Advertisement

2
 
வராந்தாவில் இருந்து மச்சுக்கு மரப்படி சென்றது. அவள் முன்னே செல்ல நான் அவளோடே பின்னே சென்றேன். அங்கு ஒரு அறை இருந்தது. அவள் அந்த அறைக்குள் கூட்டிச்செல்வாள் என்று நான் எதிர்பார்த்திருக்க அவள் முன்னிருந்த தாழ்வாரத்தின் ஒரு ஓரத்தில் சென்று நின்றுக் கொண்டாள்.
 
மழை நீர் கீழே விழும் வகையில் தாழ்வாய் தகடு போட்டிருந்தர் அவ்வீட்டில். பழைய காலத்து வீடு போலும். மாடியின் ஓரத்தில் நின்றுக்கொண்டு அவள் கீழே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.
 
‘என்னடா இவ நான் பேசணும்ன்னு சொல்லியிருக்கேன். இவ பாட்டுக்கு எனக்கென்னன்னு போய் நிக்குறா…’ என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டே அவளைப் பார்த்தேன்.
 
அவள் துளிக்கூட என்னைக் கண்டுக் கொள்ளவேயில்லை, முதல் அவமானம்.
 
“ஹலோ…”
 
“இதை சொல்லுறதுக்கு தான் வந்தீங்களா, இதை போன்ல சொல்லிருக்கலாமே…” என்றாள் அவள்.
 
அவமானம் நம்பர் இரண்டு பல்லைக் கடித்தவாறே “உன்கூட பேசத் தான் வந்தேன்…” என்றேன்.
 
என்னை நன்றாக திரும்பி பார்த்தாள். “நானும் அதைக் கேட்கத்தான் வந்திருக்கேன்…” என்றாள்.
 
“அப்போ நீங்க பேசாம இருந்தா எப்படி” என்றேன்.
 
“பேசணும்ன்னு சொன்னது நீங்க தானே. அதை நீங்க தானே சொல்லியாவணும்” என்றாள்.
 
ரொம்ப அசிங்கப்படுத்துறாளே என் மனக்குரலே தான். “வந்ததுல இருந்து நானும் பார்த்திட்டே தான் இருக்கேன். நீங்க என்னை பார்க்கவே இல்லையே…” என்று என் ஆதங்கத்தை கேட்டுவிட்டேன்.
 
அவள் மேலிருந்து கீழாய் என்னை நன்றாகவே பார்த்தாள். ‘அப்பா பார்த்திட்டா’ உள்ளுக்குள் ஜில்லென்றிருந்தது.
 
“பார்த்தாச்சு…” என்றாள் இப்போது.
 
“என்னைப் பிடிச்சிருக்கா…” அதையும் கேட்டுவிட்டேன்.
 
“அதை எங்க வீட்டுல கேட்கும் போது சொல்லிக்கிடுதேன்” என்றாள் முகத்திலடித்தது போல்.
 
‘கொஞ்சம் கூட மரியாதை தெரியாதவள் போல’ என்று திட்டிக்கொண்டேன் அவளை.
 
“என்ன படிச்சிருக்கீங்க??” என்றேன் அவளைப் பற்றி மேலும் தெரிந்துக்கொள்ளும் ஆர்வத்துடன்.
 
அங்கு தான் எனக்கு பெரிய ஆப்பாக அடித்தாள் அவள். நான் அப்படி கேட்டதும் அவள் முகத்தில் ஒரு மின்னல் மின்னியது.
 
“அது தெரியாம தான் பொண்ணு பார்க்க வந்தாவுதா”
 
‘வந்ததுல இருந்து எத்தனை தடவை தான் இவ என்னை அவமானப்படுத்துவா…’ என்று என்னுள் பொருமல், அது எனக்குள் லேசாய் கோபத்தை வரவழைத்தது.
 
அதை அடக்கிக்கொண்டு “ஏன் அதை நீங்க சொல்ல மாட்டீங்களா??”
 
