Advertisement

அத்தியாயம் – 19
டின்னர் முடிந்ததும் ஜிஎம் கிளம்பிவிட மற்றவர்களும் விடைபெற்று கிளம்பத் தொடங்கினர்.
சுஷ்மிதா அடிக்கடி ஐஸ்வர்யாவைத் திரும்பி முறைத்துக் கொண்டிருக்க அவளை நோக்கி இகழ்ச்சியாய் சிரித்த ஐஷு ரகுவின் கையை விடாமல் பற்றிக் கொண்டாள். அவளது நெருக்கம் உணர்ந்த ரகுவின் மனம் குத்தாட்டம் போட அவனும் அவள் கரத்தை விடாமல் பிடித்துக் கொண்டான்.
அருகில் நின்றவனை ஆசையுடன் நோக்கிய ஐஷுவின் மனதில், “என் ரகுக்கு இத்தனை பான்ஸ் இருக்காங்களா… அதுவும் ஒருத்தி உருகி உருகிக் காதலிச்சும் என்னை மட்டுமே நினைச்சிட்டு இருந்திருக்கானே… உண்மைலயே ரகு ரொம்ப கிரேட்… ச்சே… இவன் அருமை தெரியாம இத்தனை நாளா எப்படில்லாம் கழுவிக் கழுவி ஊத்திருப்பேன்… இவனுக்குள்ள என்னமோ ஒரு மாஜிக் இருக்கு…” யோசித்தவள் அவன் கையை இறுக்கிக் கொண்டாள்.
அவளை நோக்கி மென்மையாய் புன்னகைத்த ரகு, “என்ன ஐஷு, வீட்டுக்குக் கிளம்பணுமா…” என்று மெல்லக் கேட்க பதில் சொல்லாமல் புன்னகைக்க மட்டுமே செய்தாள்.
நண்பர்கள் சுற்றிலும் நின்று பேசிக் கொண்டிருக்க “ஓகே கைஸ், நாளைக்கு ஆபீஸ்ல மீட் பண்ணலாம்… நாங்க கிளம்பறோம்…” ரகு சொல்லிக் கொண்டிருக்க அவர்களைப் பார்த்துக் கொண்டே வந்தாள் சுஷ்மிதா.
“என்ன ரகு… உன் பொண்டாட்டி கைய விட்டா எங்காச்சும் தொலைஞ்சு போயிடுவாளா… இப்படி இறுக்கிப் பிடிச்சு வச்சிருக்கே…” என்று கேட்கவும் ஐஷுவின் முகம் மாறியது.
“இல்ல, நாங்க கிளம்பறோம்… ஓகே பை, சுஷ்மி…” ரகு அவளிடம் சொல்ல, “ஒரு நிமிஷம் ரகு… உன்கிட்ட ஒண்ணு கொடுக்கணும்…” எனவும், அவன் புரியாமல் அவளை நோக்க அவனை நெருங்கியவள் சட்டென்று அவன் கன்னத்தில் முத்தமிட சுற்றியிருந்த அனைவரும் அதிர்ச்சியுடன் நோக்கிக் கொண்டிருந்தனர்.
அவள் செயலை எதிர்பார்க்காத ரகு திகைத்துப் போய் நிற்க அடுத்த நொடியில் ஐஷுவின் கரம் அவன் கையை உதறிவிட்டு சுஷ்மியின் கன்னத்தில் பதிந்திருந்தது. அனைவருக்கும் அதிர்ச்சி கொடுத்த சுஷ்மியின் கண்கள் நிலை குத்தி நிற்க கைகள் கன்னத்தைத் தடவியது.
“இடியட்… அடுத்தவ புருஷனுக்கு அலையறத விட்டுட்டு உனக்குன்னு ஒருத்தன் பொறந்திருப்பான்… அவனைத் தேடிக்க…” சொன்னவள் அடுத்த நிமிடம் ரகுவின் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு வெளியேற அனைவரும் வியப்புடன் பார்த்து நின்றனர்.
