Advertisement

அத்தியாயம் – 11
சிலுசிலுவென்ற காற்று தாலாட்டிக் கொண்டிருக்க சுகமான நித்திரையில் இருந்தாள் ஐஷு. ஏதேதோ புரியாத கனவுகள் வண்ணமயமாய் மாறி மாறித் தோன்றிக் கொண்டிருக்க அவள் இதழில் ஒரு புன்முறுவல் ஒட்டிக் கொண்டிருந்தது.
தன் தோளில் சாய்ந்து தனது கையை வாகாய் அணைத்துக் கொண்டு சுகமாய் உறங்குபவளின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்த ரகுவுக்கு அவர்களின் குழந்தைப் பருவமே மனதில் சுழன்று கொண்டிருந்தது.
லேசாய் திறந்திருந்த கார் ஜன்னல் வழியே உள்ளே நுழைந்த காற்று அவளது கூந்தலை சிலுப்பிக் கொண்டு பறக்க விட ஒரு கையால் அதை மெல்ல ஒதுக்கி விட்டவன் அவளுக்கு தோதாய் அசையாமல் அமர்ந்திருந்தான். கார் மதுரை வீதிகளில் நுழைந்து ஐஷுவின் வீட்டை நோக்கிப் போய்க் கொண்டிருந்தது. அவர்கள் வீட்டின் தெருவுக்குள் வண்டி திரும்பவும் ரகு ஐஷுவை அழைத்தான்.
“ஐஷு… எழுந்திரு, வீடு வந்திருச்சு…” அவள் கையில் மெல்ல தட்ட கண்ணைத் திறந்தவள் அவன் தோளில் தான் பூமாலையாய் கிடப்பதைக் கண்டு அதிர்ந்து முறைத்தாள்.
அதைக் கண்டவன், “பரவால்லமா… தூக்கத்துல தெரியாம தானே…” பெரிய மனசோடு கூற மேலும் முறைத்தாள்.
“நான்தான் தூக்கத்துல தெரியாம பண்ணேன்… நீ முழிச்சிட்டு தான இருக்க… பிரண்டுன்னு சொல்லிட்டு கொஞ்சமாச்சும் டீசன்சி பாலோ பண்ணறியா… பிராடு… இதான் சாக்குன்னு ஒட்டிகிட்டு… என்னை எழுப்பிருக்க வேண்டியது தானே…”
அவள் சொன்னதைக் கேட்டு முதலில் திகைத்தவன், “அது சரி… நீங்களே கன்ட்ரோல் இல்லாம என் தோள்ல ஏறி சவாரியும் செய்துட்டு இப்ப குத்தமும் சொல்லுவிங்களோ… அதுவும் சும்மா சாஞ்சா கூட பரவால்ல… என் கையைக் கட்டிபிடிச்சிட்டு அவ்ளோ ஆனந்தமா தூங்கிட்டு இருக்க… சரி, பாவம் புள்ள… தூங்கட்டும்னு விட்டா நம்ம மேலயே ராக்கெட் விடற பார்த்தியா…”
அவன் மெதுவான குரலில் சொன்னாலும் டாக்ஸி டிரைவர் கண்ணாடி வழியாய் தங்களை கவனிப்பதைக் கண்டவள் அவனை முறைத்துவிட்டு திரும்பிக் கொள்ள கார் நின்றது.
“சரி, சரி வீடு வந்திருச்சு… சீக்கிரம் மலை இறங்கிட்டு சிரிச்சுட்டே கீழ இறங்கு…” அவன் பேச்சில் கோபம் உள்ளுக்குள் பொங்கினாலும் காட்டிக் கொள்ளாமல் கூந்தலை சரிசெய்து கொண்டு கார்க் கதவைத் திறக்க அதற்குள் கார் சத்தம் கேட்டு உஷா, கோபி வேகமாய் வர கோமுவும் பின்னிலேயே வந்தார். அவர்களை வாசலில் நிறுத்தி உறவுக்காரப் பெண் ஒருவர் தயாராய் கலக்கி வைத்திருந்த ஆரத்தித் தட்டை எடுத்து ஆரத்தி சுற்றி முடித்ததும் புன்னகையுடன் வீட்டுக்குள் வரவேற்றனர்.
