Advertisement

அத்தியாயம் – 22
“கல்யாணம்னா என்னப்பா…” நான்கு வயது ஐஸ்வர்யா கேட்ட கேள்வியில் திகைத்த கோபிநாத் மகளுக்குப் புரியும் விதத்தில் எப்படி சரியாக சொல்வது என யோசித்துக் கொண்டிருந்தார். கோபிநாத், புருஷோத்தமன் இருவர் குடும்பமும் பக்கத்து வீட்டுப் பெண்ணின் கல்யாணத்தில் கலந்து கொண்டு கோபியின் வீட்டுக்கு வந்திருந்தனர். அனைவரும் ஹாலில் கூடி பேசிக் கொண்டிருந்தனர்.
மண்டபத்தில் நடந்த சடங்குகளை உன்னிப்பாய் கவனித்துக் கொண்டிருந்த ஐஷுவின் மனதில் எழுந்த கேள்வி தான் இது. 
“கல்யாணம்னா…” என்று இழுத்த கோபிநாத், “ச்சே… மணம்ங்கறது ஒரு ஆணும், பெண்ணும் இணைந்து இல்லறம் மேற்கொள்ள இருவருக்கும் நடத்தும் வாழ்க்கை ஒப்பந்தம்னு குழந்தைகிட்ட சொன்னா புரிஞ்சுப்பாளா…” என யோசித்துக் கொண்டிருக்க அவர் பதிலுக்காய் முகத்தையே பார்த்திருந்த  ஐஷு, அதை புருஷோத்தமனிடம் கேட்டாள்.
“அங்கிள், அப்பாக்கு தெரியல, நீங்க சொல்லுங்க…” என்றதும், புன்னகையுடன் அவளை எடுத்து மடியில் அமர்த்திக் கொண்டார் புருஷோத்தமன்.
“என் ரோஜாக்குட்டிக்கு நான் புரிய வைக்கிறேன்…” என்றவர், “கல்யாணம்னா ஒரு பொண்ணுக்கும், பையனுக்கும் ஒருத்தரை ஒருத்தர் பிடிச்சுப் போச்சுன்னா, ரெண்டு பேரும் ஒண்ணா வாழறதுக்கு வேண்டி அவங்களுக்கு கல்யாணம் பண்ணி வச்சிருவோம்… இனி இவங்க ரெண்டு பேரும் புருஷன், பொண்டாட்டின்னு உலகத்துக்கு தெரிவிக்க தான் தாலி கட்டுறது, எல்லாரையும் அழைச்சு கொண்டாடுறது… எல்லாம்… இப்ப என் செல்லத்துக்கு சந்தேகம் தீர்ந்துச்சா…”
அவளது பட்டுக் கன்னத்தில் முத்தமிட்டு அவர் கேட்க, அவள் யோசனையாய் அவர் அருகில் அமர்ந்திருந்த ரகுவை நோக்கிக் கொண்டிருந்தாள். அவன் புன்னகையுடன் இவர்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்தான். “அப்படின்னா இனி அந்த அக்காவும், அங்கிளும் ஒண்ணாவே இருப்பாங்களா… அங்கிள்…” என்றதும் அனைவரும் சிரித்தனர்.
“ம்ம்… ஆமா டா செல்லம்… எல்லா இடத்துக்கும் ஒண்ணா போவாங்க… ஒண்ணா ஒரே வீட்ல இருப்பாங்க… ஒண்ணா தூங்கி, சாப்பிட்டு குடும்பம் நடத்துவாங்க…” என்றாள் மேகி.
“ஓ…” என்று கன்னத்தில் விரல் வைத்து தீவிரமாய் யோசித்த ஐஷு, “அப்படின்னா எனக்கும், ரகுக்கும் கல்யாணம் பண்ணி வைக்கறீங்களா… எனக்கு ரகுவை ரொம்பப் பிடிக்கும்… அவனுக்கும் என்னை ரொம்பப் பிடிக்கும்… நாங்க ஒண்ணாவே இருக்கணும்… ப்ளீஸ் அங்கிள்…” கண்ணை சுருக்கி தலையை சாய்த்து பொம்மை கேட்கும் குழந்தையின் பாவத்துடன் கேட்டவளை அவர்கள் திகைப்புடன் நோக்க, ரகு அவளிடம் புன்னகைத்தான்.
