Advertisement

அத்தியாயம் – 17
அவன் பின்னில் சென்றவள் கண்ணில் கையிலிருந்த மருதாணி உறுத்த, “அச்சோ மருதாணிக் கையால எப்படி சப்பாத்தி தேய்க்க முடியும்…” யோசித்து அப்படியே நின்றாள்.
அதே யோசனையுடன் திரும்பிய ரகு, “ஐஷு, நீதான் கைல மருதாணி வச்சிருக்கியே… எப்படி சப்பாத்தி தேக்க முடியும்… நீ சொல்லவும் நானும் யோசிக்காம ஓகே சொல்லிட்டேன்… நீ இரு… நான் பார்த்துக்கறேன்…” என்றான்.
“இல்ல, இதை நான் இப்பவே கழுவிட்டு வந்திடறேன்…” என்று நகரப் போனவளைக் கை நீட்டித் தடுத்தவன்,
“வேண்டாம் ஐஷு… ஆசையா வச்ச மருதாணியை எடுக்க வேண்டாம்… அது தான் உனக்கு என் மேல உள்ள ஆசையை சொல்லப் போற அத்தாச்சி…” என்று காதல் ததும்பும் குரலில் சொல்ல அவள் “அய்யய்யோ… இது வேறயா…” என யோசித்தவள் முழித்தாள்.
“ஆஹா, ஆல்ரெடி கனவுல வந்து இம்சை பண்ணினான்… இப்ப என் கை மட்டும் சிவந்துச்சு… அதை வச்சு இவன் மேல நான் மயங்கிக் கிடக்கேன்னு எல்லாருமா என்னை ஓட்ட ஆரம்பிச்சிருவாங்களே… இதை இப்பவே எடுத்திடணும்…” என நினைத்தவள்,
“இல்ல, பரவால்ல… கழுவிடறேன்…” என்று அறைக்குள் செல்ல பின்னிலேயே வந்தவன் அவள் வலது கையைப் பற்றி, “ப்ளீஸ் ஐஷு… எனக்காக…” என்று சொல்ல அந்தக் கெஞ்சும் குரலும் முகமும் அவளை மறுக்க விடாமல் செய்ய அப்படியே நின்றாள்.
அந்த மௌனத்தை சம்மதமாய் எடுத்துக் கொண்டவன், “தேங்க்ஸ் ஐஷு… நீ உக்கார்ந்து டீவி பாரு… நான் சீக்கிரம் டின்னர் ரெடி பண்ணிடறேன்… நாளைக்கு ரெண்டு பேரும்  சேர்ந்து சமையல் பண்ணுவோம்…” என்றவன் அடுக்களைக்கு நகர, “இவன் எப்பவுமே இப்படித்தானா… இல்ல அப்பப்ப இப்படியா…” என யோசித்தவள் டீவியை ஆன் செய்து அமர்ந்தாள்.
இதோ இதோ… என் பல்லவி…
எப்போது கீதமாகுமோ…
இவள் உந்தன் சரணமென்றால்
அப்போது வேதமாகுமோ…
SPB தனது மாயக் குரலால் அவளுக்கு மிகவும் பிடித்த பாடலைப் பாடிக் கொண்டிருக்க ஐஷுவும் சேர்ந்து பாடத் தொடங்கினாள். அதைக் கேட்டுப் புன்னகைத்துக் கொண்டே ரகு வேலையை முடிக்கத் தொடங்கினான்.
சரியாய் அரை மணி நேரத்தில் மேசை மீது எல்லாவற்றையும் எடுத்து வைத்தவன் அவளை சாப்பிட அழைக்க, ஆனியன் கிரேவி செய்யும்போது வந்து மணத்தில் பசியோடு அமர்ந்திருந்தவள் வேகமாய் சென்று அமர்ந்தாள்.
