Advertisement

அத்தியாயம் – 14
“ஹலோ ஐஷு பேபி…” அலைபேசியில் பேத்தியின் எண் ஒளிர்வதைக் கண்டு உற்சாகத்துடன் குரல் கொடுத்தார் கோமளவல்லி.
“ஹாய் கோமு, உன்னை எவ்ளோ மிஸ் பண்ணறேன் தெரியுமா…” கொஞ்சும் குரலில் பாசம் வழுக்கியது.
“ஐ ஆல்சோ மிஸ் யூ டியர்… வாட் டு டூ… பிரேக்பாஸ்ட் முடிஞ்சுதா… ஹவ் ஈஸ் ரகுஸ் குக்கிங்…”
“ஹூக்கும்… இன்னைக்கு ரகு குக்கர் இல்ல, பக்கத்துக்கு வீட்டு ஜெஸ்சி ஆன்ட்டி வீட்ல ஓசி பிரேக்பாஸ்ட் சாப்பிட்டோம்… அங்கிளும் ஆன்ட்டியும் சூப்பர் ஜோடி… இங்கே எல்லாரும் ரொம்ப நல்லா பழகுறாங்க கோமு…”
“ஓ நைஸ்… வேர் ஈஸ் ரகு… நாட் நியர் யூ…”
“இப்ப எதுக்கு ராகுவை கேக்கறே… ஆபிஸ் போயிருக்கு…”
“ஹோ பேபி… ஒய் யூ டாக் லைக் திஸ்… ஹி ஈஸ் யுவர் ஹஸ்பன்ட்… கிவ் ரெஸ்பெக்ட்…”
“ஓ… புருஷனா இருந்தா ரெஸ்பெக்ட் கொடுக்கணுமா… யாரு, அந்த ஓணாண்டி சொல்லுச்சா… இதுக்குதான் என்னைக்  கல்யாணம் பண்ணிக்காதன்னு சொன்னேன்… கேக்க மாட்டேன்னு பிடிவாதம் பிடிச்சான்ல… அனுபவிக்கட்டும்… முதல்ல உன்னோட அரைகுறை இங்க்லீஷ் சேனலை ஆப் பண்ணு… இல்லேன்னா நான் போனை வச்சிட்டுப் போயிடுவேன்…” சலிப்புடன் கூறினாள்.
“சரி, கோச்சுக்காதடி செல்லம்… நான் அப்புறம் யாருகிட்ட இங்க்லீஷ் பேசிப் பழகறது… உன் அப்பாவும், அம்மாவும் நான் வாயைத் திறந்தாலே தெறிச்சு ஓடிடறாங்க… நீ தானே கொஞ்சமாச்சும் என்னைப் பொறுத்துப்ப… ரகு ரொம்பப் பாவம்… அவனை இப்படில்லாம் சொல்லாத… என்னைப் போல அவனும் உன்னை ரொம்ப நேசிக்கிறான்… நீ இல்லாம நான் எவ்ளோ மிஸ் பண்ணறேன் தெரியுமா…” பாட்டியின் குரலில் ஒலித்த நேசத்தில் உருகியவள்,
“அச்சோ, என்னை அவ்ளோ மிஸ் பண்ணா கிளம்பி இங்க வந்திடேன் கோமு…” என்றாள் ஆவலுடன்.
“ம்ம் வரேன்… என் செல்லக் குட்டி புருஷனோட குடும்பம் நடத்தற அழகைப் பார்க்க எனக்கும் ஆசையா இருக்கு…”
“ஹூக்கும், விளங்கிடும்…” ஐஷு உதட்டுக்குள் முனங்கியது கோமுவின் காதில் விழ கண்டுகொள்ளாமல் தொடர்ந்தார்.
