Advertisement

அதை ஆச்சர்யமாய் கேட்டிருந்தவள், “இவன் நிஜமாலும் சொல்லுறானா… இல்ல, நமக்குத் தெரியாதுன்னு சும்மா தட்டி விடறானா…” என யோசிக்க, “நீ சொன்னதெல்லாம் உனக்கு நினைவில்லை… ஆனா, நீ பேசின ஒவ்வொரு வார்த்தையும் என் மனசுல பொக்கிஷமா சேர்த்து வச்சிருக்கேன்… உனக்கு நம்பிக்கை இல்லேன்னா அத்தை கிட்ட கேட்டுப் பாரேன்…” என்றான் அவன்.
“ம்ம்… சரி போகலாமா…” என்று அவள் எழுந்து கொள்ள அவனும் எழுந்தான். கோபிநாத்தின் பைக்கில் தான் இருவரும் வந்திருந்தனர்.
“ஐஷு… முதன்முதலா வெளிய வந்திருக்கோம்… உனக்கு ஏதாச்சும் கிப்ட் பண்ணனும்னு ஆசையா இருக்கு… உனக்குப் பிடிச்ச ஏதாச்சும் சொல்லு வாங்கித் தரேன்…”
“ஆஹா, ஆடு தானா வந்து வலைல மாட்டுதே… பெருசா ஏதாச்சும் கேட்டு கதற விடுவோம்… என்ன கேக்கலாம்…” அவள் யோசிக்கும்போதே அலைபேசி அலறியது.
தந்தையின் அழைப்பைக் கண்டவள் காதுக்குக் கொடுத்தாள்.
“சொல்லுங்கப்பா…”
“ஐஷு கோவில்ல இருந்து கிளம்பிட்டீங்களா… உன் காலேஜ் லெக்சரர் பிரவீனா மேடம் மாப்பிள்ளையைப் பார்க்கணும்னு வந்திருக்காங்க… கொஞ்சம் சீக்கிரம் வீ”ட்டுக்கு வாங்க மா…”
“பிரவீனா மேம் வந்திருக்காங்களா…” என்றவளிடமும் ஒரு பரபரப்பு தொற்றிக் கொள்ள, “ரகு, சீக்கிரம் கிளம்பலாம்… எங்க மேம் வீட்டுக்கு வந்திருக்காங்களாம்…” என்று கூற, “உனக்கு கிப்ட்…” என்று அவன் கேட்க, “அதெல்லாம் அப்புறம் வாங்கிக்கலாம்… சீக்கிரம் வண்டிய எடுங்க…” என்று கூற அவனும் அவள் மனதைப் புரிந்து கொண்டு வண்டியை எடுக்க பின்னில் அமர்ந்தவள் மேம் பற்றிய யோசனையில் அவன் தோளில் இயல்பாய் கை வைத்துக் கொள்ள அவனுக்கு சந்தோஷமாய் இருந்தது. வரும்போது மிகவும் கவனமாய் அவனைப் பிடிக்காமல் அமர்ந்திருந்தவளிடம் இயல்பாய் வந்த மாற்றம் அவனுக்குப் பிடித்திருந்தது.
பத்து நிமிடப் பயணத்தில் வீட்டை அடைந்தவர்கள் வீட்டுக்குள் செல்ல, பிரவீனா மேம் குளிர்பானம் குடித்துக் கொண்டே அவள் பெற்றோரிடம் பேசிக்கொண்டிருந்தார்.
அவரது வீடு இரண்டு தெரு தள்ளிதான் இருந்தது. மிகவும் ஸ்ட்ரிக்ட் என்று மாணவர்களிடம் பெயர் எடுத்திருந்தாலும் புன்னகையும் கம்பீரமுமாய் வளைய வரும் அவர் மீது ஐஷுவுக்கு எப்போதும் மரியாதையும் பிரியமும் இருந்தது.
“வாங்க மேடம்… ரொம்ப நேரம் வெயிட் பண்ண வச்சிட்டோமா…” என்று கேட்டவளிடம் புன்னகைத்தவர், “சேச்சே… அதெல்லாம் இல்லமா… இவர்தான் உன் கணவர் ரகுவா…” என்று ரகுவரனைக் கேட்க, “எஸ் மேம்…” என்றாள் பணிவுடன். அவரது ஆசிரியர்களில் அவரை மட்டுமே கல்யாணத்திற்கு அழைத்திருந்தாள் ஐஸ்வர்யா.
“வணக்கம் சார்… ஸாரிமா, உங்க மேரேஜ்க்கு வர முடியலை… அந்த டைம்ல ஒரு குடும்ப விசேஷத்துக்காக வெளியூர் போயிருந்தேன்… ஹாப்பி மேரீட் லைப்… திஸ் ஈஸ் மை ஸ்மால் கிப்ட்…” என்றவர் கையிலிருந்த பரிசை நீட்ட புன்னகையுடன் வாங்கிக்கொண்டாள் ஐஸ்வர்யா.
