Advertisement

அத்தியாயம் – 8
நாட்கள் நகரத் தொடங்க வீட்டில் கல்யாணக் களேபரம் தொடங்கிவிட்டிருந்தது. கோபிநாத் காலில் சக்கரம் இல்லாத குறையாக எல்லாத்துக்கும் ஓடிக் கொண்டிருந்தார். கல்யாணப் பத்திரிகையும் கொடுக்கத் தொடங்கியிருந்தனர்.
புருஷோத்தமனும், மேனகாவும் தினமும் அலைபேசியில் சம்மந்தி வீட்டுக்கும், மருமகளுக்கும் அழைத்துப் பேசிக் கொண்டிருந்தனர். ரகுவரன் எப்போதாவது கோபிநாத்துக்கு அழைத்துப் பேசினான். தப்பித் தவறிக் கூட ஐஸ்வர்யாவிற்கு அழைக்காமல் இருந்தவன் கோமளவல்லிப் பாட்டியிடம் தினமும் அவளைப் பற்றிக் கேட்டுக் கொண்டு இருந்தான்.
ஐஸ்வர்யாவுக்கு கல்லூரியில் கிளாஸ் முடிந்து விட்டதால் அடிக்கடி விடுமுறை கிடைத்தது. பெற்றோரின் மனம் வருந்தக் கூடாதே என்று அவர்களுடன் கல்யாண பேச்சில் கலந்து கொண்டாலும் மனதின் ஓரத்தில் ரகுவரன் பேசாமல் இருந்தது ஒரு சஞ்சலத்தைக் கொடுத்தது.
இரவு உணவு முடிந்து அறைக்கு வந்தவள் அலைபேசியை சார்ஜில் போட்டுவிட்டு நிமிர ரகு கொடுத்த போட்டோ பிரேம் கண்ணில் பட்டது. ஒரு நிமிடம் அதைப் பார்த்தவள் மனம் அவனைப் பற்றி அசைபோடத் தொடங்கியது.
“என்னவோ, ஹீரோ ஜீரோன்னு எல்லாம் டயலாக் பேசிட்டு போனான்… இப்ப சத்தத்தையே காணோம்… ஒருவேள பயந்துட்டானோ… அவனுக்குப் பெரிய புண்ணாக்குன்னு நினைப்பு… என்னோட பேசாம, போன் பண்ணாம இருந்தா ஏங்கிப் போயி நானே அழைப்பேன்னு நினைச்சிட்டானோ… சாத்தியமில்லை ராஜகுமாரா… கனவிலும் சாத்தியமில்லை…” கிண்டலாய் சிரித்தவள், “என்னது, அவன் ராஜகுமாரனா… கொத்தவரங்கா குமாரன்…” என சிரித்துக் கொண்டாள். நினைவுகள் அவனைப் பற்றியே சுற்றி வர எரிச்சலானவள் எழுந்து பாட்டியைத் தேடிச் சென்றாள்.
“கோமு…” கட்டிலில் காணாமல் அவள் குரல் கொடுக்க பாத்ரூமில் இருந்து பதில் கொடுத்தார் கோமளவல்லி.
“ஐஷூ டியர், ஐ ஆம் ஹியர்… வெயிட்…” என்றதும் அவள் கட்டிலில் அமர்ந்தாள். அப்போது கோமுவின் அலைபேசி சிணுங்கத் தொடங்க, எடுத்துப் பார்த்தவள் முகம் கொவ்வைப் பழமாய் சிவந்தது.
“கோமு… ராகு காலிங்…” என்று கத்தியவளிடம், “பியான்சிய இப்படி எல்லாம் சொல்லக் கூடாது… எடுத்துப் பேசு ஐஷூ…” என்றார் அவர். அழைப்பையே முறைப்பாய் பார்த்தவள், காதுக்குக் கொடுத்து “ஹலோ…” வேண்டா வெறுப்பாய் கூற எதிர்ப்புறம் ஒரு நொடி ஸ்தம்பித்து பேச்சைத் தொடங்கியது.
