர்ந்தவளின் கண்களுக்குள் குறுகுறுவென்று பார்த்தவன், அவள் முகத்தை நோக்கி கையைக் கொண்டு செல்ல கண்ணை சுருக்கியவள், “என்ன…” என்று கேட்க, “ஒரு நிமிஷம் அப்படியே இரு…” என்றவன் அலைபேசியை எடுத்து வேகமாய் காமிராவில் அவளைக் கிளிக்கிக் கொள்ள அவள் புரியாமல் முழித்துக் கொண்டு நின்றாள்.
“இப்ப எதுக்கு போட்டோ எடுத்த…” சிணுங்கியவளிடம், “ப்ரூப் மா ப்ரூப்… நேத்து நீ தோசை சுட்டேன்னு சொன்னதுக்கு கோமுப் பாட்டி நம்பலை இல்ல, அதான்… இன்னைக்கு சப்பாத்தியும் கையுமா உன்னைப் போட்டோ எடுத்திட்டேன்… இப்ப நம்புவாங்கல்ல…” அவன் சொல்லவும் அவளது கண்கள் பளிச்சிட, “சூப்பர் ஐடியா ரகு…” என்று புன்னகைத்தாள்.
அவள் முகத்தில் தெரிந்த சந்தோஷத்தையும் கண்களின் ஆவலையும் கண்டவன் அவளையே பார்த்துக் கொண்டிருக்க, “ஹலோ, சைட் அடிச்சது போதும்… இந்தா, சப்பாத்தியை எடுத்திட்டுப் போ…” என்றாள் குனிந்து தேய்த்துக் கொண்டே.
“ஹூம்…” பெரிதாய் பெருமூச்சு விட்டவன், “தாலி கட்டின பொண்டாட்டியைப் பார்க்கக் கூட இங்க பர்மிஷன் வாங்கணும் போலருக்கே…” அவன் முணுமுணுத்தது அவள் காதிலும் விழ உதட்டுக்குள் சிரித்துக் கொண்டாள்.
“ஐஷு, நான் வேணும்னா ரவுண்டா எப்படித் தேய்க்கறதுன்னு சொல்லித் தரட்டுமா…” என்றவன் அவள் சம்மதிக்குமுன்னே பின்னில் வந்து நின்றான்.
அவன் செய்யப் போவதை யோசித்தவள் சட்டென்று திரும்ப வெகு அருகாமையில் நின்றவன் மேல் அவளது உடல் உரசவே விலக முயன்று பின்னில் சரிந்து தடுமாறியவளை அவன் இடுப்பில் கை கொடுத்து தாங்கிக் கொண்டான். அந்த நிமிடம் அவன் கண்கள் அவள் விழிகளுக்குள் தன்னைத் தேடிக் கொண்டிருக்க அவளது விழிகளோ அவன் கண்களை சந்திக்கவும் முடியாமல் தடுமாறித் தாழ்ந்தது. வீணையின் நரம்பினை மீட்டியது போல் இருவருக்குள்ளும் உண்டான உணர்வின் அலைகள் சிறிது நேரத்திற்குப் பின்னே சமன்பட கைகளுக்குள் இருந்தவளை மென்மையாய் விடுவித்தான்.
குங்குமமாய் சிவந்திருந்த அவள் முகத்தை அவன் ஆவலுடன் பார்க்க அவன் கன்னத்தில் லேசாய் தட்டியவள், “தோசைக் கல்லு காயுது…” என்று சொல்லவும் தனது பார்வையை விலக்கிக் கொண்டவன் அதை கவனித்தான்.
“கோணல் மாணலான சப்பாத்தியாய் இருந்தாலும் என் பொண்டாட்டி தேச்சதாக்கும்…” என்று சந்தோஷமாய் செய்து முடித்தவன் எல்லாவற்றையும் மேசை மீது வைத்தான்.
“ஐஷு… சும்மா சொல்லக் கூடாது… இத்தனூண்டு சமையல் கட்டுல உலகத்தையே கொண்டு வந்துட்டியே…” அவன் சொல்ல மீதமிருந்த கோதுமை மாவை பாத்திரத்தில் போட்டுக் கொண்டிருந்தவள் மாவுக் கையை அவன் முகத்தில் அப்பி “இது அன்டார்ட்டிகா…” என்று கேலி செய்து சிரித்தாள். அடுத்த நொடி அவள் கையைப் பிடித்து தன் கை வளைவுக்குள் இழுத்து நிறுத்தியவன் அவள் முகத்தில் கோதுமை மாவை அள்ளிப் பூச வாய்க்குள் சென்றதைத் துப்பியவள், அவன் கையில் கடித்து வைக்க, “ஆ…” என்றலறியவன் அவளைப் பிடிக்க முயல ஓடினாள்.
