Advertisement

அத்தியாயம் – 12
அறைக்குள் பூனைக் குட்டி போல் அங்குமிங்குமாய் நடை போட்ட ஐஷுவின் உள்ளம் பொருமிக் கொண்டிருந்தது. அவனது அருகாமையில் தனது மனதின் வைராக்கியம் எல்லாம் தகரத் தொடங்கியதை நினைத்து அவளுக்கு எரிச்சலாய் வந்தது. அதற்குக் காரணமானவன் மேல் கோபம் பொங்கிக் கொண்டிருக்க அவனோ ஹாலில் மாமனார் மாமியார், கோமுவிடம் கதையளந்து கொண்டிருந்தான்.
“பண்ணுறதை எல்லாம் பண்ணிட்டு ஒண்ணும் தெரியாத பச்சை மண்ணு மாதிரி உக்கார்ந்து கதை சொல்லுறதைப் பாரு… அந்த அரை லூசுங்கதான் கொஞ்சம் கூட விவஸ்தை இல்லாம நடு வீட்டுல இப்படி எல்லாம் பண்ண சொல்லுறாங்கன்னா இந்த கருவாடு அதையே சாக்கா வச்சு என்னை சாய்க்கப் பாக்குதே… ம்ஹூம்… விழுந்துடாத ஐஷு… இவன் இப்படியே உன்னை மயக்கி உப்புகண்டம் போட்டாலும் போட்டிருவான்… உஷாரா இருந்துக்க…” தனக்குத் தானே உருவேற்றிக் கொண்டிருந்தாள். 
மதிய உணவு முடிந்து உறவினர்களும் தோழியரும் கிளம்பியிருக்க வீட்டினர் மட்டுமே இருந்தனர். ரகுவிடம் ஏதேதோ கதைகளை கோபிநாத் பேசிக் கொண்டிருக்க கோமுவும், உஷாவும் கேட்டுக் கொண்டிருந்தனர்.
“ரெண்டு குடும்பமும் சூழ்நிலை காரணமா ஆளுக்கொரு திசையா பிரிஞ்சு போனாலும் நீங்க ரெண்டு பேரும் வாழ்க்கைல சேரணும்கிற விதிதான் நம்மளை இணைச்சு வச்சிருக்கு… அதனால எங்க வாக்கும் பலிச்சுது… உங்க ஆசையும் நிறைவேறிடுச்சு… இனி கிடைச்ச வாழ்க்கையை சந்தோஷமா வாழ வேண்டியது உங்க பொறுப்பு…”
“கண்டிப்பா மாமா… ஐஷு என் வாழ்க்கைல வருவாளா, இல்லையான்னு நான் எப்பவுமே ரெண்டு விதமா நினைச்சதில்லை… கண்டிப்பா அவதான் என் வாழ்க்கைன்னு நம்பினேன்… என் நம்பிக்கையை கடவுள் நிறைவேத்தி வரமா அவளைக் கொடுத்திருக்கார்… அவளை என் பொக்கிஷமா பார்த்துக்குவேன்… அதைப்பத்தி உங்களுக்கு எந்த கவலையும் வேண்டாம்…” என்றான் ரகுவரன் நிதானமாக.
“உங்களைப் பத்தி தெரியும் மாப்பிள்ள… ஆனா ஐஷுக்கு தான் கொஞ்சம் பிடிவாதமும், திமிரும் ஜாஸ்தி… ஆனா ஒருத்தர் மேல அன்பு வச்சிட்டா அவளைப் போல நேசிக்க முடியாது… அவ்ளோ உயிரா நினைப்பா… நீங்கதான் அவ கொஞ்சம் முன்னப் பின்ன இருந்தாலும் பொறுத்துப் போகணும்…” என்றார் மகளை நன்கறிந்த தாயாக உஷா.
