Advertisement

5
 
“எக்கா”
 
“என்னலே…”
 
“இதெல்லாம் இப்போவே எடுத்து வைக்கணுமா…”
 
“ஏட்டி இப்படி கேட்டுட்டு இருக்கவ…”
 
ஒரு மாதிரி பாரமா இருக்குன்னு சொல்லும் போதே எனக்கு கண்ணு கலங்கிருச்சு. நான் இன்னும் கொஞ்சம் வளரணும், 2k கிட்ஸ் மாதிரியே நான் வளரலை. 90s கிட்ஸ் மாதிரியே எங்கம்மா வளர்த்திட்டாங்க என்னைய…
 
ஒரு ரெண்டு மூணு வருஷம் கழிச்சு எனக்கு கல்யாணம் பேசி இருக்கலாம்… எனக்கென்ன இப்போ தானே இருபத்தி ஒண்ணு ஆகுது. அதுக்குள்ள கல்யாணம் தேவையா…
 
இங்க ஜாலியாவே சுத்திட்டு இருந்திட்டேன், கொஞ்சம் படிச்சிருக்கலாம்ன்னு தோணுது இப்போ, படிச்சு இருந்தேன்னா எதாச்சும் வேலைக்கு போய் வந்திருப்பேன், கொஞ்சம் பயம் எல்லாம் போயிருக்குமோ என்னவோ…
 
“எதுக்குட்டி கலங்குத, இதெல்லாம் இருக்க தானேட்டி செய்யும். என் கல்யாணத்தப்போ நீ எவ்வளவு ஜாலியா எனக்கு எல்லாம் செஞ்சே…”
“நீ அழுகலையே…”
 
“எதுக்குட்டி அழுகணும்??”
 
“உனக்கு பாசமே இல்லை, நம்மை வீட்டை விட்டு போறோமே, புது வீட்டுல எப்படி இருப்போம். இனிமே அப்பா அம்மாவோட இருக்க மாட்டோமேன்னு உனக்கு அப்போ தோணலை…”
 
“ஏன் தோணாம, எல்லாம் எனக்கும் இருந்துச்சு…”
 
“எனக்கு உங்க அத்தானை பிடிச்சு இருந்துச்சு. அதும் இல்லாம அவிய பொண்ணு பார்த்திட்டு போனதுக்கு அப்புறம் கொள்ளை நேரம் என்ட்ட பேசிருக்காவ… என் மேல ரொம்ப பிரியம் வைச்சிருந்தாவ…”
 
“அங்க போய் நான் இங்க எப்படி இருந்தேனோ அப்படி தான் இருந்தேன். அதும் நம்ம வீடுன்னு நினைச்சா எதுவும் தோணாதுட்டி…”
 
“அம்மா, அப்பா விட்டு போக கஷ்டமா தான் இருக்கும். நீ நினைக்கிற மாதிரி நினைச்சிருந்தா நம்ம அம்மாக்கு கல்யாணம் நடந்திருக்குமா, நாம தான் பிறந்திருப்போமா சொல்லு…”
 
“எல்லாமே நல்லதுக்கு தான்ட்டி, ரொம்ப விசனப்படாதே, தைரியமா இருட்டி… உனக்கு நாங்க எல்லாம் இருக்கோம், மாப்பிள்ளை நல்ல மாதிரியா தான் இருக்காவ…”
 
“உன்னைய நல்லா பார்த்திகிடுவாவ… உனக்கு ஒரு குறையும் வாராதுட்டி…” என்று சொன்னாள் வித்யாக்கா…
 
இதுவரைக்கும் இவ்வளவு பெரிசா அக்கா எனக்கு விளக்கமெல்லாம் கொடுத்ததில்லை. எனக்கு அவளோட பேச்சுல கொஞ்சம் தைரியம் வந்தாலும் கண்ணீரும் சேர்ந்தே வந்துச்சு அவளோட அன்புல.
 
கொஞ்சம் கவலையாவும் இருந்துச்சு. அத்தான் அக்காகிட்ட பேசினாங்க, அன்பா இருந்தாங்க. இவிய தான் என்கிட்ட பேசவே இல்லையே…
 
நான் வேற பொண்ணு பார்க்க வந்த அன்னைக்கு கோட்டித்தனமா பேசிட்டேன், அங்க போனா கோவப்படுவாவளோன்னு பயந்து வருது எனக்கு இப்போ.
 