“ச்சே… உன்கிட்ட இதை எதிர்பார்க்கலை சுஷ்மி… ரகு அவ்ளோ சொல்லியும் உன்னை விட்டு விலகி நின்னும் அவன் ஒயிப் முன்னாடி இப்படிப் பண்ணிட்டியே…” என்று ஆளாளுக்கு அவளைக் குற்றம் சொல்லிவிட்டு கேவலமாய் நோக்க, ஐஷுவை வெறுப்பேற்றுவதற்காய் தான் யோசிக்காமல் செய்த முட்டாள் செயலில் வெட்கி தலை குனிந்தவள் அங்கு நிற்காமல் கிளம்பினாள்.
பைக் வெளிச்சம் இருட்டைத் துரத்த காற்றைக் கிழித்துக் கொண்டு ரகுவின் பைக் வீட்டை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. அவன் பின்னில் ஐஷு மௌனமாய் அமர்ந்திருக்க முகமே அவளது கோபத்தை உணர்த்தியதால் அவனும் எதுவும் பேசவில்லை.
சுஷ்மியின் செயலை நினைத்து மனம் வருந்தினாலும் அந்தப் பொறாமை உணர்வே ஐஷுவின் மனதிலுள்ள நேசத்தை வெளிக்கொண்டு வந்திருக்கிறது எனப் புரிந்து கொண்டான். அவளது கோபம் தன் மீதுள்ள உரிமையால் வந்தது என்பதை உணர்ந்து மனம் குதூகலித்தது.
இன்று ஐஷுவிடம் தெரிந்த மாற்றத்தால் மனம் திறந்து பேசி விட வேண்டுமென்று ஆவலுடன் காத்திருந்தவனுக்கு இறுதியில் கிளம்பும் நேரத்தில் சுஷ்மிதாவின் செயல் இடியாய் இறங்க, இப்போது இவள் மீண்டும் வேதாளம் முருங்கை மரம் ஏறிய கதையாய் முகத்தைத் தூக்கிக் கொண்டு அமர்ந்திருக்க எப்படி மலையிறக்குவது எனப் புரியாமல் யோசித்துக் கொண்டிருந்தான்.
வீட்டை விட்டுக் கிளம்பும்போது இருந்த உற்சாகமும் அங்கு ஐஷுவின் கண்ணில் தெரிந்த நேசத்தில் உணர்ந்த சந்தோஷமும் இப்போது காணாமல் போயிருந்தது. “இவள் இதை வைத்து என்னை தப்பாய் நினைப்பாளோ… என்னைப் பிடிக்கவில்லை என்று காரணம் சொல்லிக் கொண்டிருந்தவள் இதைக் காரணமாய் பிடித்து தொங்குவாளோ…” என யோசித்து திகிலானவன், “பிள்ளையாரப்பா… நீதான் எனக்குத் துணை இருக்கணும்…” என வேண்டிக் கொண்டான்.
அபார்ட்மென்ட் வரை மௌனமே தொடர கேட்டுக்குள் நுழைந்து பைக்கை பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு இருவரும் இறங்கி லிப்டுக்கு சென்றனர். தன்னை நிமிர்ந்து கூடப் பார்க்காமல் பாறாங்கல்லாய் முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டிருந்தவளைப் பரிதாபமாய் பார்த்தான் ரகுவரன்.
அவள் முகம் கோபத்தில் கடுகடுவென்று கனன்று கொண்டிருக்க என்ன யோசிக்கிறாள் என்பது புரியாமல் குழம்பிக் கொண்டு அவளையே பார்த்து நின்றான் ரகு.
வீட்டுக் கதவைத் திறந்து சுவிட்சைத் தேய்க்க சுவர் கடிகார முள் பத்தை நெருங்கிக் கொண்டிருப்பதைக் காட்டியது. அவள் வேகமாய் தனது அறைக்குள் நுழைந்து கொள்ள இப்போது எதுவும் பேசலாமா, இல்லை நாளை பேசிக் கொள்ளலாமா என தயங்கி நின்றவன் அவளாகவே பேசட்டும் என நினைத்து தனது அறைக்குள் நுழைந்தான்.