சோபாவைச் சுற்றி இருவரும் ஓடிப் பிடித்து விளையாடிக் கொண்டிருக்க ரகுவின் அலைபேசி அடித்தது. அன்னையின் எண்ணைக் கண்டவன் உற்சாகத்துடன் எடுத்து காதுக்குக் கொடுத்தான். “ஹ…லோ அம்மா…” என்றவன் மூச்சு வாங்குவதை உணர்ந்து, “என்னடா மகனே, புருஷன் பொண்டாட்டி ரெண்டு பேரும் ஓடிப் பிடிச்சு விளையாடிட்டு இருக்கீங்களா… இப்படி மூச்சு வாங்கற…” என்றார் சிரிப்புடன்.
“இருந்தாலும் இந்த அம்மா இப்படி CCTV யா இருக்கக் கூடாது…” என மனதில் நினைத்துக் கொண்டே “அது…வந்து சாப்பிட்டியாம்மா… அப்பா என்ன பண்ணறார்…” என்று பேச்சை மாற்றினான் மகன்.
“சாப்பிடப் போறோம்பா… நீங்க சாப்பிட்டாச்சா… என் மருமக என்ன பண்ணுறா…”
“இனிதான் சாப்பிடணும்மா… உங்க மருமக கிட்ட கொடுக்கறேன்… நீங்களே பேசிக்கோங்க…” என்றவன் அருகில் நின்று கேட்டுக் கொண்டிருந்த ஐஷுவிடம் நீட்டினான்.
“அத்தை, எப்படி இருக்கீங்க… மாமா செக் அப் போனாரா…” என்று நலம் விசாரித்தவளிடம், பதில் சொல்லிவிட்டு “நாளான்னிக்கு நாங்க சென்னை வரலாம்னு இருக்கோம் மா… உன் மாமாவுக்கு ரோஜாக்குட்டியைப் பார்க்கணும் போல இருக்காம்…” என்றார் புன்னகையுடன்.
“ஓ சூப்பர் அத்தை, வாங்க…” என்றாள் சந்தோஷத்துடன். அடுத்து அவர்கள் எதையோ மும்முரமாய் பேசிக் கொண்டிருக்க அவள் பின்னில் வந்து நெருங்கி நின்ற ரகு காதுக்குள் ஊத திணறிப் போனவள், திகைத்து திரும்பினாள். மேனகா எதையோ கேட்டுக் கொண்டிருக்க பதில் சொல்லாமல் இருந்தவளிடம் மீண்டும் அவர் கேட்க சமாளித்துக் கொண்டு பேசினாள்.
அவள் திணறுவதைக் குறும்புடன் நோக்கிக் கொண்டே நகர்ந்த ரகுவரன் ஹாலில் சிதறிக் கிடந்த மாவை சுத்தப் படுத்த நகர்ந்தான். பேசி முடித்து அமைதியாய் தன் அறைக்குள் சென்றவள் சிறிது நேரத்தில் உணவு மேசைக்கு வர மௌனமாய் உண்டு முடித்தனர்.
இருவருமாய் அடுக்களையை ஒதுங்க வைத்து ஐஷு டீவி பார்த்துக் கொண்டிருக்க, ரகு மடிகணினியில் எதையோ பார்த்துக் கொண்டிருந்தான். ஐஷுவின் அலைபேசி சிணுங்க, கோமுவின் எண்ணைக் கண்டு ஆவலுடன் எடுத்தாள்.
“ஹலோ, ஐஷு பேபி… ஹாட் யுவர் டின்னர்…” உற்சாகமாய் ஒலித்த பாட்டியின் குரலில் புன்னகைத்தவள்,
“எஸ் கோமு… நீ சாப்டியா… இன்னைக்கு உனக்கு ஒரு சர்ப்ரைஸ் சொல்லப் போறேன்…” என்றாள்.
“வாட் சர்ப்ரைஸ் பேபி… ரகு உன்னை ஹக் பண்ணி கிஸ் பண்ணிட்டானா…” என்று கேட்க,
“ச்சீ… நாட்டி ஓல்டு லேடி…” என்று செல்லமாய் திட்டியவள், “இன்னைக்கு நான்தான் சப்பாத்தி செய்தேன்…” என்று மார் தட்டிக் கொள்ள, “ஹோ, ரியல்லி இட்ஸ் அ சர்ப்ரைஸ்…” என்றவர், “ஓ காட், ஹவ் ஈஸ் ரகு… தேர் ஈஸ் நத்திங் பார் ஹிம்…” என்று கேட்க, “வேண்டாம் கோமு… ஓவரா கிண்டல் பண்ணி தான் ரகுவைக் கடிச்சு வச்சேன்… இப்ப நீ கிண்டல் பண்ணினா மறுபடி அவனைக் கடிப்பேன்…” என்றாள். அவர்கள் பேசுவதைக் காதில் வாங்கிக் கொண்டிருந்த ரகு, “அடிப்பாவி…” என்பது போல் பார்க்க சிரித்தாள் ஐஷு.