அக்கா என்னையே பார்த்திட்டு இருக்கா, என் கவலையை முகத்துல இருந்து துடைச்சேன். தெளிவா இருக்க மாதிரி அவட்ட காட்டிக்கிட்டேன்.
 
“நாளைக்கு பொண்ணழைக்க வந்திடுவாவ, வீட்டுல ஆளுக அங்கிட்டும் இங்கிட்டும் போயிட்டு வருவாவ, ஆளாளுக்கு ஒண்ணொன்னு சொல்லிட்டு கிடப்பாவ எதுக்கும் வாயை விட்டுகிடாதேட்டி…”
 
“நல்ல சம்பந்தம் முடியுதுன்னு கொஞ்ச பேரு எரிஞ்சிட்டு கிடக்காவ, நீ வாயை கொடுத்து வம்பை வாங்கிறாதே. நல்லபடியா உங்கல்யாணம் முடியணும் எங்களுக்கு அவ்வளவு தான்…” என்று அக்கா சொல்ல நா இப்போவே வாயை இழுத்து மூடிக்கிட்டேன்.
 
எனக்கு தூக்கமே வரலை, நாளைக்கு இந்த வீட்டில தூங்க மாட்டோம்ல, சத்திரத்துல இருப்போம்ல, இனி கல்யாணம் முடிச்சு மறுவீட்டுக்கு தானே இங்க வருவோம் அப்படி இப்படின்னு அதே யோசனை தான் நைட் முழுக்க.
 
நான் கண்ணசந்ததே விடியல்ல தான். என்னவோ அதிசயமாய் யாரும் என்னை எழுப்பி விடலை. அக்கா எட்டு மணி போல தான் வந்தா…
 
“வள்ளி ஏட்டி எந்திரி” என்ற குரலில் விழித்தேன்.
 
என்னக்கான்னு படுத்துட்டே கேட்டேன்.
 
“சொந்தக்காரவ எல்லாம் வர ஆரம்பிச்சிட்டாவ நீ உறங்கிட்டு இருந்தா நல்லாயிருக்காது அதான் எழுப்பலாம்ன்னு வந்தேன்…”
 
“நீ இங்கனவே இருட்டி… நம்ம லட்சுமி சித்தி பொண்ணு வந்திருக்கா, உனக்கு துணையா அவளை விட்டு போறேன். நீயும் அவளும் தான் ஜோடி போட்டுக்குவீங்களே, பேசிட்டு இரு, டிபன் எடுத்திட்டு வர்றேன் உனக்கு…”
 
“ஏன் அவ கல்யாணத்துக்கு முதோ நாள் தான் இங்க வருவாளாமா, நான் ரொம்ப கோவமா இருக்கேன்னு சொல்லிருக்கா…”
“அடியேய் புரியாம பேசாதட்டி, அவளுக்கு இப்போ தானே கல்யாணம் முடிஞ்சிருக்கு. அவ வீட்டுல எப்படியோ என்னவோ நாம அதெல்லாம் யோசிக்க வேண்டாமா…”
 
“புதுசு புதுசா ஏதோ சொல்றேக்கா. எனக்கு எதுவும் விளங்கலை… கல்யாணம் ஆனா எல்லாமே மாறிடணுமா…”
 
“மாறிடணும்ன்னு இல்லை, நாம சில விஷயத்தை மாத்திக்கலாம் தப்பில்லை… இதெல்லாம் உனக்கு போகப் போக புரியும்ட்டி, இப்போ எனக்கு கொள்ளை வேலை கிடக்கு… முறுக்கு சுட்டு வைச்சிருக்காவோ”
 
“லட்டு வந்திருச்சு எல்லாம் அண்டாவுல அடுக்கியாவுது. எல்லாம் சரியா இருக்கான்னு பாக்கணும்…” என்று தன்னாலே பேசிக்கொண்டே அக்கா வெளியில போய்ட்டா.
 
வீடு என்னவோ கல்யாணக்களை கட்டிருச்சு. எனக்கு தான் என்னவோ போலவே இருக்கு. இதெல்லாம் சீக்கிரம் முடிஞ்சு நார்மல் மோடுக்கு வந்திட மாட்டோமான்னு இருக்கு.
 
