Advertisement

அத்தியாயம் – 18
ஞாயிற்றுக் கிழமை, காலை.
பூங்காவில் வேர்க்க விறுவிறுக்க வேகமாய் நடைபயிற்சி செய்து கொண்டிருந்தார் டானியல். அவருக்குப் பின்னால் மெல்ல நடந்து வந்த ஜெஸ்சி, “ப்ச்… போதும் டானி… இதுக்கு மேல என்னால நடக்க முடியாது…” என்றார் நடந்ததில் மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க.
“ஜெஸ்சி டார்லிங், அப்படில்லாம் சொல்லக் கூடாது… உனக்கு இப்ப சுகர் லெவல் இன்க்ரீஸ் ஆயிருக்குன்னு டாக்டர் சொன்னதை மறந்துட்டியா… வாக்கிங் சுகருக்கு பெஸ்ட் மருந்துன்னு நீதானே என்கிட்டே சொல்லுவே…”
“சொல்லுவேன்… ஆனா நடக்கும்போது முடியலையே…”
“இன்னும் ஒரே ஒரு ரவுண்ட்… கம் ஆன் டியர்…” என்றார் கல் மேடையில் அமர்ந்திருந்த துணைவியிடம்.
அவர்களைப் பார்த்துக் கொண்டே ஜாகிங் டிரஸ்சில் அங்கு வந்து சேர்ந்தான் ரகுவரன்.
“குட்மார்னிங் அங்கிள், ஆன்ட்டிக்கு நடக்க முடியலையா…”
“ம்ம்… கிழவியாகிட்டா… அதான் ஒரு ரவுண்டுக்கே ரெஸ்ட்…” என்றவர் சிரிக்க ஜெஸ்சி முறைத்தார்.
“ஓ, நான் கிழவின்னா நீங்க சின்னப் பையனாக்கும்…”
“பின்ன… என்னைப் பாரு, எப்படி எனர்ஜியா இருக்கேன்… நீதான் அங்கங்கே உக்கார்ந்துக்கற… எழுந்து நட டார்லிங்…”
“ம்ம்… சரி…” என்று எழுந்தவர், “என்னப்பா ரகு… நேத்து நைட் வீட்டுக்கு வர லேட் ஆகிருச்சா…”
“ஆமா ஆன்ட்டி, நாங்க வரும்போது உங்க வீட்ல லைட் இல்லை. சரி, தூங்கிட்டீங்கன்னு நினைச்சேன்…”
“ம்ம்… ஐஷு ஹாப்பியா…” என்றார் அவர் புன்னகையுடன்.
“செம ஹாப்பி ஆன்ட்டி…” என்றான் புன்னகையுடன்.
“இன்னைக்கும் அவுட்டிங்கா…” சிரிப்புடன் கேட்டவரிடம் மறுப்பாய் தலையாட்டியவன், “ஹாஹா… இன்னும் பிளான் பண்ணல ஆன்ட்டி…” சொல்லிக் கொண்டே ஓடத் தொடங்க அவர்களும் நடக்கத் தொடங்கினர். வேர்க்க விறுவிறுக்க ஜாகிங் முடித்து வீட்டுக்குத் திரும்பியவன் பிரிட்ஜிலிருந்து பால் பாக்கெட்டை எடுத்து காபி கலக்க சென்றான்.
மனதில் இனம் பிரியா ஒரு உணர்வு உற்சாகத்தைக் கொடுக்க நேற்று முதல் ஐஷுவின் முகத்தில் தெரிந்த பாவ மாற்றமும், அவனிடம் பேசும்போது அவளறியாமல் வெளிப்பட்ட சிறு இணக்கமும் சந்தோஷத்தைக் கொடுத்தது.
காபி கலக்கி பிளாஸ்கில் ஊற்றி வைத்துவிட்டு தனது அறைக்கு சென்றான். சிறிது நேரத்தில் குளித்து உடை மாற்றி வந்தவன் காபியை கோப்பையில் எடுத்துக் கொண்டு சோபாவுக்கு வந்தான். அலைபேசியில் வருண் அழைக்க எடுத்து பேசிக்கொண்டிருந்தவன் முகம் மலர்ந்தது.
அப்போது உறக்கம் முடிந்து எழுந்து வந்த ஐஷுவைக் கண்டதும் புன்னகைத்து நண்பனிடம் பேசி முடித்தவன் அவளிடம் சந்தோஷமாய் திரும்பினான்.
