Advertisement

 
நான் கிளம்பிட்டேங்க அவ வீட்டுக்கு மறுவீடு போக. நம்மளை எல்லாரும் சேர்ந்து ஸ்பெஷலா கவனிக்கறது கூட ஒரு கெத்து தான்ல…
 
இது கூட நல்லா தான்யா இருக்கு… நான் கீழே இறங்கி போக வள்ளிக்கண்ணு காபி கொடுத்தா… நான் அவ திரும்பி போகறதை பார்க்க வெயிட் பண்ணேன்…
 
தப்பா எல்லாம் நினைக்ககூடாது, அவளோட கூந்தல் எவ்வளவு நீளமிருக்கும்ன்னு பார்த்தேன் அவ்வளவு தான்…
 
இதை எப்படி மெயின்டேயின் பண்ணுறா என்ற தலையாய சந்தேகமெனக்கு.
 
எல்லாரும் கிளம்பினோம். நான் தான் வழக்கம் போல கார் ஓட்டினேன். அவளோட அக்கா, மாமா தனியா கார்ல வந்திருந்தாங்க, அவங்க கூட என் அம்மா, அப்பா, தம்பி எல்லாம் போய்ட்டாங்க…
 
என் கார்ல நான் வள்ளிக்கண்ணு, அக்கா அப்புறம் அத்தான் மட்டும் தான்.
 
எல்லா சொந்தக்காரங்களும் அங்கவே இருக்கறதால அவங்க எல்லாம் நேரா வள்ளிக்கண்ணு வீட்டுக்கு வந்திடறேன்னு சொல்லிட்டாங்க…
 
இத்தனை நாள் நான் கார் ஓட்டினதுல இன்னைக்கு தான் ரொம்பவும் சந்தோசமான ஒரு பீல். (இதெல்லாம் ரொம்ப ஓவருடா…)
 
ஓவரு தான்னு எனக்கே தெரியுது, ஆனாலும் உண்மை அது தான். வள்ளிக்கண்ணு என் பக்கத்துல உட்கார்ந்து இருக்க நான் வண்டியை ஓட்டிட்டு போறேன்.
 
அப்பப்போ அவளை பார்த்திட்டே ஓட்டுறேன். அவளோட மச்சம் இப்போ தூரத்துல இருந்தா கூட எனக்கு தெரியுது. (ஜூம் ஆப் யூஸ் பண்ணுவானோ)
 
அதுக்குள்ளே அவங்க வீடு வந்திருச்சுங்க… நானே இன்னக்கு காலையில இருந்து தான் அவளை சைட் அடிக்கறேன், இந்த டைம் எல்லாம் கொஞ்சம் லேட்டா போகக் கூடாதா… சீக்கிரம் போகுது…
 
காரில் இருந்து இறங்கினேன், இருவருமாக சேர்ந்து நிற்கச் சொல்லி ஆரத்தி எடுத்தார்கள். உள்ள ஜிவ்வுன்னு இருக்குங்க எனக்கு.
 
அவ தோள் என் கைல பட பாருங்க எனக்கு ஜுரம் அடிக்கிற மாதிரி இருக்கு.
 
அவ வீட்டுக்கு போனதும் நேரா அவங்கம்மாவை பார்க்கப் போய்ட்டா, எனக்கு தான் புஸ்ஸுன்னு போச்சு. ரொம்ப போரடிக்குது எனக்கு.
 
அவ இருந்தா அவளையாச்சும் பார்க்கலாம். இதென்னடா எனக்கு வந்த சோதனைன்னு யோசிச்சுட்டு இருக்கும் போதே என்னைத் தேடி வந்தா.
 
அப்போ நான் மாமனாரோட பேசிட்டு இருந்தேன்.
 
“என்னங்க??”
 