என் சித்தி பொண்ணு கல்யாணி வந்தா, அவ கூட சண்டை போட்டு சமாதானம் ஆகி பழைய கதை பேசின்னு எப்படியோ நேரத்தை கடத்திட்டேன்.
 
என்னைய தயார் பண்ணிவிட்டு அக்கா பூ கொண்டு வர போயிருக்கா, மாப்பிள்ளை வீட்டுல இருந்து கிளம்பிட்டாவலாம் என்னைய வந்து அழைச்சுட்டு போக.
 
யாரெல்லாம் என்னோட அனுப்பி வைக்கலாம்ன்னு வீட்டுல பேசிட்டு இருந்தாவ. எனக்கு ஹார்ட் பீட் இப்போ தான் ரொம்ப ஸ்பீடா போகுற மாதிரி இருக்கு.
 
இதோ மதினியும் அந்த அண்ணனும் வந்திட்டாவ என்னைய அழைச்சுட்டு போக, வந்தவுங்களுக்கு காபியும் மிச்சரும் கொடுத்தாவுது.
 
அக்கா சாமி கும்பிட சொன்னா, கும்பிட்டு முடிச்சதும் நான் அம்மா, அப்பா கால்ல விழுந்து கும்பிட்டேன். அம்மா ஆச்சி, பெரியம்மான்னு எல்லார் கால்லவும் விழுக சொன்னாங்க…
 
எல்லாரும் மொத்தமா நில்லுங்க விழுந்து ஒரேதா கும்பிட்டுக்கறேன்னு சொல்லி விழுந்திட்டேன். கையில குத்து விளக்கு எடுத்து கொடுத்தாவ. நெஞ்செல்லாம் பாரமா இருந்துச்சு எனக்கு.
 
கல்யாணம் எல்லார்க்கும் சந்தோசம் தான் கொடுக்கும்ன்னு கேள்வி பட்டிருக்கேன். எனக்கு என்னவோ அந்த நேரம் அதெல்லாம் அனுபவிக்க தெரியலை.
 
அந்த பயம் தான் அவிய மேல எனக்கு கொஞ்சம் கோபத்தை கொடுத்திச்சு. என்னைய எங்க வீட்டுல இருந்து பிரிக்காவோன்னு கோபம்…
 
அம்மாவும், அப்பாவும் இங்க இருக்க மத்த சொந்தக்காரங்களை கூட்டிட்டு பொறவு வாரோம்ன்னு சொல்லிட்டாவ. அக்கா, அத்தான்ன்னு இன்னும் கொஞ்சம் சொந்தத்தை கூட்டிட்டு மதினி வந்த வேன்ல ஏறினேன்.
 
என் ஒரு பக்கத்துல மதினி உட்கார்ந்து இருந்தாவ, அக்கா சொந்தக்காரங்க பக்கத்துல உட்கார்ந்துகிட்டா, அவங்களை கவனிக்கன்னு சொல்லிட்டு தான் போனா.
 
இன்னொரு பக்கம் நல்ல வேளையா கல்யாணி உட்கார்ந்து இருந்தா… கொஞ்சம் நிம்மதியா இருந்துச்சு எனக்கு.
 
கல்யாண மண்டபம் வந்திடுச்சு. எனக்கு ஆரத்தி எடுத்து அழைச்சுட்டு போனாவ. அக்கா சொந்தக்காரங்களுக்கு ரூமு ஒதுக்கிக் கொடுக்க போய்ட்டா…
 
கல்யாணியோட என்னை மணப்பெண் ரூமுக்கு கூட்டிட்டு போய் விட்டாங்க… கொஞ்ச நேரத்துல பரிசம் போடப் போறோம், அது வரைக்கும் ரெஸ்ட் எடுன்னு சொல்லி.
 
“கல்யாணி”
 
“சொல்லு வள்ளி…”
 
“எனக்கு பயமாயிருக்குட்டி” என்றேன்.
 
“எதுக்குட்டி??”
“கல்யாணத்தை நினைச்சு…”
 
“கோட்டித்தனமா பேசாதட்டி…”
 
“நிசமா தான்ட்டி…”
 
“என்னட்டி பயம் உனக்கு…”
 
“தெரியலை…”
 
“இப்படி சொன்னா எப்படிட்டி??”
 