“ஐஷு… ஆபீஸ்ல இருந்து வருண் கால் பண்ணான்… எங்க புரோஜக்ட் ஒண்ணு ஓகே ஆனதுக்கு ஈவனிங் பார்ட்டி அரேன்ச் பண்ணி இருக்காங்களாம்… ஸ்டாப்ஸ் எல்லாரையும் பாமிலியோட வர சொல்லி மெயில் பண்ணிருக்காங்க…”
“ப்ச்… நானும் வரணுமா…” என்றாள் சோர்வுடன்.
“ம்ம்… வந்தா என்னோட கலீக்சை மீட் பண்ணலாம்… நல்லா ஜாலியா இருக்கும்… அதுவும் ECR பீச் ரிசார்ட்… உனக்கு தான் பீச் ரொம்பப் பிடிக்குமே…” என்றான் ஆர்வத்துடன்.
“ம்ம்… ஓகே…” அவள் பெரிய மனதோடு சம்மதம் சொல்லவே அவனுக்கு உற்சாகமாய் இருந்தது. “சரி காபி எடுத்துக்க ஐஷு…” என்றவன் அலைபேசியுடன் நகர அவள் “ஈவனிங் எந்த டிரஸ் போடலாம்…” என்று சிந்திக்கத் தொடங்கினாள்.
ECR நெடுஞ்சாலையில் சிக்னலைக் கடந்து ரிசார்ட் நோக்கிப் பறந்து கொண்டிருந்தது ரகுவின் பைக். சிலுசிலுவென்ற காற்று சுகமாய் தேகம் உரச அவன் பின்னில் உரசியும் உரசாமலும் இருபக்கமும் காலிட்டு அமர்ந்திருந்த ஐஷு வேடிக்கை பார்த்துக் கொண்டு வந்தாள்.
அவள் அணிந்திருந்த கருப்பில் வெள்ளி டிசைன்ஸ் செய்யப்பட்டிருந்த குர்தியும் ஜீன்சும் அவளுக்கு மிகப் பொருத்தமாய் இருந்தது. ரகு ஜீன்ஸ், டீஷர்ட் அணிந்து கண்ணுக்குக் கூலர் கொடுத்திருக்க அவளை அறியாமல் கண்கள் அவனை ரசிப்பதை உணர்ந்து தன்னைத் தானே குட்டிக் கொண்டாள் ஐஷு. அவன் முதுகை ஒட்டி அமர்ந்திருந்ததால் காற்றில் கலந்திருந்த அவனது வாசம் அவளை உரசிச் செல்கையில் சுகமாய் உணர்ந்தாள். சிறிது நேரப் பயணத்தில் பைக் ஒரு பெரிய கேட்டுக்குள் நுழைய அந்த சூழலைக் கண்டவள் வியப்புடன் விழி விரித்தாள்.
சென்னையில் இப்படி ஒரு இடமா… பசுமையான பூக்களும் செடி கொடிகளுமாய் குளுமையுடன் காணுமிடமெல்லாம் கண்ணுக்கு இதமாய் இருந்தது. கேரளா டைப் விடுதிகளும் நீச்சல் குளமுமாய் அந்த இடமே ரம்மியமாய் இருந்தது. ஆவலுடன் பார்த்துக் கொண்டு வந்தவளிடம், “ஐஷு, எப்படி இருக்கு… இந்த இடம் ரொம்ப அழகாருக்கில்ல…” கேட்டுக் கொண்டே பார்ட்டி ஹாலை நோக்கி நடந்தான் ரகு.
“ம்ம்… சூப்பரா இருக்கு…” என்றவள் மேலே பார்த்துக் கொண்டே நடந்ததில் கால் இடற ரகு பிடித்துக் கொண்டான். ரிசார்ட்டுக்குள் ஒவ்வொரு இடத்துக்கும் செல்ல வண்டி இருந்தது. அதை வேண்டாமென்று கூறிவிட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டே நடந்தனர்.
உள்ளேயே பார்க், பீச் வியூ என்று குட்டி சொர்க்கமாய் இருந்த இடத்தை ஆவலாய் பார்த்துக் கொண்டே நடந்த ஐஷுவின் கைகள் கீழே விழுந்து விடாமலிருக்க இயல்பாய் ரகுவின் கையைப் பற்றியிருக்க அவள் அதை உணரவில்லை. ஆனால் மெத்தென்ற ரோஜாக்கையை தன் கைக்குள் வைத்திருந்த ரகு அதை உணர்ந்து ரசித்துக் கொண்டிருந்தான்.
