Advertisement

4
 
நாங்க வந்து பத்து நிமிஷம் ஆகுது. இன்னும் வள்ளிக்கண்ணு வீட்டில் இருந்து வரலைங்க. பேசாம அவங்களை நாங்களே கூட்டி வந்திருக்கலாம் போல. (இது கொஞ்சம் ஓவரா தெரியலைடா ஆரவ் உனக்கு)
 
எதற்கு எனக்கு இந்த பரபரப்புன்னு புரியலை. ஆனாலும் இந்த பீல் எனக்கு பிடிச்சிருக்குங்க… எனக்கே எனக்காக வரப்போறா, அவளுக்கு புடவை எடுக்கப் போறோம், நல்லா இருக்குல இந்த பீல்… சரி சரி முறைக்காதீங்க…
 
(முறைக்காம என்ன செய்வோம்… புடவை எடுக்க நான் எதுக்கு, எனக்கு அதைப்பத்தி என்ன தெரியும்ன்னு சொல்லிட்டு பீலிங்க்சாம்… போங்கடா டேய்)
 
ஆட்டோ ஒண்ணு வருதுங்க எங்களை பார்த்த மாதிரி. அது அவங்களா தான் இருக்கும்ன்னு என் உள்மனசு சொல்லுது. ஹப்பாடா அது வள்ளிக்கண்ணு வந்த ஆட்டோ தாங்க…
 
பொண்ணு பார்க்க போனப்போ பட்டுப்புடவை கட்டி இருந்தா, பார்க்க கொஞ்சம் குண்டா தெரிஞ்சுது. இப்போ சாதாரணமா லேசா இருக்காப்போல ஒரு சேலை கட்டியிருக்கா. வெளிர் மஞ்சள் நிறத்துல அது அவளுக்கு ரொம்ப நல்லாயிருக்கு… (இது தான் நீ புடிக்கலை செட் ஆகமாட்டான்னு சொன்ன லட்சணமா)
 
என் மனசாட்சி என்னை காரித்துப்பியது. அதையெல்லாம் துடைச்சுப்போட்டு அவ அப்பாவை பார்த்து சிரிச்சேன், அவங்கம்மாவையும் பார்த்து சிரிச்சேன்.
 
வேணுமின்னே அவளை பார்க்காத மாதிரி இருந்துக்கிட்டேன். எத்தனை தடவை அவ எனக்கு பல்பு கொடுத்திருப்பா பதிலுக்கு நான் கொடுக்க வேணாம் (பல்பா கொடுக்கற பல்ப்பு இதுக்கெல்லாம் நீ பின்னாடி பீல் பண்ணுவ தம்பி…)
 
“புடவை வாங்க சொன்ன நல்ல நேரம் இப்போ தான் ஆரம்பிக்குது ராஜம், சரியா வந்துட்டீங்க… வாங்க போவோம்…” என்றார் என் அம்மா.
 
நான் என் மாமனாரிடம் பேச்சுக் கொடுத்துக்கொண்டே ஓரக்கண்ணால் அவளையும் பார்த்துக்கொண்டே உள்ளே சென்றேன்.
 
பட்டுப்புடவை செக்ஷனுக்குள் நுழைந்தோம். அவளை நடுவுல உட்கார வைச்சு என்னோட அம்மா, அவளோட அம்மா, என்னோட அக்கான்னு சூழ்ந்துக்கிட்டாங்க…
 
அவளைப் பார்க்கவே கொஞ்சம் பாவமா இருந்துச்சு… இந்த நிமிஷம் சொல்றேங்க அவ முகத்துல தெரிஞ்ச அந்த அப்பாவித்தனம் (அடப்பாவித்தனம் என்று பின்னால் வருத்தப்பட போறே ஆரவ்) என்னை ரொம்பவே இம்ப்ரெஸ் பண்ணிடுச்சு.
 