“உனக்கு கல்யாணம் பண்ணப்போ இப்படி எல்லாம் இல்லையாட்டி…”
 
“நீ தான் கூடவே இருந்தியேட்டி, பொறவு எப்படின்னு கேக்குறவ…”
 
“நீ நல்லா சந்தோசமா தான் இருந்தே” நானே பதில் சொல்லிக்கொண்டேன்.
 
“நீயும் அப்படி தான் இருப்பே”
 
“எனக்கு மட்டும் ஏன் பயமாவே இருக்கு…”
 
“உனக்கு மாப்பிள்ளையை பிடிக்கலையா”
 
“தெரியலையே…”
 
“என்னட்டி பதில் இது… உங்க அத்தானை பொண்ணு பார்க்க வந்தப்போ எனக்கு அவ்வளவா பிடிக்காம தான் இருந்துச்சு. அப்புறம் அவிய என் கூட பேசினப்போ நல்லா பேசுனாவ, மரியாதையா நடந்துக்கிட்டாவ…”
 
“கல்யாணத்தப்போ கொஞ்சம் கலவரமா தான் இருந்துச்சு. ஆனாலும் அங்க போன பிறகு நான் நல்லாவே இருக்கேன். உங்க அத்தான் என்னை தாங்குதாவ…”
 
“அத்தை தான் கொஞ்சம் சிடுசிடுன்னுவாவ, அத்தான் அதெல்லாம் கண்டுக்காதன்னு சொல்லிட்டவ. எனக்கும் பழகிருச்சு இப்போ…” என்றாள் கல்யாணி.
 
“பொண்ணை கூட்டிட்டு வரச்சொல்லுதாவ…” என்று வந்து நின்றாள் அக்கா.
 
“அம்மா, அப்பாலாம் எங்கேக்கா??” என்றேன்.
 
“மேடையில இருக்காவ, பரிசம் போட்டாவ. புடவையை கொடுக்க உன்னைய கூப்பிடுதாவ. நீ வா… கல்யாணி நீ கூடவே இருட்டி அவளோட” என்று சொல்லி அழைத்து சென்றாள் அக்கா.
 
அங்க அவ்வளோ பேரு சுத்தி நின்னுட்டு இருந்தாவ. எல்லாரும் என்னையவே பார்க்குறது ஒரு மாதிரி இருந்துச்சு. இவ்வளவு கூட்டம் எல்லாம் எனக்கு புதிசில்லை. அக்கா கல்யாணத்துல எல்லாம் பார்த்திருக்கேன்.
 
நமக்குன்னு வரும் போது என்னவோ ஒரு பீல். என் தாய்மாமா புடவையை எடுத்து கொடுத்தாவ. அம்மாக்கு கூட பிறந்த தம்பியோ அண்ணனோ  கிடையாது.
 
அம்மாவோட சித்தி பையன் தான் எல்லாம் செய்வாங்க எப்பவும். அக்கா கல்யாணத்துக்கும் அவங்க தான் செஞ்சாவ.
 
அக்கா கூடவே வந்தா கல்யாணியும் தான். ரெண்டு பேரும் எனக்கு பரிச சேலையை மாத்திவிட்டாவ. தாய் மாமா மாலையை போட்டுவிட்டார்.
 
மறுபடியும் மேடைக்கு கூட்டிட்டு போனாவ. மாப்பிள்ளையும் என்னையும் வைச்சு போட்டோ எடுக்கணுமாம்.
 
ரிஷப்ஷனும் அன்னைக்கே வைச்சுட்டவ. அவிய பேன்ட் சட்டை தான் போட்டிருந்தாவ போல. கோட்டு சூட்டுலாம் போடுறாங்களே சினிமாலலாம். இவிய அதெல்லாம் போட மாட்டாவலோன்னுமனசுக்குள்ளவே கேட்டுக்கிட்டேன்.
 
அவியளோட அக்கா என்னைய அவியளுக்கு பக்கத்துல இருக்க சேர்ல உட்கார சொன்னாவ. ரொம்பவும் பதட்டமாக இருக்கு எனக்கு.
 