பெரிய ரெஸ்டாரன்ட் உள்ளே குட்டி குட்டி வட்ட மேசைகள் போட்டு அதைச் சுற்றிலும் நாற்காலிகள் போடப்பட்டிருக்க மின்னிக் கொண்டிருந்த வண்ண விளக்குகள் அந்த இடத்தை சொர்கமாக்கிக் கொண்டிருந்தது.
முன்னமே வந்திருந்த நண்பர்கள் சிலர் ரகுவைக் கண்டதும் ஹாய் சொல்லி வரவேற்றனர். தங்கள் துணைகளை ஐஸ்வர்யாவுக்குப் பரிச்சயப்படுத்தினர். அவர்கள் அவளைப் பற்றி பொதுவான விஷயங்களைக் கேட்டுக் கொண்டிருக்க ஜீன்ஸ் ஸ்லீவ்லஸ் டாப்சுடன் மாடர்ன் மங்கையாய் ஒரு பெண் உள்ளே நுழைந்தாள்.
இவர்களைக் கண்டதும் “ஹலோ பிரண்ட்ஸ்…” என்று அருகில் வந்தவள் ரகுவை ஆவலுடன் நோக்க அவன் கண்டு கொள்ளாமல் நண்பனிடம் ஏதோ பேசிக் கொண்டிருந்தான்.
“ஹாய் ரகு…” வலிய சென்று அவன் முதுகில் மெல்லத் தட்டியவள் ஐஷுவை தலை முதல் கண்களால் அளக்க அந்தக் கண்களில் அசூயை நிறைந்திருந்தது.
புன்னகையுடன் அவளிடம் திரும்பிய ரகு, “வா சுஷ்மி, மீட் மை ஒயிப் ஐஸ்வர்யா… ஐஷு, இது சுஷ்மிதா… என்னோட கலீக்…” என்று அறிமுகப்படுத்த ஐஷுவுக்கு அவளது அழகை மிகைப்படுத்தும் தோற்றமும் தன்னை ஆராய்ச்சி செய்த பார்வையும் முதல் பார்வையிலேயே பிடிக்காமல் போனது.
“ஹோ, இந்த உலக அழகிக்கு வேண்டி தான் என்னை ரிஜக்ட் பண்ணியா…” பொறாமையுடன் வார்த்தையை விட்டாள் சுஷ்மிதா. அதைக் கேட்டதும் ஐஷுவின் முகத்தில் ஒரு அதிர்ச்சி பரவ அதைக் கண்டு கொண்ட ரகு சமாளித்தான்.
“சுஷ்மி, என்ன இது… இங்க வந்து இப்படிப் பேசிட்டு இருக்க… என் மனசுல உள்ளது தான் எல்லாருக்கும் தெரியுமே… ப்ளீஸ், இப்ப அந்தப் பேச்சு வேண்டாமே…” என்றான்.
“ஹூம்… எப்படியோ என் ரகுவை என்கிட்ட இருந்து கொத்திட்டு போயிட்ட… எனக்கு கொடுத்து வச்சது அவ்ளோ தான்…” என்றவள் புலம்பலுடன் அங்கிருந்து நகர ஐஷுவின் முகத்தில் அனலடித்தது.
“ஐஷு… நீ எதுவும் தப்பா நினைச்சுக்காத… அவ ஏதோ உளறிட்டு இருக்கா…” என்றவன் நண்பர்களுடன் பேசத் தொடங்க அவள் மனதில் உறுத்திக் கொண்டே இருந்தது.
“ஐஷு வா, நம்ம பிரண்ட்ஸ்க்கு எல்லாம் உன்னை இன்ட்ரோ பண்ணி வைக்கிறேன்…” என்று ரகுவின் நண்பன் மனைவி பத்மா அவளை அழைத்துச் சென்றாள். பெண்கள் ஒரு கூட்டமாய் சேர்ந்து கொள்ள கணவரைப் பற்றிய குறைகளும் வீட்டு நிலவரங்களும் அங்கு அலசப்பட்டது. அந்த சுஷ்மி அடிக்கடி இவளைத் திரும்பிப் பார்த்துக் கொண்டே அவள் நண்பர்களிடம் பேசிக் கொண்டிருந்தாள்.