அவளை கொஞ்சம் பிடிக்க ஆரம்பிச்சிடுச்சு… (இது தான் எங்களுக்கு முன்னாடியே தெரியுமே)
 
இந்த கலர் நல்லாயிருக்கும், இது… இதுன்னு ஒருத்தர் மாத்தி ஒருத்தர் சொல்ல அவ விழி பிதுங்கி உட்கார்ந்திருந்தா…
 
எனக்கு சேலை பத்தி எல்லாம் எதுவும் தெரியாதுங்க… (அப்படியா வெளிர் மஞ்சள் நிறம் சேலை நல்லாயிருக்குன்னு சொன்னது யாரோ)
 
அப்படி நல்லா தெரிஞ்சு இருந்தா நானே போய் செலக்ட் பண்ணிடுவேன். இங்க நின்னா எனக்கு பொறுமையே போய்டும் போல இருந்துச்சு, பட்டுவேட்டி பார்க்கப் போறேன்னு சொல்லிட்டு அங்க இருந்து நகர்ந்து போயிட்டேன்.
 
எனக்கு பட்டுவேட்டி வாங்கிட்டு, அப்பா, மாமான்னு எல்லார்க்கும் வாங்கிட்டு நாங்க திரும்பி வர இன்னமும் அவங்க புடவையை செலக்ட் பண்ணி முடியலைங்க.
 
அப்பாவை பார்த்தா அவர் மாமா கூட தீவிரமா பேசிட்டு இருக்காரு. “அப்பா சீக்கிரம் முடிச்சுட்டு வரச்சொல்லுங்கப்பா…” என்று வாய்விட்டே நான் சொல்லிவிட அவரோ “அதெல்லாம் அப்படிதாம்லே ஆகும்…” என்று முடித்துவிட்டார்.
 
அருகில் இருந்த என் மாமனார் என் மாமியாரை அழைத்து சொல்ல, இப்போது விறுவிறுவென்று அவர்கள் பார்ப்பது போல் தோன்றியது. ஆனாலும் முழுமனதாய் அவர்கள் ஒரு முடிவுக்கு வரவில்லை போல.
 
எனக்கு செம கடுப்பாகிடுச்சுங்க… நேரா அவங்க இருக்க இடத்துக்கு போனேன். “நீங்க எல்லாம் கிளம்புங்க…” என்று அம்மாவை பார்த்து சொன்னேன்.
 
“எதுக்குலே??” என்றார் அம்மா.
 
“நானே செலக்ட் பண்ணிக்கறேன். ஒரு புடவை எடுக்க நாலு மணி நேரமா செய்வீங்க… போங்க அங்கிட்டு…” என்று கொஞ்சம் குரல் உயர்த்தவே செய்தேன்.
 
அம்மா நமுட்டு சிரிப்பு சிரிக்க அக்காவோ “உன் பொண்டாட்டிக்கு நீயே எடுலே நாங்க நடுவுல வரல” என்று சொல்லி நகர்ந்தாள்.
 
அக்கா இப்படி மானத்தை வாங்குறியே என்று பல்லைக் கடித்தேன். இப்போது அவள் மட்டுமே அங்கு அமர்ந்திருந்தாள். அருகில் சென்று உரிமையாய் அமர்ந்துக் கொண்டேன்.
 
“உனக்கு இந்த சேலையில எதுவும் பிடிக்கலையா??”
 
“தெரியலையே??”
 
“இதுக்கு என்ன அர்த்தம்??”
 
“எனக்கு புடவை பத்தி எல்லாம் தெரியாது… அம்மா என்ன எடுத்தாலும் கட்டிக்குவேன்…” என்றாள்.
 
ஒரு பச்ச மண்ணை பாரிஜாதப் பூவை என்று வடிவேல் பாணியில் ஆரம்பித்து நானே அதை அடக்கிக்கொண்டேன். பில்டப் ஓவர் என்று தோன்றியது. என்ன இருந்தாலும் அவ பச்ச மண்ணு தான் என்று என் உள்ளம் அடித்து சொன்னது… (விட்டா உன் வாயிலவே அவ பீடிங் பாட்டிலை வைப்பா, அவளைப்போய் இப்படி சொல்லிட்டியே ராசா)
 
“உனக்கு என்ன கலர் எல்லாம் பிடிக்கும்”
 
“பச்சை…” என்று அவள் ஆரம்பிக்க மீண்டும் எனக்குள் பச்சை மண்ணுடா என்று தான் ஓடியது.
 