“ஐஷு, கை அலம்பிட்டு வா… இவ்ளோ நேரம் ரிமோட் கைல வச்சிருந்தியே…” அவன் கேட்க, “அதெல்லாம் சாப்பிட்டு ஒண்ணாக் கழுவிக்கலாம்… ரொம்பப் பசிக்குது… சீக்கிரம் போடு…” என்றாள் தட்டைக் காட்டி.
அவளை கண்டிப்பாய் நோக்கியவன், “என்ன ஐஷு, குழந்தை போல சொல்லிட்டு… ரிமோட், மொபைல், கம்ப்யூட்டர் கீபோர்டு எல்லாம் யூஸ் பண்ணினா கையை நல்லா வாஷ் பண்ணிட்டு தான் சாப்பிடனும்… இதெல்லாம் உனக்குத் தெரியாதா, எழுந்திரு…” என்று சொல்ல அவளுக்கே அவனது கண்டிப்பான குரல் கேட்டு வியப்பாய் இருந்தது.
“என்னடா… ஊசிப் பட்டாசுக்கு கூட சவுண்டு வருது…” அவன் பேச்சில் முகத்தைச் சுளித்துக் கொண்டு எழுந்தவள், “எனக்கு வேண்டாம்… நீயே சாப்பிடு… பெரிய அட்வைஸ் அய்யாசாமி… எனக்கு அட்வைஸ் பண்ண வந்துட்டாரு…” சொன்னவள் அவள் அறைக்குள் சென்று நுழைந்து கொள்ள அதை எதிர்பார்க்காத ரகு திகைத்துப் போனான்.
அந்த அபார்ட்மென்ட் குழந்தைகளிடம் சொல்வது போல அவன் எதார்த்தமாய் சொல்லியது அவளுக்குப் பிடிக்கவில்லை என்பதை உணர்ந்தவனுக்கு அவள் சாப்பிடாமல் சென்றது மனதை வருத்த அவள் அறைக்கதவைத் தட்டினான்.   
கதவைத் திறந்தவள் முறைத்தாள்.
“என்ன ஐஷு… இதுக்கெல்லாமா கோவிச்சுப்பாங்க… நல்ல விஷயம் தானே சொன்னேன்…” அவன் பாவமாய் சொல்ல,
“ஹூக்கும், அந்த ஆணியெல்லாம் எங்களுக்கும் தெரியும்… எனக்கு வேண்டாம்னா வேண்டாம்… நீ செய்ததை நீயே கொட்டிக்க…” என்றவள் கதவை சாத்தி தாளிட்டாள். அவன் மீண்டும் தட்டியும் திறக்காமல் இருக்க அவனும் சாப்பிடாமலே சோபாவுக்கு வந்து சோர்வுடன் அமர்ந்தான்.
அவள் சொன்ன வார்த்தைகளை விட பட்டினி கிடக்கிறாளே… என்ற எண்ணம் அவனை வதைத்தது.
“இவள் ஏன் இப்படி அடம் பிடிக்கிறாள்… என் மீதுள்ள கோபத்தை உணவின் மீது காட்டுகிறாளே…” ஆதங்கத்துடன் யோசித்தவன் அப்படியே படுத்துக் கொண்டான். “தன்னை விருப்பமில்லை என்றவளை வற்புறுத்தி மணமுடித்தது தவறோ…” என்று நெஞ்சோரமாய் ஒரு துளி எட்டிப் பார்த்தது.
அறையில் குறுக்கும் நெடுக்குமாய் நீள அகலத்தை அளந்து கொண்டிருந்த ஐஷுவின் மனது ஏதேதோ கேள்வி கேட்டுக் கொண்டிருக்க பதில் சொல்ல முடியாமல் தவித்தாள்.