குளியல் முடித்து உடை மாற்றியவன் ஹாலுக்கு வந்து பார்க்க ஐஷுவின் அறை சாத்தியே இருந்தது. மனசு கேட்காமல் அவள் அறைக் கதவைத் தட்டியவன், “ஐஷு, பால் சூடாக்கித் தரட்டுமா… குடிக்கறியா…” என்று கேட்க, எந்த பதிலும் இல்லை.
அவளை நினைத்து மனம் வேதனையில் தவிக்க அறைக்கு சென்றவன் கட்டிலில் விழுந்தான். அலைபேசியில் இருந்த அவளது போட்டோவையே நோக்கிக் கொண்டிருந்தான். “ஐஷு மா, உனக்குள்ள நான் இருக்கேன்னு உன் பார்வை எனக்கு உணர்த்திடுச்சு… நீயும் சீக்கிரமே உணருவேன்னு நினைக்கறேன்…” என்றவன் உறங்க முயன்றான்.
கட்டிலில் உடையைக் கூட மாற்றாமல் அமர்ந்திருந்த ஐஷுவின் முகம் அழுதழுது வீங்கியிருந்தது. மனதை எத்தனை சமாதானப்படுத்த முயன்றும் முடியவில்லை.
“அவ எப்படி என் ரகுவுக்கு முத்தம் கொடுக்கலாம்… இன்னைக்கு வீட்டுக்கு வந்ததும் ரகுகிட்ட என் மனசை சொல்லி அவன் எதிர்பார்க்காத நேரத்துல முத்தம் கொடுத்து இன்ப அதிர்ச்சி கொடுக்கணும்னு நினைச்சிட்டு இருந்தேன்… அதுக்குள்ள அந்த மூதேவி முந்திகிட்டாளே… நான் இப்ப ரகுக்கு செகண்டரியா போயிட்டேனே…” என்று இல்லாத அர்த்தம் கண்டுபிடித்து மூக்கை சிந்திக் கொண்டிருந்தாள்.
“ஏய் ஐஷு, இவ்ளோ நாள் அவனை கருவாடு, கொத்தவரங்கா, ராகுகாலம்னு எல்லாம் கிண்டல் பண்ணிட்டு இப்ப என்ன கொஞ்சல் ஓவரா இருக்கு…” வழக்கம் போல கேள்வி கேட்ட மனசாட்சியை எரிச்சலுடன் நோக்கியவள், “என்ன இருந்தாலும் ரகு என்னுடையவன்… அவனை நான் ஆயிரம் சொல்லுவேன்… அதுக்காக என் புருஷன் இல்லேன்னு ஆயிடுமா…” என்று எதிர்கேள்வி கேட்டாள்.
அவள் கேள்வியைக் கேட்டு, “ஆஹா, இதென்ன புது திருப்பமா இருக்கு…” என்று மனசாட்சி திகைக்க அவள் தொடர்ந்தாள்.
“நான் வேண்டாம்னு சொல்லியும் வம்படியா கல்யாணம் பண்ணினானே… அவ்ளோ சீக்கிரம் அவனை சந்தோஷப்பட விட்டுடாம கொஞ்ச நாள் பழி வாங்கிட்டு அப்புறம் சமாதானமாப் போக நினைச்சிருந்தேன்… அதுக்குள்ள இந்த ஐஸ்வர்யாவுக்குப் போட்டியா அந்த சுஷ்மிதா வந்து நிப்பான்னு நான் என்ன கனவா கண்டேன்…” அவள் மனது புலம்பிக் கொண்டிருக்க உறங்கவும் முடியாமல் தவித்தாள்.
