Advertisement

அத்தியாயம் – 15
“அத்தான், எழுந்திருங்க… காபி எடுத்துக்கோங்க…” அருகில் ஒலித்த கொஞ்சும் குரலில் கண்ணைத் திறந்த ரகுவரன் கையில் காபி கோப்பையுடன் அன்றலர்ந்த மலர் போல, குளித்து தலையில் சுற்றிய டவலுடன் கோகுல் சாண்டல் பவுடர் மணக்க முன் நின்றவளைக் கண்டு புன்னகைத்தான்.
“குட் மார்னிங் ஐஷு டார்லிங்…” சோம்பல் முறித்து கொட்டாவியுடன் அமர்ந்தவனிடம் பதில் குட்மார்னிங் சொன்னவள் கோப்பையை நீட்ட வாங்கிக் கொண்டான்.
“ஐஷூ, இப்படி உக்காரு… இந்த பனிக்காலத்துல எதுக்கு இவ்ளோ நேரமா குளிக்கற…” கேட்டவனை நோக்கிப் புன்னகைத்தவள், அமர்ந்தாள்.
“கல்யாணமான பொண்ணுங்க காலைல குளிச்சிட்டு அடுப்பு பத்த வச்சா தான் அந்த வீடு ஐஸ்வர்யமா இருக்கும்னு அத்தை சொன்னாங்க…” என்றாள்.
“இந்த மாமியார்களே இப்படிதான்… மருமக வந்ததும் எதையாவது கிளப்பி விட்டிருவாங்க… இந்தக் காலத்துல அடுப்பே இல்லை… கேஸ் ஸ்டவ் தானேன்னு நீயாச்சும் சொல்லி இருக்கலாம்ல செல்லம்…” கொஞ்சினான்.
“சரி, சீக்கிரம் காபி குடிச்சிட்டு குடுங்க அத்தான்… நான் டிபன் செய்யப் போகணும்…”
“என்ன அவசரம், மெதுவா செய்யலாம்…” என்றவன் அவளை ரசனையுடன் நோக்க அந்த பார்வை மாற்றத்தை உணர்ந்து கொண்டவள் எழுந்து கொண்டாள்.
“சரி சரி, செய்த வரைக்கும் போதும்… நான் போறேன்…” என்றவளின் முகச்சிவப்பில் சுயம் இழந்தவன் எழுந்து வேகமாய் முந்தானையை பற்ற அவள் சிணுங்கினாள்.
“டேய் புருஷா… வேண்டாம், விட்டிடு… ராத்திரி முழுதும் ஷோ காட்டி தூங்க விடாம பண்ணிட்ட… இப்ப மார்னிங் ஷோ எல்லாம் எனக்குத் தாங்காது…”
அவளது சிணுங்கல் அவனுக்குள் விபரீதமாய் நரம்புகளை முறுக்கேறச் செய்ய வேகமாய் தனை நோக்கி இழுத்தவன் நெஞ்சில் பஞ்சுப் பொதியாய் விழுந்தாள் ஐஷு.
அவள் பின் கழுத்தில் டவ் சோப்பின் மணத்தை முகர்ந்தவன் மனது சிறகில்லாமல் பறக்க இதழ்களால் முதுகை ஒற்றி எடுத்தவன் அப்படியே செவியை நெருங்கவும் அவள் உடல் சிலிர்த்துக் கொள்ள கூச்சத்தில் நெளிந்தாள். அவள் வயிற்றில் இருந்த அவனது கைகள் இரண்டும் அவளை மேலும் இறுக்கி முன்னேற சுதாரித்தவள், கையைத் தட்டி விலக முயல அவள் கையைப் பற்றிக் கொண்டான் ரகு.