“வாங்க மாப்பிள்ள…” ரகுவரை வரவேற்றுவிட்டு “ஐஷூ…” என்று மகளைக் கட்டிக் கொண்டார் உஷா. கோபிநாத் நெகிழ்ச்சியுடன் மகளைக் கண்டு கண்கள் பனிக்க ரகுவரனின் கையைப் பற்றிக் கொண்டார்.
“ஹாய் ஐஷு பேபி… ஹலோ மாப்ஸ்… கம் கம்…” என்று பின்னில் வந்து ஆர்பாட்டமாய் வரவேற்ற கோமளவல்லியை, “கோமு…” என்று கட்டிக் கொண்டாள் பேத்தி.
அவள் கன்னத்தில் முத்தமிட்டு விலக்கி நிறுத்தியவர் ஆசையும் ஆராய்ச்சியுமாய் அவள் முகத்தை நோக்க, கூச்சத்துடன் குனிந்து கொண்டாள் பேத்தி.
மணமகளே மருமகளே வா வா…
உன் வலது காலை எடுத்து வைத்து வா வா…
குணமிருக்கும் குலமகளே வா வா…
தமிழ்க் கோவில் வாசல்
திறந்து வைப்போம் வா வா…
பேத்தியின் இரு கைகளையும் பிடித்துக் கொண்டு அபிநயத்துடன் பாடி வரவேற்ற பாட்டியைக் கண்டு ரகுவரன் சிரிக்க, ஐஷு செல்லமாய் முறைத்தாள். கோபிநாத், உஷாவுடன் வந்திருந்த சில உறவினரும் சிரிப்புடன் அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.
“அச்சோ கோமு… நான் உன் பேத்தி… ரெண்டு நாள் இங்க இல்லேன்னதும் நமக்குள்ள என்ன உறவுன்னே மறந்துட்டியா…” என்று ஐஷு மிரட்டலாய் கேட்க,
“ஹஹா… ஓ மை லிட்டில் பேபி… இன் தி ஜாய் ஆப் சீயிங் யு, ஐ பர்கட் எவ்ரிதிங்…” என்று பேத்தியை அணைத்துக் கொண்டவர் கண்கள் லேசாய் கலங்கியிருந்தன.
“என்ன கிரான்ட்மா, பேத்திக்கு மட்டும் தான் பாட்டெல்லாம் பாடி வெல்கம் பண்ணுவீங்களா… இந்தப் பேரனுக்கு இல்லையா…” கலங்கியவரை உற்சாகப் படுத்துவதற்காய் ரகு கேட்க கோமு புன்னகையுடன் அவனிடம் திரும்பினார்.
“ஒய் நாட், ரெண்டு பேருக்கும் பாடிட்டாப் போகுது…” என்றவர் ஒரு நிமிடம் பாடலை யோசிக்க உறவுகளும் குடும்பமும் அவரையே ஆவலுடன் பார்த்துக் கொண்டிருந்தனர். “அச்சோ, இந்த கோமு எல்லார் முன்னாடியும் ஏதாவது நல்ல தமிழ் பாட்டை இங்க்லீஷ்ல பாடி கொல்லப் போகுது…” என ஐஷு யோசித்துக் கொண்டிருக்க அவர் பாடத் தொடங்கினார்.
“கடவுள் நினைத்தான்…
மணநாள் கொடுத்தான்…
வாழ்க்கை உண்டானது…
கலைமகளே நீ வாழ்கவே…”
பாடிக் கொண்டே பேத்தியின் தலையில் வருடி வாழ்த்தியவர்,
“அவனே நினைத்தான்…
உறவைக் கொடுத்தான்…
இரண்டும் ஒன்றானது…
திருமகனே நீ வாழ்கவே…”
என்று ரகுவின் தலையிலும் கை வைத்து வாழ்த்தினார்.
“ஆயிரம் காலமே வாழவே திருமணம்…
ஆயிரம் காலமே வாழவே திருமணம்…”
இருவரையும் இருபக்கமும் அணைத்துக் கொண்டு சிவாஜி ஸ்டைலில் பாட அனைவரும் சந்தோஷமாய் கை தட்டினர்.
ஐஸ்வர்யா திகைப்புடன் பாட்டியைப் பார்த்துக் கொண்டிருக்க “வாவ் கிரான்ட்மா, வொன்டர்புல் சாங்… கலக்கிட்டீங்க… நீங்க சிவாஜி சார் பேனா… எனக்கும் அவர் ஆக்டிங் ரொம்ப பிடிக்கும்…” என்று ரகு அவரைப் பாராட்டிக் கொண்டிருக்க,
“ஈஸ் இட், நைஸ்… ப்ளீஸ் சிட் மை டியர் யங் பாய்…” என்று கூற சோபாவில் அமர்ந்தனர். கோபியும் அவர்களுடன் அமர, உஷா அடுக்களைக்கு நகர்ந்தார்.