பேசாம இவிய போன் நம்பர் கேட்டப்போ கொடுத்திருக்கலாம் போல. போன்ல பேசி பேசி கொஞ்சம் பழக்கம் ஆகியிருக்கும். இப்படி எனக்கும் பதட்டம் வந்திருக்காதுல அப்படின்னு நான் யோசிச்சுட்டு இருக்கும் போதே என் கை மேல இன்னொரு கை…
நாளைக்கு எனக்கு கல்யாணங்க, இன்னைக்கு பெண்ணழைக்கறாங்க… எங்கக்கா தான் போய் கூட்டிட்டு வருவா.
 
வீடு முழுக்க சொந்தக்காரங்க வந்து இறங்கியிருக்காங்க. எள்ளு விழுந்தா கூட தெரியாத அளவுக்கு தான் கூட்டமிருந்துச்சு. ஆளுக்கு ஒரு பக்கம் பூக்கட்டிட்டு இருந்தாங்க.
 
நான் என்னோட ரூம்ல ஹாயா படுத்திட்டு இருந்தேன். என் மாமா பையன் ராகுல் வந்தான். “என்ன மச்சான் ஜாலியா படுத்திருக்கே…”
 
“வேறன்ன மாப்பிள்ளை செய்ய…”
 
“அதும் சரி தான்…”
 
“தங்கச்சிட்ட பேசினியா…”
 
“பொண்ணு பார்க்க போனப்போ பேசினேன்…”
 
“பாருடா ரொம்ப தான் அட்வான்ஸ்டா நீ…”
 
“நானெல்லாம் பேசி முடிச்ச பிறகு போன் நம்பர் வாங்கி பொறவு தான் பேச ஆரம்பிச்சேன்” என்று சொல்லி என்னை கடுப்பாக்கினான்.
 
“ஏன்டா என்னை வெறுப்பேத்தவே நீ கிளம்பி வந்தியாக்கும்”
 
“என்ன மச்சான் இப்படி சொல்லிட்ட”
 
“பின்ன என்னடா நான் பொண்ணு பார்க்க போனப்போ பேசினதோட சரி. அதுக்கு அப்புறம் அவகிட்ட பேசவேயில்லை”
 
“அடப்பாவி ஏன்டா அப்படி”
 
“உன் தங்கச்சிகிட்ட நம்பர் கேட்டா போனே இல்லைன்னு சொல்லிட்டாடா” என்று நான் சொல்ல அவன் சத்தம் போட்டு சிரித்தான்.
 
“பேசாம போயிரு மாப்பிள்ளை கடுப்பா இருக்கேன்” என்றேன்.
 
“ஏற்கனவே 90s கிட்ஸை அந்த வாரு வாருறாங்க… நீ என்னடா இப்படி சொதப்பியிருக்கே…”
 
“நமக்கெல்லாம் கல்யாணமே ஆகாதுன்னு ஒரு கூட்டமே கலாய்ச்சுட்டு இருக்கு. நாமெல்லாம் கெத்துன்னு நிருப்பிக்க வேணாம் நீ…”
 
“கொஞ்சம் அட்வான்ஸா இரு மச்சான்…” என்றான் ராகுல்.
 
“அட்வான்ஸ்ன்னா…”
 
“இதுக்கெல்லாமாடா கிளாஸ் எடுப்பாங்க…”
 
“சரி சரி விடு நான் பார்த்துக்கறேன்…”
அத்தான் உள்ளே நுழைந்தார். “மாப்பிள்ளை நாங்க பொண்ணு வீட்டுக்கு கிளம்பறோம்… தங்கச்சிக்கிட்ட எதாச்சும் சொல்லணுமா…” என்று அவர் பங்குக்கு என்னை கொஞ்சம் வெறுப்பேத்தினார்
 
நான் நேர்ல பேசிக்கறேன் அத்தான்னு சொல்லி ஈன்னு இளிச்சு சமாளிச்சேன்
 
ராகுல் நமுட்டு சிரிப்பு சிரிச்சுட்டு இருந்தான். தலையணை தூக்கி அவன் மேல போட்டேன்.
 
நாங்க பேசிட்டு இருந்ததுல நேரமாச்சு. அம்மா சத்திரத்துக்கு கிளம்பணும்ன்னு சொன்னாங்க. எல்லாரும் கிளம்பி ஒரு வழியா சத்திரத்துக்கு வந்து சேர்ந்தோம்.
 
வந்ததுமே வேலையை ஆரம்பிச்சுட்டாங்க. எல்லாரும் கூடி உட்கார்ந்து பரிசம் போட்டாங்க. நான் அங்க தான் உட்கார்ந்து இருந்தேன்.
 