கண்ணே, தொட்டுக்கவா கட்டிக்கவா…
கட்டிக்கிட்டு தொட்டுக்கவா…
தொட்டுகிட்டா பத்திக்குமே…
பத்திகிட்டா பத்தட்டுமே…
அஞ்சுகமே நெஞ்சு என்னை
விட்டு விட்டு துடிக்குது…
கட்டழகி உன்ன எண்ணி
கண்ணு முழி பிதுங்குது…
கொத்தி விட வேண்டுமென்று
கொக்கு என்ன துடிக்குது…
தப்பி விட வேண்டுமென்று
கெண்ட மீனு தவிக்குது…
குளிக்கிற மீனுக்கு குளிர் என்ன அடிக்குது…
பசி தாங்குமா… இளமை இனி…
பரிமாற வா… இள மாங்கனி…
வனிதாமணி வனமோகினி வந்தாடு
கனியோ கனி உன் ருசியோ தனி கொண்டாடு…
உன் கண்களோ திக்கி திக்கி பேசுதடி…
என் நெஞ்சிலே தக்கதிமி தாளமடி… வந்து ஆடடி…
இருவரும் பாட்டுக்கு தகுந்த போல காதலுடன் நடனமாடிக் கொண்டிருக்க சட்டென்று இசை தடைபட்டது.
“ஐஷு… எழுந்திருமா…” யாரோ குகைக்குள்ளிருந்து அழைக்கும் குரல் கேட்க கஷ்டப்பட்டு கண்ணைத் திறந்தவள் முன்பு புன்னகையுடன் நின்றான் ரகுவரன்.
அதிர்ச்சியில் பேந்தப் பேந்த விழித்தவள் சுற்று முற்றும் கண்ணை ஓட்டி திருதிருவென்று முழிக்க, “குட்மார்னிங் ஐஷு… என்னமா, ஏதாச்சும் கனவா… சரி, வீட்ல எல்லா வேலையும் முடிச்சுட்டேன்… நான் குளிச்சு ஆபீஸ் கிளம்பணும்… அதான் உன்னை எழுப்பினேன்… இன்னும் டயர்டா இருந்தா சாப்பிட்டு தூங்கிக்க…” என்றவனைக் கண்டு அவளுக்கு ஆத்திரமும் எரிச்சலுமாய் வர கட்டுப்படுத்திக் கொண்டாள்.
“என்னை நேரமாவே கூப்பிட்டிருக்கலாம்ல…”
“நீ நைட் ரொம்ப நேரமா தூங்காம டீவி பார்த்துட்டு லேட்டா தான படுத்த… சரி சலிப்புல தூங்கறவளை டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்னு விட்டுட்டேன்…”
“கருமம்… நைட்டெல்லாம் தூக்கம் வரலைன்னு மியூசிக் சானல் பார்த்ததுக்கு தண்டனையா தான் என் கனவுல இப்படி வந்து விடிஞ்சுதா… இவன் எப்படி என்னோட கனவுல டூயட் பாடறான்… இதுக்கு முன்னாடி எல்லாம் இப்படி எதுவும் வந்ததில்லையே… எல்லாம் நைட் உலகநாயகன் பாட்டைப் பார்த்த எபக்ட்…” அவள் யோசித்துக் கொண்டிருந்தாள்.
“என்ன ஐஷு, தல வலிக்குதா… காபி தரட்டுமா…” அக்கறையோடு கேட்டவனை சலிப்புடன் நோக்கினாள்.
“நான் பார்த்துக்கறேன்… நீங்க குளிக்கப் போங்க…”
“ம்ம்… ஓகே பேபி…” என்றவன் அவனது அறைக்குள் நுழைந்து கொண்டான். முன்தினம் இரவே ரகுவின் அறையில் உறங்க மறுத்து பக்கத்து அறையை தனதாக்கிக் கொண்டாள் ஐஸ்வர்யா. அவள் வழியிலேயே சென்று சரி செய்வோம்… என நினைத்த ரகுவும் மறுக்கவில்லை. அவன் குளித்து புறப்பட்டு வருவதற்குள் அவளும் குளித்து வந்தாள்.