அவ தான் கூப்பிட்டா திரும்பி பார்த்தேன். நீங்க உள்ள வந்து உட்காருங்க, எங்கம்மா சொன்னாங்கன்னு சொன்னா… அவங்கம்மா எதுக்கு சொல்லியிருப்பாங்கன்னு புரிஞ்சு மனசார அவங்களுக்கு நன்றி சொன்னேன்.
 
எனக்கு அவ சொன்ன தினுசை பார்த்து சிரிப்பு வந்தாலும் அடக்கிட்டு எதுக்குன்னு கேட்டேன், தெரியலை, நீங்க வேணா படுத்து ரெஸ்ட் எடுங்கன்னா… ‘என்னது நான் மட்டுமான்னு’ என் மனசாட்சி அலறிச்சு.
 
அதை அப்படியேவா அவகிட்ட சொல்ல முடியும், நீ எங்கே போறேன்னு கேட்டேன்.
 
அவளுக்கு ரொம்ப போர் அடிக்குமாம் இந்த ரூம்ல இருந்தா, பக்கத்துவீட்டுக்கு போய் யார்க்கூடவோ பேசப் போறேன்னு சொல்லிட்டு நிக்காம போய்ட்டாங்க…
 
எனக்கு செம டென்ஷன் ஆகிடுச்சுங்க. ஒரு மனுஷன் வந்திருக்கானே, அவனோட பேசிட்டு இருப்போம்ன்னு தோணுச்சா அவளுக்கு.
 
எனக்கு இங்க யாரோடையும் அவ்வளவு பேசி பழக்கமில்லை. வீட்டிலேயே நான் அதிகம் யார்க்கூடவும் பேச மாட்டேங்க…
 
இவ யார் கூடவோ பேசுவாளாம், என்னோட பேச மாட்டாளாமான்னு எனக்கு பயங்கர கோபம்.
 
வெளிய ஏதோ சத்தம் கேக்கவும் அங்க இருந்த ஜன்னல் வழியா சாரத்தை கொஞ்சம் விலக்கி எட்டிப்பார்த்தேன்.
 
அவளோட சித்தி பொண்ணுன்னு ஏற்கனவே கல்யாண மண்டபத்துல அவ அறிமுகப்படுத்தின ஞாபகம். அந்த பொண்ணோட பேசிட்டு இருந்தா, அவங்க பேசினது எனக்கு நல்லாவே கேட்டுச்சு.
 
ஏதோ பொம்பளைங்க பேச்சுன்னு நான் திரும்பலாம்ன்னு இருந்தேன். அப்போ தான் கூட இருந்தவங்க கேட்டாங்க, நீ இப்போ எங்கே போறேன்னு.
 
அவ அதுக்கு பதில் சொல்லவும் அவங்க அவளை திட்டினதை கேட்டு எனக்கு சிரிப்பு வந்திடுச்சு. அதென்னங்க கூறுகெட்ட குப்பாயி, ஹா ஹா கஷ்டப்பட்டு சிரிப்பை அடக்கிகிட்டேன்.
 
ஆனாலும் கண்ணுல தண்ணி வந்திடுச்சு. அவளுக்கு நான் எட்டிப் பார்க்கறனோன்னு டவுட்டு வந்திடுச்சுன்னு நினைக்கிறேன், நான் தெரியாம ஜன்னல் பக்கத்துல இருந்த பொம்மையை கீழே தள்ளிட்டேங்க சத்தம் கொஞ்சம் வந்திடுச்சு போல.
 
அவளோட பார்வை இந்த ஜன்னலை தான் பார்த்துச்சு, அதை பார்த்ததும் தான் கீழே குனிஞ்சுகிட்டேன்.
 
டேய் ஆரவ் இதெல்லாம் உனக்கு தேவையாடா ஒட்டு கேக்குறது தப்புடா. இதெல்லாம் தப்பு தப்பா வேற யாரு சொல்லித் தருவா என் மனசாட்சி தாங்க…
 
நின்னு பார்த்தா மாட்டிக்குவோம்ன்னு அங்க இருந்த சேரை எடுத்திட்டு வந்து ஜன்னல் பக்கமா போட்டு உட்கார்ந்துக்கிட்டேன்.
 
