Advertisement

அத்தியாயம் – 13
குளிர்ந்த காற்று திறந்திருந்த ஜன்னலின் வழியே நுழைந்து உறங்கிக் கொண்டிருந்த ஐஷுவின் கூந்தலைக் கலைத்து விளையாடிக் கொண்டிருந்தது. அவளுக்கு எதிர்பர்த்தில் ரயிலின் ஓட்டத்தில் கண்ணயர்ந்திருந்த ரகு அதன் இயக்கம் தடைபட்டதில் கண்ணைத் திறந்து எந்த ஸ்டேஷன் என்று கவனித்தான்.
அவர்கள் முன்தினம் இரவு ஏறியிருந்த பாண்டியன் எக்ஸ்பிரஸ் அதிகாலை இருட்டில் தாம்பரத்தைத் தொட்டு ஸ்டேஷனில் நின்று கொண்டிருந்தது. பயணிகள் சிலர் இறங்க அடுத்த நிமிடத்தில் சைரன் ஒலியைத் தொடர்ந்து ரயில் மீண்டும் வேகமெடுக்கத் தொடங்கியது.
இனி அடுத்து எக்மோரில் தான் வண்டி நிற்கும் என நினைத்தவன் பார்வை குழந்தை போல் உறங்கிக் கொண்டிருந்த மனைவியின் மீது படிய, புன்னகைத்தான்.
“நேத்து வீட்ல இருந்து கிளம்பும்போது அழுது ஆர்பாட்டம் பண்ணிட்டு இப்ப குழந்தை மாதிரி தூங்கிட்டு இருக்கறதைப் பாரு… அப்படியே அந்த கொழுகொழு கன்னத்தைக் கடிச்சு வைக்கணும் போல ஆசையா இருக்கு…” அவன் மனதுக்குள் நினைத்துக் கொண்டிருக்க அவள் மெல்ல அசைந்தாள்.
“ஆஹா, மனசுல கூட நினைக்க விட மாட்டேங்கிறாளே என் செல்ல ராட்சசி…” என்றவன் அவளைப் பார்த்துக் கொண்டே கண்ணை மூடிக் கொள்ள புதுமலராய் கனவில் மலர்ந்து அவன் கைகோர்த்து நடந்தாள் அவள். சுகமான கனவில் லயித்திருந்தவன் உதட்டில் புன்னகை உறைந்திருந்தது.
நேரம் விடியலை நெருங்கிக் கொண்டிருக்க ரயில் சீரான வேகத்துடன் எக்மோர் ஸ்டேஷனை நோக்கிப் பாய்ந்தது. பர்த்திலிருந்து கீழே இறங்கிய ரகு, ஐஷுவின் கையில் தட்டி, “ஐஷு… எழுந்திரு… ஸ்டேஷன் வந்திருச்சு…” என்று கூற கண்ணைத் திறந்தவள், சுற்றிலும் பார்த்துவிட்டு வெளியே இருந்த இருட்டில் ஒன்றும் தெரியாமல் தன்னை சரி செய்து கீழிறங்கி அமர்ந்து கொண்டாள்.
“ஐஷு, பாத்ரூம் போகணும்னா போயிட்டு வந்திரு…”
“ப்ச்… வேணாம்…”
“சரி, நான் போயிட்டு வந்திடறேன்…” என்றவன் எழுந்து செல்ல இருட்டில் வேகவேகமாய் தடதடவென்ற சத்தத்துடன் கடந்து கொண்டிருந்த வெளிக் காட்சிகளை ஜன்னல் வழியே நோக்கிக் கொண்டிருந்தாள் ஐஸ்வர்யா. ரயிலின் வேகம் மெல்லக் குறையத் தொடங்க சென்னை எழும்பூர் என்ற மஞ்சள் பலகை வரவேற்க பிரகாசமான வெளிச்சத்துடன் பிரம்மாண்டமாய் ரயில் நிலையம் தெரிந்தது.
