Advertisement

3
 
“வித்யா மாப்பிள்ளை அடுத்த மாசம் பத்தாம் தேதி வர்றாவளாம். ஒரு மாசம் ஊர்ல தான் இருப்பாவலாம், போகும் போது வித்யாவை கனடாவுக்கு கூட்டிட்டு போவாவன்னு நினைக்கேன்…” என்று அப்பா அம்மாகிட்ட சொல்லிட்டு இருந்தாவ.
 
“உங்களுக்கு எப்படி தெரியும்??” என்றார் அம்மா.
 
“நேத்து நான் மாப்பிள்ளைக்கு போன் போட்டு பேசினேன். நம்ம வள்ளிக்கு பேசி முடிச்சதை அவியட்ட சொல்லணுமா இல்லையா, சொல்லலைன்னா தப்பா எடுத்துக்குவாகல”
 
“வீட்டுக்கு மூத்த மாப்பிள்ளை அவியளுக்கு உரிய மரியாதையை கொடுக்கணும்ல. அவிய இங்க இருக்கும் போதே வள்ளிக்கு கல்யாணம் முடிச்சிட்டா நல்லது”
 
“வித்யாவும் மாப்பிள்ளை கூட ஊருக்கு போனா திரும்பி வர்றதுக்கு ஒரு வருஷமாச்சும் ஆகும்…”
 
“அதைத்தான் மாப்பிள்ளைக்கிட்ட பேசியாவுது. நல்ல நாள் பாருங்க மாமான்னு சொல்லிட்டாவ… நான் போய் ஜோசியரை பார்த்து நாள் குறிச்சுட்டு வந்திடறேன்…” என்று கிளம்பிவிட்டார் அப்பா.
 
வேக வேகமா எனக்கு கல்யாண ஏற்பாடெல்லாம் நடக்கிறதை பார்த்தா கொஞ்சம் பயமா தான் இருக்கு. அன்னைக்கு அவிய முகமே சொல்லிச்சு அவியளுக்கு நான் செட்டாக மாட்டேன்னு அவியளும் அப்படித்தான் நினைச்சிருப்பாவன்னு நினைக்கேன். எதுவுமே பேசாம போனப்பவே புரிஞ்சு போச்சு.
 
ஏட்டி வள்ளி உனக்கும் கொஞ்சம் வாய் தான்டி. அவியட்ட உன்னை யாரு பத்தாவது பெயில் கதையெல்லாம் சொல்லச் சொன்னான்னு என்னைய நானே வைஞ்சுக்கிட்டேன். சொல்லலைன்னா தெரியாமலா போய்டும், சொன்னதும் நல்லதுக்கு தான்னு சொல்லி என்னை நானே சமாதானம் செஞ்சுகிட்டேன்.
 
இப்படி ஒரு கல்யாணம் தேவையா. எனக்கும் பெரிசா எந்த பொறுப்பும் இதுவரைக்கும் இல்லை. இப்போவரைக்கும் அம்மா செஞ்சு தர்ற சாப்பாட்டை தான் சாப்பிடுதேன்.
 
சமைக்கக்கூட செஞ்சதில்லை, அம்மா செய்யவிட்டதும் இல்லை. ஏதோ ஆச்சி வீட்டுக்கு போனப்போ கொஞ்சம் சமையல் நானே கத்துக்கிட்டேன் ஆச்சிக்கிட்ட, இங்க நானா எந்த வேலையும் செஞ்சதில்லை.
 
பெரிசா வேற எந்த வேலையும் செஞ்சு பழக்கமில்லை. நா எப்படி ஒரு குடும்பத்தில போய் அவங்ககிட்ட ஒட்ட முடியும்ன்னு எனக்கு. ஒரே குழப்பம்.
 
“அம்மா நான் ஆத்துக்கு போறேன்…” சொன்னேன்.
 
“எதுக்குலா அந்த ராகினியோட சேர்ந்து கொட்டமடிக்க போகுதியோ??”
 