“வேற…”
 
“மஞ்சள்…”
 
“அவ்வளோ தானா…”
 
“சிவப்பு…” என்றாள்.
 
“நானே செலக்ட் பண்றேன்…” என்று அவளிடம் சொல்லிவிட்டு அவள் சொன்ன நிறத்தில் எனக்கு பிடித்த புடவை எல்லாம் காட்டச் சொன்னேன்.
 
அதை என் மனக்கண்ணால் அவளுக்கு அணிவித்து அழகு பார்த்தேன். இறுதியாய் பச்சையில் முழுக்க தங்க இழையோட கொடி கொடியாய் டிசைன் செய்து எம்பிராய்டரி ஆங்காங்கே கற்கள் பதித்து பார்க்கவே அழகாய் இருந்தது. அவளுக்கு எடுப்பாக இருக்கும் என்று தோன்றியது.
 
அவளிடம் காட்டி “இது ஓகே வான்னு பாரு…”
 
“ஹ்ம்ம்…” என்று மட்டும் சொன்னாள்.
 
“உனக்கு பிடிக்கலையா…” என்று ரகசியமாய் காதோரம் கேட்க அவள் திடுக்கிட்டு திரும்பினாள்.
 
‘டேய் ஆரவ் அவ சின்னப்பொண்ணுடா உன்னோட விளையாட்டை எல்லாம் இப்போவே ஆரம்பிக்காதே’ எனக்கு நானே சொல்லிக்கொண்டேன்.
 
நான் அவ்வளவு நெருக்கமாய் அருகமர்ந்து ரகசியமாய் கேட்டது அவளுக்கு சங்கடமாய் இருந்திருக்கும் போல. அது புரியவும் சற்று தள்ளி அமர்ந்தேன்.
 
“பிடிக்கலைன்னா சொல்லு வேற பார்க்கலாம்…”
 
“இல்லை இதே இருக்கட்டும்…”
 
இன்னும் கொஞ்சம் பேசினா தான் என்ன… முத்தா உதிர்ந்திடும்… ஒண்ணு என்னை ஆப் பண்ணுற மாதிரி பேசுறா இல்லைன்னா ஒரு வரியில் பதில் சொல்லவும் போல பேசுறா… கஷ்டம்டா சாமி…
 
“அம்மா இந்த புடவை ஓகேவானு பாருங்க… எதுக்கும் இன்னொரு தடவை அவகிட்ட கேட்டுக்கோங்க ஓகே வான்னு…” என்று மீண்டும் உறுதிப்படுத்திக் கொள்ள சொல்லி என் அம்மாவிடம் சொன்னேன்.
 
“அதெல்லாம் பிடிக்காமையா, எல்லாம் பிடிக்கும்யா…”
“அதை நீங்களா சொல்லாதீங்க… இதுலயாச்சும் அவ விருப்பத்தை கேளுங்க…” என்று வெடுக்கென்று சொல்லிவிட்டேன் என் அம்மாவிடம்.
 
அவர்கள் எல்லாரும் அவளைச் சுற்றி நின்று பிடிச்சிருக்கா என்று கேட்பதை பார்த்து கடுப்பாகிப் போனது எனக்கு.
 
“யாராச்சும் ஒருத்தர் கேட்டா போதாதா இப்படி சுத்தி நின்னு எதுக்கு பயமுறுத்தறீங்க??” என்று சிடுசிடுத்தேன்.
 
என் அக்கா இருக்காளே அக்கா ஷப்பா என்னால முடியலை, எங்க அத்தான் அவளை எப்படித்தான் சமாளிக்கறாங்களோ.
 