“அப்போ கண்டிப்பா என்னைப்பத்தி தெரியாம தான் வந்து இருக்கீங்க??”
 
“சரி சரி நானே சொல்லிடறேன்… பத்தாவது ரெண்டு அட்டெம்ப்ட்”
 
“வாட்…” என்றேன் உச்சப்பட்ச அதிர்ச்சியில்.
 
“என்ன சொன்னீங்க??” என்றேன் மீண்டும்.
 
“நாலஞ்சு வருஷம் முன்னாடி பத்தாவது எழுதினேன், பெயிலாயிட்டமுல்ல. எல்லாரும் திரும்ப எழுதுன்னு சொன்னாங்க… முடியவே முடியாதுன்னு சொல்லிட்டேனுல்ல..”
 
“ஒரு வழியா என்னை சம்மதிக்க வைச்சு இந்த வருஷம் எழுத வைச்சாவ… திருப்பியும் நான் பெயிலாயிட்டே…” என்று சாதாரணமாய் சொன்னவளை உறுத்து விழித்தேன்.
 
“பொய் தானே சொல்றீங்க. என்கிட்ட விளையாடுறீங்க தானே…” என்றேன்.
 
“உங்ககிட்ட போன் இருக்கு தானே. நெட் இருக்குல கூகிள் போங்க… பத்தாவது ரிசல்ட்ன்னு சர்ச் பண்ணுங்க…”
 
“என்ன சொல்றீங்க?? நான் எதுக்கு அதெல்லாம் பார்க்கணும்…” என்றேன்.
 
“ஓபன் பண்ணுங்க சொல்லுதேன்…” என்றாள்.
 
என் மொபைலை எடுத்து அவள் சொன்னதை செய்தேன். “என்னோட பேரு, பிறந்த தேதி…” என்று அவள் சொன்னதை என் மூளை தேவையில்லாமல் பதிவு செய்தது.
 
என்னருகில் வந்தவள் என் மொபைலை எட்டிப்பார்த்தாள். “இதே தான், பாருங்க நான் சொன்னேன்ல நீங்க நம்பலைல… இப்போ நம்புதியளா…” என்றாள்.
 
“ஆம் அவள் சொன்னது போலவே அது பத்தாவது ரிசல்ட் தான். கணக்கில் பத்து மார்க் எடுத்திருந்தாள்…”
 
“கடவுளே இவ எனக்கு செட்டே ஆகமாட்டா… இவளை எல்லாம் நான் கல்யாணம் பண்ணா என்னாகறது, என் பிரண்ட்ஸ் முன்னாடி எனக்கு மானமே போய்டும்… நல்லவேளை இவளே பத்தாவது பெயில்ன்னு சொல்லிட்டா” என்று கடவுளுக்கு நன்றி சொல்லிக்கொண்டேன்.
 
“அப்போ உன்னோட வயசு??” என்றேன் அதிர்ச்சியாய். சிறு பெண்ணை என் தலையில் கட்டி வைக்க பார்க்கிறார்களோ என்ற அதிர்ச்சி தான் வேறென்ன.
 
அவள் இதழ்கடையோரம் ஒரு சிரிப்பு தோன்றியது போன்ற உணர்வெனக்கு. “இருபது முடிஞ்சிருச்சு” என்றாள் அவள்.
 
“ஹப்பாடா அப்போ இருபத்தி ஒண்ணு தொடங்கிருச்சு…” என்று வாய்விட்டு சொன்னேன்.
 
“அதெப்படிங்க பெண்ணின் திருமண வயது இருபத்தி ஒண்ணுன்னு சொல்றாங்களே. அது தொடக்க வயது இல்லை முடிஞ்ச பிறகா…” என்று கேட்டு என் தலையில் இடி மேல் இடி இறக்கினாள் அவள்.
 