“பயணிகளின் கனிவான கவனத்திற்கு…” என்ற குரலைத் தொடர்ந்து ஒலிபெருக்கியில் அழகான பெண் குரல் ஒன்று ரயிலின் வரவை அறிவித்துக் கொண்டிருக்க பயணிகள் அவர்களின் லக்கேஜுடன் இறங்குவதற்குத் தயாராய் கதவருகே சென்று நிற்கத் தொடங்கினர். ரகு வருகிறானா என்று பார்த்துக் கொண்டே அமர்ந்திருந்த ஐஷுவின் உள்ளம் படபடவென்று அடித்துக் கொள்ள அவனைக் காணாமல் கண்களில் ஒரு பயம் வந்து ஒட்டிக் கொண்டது.
“என்னாச்சு… டாய்லட் போனவன் அங்கயே படுத்து தூங்கிட்டானா… ரயில் நிக்கப் போகுது… இன்னும் இவனைக் காணோம்…” தவிப்புடன் அவள் யோசித்துக் கொண்டிருக்க ரயில் சின்ன ஒரு அதிர்வுடன் இயக்கத்தை நிறுத்தி நின்றது. அப்போது சாவதானமாய் அலைபேசியில் யாருடனோ பேசிக் கொண்டே வந்தான் ரகுவரன். அவளது முகத்தில் எள்ளும், கொள்ளும் வெடிப்பதைக் கண்டு மனதுக்குள் குதூகலித்தவன், “என்னாச்சு ஐஷு… முகம் ஒரு மாதிரி டல்லா இருக்கு…” என்றான் அன்புடன்.
“ஹூம்… எழுந்ததும் மேக்கப் போட மறந்துட்டேன்…” என்றாள் வெடுக்கென்று.
அதைக் கேட்டு உதட்டுக்குள்ளேயே சிரித்துக் கொண்டவன் இரண்டு கையிலும் லக்கேஜை எடுத்துக் கொண்டு நகர ஒரு சின்ன பேகை மட்டும் ஐஷு எடுத்துக் கொண்டாள். இருவரும் நீண்ட நடைபாதையைக் கடந்து வெளியே வந்து டாக்ஸியில் அமர அவர்களின் வீட்டை நோக்கி பயணம் தொடங்கியது.
அப்போதும் அவள் முகம் தெளிவில்லாமலே இருக்க ஆறுதலாய் அவள் கையைத் தொட்டவன், “பயந்துட்டியா ஐஷு…” என்று கேட்க கையை இழுத்துக் கொண்டவள், “இல்ல, தொல்லை விட்டுச்சுன்னு ரொம்ப சந்தோஷமா இருந்தேன்…” என்றாள் வம்புக்கென்றே.
அவள் வார்த்தையில் ஒரு நொடி மனம் வலிக்க, காட்டிக் கொள்ளாமல் புன்னகையுடனே திரும்பிக் கொண்டவன் அமைதியாய் இருக்க அவளுக்கு ஒரு மாதிரி இருக்க, மனதிலுருந்த கேள்வியை கேட்டே விட்டாள்.
“அவ்ளோ நேரம் என்ன பண்ணிட்டு இருந்தீங்க…”
அவளை நோக்கி கண் சிமிட்டி சிரித்தவன், “தூங்கிட்டு இருந்தேன்…” என்று கூற அவள் முறைத்தாள்.
அதற்குப் பின் அவளும் அமைதியாய் வெளியே பார்த்துக் கொண்டிருக்க நாப்பது நிமிடத்தை முழுதாய் முழுங்கியபின் அவர்கள் வீடு இருக்கும் எல்லைக்குள் டாக்ஸி நுழைந்தது.
சூரியன் வெளிச்சக் கதிர்களை வீசத் தொடங்கியிருக்க பெட்டிகளை ஒன்றின் மேல் ஒன்றாய் அடுக்கி வைத்தது போல் ஒரே சீராக நிமிர்ந்து நின்ற கட்டிடங்களை சற்று வியப்புடனே ஐஷு நோக்கிக் கொண்டு வர “ராயல் அவென்யூ” என்ற முகப்பைத் தாங்கி நின்ற அவர்கள் அபார்ட்மென்ட் கேட்டுக்குள் நுழைந்த டாக்ஸி நின்றது.