எனக்கு அவளை பார்க்கணும் போல இருந்துச்சு. எப்போடா வருவான்னு பார்த்திட்டு இருந்தேன், பரிசத்துக்குன்னு எங்கம்மா மாம்பழ கலர்ல சிவப்பு பார்டர் வைச்ச பட்டு எடுத்து வைச்சிருந்தாங்க.
 
அவ சேலை வாங்க வந்திருந்தா. வெளிர் சாக்லேட் பிரவுன்ல புடவை கட்டியிருந்தா. நேரா வந்தா அவங்க மாமா எங்கட்ட இருந்து தட்டை வாங்கி அவகிட்ட கொடுத்தாங்க வாங்கிட்டு போய்ட்டா…
 
‘இவளுக்கு ரொம்ப கொழுப்பு என்னைய பார்க்காமலே போறா…’ இது என்னங்க நியாயம் ஒரு மனுஷன் அவளுக்காக தானே உட்கார்ந்து இருக்கேன் என்னைய பார்க்காம போனா என்ன அர்த்தம் (நீ பேசுறது நியாயமே இல்லைன்னு அர்த்தம்)
 
அவ முகத்தை பார்க்க முடியலை அந்த கோபம் தாங்க வேற என்ன. கொஞ்ச நேரத்துல அந்த மாம்பழக்கலர் பட்டுப்புடவையில சும்மா அம்சமா வந்து நின்னா…
 
என்னால அவளைவிட்டு கண்ணை எடுக்கவே முடியலை. இந்த பொண்ணை தானே நீ  வேண்டாம்ன்னு சொன்னேன்னு என்னோட மானங்கெட்ட மனசாட்சி என்னை காறித்துப்ப துப்ப நான் அவளை பார்த்துக்கிட்டே இருந்தேன்.
 
இப்போ எல்லாருக்கும் அவ வணக்கம் சொன்னாளா, அவ முகத்தை நல்லா பார்த்தேன். சிம்பிளா அலங்காரம் பண்ணியிருந்தா, அதுக்கே அவ்வளவு அழகா இருந்தா… (அவனவன் பொண்டாட்டி அவனவனுக்கு அழகு தான்)
 
அவளோட சித்தி பையன் தான் என்னை வந்து மேடைக்கு அழைச்சுட்டு போனான். எனக்கு மாலை போட்டான். அங்க இருந்த ஒரு சேர்ல நான் உட்கார்ந்தேன்.
எங்கக்கா அவளை கூட்டிட்டு வந்து எனக்கு பக்கத்துல இருக்க சேர்ல உட்கார வைச்சுட்டு போய்ட்டா.
 
எல்லாரும் எங்களையே தான் பார்த்திட்டு இருந்தாங்க. இன்னைக்கு விசேஷம்ல நாங்க தானே ஹீரோ, ஹீரோயின் அதுனால அப்படித்தான் பார்ப்பாங்கன்னு அதெல்லாம் நான் கண்டுக்கவேயில்லை.
 
ஆனா அவளுக்கு அப்படியில்லைன்னு அவ என் பக்கத்துல வந்து உட்கார்ந்ததுமே புரிஞ்சுது. அவளை திரும்பி பார்த்தேன். பயங்கரமா வேர்த்து இருந்துச்சு, பயப்படுறான்னு தோணிச்சு.
 
அவளுக்கு ஆறுதலா இருக்குமேன்னு அவ கை மேல கை வைச்சேன். லேசாய் அழுத்தம் கொடுத்து இறுக்கி நான் இருக்கேங்கற உணர்வை கொடுத்தேன். இப்போ அவ முகத்தை பார்த்தேன், கொஞ்சம் பயம் குறைஞ்சு போயிருந்தது என்னால உணர முடிஞ்சது.
 
“ரிலாக்ஸா இரு… பயப்படாதேன்னு” ரகசியமா சொன்னேன். மெதுவாய் அவளோட தலை மட்டும் ஆடுச்சு…
 
அப்புறம் நாங்க எல்லாரோடையும் போட்டோஸ் எடுத்துக்கிட்டோம். நாளைக்கு காலையில எங்க கல்யாணம் அதுல சந்திப்போம்…
 
 

Advertisement