Advertisement

6
 
எங்களுக்கு பெரிசா எந்த சடங்கும் இல்லைங்க… ரிலாக்ஸா தான் நான் இருந்தேன். வள்ளிக்கண்ணும் அப்படியே இருந்தாளான்னு எனக்கு தெரியலை.
 
நேத்தே அவளை பார்த்தப்போ அவ்வளவு பயம் டென்ஷன் எல்லாம் தெரிஞ்சுது அவ முகத்துல.
 
இன்னைக்கு என்ன செய்ய போறாளோ தெரியலை. அதை நினைச்சு தான் எனக்கு கொஞ்சம் கவலையே. (பார்றா…)
 
இன்னும் ஒரு மணி நேரத்துல முகூர்த்தம் ஆரம்பிக்கப் போகுதுங்க… நான் குளிச்சுட்டு வந்திட்டேன், புது வேட்டி, சட்டை போட்டு கிளம்ப வேண்டியது தான்.
 
“என்னடா மச்சான் ஒரே ட்ரீம்ஸா…” என்றான் ராகுல்.
 
“அதெல்லாம் எதுவுமில்லைடா…”
 
“நீயொரு தனிப்பிறவி மச்சான், உனக்கு எதுவும் ஹார்மோன் டிபெக்ட்டா இருக்குமோ…”
 
“ஏன் மாப்பிள்ளை கலாய்க்கிறே இப்படி”
 
“பின்ன என்னடா எது கேட்டாலும் வரலை, தெரியலைன்னு சொல்லிக்கிட்டு இருக்க… ஜாலியா என்ஜாய் பண்ணவேண்டிய நேரத்துல எந்திரன் சிட்டி மாதிரி இருந்தா எப்படிடா”
“சிட்டி கூட ஐஸ்வர்யா ராய் பார்த்து லவ் பண்ணி டூயட் எல்லாம் பாடிருச்சு. நீ ஒரு ட்ரீம் கூட வரலைங்கறே…”
 
“டேய் இதெல்லாம் நடந்தா தான் என்னை மனுஷனா மதிப்பீங்களா என்ன… எல்லா பீலிங்க்ஸ் எங்களுக்கும் இருக்கு மாப்பிள்ளை…”
 
“அதெல்லாம் உங்க எல்லார்க்கும் ஷோ போட்டு காட்டிட்டு இருக்க முடியாது. நீ கிளம்பிட்டல்ல போய் அத்தானை வரச்சொல்லு…” என்று அவனை விரட்டினேன்.
 
என் தம்பி ஷ்ரவன் வந்தான். “அண்ணா அம்மா நீ ரெடியான்னு பார்த்திட்டு வரச்சொன்னாங்க…”
 
“பார்த்தா எப்படிடா தெரியுது…”
 
“இன்னும் நீ ரெடி ஆகலைன்னு தெரியுது…”
 
“அம்மாகிட்ட என்ன சொல்லட்டும்…”
 
“கிளம்பிட்டேன்டா, பட்டுவேட்டி காட்டிட்டா அவ்வளவோ தான்…”
 
“சரி நான் அம்மாகிட்ட சொல்லிடறேன்…” என்று சொல்லிவிட்டு அவன் கிளம்பிவிட்டான்.
 
நான் வேகமா ரெடி ஆனேங்க, இல்லைன்னா எங்கம்மா அடுத்து ஒரு ஆளை இங்க அனுப்புவாங்க… நான் ரெடி ஆகிட்டேனான்னு பார்க்க.
ரெடி ஆகிட்டேங்க, கண்ணாடியில பார்க்கலாமேன்னு பார்த்தேன். “டேய் ஆரவ் நல்லாத்தான்டா இருக்கே…” எனக்கு நானே சொல்லிக்கொண்டேன்.
 
அங்கு ஒரு கிண்ணத்தில் கொஞ்சம் சந்தானம் குழைத்து வைத்திருந்தார்கள். அதை லேசாய் எடுத்து நெற்றியில் கீற்றாய் பூசிக் கொண்டேன்.
 