“ஏய் ஐஷு, நீ பண்ணறது உனக்கே கொஞ்சம் ஓவராத் தெரியலையா… அவன் என்ன சொல்லிட்டான்னு இப்படி கோச்சுகிட்டு சாப்பிடாம வந்த… ஒருத்தன் வேலைக்குப் போயிட்டு வந்து பொண்டாட்டிக்கு சமைச்சுக் கொடுக்கிறது எல்லாம் சினிமால கூட நடக்காத விஷயம்… அப்படி ஒருத்தனைப் புருஷனா கிடைச்சிட்டு ரொம்பதான் சிலுப்பிக்கற… இப்ப பசில இப்படி நடந்தா சரியாகிடுமா…”
“ஏய் மானங்கெட்ட மனசாட்சியே… எதுக்கு இப்படில்லாம் என்னைக் கேள்வி கேக்கற… என்னமோ சட்டுன்னு ஒரு கோபம் வந்திருச்சு… அவன் கனவுல என்னை எப்படில்லாம் இம்சை பண்ணான் தெரியுமா… என் அனுமதி இல்லாம அங்கங்க தொடறான்… முத்தமெல்லாம் கொடுக்கறான்… இப்ப மட்டும் பெரிய அட்வைஸ் மூட்டையைத் தூக்கிட்டு வரான்…”
“ஓ… கனவுல நடந்த போல நிஜமா நடந்திருமோன்னு தான் கோபப்படறியா… ச்சேச்சே… நீயே வலிய போனாலும் ரகு அப்படிலாம் பண்ண மாட்டான்… அவன் ஒரு ஜெம்…”
“அட கூறுகெட்ட மனசாட்சியே… எனக்குள்ள இருந்துட்டு அவனுக்கு சப்போர்ட் பண்ணற… நீ எனக்கு ஒரு விளக்கமும் கொடுக்க வேண்டாம்… ஷட் பண்ணிட்டு கிளம்பு…” என்றவளுக்கு வயிற்றுக்குள் சிறுகுடலும், பெருங்குடலும் யுத்தம் செய்யும் ஓசை கேட்டது. சுவர் கடிகாரம் ஒலி எழுப்பி பனிரெண்டு முறை குக்கூ சொல்லி ஓய்ந்தது. அதற்கு மேல் தாங்க முடியாமல் மெல்ல கதவின் தாளை விலக்கிப் பார்க்க ஹால் இருட்டாய் இருந்தது.
“ராகு சாப்பிட்டுக் கிளம்பிட்டான் போலருக்கு… எதுவும் மிச்சம் மீதி, வச்சிருக்கானான்னு பார்ப்போம்…” என்றவள் பூனை நடை நடந்து இருட்டிலேயே உணவு மேசையை நெருங்கினாள். வெளியே காய்ந்து கொண்டிருந்த நிலாவின் வெளிச்சம் சன்னமாய் கண்ணாடி ஜன்னல் வழியே அங்கே விழுந்து கொண்டிருக்க மெல்ல ஹாட் பாக்ஸைத் திறந்தாள்.
செய்து வைத்த சப்பாத்தி எடுக்கப்படாமல் அப்படியே இருக்க, “அச்சச்சோ, ராகுவும் சாப்பிடலையா…” என்றவளின் மனம் உண்மையிலேயே அவனுக்காய் வருந்தியது. அவனை விட்டு தான் மட்டும் சாப்பிட மனது ஒத்துக் கொள்ள மறுத்தது.
அதை அப்படியே மூடி வைத்தவள், “ச்சே… எல்லாம் உன்னால தான்… பாவம், வேலைக்குப் போயிட்டு பசியோட வந்திருப்பான்… உதவி செய்யலைனாலும் இப்படி உபத்திரவம் பண்ணிட்டு இருக்கியே…” என்று திட்டிய மனசாட்சியை அமைதியாய் வேடிக்கை பார்த்தாள்.
“அவன் அப்படி உன்னை என்ன பண்ணிட்டான்… உனக்குப் பிடிச்ச ஒவ்வொண்ணையும் பார்த்துப் பார்த்து செய்யுறது தப்பா… ஒழுங்கா போயி அவனை சாப்பிடக் கூப்பிடு…” மனம் அதட்ட வயிறு மிரட்ட, அறையை நோக்கி நடந்தாள்.