“என்ன அத்தை நீங்க… ஐஷுவ ஒரு வளர்ந்த குழந்தையா தான் நான் பார்க்கிறேன்… அவளை என் கண்ணுக்குள்ள வச்சுப் பார்த்துப்பேன் அத்தை… பயப்படாதீங்க…”
அவர்கள் பேசுவதை மௌனமாய் கேட்டுக் கொண்டிருந்த கோமளவல்லியின் மனமோ, “ஹூம் பாவம்… இந்த ரகு… அவனுக்கு ஆல்ரெடி ராகு காலம் தொடங்கினது தெரியாம இவங்களுக்கு ஆறுதல் சொல்லிட்டு இருக்கான்… அங்கே ஒருத்தி இவனைப் போட்டுத் தாக்கறதுக்குன்னே காத்திட்டு இருப்பாளே… இந்தப் அப்பாவிப் பையனை நீதான் என் செல்ல ராட்சஷி கிட்ட இருந்து காப்பாத்தணும் பகவானே…” என நினைத்துக் கொண்டிருந்தார்.
“சரி மாப்பிள்ளை, நீங்க ரெஸ்ட் எடுங்க… நாளைக்கு காலைல ரெண்டு பேரும் கோவிலுக்குப் போயிட்டு வந்திடுங்க… நாளைக்கு நைட்டே சென்னை கிளம்பணும்னு சொல்லறீங்க… இன்னும் ரெண்டு நாள் இருந்துட்டுப் போக முடியாதா…” என்றார் கோபிநாத்.
“இல்ல மாமா, எனக்கு ஒரு புது புரோஜக்ட் வந்திருக்கு… எவ்ளோ சீக்கிரம் முடியுமோ வந்து சார்ஜ் எடுத்துக்க சொல்லி ஆபீஸ்ல இருந்து கால் பண்ணாங்க… நீங்க வேணும்னா எங்களோட சென்னை வந்திருங்களே…”
“வர்றோம் மாப்பிள்ள… இப்ப நீங்க மட்டும் கிளம்புங்க… அப்புறம் நாங்க வந்து பார்த்துக்கறோம்…” என்றார் அவர்.
“சரி மாமா…” என்றவன் எழுந்து கொள்ள, “நீங்க போயி ரெஸ்ட் எடுங்க…” என்றார் கோபிநாத். தனது அருகாமையில் ஐஷுவின் கண்ணில் கண்ட தடுமாற்றத்தை யோசித்தவன் மனம் ஆனந்தம் கொள்ள அவளைக் காணும் ஆவலில் ஆசையுடன் அறைக்குள் நுழைந்தான்.
இயர் போனை காதில் மாட்டி கண்ணை மூடி கட்டிலில் சாய்ந்திருந்தவளின் அருகில் சத்தமில்லாமல் வந்து அமர, “கதவை சாத்திட்டு வா…” என்று குரல் மட்டும் வந்தது.
அதைக் கேட்டதும் உள்ளம் துள்ள, “அட, கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்ததம்மா…” என மனதுக்குள் பாடிக் கொண்டே “ஆஹா, அந்த சாக்கலேட் ஷேரிங் இவ்ளோ சீக்கிரம் வொர்க் அவுட் ஆக வைக்கும்னு நான் நினைக்கவே இல்லையே…” என்று உற்சாகத்துடன் யோசித்துக் கொண்டு சென்று கதவை சாத்தித் தாளிட்டு வந்தான் ரகுவரன்.
அவள் அருகே அமர்ந்தவன், “கதவை சாத்தி தாளும் போட்டுட்டேன் ஐஷு…” என்று ஆவலாய் கூற கண்ணைத் திறந்தாள் அம்மணி. ஆனால் அது காதல் பார்வையாய் இல்லாமல் கனல் கக்கும் பார்வையாய் இருக்க உள்ளுக்குள் திகிலானான் ரகுவரன்.
“ஐஷு மா… என்னாச்சுடா… கண்ணெல்லாம் சிவந்திருக்கு… மெட்ராஸ் ஐ வந்திருச்சா…” பதறினான்.
“அவனை முறைத்தவள், “உன் மனசுல என்ன நினைச்சிட்டு இருக்கே…” என்றாள் கோபத்துடன்.
“அதான் நீயே சரியா சொல்லிட்டியே செல்லம்…” அவன் பொறுமையாய் சொல்ல புரியாமல் எரிச்சலுடன் கேட்டாள்.
“என்ன உளர்றே… நான் என்ன சொன்னேன்…”
“என் மனசுல உன்னை தான நினைச்சிட்டு இருக்கேன்… அதை தானே நீயும் சொன்னே…” என்றதும் யோசித்தவள், “யூ…” என்று கத்திக் கொண்டு தலையணையை எடுத்து வீச அழகாய் பிடித்துக் கொண்டவன், “எதுக்கு கோபம்… நான் என்ன தப்பு பண்ணேன்…” என்றான் பாவமான முகத்துடன்.