மேல திறந்து தான் இருந்துச்சு. கீழேயும் மெதுவாய் சத்தமில்லாம திறந்தேன். அதான் சாரம் மறைச்சுட்டு இருக்குல.
இப்போ ரொம்ப நல்லாவே அவங்க பேச்சு கேட்டுச்சு. சொல்ல மறந்திட்டேனே, அன்னைக்கு இந்த கள்ளி வள்ளிக்கண்ணு என்னைய பார்த்து சைட் அடிச்சிருக்காங்க (அவ உன்னைய அவகிட்ட இதெல்லாம் சொல்லிறாதடா)
 
அதாங்க பொண்ணு பார்க்க வந்த அன்னைக்கு. நான் கூட உங்ககிட்ட டவுட்டா இருக்குன்னு சொன்னேன்ல. என் டவுட் இப்போ கன்பார்ம் பார்த்தீங்களா.
 
இங்க இருந்து பார்த்தா வாசல் நல்லாவே தெரியுது. சரி சரி நாம அவங்க என்ன பேசுறாங்கன்னு கேப்போம் மறுபடியும்.
 
அவங்க அத்தான் எங்கேன்னு கேக்க வள்ளிக்கண்ணு அவ அக்காவோட புருஷன்னு நினைச்சு கதை சொல்ல அவ சித்தி பொண்ணு இப்போ நல்லா அவ தலையில ஒரு கொட்டு வைச்சா…
 
நல்லா கொட்டுங்க என்று நானும் மனதார சொல்லிக்கொண்டேன் இப்போது. நான் அத்தான் இல்லையா அப்போ அப்படின்னு உள்ள ஒரு மனுஷன் கேள்வி கேக்குறான்.
 
நான் எப்போடா இப்படி ஆனேன்னு எனக்குள்ள கேள்வி. அதையெல்லாம் நாம அப்புறம் பேசி தீர்த்துக்குவோம், இப்போ அவுங்களை கவனிப்போம்ன்னு நான் காரியத்துல கண்ணாவே இருந்தேன்.
 
மறுபடியும் அதே திட்டு கூறுகெட்ட குப்பாயின்னு. நான் சிரிக்க ஆரம்பிக்கும் போதே அவங்க வேற பேச ஆரம்பிச்சாங்க.
 
சிரிக்கறதை விட்டு அவங்க பேசுறதை கேட்க ஆரம்பிச்சேன். அவங்கக்கா ஏதோ சொன்னதா சொல்லிட்டு இருந்தாங்க.
 
அவங்க அக்கா என்ன சொல்லி இருப்பாங்க, எதைப்பத்தின்னு நான் யோசிச்சுட்டு இருக்கும் போதே, அது முதல் ராத்திரி பத்தின்னு அவங்க பேச்சுல இருந்து புரிஞ்சுது.
 
எனக்கே அதை கேக்கும் போது கொஞ்சம் ஷை ஷையா வருது, இதை போய் இவங்க பேசி இருக்காங்களேன்னு நினைச்சேன்.
 
அவளுக்கு கோபம் வந்திடுச்சு போல, எல்லாம் ஒரே நாள்ல தான் நடக்கணுமா, அப்படியே நடந்தாலும் அதெல்லாம் உங்ககிட்ட சொல்ல மாட்டேன்னு சொன்னா…
 
வள்ளிக்கண்ணு இப்போ தான்டி உன்னை எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்குது. இதெல்லாம் கணவன் மனைவியோட அன்னியோன்யம்ன்னு நினைக்கறவங்க நானு.
 