“உன்னை பார்த்து இந்த ராகுல் பழம்ன்னு சொல்லாத குறையா சொல்லிட்டு போயிட்டானே…” எனக்கு கொஞ்சம் குமுறல் தாங்க… அவ்வளவு தத்தியாவா இருக்கேன்…
 
இன்னைக்கு எப்படியாச்சும் அவளைப் பார்த்து ரொமான்ஸ் லுக்கு விடணும் என்று தீர்மானித்துக் கொண்டேன்.
 
இப்படியே நான் யோசிச்சுட்டு இருக்கும் போது வள்ளிக்கண்ணோட சித்தி பையன் வந்தான், எனக்கு மாலை போட்டு அழைச்சுட்டு போக.
 
அடர் சிவப்பு நிற கோவை ஸ்பெஷல் ரோஜா மாலை என் கழுத்தில் போட்டு அழைத்து சென்றான அவன்.
 
எப்படியோ மணவறைக்கு வந்து உட்கார்ந்தாச்சு. ஐயர் சொல்றது எல்லாம் செஞ்சுட்டு இருக்கேன். புகை கொஞ்சம் கண்ணுல படுது, கண்ணை லேசாய் கசக்கிட்டே செய்ய வேண்டிய சடங்கை செஞ்சேன்.
 
ஐயர் பொண்ணை அழைச்சுட்டு வாங்கன்னு சொன்னார்.
என் கண்ணு முழுக்க இப்போ அந்த பக்கம் திரும்புச்சு. ஐயர் என் கவனத்தை திசை திருப்புனார்.
 
“அங்க அப்புறம் பார்த்துக்கலாம் முதல்ல இங்க பாருங்கோ…”
 
‘நான் நினைக்கிறேன் என்னை எல்லாரும் ஷிப்ட் போட்டு கலாய்க்குறாங்கன்னு. பின்னே என்னங்க வள்ளிக்கண்ணுல இருந்து, இதோ இந்த ஐயர் வரை எனக்கு பல்ப் கொடுத்திட்டே இருக்காங்க…’
 
ஆரவ் நீ இப்படிலாம் இருந்தா வேலைக்கு ஆகாது. அவ வந்தா வரட்டும், நீ ஏன் உன் கவனத்தை சிதறவிடுற. வேலையை பாரு, அவ எங்க போய்டப்போறா என்று சொல்லி என்னை நானே சமாதானப்படுத்திக்கிட்டேங்க வேற வழி.
 
அவளை கூட்டிட்டு வந்தாங்க. நான் திரும்பி கூட பார்க்கலையே, இந்த ஐயர் மறுபடியும் என்னை கலாட்டா பண்ணுவாரு, தேவையா எனக்கது.
 
ஆனாலும் அவளைப் பார்க்கணும்ன்னு ஆசையா இருந்துச்சு. அந்த பட்டுப்புடவை அவளுக்கு எப்படி இருக்குன்னு நான் பார்க்க வேணாமா வேறென்ன… (நல்லா பார்த்த போ)
 
என் பக்கத்துல அவளோட இருப்பை உணர்ந்தேன். யார் என்னை என்ன நினைச்சாலும் சரி அவளை திரும்பி பார்த்திடணும்ன்னு தோணிச்சு. மெதுவாய் திரும்பி பார்த்தேன், அவ இப்போ யார்கிட்டயோ பின்னாடி திரும்பி பேசிட்டு இருந்தா…
 
அடப்போங்கடான்னு நான் அந்த ஆசையை விட்டுட்டேன். தாலியை எடுத்திட்டு எல்லார்கிட்டயும் ஆசிர்வாதம் வாங்க போயிருக்காங்க.
 