எளிமையாய் ஒரு நைட்டியில் தலை துவட்டிக் கொண்டே வந்தவளை நோக்கியவன், “என்ன ஐஷு, இப்படியா தலை துவட்டுவ… நான் துவட்டி விடறேன்…” சொல்லிக் கொண்டே அவன் அருகில் வர, “ப்ச்… நான் பண்ணிக்கறேன்…” என்றவள் மறுத்து விட்டாள். அவள் மனதுக்குள் ஏதோ தப்பு செய்துவிட்டது போல் ஒரு குறுகுறுப்பு ஓடிக் கொண்டே இருந்தது.
“சரி, வா சாப்பிடலாம்…” என்றவன் உணவுமேசை முன் அமர அவளும் அமர்ந்தாள். மேசை மீது அவன் சமைத்த உணவுகள் அழகாய் ஹாட்பாக்ஸில் அணிவகுத்தது.
“மதியத்துக்கு சாம்பாரும், உருளை பொரியலும் செய்தேன்… அதனால டிபன்க்கு வெண்பொங்கல் செய்துட்டேன்… அந்த சாம்பாரோட கொஞ்சம் சட்னியும்…” என்றவன் தன் தட்டில் போட்டுக் கொண்டு அவளிடம் நகர்த்த ஹாட்பாக்சைத் திறந்ததும் வந்த நெய்யின் மணமே அதிகமாய் பசிக்க வைத்தது. உண்மையிலேயே பிரமிப்பு தோன்ற தனது தட்டில் பொங்கலைப் போட்டு சாம்பார், சட்னியை எடுத்துக் கொண்டவள் கடைக்கண்ணால் அவனைப் பார்த்தாள்.
இளம் நீல நிற ஷர்ட்டை நீட்டாய் டக்கின் செய்து அடர்நீல நிறத்தில் ஜீன்ஸ் அணிந்திருந்தான். ஷாம்பூவின் உபயத்தில் முடிக் கற்றைகள் சிலுப்பிக் கொண்டு காற்றில் பறந்து கொண்டிருக்க ஒரு கையால் அதை அமர்த்திக் கொண்டே மறு கையால் சாப்பிட்டுக் கொண்டிருந்தவன் தன்னையே பார்த்துக் கொண்டிருந்தவளை நோக்கி சிரித்தான்.
“என்ன ஐஷு, என்னை அப்படிப் பார்க்கற… அத்தான் அழகா இருக்கேனா…” என்று கேட்கவும் கனவு நினைவு வர, முகத்தைத் திருப்பிக் கொண்டவள்,
“ஹூக்கும், நெய்யே இல்லாம இந்த வரப் பொங்கலை எப்படிதான் சாப்பிடறயோன்னு பார்த்தேன்…” என்று சொல்ல, “ஏன்மா… உதயகிருஷ்ணா நெய்லதான் செய்தேன்… தரம், குணம், மணம் நிறைந்தது…” சொல்லிக் கொண்டே சாப்பிட்டு எழுந்தவன்,
“ஐஷு, நான் கிளம்பறேன்… போர் அடிச்சா ஜெஸ்சி ஆன்ட்டி வீட்டுல பேசிட்டு இரு… நான் மதியம் சாப்பிட வந்திடுவேன்… ஈவ்னிங் எங்காச்சும் வெளிய போகலாம்… ஓகே பை…” என்றவன் ஹெல்மெட்டை எடுத்துக் கொண்டு கிளம்ப கதவைத் தாளிட்டு அமர்ந்தவள் திருப்தியாய் பொங்கலை ருசித்து சாப்பிடத் தொடங்கினாள்.
“சும்மா சொல்லக் கூடாது நிஜமாலுமே பொங்கல் சூப்பர்… அவனைப் பிடிக்கலைனாலும் அவன் பண்ணுறதெல்லாம் பிடிக்கிற போல தான் இருக்கு…” என நினைத்தவள் திவ்யமாய் சாப்பிட்டு முடித்து எழுந்தாள். பாத்திரத்தைக் கழுவி வைத்தவள் அடுக்களை நீட்டாய் இருப்பதைப் பார்த்து, “உண்மைலயே இந்த ரகு படு கில்லாடி தான்…” என்றுவிட்டு அவளது அறைக்கு வந்தாள்.