“ம்மா ஆத்துக்கு குளிக்க போறேன்னு சொல்லுதேன் நீங்க என்னென்னவ பேசிட்டு இருக்கீங்க…”
 
“வித்யாவையும் கூட்டிட்டு போ…” என்ற அம்மா “ஏட்டி வித்யா இங்க வாலேய்…”
 
“என்னம்மா??”
 
“தங்கச்சி ஆத்துக்கு போகணுங்கா… ரெண்டு பேருமா போய் குளிச்சுட்டு துணியை துவைச்சு எடுத்திட்டு வந்திடுங்க, நான் அழுக்கு துணி எல்லாம் எடுத்து கூடையில வைக்கேன்” அப்படின்னு சொல்லிட்டு அம்மா போனவ.
 
எனக்கு தேவையான உடுப்பு, குளிக்க துவைக்க எல்லாம் சோப்பு எடுத்துட்டு வெளிய வந்தேன்.
 
என் அக்கா என்னை கூப்பிட்டா. “என்ன??” கேட்டேன்.
 
“ஏட்டி ஆத்துக்கு நீயே போயிட்டு வந்திடேன். உங்க அத்தான் போன் போடுதேன் சொன்னாவ… நான் வீட்டிலேயே குளிக்கேன்…”
 
“இதை நீயே அம்மாகிட்ட சொல்லிடுக்கா…”
 
“சரி நான் சொல்லிக்கிடுதேன், நீ அம்மா எடுத்துவைச்ச அழுக்கு துணி எல்லாம் எடுத்திட்டு போய்டு. அந்த ராகினியை கூட்டிட்டு போட்டி, தனியா போவாத…” என்றாள் என் உடன்பிறந்தவள்.
 
நல்ல அக்கா நல்ல அம்மான்னு நினைச்சுட்டு கிளம்புனேன். நா யாரோடையும் சேந்து போற மனநிலையில இல்லை இப்போ.
 
அன்னக்கூடையை எடுத்து இடுப்பில் வைச்சுக்கிட்டு ஆத்தை போற பாதையில நடந்தேன். வழியில தெரிஞ்சவ ஒண்ணு ரெண்டு பேரு நின்னு பேச்சுக் கொடுக்க அவியளை ஒதுக்க முடியாம இரண்டு வார்த்தை பேசிட்டு நடந்திட்டேன்.
 
அதிக கூட்டமில்லாமலும் அதே சமயம் ஆளுங்க கொஞ்சம் இருக்குமாறி உள்ள இடத்தை பாத்து அங்க போய் உட்கார்ந்தேன்.
 
அந்த பாறை கொஞ்சம் தாழ்வான பாறை தான். அதில் உட்கார்ந்துக்கிட்டு ஒவ்வொரு துணியாய் தண்ணியில முக்கி முக்கி எடுத்து வைச்சு சோப்பு போட ஆரம்பிச்சேன்.
 
எப்போமே ஆத்துக்கு குளிக்க வரணும்ன்னா அவ்வளவு சந்தோசமா இருக்கும் எனக்கு. இன்னைக்கு என்னமோ பிடிக்காத மாதிரியே இருக்கு. இன்னைக்குன்னு இல்லை என் கல்யாண பேச்சு ஆரம்பிச்சதுல இருந்தே அப்படி தான் இருக்கு எனக்கு.
 
எனக்கு என்ன பயம்ன்னு எனக்கே புரியலை, அதை தனியா யோசிக்கலாம்ன்னு இங்க வந்தா இருட்டா இருக்க மாதிரி இருக்கு.
 
எதுவும் தோணலை அப்படியே துணியை அலசி பிழிஞ்சு கூடையில போட்டேன். அங்க இரண்டு பாறை தள்ளி துணிக்கு சோப்பு போட்டுக்கிட்டு இருந்த நீலாக்காக்கிட்ட என்னோட துணி எல்லாம் பாத்துக்க சொல்லிட்டு ஆத்துல இறங்குனேன்.
 