“வாவ்… பாட்டிக்கு போன் பண்ணா பியூட்டி எடுக்குது… ஹல்லோ ஐஷூ பேபி, தூங்கலையா…” என்றான் ரகு.
“அது, எனக்கு தூக்கத்துல நடக்கற வியாதி இருக்கு… அதான் இப்ப போன் பேசிட்டு இருக்கேன்…” என்றாள் கிண்டலாக.
“ஓ… சூப்பர் சூப்பர்… அப்ப அப்படியே தூக்கத்துல நடந்து சென்னைக்கு வந்திடேன்…” என்றான் அவன்.
“ப்ச்… இப்ப, எதுக்கு கால் பண்ணே…” என்றாள் எரிச்சலாய்.
“கொஞ்ச நேரம், கொஞ்ச நேரம்… கொஞ்சிப் பேசக் கூடாதா…”
“சரி, கோமு வந்தா பேச சொல்லறேன், வச்சிடறேன்…” என்றவள் பட்டென்று அழைப்பைத் துண்டித்ததும் தான் அவனைப் பழி வாங்கி விட்டது போல் மனதுக்கு சற்று ஆசுவாசமாய் உணர்ந்தாள்.
டவலால் முகத்தைத் துடைத்துக் கொண்டே வெளியே வந்த கோமு சிவந்த மிளகாயைக் கடித்தது போல் காட்டமாய் அமர்ந்திருந்த பேத்தியைப் புரியாமல் பார்த்து, “என்னாச்சு ஏன் போனை வச்சுட்டே…” என்று கேட்க, முறைத்தாள்.
“ம்ம்… வுட்வர்ட்ஸ் கிரேப் வாட்டர் தீர்ந்து போச்சாம்… அனுப்ப முடியுமான்னு கேக்குறான்…” என்றாள் எரிச்சலுடன்.
“ஹாஹா, வாட் ஹாப்பன்டு பேபி… ரகு என்ன சொன்னான்…” சிரிப்புடன் கேட்டார் கோமு.
“அதான் கிரேப் வாட்டர் அனுப்ப சொன்னான்னு சொன்னேனே… நீயே கூப்பிட்டு கொஞ்சிக்க…” என்றவள் எரிச்சலுடன் எழுந்து வெளியே செல்ல புரியாமல் பார்த்து நின்றார் கோமளவல்லி.
“ஹஹா… நாட்டி கேர்ள்… வாட் வுட் ஹி ஹாவ் செட்…” யோசித்துக் கொண்டே ரகுவுக்கு அழைத்தார்.
தனது அறைக்கு சென்று குறுக்கும் நெடுக்குமாக அறையை அளந்த ஐஷு மனதுக்குள் பொருமிக் கொண்டிருந்தாள்.
“இந்த ராகு கோமுக்கு போன் பண்ணறான்… அப்பாக்கு போன் பண்ணறான்… எனக்கு மட்டும் தான் பண்ணாம இருக்கானா… அவங்க எல்லார் கிட்டயும் நல்ல பேர் வாங்கிட்டு என்னை மட்டும் அவாய்டு பண்ணிட்டு இருக்கான்… இந்த கோமுகூட இவ்ளோ நாள் அவனைப் பத்தியோ, போன்ல பேசுறதைப் பத்தியோ எதுவுமே எங்கிட்ட மூச்சு விடலையே…” என்றவளின் மூளை கேள்வி கேட்க, மனசாட்சி கேவலமாய் காறித் துப்பியது.
“ஆமா உன்கிட்ட சொல்லிட்டா மட்டும்… அப்படியே ஆசையா கேட்டிருவியா… இப்ப ரகு அவங்களோட எல்லாம் பேசிட்டு இருக்கறது குத்தம்னு சொல்லறியா… இல்ல, உன்னோட மட்டும் பேசாம இருக்கறது குத்தம்னு சொல்ல வரியா…” மனசாட்சியின் கேள்விக்கு பதில் தெரியாமல் முழித்தாள்.