ரகு முதலில் இறங்கி லக்கேஜை வெளியே எடுக்க ஐஷுவும் இறங்கினாள். புதிய இடமும், சூழ்நிலையும் ஒருவித தயக்கத்தைக் கொடுக்க அமைதியாய் இறங்கியவள் முன்பு நான்கைந்து பெண்கள் வந்து சூழ்ந்து கொண்டனர்.
“ஹாய் ரகு… ஹலோ புதுப் பொண்ணே… வெல்கம் டு ராயல் அவென்யூ…” என்று வரவேற்க அவள் திகைப்புடன் நின்றாள்.
“வாங்க மாப்பிள்ளை சார்… வாம்மா புதுப்பொண்ணு… ரெண்டு பேரும் சேர்ந்து நில்லுங்க…” என்று சற்று வயதான பெண்மணி ஒருவர் முகம் நிறையப் புன்னகையுடன் அவர்களை ஒன்றாய் நிறுத்த ஆரத்தித் தட்டுடன் ஒரு பெண் வந்து அவர்களுக்கு ஆலம் சுற்றினார்.
புன்னகையுடன் அவர்களை நோக்கிய ரகு, “ஐஷு இவங்க தான் ஜெஸி ஆன்ட்டி… இவங்க சுமிதாக்கா, இவங்க வித்யாக்கா, இது சுவாதி, இவங்க மீனாக்கா…” என்று ஒவ்வொருவரையும் அறிமுகப்படுத்தினான்.
“ஐஸ்வர்யா, உனக்கேத்த அழகான பேரைத்தான் உன் பெத்தவங்க வச்சிருக்காங்க… ரொம்ப அழகாருக்கே மா… சரி வா… வீட்டுக்குப் போகலாம்…” என்று அவர்களுடனே லிப்டில் ஏறி வீட்டுக்கு அழைத்து வந்தனர்.
“ஓகே டியர்ஸ், ரெண்டு பேரும் பிரஷ் ஆகிட்டு வாங்க… மார்னிங் பிரேக்பாஸ்ட் இன்னைக்கு நம்ம வீட்லதான்…” என்ற ஜெஸ்ஸியுடன் மற்ற பெண்களும் செல்ல கதவைத் தாளிட்டுவிட்டு சோபாவில் அமர்ந்தான் ரகுவரன்.
“இங்க எல்லாரும் ரொம்ப நல்ல டைப் ஐஷு… இவங்க அஞ்சு பேருக்கும் என்னை ரொம்பப் பிடிக்கும்… ஜெஸ்ஸி ஆன்ட்டி ரொம்ப கலகலன்னு பழகுவாங்க… பிரான்சிஸ் அங்கிள் இப்ப வாக்கிங் போயிருப்பார்… வந்ததும் பாரு… அவரை உனக்கு ரொம்பப் பிடிக்கும்… உன் கோமுப் பாட்டி போல இவங்க தான் எனக்கு இங்கே கம்பெனி… சுவாதி தவிர மத்தவங்களுக்கெல்லாம் நான் தம்பி… சுவாதிக்கு மட்டும் அண்ணன்… எந்த ஒரு விசேஷத்துக்கும் எல்லாரும் ஒண்ணு சேர்ந்துப்பாங்க…”
“அப்புறம் ஏன் இவங்க யாரும் நம்ம மேரேஜ்க்கு வரலை…”
“எல்லாருக்கும் வரணும்னு ஆசைதான்… அப்ப பிரான்சிஸ் அங்கிள்க்கு கொஞ்சம் உடம்பு முடியாம இருந்துச்சு… சரி, அவ்ளோ தூரம் கஷ்டப்பட்டு வரவேண்டாம்… நாங்க நேர்ல வந்ததும் வாழ்த்திக்கங்கன்னு நான்தான் சொன்னேன்…”
“ஹூக்கும்… நீங்க ரொம்பதான் நல்லவரு…”
“ஏன் அதுல உனக்கு என்ன சந்தேகம் பேபி…”
“ஒரு சந்தேகமும் இல்ல, சரி நான் குளிக்கணும்… எந்த ரூம் நான் யூஸ் பண்ணறது…” என்றாள்.