கட்டிலில் கசங்கிக் கிடந்த போர்வையை மடக்கி வைத்துவிட்டு அலமாரியில் சூட்கேசிலிருந்த பொருட்களை எல்லாம் எடுத்து அடுக்கி வைத்தாள். அலைபேசி சிணுங்கவே எழுந்து சென்று எடுத்தாள்.
“ஹலோ ஐஷு மா… எப்படி இருக்கே, சாப்டியா…” அத்தை மேனகாவின் குரலைக் கேட்டதும் மனதுக்குள் ஒரு சந்தோஷம் மலர உற்சாகத்துடன் பதில் சொன்னாள்.
“சாப்டேன் அத்தை… நீங்க மாமால்லாம் எப்படி இருக்கீங்க…”
“நல்லாருக்கோம்மா… உன் மாமா தான் ஒரே புலம்பல்… பாவம் என் ரோஜாக் குட்டி, ரகு வேலைக்குப் போயிட்டா தனியா இருந்து கஷ்டப்படுவாளே… போன் பண்ணிக் கேளுன்னு ஒரே குடைச்சல்… இரு அவர்கிட்ட கொடுக்கிறேன்…” என்றவர் கணவனிடம் கொடுத்தார்.
“ரோஜாக்குட்டி… மருமகளே, எப்படி டா செல்லம் இருக்கே… அந்த ரகுப் பையன் உன்னை நல்லாப் பார்த்துக்கிறானா… இன்னைக்கும் வீட்ல இருக்காம ஆபீஸ் போறேன்னு சொன்னான்… நீ எதுவும் சொல்ல மாட்டியா…” ஆதங்கமாய் கேட்டவரின் வார்த்தையில் இருந்த கனிவும் அன்பும் அவளை நெகிழ வைத்தது.
“இல்ல மாமா, மதியம் வந்திருவேன்னு சொல்லிருக்கார்…”
“என்னமோ போங்க… சின்னப் புள்ளைங்க, கல்யாணமான புதுசுல சந்தோஷமா இருக்காம இப்பவும் அவன் ஆபீசைக் கட்டிட்டே அலையுறான்… நாளைக்குப் போக விடாத… எங்காச்சும் வெளியே கூட்டிட்டுப் போக சொல்லு…”
“சரி மாமா… நீங்க உடம்பைப் பார்த்துக்கங்க…”
“உடம்பென்னமா உடம்பு… உன் கழுத்துல என் மகன் தாலி கட்டின நிமிஷமே பாதி நோய் சரியாப் போயிருச்சு… என்ன, கொஞ்ச நாள் கூட உன்னை எங்களோட வச்சுக்க முடியலையேனு வருத்தமா இருக்கு… அதான் அடுத்த மாசம் அங்கே வந்து உங்களோட ஒரு வாரம் தங்கி இருக்கலாம்னு இருக்கோம்…” என்றார் புருஷோத்தமன்.
“ஓ… சூப்பர் மாமா, சீக்கிரம் வாங்க… எனக்கும் உங்களையும், அத்தையும் பார்க்கணும் போல இருக்கு…” என்றாள் சந்தோஷத்துடன்.
“சரிடா ரோஜாக்குட்டி… வச்சிடறேன்…” என்றவர் அழைப்பைத் துண்டிக்க அவரது அன்பான குரலே காதுக்குள் ஒலிக்க புன்னகையுடன் சோபாவில் அமர்ந்தாள்.