கட்டில் காலியாய் இருக்க அறைக்குள் அவனைக் காணாமல் திகைத்தவள் சுவரில் சுவிட்சைத் தட்ட அந்த வெளிச்சத்தில் ஹால் சோபாவில் அவன் படுத்திருப்பது தெரிந்தது.
அவன் அருகே வந்தவள் சோபாவின் கைத்திண்டில் தலை வைத்து ஒருக்களித்துப் படுத்து புன்னகையுடன் உறங்கிக் கொண்டிருந்தவனைக் கண்டதும் சின்ன வயதில் அவனும் அவளும் மேனகாவின் மடியில் தலை வைத்துப் படுத்ததை அவன் சொன்னது நினைவுக்கு வந்தது.
ஒரு நிமிடம் அவனையே பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு பாவமாய்த் தோன்ற அவன் கையைத் தொட்டாள்.
“ரகு… எழுந்திரு…”
“என்ன ஐஷு, குழந்தையைத் தூங்க வச்சுட்டியா… வா, வா… இனி இந்த அத்தானைக் கொஞ்சம் கொஞ்சு…” சிரிப்புடன் கண்ணை மூடிக் கொண்டே அவன் சொல்ல அவள் கண்கள் விரிய அதிர்ச்சியோடு நோக்கினாள்.
“அடப்பாவி… கனவுல என்னோட குடும்பம் நடத்தி குழந்தை வேற பெத்துகிட்டியா… ரொம்ப ஓவராத்தான் போறே…” என்று முழித்து நிற்க மனசாட்சி கெக்கபிக்கவென்று சிரித்தது.
“உன் கனவுல அன்னைக்கு அவன் கொஞ்சுன கொஞ்சுல வந்த குழந்தையாத்தான் இருக்கும்னு தோணுது… இதுக்கும் மேல அவனைத் தூங்க விட்டா ரெண்டாவது குழந்தையை ரெடி பண்ணிருவான்… சீக்கிரம் எழுப்பு…” என்றது.
அதில் அலர்ட் ஆனவள், “ரகு… எழுந்திரு…” என்றாள் உரக்க.
சட்டென்று அரக்கப் பறக்க எழுந்த ரகு, “என்னாச்சு ஐஷு… குழந்தை கீழ விழுந்துட்டானா…” என்று பதட்டப்பட, “ஹூம்… ஸ்கூலுக்குப் போயிட்டான்…” என்றாள் எரிச்சலுடன்.
அப்போதுதான் கனவு கலைந்ததை உணர்ந்த ரகு ஒரு அசட்டுச் சிரிப்புடன், “ஹிஹி, ஒரு நல்ல கனவு ஐஷு… அதுக்குள்ள கலைச்சிட்டயே…” என்றான் ஏமாற்றத்துடன்.
“ஹூக்கும், கண்ட வரைக்கும் போதும்… எனக்குப் பசிக்குது, சாப்பிடப் போறேன்… பாவம்னு உன்னைக் கூப்பிட வந்தா நீ கனவுல வயித்தை நிறைச்சிட்டு இருக்கே…” என்றவள் மேசைக்கு சென்று சப்பாத்தியுடன் அமர்ந்தாள்.
அவளைப் புன்னகையுடன் நோக்கிக் கொண்டே கனவின் சுகத்தில் மிதந்தவன் அப்படியே உணவு மேசையில் அமர, “ஐயா நல்லவரே… இந்த கை அலம்பிட்டு சாப்பிடனும்னு சொல்லறதெல்லாம் மத்தவங்களுக்கு மட்டும் தானா…” கேட்டுக் கொண்டே ஒரு கையால் சப்பாத்தியைப் பிய்த்து வேகமாய் வயிற்றுக்குள் தள்ளினாள் ஐஸ்வர்யா.
அதைக் கண்டு எழுந்தவன் பிரிட்ஜிலிருந்து தண்ணீர் பாட்டிலை எடுத்து அவளிடம் வைத்துவிட்டு அமர்ந்தான்.