“சரி, லஞ்சுக்கு என்ன… நீ சமைக்கப் போறியா…”
“என்ன கோமு கிண்டல் பண்ணறியா…”
“நான் என்னடி கிண்டல் பண்ணேன்… உன் புருஷன் ஆபீஸ் போயிட்டா நீதானே சமைக்கணும்… பசிக்கலையா…”
“ஹூக்கும்… இந்த நக்கல் எல்லாம் வேண்டாம்… நானே காலைல அவங்க வீட்ல சரியா சாப்பிடாம செம பசில இருக்கேன்… சும்மா வெறுப்பேத்தாத… ராகுகாலம் எப்ப ஹோட்டல்ல லஞ்ச் வாங்கிட்டு வரும்னு வெயிட்டிங்…”
“அப்ப இன்னைக்கு ஹோட்டல் சாப்பாடா… தட் ஈஸ் நாட் குட் பார் ஹெல்த்… ஒய் டூ யூ குக்…”
“ஏன் கோமு… ராகு காலத்தை எம கண்டமா மாத்த பிளான் போடறியா… எனக்கு அந்த ரகுவைப் பிடிக்காது தான்… அதுக்காக என் சமையலை சாப்பிட வச்சு அவனைப்  போட்டுத் தள்ளுற அளவுக்கு நான் மோசமில்லை… என்னைக் கொலைக்கேஸ்ல உள்ள தள்ள பிளான் பண்ணறியா…”
“ச்சே… ஒரு ஆம்பளைப் பையன் அவ்ளோ நல்லா சமைக்கிறான்…. வீட்டைப் பார்த்துக்கறான்… ஒரு பொண்ணா இருந்துட்டு இப்படி சொல்ல உனக்கு வெக்கமாயில்ல…”
“வெக்கமா… அது எப்படி இருக்கும், எங்க கிடைக்கும்… அதுக்கு நிறமிருக்கா… சுவையிருக்கா… சொல்லு கோமு…” அவள் நக்கலாய் கேட்கவும் கோமளவல்லி கடுப்பானார். “நான் என்ன த்ரீ ரோசஸ் டீத்தூள் விளம்பரம் பத்தியா சொல்லிட்டு இருக்கேன்… அழகா, லட்சணமா சமைக்கக் கத்துக்க… ஹோட்டல் சாப்பாடெல்லாம் வேண்டாம்…”
“ம்ம்… பார்க்கலாம்… பார்க்கலாம்… உன்னோட பேசிபேசி என் எனர்ஜி எல்லாம் போயிருச்சு… இப்போதைக்கு காபி போடறது எப்படின்னு சொல்லிக் கொடு… மத்ததெல்லாம் நான் அப்புறம் மெதுவா பழகிக்கறேன்…”
“ம்ம்… குட் கேர்ள்…” என்றவர் ஒவ்வொரு ஸ்டெப் முடிந்து காபி ஆற்றும் நேரத்தில் அழைப்புமணி அலறியது.
“ஓகே கோமு… நான் காபி போட்டு பார்சல் பண்ணறேன்… குடிச்சிட்டு என் பர்ஸ்ட் காபி எப்படி இருந்துச்சுன்னு கமண்ட் சொல்லு… யாரோ காலிங் பெல் அடிக்கிறாங்க… அப்புறம் பேசறேன்… உன் மகன், மருமகளைக் கேட்டதா சொல்லு பை கோமு…” என்றவள் அழைப்பைத் துண்டித்து கதவைத் திறக்க 
ஒரு குட்டிப் பட்டாளம் நின்று கொண்டிருந்தது.
நான்கைந்து வயதில் ஆணும் பெண்ணுமாய் நான்கு குழந்தைகள் அவளை ஆவலுடன் நோக்கினர். ஐஷுவை புன்னகையும் ஆவலுமாய் நோக்கிவிட்டு ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
“ஆன்ட்டி அழகா இருக்காங்கல்ல…” ஒரு பெண் குழந்தை இன்னொரு பெண் குழந்தையிடம் கிசுகிசுத்தது. அதில் சற்றுப் பெரியவன் ஒருவன், “நீங்கதான் ரகு அங்கிள் ஒய்பா…” என்றான் ஆர்வத்துடன். அழகழகாய் தன்னையே ஆவலுடன் நோக்கிக் கொண்டு நின்ற அந்த குட்டிப் பூக்களைக் கண்டதும் ஐஷுவின் மனதிலும் ஒரு உற்சாகம் தொற்றிக் கொண்டது.