சில்லுன்னு இருந்த தண்ணி எனக்குள்ள இருந்த சூட்டை கொஞ்சம் குறைச்ச மாதிரி இருந்துச்சு. இன்னும் கொஞ்ச நேரம் இன்னும் கொஞ்சம் நேரம்ன்னு நேரம் போவுறதே தெரியாம அப்படியே மல்லாக்க தண்ணியில கிடந்தேன்.
 
ஒருவழியா நடப்புக்கு வந்து கரையை பார்த்தா நீலாக்காவை காணோம். சொல்லாம கொள்ளாம கிளம்பிட்டாவ போலன்னு மனசுக்குள்ள அவியளை வைஞ்சுட்டு கரைக்கு வந்தேன்.
 
துவைச்சு வைச்ச கைலியில ஒண்ணை எடுத்து பிழிஞ்சு நெஞ்சுக்கு மேல இறுக்கக் கட்டிக்கிட்டேன். டவல் ஒண்ணை எடுத்து பொத்துனாப்புல மேல மூடிக்கிட்டேன்.
 
ஈரத்தலையை விரிச்சுவிட்டு கூடையை எடுத்து இடுப்பில் வைச்சுக்கிட்டு வீட்டுக்கு போற வழியில நடந்தேன்.
 
கொஞ்ச தூரம் போயிருப்பேன், மனசு பூரா ஏதோ யோசனை என்னன்னு கேட்காதீங்க, ஏதோ இலக்கே இல்லாத ஒரு யோசனை. அப்படியே நடந்து வந்திட்டு இருக்கும் போது எதிர வந்து நின்னவரை நா கவனிக்கவேயில்லை.
 
வழிவிடாமல் அவிய நிக்கவும் தான் நிமிர்ந்து பார்த்தேன், அவிய தான் நின்னுட்டு இருந்தாவ என்னை பொண்ணு பார்த்திட்டு போனாவலே அவிய தான்.
 
அவியளும் ஆத்துல குளிச்சுட்டு வந்திப்பாவ போல. ஒரு கைலிய கட்டிக்கிட்டு துண்டை தோள்ல போட்டுக்கிட்டு கையில சோப்பு டப்பாவோட நின்னுட்டு இருந்தாவ.
 
கொஞ்சம் பேசணும்ன்னு சொன்னாவ
 
இது தான் பேசுத இடமான்னு பொசுக்குன்னு கேட்டுட்டேன். முகம் வாடிப்போச்சு. எனக்கு அவியகிட்ட மட்டும் அப்படி தான் துடுக்கா பேச வருது என்ன செய்ய…
 
“கரெக்ட் இது பேசுற இடமில்லை, உங்க போன் நம்பர் கொடுங்களேன் நான் போன் பண்றேன்னு சொல்லிட்டாவ”
 
என்கிட்ட போனில்லைன்னு… சும்மா சொன்னேன். ஏன் அப்படி சொன்னேன்னு தெரியலை. ஆனா சொல்லிட்டு தான் பீல் பண்ணேன் பாவம் அவியன்னு.
 
அடுத்து அவிய முன்னாடி இப்படி அரைகுறையாய் நிக்கறோமேன்னு ஒரு கூச்சம் வேற, கொஞ்சம் அவஸ்த்தையா இருந்துச்சு எனக்கு.
 
இங்கு குளிச்சுட்டு வர்ற பொம்பளைக எல்லாம் இப்படி தான் வருவாவ. ஒருத்தரும் தப்பா ஒரு பார்வை பார்க்க மாட்டாவ. அப்படி பாக்குறவங்களா இருந்தா நாங்க இப்படி குளிச்சுட்டு வருவமா என்ன…
ஆனாலும் எனக்கு அவிய எதிர்ல அப்படி இருக்கோமேன்னு குறுகுறுன்னு இருந்துச்சு.
 