மனது சந்தோஷத்தில் நிறைந்திருக்க வயிற்றின் பசி தெரியவில்லை. அவளையே பார்த்துக் கொண்டிருந்தவனை, “ஹலோ, இப்படிப் பார்த்துட்டு இருந்தா எனக்கு வயிறு வலிக்கும்… நீயும் சாப்பிடு…” என்றாள் அதிகாரத்துடன்.
“ப்ச்… நீ ஊட்டி விடறியா…” சட்டென்று கேட்டவன் நாக்கைக் கடித்துக் கொண்டு விழிக்க அவள் திகைப்புடன் அவனை நோக்க அந்தப் பெரிய கரிய விழிகளுக்குள் தொலைந்து போக மாட்டோமா என்ற பேராவலுடன் நோக்கியிருந்தான்.
சட்டென்று சுதாரித்துக் கொண்ட ஐஷு, “ஹூக்கும், நினைப்பு தான் பொழப்பைக் கெடுக்கும்னு கோமு அடிக்கடி சொல்லும்… சரிதான் போலருக்கு…” என்றவள் சாப்பிட்டு எழுந்து செல்ல அவன் அப்படியே அமர்ந்திருந்தான். ஏனோ சாப்பிடத் தோன்றவில்லை.
அறைக்குள் சென்ற பின்னும் ஐஷுவின் படபடப்பு அடங்கவில்லை. அவனது கண்களில் வழிந்த காதலும் அதில் தெரிந்த ஏக்கமும் தன் கண்களுக்குள் இறங்கியது போல் உணர்ந்தவள் எதையோ சொல்லி சமாளித்து எழுந்து வந்தாலும் ஒரு புதிய உணர்வை தனக்குள் உணர்ந்தாள். வெகுநேரப் போராட்டத்திற்குப் பின் உறக்கத்தில் விழுந்தவள் காலையில் எழ வழக்கம் போல் ரகு சமையலில் இருந்தான்.
“ஐஷு, பிளாஸ்க்ல காபி வச்சிருக்கேன்… காலைல சிம்பிளா பிரேக்பாஸ்ட் முடிச்சிட்டு கிளம்பிருவோம்… எங்கெல்லாம் போகணும்னு நீ ஆசைப்படறியோ, அங்கெல்லாம் சுத்தப் போறோம்…” உற்சாகமாய் சொல்ல அவளுக்கும் எங்காவது வெளியே சென்றால் தேவலாம் எனத் தோன்றியது.
“ம்ம்…” என்றவள் காபியை குடிக்க, “ஐஷு, உன் கையைக் காட்டேன்…” என்றான் அவன். “ப்ச்… எதுக்கு… வேண்டாம்…” என்றாள் அவள் மறுப்பாக.
“கையை நீட்டு சொல்லறேன்…” அவன் மீண்டும் கேட்க தயக்கமாய் அவன் முன்னில் நீட்டியவளின் கைசிவப்பைக் கண்டு உற்சாகமாய் விசில் அடித்தவன் ஒரு துளி தேங்காய் எண்ணையை அவள் கையில் தேய்த்து மணத்துப் பார்க்க, அந்த செயலில் அவள் முகம் மருதாணி இன்றி சிவப்பதை உணர்ந்தவள் படக்கென்று பின்னில் இழுத்துக் கொண்டாள்.
“நான் குளிச்சிட்டு வரேன்…” என்றவள் வேகமாய் அறைக்குள் நுழைந்திருக்க, அவள் முக சிவப்பைக் கண்டுவிட்டவனோ உற்சாகமாய் விசில் அடித்தான்.
“உன் உதட்டோர சிவப்பே அந்த மருதாணி
கடனாக் கேட்கும் கடனாக் கேட்கும்…
நீ சிரிச்சாலே சில நேரம் அந்த நிலவு வந்து
உளவு பார்க்கும் உளவு பார்க்கும்…
மாலைநேர சூரியன் சோர்வுடன் ஓய்வெடுக்க சென்று கொண்டிருந்தான். கரையைத் தழுவி விலகி ஓடி விளையாடிக் கொண்டிருந்த அலைகளை ரசித்துக் கொண்டு மணலில் அமர்ந்திருந்தான் ரகுவரன். அவன் கண்கள் சற்றுத் தள்ளி முன்னில் அலையைத் துரத்தி விளையாடிக் கொண்டிருந்த ஐஸ்வர்யாவைப் புன்னகையுடன் ரசித்துக் கொண்டிருந்தது.