“ஐஷு, நாம இப்ப சின்னக் குழந்தைங்க தானே… படிச்சு, பெருசாகி வேலைக்குப் போனதுக்குப் பின்னாடி தான் நம்ம ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணுவாங்க…” என்றான்.
அவன் சொன்னதைக் கேட்டு பெரியவர்கள் ஆச்சர்யமாய் கேட்டுக் கொண்டிருக்க ஐஷு யோசித்தாள்.
புருஷுவின் மடியிலிருந்து இறங்கியவள் ரகுவின் அருகில் சென்று, “ரகு, ப்ளீஸ்டா… நாம இப்பவே கல்யாணம் பண்ணிக்கலாம்… இந்த உஷா மம்மி ரொம்ப பேட்… எப்பப் பார்த்தாலும் என்னை ஹோம் ஒர்க் செய்ய சொல்லிட்டே இருப்பா… மேகி ஆன்ட்டி என்னைத் திட்டவே மாட்டாங்க… புருஷு அங்கிள் என்னைக் கொஞ்சிட்டே இருப்பார்… நீ என்னைக் கல்யாணம் பண்ணிட்டா நானும் உங்க வீட்டுக்கே வந்திடுவேன்ல… இப்பவே கல்யாணம் பண்ணிக்கலாம் ரகு…” 
அவள் சொன்னதைக் கேட்டு பெரியவர்கள் சிரிக்க, “அடிப்பாவி, ஹோம் ஒர்க் பண்ண பயந்துட்டு கல்யாணம் பண்ணி ஓடப் பார்க்கறியா… நீ எங்க போனாலும் உன்னை விட மாட்டேன்…” என்று உஷா புன்னகையுடன் மிரட்ட மற்றவர்கள் சிரித்தனர்.
“ஐஷுமா, நாம நல்லாப் படிச்சா தானே பெரிய ஜீனியஸ் ஆக முடியும்… அதுக்குதானே உஷா ஆன்ட்டி ஹோம் ஒர்க் பண்ண சொல்லுறாங்க… நீ இனிமே நம்ம வீட்டுக்கு வந்திடு, ரெண்டு பேரும் ஒண்ணா ஹோம் ஒர்க் பண்ணலாம்…”
“அச்சோ, என் அறிவுச் செல்லம்… என் மாப்பிள்ளைக்கு என்ன ஒரு புத்தி…” உஷா ரகுவை மெச்சிக் கொள்ள, “அப்படின்னா, நீ என்னைக் கல்யாணம் பண்ணிக்க மாட்டியா…” என்ற ஐஷு முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டு ரகுவை முறைத்தாள்.
“அச்சோ, என் ரோஜாக்குட்டிக்கு கோபம் வந்திருச்சே… டேய் ரகு, அவளை சமாதானப்படுத்து…” என்றார் புருஷோத்தமன்.
புன்னகையுடன் அவள் கையைப் பற்றிக் கொண்ட ரகு, “ரோஜாக்குட்டி… கோச்சுட்டியா… நான் இப்ப நம்ம கல்யாணம் பண்ண வேண்டாம்னு தான் சொன்னேன்… பெருசானதும் உன்னைத்தான் நான் கல்யாணம் பண்ணுவேன்… நீதான் எப்பவும் என் பொண்டாட்டி… அதுக்கப்புறம் நாம எப்பவும் ஒண்ணா ஒரே வீட்ல சாப்பிட்டு விளையாடலாம்…” என்று சொல்ல பெரியவர்கள் சிரித்தனர்.
“நிஜமா, கல்யாணம் பண்ணுவியா…” அவள் பிஞ்சுக் கண்கள் சந்தேகமாய் கேட்க, “சத்தியமா உன்னைத்தான் கல்யாணம் பண்ணுவேன்…” என்றான் அவளது அழகிய ரகுவரன்.
“ஹே ஜாலி…” என்று குதித்த ஐஸ்வர்யா அவன் கன்னத்தில் முத்தமிட்டு, “சரி வா… நாம விளையாடலாம்…” என்று அவன் கையைப் பிடித்து கூட்டிச் சென்றாள்.
“அப்புறம் சம்மந்தி, நம்ம பிள்ளைங்களுக்கு ஒருத்தரை ஒருத்தர் பிடிச்சுப் போச்சு… எப்ப கல்யாணம் வச்சிக்கலாம்…” புருஷூ புன்னகையுடன் கேட்க சந்தோஷமாய் சிரித்தனர்.