“இதென்ன கேள்வி, நம்ம ரெண்டு பேருக்கும் ஒரே ரூம்தான் பேபி…” என்றவன் எழுந்து உடலை அரை வட்டமாய் குனிந்து கையை நெஞ்சில் வைத்து, “நமது வசந்த மாளிகைக்கு உன்னை வரவேற்கிறேன் கண்ணே…” என்றான்.
அவன் செய்கையில் சற்று கூசினாலும், “இவர் பெரிய நடிகர் திலகம்… வசந்தமாளிகை கட்டிக் கொடுக்கிறதுக்கு… தள்ளுங்க…” என்று அவனை மாற்றி அறைக்குள் சென்றவள் சூட்கேசிலிருந்து வேண்டிய பொருட்களை எடுத்துக் கொண்டு குளியலறைக்குள் நுழைந்தாள். அந்த நேரத்தில் சும்மா இருக்காமல் ரகுவும் பக்கத்துக்கு அறையில் இருந்த பாத்ரூமை உபயோகித்து குளியல் முடிந்து ஒரு டீஷர்ட், டிராக் பான்ட் அணிந்து ஐஷுவின் வருகைக்காய் காத்திருந்தான். அவனது பொறுமையை சற்று அதிகமாகவே சோதித்து சரியாய் முக்கால் மணி நேரத்திற்குப் பிறகு வசந்த மாளிகையின் கதவு திறந்து அவன் தேவதை பிரசன்னமானாள்.  
இளம் ரோஜா வண்ணத்தில் இறுக்கமான அனார்கலி சுரிதார் அணிந்து ஈரமான தலைமுடி காற்றில் அலைபாய புது ரோஜாவாய் வந்தவளை தேன் குடிக்கும் வண்டென ரசனையோடு பார்த்திருந்த அவன் விழிகள் அவள் தன்னை கவனிப்பதைக் கண்டதும் சட்டென்று மாற்றிக் கொண்டன.
தலையை துவட்டிக் கொண்டே ரகுவைப் பார்த்தவள் அவனது கண்களில் வழிந்த மயக்கத்தைக் கண்டு மனதுக்குள் ஒரு உற்சாகம் பிறப்பதை உணர்ந்தாலும் கண்டு கொள்ளாமல் “என்ன லுக்…” என்று கேட்க அவன் எழுந்தான்.
“அது வந்து…” சொல்லிக் கொண்டே தன்னை உன்னிப்பாய் பார்த்துக் கொண்டு அருகில் வந்தவனைக் கண்டு, “ஏய்… எதுக்கு பக்கத்தில் வர்றே…” கண்கள் சுருங்க சந்தேகமாய் கேட்டவளிடம் கையிலிருந்த டவலை வாங்கியவன்,
“என்ன ஐஷு, இப்படியா தலை துவட்டுவ… தண்ணி மாறி வேற குளிச்சிருக்கே… சளி பிடிச்சுக்கப் போகுது…” அக்கறையுடன் கூறியதோடு, அவள் தலையில் சொட்டிக் கொண்டிருந்த நீர்த் திவலைகளை டவலால் ஒற்றி எடுத்து துவட்டத் துடங்க அவள் ஆச்சர்யமானாள்.
“ஏய் என்ன பண்ணற… விடு… நான் துவட்டிப்பேன்…”
“ம்ம்… இப்படி துவட்டினா நாளைக்கு தும்மிட்டு தான் கிடக்கணும்… உன் வீட்டுல பாட்டியும் அம்மாவும் தானே உனக்கு தலை துவட்டி விடுவாங்க… அதான் உனக்கு சரியா தெரியலை…” என்றவன் விடாமல் துவட்ட திகைத்தாள். உண்மையிலேயே அவள் அன்னையோ கோமுவோ தான் அவள் தலை குளிக்கும்போது துவட்டி விடுவர்… நீளம் குறைவான அடர்த்தியான முடி அவளுடையது. சரியாய் துவட்டாமல் விட்டால் நீர் கோர்த்துக் கொண்டு தலைவலி, ஜலதோஷம் என்று அவஸ்தைப்படுவாள்.