நான் ஒண்ணு சொன்னா அவ எல்லாத்தையும் எனக்கு நேராவே திருப்பிவிட்டு கிண்டலா மாத்திவிட்டிடுறா…
 
ஒருவழியா எங்கம்மா அக்காவும் நகர்ந்து வந்துட்டாங்க. அவளோட அம்மா அவகிட்ட புடவையை காட்டி பிடிச்சிருக்கான்னு கேட்க அவ திருப்தியா தலையாட்டினதும் தான் எனக்கு நிம்மதியே…
 
“இவ்வளவு தூரம் வந்திட்டோம் இன்னைக்கு நல்ல நாளாவும் இருக்கு. இங்க பக்கத்துல தான் பத்திரிக்கை அடிக்க கொடுத்து இருக்கோம். அதை அப்படியே  வாங்கிட்டு முத பத்திரிக்கையை நெல்லையப்பர் கோவிலுக்கு போய் சாமிக்கு வைச்சுட்டு வந்துகிடுவோமே…” என்றார் அம்மா.
 
“இன்னைக்கேவா…”
 
“ஏன் ராஜம் என்னாச்சு??”
 
“இல்லை என் பெரிய பொண்ணும் மாப்பிள்ளையும் ஊர்ல இருக்காங்க… அதான்…” என்று இழுத்தார் அவர்.
 
“என்ன ராஜம் பேசிட்டு இருக்கே, அவங்க வர்றதுக்கு ரெண்டு நாள் ஆகும்ல. நமக்கும் நேரம் அதிகமில்லை. கோவிலுக்கு வைக்க தானே சொல்லுதாங்க… நான் வேணா மாப்பிள்ளைக்கிட்ட பேசிகிடுதேன்…” என்று வள்ளிக்கண்ணுவின் அப்பா நகர்ந்தார்.
 
என் அம்மா என்னைப் பார்த்தார். “என்னம்மா” என்றேன்.
 
“ஆரவ் நீ போய் பத்திரிக்கையை வாங்கிட்டு வந்திடு. நாங்க சரவணவ பவன் ல காபி குடிச்சுட்டு இருக்கோம். கோவில் பன்னிரண்டு முப்பது வரைக்கும் தான் இருக்கும்”
 
“மணி இப்போவே பதினொன்றை ஆகுது… வாங்கிட்டு சீக்கிரமா போகணும்” என்றார் அம்மா.
 
“இன்னைக்கே போகணுமாம்மா… அவங்க தான் சொல்றாங்கல. நாளைக்கு வேணா போயிட்டு வாங்களேன்…” என்று அம்மாவிடம் சொன்னேன்
 
“ஏம்லே இப்போவே மாமியார் வீட்டுக்கு சப்போர்ட்டா”
 
‘இதென்னடா புது தலைவலி…’ என்று எண்ணி பேசாமல் வாயை மூடிக்கொண்டேன் நான்.
 
“நான் போய் பத்திரிகை வாங்கிட்டு வர்றேன்…” என்று கிளம்பிவிட்டேன்…
 
“வள்ளி… அந்த ஆரஞ்சு கலர் பட்டுப்புடவை எடுத்து கட்டிக்கோல…” என்றது என் அம்மா.
 
“என்னது மறுபடியும் பட்டுப்புடவையா, அதெல்லாம் முடியாதும்மா…”
 
“ஏம்லே முடியாது… எல்லாரும் வருவாவ, நீ வேற எப்படி வர்றதா உத்தேசம் உனக்கு”
 
“சுடிதார் போட்டுக்கறேன்ம்மா”
 
“ஏன் வள்ளி இப்படி செய்தே, எதையும் சொன்னா சரின்னு கேக்குதியா… இப்படி பொறுப்பே இல்லாம இருக்கே. உன் மாமியார் வீட்டுல என்னைய தான் ஏச போவுதாவ… சொல் பேச்சு கேட்காத பொறுப்பில்லாத பிள்ளைய கட்டிவைச்சுட்டோம்ன்னு…” என்று அம்மா புலம்ப ஆரம்பித்தார்.
 