“ஆஹா, பச்சைக் குழந்தையாட்டம் மூஞ்சிய வச்சிட்டு கேள்வியா கேக்குற… எதுக்கு எல்லார் முன்னாடியும் கொஞ்சம் கூட வெக்கமில்லாம அப்படிப் பண்ண…” என்றாள் அவள். “எப்படிப் பண்ணேன் பேபி…” அவனும் புரியாத போல கேட்க கடுப்பானாள்.
“ஒரு பிரண்டு கிட்ட இப்படிதான் நடந்துப்பியா… அந்த பிசாசுங்க தான் ஓசி சீன் பார்க்க இப்படிப் பண்ணு, அப்படிப் பண்ணுன்னு கொளுத்திப் போட்டாங்கன்னா நீயும் அதுக்குத் தகுந்த போல நடந்துக்கணுமா…” கோபமாய் இரைந்தாள்.
“அச்சோ ஐஷு… நீ என்னைத் தப்பா நினைச்சுட்டியா… நான் உன்மேல உள்ள ஆசைல அப்படி நடந்துக்கலடா… என்ன இருந்தாலும் உன் பிரண்ட்ஸ் சொல்லுறாங்களே… மறுத்துப் பேசினா நமக்குள்ள எதுவும் பிரச்சனையோன்னு அவங்களோட, நம்ம வீட்டாளுங்களும் யோசிச்சு வருத்தப் படுவாங்களேன்னு தான் அப்படிப் பண்ணேன்… நான் என்ன கிஸ் பண்ணவா செய்தேன்… சும்மா காக்காக்கடி கடிக்குற போல சாக்கலேட் ஷேரிங் தானே பண்ணோம்… இதுக்குப் போயி எதுக்கு இவ்ளோ கோபம்… கூல் பேபி…” அவன் சாதாரணமாய் சொல்லிவிட்டு சோபாவில் படுத்துக் கொள்ள ஐஷு தான் குழம்பிப் போனாள்.
“இவன் சொல்லுறதும் சரிதானே… என்னை மாதிரி இவனுக்கு எந்த பீலும் வரலியோ…” யோசித்தவளுக்கு கடுப்பானது.
அவளுக்கு முதுகைக் காட்டிப் படுத்திருந்த ரகுவோ, “பிள்ளையாரப்பா, எப்படியோ இந்த அழகு ராட்சசியை இப்போதைக்கு சமாளிச்சுட்டேன்… இதே மாதிரி இன்னும் பல கிளுகிளு வாய்ப்புகளை நீதான் வாரி வழங்கணும் கடவுளே…” என்று பிள்ளையாரை வேண்டிக் கொள்ள அறைக்குள் நடந்ததை மௌன சாட்சியாய் கவனித்துக் கொண்டிருந்த பிள்ளையார் மானசீகமாய் தலையிலடித்துக் கொண்டார்.
“ச்சே… எது எதுக்கெல்லாம் தான் என்கிட்டே வேண்டுதல் வச்சுக்கிறதுன்னு இந்தப் பயலுக்கு விவஸ்தையே இல்லாமப் போயிருச்சே…” என நினைத்துக் கொண்டிருக்க அவரது பக்தை அழைக்கும் குரல் கேட்க அவளை கவனித்தார்.
“யோவ் ஜி… இந்தப் பொடிமாஸ் சொல்லுறதை நம்பலாமா வேண்டாமா தெரியலையே… இவன் பேசுறதெல்லாம் அப்பாவியா இருந்தாலும் பண்ணறதெல்லாம் அடப்பாவின்னு தான இருக்கு… இந்தப் பூனையும் பால் குடிக்குமான்னு மூஞ்சிய வச்சிக்கிட்டு சான்ஸ் கிடைச்சா பீரே குடிக்கும் போலருக்கு… எதுக்கும் உஷாரா தான் இருக்கணும்…”
தனக்குள் சொல்லிக் கொண்டவள் அவனையே பார்த்துக் கொண்டு கட்டிலில் அமர்ந்திருந்தாள். மனம் மட்டும் அந்த சம்பவத்தை விட்டு வெளியே வருவேனா என்று முரண்டு பிடித்துக் கொண்டிருக்க இம்சையாய் உணர்ந்தாள்.