“நம்ம மனசுல உள்ளதையே நம்ம பிள்ளைகளும் சொல்லிட்டுப் போறாங்க… நிச்சயம் இது தெய்வ சங்கல்பமா தான் இருக்கும்… அவங்க ஆசை பலிக்கட்டும்…” என்றார் கோபிநாத் நண்பனிடம்.
டைரியில் ரகு எழுதி இருந்த நிகழ்வைப் படிக்கையில் லேசாய் ஒரு நிழல் போல அந்த சம்பவம் மனதுக்குள் வரி வடிவாய் தோன்றி மறைய ஐஷுவின் கண்கள் பனித்தன. அவளைப் பெண் பார்த்துவிட்டு வந்த நாளன்று இதை எழுதி “ஐஷு உனக்கு கொடுத்த வாக்கை நான் காப்பாத்துவேன்… நீதான் என் பொண்டாட்டி…” என்று எழுதி வைத்திருந்தான். 
வெகுநேரம் அவனது டைரியில் அவளைப் பற்றி அவன் எழுதிய சின்னக் கவிதைகளும், முதன்முதலில் கண்டபோது உள்ளத்தில் தோன்றிய பரவசத்தையும், தன்னைப் பிடிக்கவில்லை என்று சொன்னபோது இதயத்தில் ரத்தமே வடிந்ததையும் எழுதி வைத்திருந்தான். அதெல்லாம் படிக்கையில் அவள் மீது அவளுக்கே கோபம் வந்தது. மனம் முழுதும் ரகுவே நிறைந்திருக்க அவனை உடனே காண இதயம் துடித்தது. 
“எப்பேர்ப்பட்ட பொக்கிஷத்தை என் கையில் கிடைத்தும் அதன் அருமை தெரியாமல் இருந்திருக்கிறேன்… ரகு, எப்பவோ நான் சொன்னதை அப்படியே மனசுல வச்சுக்கிட்டு இத்தனை வருஷமும் என்னையே பொண்டாட்டியா நினைச்சு காத்திட்டிருந்த உன் அன்பை நினைக்கையில் எனக்கு சிலிர்த்துப் போகுது… என்னை மன்னிச்சிருடா… இனி உன்னை எப்பவும் தவிக்க விட மாட்டேன்…” மானசீகமாய் அவனோடு பேசிக் கொண்டிருந்தவள் விடியற்காலையில் தன்னையுமறியாமல் உறங்கத் தொடங்கினாள்.  
கிர்ர்ர்ர்…
கண்கள் தீயாய் எரிய கஷ்டப்பட்டு கண் திறந்த ஐஷு அலைபேசியில் அலாரம் அடிப்பதாய் நினைத்து அதை ஆப் பண்ண எடுத்தவள் சட்டென்று ஜெர்க் ஆகி அது அழைப்பு மணியின் ஒலி என்பதை உணர்ந்து பதட்டமாய் எழுந்தாள். 
“அச்சோ… டிரெயின் வந்து அவங்க வீட்டுக்கே வந்துட்டாங்க போலருக்கே…” என நினைத்து அவிழ்ந்திருந்த கூந்தலை ஒதுக்கி வேகமாய் சென்று கதவைத் திறந்தாள்.
வெளியே புன்னகையுடன் நின்ற பெற்றவர்களையும் கோமுவையும் சற்று குற்றவுணர்ச்சியுடன் நோக்கியவள், “வாங்க…” என்று வரவேற்று, “கோமு…” என்று பாட்டியின் கழுத்தில் கட்டிக் கொண்டாள்.
“என்னம்மா, நல்லாத் தூங்கிட்டியா… ட்ரெயின் இறங்கினதும் உனக்கு கால் பண்ணேன்… எடுக்கலை…” மகளிடம் கேட்டுக் கொண்டே உள்ளே நுழைந்தார் கோபிநாத்.
“ப்ச்… சாரிப்பா, ராத்திரி ரொம்ப நேரம் தூக்கமே வரல… அதான் விடியக்காலைல தூங்கிட்டேன் போலருக்கு…” என்றவள், அவர்களின் லக்கேஜைக் கொண்டு போய் தான் உபயோகித்த அறையில் வைத்துவிட்டு வந்தாள்.