சின்னக் குழந்தை போல் கால் நனைத்து சந்தோஷமாய் கும்மாளம் போட்டுக் கொண்டிருந்தாள். காலையில் ஒரு கோவிலுக்கு சென்றபின் மாயாஜால் சென்று சுத்திவிட்டு அவ்வப்போது அவள் கேட்ட சிப்ஸ், ஐஸ்க்ரீம் வாங்கிக் கொடுத்து மதிய உணவை நல்லவொரு ஹோட்டலில் பிரியாணியுடன் முடித்துக் கொண்டு அவளுக்குப் பிடித்த சில உடைகளை வாங்கிப் பரிசளித்துவிட்டு பீச்சுக்குக் கிளம்பி வந்திருந்தனர். கூட்டம் சற்றுக் குறைவாயிருந்த பகுதிக்கு அவளை அழைத்து வந்திருந்தான். அங்கங்கே குழந்தைகளின் உற்சாகக் குரலோடு பெற்றவர்களின் அக்கறைக் குரலும் ஒலித்துக் கொண்டிருந்தது. பெரியவர்கள் கதை பேசிக் கொண்டிருக்க குழந்தைகள் குதூகலித்துக் கொண்டிருந்தனர். அவர்களுடன் வளர்ந்த குழந்தையும் சேர்ந்து விளையாடிக் கொண்டிருந்தது. சுரிதார் பேன்ட்டை முட்டி வரை மடக்கி விட்டிருந்ததால் அவளது வளவள வெண்ணைக் கால்கள் அவ்வப்போது பளிச்சென்று தெரிந்து கொண்டிருந்தன.
ரகு அதை கவனிக்காவிட்டாலும் சற்றுத் தள்ளி நின்று அவளை வைத்த கண் வாங்காமல் இரண்டு ரவுடிகள் ரசித்துக் கொண்டிருந்தனர்.
“டேய் மச்சி, அந்தப் பொண்ணைப் பார்த்தியா… மெழுகு சிலையாட்டம் வழுவழுன்னு இருக்கா…” என்றான் ஒருவன்.
“ஆமா மாமா, நானும் அவளைத்தான் பார்த்துட்டு இருக்கேன்… செம கட்டையா இருக்கால்ல…”
“ம்ம்… கூட யாரும் வந்த மாதிரித் தெரியலயே… உரசிப் பார்த்திடலாமா…” என்றான் மற்றவன்.
“சரி, வா மாமு… நாமளும் தண்ணிக்குள்ள போயி அந்த மீனோட விளையாடிட்டு வருவோம்…” என்று நகர்ந்தனர்.
இருவரும் ஐஷு அருகில் விளையாடத் தொடங்கினர். கையிலிருந்த பந்தை ஒருவருக்கொருவர் வீசிப் பிடித்துக் கொண்டே ஐஷுவின் அருகில் விழுந்ததை எடுக்க வந்தது போல் அவளை உரசிக் கொண்டு சென்றான் ஒருத்தன்.
அவர்கள் எண்ணத்தைப் புரிந்து கொண்ட ஐஷுவிற்கு திக்கென்றிருந்தது. சட்டென்று ரகுவை நோக்க அவன் யாருடனோ அலைபேசிக் கொண்டு முதுகைக் காட்டி நின்று கொண்டிருந்தான். அதற்கு மேல் அங்கு இருக்கப் பிடிக்காமல் கரையை நோக்கி நகர்ந்தவளின் பின்னில் அந்த பந்து வந்து விழ அதிர்ச்சியுடன் திரும்பினாள்.