“அப்படி அவனோட பேசணும்னு ஆசை இருக்கறவ இப்ப பேசி இருக்க வேண்டியது தான… எதுக்கு கட் பண்ணிட்டு ஓடி வந்துட்ட…” என்று கேட்க சிலுப்பிக் கொண்டாள்.
“எனக்கொண்ணும் அவனோட பேசணும்னு ஆசை எல்லாம் இல்லை…” அவள் சமாளிக்க, “அப்புறம் எதுக்கு பொத்திட்டுப் போகாம, புலம்பிட்டு இருக்க…” என்று கேள்வி வரவும் வாயை மூடிக் கொண்டு அமைதியாய் அமர்ந்தாள். ஏனோ தன் மீதே கோபமாய் வந்தது. கடுப்புடன் அமர்ந்திருந்தவளை சிணுங்கிய அவளது அலைபேசி கலைத்து விட்டது.
“ராகு காலிங்…” என்று ஒளிர்ந்து கொண்டிருக்க கடுப்புடன் எடுக்காமலே அமர்ந்திருந்தாள்.
அது முழுதும் அடித்து ஓய்ந்து மீண்டும் ஒலித்தது. கோபமாய் எடுத்தவள், “ஹலோ, எதுக்கு இப்ப என்னை டிஸ்டர்ப் பண்ணற… நான் தூங்கணும்…” என்றாள்.
“ஏய் பொண்டாட்டி… எதுக்கு இப்படி வாணலில போட்ட கடுகாட்டம் வெடிக்கிற… சரி நாம பேசறதில்லையேன்னு சின்னப் பொண்ணு ஏங்கிப் போயிடக் கூடாதேன்னு கால் பண்ணா ரொம்ப தான் பிகு பண்ணற…”
“யாரு, நான் ஏங்கிக் கிடக்கறேனா…”
“பின்ன நானா ஏங்கறேன்… உண்மைய ஒத்துக்குவியா அதவிட்டுட்டு சும்மா தாம் தூம்னு குதிச்சிட்டு…” அவன் சொல்லவும் அவளுக்கு சுறுசுறுவென்று ஏறியது.
“ஓ… அப்படி வேற நினைச்சிட்டு இருக்கியா… எனக்கு உன்னோட பேச எந்த ஆசையும் இல்ல, வச்சிடறேன்…” என்றவள் சட்டென்று அழைப்பைத் துண்டித்தாள். அதன் பின்னும் கோபம் அடங்க மறுக்க கண்ணில் நீர் துளிர்த்தது.
“ராஸ்கல்… ரொம்பதான் ஓவரா போறான்… அவனைக் கல்யாணம் பண்ணிக்க நான் ஒத்துகிட்டே இருக்கக் கூடாது… எவ்ளோ திமிரா பேசறான்…” படபடப்பாய் உணர்ந்தாள்.
அலைபேசி மீண்டும் சிணுங்க ஆத்திரத்துடன் எடுத்தவள், “டேய் நீ ரகுவா… என்னைப் பிடிச்ச ராகுவா… எதுக்கு இப்படி நேரம் காலமில்லாம இம்சை பண்ணற…” பொரிந்தாள்.
எதிர்ப்புறம் அமைதியாய் இருக்க, “அச்சோ… கோபத்துல வார்த்தையை விட்டுட்டோமே…” மனம் பதறியது. ஒரு நிமிட அமைதிக்குப் பின் “ஸாரி…” ரகுவின் குரல் ஒலித்து அப்போதே அழைப்பைத் துண்டிக்க அவளுக்கு ஒரு மாதிரி குற்றவுணர்ச்சியாய் இருந்தது.
“யோவ் ஜி, எதுக்கு அவனை கால் பண்ண வச்சு என்னை இப்படிப் பேச வச்சே…” என்று கணபதியிடம் முறையிட, “நீதான அவன் கால் பண்ணலைன்னு குதிச்சே… இப்ப எக்குத் தப்பா பேசிட்டு என்னைக் கேட்டா…” என்று ஜி கண்ணை உருட்ட அமைதியாய் கட்டிலில் சென்று அமர்ந்தாள்.