“ம்மா… சும்மா இருங்களேன்ல… இப்போ என்ன புடவை கட்டணும் அதானே, பட்டுப்புடவை கண்டிப்பா கட்ட மாட்டேன். எனக்கு அது கட்டிட்டு நடக்க வரமாட்டேங்கு…”
 
“வேற சாதா புடவை எதுனா கட்டிக்கிடுதேன்…” அப்படின்னு நா கொஞ்சம் இறங்கி வந்ததில தான்  அம்மாவுக்கு சந்தோசம்.
 
“சரிலா எதாச்சும் கட்டிக்கோ, எதுனாலும் கொஞ்சம் பளிச்சுன்னு தெரியற மாதிரி கட்டுலே…”
 
“சரி… சரி…” அப்படின்னு சொல்லிட்டு கிளம்பி வந்தேன்.
 
“பிச்சிப்பூ உள்ளார வைச்சிருந்தேன் பாரு எடுத்து வைச்சுக்கோல. இதென்ன பொட்டு கண்ணுக்கே தெரியாதாட்டிக்கு வைச்சிருக்கே…”
 
“போய் நல்லா பெரிசா பொட்டு வைச்சுட்டு வாலே, இப்போவே நேரமாகிட்டு…” என்று மீண்டும் ஆரம்பித்தார் அம்மா.
 
“கல்யாணம் தானே பண்ணப்போறாங்க… எதுக்கு இம்புட்டு அலப்பறை…” கடுப்பாய் வந்தது எனக்கு.
 
அம்மா சொன்னதை செஞ்சுட்டு வந்தேன். அதுக்குள்ள அப்பா ஆட்டோ கூட்டிட்டு வந்திட்டாரு. வித்யாக்கா கூட வந்திருந்தா நல்லா இருக்கும்ன்னு நினைச்சேன். என்ன செய்ய அக்கா தான் அவ மாமியா வீட்டுக்கு போயிருக்காலே.
 
நேத்து நைட் பேசும் போது கூட கூப்பிட்டு பாத்தேன். நீ போயிட்டு வாட்டி இங்க இருந்து இப்போ கிளம்ப முடியாதுன்னு சொல்லிட்டா…
 
அத்தான் இங்க வந்து ஒரு வாரம் கூட இல்லைன்னா நல்லாயிருக்காதுன்னு சொல்லிட்டா, அதுக்கு மேல கேக்க எனக்கும் இஷ்டமில்லை, சரின்னு விட்டுட்டேன்.
 
ஆட்டோவில் ஏறினோம், ஜங்க்ஷன் வழியாகத் தான் ஆட்டோ போச்சு. பிரிட்ஜின் மேல ஏறி போக நா வெளியே வேடிக்கை பாத்துக்கிட்டே வந்தேன்.
 
ரத்னா தியேட்டர் வழியாக போயிட்டு இருக்கும் போது “அம்மா நாம படத்துக்கு போய் நாளாகுதுல, நாளைக்கு போகலாமா…” அப்படின்னு ஆசையா கேட்டேன்.
 
“ஏம்லே என்னை படுத்துத… உனக்கு கல்யாணம் பேசி முடிச்சிருக்குல, அந்த வேலையே தலைக்கு மேல கிடக்கு. இதுல படத்துக்கு கூட்டிப் போகலைன்னு சொல்லியாவுது. ஏங்க நீங்களாச்சும் சொல்லுங்க இவளுக்கு” என்று அப்பாவிடம் என்னை மாட்டிவிட்டுட்டாவ அம்மா.
 
“வள்ளிம்மா அம்மா சொல்றதை கேளுடா. கல்யாணம் முடியட்டும் மாப்பிள்ளை உன்னை எங்க வேணா கூட்டிட்டு போவாவ…”
 
“உனக்கு ரொம்ப ஆசையா இருக்குன்னா சொல்லு அக்கா ரெண்டு நாள்ல இங்கன வந்திடுவா, அவியளோட போயிட்டு வா…”
 
“உங்களை கோளாறு சொல்லச் சொன்னா இப்படி சொல்லுதிய…” என்று அம்மா அப்பாவை முறைத்தார்.
 