“இந்த ரகு என்னடான்னா அவளைப் பிடிக்காதுன்னு சொல்லிட்டு சுஷ்மின்னு கொஞ்சறான்… அந்தக் கொரங்கு கட்டின பொண்டாட்டி முன்னாடி முத்தம் கொடுக்கிறா… இவன் பளார்னு ஒரு அறை கொடுக்கறதை விட்டுட்டு அப்படியே திகைச்சுப் போயி நிக்கறான்… இதுக்கெல்லாம் என்ன அர்த்தம்… இவன் மனசுல அவ எங்கயோ ஒரு மூலைல இருக்கான்னு தானே அர்த்தம்…”
“ஓ… நீ என்னதான் சொல்ல வர்றே… உனக்கு இப்ப யார் மேல கடுப்பு…” என்றது மனசாட்சி.
“ப்ச்… எல்லார் மேலயும் தான் கடுப்பு… நான் இந்தக் கல்யாணம் வேண்டாம்னு சொல்லியும் சென்டிமென்ட்டா என்னை மிரட்டி ஓகே வாங்கின அப்பா மேல முதல் கடுப்பு… என் புருஷன் MGR மாதிரி தகதகன்னு கலரா இருந்தாலும் குணத்துல தகரம் மாதிரின்னு சொல்லி அழகு முக்கியமில்லைன்னு என் வாயை அடைச்ச கோமு மேல ரெண்டாவது கடுப்பு… ஒரு பொண்ணு மூஞ்சிக்கு நேரா உன்னைப் பிடிக்கலைன்னு சொல்லியும் என் வீட்டு ரோஜா முள் குத்தாதுன்னு டயலாக் பேசின மாப்பிள்ளைக் கருவாடு மேல மூணாவது கடுப்பு… எல்லாத்துக்கும் ஓகே சொல்லிட்டு இப்ப தனியா உக்கார்ந்து புலம்பற என்னை நினைச்சா கடுப்போ கடுப்பு… இதுல எதைச் சொல்ல…” அவள் சொன்னதைக் கேட்டு மனசாட்சி கெக்க பெக்கவென்று சிரிக்க அவளது கடுப்பு மேலும் அதிகமானது.
“இப்ப எதுக்கு இப்படி சிரிக்கற…”
“நீ இன்னும் குழந்தையாவே இருக்கியே பேபி… சிரிக்காம என்ன பண்ணுறது…”
“ம்ம்… என் கஷ்டம் உனக்கு சிரிப்பாப் போச்சுல்ல…” சுய கழிவிரக்கத்தில் கண்ணோரம் நீர்த்துளி எட்டிப் பார்த்தது.
“சரி அழாதே… உனக்கு ரகுவைப் பிடிச்சிருக்கா இல்லையா… உண்மைய சொல்லு…”
“முதல்ல பிடிக்காம தான் இருந்துச்சு… அப்புறம் கனவுல வந்தப்ப கொஞ்சம் பிடிச்சுது… அப்புறம் மருதாணி வச்சப்ப கொஞ்சம் பிடிச்சுது… என்னை ஒரு குழந்தை போல பார்த்துக்கிறதால கொஞ்சம் பிடிச்சுது… அந்த சுஷ்மி அவனை லவ் பண்ணறேன்னு சொல்லியும் நான் ஐஷுவ தான் லவ் பண்ணறேன்னு அவன் சொன்னது ரொம்பப் பிடிச்சுது…”
“ப்ச்… ஒரே வார்த்தைல சொல்லப் போறியா இல்லையா…”
“ம்ம்…” யோசித்தவள், “பிடிச்சிருக்கு…” என்றாள்.
“அதை ரகுகிட்ட சொல்லிடு… மேட்டர் ஓவர்…” என்றது மனசாட்சி.
“அச்சோ அதெப்படி, நான் அவனைப் பிடிக்கலைன்னு முதல்ல சொல்லிட்டேனே… இப்ப எப்படி மாத்தி சொல்லறது…” என்றாள் மறுப்புடன்.