குழந்தையின் சிரிப்பு
காண்பவர் மனதிலெல்லாம்
விதைத்துச் செல்கிறது
தன் புன்னகையை…
அவர்களை நோக்கிப் புன்னகைத்தவள் “ம்ம்..” என்று தலையாட்டி, “நீங்கலாம் இங்க உள்ள குட்டீஸா…” என்று கேட்க, “எஸ் ஆன்ட்டி… நாங்கலாம் பிரண்ட்ஸ்…” என்றான் அந்தப் பையன். அவளையே ஆவலுடன் பார்த்துக் கொண்டிருந்த குட்டிப் பெண்ணிடம் அமர்ந்தவள், “ஹாய் கியூட்டி, “என்னையும் உங்க பிரண்டா சேர்த்துக்கறிங்களா…” என்று கேட்க அது நாணத்துடன் பெரியவளின் பின்னில் சென்று ஒளிந்து கொண்டது.
“உங்க பேரென்ன ஆன்ட்டி… ரகு அங்கிள் இல்லையா…”
“இல்ல, அங்கிள் வெளியே போயிருக்கார்… நீங்க உள்ளே வாங்க, நாம பேசிட்டு இருக்கலாம்…” என்று கூற அனைவரும் உள்ளே சோபாவில் வந்து அமர்ந்தனர். ஊரிலிருந்து கொண்டு வந்திருந்த அதிரசம், முறுக்கை ஒரு தட்டில் போட்டு அவர்களிடம் கொடுக்க குஷியோடு சாப்பிட்டுக் கொண்டே பேசத் தொடங்கினர்.
ஒரு அக்கா, தங்கை தியா, ரியா, மற்ற இரு ஆண் குழந்தைகள் சூர்யா, சங்கர்… இதில் சங்கரும் தியாவும் ஒரே வயதை சேர்ந்தவர்கள். சங்கருக்கு நான்கு வயது. ரியாவுக்கு மூன்று வயது… அவள் மட்டும் பள்ளிக்கு செல்லவில்லை.
“ஆன்ட்டி நீங்க ரொம்ப அழகாருக்கீங்க…” தியா சொல்ல சிரித்தவள், “தேங்க்ஸ்… என்னை நீங்க அக்கான்னு கூப்பிட்டாலே போதும்…” என்றவள் அவர்களைப் பற்றி கேட்டுக் கொண்டிருக்க சிறிது நேரத்திலேயே அவளோடு செட்டாகி விட்டனர். அப்போது மீண்டும் அழைப்பு மணி ஒலிக்க எழுந்து கதவைத் திறக்க சுமிதாவும் மீனாவும் நின்று கொண்டிருக்க புன்னகைத்தாள்.
“ஸாரிமா, டிஸ்டர்ப் பண்ணிட்டோமா… பசங்க ரகு அங்கிள் ஒய்பை பார்த்துட்டு வர்றேன்னு வந்தாங்க… இன்னும் காணமேன்னு பார்க்க வந்தோம்…” என்று சொல்வதற்குள் அன்னை சுமியின் குரல் கேட்டு தியாவும், ரியாவும் எட்டிப் பார்க்க மற்றவர்களும் வந்தனர்.
அவர்களைக் கண்டதும், “ஆஹா… எல்லாரும் இங்கயே செட்டில் ஆகிட்டீங்களா…” என்ற மீனா,
“சங்கர்… வித்யாவும் உன்னைத் தேடிட்டு இருந்தா…” என்று சொல்ல, “நான் மம்மி கிட்ட சொல்லிட்டு தானே ஆன்ட்டி வந்தேன்…” என்றவன், “ஓகே அக்கா பை… ஈவ்னிங் வரோம்…” என்று கிளம்பினான்.