நான் எங்கயும் போகலை விடுங்கன்னு சொல்லி மூஞ்சியை தூக்கி வைத்துக் கொண்டேன்.
 
“நாளைக்கு கல்யாணம் கட்டி வேற வீட்டுக்கு போயிருவா, ஆசையா கேக்கால, அனுப்பி வைச்சா தான் என்ன ராஜம். இங்கன இருக்கும் போது தான் சந்தோசமா அதுக இருக்கப் போவுதுக…”
 
“அப்போ என் பிரண்டு ருக்கு இவளை கொடுமை படுத்துவான்னு சொல்லுதீயளா…” அப்படின்னு அதுக்கும் அம்மா சண்டை போட்டாவ அப்பாகிட்ட
 
“கொஞ்சம் பேசாம வர்றீங்களா, தெரியாம கேட்டுட்டேன். இனிமே இப்படி எதுவும் கேக்க மாட்டேன் போதுமா. ஆளைவிடுங்க சாமி…”
 
ஆரெம்கேவி வந்திடுச்சுங்க, ஒவ்வொருத்தரா இறங்குனோம். அவியளும் அங்கனே தான் இருந்தாவோ. நான் அவியளை பார்க்காத மாதிரியே இருந்துக்கிட்டேன்.
 
என் அப்பாவை அம்மாவை எல்லாம் விசாரிச்சாவ, என்னைய கண்டுக்கிடவே இல்லை. “சரி தான் போம்வேன்னு” நானும் பாக்கவே இல்லை.
 
முதல்ல பட்டுப்புடவை பார்க்கலாம்ன்னு கூட்டிட்டு போயிட்டாவ. என்னைய சுத்தி அம்மா, அத்தை, மதினின்னு இருந்தாவ. உறவுமுறை எல்லாம் வைச்சு கூப்பிடுதேன்னு பாக்கீயளா, என்ன செய்ய இவுக தான்னு ஆகிப்போச்சு அப்புறம் செய்யறதை சரியா செய்ய வேணாமா…
 
“இது நல்லாயிருக்குல, அம்மா அதை எடுக்க சொல்லுங்க… இன்னும் கொஞ்சம் நல்லா காட்டுதியலா…” இப்படி என்னைச்சுற்றி மாறி மாறி அவியளே பேசிட்டு இருந்தாவ.
 
எனக்கு இதுல எல்லாம் பழக்கமே இல்லைங்க… அம்மாவோ அக்காவோ தான் எனக்கு டிரெஸ் எடுப்பாவ… நான் என்னோட பிரண்ட்ஸ் கூட போனா எடுப்பேன்…
 
ரொம்பலாம் தேடி தேடி எடுக்கறதுலாம் எனக்கு செட்டே ஆகாது. போனோமா பார்த்தோமா வாங்குனோமான்னு தான் இருப்பேன்.
 
இவிய எப்போ பைனல் பண்ணுவாங்கன்னு நானும் கன்னத்துல கைய வைச்சுட்டு உட்கார்ந்திட்டேன். நாம இங்க இருக்கோம், அவிய என்ன செய்யறாவன்னு அப்படியே ஓரக்கண்ணால பார்த்தேன்.
 
நல்ல வேலை எதிர்ல ஒரு கண்ணாடி இருந்துச்சு அவிய அதுல தெரிஞ்சாவ. அதுலவே பார்த்தேன் இப்போ.
 
இவிய அவிய அம்மா அக்காவை பார்த்து முறைச்சுட்டே இருந்தாவ. கல்யாணம் பிடிக்கலை போலன்னு நினைச்சுட்டு நானும் அதுக்கு பொறவு அவியளை பாக்கவேயில்லை.
கொஞ்ச நேரம் கழிச்சு அவிய மறுபடியும் வந்தாவ. நான் பட்டுவேட்டி பார்த்திட்டு வந்திடறேன்னு சொல்லிட்டு போய்ட்டாவ…
 
சரி நமக்கும் எதாச்சும் புடவை பிடிக்குதான்னு நானும் பார்க்க ஆரம்பிச்சேன். கொடுமை என்னன்னா எனக்கு அவிய காட்டின எல்லா புடவையும் புடிச்சு தான் இருந்துச்சு.
 