இன்னும் சில நொடிகள் தாங்க, அவ என்னோடவளா ஆகிடுவ… மனசுக்குள்ள ஏதோ ஒரு உணர்வு, நல்ல தான் இருந்துச்சு அதுவும்…
 
அப்பாடா வந்திட்டாங்க, என் கையில தாலி எடுத்து கொடுத்தாங்க. எனக்கு அவளை பார்த்திட்டே கட்டணும்ன்னு தோணிச்சு, அவ கீழே குனிஞ்சுட்டு இருந்தா, பட்டுன்னு வள்ளிக்கண்ணுன்னு கூப்பிட்டேன்.
 
அவ திரும்பி என்னை பார்க்கவும் சட்டுன்னு தாலியை அவளை பார்த்திட்டே கட்டிட்டேன், என் அக்கா நாத்தனார் முடிச்சை போட்டு எங்க கல்யாணம் இனிதா முடிஞ்சதுங்க…
 
ரெண்டு பேரும் அக்னியை வலம் வந்தோம். மாலையை மாத்திக்க சொன்னாங்க, நான் அவளை பார்த்திட்டே தான் மாத்தினேன்.
 
அவ எனக்கு போடும் போது நிமிர்ந்ததோட சரி. என்ன மனநிலையில இருக்கான்னு என்னால கணிக்க முடியலை. அப்படியே விட்டுட்டேன், கால்ல மெட்டி போட்டுவிட்டு போட்டோவுக்கு போஸ் கொடுத்ததுன்னு நேரம் போச்சு.
காலையில இருந்து சாப்பிடலைன்னு எங்க ரெண்டு பேரையும் போய் சாப்பிட்டு வரச் சொன்னாங்க… அடுத்து சுருள் வைக்கற முறை இருக்கே, அதுக்கு ரெடி ஆகணுமாம்.
 
சாப்பிட்டு வந்தோம், ஸ்வீட் எடுத்து ஊட்டச் சொன்னாங்க. அவ என்னை பார்த்த பார்வையே சொல்லுச்சு அவளுக்கு அந்த ஸ்வீட் பிடிக்காதுன்னு, ‘ப்ளீஸ் ஒரு வாய்’ என்று இதழைசைத்தேன்.
 
அமைதியாய் வாங்கிக்கொண்டாள். அதிகம் அவளை தொல்லை செய்யாமல் பார்த்துக் கொண்டேன்.
 
சாப்பிட்டு வந்ததும் மறுபடியும் போட்டோ எடுக்கணும்ன்னு போட்டோகிராபர் வீடியோ எடுக்கறவங்க தொல்லை பண்ணாங்க.
 
ஆளுக்கு ஒரு ப்ளாக் கூலிங்கிளாஸ் போட்டுக்கணுமாம். அவ கையில ஒரு போனை கொடுத்து செல்பி எடுக்கற மாதிரி போஸ் கொடுக்க சொன்னாங்க.
 
நான் அவளுக்கு பின்னாடி கொஞ்சம் தள்ளி நிக்கணுமாம். சும்மா சொல்லக் கூடாதுங்க அந்த போட்டோ ரொம்ப நல்லா இருந்துச்சு.
 
அவளுக்கு செல்பி எடுக்கறதுன்னா பிடிக்கும் போல, அட செல்பிக்கு பிறந்த செல்லமே, இது தெரியாம போச்சு இது என்னோட மைன்ட் வாய்ஸ் தான் வேறன்ன…
ரொம்ப ஜாலியா இப்போ போட்டோக்கு போஸ் கொடுத்தாளே பார்க்கணும். ரெண்டு பேரும் சேர்ந்து நிறைய செல்பி எடுத்துக்கிட்டோம்.
 
அடுத்து சுருள் வைக்குற சடங்கு, எல்லார்க்கும் மரியாதை செஞ்சு ஒரு வழியா வீட்டுக்கு கிளம்பினோம்.
 
எங்க வீட்டுக்கு வந்ததும் பாலும் பழமும் கொடுத்தாங்க. சாப்பிட்டு முடிச்சதும் நான் என்னோட ரூம்ல போய் ரெஸ்ட் எடுக்க போயிட்டேன்.
 