“கண்டிப்பா சொல்றேன் இவ எனக்கு செட்டே ஆகமாட்டா” என்று எண்ணிக்கொண்டு நான் எதுவும் பேசாமல் முன்னே நடக்க “ஒண்ணுமே சொல்லாம போறீங்க” என்றாள்.
 
“அதை நான் எங்க வீட்டில சொல்லிக்கறேன்…” என்றேன்.
 
‘அப்பாடா பதிலுக்கு பதில் கொடுத்தாயிற்று இப்போ தான் எனக்கு நிம்மதியே’ என்று எண்ணியவாறே இப்போது நான் முன்னே கீழே இறங்க அவள் என் பின்னே வந்தாள்.
 
நாங்கள் இருவரும் கீழே வந்திருக்க எங்கள் வீட்டினர் இப்போது பெரிய பாறாங்கல்லையே என் தலையில் தூக்கிப் போட்டிருந்தனர்.
 
நாங்கள் வருவதற்குள் அவர்கள் எல்லாம் பேசி முடித்திருந்தனர். எங்களுக்காகவே காத்திருந்தார் போன்று தட்டை எடுத்து மாற்றியிருந்தனர். நான் அவள் முகத்தை பார்க்க அவளுக்கும் இது அதிர்ச்சி தான் போலும்.
 
‘என்ன உங்கப்பன் பெரிசா பேசினான், வாழப் போறவங்க பேசினா நல்லது அது இதுன்னு. இப்போ யாரையுமே கேட்காம தட்டை மாத்தியிருக்கான்…’ என்று அவள் தந்தையை ஏளனமாய் நினைத்த எனக்குள் என் அம்மாவும் அதைத் தானே செய்திருக்கிறார் என்பது மறந்தே போனது.
 
“ஏலேய் ரவீனா பொண்ணுக்கு அந்த பூவை எடுத்து வைச்சுவிடுலா…” என்ற என் அம்மாவை எரித்துவிடுவது போல் பார்த்தேன்.
 
“வள்ளி இனி நீ தான் எங்கவீட்டு மருமக… வாம்மா இப்படி…” என்றார் என் அம்மா.
 
மற்றவர்கள் முன் எந்த ரசாபாசமும் வேண்டாம் என்று எண்ணி முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு அங்கே அமர்ந்தேன்.
 
“தம்பிக்கு பிடிச்சிருக்கான்னு கேட்கவே இல்லையே”
 
“என்னங்க நீங்க வேற அவன் பிடிக்காம தான் பொண்ணுக்கிட்ட தனியா பேசப் போனானா என்ன” என்று இந்த முறை எனக்கு ஆப்பை என் அப்பா அடித்தார்.
 
“ஏன் ராஜம் எங்களை சொல்லுதிய, வள்ளியை ஒரு வார்த்தை நீங்களும் கேட்கவேயில்லையே” என்றது என் அம்மா.
 
“அவ என்ன சொல்லிட போவுதா… நாங்க பாத்து என்ன செஞ்சாலும் சரிதேன்னு எப்பவோ சொல்லிட்டா…” என்றார் அவளின் அன்னை.
 
ஆக இவர்கள் எல்லாம் பேசி முடித்துவிட்டு சும்மா பேருக்கு என்னை பெண் பார்க்க என்று அழைத்து வந்திருக்கிறார்கள் என்று எனக்குள் குமைந்தேன்.
 
“சித்த இருங்க சமையல் முடிஞ்சிரும்…” என்று என் அம்மாவிடம் பேசிக்கொண்டிருந்த அவரின் தோழி அது தான் வள்ளிக்கண்ணுவின் அம்மா எழ “அதெல்லாம் வேணாம் ராஜம், மாப்பிள்ளை நாளைக்கு மும்பை போகப் போறாங்க…”
 
“நெல்லையப்பர் கோவிலுக்கு போயிட்டு கிளம்பணும்ன்னு சொன்னாங்க… நாங்க கிளம்புதோம், இன்னொரு நாள் வந்து கை நினைக்கிறோம்…” என்று மறுத்தார் என் அம்மா.
 