“என்ன மாதிரியான அன்பு இது… இத்தனை வருட இடைவெளிக்குப் பின்னும் எப்படி என்னைக் குழந்தை போல இவர்களால் கொண்டாட முடிகிறது… அந்தக் குரலில் தான் எத்தனை நேசமும் அக்கறையும்… யோவ் ஜி, நீதான் என் மாமா உடம்புக்கு எந்த பிரச்சனையும் இல்லாம நீண்ட ஆயுளைக் கொடுத்து பார்த்துக்கணும்…” என வேண்டிக் கொள்ள, “ஹூம்… எல்லாரோட அன்பையும் புரிஞ்சுக்கற, உன் புருஷன் அன்பை மட்டும் புரிஞ்சுக்க மாட்டிங்கறியே…” என யோசித்துக் கொண்டிருந்தார் பிள்ளையார்.
ஜன்னல் அருகே வந்தவள் திரைசீலையை விலக்க சூரியன் மிதமாய் வெளிச்சத்தைப் பொழிந்து கொண்டிருக்க வானமெங்கும் மேகப் போர்வை போர்த்தியது போல் இதமான காலநிலை சுகமாய் தோன்றியது. அழைப்பு மணியின் ஓசையில் கலைந்தவள் கதவைத் திறந்தாள்.
“ஐஷு, என்ன பண்ணிட்டிருக்க… போர் அடிச்சா அங்கே வாம்மா…” என்றார் ஜெஸ்சி.
“இல்ல ஆன்ட்டி சும்மா துணி எல்லாம் எடுத்து வச்சிட்டு இருந்தேன்…”
“ஓ… ஆபீஸ் போயும் உன் புருஷனுக்கு உன்னைப் பத்தியே யோசனை போலருக்கு… எனக்கு போன் பண்ணி அவளைப் போயி பாருங்க… தனியா என்ன பண்ணுறாளோன்னு புலம்பல்… அதான் எட்டிப் பார்த்தேன்…” அவர் சிரிப்புடன் சொல்ல அவளுக்கு கூச்சமாய் இருந்தது.
“இந்த ராகு என்ன லூசா… என்னமோ கைக்குழந்தையை தனியா விட்டுட்டுப் போன போல ஓவர் அலம்பல் பண்ணிட்டு இருக்கான்… வரட்டும் வச்சுக்கறேன்…” மனதுக்குள் யோசித்தவள், “உள்ள வாங்க ஆன்ட்டி…” என்று அழைக்க அதற்குள் டானியல் எட்டிப் பார்த்தார்.
“ஜெஸ்சி டார்லிங், நீ இங்க இருக்கியா…”
கேட்டுக் கொண்டே அவர்களிடம் வந்தவரின் கையில் ஒரு ஜூஸ் கிளாஸ் இருந்தது.
“ஐஷு, நான் ஒரு புது ஜூஸ் டிரை பண்ணி இருக்கேன்… வாங்க ரெண்டு பேரும் டேஸ்ட் பண்ணிப் பாருங்க…” என்ற கணவனை நோக்கி, “நாங்க டேஸ்ட் பண்ணவா… இல்ல நீங்க எங்களை வச்சு டெஸ்ட் பண்ணவா… என்ன ஜூஸ் பண்ணிங்க டானி…” என்றார் ஜெஸி.
“காலைல வாக்கிங் போனப்போ நம்ம ஜெகன் ஒரு ஜூஸ் பத்தி சொன்னான்… சரி டிரை பண்ணிப் பார்க்கலாமேன்னு பண்ணேன்… குடிச்சுப் பார்த்துட்டு நீங்களே என்ன ஜூஸ்னு சொல்லுங்க…” என்றவர் உற்சாகத்துடன் உள்ளே சொல்ல, “வா ஐஷு… அடிக்கடி டானி இப்படி என்னை சோதனை எலி ஆக்குவார்… இன்னைக்கு நீயும் மாட்டிகிட்ட… பயப்படாம வா… டெஸ்ட் பண்ண கூப்பிட்டாலும் டேஸ்ட்டா தான் செய்திருப்பார்…” புன்னகையுடன் கூறியவர் அவள் கை பற்றி அழைக்க, கதவை வெறுமனே சாத்திவிட்டு அவளும் அவருடன் சென்றாள்.