மதியம் சாப்பாட்டுக்கு வந்து எழுப்பினாங்க. என்னால எழக்கூட முடியலை, அடிச்சுப்போட்ட மாதிரி ஒரு தூக்கம். ஆறு மணிக்கு அம்மா வந்து மறுபடியும் எழுப்பினாங்க.
 
“ஆரவ்… எழுந்திருலே…”
 
“இன்னும் கொஞ்சம் நேரம்மா…”
 
“ஏலேய் இம்புட்டு நேரமா உறங்கிட்டு இருக்கவன், எல்லாரும் என்னலே நினைப்பாங்க. எழுந்து வாலே, மதியத்துக்கும் சாப்பிடலை. வயித்தை காயப்போடக் கூடாதுய்யா…”
 
“அப்போ ஒரு ஏழு மணிக்கா வந்து சாப்பிடுறேன்ம்மா…”

“ஏலே எல்லாரும் உனக்காவ காத்திட்டு இருக்காவோ. நீ உறங்கிட்டு இருந்தா நல்லாவா இருக்கு… நீ வரலைன்னு வள்ளியும் மதியம் சரியா சாப்பிடலை”
“நீ குளிச்சுட்டு கீழே போய்யா, போய் காபித்தண்ணி குடி…” என்று விரட்டினார்.
 
நான் எழுந்து ஒரு குளியல் போட்டு வேறு உடைக்கு மாறி கீழே சென்றேன்.
 
எங்க நம்மாளை காணோம்ன்னு என் கண்ணு தேடிச்சு. சரியா அவ என்னை நோக்கி தாங்க வந்தா.
 
நான் காண்பதென்ன கனவா என்ற நிலை தான் எனக்கு. வேற புடவை மாத்தி ப்ரெஷா இருந்தா இப்போ, எனக்கு தான் காபி கொடுத்து விட்டிருப்பாங்க போல எங்கம்மா.
 
“காபி…”
 
அதை வாங்கிக்கொண்டு “தேங்க்ஸ்” என்றேன்.
 
என்னை நிமிர்ந்து பார்த்து ஒரு முறை முறைச்சுட்டு உள்ள போய்ட்டா.
 
‘என்ன பார்வை இந்த பார்வை…’ சத்தியமாய் புரியலைங்க எதுக்குங்க முறைச்சா…
 
ராகுல் வந்து என் பக்கத்துல உட்கார்ந்தான். “என்ன மச்சான் செம தூக்கம் போல, நைட் டியூட்டி பார்க்க ரெடி ஆகிட்ட போல…” என்று சொல்லி கண்ணடிக்க நான் அவனை மொத்தினேன்.
 
“உனக்கு வேற வேலையே இல்லையாடா, எப்போ பார்த்தாலும் அதே நினைப்பு தான்…”
“அடேய் ஒரு கல்யாணம்ன்னா இப்படி எல்லாம் பேசிக்கிறது தான்டா… நீ இப்படியே இருந்தா எப்படிடா…” என்று அவன் என்னை முறைத்தான்.
 
கொஞ்ச நேரம் அவன்கிட்ட பேசிட்டு இருந்தேன், அப்புறம் ரிலேடிவ்ஸ் கொஞ்ச பேரு இருக்க அவங்களோட பேசிட்டு இருந்தேன்.
 
எட்டு மணி ஆகிடுச்சு போல நான் டைம் பார்க்கவே இல்லை. அக்கா என்னை சாப்பிட கூப்பிட்டா எழுந்து போனேன்.
 
சென்னையில எங்க வீட்டில எல்லாரும் டைனிங் டேபிள்ல தான் சாப்பிடுவோம், ஏன்னா ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு நேரத்துல கிளம்புவோம்.
 
திருநெல்வேலிக்கு வந்தா எல்லாரும் கீழே தான் உட்கார்ந்து சாப்பிடுவோம். ஆச்சி, தாத்தா, இருக்கும் போதே பழகின பழக்கம் அது.
 
நான் கீழே உட்கார என் பக்கத்துல கலகலன்னு வளையல் சத்தம் கேட்க அவ வந்து உட்கார்றது உணர்ந்தேன்.
 