“ஓ ஈகோ, அட கூறுகெட்ட குப்பாத்தா உனக்கு அவனைப் பிடிச்சுதுன்னா நீதான் சொல்லணும்… அப்படி வார்த்தையால சொல்லத் தயக்கமா இருந்தா செய்கையால சொல்லிடு…”
“செய்கையாலயா… அதெப்படி…” என்றவளைக் கண்டு தலையில் அடித்துக் கொண்டது மனசாட்சி.
“தத்தி, தத்தி… எல்லாம் நான் சொல்லித் தர வேண்டிருக்கு… அவன் எப்படில்லாம் உன் மேல அன்பு காட்டறான்… அது போல நீயும் திருப்பிக் காட்டு… உன் மனசுல உள்ளதை அவனே புரிஞ்சுப்பான்…” என்று மனசாட்சி கூறவும், சந்தோஷமாய் தலையாட்டியவள் படுத்துக் கொண்டாள்.
அவள் மனதில் முன்பு கோமு சொன்ன வார்த்தைகள் நினைவில் வந்தது.
“எந்த விதையும் இந்த இடத்துல தான் விழுந்து முளைப்பேன்னு சொல்லுறதில்லை… எங்க விழுகுதோ அங்கே செடியா, கொடியா, மரமா வளரத்தான் செய்யுது… அது போல தான் மனுஷ வாழ்க்கையும்… யாரும் விரும்பின போல வாழ்க்கை அமையறதில்லை… அமைஞ்ச வாழ்க்கைய விருப்பமுள்ளதா ஆக்கிக்கறது நம்ம கைல தான் இருக்கு…” அன்று அவர் சொன்னதன் அர்த்தம் இன்று முழுமையாய் அவளுக்குப் புரிந்து கொள்ள முடிந்தது.
இனி தன் சந்தோசம் தன் கையில் என்ற நிம்மதியுடன் உறங்கத் தொடங்கினாள் ஐஸ்வர்யா.
அடுத்தநாள் காலையில் அடுக்களையில் பாத்திரம் உருளும்  சத்தம் கேட்ட ரகு திடுக்கிட்டு வேகமாய் எழுந்தான். அடுக்களையில் லைட் எரிந்து கொண்டிருக்க ஐஷு தூக்கிக் கட்டிய கொண்டையுடன் எதையோ தேடிக் கொண்டிருந்தாள்.
வேகமாய் அவளிடம் வந்தவன், “என்னடா ஐஷு, பசிக்குதா… காபி போட்டுத் தரவா…” கனிவாய் கேட்க அவன் முகம் நோக்கத் தயங்கியவள், “ப்ச்… நானே போட்டுக்கறேன்…” என்று சொல்ல அவன் முகம் வாடியது.
“நான் போட்ட காபி கூட வேண்டாம்னு நினைக்குற அளவுக்கு என் மேல கோபமா ஐஷு…” என நினைத்தவன் வலியோடு விலகி நின்றான்.
பாத்திரத்தைத் தேடி எடுத்து பாலை ஊற்றி அடுப்பைப் பற்ற வைத்தவள் காபி போட கோமு சொல்லிக் கொடுத்ததை மனதுக்குள் யோசித்துக் கொண்டிருக்க வெகு நேரமாகியும் பால் பொங்காததால் குழப்பத்துடன் நோக்கி நின்றாள். அதை கவனித்த ரகு வேகமாய் வந்து சிலிண்டரை ஆன் செய்து, கீழ ஆப் ஆகி இருக்கு… இப்ப பத்த வை…” எனவும், “ச்சே… காலங்கார்த்தால அசிங்கப்பட்டியே… ஐஷு…” என நினைத்துக் கொண்டு பாலை நோக்கி நின்றாள். அது பொங்கத் தொடங்கும் நேரத்தில் சர்க்கரையைத் தேட அது கண் கட்டு வித்தை போல் பொங்கி வழிந்து அடுப்பை நனைத்தது.