“இட்ஸ் ஓகே மேம், தேங்க் யூ… இன்னைக்கு எங்க வீட்டுல லஞ்ச் சாப்பிட்டு தான் போகணும்…” என்றாள் வேண்டுதலாய்.
“அச்சோ… அதெல்லாம் வேண்டாம் மா… அதான் ஜூஸ் குடிச்சிட்டேனே… எனக்கு உங்ககிட்ட ஒரு ஹெல்ப் வேணும்…” என்றார் அவர் தயக்கத்துடன்.
“ஹெல்ப்பா… என்னன்னு சொல்லுங்க மேம்…” ஐஷு கேட்க ரகுவிடம் திரும்பியவர், “மிஸ்டர் ரகு… என் பொண்ணு நீங்க வொர்க் பண்ணற கம்பெனில தான் காம்பஸ் இண்டர்வியூல செலக்ட் ஆகிருக்கா… அடுத்த மாசம் ஜாயின் பண்ணறா… நீங்க கொஞ்சம் கைடன்ஸ் கொடுத்து பார்த்துக்க முடியுமா…” கல்லூரியில் அனைவரையும் விரட்டும் கண்டிப்பான பேராசிரியை ரகுவிடம் தனது மகளுக்காய் உதவி கேட்கவும் அவனது மனைவி என்ற பதவியில் ஐஸ்வர்யாவுக்கு சற்று பெருமையாய் உணர்ந்தாள்.
“ஷ்யூர் மேம்… இதுல என்ன இருக்கு… கண்டிப்பா சப்போர்ட் பண்ணறேன்… அவங்க ஜாயின் பண்ண வரும்போது எனக்கு கால் பண்ண சொல்லுங்க…” என்ற ரகு புன்னகையுடன் தனது விசிட்டிங் கார்டை எடுத்து அவரிடம் நீட்டினான்.
“ஹோ, ரொம்ப தேங்க்ஸ்… அவளுக்கு சென்னை புதுசு… முதன் முதலா அவ்ளோ பெரிய கன்சர்ன்ல வொர்க் பண்ணப் போற டென்ஷன் வேற… அதான் தெரிஞ்சவங்க யாராச்சும் பக்கத்துல இருந்தா ஒரு தைரியமா இருக்குமேன்னு… நீங்க அங்க தான் வொர்க் பண்ணறீங்கன்னு தெரிஞ்சப்ப ரொம்ப ஹாப்பியாகிட்டேன்… அதான் உங்களை விஷ் பண்ணிட்டு அப்படியே இந்த ஹெல்பும் கேக்கலாம்னு வந்தேன்…”
“என்ன மேம், இதுக்குப் போயி ஹெல்ப்னு பெரிய வார்த்தை எல்லாம் சொல்லிட்டு… அவர் பார்த்துப்பார் மேம்…” என்ற ஐஷுவுக்கு உண்மையிலேயே பெருமையாய் இருந்தது. அவர்கள் பேசுவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த கோமு ஐஷுவின் முகத்தைக் கண்டு “ஹூம்… முயல்குட்டி  மெல்லப் பொறியில மாட்டுது…” என நினைத்துக் கொண்டார்.
அந்த பிரவீனா நன்றி சொல்லிக் கிளம்பிவிட ஐஷு சந்தோஷத்துடன் அடுக்களையில் அன்னையுடன் பேசிக் கொண்டிருந்தாள்.
“என்னடி, உன் பிரவீனா மேம் கல்யாணத்துக்கு வரலன்னு பீல் பண்ணியே… இப்ப ஹாப்பியா…” கேட்ட அன்னையிடம், “ரொம்ப ஹாப்பி மா…” என்றவள் அடுக்களைத் திண்டில் அமர, “சரி உனக்குக் கொண்டு போக வேண்டிய டிரஸ் எல்லாம் பாக் பண்ணிட்டியா…” என்றார்.
“ம்ம்… இப்போதைக்கு ரெண்டு சூட்கேஸ் எடுத்திட்டுப் போறேன்… அப்புறம் பார்த்துக்கலாம்…” என்றாள் மகள்.
“சரி, ஜூஸ் தரேன்… மாப்பிள்ளைக்கு கொடுத்திட்டு நீயும் குடி…” என்றவர் இரு கண்ணாடி கிளாசில் ஊற்றிக் கொடுக்க வாங்கிக் கொண்டு தனது அறைக்கு சென்றாள். ரகு யாருடனோ அலைபேசியில் பேசிக் கொண்டிருக்க அவனுக்கு ஒரு கிளாசை மேசை மீது வைத்துவிட்டு தனக்கு ஒரு கிளாசை எடுத்துக் கொண்டு கோமுவிடம் வந்தாள்.
“ஐஷு பேபி… கம்… சிட்…” என்று கட்டிலைக் காட்ட அமர்ந்தாள்.
“தென், ஹவ் யூ பீல் நவ்…” புன்னகையுடன் பேத்தியின் கை பற்றி அவர் கேட்க, “என்ன கேக்கற கோமு, எனக்குப் புரியலை…” என்றாள் அவள்.