மல்லிப்பூ வாசம் வேற என்னை எங்கயோ கூட்டிட்டு போச்சு. திரும்பி அவளை பார்க்க அவ நிமிர்ந்து அவளோட அக்காவை பார்த்து கண்ணால ஏதோ பேசிட்டு இருக்கா…
 
இவ எப்போ தான் என்னைப் பார்ப்பா… சாப்பிட்டு எழுந்தேன். கை கழுவி வரவும் அம்மா அழைத்தார்.
 
“என்னம்மா…”
 
“எங்கலே போறே??”
 
“இதென்ன கேள்வி??”
 
“பதில் சொல்லுலே…”
 
“மாடிக்கு போறேன்ம்மா…”
 
“அத்தான் உன்ட்ட என்னவோ பேசணுன்னு சொன்னாவோ, என்னன்னு கேட்டுட்டு போ…”
 
சரின்னு சொல்லிட்டு அத்தானை தேடி போனேன்.
 
“என்னத்தான் ஏதோ பேசணும்ன்னு சொன்னீங்களாம்…”
 
“ஆமா மாப்பிள்ளை இப்படி உட்காரு…” என்றவர் சிறிது நேரம் என்னை ரம்பம் போட்டார்.
 
அடக்கடவுளே மேல முதல் ராத்திரிக்கு ரூம் ரெடி பண்றோம்ன்னு சொல்லியிருந்தா நான் வெளிய வாக்கிங்காச்சும் போயிருப்பேனே, இப்படி அத்தானோட என்னை கோர்த்து விட்டுட்டாங்களேன்னு புலம்பத்தான் முடிஞ்சது என்னால.
 
நல்ல வேளை ராகுல் வந்தான் அத்தான்கிட்ட இருந்து காப்பாத்த, “அண்ணா என்ன மச்சானுக்கு அறிவுரைலாம் வழங்கியாவுது போல…”
 
“அடேய் ராகுல்…” என்று பல்லைக்கடித்தேன்.
 
“ஏன்டா தம்பி நீயும் வேணா கொஞ்சம் அறிவுரை சொல்லு. எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு நான் கிளம்பறேன்” என்று அவர் செல்லவும் தான் நிம்மதியாக உணர்ந்தேன்.
 
“தேங்க்ஸ் மாப்பிள்ளை, அத்தான்ட்ட இருந்து காப்பாத்திட்ட”
 
“உனக்கு தான் ரூம் ரெடி பண்ணிட்டு வர்றேன்”
 
“அந்த கர்மத்தை என்ட சொல்லி இருக்க வேண்டியது தானேடா. அம்மா அத்தான்கிட்ட போய் பேசிட்டு இருன்னு சொல்லி அவர் அறுத்து தள்ளிட்டார் போ…”
 
“முதல்ல அவர் பேச ஆரம்பிச்சதும் சாதாரணமா தான் கேட்டேன், நேரம் போக போக தான் புரிஞ்சுது. என்னைய இங்க இருக்க வைக்க இவரு பேசிக்கிட்டு இருக்காருன்னு…”
 
“சரி மச்சான் நானும் உன்னை அறுக்க விரும்பலை. நீ மேலே போ, ஆல் தி பெஸ்ட்டா மச்சான்…” என்று ராகுல் என்னை வாழ்த்தி அனுப்பினான்.
 
மேலே என்னறைக்கு சென்றேன். சினிமால வர்ற மாதிரி கட்டிலை சுத்தி பூவெல்லாம் தொங்க விடுவாங்கன்னு நினைச்சேன். அப்படியெல்லாம் எதுவுமே இல்லைங்க, கட்டில்ல கொஞ்சமா பூவைப் போட்டு அதுவும் ஹார்டின் ஷேப்ல, அப்புறம் கொஞ்சம் பூவை தூவி வைச்சு இருந்தாங்க.
 