அன்றைய இரவு சரியான உறக்கமின்றி கழிய காலையில் கோபிநாத் அடுத்த வெடிகுண்டு தகவலோடு வந்தார்.
“ஐஷூ… நாளைக்கு உனக்கு கிளாஸ் இருக்கா…”
“இல்லப்பா… ஏன் கேக்கறிங்க…”
“எல்லாருக்கும் கல்யாணத்துக்கு டிரஸ் எடுக்க சென்னை போகலாம்னு நினைக்கிறேன் மா… மாப்பிள்ளையோட பிளாட்டையும் பார்த்திட்டு வந்திடலாமே…” என்றார்.
“ஆமாங்க… கல்யாணத்துக்குப் பிறகு நம்ம பொண்ணு வாழ வேண்டிய வீடு… எப்படி இருக்குன்னு பார்த்திட்டு வரலாம்…” என்றார் உஷா உற்சாகத்துடன்.
“டிரஸ் எடுக்க எதுக்குப்பா சென்னை எல்லாம்… இங்க கிடைக்காத டிரஸ்ஸா… சும்மா வீண் செலவு…” மகளை நெகிழ்வோடு நோக்கிய கோபிநாத், “உன் கல்யாணத்தை சீரும் சிறப்புமா ஒரு திருவிழா போல செய்ய நினைக்கிறேன்… இதெல்லாம் ஒரு செலவா… பிளாட்டை பார்த்திட்டு வந்திட்டா அங்கில்லாத பொருளை உங்களுக்கு சீர்வரிசையா கொடுக்கவும் வசதியா இருக்கும்மா…” என்றார்.
“அதெல்லாம் எதுக்குப்பா… உங்க மாப்பிள்ளை சம்பாதிச்சு வாங்க மாட்டாரா… இங்கயே டிரஸ் எடுத்துக்கலாம்ப்பா…”
“ஐஷூ, அப்பாவும் நானும் அங்கே நீ வாழப் போற வீட்டைப் பார்க்கணும்னு ஆசையா இருக்கோம்… மறுத்து சொல்லாம கிளம்பப் பாரு மா…” என்றார் உஷா.
“சரி, உங்க இஷ்டம்…” என்றவள் அவளது அறைக்கு சென்று விட்டாள். “ஒவ்வொரு பொண்ணுங்க கல்யாணத்துக்கு எனக்கு அது வேணும் இது வேணும்னு கேப்பாங்க… இவ என்னடான்னா இப்படி இருக்கா…” என்று புலம்பிக் கொண்டே, “நீங்க நாளைக்கு வண்டிக்கு சொல்லிடுங்க… நாம போயிட்டு வந்திடலாம்… மேகியும் கேட்டுட்டே இருந்தா… சென்னை போகலாமானு… எல்லாரும் ஒண்ணாவே போயி எடுத்திட்டு வந்திடலாம்…” என்ற உஷா எழுந்து சென்றார்.
அடுத்தநாள் காலையில் கோமளவல்லி சற்று டயர்டாக இருப்பதாகக் கூறி வரவில்லையென்று கூறிவிட அவருக்குத் துணையாய் தானும் வீட்டில் இருப்பதாக ஐஷூ சொல்ல உஷா முறைத்தார்.
“என்ன ஐஷூ, விளையாடறியா… கல்யாணத்துக்கு சேலை எடுக்கப் போறது உனக்கு… அப்புறம் உனக்கு பிடிக்காதது எடுத்துட்டு வந்துட்டா என்னைப் படுத்தி எடுத்திருவ…” என்று சொல்ல, “எனக்குப் பிடிக்கலைன்னு சொன்ன கருவாடையே கணவனா ஏத்துக்க துணிஞ்ச பின்னாடி நீங்க எடுக்கிற சேலையவா கட்டிக்காம இருக்கப் போறேன்…” அவள் மனதுக்குள் சொல்லிக் கொண்டிருக்க கோமளா கூறினார்.