இவள் யோசனையுடனே இருப்பதைக் கண்ட பத்மா, “என்ன ஐஷு, சுஷ்மி சொன்னதைக் கேட்டு பீல் ஆகிட்டியா… அவ இப்படிதான்… நீ ஒண்ணும் தப்பா எடுத்துக்காத… ரகு ரொம்ப நல்ல டைப்…” என்றாள்.
“ம்ம்… ரகுவை எனக்குத் தெரியும்… அந்தப் பொண்ணு உண்மையாவே ரகுவை லவ் பண்ணுச்சா…” என்றாள்.
“ஆமா, ரகுவை எங்க எல்லாருக்கும் ரொம்பப் பிடிக்கும்… அவன் லேடீஸ் கிட்ட ரொம்ப டீசன்டா பிரண்ட்லியா இருப்பான்… என்ன ஹெல்ப் வேணும்னாலும் அவனை தான் கேப்போம்… இந்த சுஷ்மிக்கு அவன் மேல ரொம்பப் பிரியம்… அவன் பின்னாடியே சுத்திட்டு இருந்தவ ஒரு நாள் லவ் பண்ணறேன்னு சொல்லிட்டா…” ரகுவுடன் பணி புரியும் வர்ஷினி நடந்ததை சொல்லிக் கொண்டிருக்க ஐஷு ஆவலுடன் கேட்டுக் கொண்டிருந்தாள்.
“அதைக் கேட்டதும் ரகு ரொம்ப ஷாக்காயிட்டான்… அவன் எப்பவும் உன்னைப் பத்திதான் சொல்லிட்டு இருப்பான்… என் ஐஷு இப்ப எங்கே எப்படி இருக்காளோன்னு தெரியல… ஆனா கூடிய சீக்கிரமே அவளைப் பார்க்கப் போறோம்னு என் மனசு சொல்லுதுன்னு எங்ககிட்ட சொல்லுவான்… குழந்தையா இருக்கும்போது புரியாம மனசுல தோணின நேசம் உன்னையே நினைச்சிட்டு இருந்ததுல காதல் மரமா ஆழமா வளர்ந்திருக்குன்னு எங்களுக்குப் புரிஞ்சது… நாங்க எல்லாம் உன் பேரை சொல்லி தான் அவனை ஓட்டிட்டு இருப்போம்… அப்படி இருக்கும்போது சுஷ்மி இப்படி சொன்னது ரகுக்கு ரொம்ப வருத்தமா போயிருச்சு… அவன் மனசுல உள்ளதை சொன்னதுக்கு எங்கேயோ கண் முன்னாடி இல்லாத ஐஸ்வர்யா மேல இவ்ளோ காதல் வச்சிருக்கே… உன் கண் முன்னாடி நிக்கற என் காதல் உனக்குப் புரியாதான்னு இவ கெஞ்சினா…”
“என் மனசுல உன் மேல அப்படி எந்த எண்ணமும் இல்லை… நீயும் உன் எண்ணத்தை மனசுல இருந்து அழிச்சிடு… ஐஷுவை நான் பார்க்கலைன்னாலும் அவ என் மனசுல தான் இருக்கா… அவளோட நான் எப்பவோ வாழத் தொடங்கிட்டேன்னு ரகு சொல்லிட்டான்… அதுக்கப்புறம் இவ வேற பிராஞ்சுக்கு மாத்தல் வாங்கிட்டுப் போயிட்டா… இப்படி எங்கயாச்சும் ரகுவைப் பார்க்கும்போது மனசுல உள்ள ஆதங்கத்தைக் கொட்டுவா… ரகு போல ஒரு புருஷன் கிடைக்க நீ உண்மைலயே ரொம்ப கொடுத்து வச்சிருக்கணும் ஐஷு… கண்ணு முன்னாடி காதலிச்சவ இருக்கும்போது போன்ல இன்னொருத்தி கூட கடலை போடுற ஆண்கள் எத்தனையோ பேர் இருக்காங்க… ஆனா, ரகுவோட மனசுல எப்பவும் நீ மட்டும் தான் இருக்க…” என்ற வர்ஷினி, உள்ளே நுழைந்த ஒருவரைக் கண்டதும் “நம்ம ஜிஎம் வந்துட்டார்… நீங்க பேசிட்டு இருங்க…” என்று நகர்ந்தாள்.
சிறிது நேரத்தில் பார்ட்டி களைகட்டத் தொடங்க ஹாலின் ஒருபுறம் கூல், ஹாட் டிரிங்க்ஸ் சப்ளையும் இருந்தது.  ஆண்கள் அங்கங்கே நண்பர்களுடன் செட்டிலாகிவிட ரகு மட்டும் அடிக்கடி ஐஷுவிடம் வந்து கூல் டிரிங்க்ஸ் கொடுத்து, விசாரித்துச் சென்றான்.