அந்தப் புன்னகையில் உருகியவன், “இந்த சிரிப்புக்காகவே எத்தனை கடிச்சாலும் தாங்கிக்கலாம் போலிருக்கே…” என்று நினைத்துக்கொண்டு பார்வையை மடிகணினியில் பதித்தான்.
“ஐஷு, நாங்க நாளான்னிக்கு சென்னை வரலாம்னு இருக்கோம்… உன்னைப் பார்க்கணும் போலவே இருக்குன்னு கோபிகிட்ட சொன்னேன்… சரி, நாளான்னிக்கே ட்ரெயின்ல டிக்கெட் இருக்கு போகலாம்னு சொல்லிட்டான்… உன் மாமா, அத்தையும் அதே டேட்ல வரோம்னு சொல்லிட்டாங்க…” என்றார் சந்தோஷத்துடன்.
“வாவ்… சூப்பர் கோமு, அத்தை என்கிட்டே அவங்க வர்றதை மட்டும் தான் சொன்னாங்க… எல்லாரும் ஒண்ணா வந்தா செம ஜாலியா இருக்கும்…” என்றாள் குதூகலத்துடன்.
“ரகு கிட்ட இன்பார்ம் பண்ணிடு ஐஷுமா… ஒரே ஒரு ரிக்வஸ்ட் டா செல்லம்…” என்றார் கோமு.
“என்ன கோமு… ரிக்வஸ்ட்னு எல்லாம் பில்டப் பண்ணற…”
“வென் வி கம் டு ஹோம், ப்ளீஸ் யூ டோன்ட் குக்… வி ஆர் நாட் தி டெஸ்ட் ரேட்ஸ்…” என்றார் சோகமாக.
“கோமு….” அவள் பல்லைக் கடிக்கும் ஓசையில் சிரிப்புடன் அழைப்பைத் துண்டித்தார் கோமு. சந்தோஷமாய் ரகுவிடம் கோமு சொன்னதை சொன்னவள் “எல்லாரும் வந்தா வீடே கலகலன்னு ஜாலியா இருக்கப் போகுது…” என்றாள். கண்ணை மூடி முன்தினம் நடந்ததை புன்னகையுடன் அசை போட்டுக்கொண்டிருந்த ரகுவின் தோளில் தட்டினான் வருண்.
“என்ன மச்சான், நைட்டெல்லாம் வீட்ல குஜால் பண்ணிட்டு இங்க வந்து தூக்கமா…” என்றவனை முறைத்தவன், “ஒரு முத்தத்துக்கே வழியக் காணோம்… இதுல மஜா, குஜான்னு இவன் வேற…” என மனதுள் நினைத்தவன் சிரித்தான். 
“புனேல நம்ம புது ப்ரோஜக்ட் செமினார்க்கு யார் போறாங்கன்னு கன்பர்ம் ஆகிடுச்சா…” ரகு கேட்க வருண் தெரியாதென்று தலையாட்டினான்.
“இன்னும் கன்பர்ம் பண்ணலை போலருக்கு… கடைசி நேரத்துல நம்ம தலையை உருட்டாம இருந்தா சரி…” என்ற வருண் அவனது சீட்டுக்கு செல்ல ரகுவுக்கும் அந்த எண்ணம் வராமலில்லை. இது போன்ற விஷயங்கள் கடைசி நேரத்தில் தான் தெரிவிப்பார்கள் என்பதால் வந்த குழப்பமே அது.
அவன் நினைத்தது போல நாளை மறுநாள் நடைபெறும் செமினாரில் கலந்து கொள்ள அடுத்த நாளே ரகுவையும் சரணையும் கிளம்ப சொல்லி மெயில் வந்தது. ரகு செல்லாமல் தவிர்க்க முயன்றும் முடியவில்லை. 
யோசனையுடன் வீட்டுக்கு வந்தவன் சோர்வுடன் சோபாவில் அமர்ந்திருக்க அவனது முகத்தைக் கண்ட ஐஷு எதுவும் பேசாமல் காபி எடுத்து வந்தாள். அமைதியாய் வாங்கிக் கொண்டவன் குடித்து முடிக்க இதமாய் உணர்ந்தான்.
ஐஷு அவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள். 
“என்னாச்சு ரகு, எதுவும் பிரச்சனையா…” அவளது இதமான குரல் ஒரு புத்துணர்வைக் கொடுக்க, “ஐஷு, இப்படி உக்கார்…” என்றவன் அவள் கையைப் பிடித்து அருகில் அமர்த்தினான்.