அதற்குள் அவர்களின் குரலைக் கேட்டு ஜெஸிம்மா எட்டிப் பார்க்க சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தனர். அவர்கள் இயல்பாய் ஒருவருக்குள் ஒருவர் பேசிக் கொண்டது ஐஷுவிற்கு வியப்பாய் இருந்தது. சென்னை போன்ற மாநகரில் அபார்ட்மெண்டில் இருப்பவர்கள் அடுத்த வீட்டில் வசிப்பவரைக் கூடத் தெரிந்து கொள்ள மாட்டார்கள் என்றே கேள்விப் பட்டிருக்க ஒரு குடும்பம் போல பழகியவர்களைக் கண்டு சந்தோஷமாய் இருந்தது.
“என்ன ஐஷு, ரகு வீட்ல இல்லையா…” கேட்ட ஜெஸ்சியிடம், “ஆபீஸ் போயிருக்கார்…” என்றதும், “இந்தப் பையன் ஏன் இப்படி இருக்கான்… கல்யாணத்துக்கு முன்னாடி தான் ஆபீசே கதின்னு கிடப்பான்னு நினைச்சா கல்யாணமாகி பொண்டாட்டி வந்தும் ஆபீஸ் தானா… வரட்டும் கேக்கறேன்…” என்றவர், “உனக்கு தனியா போர் அடிச்சா இங்க வந்திரு… மதியம் உங்களுக்கும் சமைக்க சொல்லிடட்டுமா…” எனக் கேட்க, “அச்சோ வேண்டாம் ஆன்ட்டி, லஞ்ச் வாங்கிட்டு வரேன்னு சொல்லிருக்கார்…” என்றாள் ஐஷு அவசரமாக.
“அட, இதுக்கு எதுக்குமா பதர்றே… எங்க சமையல் அவ்ளோ மோசமாவா இருக்கு…” என்று சிரித்தவர் டானியலின் அழைப்பில் உள்ளே செல்ல மற்றவர்களும் தங்கள் வீட்டுக்கு ஐஷுவை சாப்பிட அழைக்க அவள் புன்னகையுடம் மறுத்துவிட்டாள். அவர்கள் சென்ற சிறிது நேரத்தில் மீண்டும் அழைப்புமணி ஒலிக்க கதவைத் திறந்தவள் முன் புன்னகையுடன் நின்றான் ரகுவரன்.
“சாரி பேபி, லேட் ஆகிடுச்சா… போர் அடிக்க விட்டுட்டேனா…” கேட்டவன் கையிலிருந்த கவரை மேசை மீது வைத்துவிட்டு அறைக்குள் நுழைய சுகமாய் பரவிய பிரியாணியின் மனம் நாசிக்குள் நுழைந்து இரைப்பை சுரப்பியைத் தூண்டியது.
“உனக்கு சிக்கன் பிரியாணி பிடிக்கும்னு அத்தை சொன்னாங்க… அதான் வாங்கிட்டு வந்தேன்… வா சாப்பிடலாம்…” சொன்னவன் எடுத்து வைக்க, “ஹூக்கும், எனக்கு சிக்கன் பிரியாணி பிடிக்கும்னு சொன்ன அத்தைக்கு கடுவாடு பிடிக்காதுன்னு சொல்லத் தெரியலையோ…” என நினைத்துக் கொண்டே அமைதியாய் அமர்ந்தாள்.