சட்டென்று மைக்கில் அனவுன்ஸ் வர, ஜிஎம் சசிதரனின் குரல் கம்பீரமாய் ஒலித்து அனைவரையும் வரவேற்று, புரோஜக்ட் நல்லபடியாய் முடிய ஒத்துழைப்புக் கொடுத்த நண்பர்களுக்கு நன்றி தெரிவித்து, பார்ட்டியை சந்தோஷமாய் என்ஜாய் பண்ணுமாறு கூறி அடுத்து நடக்கும் நடன நிகழ்ச்சியில் சிறப்பாய் ஆடும் ஜோடிக்கு ஒரு பரிசு காத்திருப்பதாகக் கூறி அமர்ந்தார்.
அடுத்து இதமாய் ஒலித்துக் கொண்டிருந்த இசை சட்டென்று டிராக் மாறி அதிரடியாய் மேற்கத்திய இசை முழங்க ஆண்கள் உற்சாகத்துடன் ஆட்டம் போடத் தொடங்கினர். சிலர் தங்கள் துணைகளை அழைத்துக் கொள்ள மற்ற பெண்களும் இணைந்து கொள்ள நடன நிகழ்ச்சி சூடு பிடித்தது. அதில் சுஷ்மியும் தோழியருடன் ஆடிக் கொண்டிருந்தாள். லேசாய் ஒயின் அருந்தி இருந்தாள்.
ரகு ஐஷுவின் அருகில் நின்று புன்னகையுடன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். “ஐஷு, நீங்களும் வாங்க…” கணவனுடன் ஆடிக் கொண்டிருந்த பத்மா அழைக்க ரகு ஆவலுடன் மனைவியின் முகம் பார்த்தான்.
“இல்ல, நீங்க கண்டின்யூ பண்ணுங்க…” ஐஷு சொல்லவும் ரகுவும் செல்லாமல் மறுத்துவிட்டான்.
அதை கவனித்த வருண், “மச்சான், வாடா… நீதான் சூப்பரா ஆடுவியே… சிஸ்டர், நீங்களும் வாங்க…” என்றான். “இல்ல, நீங்க கலக்குங்க…” என்றவள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க சட்டென்று ரகுவின் அருகில் வந்த சுஷ்மி, அவன் கையைப் பிடித்து இழுத்தாள். “கமான் ரகு… டான்ஸ் வித் மீ…” என்று அழைக்க, ரகு நாசூக்காய் மறுக்க ஐஷு முறைத்துக் கொண்டிருந்தாள்.
“ப்ளீஸ் ரகு… ஜோடியா வாழத்தான் மறுத்துட்ட… டான்ஸ் ஆச்சும் ஆட வாயேன்…” என்றாள் கெஞ்சும் குரலில். சிலர் அவர்களை வேடிக்கை பார்க்க ரகு பாவமாய் முழித்தான்.
அவன் தயக்கமாய் ஐஷுவைப் பார்க்க சுஷ்மிதாவோ அவன் கையை இறுகப் பிடித்து இழுத்துக் கொண்டிருந்தாள்.
“ம்ம்… வா ரகு… டான்ஸ் ஆடத்தானே கூப்பிடறா…” என்று மற்றவர்களும் சொல்ல அவன் சுஷ்மிதாவின் கை பிடித்து ஆடத் தொடங்கினான்.
ஐஷுவைக் கிண்டலாய் ஒரு பார்வை பார்த்துவிட்டு ரகுவின் கரம் கோர்த்து பாட்டுக்கேற்ப வளைந்து நெளிந்து ஆடத் தொடங்கினாள் சுஷ்மிதா.
கோபத்தில் ஐஷுவின் அட்ரினல் சுரப்பி அதிகமாய் சுரந்து ரத்த அழுத்தத்தைக் கூட்ட மூச்சுக் குழாய் விரிவடைந்து பெரிய பெரிய மூச்சுகளை எடுத்து கோபத்தை அடக்கிக் கொண்டாள். சட்டென்று அவள் எழுந்திருக்கவும் சுஷ்மியின் கையை உதறிவிட்டு ஓடி வந்தான் ரகு.