அதற்குள் இரண்டு கிளாஸில் டெஸ்ட் ஜூஸை ஊற்றி தயாராய் வைத்திருந்தவர் அவர்களிடம் நீட்ட ஐஷு தயக்கத்துடனே வாங்கிக் கொண்டாள்.
“கமான் ஐஷு டியர்… குடிச்சு எப்படி இருக்குனு சொல்லு…” என்றவர் ஆவலுடன் மனைவியை நோக்கி, “ஜெஸ்சி டார்லிங், நீயும் குடிடா…” என்றார் புன்னகையுடன். ஜெஸ்சி குடித்துவிட்டு யோசனையாய் முகம் மாற மீண்டும் சுவைத்துக் குடித்தார். ஐஷுவும் வாயில் வைக்க அருமையான சுவையில் ஐஸ் கட்டியின் குளிர்மையுடன் ருசியாய் இருக்க கடகடவென்று குடித்துவிட்டாள்.
“சூப்பர் அங்கிள், செம டேஸ்ட்… என்ன ஜூஸ் இது…”
“வெயிட் பேபி… என் சீனியர் டார்லிங் கண்டு பிடிக்கிறாளா பார்ப்போம்…” என்றார் மனைவியை ஆவலுடன் நோக்கி.
நிதானமாய் ருசித்து குடித்த ஜெஸ்சி, “இது இளநீர் ஜூஸா…” என்று கேட்க, “சபாஷ்…” என்று அணைத்துக் கொண்டார்.
“என்ன இருந்தாலும் ஓல்ட் ஈஸ் எக்ஸ்பீரியன்ஸ்டு…” என்றவர், “எப்படி டார்லிங் கண்டு பிடிச்சே…” என்று கேட்க, “இளநீர் வழுக்கை டேஸ்ட் வந்துச்சு டானி…” என்றார் அவர் புன்னகையுடன்.
“என்ன பேபி டார்லிங், ஜூஸ் பிடிச்சுதா…” கேட்டவரிடம் பலமாய் தலையாட்டிய ஐஷு, “சூப்பரா இருக்கு அங்கிள்… செம டேஸ்ட்…” எனவும், “எப்படிங்க செய்திங்க டானி…” என்றார் ஜெஸ்சி.
“வெரி சிம்பிள்மா… இளநீர் ஒரு கப், வழுக்கை ஒரு கப்… ரெண்டு ஸ்பூன் சுகர் சேர்த்து மிக்சில அரைச்சுட்டு அதுல ரெண்டு ஸ்பூன் லெமன் சாறு, ஒரு சிட்டிகை உப்பு கலந்து ஐஸ் கியூப் போட்டா இளநீர் ஜூஸ் ரெடி…” என்றார்.
“ம்ம்… என் டானிக்கு எல்லாமே சிம்பிள்தான்…” என்று அவரைத் தோளோடு அணைத்து பாராட்டினார் ஜெஸ்சி. ஜெஸ்சிக்கு உதவி செய்வதாகக் கூறி சமையலறையிலும் டானியல் நுழைந்து கொள்ள கலகலப்பான அந்தத் தம்பதியருடன் ஐஷுவும் இணைந்து பொருந்திக் கொண்டாள். அவர்கள் இருவரும் தன் முன்னில் இயல்பாய் கொஞ்சிக் கொள்வதைக் கண்டு முதலில் கூச்சமாய் தோன்றினாலும் இருவருக்குள்ளும் இருந்த புரிதலும் அன்னியோன்யமும் ஐஷுவுக்கு ஆச்சர்யமாய் இருந்தது.
வயது கூடக் கூடத்தான்
வலிமையாகிறது காதல்…
புரியாத வயதில்
அறியாமல் முளைக்கும்
காதலை விட
புரிதலில் மலர்ந்த
காதலுக்கு என்றும்
மணமும் குணமும்
அதிகம் தானே…

Advertisement