“ஐஷு, புனேல எங்க புது புரோஜக்ட் விஷயமா ஒரு செமினார் ஏற்பாடு பண்ணி இருக்காங்க… அதுல எங்க கம்பெனி சார்பா என்னையும் வருணையும் கலந்துக்க சொல்லி இருக்காங்க…” என்றவன் முழுதும் சொல்லி முடிக்காமல் அவள் முகத்தைப் பார்த்தான்.
அதில் ஒரு வித ஏக்கம் பரவுவதை உணர்ந்தவன் அவள் கையைத் தன் கைகளுக்குள் எடுத்துக் கொண்டான். இந்த சில நாட்களில் அவனது சின்னத் தொடுகைகளுக்கெல்லாம் அவள் பெரிதாய் அலட்டிக் கொள்வதில்லை. அவன் மீதான தனது பிரியத்தை உணர்ந்து கொண்டவள் அவனாகத் தனது காதலை புரிந்து ஏற்றுக் கொண்டு நெருங்கி வர வேண்டுமென்று மனதுக்குள் காத்திருந்தாள்.
“ஐஷு… உன்னைத் தனியா விட்டுட்டுப் போக எனக்கும் விருப்பம் இல்ல… இந்த புரோக்ராம் அவாய்ட் பண்ணவும் முடியல… அதான், என்ன பண்ணறதுன்னு குழப்பமா இருக்கு…” என்றவன் அவள் விரல்களை மெல்ல அமர்த்திக் கொண்டிருக்க யோசித்தவள் கேட்டாள்.
“எப்ப போகணும் ரகு…”
“நாளைக்கு காலைல பிளைட்… நாளான்னிக்கு செமினார்… ரெண்டு நாள் அட்டன்ட் பண்ணிட்டு மூணாவது நாள் ரிட்டர்ன்… மொத்தம் நாலு நாள்…” என்றவனின் குரல் அது நான்கு மாதப் பிரிவின் சத்தத்தில் ஒலித்தது.
“நாளைக்கு ஒரு நாள் தானே… நாளான்னிக்கு அத்தை, மாமா, அப்பா, அம்மா, கோமு எல்லாரும் வந்திருவாங்களே…” என்றாள் அவள் அவனை சமாதானப்படுத்தும் நோக்கில்.
“ம்ம்… நாளைக்கு ஒரு நாள் நீ சமாளிச்சுக்குவியா… நைட் ஜெஸ்சி ஆன்ட்டி வீட்டுல இருந்துக்கறியா…”
அவனது குரலில் இருந்த அக்கறையும், பயமும் அவளுக்குப் புரிய அவன் கரங்களைத் தன விரல்களால் கோர்த்துக் கொண்டவள் புன்னகைத்தாள்.
“ரகு… எதுக்கு இவ்ளோ யோசிக்கற… ஒருநாள் நைட் நான் தனியா இருக்க மாட்டேனா… நான் பார்த்துக்கறேன்… நீ பத்திரமா பயப்படாம போயிட்டு வா…” என்றாள் அன்புடன்.
“உன்னை விட்டுட்டு என்னால தனியா இருக்க முடியாது ரகு… நீ எங்கேயும் போகாதன்னு சொல்லமாட்டியா ஐஷு…” மனதுக்குள் தேங்கிய கேள்வியை வெளியே விடாமல் புதைத்துக் கொண்ட ரகுவரன் எழுந்து தனது அறைக்கு சென்றான்.
“உன்னை மட்டும் இங்க தனியா விட்டுட்டு நான் எப்படி அங்க நிம்மதியா இருப்பேன் ஐஷு… நீயும் என்னோட புனே வந்திடுன்னு ஒரு வார்த்தை கேக்க மாட்டியா ரகு…” அவளும் அதே போல மனதுக்குள் நினைத்தவள் சிறிது ஏமாற்றமாய் உணர அமைதியாய் அமர்ந்திருந்தாள்.
இருவருக்குள்ளும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு ஒரே இடத்தில் அருகருகே இருந்தாலே போதுமென்று மனதுக்குத் தோன்றியது. ஆனாலும் அவளது முழுமையான மனமாற்றம் அறியாமல் எதையும் பேச வேண்டாமென்று அவனும், அவளது மனமாற்றத்தை அவனாகவே உணர்ந்து கொள்ள வேண்டுமென்று அவளும் காத்திருந்தனர். 
கண்கள் தாண்டி என் 
கருத்தில் நிறைந்தவளே…
உனக்காய் என் இதழ்
பூக்களை சேகரித்து வைக்கிறேன்…
என் விழிக்குள் விழுந்திட்ட
உன் நிழல் தடம்
நிஜமாய் என் நெஞ்சத்தில் 
பதிந்திடும் நாளுக்காய் காத்திருக்கிறேன்…
பூவானவளே 
என்னில் புன்னகைக்க வந்திடு…

Advertisement