மிச்சம் இருந்த பூவை அந்த ராகுல் பக்கி கீழே எடுத்திட்டு போகலை போல, எனக்கு பொழுது போகணும்ல வள்ளிக்கண்ணு வர்ற வரைக்கும்.
 
அந்த பூவை எடுத்து அந்த கட்டில்ல பூவால ஆரவள்ளின்னு அலங்கரிச்சேன்.
 
ஆரவ், வள்ளி சேர்ந்து ஆரவள்ளி ஆகிடுச்சுங்க… கதவுக்கிட்ட ஏதோ சத்தம் கேக்குது. அவ தான் வர்றான்னு நினைக்கிறேன்.
எனக்கு சுத்தமா தூக்கமே வரலை. விடிஞ்சா கல்யாணம். ரிஷப்ஷன் அப்போ அவிய மட்டும் என் கையை பிடிச்சு ஆறுதல் சொல்லலைன்னா நான் இன்னும் கொஞ்சம் பயந்திருப்பேன்னு நினைக்கேன்.
 
பேசிக்கா நான் அவ்வளவு பயந்த பொண்ணு எல்லாம் இல்லைங்க. என்னவோ இந்த கல்யாணம் தான் எனக்கு அந்த பயத்தை கொடுத்திச்சு. அது கூட பயம் அவியளை பார்த்து எல்லாம் இல்லை.
 
என்னைப் பார்த்து தான் எனக்கு பயம். நான் எப்படி ரியாக்ட் பண்ணுவேன்னு எனக்கே தெரியலை.
புதுசா இருக்கு, எனக்கு அதுக்கு எப்படி நடக்கணும்ன்னு புரியலை. அந்த உணர்வு தான் பயம்ன்னா எனக்கு கொஞ்சம் பயந்து தான் வருது.
 
தவிர அவிய எப்படி இஇருப்பாவளோன்னு கொஞ்சம் யோசனையும் இருந்துச்சு. அவியளை சமாளிக்க முடியாதுன்னு எல்லாம் நினைச்சுகிடலை. ஆனாலும் இனிமே அவியளோட தான் இருக்கணும் அப்படின்னு நினைக்கறப்போ கொஞ்சம் பக்கு பக்குன்னு தான் இருக்கு.
 
எப்போடா கல்யாணம் முடியும்ன்னு இருந்துச்சு எனக்கு. இயல்பா எப்போ நடமாடுவோம்ன்னு கிடக்கு. இந்த கல்யாணம் முடிவானதுல இருந்து அங்க நிக்காதே, இங்க போகாதே, இப்படி பேசாதேன்னு ஏகப்பட்ட கட்டுப்பாடு.
 
போதும்டா சாமி இன்னும் கொஞ்ச நேரம் தான் அப்படின்னு யோசிச்சுட்டே இருக்கும் போதே தூக்கம் வந்திருச்சு.
 
கல்யாணி தான் என்னை எழுப்பினா. “போய் சீக்கிரம் குளிச்சுட்டு வாட்டி”
 
“இவ்வளவு சீக்கிரமா, முகூர்த்தத்துக்கு தான் இன்னும் நிறைய நேரம் கிடக்கேட்டி”
 
“அதுக்குன்னு நீ லேட்டா கிளம்பிடுவீயாக்கும்…”
 
“சரி சரி போறேன்”
தலைக்கு குளித்து முடித்து வெளியில வந்து முடியை பேன் காத்துல உணர வைச்சுட்டு இருந்தேன். பார்லர்ல இருந்து வந்திட்டாங்க.
 
தலையை சீவ ஜடை பின்ன, பூ வைக்க, புடவை கட்டன்னு நேரம் போனதே தெரியலை. எல்லாம் முடிச்சு அங்கிருந்த கண்ணாடியில பார்த்தா எனக்கே என்னை அடையாளம் தெரியலை.
 
நம்ம கூட கொஞ்சம் அழகா தான்யா இருக்கோம்
 
அந்த புடவை ரொம்ப அழகா கட்டி விட்டிருந்தாவ, அதோட டிசைன் நல்லாயிருக்குன்னு வேற கட்டிவிட்டவுங்க சொல்லவும் எனக்கு அவியளோட நினைப்பு தான் வந்துச்சு.
 