“பிரயாணம் எல்லாம் சுகமா இருந்துச்சா… டிரெயின் சரியான நேரத்துக்கு வந்திருச்சே…” என்று விசாரித்தவளிடம் 
“ஐஷு, வேர் ஈஸ் ரெஸ்ட் ரூம்…” அவசரமாய் கேட்ட  கோமுவிற்கு கை காட்டி அனுப்பிவிட்டு, தன்னையே உற்று நோக்கிக் கொண்டிருந்த அன்னையிடம், “என்னம்மா, என்னை இன்னைக்கு தான் புதுசாப் பாக்குற போல பார்க்கற…” என்றாள் கூச்சத்துடன்.
மகளை வாஞ்சையுடன் கை பிடித்த உஷா கலைந்திருந்த கூந்தலை ஒதுக்கிவிட்டு, “என் பொண்ணுகிட்ட ஏதோ ஒரு மாற்றம் தெரியுதே… அது என்னவாருக்கும்னு பார்க்கறேன்…” என்றவர், “நேத்து சரியாத் தூங்காம கண்ணெல்லாம் சிவந்து கிடக்குது…” என்ற அன்னையிடம், “சரி… பாத்ரூம் போயிட்டு வாம்மா… நான் காபி எடுக்கறேன்…” என்று அடுக்களைக்கு நகரவும் மகளை எட்டாம் உலக அதிசயமாய் பார்த்தார். அதற்குள் கோபிநாத் அலைபேசியில் சம்மந்தி நண்பரை அழைத்து பேசிக் கொண்டிருந்தார்.
“நாங்க வீட்டுக்கு வந்தாச்சு புருஷு… நீங்க கிளம்பியாச்சா…”
“ஓ… டாக்ஸி கிளம்பி பத்து நிமிஷம் ஆச்சா… சரி, பத்திரமா வாங்க… வச்சிடறேன்…” என்றவர் அழைப்பைத் துண்டித்தார். புருஷுவுக்கு ரயிலில் பயணம் செய்வது சிரமம் என்பதால் அவர்கள் டாக்சியில் வருவதாகக் கூறியிருந்தனர்.
“உஷு… அவங்க சேலத்துல இருந்து கிளம்பிட்டாங்களாம்…” என்றார் மனைவியிடம் சந்தோஷத்துடன்.
“ஓ நல்லதுங்க, பொண்ணைப் பார்க்கக் கிளம்பினப்ப கூட உங்களுக்கு இவ்ளோ சந்தோஷம் இல்லை… உங்க பிரண்டு வர்றேன்னு சொன்னதும் எவ்ளோ சந்தோஷம்…” என்று கிண்டலடித்துக் கொண்டிருக்க, “அப்பா, அம்மா, காபி எடுத்துக்கோங்க…” டிரேயில் காபிக் கோப்பையுடன் வந்த மகளைக் கண்டு கண்ணை விரித்தார் கோபிநாத்.
“உஷு… எப்பப் பார்த்தாலும் புலம்பிட்டே இருப்பியே… என் பொண்ணுக்கு ஒரு வேலையும் தெரியாது… எப்படி குடும்பம் நடத்தப் போறாளோன்னு… இப்பப் பார்த்தியா… எவ்ளோ பொறுப்பா காபி எடுத்திட்டு வந்து கொடுக்கிறா… கல்யாணம் ஆயிட்டா ஆட்டோமெடிக்கா அந்தப் பொறுப்பெல்லாம் வந்திடும்மா…” சொல்லிக்கொண்டே ஒரு கோப்பையை எடுத்துக் கொள்ள, உஷா சிரித்தார்.
“ஆமாமா, உங்க பொண்ணு ரொம்ப பொறுப்பு தான்…” என்று சொல்லிக் கொண்டே உஷாவும் ஒரு கோப்பையை எடுத்துக் கொள்ள ஐஷுவின் மைன்ட் வாய்ஸ் கழுவி ஊதியது.
“ஆஹா, இவங்க இப்படிப் பொறுப்பு, பருப்புன்னு எல்லாம் பேசறாங்களே… எனக்கு இந்த காபி மட்டும் தான் போடத் தெரியும்னு தெரிஞ்சா எப்படி கழுவி ஊத்துவாங்களோ…” என நினைத்துக் கொண்டே டவலால் முகம் துடைத்துக் கொண்டு அங்கு வந்த கோமுவுக்கும் காபியை எடுத்து வர அவர் பேத்தியை திகிலாய் ஒரு பார்வை பார்த்தார்.  