அவிய என்கிட்டே “பொய் சொல்றீங்கன்னு தெரியுது… இட்ஸ் ஓகே…” அப்படின்னு சொல்லிட்டு போய்ட்டாவ. இப்போ எனக்கு தான் பொசுக்குன்னு போச்சு, என்ன பேசியிருப்பாவன்னு யோசிக்க ஆரம்பிச்சேன்.
 
நா என்ன நினைச்சுட்டு இருக்கேன்னு எனக்கே ஒண்ணும் புரியலை, விளங்கலை. ஒருவழியா வீட்டுக்கு வந்துட்டேன்.
 
எங்க கல்யாண நாளும் நெருக்கத்துல வந்திட்டு… எங்க அத்தான் ஊர்ல இருந்து வந்துட்டாவ.
 
அத்தான்கூட அக்கா அவளோட மாமியார் வீட்டுக்கு வள்ளியூர் வரைக்கும் போயிருக்கா… மாப்பிள்ளை வீட்டில இன்னைக்கு கல்யாணத்துக்கு புடவை எடுக்க எங்களை ஆரெம்கேவிக்கு வரச் சொல்லியிருந்தாவ…”
 
அம்மா அக்காவுக்கு கூப்பிட்டு சொல்ல அவ நீங்க போய் எடுங்க நாங்க திருநெல்வேலிக்கு வர்றதுக்கு இன்னும் ரெண்டு நாளாகும்ன்னு சொல்லிட்டா…
எங்க வீட்டுக்கு வந்து சேர்ந்ததும் எல்லாரையும் ஒரு வழியாக்கிட்டேன் நான். “யாரை கேட்டு நீங்க தட்டு மாத்தினீங்க” என்று கடுப்பாகவே கேட்டேன் அவியகளைப் பார்த்து.
 
“என்னலே உன்ட்ட கேட்டு தானே பொண்ணு பார்த்தோம். நீங்க உங்களுக்கு பிடிச்ச பொண்ணை பாருங்கன்னு நீ தானே சொன்னே… பொண்ணு போட்டோவும் உன்கிட்ட காட்டினோம். புறவு தானே அங்கவே நாம போனோம்… இப்போ வந்து இப்படி சொல்லுத”
 
“ம்மா… சும்மா அதே சொல்லாதீங்க… நீங்க பார்க்கற பொண்ணை கல்யாணம் பண்ணிக்கறேன்னு தான் சொன்னேன். யாரு வேணாம்ன்னு சொன்னாங்க…”
 
“இந்த பொண்ணு…” என்று ஆரம்பித்த நான் அப்படியே நிறுத்திவிட்டான். அவள் படிப்பை பற்றி சொல்ல ஆரம்பித்து ஏனோ அதை சொல்ல வாய் வரவில்லை எனக்கு.
 
இதை போய் சொல்லி இதுக்காக அந்த பொண்ணை வேணாம்ன்னு சொன்னா நல்லாவா இருக்கும் என்று என் மனசாட்சி என்னை கேள்வி கேட்டது. இதெல்லாம் நீ முன்னாடியே கேட்டிருக்கணும் என்று வேறு அது என்னை குத்திக்காட்டியது.
 
நல்ல பெண்ணாக தானே இருக்கா. எவ்வளவு தெளிவாய் உண்மையை மறைக்காம என்கிட்ட சொல்லியிருக்கா. யாரு அப்படி சொல்வாங்க… என்று நினைக்கும் போதே எனக்கு அவள் மேல் மரியாதை வந்தது கொஞ்சம் கொஞ்சமாய்.
 
“என்னலே தாம் தூம்ன்னு குதிச்சுட்டு பேசாம இருக்கவன், போம்லே வேற வேலை பாருலே, பிடிக்காதவன் தான் கிளம்பும் போது அந்த புள்ளைக்கு தலையாட்டிட்டு வந்தானாக்கும்…” என்று என் மானத்தை வாங்கியது என் தமக்கை ரவீனா.
 
“ஆமாமா நானும் அண்ணன் பண்ணது எல்லாம் பார்த்தேன்…” இது என் தம்பி ஷ்ரவன்.
 