“சாரி…” சொல்லிவிட்டு அந்த பந்தை எடுத்தவனின் கண்கள் தாறுமாறாய் அவள் மேனியெங்கும் ஓட அருவருத்தாள். அவர்களை முறைத்துவிட்டு கரையை நோக்கி நடந்தவள் பின்னால் அவர்களும் வர அவளுக்கு பீதியானது.
இது எதையும் அறியாமல் ரகு அலைபேசியில் சந்தோஷமாய் அன்றைய நிகழ்வுகளை கோமுவிடம் சொல்லிவிட்டு அடுத்து நண்பன் வருணிடம் பேசிக் கொண்டிருந்தான்.
வேகமாய் கரையேறி வந்தவள் பின்னிலிருந்து அவன் கையைப் பற்றிக் கொள்ள சட்டென்று திரும்பியவன் அவளது முகத்தைக் கண்டு, “ஐஷு… என்னமா… என்னாச்சு…” என்று கேட்க, “அவங்க… அவங்க ரெண்டு பேரும்…” என்று மூச்சு வாங்க சொல்லவும் திரும்பிப் பார்க்க அங்கே இருவர் வேகமாய் சென்று கொண்டிருந்தனர்.
“ஏதாச்சும் வம்பு பண்ணாங்களா…” கேட்டவனின் முகத்தில் கோபம் மின்ன மிரண்டவள் சட்டென்று நிதானித்தாள்.
“இவன் சைஸ்க்கு அந்த தடிமாடுங்களை நியாயம் கேக்கப் போயி அவங்க அடிச்சிட்டா… ப்ச்… வேண்டாம்…” என்று நினைத்தவள், “ஒ..ஒண்ணும் இல்ல ரகு… ஏதோ கேட்டாங்க… இப்ப போயிட்டாங்க…” என்று சொல்லி சமாளித்தாள்.
அவள் முகத்தை ஆழமாய் பார்த்துவிட்டு செல்லும் அவர்களையும் திரும்பிப் பார்த்த ரகு, “ம்ம்… சரி, கிளம்பலாமா…” என்று கேட்க,
அங்கிருந்து செல்ல மனமில்லாமல், “கொஞ்சநேரம் மணல்ல நடக்கலாமா…” என்றாள் ஆவலுடன்.
“சரி வா…” என்றவனிடம், “ஐஸ்க்ரீம் சாப்பிடலாமா…” என்றாள்.
“இன்னைக்கு மட்டும் எத்தனை ஐஸ்க்ரீம் சாப்பிட்டாச்சு ஐஷு… உடம்புக்கு முடியாமப் போயிடப்போகுது… டின்னர் சாப்பிட்டு வீட்டுக்குக் கிளம்பலாம்…” என்றதும்
“சரி, சாப்பிட்டு குல்பி மட்டும்…” என்றாள் தலை சாய்த்து.
அன்று முழுதும் அவளது அருகாமையில் கழிந்த நிமிடங்களின் சந்தோஷத்தில் சரியென்று தலையாட்டினான்.
“தேங்க் யூ…” என்று குதித்தவள் அவன் கையை உரிமையாய் பற்றிக் கொண்டு மணலில் கால் புதிய நடக்க சந்தோஷ அதிர்ச்சியில் அவளைப் பார்த்தவனிடம்,
“விழுந்திருவேன்… அதான் உன் கையைப் பிடிச்சிருக்கேன்…” என்று பழிப்புக் காட்ட அப்போதே அவளைக் கொஞ்ச வேண்டும் போலத் தோன்றிய ஆர்வத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டான் ரகு.
உள்ளத்தில் உறைந்தவளின்
அருகாமை போதாதோ
உள்ளுக்குள் நிறைந்திட்ட
உவகைக்குக் காரணமாய்…
இலக்கின்றி மனம்
தறிகெட்டுப் பறக்கிறதே…
இன்பத்தில் நெஞ்சம்
இளைப்பாற சொல்கிறதே…

Advertisement