“இன்னைக்கு ஒரு நாள் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ ஐஷு மா… நாளைல இருந்து நம்ம வீட்லயே சமைச்சிடலாம்… ஈவ்னிங் போயி கொஞ்சம் குரோசரி அயிட்டம்ஸ், வெஜிடபிள்ஸ்  எல்லாம் வாங்கிட்டு வந்திடலாம்… உனக்கும் இங்கே பக்கத்துல ஒவ்வொண்ணும் எங்கிருக்குன்னு காட்டிட்டா எதாச்சும் வேணும்னாலும் போயி வாங்கிக்கலாம்…”
அவன் சொல்லிக் கொண்டிருக்க, சிக்கன் பிரியாணியின் சுவையில் மூழ்கி கைக்கும் வாய்க்கும் யுத்தம் நடத்திக் கொண்டிருந்தவள், “இவன் சாப்பிடும்போது லொடலொடன்னு பேசறதால தான் ஒடக்கான் மாதிரி இருக்கானோ…” என நினைத்துக் கொண்டே அவனை ஒரு லுக் விட்டவள், “டாக் லெஸ்… ஈட் மோர்…” என்று கூறவும் திருதிருவென்று பார்த்தவன் புரிந்ததும் சிரித்தான்.
“ஹாஹா… அது அப்படி இல்ல ஐஷு… டாக் லெஸ்… வொர்க் மோர் டா செல்லம்…” எனவும் முறைத்தவள், “எங்களுக்கும் தெரியும்… சிச்சுவேஷனுக்கு தகுந்த போல சொல்லணும்ல…” என்றுவிட்டு சாப்பிடுவதைத் தொடர திகைத்தவன் சிரித்தான்.
“ஹாஹா… அச்சோ, என் செல்லக்குட்டி எவ்ளோ அழகா பேசறா… இவ பிரியாணி திங்கற வேகத்தைப் பார்த்தா இதை வச்சே இவளைக் கரக்ட் பண்ணிடலாம் போலருக்கே…” என யோசனையுடன் பார்த்துக் கொண்டிருந்தான்.
அவளோ, “இவன் என்ன இன்னும் சாப்பிடாம வச்சிருக்கான்… இப்படி சாப்பிட்டா எப்படி உடம்புல ஒட்டும்… இந்த வயசுக்கு ஒரு ஆம்பளைப் பையன் ரெண்டு பிரியாணியை சர்வ சாதாரணமா சாப்பிடலாமே… இவன் என்னடான்னா செந்தில் கையில டீய வச்சிட்டுக் குடிக்கலாமா வேண்டாமான்னு ஆராய்ச்சி பண்ணிட்டு இருந்த போல பிரியாணிய முன்னாடி வச்சிட்டு சாப்பிடாம இருக்கான்… ஒருவேளை பிரியாணி பிடிக்காதோ…” என யோசித்துக் கொண்டிருந்தாள்.
கல்யாணம் முடிந்து முதன்முறை ஆபீசுக்கு சென்றவனை அனைவரும் நலம் விசாரிக்க, அவர்களிடம் பதில் சொல்லி முடித்தவன் செய்ய வேண்டிய புரோஜக்ட் குறிப்பை காப்பி எடுத்துக் கொண்டு வீட்டுக்குக் கிளம்பிக் கொண்டிருக்க அலைபேசியில் கோமளவல்லி அழைத்தார்.
அலைபேசியை எடுத்தவனிடம் “ஹலோ புது மாப்ளே… வீட்டுக்குப் போனதும் பொண்டாட்டிய விட்டுட்டு ஆபீசுக்கு ஓடிட்டியாமே…” என்று சிரிப்புடன் கேட்க, “ஆமா கிரான்ட்மா, ஒரு முக்கியமான வேலை… முடிச்சிட்டு இதோ வீட்டுக்கு கிளம்பிட்டேன்…” என்றான் ரகுவரன்.
“ம்ம்… யூ ஆல்வேஸ் குட் பாய்… ஆர் யூ பிஸி நவ்…”
“நோ நோ சொல்லுங்க கிரான்ட்மா…” என்றான் பவ்யமாக.