“நீ மட்டுமில்லை மாப்பிள்ளை எல்லாருமே தான் பார்த்தோம்…” இது அக்காவின் கணவர்.
 
“போதும் போதும் எல்லாரும் போய் வேற வேலை இருந்தா பாருங்க…” என்று சொல்லிவிட்டு மாடியில இருந்த என்னோட ரூமுக்கு வந்திட்டேன்.
 
எனக்கு அவளை பிடிச்சிருக்கா இல்லையான்னு ஆராய்ச்சி செய்ய வேண்டி இருந்துச்சு. வேற டிரெஸ் மாத்திட்டு கட்டில்ல போய் படுத்தேன்.
 
நடந்த ஒவ்வொண்ணையும் மனசுக்குள்ள ஓட்டிப் பார்த்தேன். பிடிக்கிது பிடிக்கலை என்ற எந்த முடிவுக்கும் என்னால் வரமுடியவில்லை.
 
என்னோட பிரண்ட்ஸ் கலிக்ஸ் முன்னாடி அவளை எப்படி அறிமுகப்படுத்துவேன். அவங்க கேக்குற கேள்விக்கு என்ன பதில் சொல்வேன் எனக்கு தெரியலை. அந்த மாதிரி நான் நினைக்கிறதே தப்பு தானே.
 
ஊருக்காக எல்லாம் வாழ முடியாது தானே. எனக்கு அவளை பிடிக்கணும், அவளுக்கு என்னை பிடிக்கணும், அப்புறம் நாங்க மனமொத்து சந்தோசமா வாழணும், அது நடக்குமான்னு தான் என் யோசனை இப்போ.
நாங்க நல்லா வாழ்ந்தாலே மத்த எல்லாமே அடிப்பட்டு போகும் தானே. ஊர் வந்து அப்போ என்ன பெரிசா பேசிட போகுது. அப்படியே பேசினாலும் அதை நாம ஏன் எடுத்துக்கணும்.
 
இது எனக்கான வாழ்க்கை, அது வேணுமா வேணாமான்னு நான் தான் முடிவு பண்ணணும். எனக்கு பெரிசா எந்த எதிர்பார்ப்பும் இல்லை தான். கொஞ்சம் படிச்சு இருக்கணும்ன்னு நினைச்சேன் தான்.
 
சரி எதுக்கும் ஒரு தரம் அம்மாகிட்ட பேசுவம் என்று நினைத்து உறங்கிப்போனேன். மறுநாள் காலையில் அனைவரும் கீழே ஹாலில் அமர்ந்து காபி அருந்திக் கொண்டிருக்க அவியகள் முன் சென்று அமர்ந்தேன்.
 
“அம்மா இந்த கல்யாணம் சரியா வரும்ன்னு நினைக்கறீங்களா…”
 
“மறுபடியும் ஏம்லே ஆரம்பிக்கே?? உனக்கு இப்போ என்ன தாம்லே பிரச்சனை??”
 
“இல்லை வந்து அந்த பொண்ணு அதிகம் படிக்கலை மாதிரி தெரியுது…” என்று அவளை விட்டுக்கொடுக்காமல் வேறுவிதமாய் பேசினேன்.
 
“அதெல்லாம் எங்களுக்கு தெரியாம இருக்குமா…” என்றதும் எனக்கு வந்ததே கோபம் “அப்போ எல்லாம் தெரிஞ்சு அவளை என் தலையில கட்டணும்ன்னு நினைக்கறீங்களா…” என்று வாய்க்கு வந்ததை பேசினேன்.
“ஏம்லே கத்துத என்ன நடந்து போச்சு இப்போ. நமக்கு படிப்பால முக்கியம். நல்ல பொண்ணு, நல்ல குடும்பம், நம்ம குடும்பத்துக்கு ஏத்த மாதிரி இருக்கா… உனக்கு நல்ல அனுசரணையான பொண்ணா இருப்பான்னு தானே முடிவு பண்ணோம்…”
 
“என் பிரண்டு அவ பொண்ணை தப்பா வளர்த்திருக்க மாட்டா…” என்று அம்மா சொல்ல என் கோபம் இன்னும் அதிகமானது.
 