என்னைப்போலவே அவளும் யோசிக்கிறான்னு நினைக்கிறப்போ சந்தோசமா தான் இருந்துச்சு. அவங்க அங்க இருந்து கிளம்பிட்டாங்க. உள்ள போய்ட்டாங்க போல.
 
கொஞ்ச நேரம் கட்டில்ல படுத்தேன். என்னென்னவோ பண்ணிப் பார்த்தேன் நேரமே போகலை, வெளிய போனா யாராச்சும் ஒருத்தர் பேச்சு கொடுத்திட்டே இருப்பாங்கன்னு நான் போகவே இல்லை.
 
மறந்திருந்த கோபம் இப்போ திரும்பவும் வந்துச்சு எனக்கு. இவ என்னோட இருந்து பேசிட்டு இருந்தா எனக்கு இப்படியிருக்காதுலன்னு அவளைத் தான் திட்டிட்டு இருந்தேன்.
 
நான் லீவ்ல இருக்கறதுனால இப்போ எனக்கு எந்த போனும் வராது. என்னோட பிரண்ட்ஸ் எல்லாம் சென்னையில இருக்காங்க…
 
கல்யாணத்துக்கு அவங்களை இன்வைட் பண்ணலைன்னு எல்லாரும் செம கோபத்துல இருக்காங்க…
 
நான் தான் சென்னையில பெரிசா ரிஷப்ஷன் வைச்சுக்கலாம் அங்க இருக்கவங்க எல்லாம் அதுக்கு வரட்டும், கல்யாணம் சிம்பிளா போதும்ன்னு சொல்லிட்டேன்.
 
தவிர இவனுங்க வந்து பொண்ணு என்ன படிச்சிருக்கு அது இதுன்னு கேப்பானுங்க. அதெல்லாம் இப்போ என்னால சொல்லிட்டு இருக்க முடியாதுன்னு தான் நான் அவங்களை எல்லாம் கூப்பிடலை.
சோ யாரும் எனக்கு இப்போ போன் கூட பண்ண மாட்டாங்க. நாங்க இன்னும் ரெண்டு நாள்ல சென்னைக்கு கிளம்பறோம்.
 
நான் இதெல்லாம் யோசிச்சு யோசிச்சு இன்னும் கடுப்புல இருந்தேனா அப்போ தான் அவ வந்தா.
 
உள்ளக் கூட வராம வெளிய நின்னுட்டே சாப்பிட வாங்கன்னு சொன்னா.
 
அப்படியொரு கோபம் எனக்கு. உள்ள வான்னு கூப்பிட்டேன்.
 
எனக்கு சத்தமா பேசுறதுலாம் பிடிக்காதுங்க… நாங்க சண்டை போட்டா கூட அது நாலு சுவத்துக்குள்ள தான் இருக்கணும்ன்னு நினைக்கிறவன் நான். என் கோபத்தை அவகிட்ட காட்டணும்ன்னு தோணிச்சு இப்போ.
 
“நான் வீட்டுக்கு கிளம்பறேன்…” என்றேன்.
 
என்னதுன்னு என்னை அதிர்ச்சியா பார்த்தா. என் கோபத்தை பார்த்து அவளுக்கு கொஞ்சம் பயம் வந்திட்டுன்னு புரிஞ்சுது.
 
அவளை பயமுறுத்த நான் நினைக்கலை. ஆனா என்னை அவ புரிஞ்சுக்கணும்ல அதான் அப்படி பேசினேன்.
 
“என்னாச்சுங்க”
 
“இங்க நான் ஒருத்தன் எதுக்கு இருக்கேன்…”
 
நான் என்ன சொல்ல வர்றேன்னு அவளுக்கு புரியலை, ஆனா நான் கோபமா இருக்கேன்னு மட்டும் புரிஞ்சுடுச்சு போல. நானே சொல்லட்டும்ன்னு பார்த்தா.
 