அவிய தானே எனக்காக இந்த புடவையை எடுத்தாவ. இப்போ அவிய முன்னாடி போய் நின்னா எப்படி இருக்கும்ன்னு யோசிச்சேன். என்னையறியாம கன்னமெல்லாம் சூடாச்சு.
 
என்னைய அழைச்சுட்டு போவ அவியளோட அக்கா வந்தாவ, மாலையை போட்டு மணமேடைக்கு கூட்டிட்டு போக அவிய என்னைய நிமிர்ந்து கூட பார்க்கலை.
 
நா ஆசை ஆசையாய் அவியளுக்கு அந்த புடவையை காட்டணும்ன்னு வந்தா தலையை குனிஞ்சுட்டு இருந்தாவ, போய்யான்னு கடுப்பாகிட்டேன்.
 
பொறவு ஒரு வட்டம் என்னைய திரும்பி பார்த்தாவ, நா தான் வேணுமின்னே என்னோட அக்காகிட்ட பேச்சு கொடுக்க சாக்குல திரும்பிட்டேன்.
 
நா வரும் போது பாக்காம இப்போ என்னைய பார்த்தா நாங்க பார்த்திடுவோமா…
 
எல்லாரும் வாழ்த்தி அட்சதை எடுத்துக்கிட்ட பிறகு தாலி அவங்க கைக்கு வந்துச்சு.
 
வள்ளிக்கண்ணுன்னு ஒரு குரல் கேட்டுச்சு, அப்படியே திரும்பி அவியளை பாத்தேன். அவிய தான் கூப்பிட்டு இருந்தாவோ, எனக்கு கண்ணெல்லாம் கலங்கி போச்சுங்க.
 
எங்க ஆச்சி மட்டும் தான் என்னைய அப்படி கூப்பிடுவாவ. எனக்கு அவிய நினைப்பு வந்திட்டு, எங்க ஆச்சியே என் கூட இருந்து ஆசிர்வாதம் செஞ்ச நிம்மதி வந்துச்சு எனக்கு.
 
அவிய என்னைய பார்த்திட்டே தாலியை கட்டினாவ, அப்படி ஒரு நிறைவா இருந்துச்சு எனக்கு அந்த நிமிஷம். இந்த கல்யாணம் பிடிச்சிருக்கா பிடிக்கலையான்னு ஆயிரம் குழப்பங்கள் எனக்குள்ள இருந்தாலும், இந்த நொடி நான் அதை விரும்ப ஆரம்பிச்சுட்டேன்.
 
எனக்கு கல்யாணம் பிடிச்சிருக்கு, அவரையும் ரொம்ப பிடிச்சிருக்கு, அவிய என்கிட்ட நடந்துக்கற முறை எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சிருக்கு.
மாலை மாத்துறது, மெட்டி போடுறதுன்னு எல்லாம் முடிஞ்சதும் சாப்பிட போனோம். எனக்கு பிடிக்காத ஸ்வீட் வைச்சு இருந்தாங்க, ஜாங்கிரி எனக்கு பிடிக்காது, அதை என்னோட பார்வையிலேயே கண்டுப்பிடிச்சிட்டாவ
 
கொஞ்சமா சாப்பிட்டேன் எல்லாரும் பார்க்காவ அப்படிங்கற மாதிரி இருந்துச்சு அவிய பார்வை. சரின்னு வாங்கிட்டேன், கொஞ்சமா தான் எடுத்து வைச்சாவ நான் சாப்பிட மாட்டேன்னு.
 
எனக்காக பார்த்து பார்த்து நடந்துக்கிடுதாவ, அதுவே எனக்குள்ள இருந்த குழப்பத்துக்கு கொஞ்சம் கொஞ்சமா விடை கொடுத்திச்சு.
 