“நல்ல பொண்ணு இல்லைன்னு நானும் சொல்லலை… அதுக்காக படிப்பு முக்கியமில்லைன்னு சொல்லாதீங்க… நான் ஒண்ணும் நிறைய படிச்சிருக்கணும்ன்னு எதிர்ப்பார்க்கலை. கொஞ்சம் படிச்சிருக்கலாம்ன்னு தானே சொல்றேன்…”
 
“இப்போ என்னலே, உனக்கு அந்த பொண்ணை பிடிக்கலைன்னு சொல்லுதியா??”
 
‘நான் எப்போ அப்படி சொன்னேன்’ என்று என் உள்மனம் என்னையறியாமல் அலறியது. சட்டென்று அவளைப் பிடிக்கவில்லை என்று சொல்ல எனக்கு வரவில்லை. அமைதியானேன்.
 
“நீ யோசிச்சு பதில் சொல்லு, இன்னும் நாலு நாளைக்கு நாம இங்க தானே இருக்கப் போவுதோம். உனக்கு என்ன இஷ்டமோ சொல்லுயா அதையே நாங்க அவங்ககிட்ட சொல்லிடுதோம்…” என்று முடிவை என் புறமே திருப்பிவிட்டார் என் அம்மா.
 
“நாம அவரசப்பட்டு தட்டை மாத்தி இருக்க வேணாம்ன்னு தான் சொன்னேன்…” என்றேன்.
 
“வேணாம் சாமி எதுவும் சொல்ல வேணாம். தப்பு தான் உனக்கு நல்லது செய்யணும்ன்னு நாங்க நினைச்சது தப்பு தான். இனி நீ என்ன செய்ய சொல்லுதியோ அதையே செய்யுதோம்” என்றுவிட்டு என் அம்மா உள்ளே சென்றுவிட்டார்.
 
என் அப்பா அருகே வந்தார். “எதுக்குலே அந்த புள்ளைய வேண்டாம்ன்னு சொல்லுதே” என்றார் மெதுவாய்.
 
“வேணாம்ன்னு நான் எங்கே சொன்னேன்…” என்று அவரை குழப்பினேன். உண்மையில் நான் தான் குழம்பிக் கொண்டிருக்கிறேன்.
 
“என்னலே சொல்லுதே விளங்கலையே??”
 
“தெரியலைப்பா அவசர அவசரமா முடிச்சிட்டாங்களோன்னு தான்…” என்று இழுத்தேன்.
 
“உங்கம்மாவுக்கு அந்த புள்ளைய நம்ம வீட்டுக்கு மருமவளா கூட்டிட்டு வரணும்ன்னு ஆசை. அது தான் இப்படி எல்லாத்துலயும் அவசரம் காட்டுறா”
 
“உன்னை பெத்தவளுக்கு தெரியாதாய்யா உனக்கு கெட்டது செஞ்சிடுவாளா என்ன”
 
“நான் அப்படிலாம் எதுவும் சொல்லலைப்பா…”
 
“அம்மா சொன்ன மாதிரி யோசிய்யா…” என்றுவிட்டு சென்றுவிட்டார்.
 
இதற்கு மேலும் வீட்டில் இருந்தால் தலைவலி வந்துவிடும் ஆத்துக்கு போய் குளிச்சுட்டு வருவம்ன்னு எனக்கு தேவையானதை எடுத்துக்கிட்டுகிளம்பிட்டேங்க.
 
எடுத்துட்டு வந்த டிரெஸ்ஸை கரையில பாதுக்காப்பா வைச்சுட்டு தண்ணிக்குள்ள இறங்குனேன். உள்ளே போக போக ஜில்லுன்னு இருந்துச்சு. முதல்ல கொஞ்ச நேரம் உட்கார மாதிரி இருக்க இடத்துல உட்கார்ந்து கொஞ்ச நேரம் அந்த குளுமையை உள்வாங்கிட்டு இருந்தேன்.
 