“மத்த விஷயம் எல்லாம்…” என்று ஆரம்பித்தார் வள்ளிக்கண்ணுவின் அப்பா.
 
“வேற என்ன விஷயங்க இருக்கு. நாம முன்னாடியே பேசின மாதிரி கல்யாணத்துக்கு முதல் நாள் பரிசம் போட்டுக்குவோம்…”
 
“இன்னைக்கு நம்ம திருப்திக்கு உப்புதாம்பூலம் மாத்திக்கிட்டாச்சு போதாதா…” என்றார் என் அப்பா.
 
“அவர் சொல்றது சரி தானேண்ணே. உங்க மருமவன் வேற ஊர்ல இருக்காங்கன்னு சொல்லுதிய. அவங்க இங்க இருக்கும் போதே நாம கல்யாணத்தை முடிச்சிருவோம்…” என்று தொடர்ந்து ஆப்பு அடித்த வண்ணமே இருந்தனர் என் வீட்டினர்.
 
என் நிலை ஆப்பசைத்த குரங்கின் நிலை தான் போங்கள். எப்போதடா இங்கிருந்து கிளம்புவோம் என்றிருந்தேன். யாரையும் பார்க்கவில்லை. ஒருவழியாக என் வீட்டினர் கிளம்பினர்.
 
அவர்களுடன் நானும் கிளம்பினேன். எல்லாரிடமும் சொல்லிக்கொள்ள சொல்லி என் அம்மா என் கையில் இடிக்க வேண்டா வெறுப்பாய் அவர்களை பார்த்து தலையசைத்தேன்.
எதுவோ ஒரு எண்ணம் எனக்குள். அவள் என்னை பார்க்கிறாளா என்று பார்த்தேன். இப்போதும் கூட அவளாய் என்னை பார்க்கவில்லை.
 
நான் அவளைப் பார்ப்பதை கண்டுவிட்டு அவளின் அக்கா அவளின் தோளை இடித்து அவள் காதில் எதுவோ சொல்ல ஒரு வழியாய் என்னை நிமிர்ந்து பார்த்தாள்.
 
என்னையறியாமலே அவளிடம் போய் வருகிறேன் என்பதாய் தலையசைத்து வைத்தேன். மற்றவர்கள் என்னை நமுட்டு சிரிப்பு சிரிப்பதையும் பொருட்படுத்தாமல்.
 
என்னை கடனே என்று பார்த்தாலே தவிர மருந்துக்கும் புன்னகை இல்லை அவள் முகத்தில்.
 
இப்படி இருக்கவளை எதுக்கு எனக்கு கட்டி வைக்கணும்ன்னு நினைக்கிறாங்க சிடுசிடுப்பானேன்.
என் பின்னாலேயே படியேறி வந்தாவ. மச்சியில் இருந்த அந்த ரூமுக்குள்ள நான் போவேன்னு நினைச்சாவோ போல நான் அங்க போவாம வேணும்மின்னே நின்னேன் வெளிய வேடிக்கை பார்க்கா போல.
 
இவிய பெரிய இவிய, இவியளை உள்ள கூட்டிட்டு போய் விருந்து வைப்பாங்களாக்கும் என்று நொடித்துக் கொண்டேன் நான்.
 
நா ஏதாவது பேசுவேன்னு அவிய என்னைப் பார்த்து நிக்க நா வேணுமின்னே பேசாம நின்னேன்.
 
பேசணும்ன்னு சொன்னது அவிய தானே, அப்போ அவிய தானே பேசணும் நான் பேசணும்ன்னு என்னை பார்த்தாவோ நா பேசுவேனா என்ன…
 
கொஞ்ச நேரம் பார்த்திட்டு “ஹலோ” அப்படின்னாவ.
 