“ரகு, உன்னை நினைச்சா எனக்கு பெருமையா இருக்கு… உன் வயசுப்பசங்க ஒவ்வொருத்தனும் எப்படில்லாமோ இருக்காங்க… பட் யூ ஆர் டோட்டல்லி டிப்பரன்ட்…”
“ஹாஹா… அது என்னோட கனவு கிரான்ட்மா… ஐஷு என்னை மறுபடியும்  பார்க்கும்போது என்கிட்ட அவளுக்கு எந்தக் குற்றமும் சொல்லற போல நான் இருக்கக் கூடாதுன்னு என்னை நானே பார்த்துப் பார்த்து செதுக்கிக்கிட்டேன்… எனக்கு அவளை அவ்ளோ பிடிக்கும்…”
“ம்ம் புரியுதுப்பா… ஆனா அவ தான் உன் அன்பைக் கொஞ்சம் கூடப் புரிஞ்சுக்காம தகராறு பண்ணிட்டு இருக்காளே…”
“ஹாஹா… இன்றைய எங்கள் தகராறு… நாளை உலகம் பேசும் வரலாறு… யூ டோன்ட் வொர்ரி கிரான்ட்மா…”
“அட நீ கூட பன்ச் எல்லாம் பேசறியே…” கோமு சிரிக்க அவன் தொடர்ந்தான்.
“அவளை நான் பார்த்துக்கறேன்… அவளுக்கு என்னைப் பிடிக்காம எல்லாம் இல்ல… நான் வேண்டாம்னு சொல்லியும் நீ எப்படி என்னைக் கல்யாணம் பண்ணலாம்னு ஒரு கோபம், அதனால என்னைப் புரிஞ்சுக்க மாட்டேன்னு பிடிவாதம் பிடிக்கிறா… அவளை எப்படி சரி பண்ணறதுன்னு எனக்குத் தெரியும் கிரான்ட்மா… நீங்க ப்ரீயா இருங்க…”
“ம்ம்… உன்மேல உள்ள நம்பிக்கைல தான் அவளை இந்தக் கல்யாணத்துக்கு சம்மதிக்க வச்சேன்… நீங்க சந்தோஷமா இருக்கணும்னு தான் என் ஆசை…” என்றார் நெகிழ்ச்சியுடன்.
“எல்லாம் சரியாகும் கிரான்ட்மா… என் ஐஷுவுக்காக நான் எதையும் பொறுத்துப் போவேன்…”
“ம்ம்… சரிப்பா… இன்னைக்கு லஞ்ச் ஹோட்டல்லயாமே…”
“ஆமா, உங்களுக்கு எப்படி தெரியும்…”
“ஐஷு கிட்ட பேசினேன்… அவளுக்கு சிக்கன் பிரியாணி ரொம்பப் பிடிக்கும்… நான் சொன்னேன்னு சொல்லிடாதே…”
“ஓ சூப்பர்… வாங்கிட்டா போகுது…” என்றவன் பை சொல்லி போகும் வழியில் பிரியாணி பார்சலை வாங்கி வந்திருந்தான். சாப்பிடாமல் யோசித்துக் கொண்டிருந்தவன் அருகில் எழுந்த விக்கல் சத்தத்தில் திரும்ப ஐஷு அவசரமாய் தண்ணீரை குடித்துக் கொண்டிருந்தாள்.
“மெதுவா சாப்பிடலாம்ல ஐஷு… இப்பப் பாரு விக்கிக்கிச்சு…” என்றவன் அமைதியாய் சாப்பிடத் தொடங்க அவள் “ங்கே…” என்று பார்த்துக் கொண்டிருந்தாள்.
அவளது முகத்தை நோக்கியவனுக்கு சிரிப்பு வந்தாலும் அடக்கிக் கொண்டு திரும்பிக் கொண்டான்.
உன் உதட்டுச் சிவப்பை
என் உதட்டில்
பூசிக் கொள்ளக்
காத்திருக்கிறேன் கண்ணே…
கடனாகக் கொடு…
மீட்டர் வட்டியும் சேர்த்து
திரும்பத் தருகிறேன்…
முத்தத்தின் சத்தத்தில்
மௌனங்கள் சுவைத்திருப்போம்…

Advertisement