தன்னையே நோக்கிக் கொண்டிருந்த பேத்தியை நோக்கிப் புன்னகைத்தவர், “வாட் ஆர் யு திங்கிங் பேபி…” என்றார்.
“கோமு, உனக்கு இந்த மாதிரி சாங் எல்லாம் கூடத் தெரியுமா… நீ வழக்கம் போல தமிழ் பாட்டை இங்லீஷ்ல பாடிக் கொலை செய்யப் போறேன்னு நினைச்சா சூப்பரா தமிழ்ல பாடற…” என்றாள் வியப்புடன்.
“இங்லீஷ்ல டிரான்ஸ்லேட் பண்ணி பாடுறது என் முயற்சி… அதை தமிழ்லயே பாடுறது தான் எப்பவும் எனக்கு மகிழ்ச்சி… என்னதான் இருந்தாலும் தமிழ் போல பாட முடியுமா…” என்ற கோமுவை கட்டிக் கொண்டாள் அவள்.
“சூப்பரா இருக்கு கோமு… ஒரே ஒரு ரிக்வஸ்ட்… எனக்காக செய்வியா…” என்றாள் ஆர்வத்துடன்.
“வாட் டு டூ பேபி…” என்றார் அவளிடம் அமர்ந்து கொண்டே.
“நீ தமிழ் பாட்டை மட்டும் இங்லீஷ்ல பாட முயற்சி செய்யாத ப்ளீஸ்…” என்றாள் தோளைக் கட்டிக் கொண்டு.
“ஹாஹா… ஓகே டன் பேபி…” என்றார் சிரிப்புடன்.
அவர்களுக்கு குளிர்பானம் கொண்டு வந்தார் உஷா. ரகு மாமனாருடன் வீட்டு விசேஷத்தைப் பேசிக் கொண்டிருக்க ஐஷு பாட்டியிடம் பேசிக் கொண்டிருந்தாள்.
“மாப்பிள்ள நீங்க வேணும்னா ரூம்ல ரெஸ்ட் எடுங்க…” என்றவர், “ஐஷு, மாப்பிள்ளையை அழைச்சிட்டுப் போம்மா…” என்றார் மகளிடம்.
“ஹூக்கும், ரெஸ்ட் எடுக்க உன் மாப்பிள்ளை என்ன சேலத்தில் இருந்து பாதயாத்திரையா வந்தான்… கார்ல சொகுசா தானே வந்தான் ரொம்பதான் மருமகனைத் தலைல தூக்கி வச்சுக்கிறாங்க…” என மனதுக்குள் முனங்கிக் கொண்டாலும் உறவுப் பெண்கள் முன் எதையும் காட்டிக் கொள்ளாமல் ரகுவை ஒரு பார்வை பார்த்துவிட்டு எழுந்தாள்.
அவளைப் புன்னகையுடன் தொடர்ந்தான் ரகு.
ரூமுக்குள் நுழைந்ததும் அவன் கதவைத் தாளிட, “எதுக்கு இப்ப கதவைத் தாள் போடறே…” என்றாள் அவள்.
“இல்ல, டிரஸ் மாத்தணும்… அப்புறம் நம்ம புதுசா கல்யாணமான ஜோடிங்க… ரூம்ல கொஞ்சம் அப்படி இப்படி இருப்போம்னு அவங்க நினைச்சுக்கனும்ல…” என்றான் புன்னகையுடன்.
“அப்படி, இப்படி இருக்குறதா… என்ன சொல்லற, எனக்குப் புரியல… முதல்ல கதவைத் திற…” என்றாள்.
“என்ன ஐஷு, வளர்ந்தும் குழந்தையாவே இருக்க…” கேட்டுக் கொண்டே சூட்கேசிலிருந்து கைலியை எடுத்திருந்தவன் அதை இடுப்பில் சுற்றிக் கொண்டு அவள் முன்னிலேயே பேண்ட்டை உருவ, “ஐயே… ச்சீ… என்ன பண்ணற…” என்றவள் கூச்சத்துடன் திரும்பி நின்று கொண்டாள்.