சுருள் வைக்கிற சடங்கு எல்லாம் நடந்து முடிஞ்சது. போட்டோ எடுக்கணும்ன்னு சொன்னாவ, செல்பி மோட்ல கொஞ்சம் போஸ் கொடுக்க சொல்லவும் எனக்கு சந்தோசம்.
 
நான் ஒரு செல்பி பைத்தியம், நாக்கை வெளிய கடிச்சு துப்பலை அவ்வளவு தான் குறை, எல்லா செல்பிலையும் நாக்கு வெளிய துருத்தி தான் போஸ் கொடுத்து இருப்பேன்.
 
நல்ல வேளை அவிய இருந்ததுனால நாக்கை மட்டும் வெளிய துருத்தலை ஆனா அவியளோட சேர்ந்து போட்டோ எடுக்கும் போது வள்ளி ஹாப்பி அண்ணாச்சி தான்.
 
அவிய வீட்டுக்கு போனோம் பால், பழம் கொடுத்தாவ. அவிய சாப்பிட்டதும்  அவிய ரூமுக்கு போயிட்டாவ. என்னை அத்தை வேற ரூமுக்கு கூட்டிட்டு போனாவ, எங்கக்கா, மதினி ரெண்டு பேரும் சேர்ந்து ஜடையை கழட்டிவிட்டாவ.
 
எனக்கு இப்போ தான் தலை கனக்காம இருக்கு. அக்கா தான் இப்போ எனக்கு தலை சீவிவிட்டா. கொஞ்ச நேரம் படுத்து ரெஸ்ட் எடுன்னு சொன்னா.
 
எனக்கும் படுத்தா தேவலாம்ன்னு தான் இருந்துச்சு. ரெண்டு நாளா எனக்கு சரியா உறக்கமே இல்லை. தூங்கி எழுந்தேன்.
 
அவிய வந்து எழுப்ப முன்னாடியே எழுந்திட்டேன். அக்கா குளிச்சுட்டு வரச்சொன்னா, நானும் குளிச்சுட்டு வந்து வேற புடவையை மாத்திக்கிட்டேன்.
 
மதினி எனக்கு காபி கொடுத்தாவ குடிச்சு முடிக்கவும் அத்தை வந்தாவ அவியளுக்கு காபி கொடுக்க சொன்னாவ நானும் கொடுத்திட்டு வந்தேன்.
 
நைட் ரெண்டு பேரும் சேர்ந்து தான் சாப்பிட்டோம். சாப்பிட்டதும் அவிய எங்கயோ போயிட்டாவோ, எனக்கு மறுபடியும் பயம் வந்திருச்சு, அடிவயித்துல ஏதோ பிசையற மாதிரி இருக்கு.
 
அடுத்து என்ன நடக்கும்ன்னு தான் எனக்கு தெரியுமே. அதை எப்படிடா சமாளிச்சுக்கிட போறோம்ன்னு இருந்துச்சு எனக்கு.
இதுக்கு நடுவுலே அக்கா எனக்கு மறுபடியும் தலை சீவி பூவைச்சு விட்டாவுது. என்னென்னவோ அட்வைஸ் வேற, பொதுவாவே எனக்கு அட்வைஸ்ன்னா அலர்ஜி…
 
நடக்கப் போறதை நினைச்சு நானே ஜெர்க்ல உட்கார்ந்து இருக்கேன், இவ வேற வண்டி வண்டியா அட்வைஸ் அதெல்லாம் என் காதுலவே ஏத்தலையே நானு.
 
“என்னட்டி நான் சொன்னது எல்லாம் விளங்குச்சா…”
 
“ஹான்…”
 
“சரி வா…” என்றுவிட்டு என்னை அக்காவும் மதினியும் மாடிக்கு அழைச்சுட்டு போனாவ.
 
“தம்பி உள்ள தான் இருப்பான் நீ உள்ள போ வள்ளி…” என்று மதினி சொல்ல லேசாய் திறந்த கதவை தள்ளி உள்ளே போனேன்…
 

Advertisement