“ஐஷூ, யூ கோ பேபி… குட் சான்ஸ் டு சீ யுவர் பியான்சி… அண்ட் ஆல்சோ பை மீ எ நைஸ் சல்வார்…” என்றார்.
அதற்கு மேல் மறுக்காமல் அவள் கிளம்ப இவர்கள் மூவரும் ஒரு காரில் சென்னை நோக்கிக் கிளம்ப புருஷோத்தமனும், மேனகாவும் சேலத்தில் இருந்து சென்னைக்கு கிளம்பினர். ஐஷூ அமைதியாகவே இருக்க உஷாவும் கோபிநாத்தும் ஏதேதோ கல்யாண விஷயங்களைப் பேசிக் கொண்டு வந்தனர். வழியில் டிபனை முடித்துக் கொண்டு மதிய உணவுக்கு அங்கே சென்று சேரும் வகையில் பிளான் செய்திருந்தனர்.
“ஐஷூ, மாப்பிள்ளைக்கு போன் பண்ணி இன்னும் ஒரு மணி நேரத்துல நாம சென்னை ரீச் பண்ணிடுவோம்னு சொல்லு மா…” என்ற தந்தை அப்போது அவள் கண்களுக்கு வில்லனாகத் தோன்ற, மறுத்தால் ஆயிரம் கேள்விகள் உதயமாகுமோவென பயந்து மனதுக்குள் நொந்து கொண்டே முதன்முதலாய் ரகுவின் எண்ணுக்கு அழைத்தாள்.
ரிங் போய்க் கொண்டேயிருக்க, “ஒருவேளை என் நம்பரைப் பார்த்திட்டு எடுக்க மாட்டோனோ…” என அவள் யோசிக்கும் போதே அழைப்பு எடுக்கப்பட்டது.
“ஹலோ…” எப்போதும் போல் ரகுவின் குரலின் இருந்த கம்பீரம் மனதை வருட காட்டிக் கொள்ளாமல் பேசினாள்.
“நாங்க ஒரு மணி நேரத்தில் ரீச் ஆகிடுவோம்னு அப்பா சொல்ல சொன்னார்…”
“தேங்க்ஸ் பார் யுவர் இன்பர்மேஷன்…” வழக்கமாய் அவன் சொல்லும் பொண்டாட்டியும் குழைவும் குரலில் காணாமல் போயிருக்க யாருடனோ பேசுவது போல் அவன் பதில் சொல்லவும் அவளுக்கு ஒரு மாதிரி இருந்தது.
“வச்சிடறேன்…” என்றவள் அழைப்பைத் துண்டிதுவிட, “ஐஷூ மாப்பிள்ள என்ன சொன்னார்மா…” ஆவலுடன் கேட்ட தந்தையிடம், “பக்கத்துல வந்ததும் சொல்ல சொன்னார்ப்பா…” என்று புளுகிவிட்டு அமைதியாய் அவன் பேசியதையே யோசித்துக் கொண்டிருந்தாள்.
அதற்குள் புருஷூ கோபிநாத்தின் அலைபேசிக்கு அழைத்து இவர்களுக்காய் காத்திருப்பதாகக் கூற அவர்களுடனே ரகுவின் பிளாட்டுக்கு செல்ல தீர்மானித்தனர். அதே போல் போகும் வழியில் அவர்களும் இணைந்து கொள்ள இருவரின் காரும் அந்தப் பெரிய அபார்ட்மென்ட் முன் சென்று நின்றது.