“அட, என்ன ஐஷு… இதுக்குப் போயி கூச்சப்பட்டுகிட்டு…” என்றவன் வீட்டில் அணியும் டிரவுசரைப் போட்டுக் கொண்டு, நீயும் டிரஸ் மாத்தறதுன்னா மாத்திக்க… எனக்கு ஒண்ணும் ஆட்சேபணை இல்ல…” என்றவனை கோபமாய் ஏறிட்டவள்,
“யூ ராகு…” என்று பல்லைக் கடிக்க,
“இல்ல, உன் ரூம்ல பாத்ரூம் இல்லையே… பாவம் நீ எப்படி டிரஸ் மாத்துவ… நான் வேணும்னா கண்ணை மூடிக்கவா…” கேட்டுக் கொண்டே டிஷர்ட்டை அணிந்து கொண்டவனின் தலையில் நறுக்கென்று கொட்ட, “ஆ…” அலறியவனிடம், “யாருகிட்ட உன் வேலைத்தனதைக் காட்டற… பேச்சு பேச்சா இருக்கணும்… இல்ல, டிரவுசர் கழண்டுடும்…” மிரட்டினாள்.
“இப்ப நான் என்ன சொல்லிட்டேன்… பாவம் சேலைய சுத்திட்டு கஷ்டப்படறியே… டிரஸ் மாத்திக்க சொன்னது தப்பா… என்னை ஏதோ உன்னைத் திட்டமிட்டுக் கடத்திட்டு வந்து கற்பழிக்கப் போற ரவுடி ரேஞ்சுக்கு முறைக்கற…”
அவன் கேட்கவும் கிண்டலாய் சிரித்தவள், “யாரு நீ ரவுடியா… உன் பேருக்குப் பின்னாடி நானும் ரவுடிதான்னு நீயா எழுதி வச்சுகிட்டா தான் உண்டு… சும்மா காமடி பண்ணிட்டிருக்காம இடத்தைக் காலி பண்ணு… நான் டிரஸ் மாத்தணும்…” என்று அவனை விரட்டினாள்.
“ஹூம், இந்தக் காலப் பொண்ணுங்களுக்கு சாப்ட் ஹீரோவை  விட ரவுடித்தனமா நடந்துக்கற ஹீரோவைத் தானே பிடிக்குது… நான் போறேன் மா…” என்றவன் தனக்குள் முனங்கியபடி கதவைத் திறந்து வெளியே செல்ல சாத்தி தாளிட்டு, “நாம கொஞ்சம் ஓவரா தான் பேசிட்டமோ…” என யோசித்தவள், “ஹூம், பரவால்ல… அதெல்லாம் ராகு தப்பா எடுத்துக்க மாட்டான்…” என தன்னைத் தானே சமாதானம் செய்து கொண்டு உடை மாற்றத் தொடங்கினாள்.
சிறிது நேரம் கழித்து ஐஸ்வர்யா ஹாலுக்கு வந்தபோது அங்கே ரகுவை சுற்றி அவளுடன் படித்த கல்லூரித் தோழியர் ஏழெட்டு பேர் ஏதேதோ கேள்வி கேட்டுக் கொண்டு கூட்டமாய் அமர்ந்திருக்க கோகுலத்தில் கண்ணனாய் சிரிப்புடன் பேசிக் கொண்டிருந்தான்.
திகைப்புடன் நின்றவளைக் கண்ட கோமு, “ஐஷு கம் கம்… உன் பிரண்ட்ஸ் வந்திருக்காங்க பாரு…” என்று கூற திரும்பிய அவள் தோழி, “ஐஷு… எப்படி இருக்கே… எங்களை எல்லாம் மேரேஜ்க்கு கூப்பிடாம ஏமாத்திட்ட… நேத்து அப்பாவை மார்க்கெட்ல பார்த்தப்போ கேட்டேன்… இன்னைக்கு நீங்க விருந்துக்கு வரீங்க… எல்லா பிரண்ட்சையும் அழைச்சிட்டு நிச்சயம் வீட்டுக்கு வாங்கன்னு எல்லார் நம்பருக்கும் கூப்பிட்டுப் பேசிட்டாரு… அதான் நீ கூப்பிடலைனாலும் விஷ் பண்ணிட்டுப் போகலாம்னு வந்தோம்…” என்று விளக்கம் கொடுத்தாள் ராதா.