“அச்சச்சோ…” என்று கையை உதறி அவள் தலையிலடித்துக் கொள்ள, அமைதியாய் விலகி நின்று பார்த்துக் கொண்டிருந்த ரகு வேகமாய் அவளிடம் வந்தான்.
“ஐஷு மா… இந்தப் பக்கம் வா… நான் காபி கலந்து தரேன்…”
“ஒண்ணும் வேண்டாம்… இன்னைக்கு நான் போட்ட காபி தான் நீங்க குடிக்கணும்…” என்றாள் அவள்.
ஒரு பாத்திரத்தில் இருவருக்கும் தேவையான அளவு காபிப் பவுடர், சர்க்கரை எல்லாம் பாத்திரத்தில் போட்டு பாலை ஊற்றியவள், சட்டென்று “அச்சோ… தண்ணி வைக்கலையே…” என்று மீண்டும் தண்ணியை அடுப்பில் வைக்கப் போக, “ஆஹா, இன்னைக்கு நான் வெறும் காபி குடிச்சிட்டு தான் ஆபீஸ் கிளம்பணும் போலருக்கே…” என நினைத்துக் கொண்ட ரகு, திகிலோடு பார்த்துக் கொண்டிருந்தான்.
ஒருவழியாய் காபி என்ற பெயரில் ஏதோ ஒன்றை கப்பில் கொண்டு வந்தவள் அவனிடம் நீட்ட, வாங்கிக் கொண்டான்.
“இன்னைக்கு காபி மட்டும் தான் என் பிரிபரேஷன்… நாளைக்கு வேற அயிட்டம் டிரை பண்ணறேன்… வழக்கம் போல சமையலை நீங்களே முடிச்சிடுங்க…” என்றவள் காபிக் கோப்பையுடன் அமர்ந்தாள்.
“குடிக்கலாமா, வேண்டாமா…” என்ற யோசனையுடன் அதை வாய்க்கு கொண்டு சென்றவன் திகைத்தான்.
காபி ஒன்றும் அத்தனை மோசமாயில்லை. அதுவும் அவள் முதன்முதலில் போட்ட காபி. அவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தவள் அதில் தெரிந்த புன்னகையைக் கண்டதும், “நான் பாசாகிட்டேனா…” என்று கேட்க அவன் இடவலமாய் தலையாட்டி கட்டை விரலை உயர்த்த,
“ஹே… நான் பாஸாகிட்டேன்…” என்று குதித்தவளைக் கண்டு அவனுக்கு சிரிப்பாய் வந்தது.
“ரகு, இனி நீ சமைக்கும்போது எனக்கும் சொல்லித் தரியா…  அடுத்த வாரம் மாமா, அத்தை எல்லாம் வீட்டுக்கு வராங்க… எனக்கு சமையல் தெரியலைன்னு நீ சமைச்சா என்ன நினைப்பாங்க…” அவள் கொஞ்சும் குரலில் கேட்க அவன் திகைப்புடன் நோக்கினான். முன்தினம் நடந்த விஷயத்திற்கு அவள் கோபத்தை எதிர்பார்த்தவன் இந்த மாற்றத்தை சத்தியமாய் எதிர்பார்க்கவே இல்லை.
“கடவுளே… இங்க என்ன நடக்குது… நான் இன்னும் தூங்கிட்டு இருக்கேனா… இதெல்லாம் கனவா…” என்பது போல் நம்ப முடியாமல் பார்த்திருந்தவனை நோக்கி புருவத்தைத் தூக்கி, விழிகளை அகல விரித்து “என்ன ஓகே வா…” என்று கேட்க பலமாய் தலையாட்டினான். ஆக, ரகுவின் சமையல் களம் அதகளமாகப் போகிறது.
உன் இமைச் சிப்பியில்
முத்துப் புன்னகை
ஒளிரும் போதெல்லாம்
எனக்கான முத்தங்கள்
மலரும் சத்தம் கேட்கிறது…

Advertisement