ஒவ்வொண்ணும் ஒவ்வொரு விதத்துல அழகா இருந்துச்சு… எல்லாத்தையும் கட்டினா நல்லா தான் இருக்கும்… (இது உனக்கே ஓவரா தெரியலை)
 
ஓவரா தான் தெரியுது என்ன செய்யன்னு நினைச்சுட்டே அங்க அடுக்கி வைச்சிருந்த கலர்ல எதாச்சும் எனக்கு பிடிச்ச கலர் இருக்கான்னு பார்க்க ஆரம்பிச்சேன். வேற என்ன செய்ய எனக்கும் பொழுது போவணும்ல…
 
இப்படியே ஒரு அரைமணி நேரம் போயிருக்கும். ஏதோ தோணிச்சு சட்டுன்னு கண்ணாடியை பார்த்தேன். அவிய வந்திட்டாவ
 
இப்பவும் கடுப்பா தான் பார்த்திட்டு இருந்தாவ. போய்யான்னு நானும் கடுப்பாகி திரும்பிக்கிட்டேன்.
 
என்ன நினைச்சாவன்னு தெரியலை எங்க பக்கம் வந்து அவிய அம்மாவை சத்தம் போட்டாவ இவ்வளவு நேரமா ஒரு புடவை எடுக்கறதுக்குன்னு. நானே எடுத்துக்கறேன் நீங்க போங்கன்னு சொல்லிட்டாவ.
 
மதினி வேற அதைக்கேட்டு சிரிச்சுட்டு நீயே உன் பொண்டாட்டிக்கு எடுத்துக்கோலேன்னு சொல்லிட்டு போயிட்டாவ.
 
எனக்கு ஒரு மாதிரி ஆகிப்போச்சு. இவிய இப்படி பொசுக்குன்னு சொல்லுவாவோன்னு நான் நினைக்கலே.
இப்போ என் பக்கத்துல இருந்த சீட்டுல உட்கார்ந்திட்டாவ, எனக்கு குப்புன்னு வேர்த்திடுச்சு.
 
எல்லாரும் இருக்காவ, இவிய இப்படி வந்து உட்காருறாவ என்ன நினைப்பாங்களோன்னு சுத்தி சுத்தி பார்த்தேன்.
 
அம்மா, அப்பா, மாமா, அத்தை, மதினி எல்லாம் பேசிட்டு இருந்தாவ எங்களை கவனிக்கவேயில்லை.
 
உனக்கு இந்த சேலையில எதுவும் பிடிக்கலையான்னு கேட்டாவ, நான் தெரியலைன்னு சொன்னேன். இதென்ன பதில்ன்னு கேட்டாவ, எனக்கு சேலை பத்தி எல்லாம் அவ்வளவா தெரியாது அம்மா என்ன எடுக்காங்களோ அதை கட்டிக்கிடுவேன்னு சொன்னேன்.
 
உனக்கு பிடிச்ச கலர் என்னன்னு கேட்டாவ… ரொம்ப சந்தோசமா இருந்துச்சு அவிய அப்படி கேட்டது, பின்னே வீட்டில இத்தனை பேரு என்னை சுத்தி நின்னு இந்த புடவை நல்லாயிருக்கா அது நல்லாயிருக்கான்னு கேட்டாவோலே உனக்கு என்ன கலரு பிடிக்கும்ன்னு கேக்கவே இல்லையே (உனக்கு ஆரவ்வை பிடிச்சிருக்கு, அதுக்கு எதுக்கு இம்புட்டு நீள விளக்கம்)
 
சரி சரி மைன்ட் வாய்ஸ் என் மானத்தை வாங்காதே…
 
சரி இப்போ நம்ம கதைக்கு வருவோம் என்ன கலர் பிடிக்கும்ன்னு கேட்டாவலா நான் சும்மா கலாய்ப்போம்ன்னு சிவப்பு, மஞ்சள், பச்சைன்னு பட டைட்டில்ல ஆர்டர் மாத்தி சொன்னேன்.
 