“மண்டு… ஆப்டர் மேரேஜ் நீ எப்படி பீல் பண்ணறேன்னு கேட்டேன்… டூ யூ லைக் ரகு…”
“ஹூக்கும்… எனக்கு ரகுவைப் பிடிச்சிருக்கா இல்லியான்னு தெரியல கோமு… ஆனா அவனுக்கு ராகு பிடிக்கப் போகுதுன்னு கன்பர்மா தெரியுது…”
“ஹேய் வாட்ஸ் திஸ்… டோன்ட் சே லைக் திஸ்… ஹி ஈஸ் சோ குட்… ஹி ஹாஸ் கிரேட் லவ் பார் யூ…”
“ஹையோ சாமி… தயவுசெய்து உன் இங்க்லீஷ் சானலை குளோஸ் பண்ணிட்டு தமிழ் சானலுக்கு வா கோமு…”
“ஓகே ஓகே… ரகு ரொம்ப நல்லவனா இருக்கான்… உன் மேல உசுரையே வச்சிருக்கான்… அவனோட நல்ல விதமா குடும்பம் நடத்துற வழியைப் பாரு… மேரேஜ் ஈஸ் என்கேஜ்டு இன் பாரடைஸ்…” னு சொல்லுவாங்க…”
“ஓ உனக்கும் இந்த புரூட் லாங்குவேஜ் எல்லாம் தெரியுமா…”
“வாட்… புரூட் லாங்குவேஜ்…” என்று கோமு முழிக்க, “அதான் கோமு பழமொழி… எங்களை இப்படித்தான கொல்லற…” என்று கேட்டவளை நோக்கிப் புன்னகைத்தவர், “ஹாஹா… நாட்டி கேர்ள்… பாவம் ரகு… என் பேரனை ரொம்பப் படுத்தி எடுத்துடாத…” என்றார்.
“ஹூக்கும்… விட்டா என்னை விட அவன்தான் உங்க எல்லாருக்கும் முக்கியம்னு கொண்டாடுவிங்க போலருக்கு…” கடுப்புடன் முகத்தைச் சுளித்துக் கொண்டு அவள் கேட்க கோமு புன்னகைத்தார். “அடி என் செல்ல பேத்தியே… புருஷனை இப்படிலாம் அவன் இவன்னு சொல்லக் கூடாது…” என்றார் கோமு. “ஓஹோ… பின்ன எப்படி சொல்லுறதாம்…”
“அத்தான்… என் அத்தான்… அவர்
என்னைத்தான்… எப்படிச் சொல்வேனடி…
அவர் கையைத்தான் கொண்டு மெல்லத்தான்
வந்து கண்ணைத்தான்… எப்படிச் சொல்வேனடி…”
அழகாய் பாவம் பிடித்து அவர் பாடிக் காட்ட, “ஹூக்கும் என்னால எல்லாம் அத்தான் பொத்தான்னு கொஞ்ச முடியாது… டேக் டைவர்ஷன்…” என்றவளின் காதைப் பிடித்து செல்லமாய் திருகியவர் அணைத்துக் கொண்டார்.
“கோமு… நீயும் என்னோட சென்னை வரியா…” கேட்ட பேத்தியின் கையில் தட்டிக் கொடுத்து, “நிச்சயம் வருவேன் ஐஷு பேபி… இப்ப இல்ல… நீ முதல்ல அங்க செட்டிலாகு… அப்புறம் வரேன்…” என்றார்.
“ப்ச்… போ கோமு… உங்களை எல்லாம் விட்டுட்டு நான் மட்டும் தனியா சென்னை போறதை நினைச்சாலே என்னால தாங்க முடியலை…” சொல்லும்போதே விழிகளில் முணுக்கென்று கண்ணீர்த் துளி ஒன்று பளபளத்தது.
“அய்யே… என் ஐஷு எவ்ளோ ஸ்ட்ராங் பேபி… இப்படிலாம் அழக் கூடாது… அப்புறம் ரகுவோட எப்படித் தகராறு பண்ணி நாளைய வரலாறா மாத்துறதாம்…” என்று கேட்க, “ஹூகும்… உனக்கு எல்லாமே விளையாட்டு தான்… ப்ளீஸ் நீயும் என்னோட வாயேன்…” என்றாள் மீண்டும்.
“இப்ப தட்கால்ல உங்க ரெண்டு பேருக்கும் தான் டிக்கட் போட்டிருக்கு… சட்டுன்னு நானும் வரேன்னு சொன்னா அப்புறம் உன் புருஷன் வித்தவுட்ல பாத்ரூம் ஜர்னி தான் பண்ணனும்… சோ இப்ப நோ…’ என்றார் தீர்மானமாய்.
“ம்ம்… சரி சீக்கிரமே வந்திடனும்…” என்றவளிடம் சம்மதமாய் தலையாட்டினார் கோமளவல்லி. 
ரோஜாவைத் தாலாட்டும்
தென்றலாய் அவனிருக்க
குத்துகின்ற முள்ளாகவே
எட்டி நிற்கிறாள் அவன் ரோஜா…

Advertisement