பிரம்மாண்டமான ஒன்பது நிலை கொண்ட அபார்ட்மெண்டில் ரகுவின் பிளாட் ஐந்தாவது மாடியில் இருந்தது. காரிலிருந்து இறங்கிய ஐஸ்வர்யா அழகாய் சுத்தமாய் இருந்த கட்டிடத்தை வியப்பாய் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“என்ன ரோஜாக்குட்டி… வியப்பா பார்த்திட்டு இருக்கே… இங்கெல்லாம் இப்படிதான்… தனிவீடு ரொம்ப கஷ்டம்… அபார்ட்மென்ட் கிடைக்கிறதே பெரிய விஷயம்…” என்ற புருஷோத்தமனுக்கு அவள் புன்னகையை பதிலாக்க, “வாங்க, லிப்ட் அங்கே இருக்கு…” அழைத்துச் சென்றார்  மேனகா.
கோபிநாத்தும், உஷாவும் புன்னகையுடன் எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டே நடந்தனர்.
“என்ன ஐஷூ, நீ வாழப் போற இடம் பிடிச்சிருக்கா… ரகுவோட ஆபீஸ் இங்கிருந்து அரைமணி நேரம் போகணும்…” சொன்ன மேனகாவிடம் தலையாட்டி லிப்டுக்குள் நுழைந்தாள். அது ஐந்தாவது தளத்தில் அவர்களை இறக்கிவிட ரகுவின் பிளாட்டுக்கு அழைத்துச் சென்றார்.
முன்னில் அவன் பெயரை சுமந்த பெயர்ப்பலகை தங்க எழுத்தில் பளிச்சிட அழைப்பு மணியை அழுத்தினார். அதன் ஓசை ஏனோ ஐஷுவின் மனதுக்குள் ஒலிக்க ஒருவித படபடப்பை உணர்ந்தாள்.
இது அவள் வாழப் போகும் வீடு என்பது காரணமா… இல்லை, ரகுவை இன்சல்ட் செய்து பேசியதால் தன்னைக் கண்டதும் எப்படி ரியாக்ட் பண்ணப் போகிறானோ என யோசித்த தயக்கத்தின் வெளிப்பாடா என புரியவில்லை. ஆனால் மலர்ந்த முகத்துடன் கதவைத் திறந்த ரகு சாதாரணமாய் ஒரு ஷாட்ஸ் டீஷர்ட்டுடன் அவர்களை அன்போடு வரவேற்றான்.
“வாங்க மாமா, வாங்க அத்தை… இந்த வசந்தமாளிகைக்கு உங்களை அன்போடு வரவேற்கிறேன்…” ஐஷூவை கண்டுகொள்ளாமல் இடுப்புவரை குனிந்து அவன் அவர்களை வரவேற்க, சிரித்தனர். உள்ளே வந்தவர்களின் கண்கள் ஆச்சர்யத்தில் விரிய வீடு அத்தனை சுத்தமாகவும் அழகாகவும் இருந்தது.
ஐஷுவுக்கும் அதைக் கண்டு ஆச்சர்யமாய் இருக்க, “ஒருவேளை, நாமெல்லாம் வரோம்னு பயபுள்ள ஆளை வச்சு கிளீன் பண்ணி வச்சிருக்குமோ…” என யோசிக்கும்போதே உஷா வாய் திறந்து கேட்டுவிட்டார்.
“வீட்டை ரொம்ப அழகா, நீட்டா வச்சிருக்கீங்க மாப்பிள்ளை… ஹெல்ப்க்கு இங்கே ஆள் கிடைப்பாங்களா…”
“தேங்க்ஸ் அத்தை… ஆளெல்லாம் கிடைப்பாங்க, ஆனா நல்ல சம்பளம் எதிர்பார்ப்பாங்க… இந்த அளவுக்கு இருக்கும்னு சொல்லவும் முடியாது… நாமளே சுத்தமா வச்சுக்க முடியாதா… உக்காருங்க…” என்றான் புன்னகையுடன்.
அளவான அவசியமான பொருட்களுடன் இரண்டு படுக்கை அறைகள், ஹால், டைனிங் ஹால், கிட்சன் என்று ஒரு சின்ன குடும்பத்திற்கு அளவாய் இருந்தது வீடு.
“பேசிட்டு இருங்க வந்திடறேன்…” என்றவன் அடுக்களைக்கு செல்ல, “ஐஷூ, நீயும் போ மா…” என்றார் மேனகா.