பாவம் எனக்கு அந்த கலர் தான் பிடிக்கும்ன்னு நினைச்சு அவிய புடவையை தேட ஆரம்பிச்சிட்டாவ.
 
ஆனா சும்மா சொல்லக் கூடாது, நல்ல அழகான புடவையை தான் தேர்ந்தேடுத்தாவ எனக்கு.
 
எனக்குமே அந்த டிசைன் எல்லாம் ரொம்பவே பிடிச்சுது. என்கிட்ட கேட்டாவ எனக்கு ஹ்ம்ம்ன்னு சொன்னேன்.
 
ஏன் பிடிக்கலையான்னு ரகசியமா காதுல கேட்டாவ எனக்கு தூக்கி வாரி போட்டிருச்சு. இவ்வளவு நெருக்கமா வந்ததும் படபடன்னு ஆகிருச்சு.
 
என் முகத்தை பார்த்து என்ன நினைச்சாவளோ தள்ளி உட்கார்ந்திட்டாவ, பிடிக்கலைன்னா வேற பார்க்கலாம்ன்னு சொன்னாவ.
 
எனக்கு வேற எல்லாம் பார்க்க மனசில்லை. இதுவே ஓகே தான்னு சொல்லிட்டேன் அவியட்ட.
 
எல்லார்கிட்டயும் காட்டி நல்லாயிருக்கான்னு கேட்டு மறுபடியும் எனக்கு பிடிச்சிருக்கான்னு கேட்டுக்க சொன்னாவ…
எனக்கு இப்போ கொஞ்சம் நம்பிக்கை வந்திருச்சு. அவியகிட்ட நா இயல்பா இருக்க முடியும்ன்னு தோணிச்சு.
 
அப்புறம் எல்லாம் முடிச்சுட்டு வெளிய வந்தோம் முதல் பத்திரிகை சாமிக்கு வைச்சுட்டு வந்திடலாம்ன்னு அத்தை சொன்னாவ.
 
அவிய பத்திரிக்கை வாங்க போனாவ இதோ கோவிலுக்கு வந்திட்டோம். எப்போ அந்த  கோவிலுக்கு போனாலும் எனக்கு அப்படியொரு அமைதியும் நிம்மதியும் கிடைக்குங்க…
 
அவ்வளவு பிடிக்கும் அந்த கோவில் எனக்கு… ரொம்ப பழமையான கோவில் அது. சின்ன வயசுல எங்க சித்தி எங்களை அடிக்கடி இங்க கூட்டிட்டு வருவாங்க.
 
இந்த கோவில்ல ஒரு இடம் இருக்குங்க, ஒரு இடத்துல பெரிசா கோலம் போட்டிருக்கும் அங்க கண்ணை மூடிட்டு இரண்டு கையையும் நல்லா விரிச்சு கொஞ்சம் தள்ளி தள்ளி வைக்கணும்.
 
நாம மனசுல ஒரு விஷயத்தை வேண்டிட்டு அப்படி வைக்கணுமாம். கொஞ்ச நேரத்துல ரெண்டு கையோட கட்டைவிரல் ஒண்ணா ஒட்டி நின்னா நாம நினைச்சது நடக்கும்ன்னு என் சித்தி சொல்வாவ.
 
எனக்கு அங்க போனா அதை செய்ய ரொம்ப பிடிக்கும். நான் ஆசையா அந்த இடத்தை பார்க்க அம்மா என்னை முறைச்சாவ…
இதோ சாமிக்கு பத்திரிகை வைச்சு கும்பிட்டு அங்கிருந்து கிளம்பிட்டோம். இனி எங்களோட கல்யாணத்துல உங்களை சந்திக்கிறோம், உங்க குடும்பத்தோட எல்லாரும் வந்திடுங்க.

Advertisement