“பண்ணுறதெல்லாம் பண்ணிட்டு பச்சப் புள்ளையாட்டம் படுத்திருக்கான் பாரு… இதுல இவனோட தனியா சென்னை போயி எப்படி இருக்கிறது…” என யோசித்தவளுக்கு ஒரு ஐடியா உதயமாக சற்று நிம்மதியானாள்.
அடுத்தநாள் காலையில் இருவரும் கோவிலுக்கு சென்றனர்.
அடிக்கடி போகும் கோவில் என்பதால் இவளைக் கண்டதும் புன்னகைத்த அர்ச்சகர், “இதான் உன் ஆம்படையானா… நல்ல லட்சணமா உனக்குப் பொருத்தமா இருக்கார்… ரெண்டு பேரும் ஷேமமா பதினாறும் பெற்றுப் பெருவாழ்வு வாழணும்…” என்று வாழ்த்த அவர் வார்த்தையைக் கேட்டு அருகில் நின்றவனை ஒரு பார்வை பார்த்தவள், “இவன் எனக்குப் பொருத்தமாவா இருக்கான்… இந்தாளுக்கு என்ன கண்ணுல சனியா… சும்மாவே அடிச்சு விடறானே…” என நினைத்தாலும் புன்னகையுடன் அர்ச்சனைத் தட்டை நீட்ட பூஜை முடித்துக் கொண்டு பிரகாரத்தை சுற்றி வந்தனர்.
“ஐஷு, இந்தக் கோவிலுக்கு அடிக்கடி வருவியா…” அவளுடன் நடந்து கொண்டே கேட்டான் ரகுவரன்.
“ம்ம்… அப்பப்போ கோமு, அம்மா கூட வருவேன்…”
“இந்தக் கோவில் மனசுக்கு ஒரு நிம்மதியை, அமைதியைக் கொடுக்குது…” என்றவன், “அது உன் அருகாமையில் வந்த நிம்மதி ஐஷு…” என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டான். இருவரும் அங்கே அமர அவள் அமைதியாய் இருந்தாள்.
“ஐஷு, நீ எப்பவும் போல நார்மலா இரு… ஏன் ஒரு மாதிரி யோசனையாவே இருக்கே…” ரகு கேட்க, “ப்ச்… அதெல்லாம் ஒண்ணுமில்லை…” என்றவளை நோக்கிப் புன்னகைத்தவன், “என்கிட்ட இயல்பா உன் பிரண்ட்ஸ் கிட்ட பேசற போல பேசு…” என்றவனை நோக்கியவள், “சரிடா ரகு…” என்று அழுத்தமாய் சொல்லவும் திகைத்தவன் பின் புன்னகைத்து “ஐ லைக் இட் பேபி…” என்று கூற “இவ்ளோ பிரண்ட்லியா பழகினாப் போதுமா…” என்றாள் கிண்டலுடன்.
“நீ என்னை எப்படிக் கூப்பிட்டாலும் எனக்கு ஹாப்பி தான் ஐஷு… இப்படி சொன்னப்ப சின்ன வயசுல நீ என்னை வாடா போடான்னு கூப்பிட்டது தான் நினைவு வருது… அப்ப அத்தை உன்னைத் திட்டுவாங்க… வயசுல பெரியவனை டா போட்டு கூப்பிடக் கூடாதுன்னு… அதுக்கு நீ என்ன சொல்லுவா தெரியுமா…” என்றான் புன்னகையுடன்.
அவளுக்கு எதுவும் நினைவில்லாவிட்டாலும் தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் “என்ன சொல்லுவேன்…” என்றாள்.
“நான் பெருசானதும் ரகுவை தானே கட்டிக்கப் போறேன்… அவனை வாடா, சொல்லுவேன்… போடா சொல்லுவேன்… அவன் கோச்சுக்கவே மாட்டான்… நீதான் மம்மி எப்பவும் என்னைத் திட்டிட்டே இருப்ப… ரகு திட்ட மாட்டான்னு சொல்லுவ…” என்றான் சிரிப்புடன்.

Advertisement