“ஆஹா, என்னை எதுக்கு இந்த அத்தை போக சொல்லுறாங்க…” என நினைத்துக் கொண்டே அடுக்களைக்கு செல்ல அங்கே கண்ணாடி டம்ளரில் கலந்து வைத்திருந்த லெமன் ஜூஸை ஊற்றிக் கொண்டிருந்தான் ரகுவரன்.
தயக்கமாய் அடுக்களைக்கு சென்றவளைப் பார்த்து புன்னகைத்த ரகு, “வா ஐஷூ… ஜூஸ் எடுத்துக்க…” என்று ஒரு கிளாஸை எடுத்து அவள் கையில் கொடுக்க வாங்கிக் கொண்டாள். டிரேயில் கிளாஸை நேர்த்தியாய் வைத்து எடுத்துக்கொண்டு அவன் ஹாலுக்கு செல்ல, பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு உண்மையாகவே வியப்பாய் இருந்தது.
“ஆஹா, இந்த வெயிலுக்கு தேவாமிர்தமா இருக்கு மாப்பிள்ள…” என்று சந்தோஷமாய் குடித்தார் கோபிநாத். அவன் பின்னில் வந்த ஐஷூவை நோக்கி, “என்னடா ரோஜாக்குட்டி, ஜூஸ் குடிச்சியா… பிடிச்சுதா, உன் வருங்காலப் புருஷன் எப்படிலாம் அசத்துறான் பார்த்தியா…” பெருமையுடன் கேட்க அனைவரும் சிரித்தனர்.
“வாங்க ரூமெல்லாம் பார்க்கலாம்…” மேனகா அழைக்க உஷாவும், ஐஷூவும் பார்க்க சென்றனர்.
“இதான் ரகுவோட ரூம்…” மாஸ்டர் பெட்ரூமைக் காட்ட அவ்ளோ அழகாய் வைத்திருந்தான் ரகு.
“ஆஹா, கோமு சொன்ன போல இவனைக் கட்டிகிட்டா நமக்கு எந்த வேலையும் இருக்காது போலருக்கே…” என ஐஷூ யோசித்துக் கொண்டிருக்க, “என்ன மருமகளே, ரகு ரூம்னு சொன்னதும் ட்ரீம்க்கு போயிட்டியா…” என்று மேனகா கேட்க உஷா சிரிக்க அசடு வழிந்தாள் ஐஷூ.
“சரி, நீங்க பேசிட்டு இருங்க… லஞ்சுக்கு ரகு என்ன பண்ணிருக்கான்னு பார்த்திட்டு வரேன்…” மேனகா சொல்ல “நானும் வரேன் மேகி…” என்ற உஷாவும் அவருடன் செல்ல ஐஷூ மட்டும் அங்கே தனியே நின்றிருந்தாள். கட்டிலுக்கு அருகில் இருந்த மேசையில் ரகுவரனின் சின்ன வயதுப் போட்டோ ஒன்று இருக்க அதில் அவனது கையை இறுகப் பற்றிக் கொண்டு பாப் தலையுடன் சிரித்துக் கொண்டிருந்த குட்டிப் பெண்ணைக் கண்டவள் திகைத்தாள். அது சாட்சாத் அவள்தான் என்றாலும் அவனது படுக்கை அறையில் வைத்திருக்கும் அளவுக்கு முக்கியத்துவம் கொடுப்பான் என்று நினைத்திருக்கவில்லை.
அதை ஆவலுடன் நோக்கிக் கொண்டிருந்தவள் பின்னில் ஒலித்த குரலில் திடுக்கிட்டாள்.
இமை தட்டி
தவிர்க்கிறேன் உன்னை…
விழிக்குள் முகம் காட்டி
விரட்டுகிறாய் என்னை…
விருப்பங்களை விட
வெறுப்புகளே மனதில்
பிரதான நினைவுகளாய்…

Advertisement