“ம்ம்… சாரி, காலேஜ் முடிஞ்சு எல்லாரும் கிளம்பிட்டீங்க… அதான் நான் யாருக்கும் அழைக்காம விட்டுட்டேன்…” என்றவளைப் “பரவால்லடி, இப்ப உங்களைப் பார்த்ததே ரொம்ப சந்தோசம் தான்…” என்று அவள் கையைப் பிடித்து ரகுவின் அருகில் அமர்த்தினாள் ராதா. எல்லாத் தோழியரும் எழுந்து நின்று ஒரே குரலில் வாழ்த்துக் கூறி ஒரு பரிசுப் பெட்டியை கையில் கொடுக்க நன்றி கூறி வாங்கிக் கொண்டனர். ஐஷுவுக்கு உண்மையிலேயே சற்று கில்டியாய் இருந்தது.
“ஐஷு… ரெண்டு பேரும் அதை ஓபன் பண்ணிப் பாருங்க…” ஒருத்தி சொல்லவும் மற்றவர்களும் வழி மொழிய ரகுவும், ஐஷுவும் அந்த பரிசுப் பெட்டியில் அழகாய் சுற்றப்பட்டிருந்த வண்ணக் காகிதங்களை துகிலுறியத் தொடங்கினர். அது பிரிக்கப் பிரிக்க பாஞ்சாலியின் சேலையாய் வளர்ந்து கொண்டே போக ஒரு கட்டத்தில் ஐஷு சோர்ந்தே போனாள்.
கோபி, உஷா உறவினர் உட்பட அதை ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருக்க, “ஹேய் கேர்ள்ஸ்… வாட்ஸ் இன்சைட்… இட்ஸ் லைக் ஹனுமான் டைல்…” என்றார் கோமு ஆர்வம் தாங்க முடியாமல்.
ஒருவழியாய் ஒரு குப்பைத் தொட்டி அளவுக்குப் பேப்பர்களைப் பிரித்த பின் அதற்குள் ஒரு சின்ன பாக்ஸ் எட்டிப் பார்க்க ஆசுவாசப் பெருமூச்சு விட்டாள் ஐஸ்வர்யா.
ரகு அதைத் திறக்க உள்ளே ஒரே ஒரு டைரி மில்க் சாக்கலேட்டுடன் அழகான கபிள்ஸ் கைகடிகாரம் கண்ணாடிப் பெட்டிக்குள் பளிச்சிட்டது. “எங்க ஸ்மால் கிப்ட்…” என்ற ராதா, “ரெண்டு பேரும் கைல கட்டி விடுங்க…” என்று கூற ரகு முதலில் ஐஷுவின் கையில் கட்டி விட்டான். அடுத்து ஐஷுவும் கட்டினாள்.
“சாக்கலேட் எடுத்துக்கங்க…”
“ஒண்ணு தானே இருக்கு… ரகு எடுத்துக்கிட்டும்…” ஐஷு சொல்ல, “இல்ல… ஐஷுவுக்கு சாக்கலேட் ரொம்பப் பிடிக்கும்… அவ எடுத்துகிட்டும்…” என்றான் ரகு.
“ரெண்டு வாட்ச் வச்ச எங்களுக்கு ரெண்டு சாக்கலேட் வைக்கத் தெரியாதா… அதுக்கு ஒரு ரீசன் இருக்கு…” என்ற ராதா, “பாட்டி, உங்களுக்கு புரியுதா…” என்றாள் அவர்களைப் புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்த கோமளவல்லியிடம்.
“ம்ம்… புரியுதுமா… உடம்பால ரெண்டா இருந்தாலும் உயிரால, உணர்வால ஒண்ணா இருக்கணும்னு தான சொல்ல வரீங்க… வாழ்க்கைல வர்ற இன்ப, துன்பத்தை ரெண்டு பேரும் ஒண்ணா ஷேர் பண்ணிக்கணும்… இந்த சாக்கலேட் மாதிரி… நீங்க ரெண்டு பேரும் ஷேர் பண்ணிக்கனும்னு தான் ஒரு சாக்கலேட் மட்டும் வச்சிருக்காங்க…” என்றார் கோமளவல்லி.
ஐஷு, “இந்த ஒரு சாக்கலேட்ல இவ்ளோ விஷயமா இருக்கு…” என்பதுபோல் திகைத்துப் பார்க்க,
“வாவ்… உண்மைலயே நீங்க கிரேட் கிரேன்ட்மா… லவ்லி கிப்ட்… வொண்டர்புல் மீனிங்… தேங்க்ஸ் பிரண்ட்ஸ்…” என்றான் ரகு அவர்களிடம் சந்தோஷத்துடன்.