“சொல்லு இங்க என்னை உட்கார வைச்சுட்டு நீ பாட்டுக்கு வெளிய போய்ட்ட, இப்போ கூட வந்த வாசல்ல நின்னே சாப்பிட கூப்பிடுற”
 
“நீ என்னை என்னன்னு நினைச்சுட்டு இருக்கேன்னு கேட்டேன்…”
 
அவளுக்கு அவளோட தப்பு புரிஞ்சுது போல ஆனாலும் ஒண்ணுமே சொல்லாம இருந்தா, கண்ணு லேசா கலங்க ஆரம்பிச்சுது.
 
“ச்சு…” என்றுவிட்டு திரும்பிக் கொண்டேன்.
 
முதல் நாளே நானே அவளைப் பேசி அழ வைக்கிறேன். எனக்கு அது புடிக்கலை, ஆனா இப்படியே விட்டா அவ எனக்கு மரியாதையே கொடுக்க மாட்டா…
 
“சாரிங்க…” என்று என் முன்னாடி வந்து கண்ணில் நீர் வழிய கேட்டாள்.
 
“எனக்கு உன் சாரியெல்லாம் வேணாம். ஒரு விஷயம் நல்லா புரிஞ்சுக்கோ. இங்க எனக்கு இப்போ உன்னைத் தவிர யாரையும் அதிகம் தெரியாது… உங்கம்மா எங்கம்மா பிரண்டா இருக்கலாம். எனக்கு அவங்களை தெரியும் அவ்வளவு தான். ஆனா உனக்கும் எனக்குமான உறவு அப்படி இல்லை…”
 
“நீ என்னோட வைப் அதை நல்லா புரிஞ்சுக்கோ. நீ பாட்டுக்கு என்னை உள்ள போய் ரெஸ்ட் எடுங்கன்னு அனுப்பி வைக்குறே, ஏன் இதை நான் நம்ம வீட்டிலேயே செஞ்சிருக்க மாட்டேனா, உங்க வீட்டில வந்து தான் செய்யணுமா…”
 
“இல்லை அது வந்து… இனிமே இப்படி நடக்காது…” என்று என் கையை பிடித்தாள்.
 
எனக்குள் இருந்த கோபம் மொத்தமாய் வடிந்து போனது. டேய் ஆரவ் நீ இவ்வளவு தானா…
 
“சரி விடு…” (மன்னித்து விட்டாராம்…)
 
“சாப்பிட வாங்க, எல்லாரும் காத்திட்டு இருப்பாவோ…”
 
“ஹ்ம்ம் போலாம்… ஒரு நிமிஷம்…” என்றுவிட்டு அவள் கண்ணை துடைத்தேன். கசங்கியிருந்த அவள் முகம் எனக்கு வலித்தது.
 
“சாரி வள்ளிக்கண்ணு” என்றேன் மனமார.
 
“நீங்க ஏன்??”
 
“போவோம்…” என்று முடித்து அவள் கைக்கோர்த்து வெளியில் வந்தேன்.
 
எல்லாரும் எங்களையே பார்த்தாங்க ஏன்னு எனக்கு புரியலை. சாப்பிட ஆரம்பிச்சோம், இது வள்ளி செஞ்சதுன்னு அவங்கம்மா முட்டையை வைச்சாங்க. கூட தேங்காய் பர்பிகூட அவ தான் செஞ்சான்னு சொன்னாங்க…
 
ரொம்ப நல்லா செஞ்சிருக்காங்க… செம டேஸ்டி (போதும்டா நீ வழிஞ்சது தாமிரபரணில வெள்ளம் போகுதுடா…)
 
ஊருக்கு கிளம்பியாச்சு, எங்களுக்கு கூபே புக் பண்ணியிருக்கு…
 
நானும் அவளும்!
நானும் அவளும்!
உயிரும் உடம்பும்
நரம்பும் யாழும்
பூவும் மனமும்
நானும் அவளும்!
உயிரும் உடம்பும்
 

Advertisement