“ஐஷுமா, யூ மேட் காபி…” என்று முகத்தை சுளித்துக் கொண்டு கேட்டவரை முறைத்த ஐஷு, “ஹலோ, என் காபி நல்லாருக்குன்னு உங்க பேராண்டியே சர்டிபிகேட் கொடுத்துட்டார்… பேசாம குடிங்க…” என்று உதட்டைச் சுளித்தவளைக் கண்டு சிரித்தவர் வாங்கிக் கொண்டார்.
தயக்கத்துடனே உதட்டில் கோப்பையை வைத்து ஒரு மடக்கு குடித்தவர் கண்களில் சற்று மெச்சுதல் தோன்ற, “ம்ம்… நாட் பேட்… ரகு ஹாஸ் கிவன் அ குட் டிரெயினிங்…” என்று சொல்லவும் உஷா மகளை நோக்கி நமுட்டு சிரிப்பு சிரிக்க, “இப்போது ஐஷு சடசட பட்டாசாய் வெடிக்கப் போகிறாள்…” என நினைத்துக் காத்திருந்தவருக்கு ஐஷுவின் அமைதி ஆச்சர்யத்தைக் கொடுத்தது. 
அவர் ரகுவைப் பற்றி சொல்லவும் சட்டென்று மனது அவன் நினைவுகளைச் சுற்றிக் கொள்ள அவரது இடக்கான கேள்விக்கு எப்போதும் முடக்காமல் பதிலடி கொடுப்பவளுக்கு இன்று எதுவும் சொல்ல வேண்டுமென்றே தோன்றாமல் அமைதியாய் நின்றாள். அதை கோமுவும் கவனித்தாலும் கண்டு கொள்ளவில்லை. 
சிறிதுநேரம் மகளிடம் பேசிவிட்டு வரும்போது வாங்கி வந்திருந்த தினசரியை விரித்து அமர்ந்து கொண்டார் கோபிநாத். உஷா வேகமாய் குளியலறைக்குள் நுழைய பாட்டியிடம் பேசிக் கொண்டிருந்தாள் ஐஸ்வர்யா. அவளுக்காய் ஆசையாய் தான் செய்து கொண்டு வந்த பால்கோவாவை எடுத்துக் கொடுக்க வாங்கி உணவு மேசை மீது வைத்தாள்.
“நான் குளிச்சிட்டு வந்திடறேன் கோமு…” என்று தான் முதலில் உபயோகித்த அறைக்குள் சென்று மாற்று உடையை எடுத்துக் கொண்டு ரகுவின் அறைக்குள் இருந்த குளியலறைக்குள் நுழைய அதை கவனித்த கோமளவல்லி யோசனையாய் பார்த்துக் கொண்டிருந்தார்.
குளித்து வந்த உஷா சிம்பிளாய் உப்புமா கிளறிவிட்டு மதிய சமையலை கவனிக்கத் தொடங்கினார். 
“அம்மா, நானும் உனக்கு ஹெல்ப் பண்ணறேன்…” என்று வந்த மகளை நோக்கி புன்னகைத்தவர், “என் சமையலை நீ ரொம்ப மிஸ் பண்ணறேன்னு மாப்பிள்ளை சொன்னார்… அதனால இங்கிருந்து கிளம்பற வரைக்கும் என் மகளுக்குப் பிடிச்சதை எல்லாம் செய்து கொடுக்கணும்னு சொன்ன என் மாப்பிள்ளை உத்தரவை இந்த மாமியார் மீற முடியுமா… காலைல டிபன் உப்புமா தான் செய்தேன்… அட்ஜஸ்ட் பண்ணிக்கடா… நாளைக்கு வெரைட்டியா சமைச்சு தரேன்…” அன்னை சொல்லவும் திகைப்பும் மலைப்புமாய் பார்த்துக் கொண்டிருந்த ஐஷு எதுவுமே பேசவில்லை.
காலை உணவை சீக்கிரமாய் முடித்துக் கொண்டு மதிய உணவுக்கு புருஷூ, மேனகாவும் வந்து விடுவார்கள் என்பதால் சமையலில் மும்முரமாய் இருந்தார் உஷா. கோமு ரெஸ்ட் எடுத்துக் கொண்டிருக்க ஐஷு அறையை ஒதுங்க வைத்துவிட்டு அன்னையிடம் வந்தாள்.