“ம்ம்… சாக்கலேட் ஷேர் பண்ணிக்கங்க…” என்றாள் ராதா.
அதன் கவரைப் பிரித்து அதைப் பாதியாய் பிய்க்கப் போனவனை அவசரமாய் தடுத்தவள், “ம்ஹூம், இப்படி இல்ல, ரெண்டு பேரும் வாயில கடிச்சு பாதி பாதியாப் பிரிச்சுக்கணும்…” என்றாள் குறும்புடன்.
ரகு சந்தோஷமாய் ஐஷுவைப் பார்க்க அவளோ சிரிக்கவும் முடியாமல் மறுக்கவும் முடியாமல் முழித்துக் கொண்டு, “ப்ச்… என்ன சொல்லற ராதா, பெரியவங்க எல்லாம் இருக்காங்க…” என்றாள் அதைக் காரணம் காட்டி.
“ஓ… அவ்ளோ தானே…” என்றவள், பாட்டியின் காதில் ஏதோ கூற, “ஹஹா… நாட்டி கேர்ள்ஸ்… ஓகே என்ஜாய்…” என்றவர், “சரி பெரியவங்க எல்லாம் வாங்க… நம்ம வேலையைப் பார்ப்போம்… அவங்க சிறுசுங்க ஏதோ, என்ஜாய் பண்ணட்டும்…” என்று சொல்லவும், மற்றவர்கள் அவரவர் வேலையைப் பார்க்க சென்றனர்.
“கமான் கைஸ்… ஸ்டார்ட்…” என்று ராதா கூற ரகு சாக்கலேட்டின் ஒரு பக்கத்தை வாயில் கவ்விக் கொண்டு ஐஷுவை நோக்கிப் போக தயக்கத்துடன் நகராமல் நின்றவளைப் பிடித்து ரகுவிடம் தள்ளி விட்டனர்.
தடுமாறி தன் மேல் விழுந்தவளை காதலோடு பிடித்துக் கொண்டவன் அவள் கண்களையே பார்க்க அந்தப் பார்வையைத் தாங்கிக் கொள்ள முடியாமல் அவள் கண்கள் தழைந்து வேறு பக்கம் நோக்க சாய்வாய் அவன் கைக்குள் இருந்தவளின் முகம் நோக்கிக் குனிந்தான் ரகுவரன்.
முதன் முதலாய் ஒரு ஆண்மகனின் கைகளுக்குள் அதுவும் இத்தனை நெருக்கத்தில் இருந்தவளின் மனது புதுவித அவஸ்தையுடன் படபடக்க, ஹார்மோன்களின் ரியாக்ஷனை  உடலுக்குள் உணர்ந்தாள் ஐஸ்வர்யா.
ரகுவின் உதடுகள் கவ்வி இருந்த சாக்கலேட் அவள் உதடுகளை உரச, அத்தனை நெருக்கத்தில் அந்தக் கண்களில் வழிந்த காதலில் செவ்விதழ்கள் மெல்லத் திறந்து அனுமதி கொடுக்க அழகுப் பல்லால் அதைப் பற்றியவள் தொண்டைக் குழிக்குள் ஏதோ ரசாயனப் பந்து உருண்டு கொண்டு எச்சிலைக் கூட இறங்க விட மாட்டேனென்று அடம் பிடித்துக் கொண்டிருந்தது.
அவளை அதிகம் அவஸ்தைப் பட விடாமல், சாக்கலேட்டின்  பாதியை ரகு கடித்துக் கொண்டு, மெல்ல விடுவித்தான். சுற்றி நின்ற இளவட்டங்கள் கை கொட்டி உற்சாகத்தை வெளிப்படுத்த ஐஷுவின் முகம் நாணமும், கூச்சமுமாய் அழகாய் சிவந்திருக்க அவளையே பார்த்திருந்தான் ரகு.
பட்டும் படாமலும்
தொட்டும் தொடாமலும்
இட்ட முத்தமொன்றில்
இடறிக் கொண்டிருக்கிறது
இதயம்
இடம் மாறித் துடிக்க…
இது இதயத் துடிப்பா…
இல்லை காதல் துடிப்பா…

Advertisement