“ப்ச்… நான் என்ன சின்னக் குழந்தையா… எனக்கு தலை துவட்டக் கூடத் தெரியாதுன்னு சீன் போடற…” கிண்டலாய் கேட்டவளை நோக்கிப் புன்னகைத்தவன், “ஐஷு… இப்ப என்ன, தலை தானே துவட்டறேன்… ஆர்கியூ பண்ணாம அமைதியா இரு…” அவன் சொல்லவும்,
“அடேய் ராகு, இருந்தாலும் நீ இவ்ளோ நல்லவனா இருக்கக் கூடாது… நீ எப்பவுமே இப்படித்தானா… இல்ல, என்கிட்டே நல்லபேர் வாங்க நடிக்கிறியா…” மனதுக்குள் கேட்டுக் கொண்டிருந்தாள்.
“உன்கிட்ட நல்ல பேர் வாங்கி நான் என்ன பண்ணப் போறேன்… சரி, இங்க வந்ததும் சளி பிடிச்சிட்டு கஷ்டப்படக் கூடாதேன்னு ஒரு நல்ல எண்ணத்தில் தான் செய்தேன்…” அவன் சொல்லவும் அவள் திகைப்பு அதிகமானது.
“இவன் எப்படி நாம மனசுக்குள்ள நினைக்கறதுக்கெல்லாம் பதில் சொல்லறான்… ஒருவேள, பார்ட் டைமா சைக்காலஜி ஏதும் படிச்சிருப்பானோ…” யோசனையுடன் அமைதியானாள்.
அவள் கூந்தலை துவட்டிக் கொண்டிருந்தவனோ பின்னில் நின்று அவளுக்குத் தெரியாமல் ஈரக் கூந்தலில் மிதந்து வந்த ஷாம்பூ மணத்தில் மனதை நிரப்பிக் கொண்டிருந்தான்.
“ப்ச்… போதும்… இதுக்கு மேல துவட்டினா முடியெல்லாம் கையோட வந்திடும்…” என்றவள் டவலை வாங்கிக் கொண்டு அறைக்குள் செல்ல அவன் அந்த மோன நிலையிலேயே சோபாவில் அமர்ந்து பெருமூச்சு விட்டான்.
“ம்ம்… பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணம் உண்டா இல்லையான்னு அந்தப் பாண்டியனின் சந்தேகம் தீர்ந்துச்சோ இல்லையோ… பெண்களின் கூந்தல் மணம் ஆண்களை மயக்கி அடிமையாக்கும்னு மட்டும் புரியுது… இப்படி ஒரு பேரழகைப் பக்கத்துல வச்சுட்டு சும்மா பார்த்து பெருமூச்சு விட வச்சுட்டியே பிள்ளையாரப்பா…” மனதுக்குள் நினைத்துக் கொண்டவன் தனது அன்னைக்கு அலைபேசியில் அழைத்துப் பேசிவிட்டு கோபிநாத்துக்கும் தாங்கள் நல்லபடியாய் வந்து சேர்ந்ததை கூறினான். அதற்குள் முடியை சீவி ஒதுக்கிக் கொண்டு வெளியே வந்த ஐஷூ அழகாய் புறப்பட்டிருந்தாள்.
அவளை ஆவலாய் நோக்கியவன், “போகலாமா டார்லிங்…” என்று கேட்க முறைத்தவள், “இந்த டார்லிங், டார்ஜிலிங் எல்லாம் வேண்டாம்… ஒன்லி ஐஷு போதும்…” என்று கூற உதட்டைப் பிதுக்கி தோள் குலுக்கியவன் எழுந்து நடக்க ஐஷுவும் தொடர எதிர் வீட்டுக்குள் நுழைந்தனர்.