மனசு கொஞ்சம் லேசாச்சு. கொஞ்ச நேரம் உள்நீச்சல் அடிச்சேன். அப்புறம் வெளி நீச்சல் போட்டு கொஞ்ச தூரம் போனேன், திரும்பவும் நீச்சலடிச்சு வந்து கரைக்கு ஏறுனேன்.
 
கையோடு கொண்டு வந்த கைலிக்கு மாறி அங்கிருந்து கிளம்பினேன். எனக்கு முன்னே நடந்து போயிட்டு இருந்தா அவ.
 
முக்கில் அவள் திரும்பும் போது தான் என் கண்ணுலப்பட்டா. அது தான் வள்ளிக்கண்ணு. அவக்கிட்ட போய் பேசணும்ன்னு தோணிச்சு. வேகமாய் போய் அவ முன்னாடி வந்து வழியை மறிச்சு நின்னேன்.
 
இப்போ கூட அவ என்னை பார்க்கலைங்க… கொஞ்சம் வருத்தம் தான் இருந்தாலும் அவளுக்கு இந்த திருமணத்தில் சம்மதமான்னு கேட்டுடலாம்ன்னு தோணிச்சு.
 
கொஞ்சம் பேசணும்ன்னு சொன்னேன்.
 
இது தான் பேசுத இடமான்னு கேட்டுட்டா… அவ சொல்றதும் சரி தானே இப்படியா ஒரு பொண்ணை வழிமறிச்சு நான் பேசுவேன், எனக்கே தப்பா தெரிஞ்சுது.
 
சரின்னு உங்க போன் நம்பர் கொடுங்க பேசுறேன்னு சொன்னேன்.
 
வழக்கம் போல தாங்க என்கிட்ட போன் இல்லைன்னு பொசுக்குன்னு சொல்லிட்டாங்க. எனக்கு தெரியும் அவங்க பொய் சொல்றாங்கன்னு.
 
எதுக்காக அப்படி சொன்னாங்கன்னு தெரியலை. சின்ன பொண்ணு தானே கொஞ்சம் பயப்படுறாங்கன்னு புரிஞ்சுது. பொய் சொல்றீங்கன்னு தெரியுது, இட்ஸ் ஓகேன்னு சொல்லிட்டு கிளம்பிட்டேன்.
 
வீட்டில அம்மாகிட்ட கல்யாணத்துக்கு சம்மதம்ன்னு சொல்லிட்டேன். முழுமனசோடவான்னு தெரியலை. ஆனா என் வாழ்க்கையை நல்லப்படியா எனக்கு பிடிச்ச மாதிரி, அவளுக்கும் பிடிச்ச மாதிரி வாழ முடியும்ன்னு எனக்கு நம்பிக்கை இருந்துச்சு.
 
அந்த ஒரே நம்பிக்கையில தான் அப்போ சரின்னு சொன்னேன். அடுத்தடுத்து கல்யாண வேலை இருந்துச்சு. நான் லீவ்ல தான் இருந்தேன்.
சென்னை போகலை, இடையில் ஒரு முறை போக வேண்டிய சூழ்நிலை போயிட்டு வந்தேன். இதோ ஆரெம்கேவிக்கு வந்திருக்கோம் அவளுக்கு புடவை வாங்க.
 
நான் வரமாட்டேன்னு தாங்க சொன்னேன். எங்கம்மா தான் என்னை வம்படியா இழுத்திட்டு வந்திருக்காங்க… எனக்கென்னங்க தெரியும் புடவை பத்தி எல்லாம்…
 
இப்படி சொல்லிட்டு வந்த நான் தாங்க அவளுக்கு புடவை செலக்ட் பண்ணேன். எப்படின்னு பார்க்கறீங்களா, அடுத்த அத்தியாத்துல நாங்களே சொல்றோம்…
 

Advertisement