“மா, நான் ஏதாச்சும் பண்ணனுமா…” கேட்டவளிடம் “சமையலை நான் பார்த்துக்கறேன்… நீ இங்க வா…” எனவும், “என்னம்மா…” என்று வந்து நின்றாள்.
“அது…வந்து… உன்கிட்ட ஒண்ணு கேக்கணும்…” தயங்கிய அன்னையை யோசனையாய் பார்த்தவள், “எங்கிட்ட என்னமா தயக்கம்… கேளு…” என்றாள் ஐஷு.
“ஐஷுமா, நீயும், மாப்பிளையும் சந்தோஷமா தானே இருக்கீங்க… உனக்கு இந்த கல்யாணத்துல எதுவும் வருத்தம் இல்லையே…” அவர் கேள்வியில் தாயின் தவிப்பு தெரிந்தது. 
“ப்ச்… எதுக்குமா இப்படிலாம் கேக்கற… நான் சந்தோஷமா இருக்கேன்… போதுமா…” என்றவள் அமைதியாகிவிட, உஷாவின் மனது சமாதானமாகவில்லை. 
“ஐஷு சமையல் எல்லாம் பழகிட்டயா, இல்ல மாப்பிள்ளை தான் இப்பவும் செய்யறாரா…” கேட்ட அன்னையிடம் முழித்தவள், “அம்மா, நாங்க எப்பவும் ஒரே மாதிரி தான் இருப்போமாக்கும்… கல்யாணத்துக்கு முன்னாடி ஒரு மாதிரி, பின்னாடி ஒரு மாதிரின்னு மாறினா நல்லாருக்காதுல்ல…” என்று சமாளித்துவிட்டு, “நான் இப்ப வந்திடறேன்…” என்று அறைக்குள் நுழைந்து கொண்டாள்.
“இந்த ரகு ஏன் இன்னும் கூப்பிடலை… அப்பா, அம்மால்லாம் வந்திருப்பாங்கன்னு தெரியாதா…” என யோசித்துக் கொண்டே அவனை அழைக்க அது அணைத்து வைக்கப்பட்டிருக்க மனம் சுணங்க சோர்வுடன் அமர்ந்திருந்தாள்.
தி ஐ தட் சீஸ் யூ தட்ஸ் நாட் த ஐ…
இட்ஸ் நாட் தி ஹார்ட் தட் கவுன்ட்ஸ் யூ…
இட்ஸ் நாட் எ வர்ட் தட் யூ சே…
ஐ ஆம் நாட் வித்தவுட் யூ…
பாடிக் கொண்டே அவளைத் தேடி வந்த கோமுவை செல்லமாய் முறைத்தவள், “கோமு, நல்ல பாட்டெல்லாம் ஏன் இப்படிக் கொல்லற… யாராச்சும் தமிழ் ஆர்வலர்கள் உன் மேல கம்ப்ளெயின்ட் பண்ணப் போறாங்க…” என்றாள்.
“ஹூக்கும்… இட்ஸ் ஜஸ்ட் டிரை… இதுக்கெல்லாமா கம்ப்ளெயின்ட் பண்ணுவாங்க… நான் தப்புத் தப்பா தமிழைக் கொல்லலை… அதை எனக்குத் தெரிஞ்ச இங்லீஸ்ல டிரான்ஸ்லேட் பண்ணேன் அவ்ளோ தானே…” என்றவர், “சரி, என்னாச்சு உனக்கு… ஒய் யூ லுக்கிங் வெரி டல்… ரகுவை ரொம்ப மிஸ் பண்ணறியா..” என்றார். தன் மனமாற்றத்தை முதலில் ரகுவிடம் சொல்லிவிட்டே கோமுவிடம் சொல்ல வேண்டுமென்று நினைத்தவள் பேச்சை மாற்றினாள்.
“ஆமா, இதென்ன பாட்டு…” கேட்டவளை ஆராய்ச்சியாய் ஒரு பார்வை பார்த்தவர், “ஹூம்…” என்றவர் பாடிக் கொண்டே நகர்ந்தார்.
“உன்னைக் காணாத கண்ணும் கண்ணல்ல…
உன்னை எண்ணாத நெஞ்சும் நெஞ்சல்ல…
நீ சொல்லாத சொல்லும் சொல்லல்ல…
நீ இல்லாமல் நானும் நானல்ல…”
 

Advertisement