“என்ன ஐஷு, ஏதாச்சும் வேணுமா…” பதட்டமாய் கேட்டவனின் முகத்தை நோக்கியவள் கையை நீட்ட, அது டான்சுக்கான அழைப்பு எனப் புரிந்து கொண்ட ரகுவின் மனம் உற்சாகத்தில் துள்ளிக் குதித்தது.
ஆவலுடன் அவள் கையைப் பற்றியவன் அவளுடன் இணைந்து ஆடத் தொடங்க முதலில் தடுமாறியவள் சமாளித்துக் கொண்டு அவனுக்கு ஈடு கொடுத்து ஆடினாள்.
அவனது கைகள் சிலநேரம் இடுப்பிலும் சில நேரம் தோளிலும் சில நேரம் கழுத்திலுமாய் அவள் அங்கத்தை உரசிச் செல்ல புதுவிட அனுபவத்தை உணர்ந்தாள்.
அவர்கள் ஆடுவதை அசூயையுடன் பார்த்துக் கொண்டிருந்த சுஷ்மியின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க அவளை கேலியாய் நோக்கிக் கொண்டு வேண்டுமென்றே ரகுவுடன் அதிகமாய் இழைந்து ஆடினாள். இவன் என்னவன் என்ற செய்தியை அவளுக்கு உணர்த்துவது போல இருந்தது அவளுடைய செய்கை ஒவ்வொன்றும். ஒருவழியாய் டான்ஸ் முடிய அனைவரும் அவர்களைப் பாராட்டினர்.
“ரெண்டு பேரும் சான்சே இல்ல… ரொம்ப அழகா ஆடினீங்க…” நண்பர்கள் மனம் விட்டுப் பாராட்டினர்.
“இந்த டான்ஸ் நிகழ்ச்சியில் தன் இணையோடு சேர்ந்து மிகவும் அழகாய் ஆடிய ரகு தம்பதியருக்கு அழகான மொபைல் பரிசளிக்கப்படுகிறது… இனி எல்லாரும் டின்னர் சாப்பிட்டுக் கிளம்பலாம்…” மைக்கில் ஜிஎம் அறிவித்தார்.
ரகுவும், ஐஷுவும் அவரிடம் பரிசைப் பெற்றுக் கொள்ள இருவரையும் வாழ்த்தியவர், “ரெண்டு பேரும் ரொம்ப நல்லா புரிதலோட ஆடினீங்க… ஆல் தி பெஸ்ட்…” எனவும் அனைவரும் கை தட்டி சந்தோஷத்தைத் தெரிவித்தனர்.
அடுத்து பபே முறையில் டின்னர் தொடங்கவும் அவர்களுக்கு வேண்டிய உணவுகளை தட்டில் வாங்கிக் கொண்டு சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். முதலில் சாப்பிட்டு முடித்த ஐஷு கை கழுவ சற்றுத் தள்ளி ஒதுக்கமாய் இருந்த வாஷ்பேசினை நோக்கிச் செல்ல அங்கு இருந்த சுஷ்மிதா இதழை சுளித்துக் கொண்டு வெறுப்புடன் நோக்கினாள்.
“என்ன, ரகுவை எங்கிட்ட இருந்து தட்டிப் பறிச்சிட்ட திமிர்ல ஆடறியா…” கோபமாய் கேட்டவளை நோக்கிப் புன்னகைத்த ஐஷு, “இல்ல… ரகு எனக்கு மட்டுமே சொந்தமானவன்கிற திமிர்ல தான் ஆடினேன்…” தெளிவாய் ஒலித்த தன் வார்த்தைகள் கேட்டு அவளுக்கே சந்தோஷமாய் இருந்தது. அவள் மனதில் வந்த மாற்றத்தை அவளால் உணர முடிந்தது. ரகு என்னவன் என்ற நினைப்பே தித்திக்க மனதில் நிறைவாய் உணர்ந்தாள். ஆனால் அந்த சந்தோஷத்தைப் போக்குவதற்காகவே தரமாய் அடுத்த சம்பவம் நடந்தது.
இன்னவென்று தெரியா
உனைத் தேடி அலைந்திருந்தேன்…
எனக்குள் தான் நீயிருந்தாய்
கண்டு கொண்டேன் இந்நொடியில்…
இணையாக வந்தவனே…
எனை இசையாக இசைத்தாயே…
உனக்குள் என்னை நேசித்தேன்…
இன்று புதிதாய் சுவாசித்தேன்…
என் ஓருயிரில் கலந்திட்ட
ஆருயிர் நீயெனக் கண்டு கொண்டேன்…

Advertisement