சமையலின் மணம் நாசியில் நுழைந்து பசித்திருந்த வயிற்றின் தீவிரத்தை மேலும் அதிகமாக்கியது. முன்னில் சோபாவில் கம்பீரமாய் அமர்ந்திருந்த பிரான்சிஸ் இவர்களைக் கண்டதும் ஆர்பாட்டமாய் சிரித்தார்.
“ஹாய் ரகு… ஹாய் பேபி, வெல்கம் அவர் ஹோம்…” என்று ஐஷுவை வரவேற்க அவள் புன்னகைத்தாள்.
முன்னில் ஜீசஸ் போட்டோவில் முணுக் முணுக்கென்று கலர் பல்போன்று சிணுங்கிக் கொண்டிருக்க சுவரில் குடும்ப போட்டோ ஒன்று பெரிதாய் மாட்டப்பட்டிருந்தது. அவள் முழுதாய் அறையை நோட்டமிடும் முன்பு கணவரின் சத்தம் கேட்டு ஜெஸ்ஸி வெளியே வந்தார்.
“வெல்கம் டியர்ஸ்… உக்காருங்க…” என்றவர், “ரெண்டு பேரும் பசியோட இருப்பீங்க… என்ன சாப்பிடறீங்க, காபி ஆர் டீ… இல்ல, டைரக்டா டிபன் போயிடலாமா…” என்றார் சிரிப்புடன்.
“செம பசி ஆன்ட்டி… டிபனே சாப்பிடலாம்…” என்றான் ரகு.
“குட்… வாங்க…” என்றவர் உள்ளே நோக்கி ஸ்டெல்லா என்று குரல் கொடுக்க ஒரு இளவயதுப் பெண் அங்கே ஆஜரானார்.
“டேபிள்ள எல்லாம் எடுத்து வை மா…” என்றவர், “வாங்க… சாப்பிட்டுப் பேசிக்கலாம்…” என்று அழைத்துச் சென்றார். அதற்குள் மற்ற இரு பெண்கள் அங்கே வர அவர்கள் கையிலும் ஏதோ பாத்திரம் இருந்தது.
ஆறு பேர் அமரக் கூடிய மேசையைச் சுற்றிலும் போட்டிருந்த நாற்காலியில் ஐஷு கூச்சத்துடன் அமர, ரகு இயல்பாய் இருந்தான். பிரான்ஸிசும் அவர்களுடன் அமர, “நீங்களும் உக்காருங்க, சாப்பிடலாம்…” என்றார் சுமி, வித்யாவிடம் ஜெஸ்சி.
“இல்ல நியூ கபிள்ஸ் முதல்ல சாப்பிடட்டும்…” என்ற சுமி, “நீங்களும் உக்காருங்க ஜெஸ்சிமா… நாங்க பரிமாறறோம்…” என்றதும், “ஓகே…” என்றவர் ஐஷுவிடம் அமர்ந்தார். இட்லி, பொங்கல், சாம்பார், சட்னி அவர்கள் வீட்டில் செய்திருக்க கேசரியும், வடையும் சுமிதாவும், வித்யாவும் செய்து கொண்டு வந்திருந்தனர்.
ஐஷுவுக்கு நல்ல பசி இருந்தாலும் புதிய இடமும், மனிதர்களும் ஒரு கூச்சத்தைக் கொடுத்திருக்க அதைப் புரிந்து கொண்ட ஜெஸ்சி இயல்பாய் அவள் குடும்பத்தைப் பற்றிய விவரங்களைக் கேட்டுக் கொண்டே சாப்பிட வைத்தார். பிரான்சிஸ் ரகுவை ஏதோ கிண்டல் செய்து கொண்டிருக்க புன்னகைத்து சமாளித்துக் கொண்டிருந்தான்.
“ம்ம், அப்புறம் ரகு… இனி பொண்டாட்டி கையால சாப்பிட்டு புஷ்டியாகிருவே… ஒரு வருஷத்துல ஆளே அடையாளம் தெரியாம மாறப் போறே பாரு… என்ன பேபி… நான் சொல்லுறது சரி தானே…” ஐஷுவிடம் கேட்க அவள் தலையாட்டிவிட்டு முழித்தாள்.
“அவன் நல்லா சமைச்சு சாப்பிட்டே இப்படி வத்தலும் தொத்தலுமா இருக்கான்… என் சமையலை சாப்பிட்டு இப்ப மத்தி கருவாடா இருக்கறவன் நெத்திலி கருவாடா மாறாம இருந்தா சரி…” என மனதுக்குள் யோசித்துக் கொண்டாள்.
“இங்க பாரு பேபி… பிறந்த வீட்டை விட்டு வெளியூருக்கு வந்துட்டமேன்னு வருத்தப்படாத… நாங்க எல்லாம் உன் சொந்தங்கள் போலதான்… எங்களை உன் அப்பா அம்மாவா நினைச்சுக்க…” பிரான்சிஸ் சொல்லவும், “சந்தடி சாக்குல உங்க வயசைக் குறைக்கப் பார்க்கறிங்களா… இவளுக்கு நம்ம பொண்ணு வயசா இருக்கும்… நம்ம பேத்திய இந்த வருஷம் காலேஜ் சேர்த்தாச்சு…” ஜெஸ்சி சொல்லவும் அனைவரும் சிரிக்க பிரான்சிஸ் அசடு வழிந்தார்.
“சரி சரி, வயசு வெறும் நம்பர் தான… அதுல என்ன இருக்கு… மனசுல நான் இப்பவும் வெரி யங் யூ நோ…” அவர் சமாளிப்பதைக் கண்டு ஐஷுவிற்கும் சிரிப்பு வந்தது.
“ஐஷு மா, உனக்கு தெரியுமா… இத்தனை நாள் இந்த அபார்ட்மென்ட்ல ரகு தான் எனக்கு போட்டி…” பிரான்சிஸ் சொல்ல அனைவரும் முழித்தனர்.
“ரகு எப்படிங்க உங்களுக்கு போட்டியா வந்தான்…”
“பின்ன, அவன் மட்டும் பாச்சிலரா நல்ல பையன் இமேஜோட சுத்திட்டு இருந்தா இங்க உள்ள லேடீஸ் எல்லாம் அவன்கிட்ட தானே பேசறாங்க… இப்ப அவனையும் பிடிச்சு சம்சார சாகரத்தில் தள்ளியாச்சு… பிரச்சனை முடிஞ்சது…” என்று அவர் சிரிக்க, “அதுசரி…” என்று மற்றவரும் சிரித்தனர்.
வயிறோடு மனமும் நிறைய அவர்கள் அன்போடு தந்த பரிசையும் வாங்கிக் கொண்டு தங்கள் வீட்டுக்கு வந்து சேர்ந்தனர் ரகுவும் ஐஸ்வர்யாவும்.
ரகு ஆபீஸுக்கு சென்றுவிட்டு சீக்கிரம் வருவதாகக் கூறியவன் அவளிடம் ஆயிரம் பத்திரம் சொல்லி வீட்டைப் பூட்டி உள்ளேயே இருக்குமாறு கூறிவிட்டு மதிய உணவை ஹோட்டலில் வாங்கி வருவதாக சொல்லிவிட்டு சென்றான். வீட்டுக்குள் சிறிதுநேரம் உலாவியவள் தனியே போரடிக்க அலைபேசியை எடுத்து பாட்டிக்கு அழைத்தாள்.
உன் கூந்தல் காட்டில் நான்
மலராகிட மறுகுகிறேன்…
மலர் செய்திட்ட தவம்
மனம் செய்திடவில்லையோ…
ஈரக்கூந்தல் வாசமதில்
வெப்பமாகும் இதயம்
உன் முத்தத்தின் வெப்பத்தில்
இதம் காணாதோ…
முத்தமிடு பெண்ணே – நான்
மோட்சம் பெற…

Advertisement