எனக்கு என்னவோ அவிய போன்ல பேசுனாப்புல இருந்துச்சு. அதை அப்படியே அவியட்ட சொன்னேன், பாவம் நான் சொன்னதை கேட்டு அவிய மூஞ்சி எப்படியோ ஆகிப்போச்சு.
 
“உன்கூட பேசத் தான் வந்தேன்…” அப்படின்னாவ.
 
அது தெரியாம தான் நாங்க வந்தோமா என்று நொடித்துகிட்டேன் நா. இருந்தாலும் அவியல நல்லா நிமிர்ந்து பாத்து “நானும் அதைக் கேட்கத்தான் வந்தேன்” சொல்லிட்டேன்
 
“அப்போ நீங்க பேசாம இருந்தா எப்படி” அப்படின்னு கேட்டாவோ
 
பேசணும்னு சொல்லிட்டு நான் பேசணுமாம் இதென்ன புதுக்கதையா இருக்கு. என் மனசுல தோணினதை அப்படியே அவியட்ட சொல்லிட்டேன். மறுபடியும் அவிய மூஞ்சி போன போக்கு எனக்கு இந்த முறை சிரிப்பா இருந்துச்சு.
 
சிரிச்சா வம்பாகிப் போகும்ன்னுஅமைதியாய் காட்டிக்கிட்டேன். அடுத்து நா அவியல நிமிர்ந்து கூட பாக்கல்லன்னு ஆரம்பிச்சவ.
 
ஓ அது தான் குறையா இருக்கு போலன்னு அவியலநல்லா பார்த்து வைச்சேன் இப்போ. அவிய வீட்டுக்குள்ள வரும் போது சரியா பார்க்கலைன்னு சொன்னேன்ல
 
இப்போ நல்லாவே பார்த்திட்டேன். ஆளு பார்க்க நல்லாவே இருக்காவ. அவிய ஹேர்ஸ்டைல் தான் எனக்கு கொஞ்சம் பிடிக்கலை, முன் பக்கம் கொஞ்சம்  தூக்கிவாரி இருந்தாவ.
 
மத்தப்படி ஆளு சூப்பர்ன்னு சொல்லலாம். குட்டையாவும் இல்லாம நெட்டையாவும் இல்லாம மீடியம் உயரம் தான்.
 
ரொம்ப கலர் இல்லை அதுக்காக நிறம் கம்மின்னு சொல்லிட முடியாது. அவியளுக்கு ஒத்தைநாடிங்க அது பாக்கவே ரொம்ப அழகா இருக்கு அவியளுக்கு.
 
நான் இப்படி பார்த்துக்கிட்டு இருந்தேனா அவிய என்னையவே பாக்குற மாதிரி இருந்துச்சு. சட்டுன்னு சுதாரிச்சு பாத்தாச்சுன்னு நா சொல்லவும் பொசுக்குன்னு என்னைய பிடிச்சிருக்கான்னு கேட்டுட்டாவ…
 
எனக்கு என்ன பதில் சொல்லன்னு தெரியலை எங்க வீட்டுல சொல்லிக்கிடுதேன்னு சொல்லிட்டேன். அந்த பதிலை கேட்டு பொசுக்குன்னு போச்சு அவிய மூஞ்சி.
அடுத்து கேட்டாவோ பாருங்க ஒரு கேள்வி அப்போ தான் எனக்கு புரிஞ்சுது அவிய என்னைய பத்தி எந்த விவரமும் தெரியாம வந்துட்டாவன்னு.
 
பின்ன என்னங்க நான் என்ன படிச்சிருக்கேன்னு கூட தெரியாம யாராச்சும் பொண்ணு பார்க்க வருவாவளா… இவிய வந்தாவ…
 
ஒரு பக்கம் கோபம் வந்தாலும் இன்னொரு பக்கம் என் பதில் அவியளுக்கு என்னை கல்யாணம் பண்ணிக்கணும் அப்படிங்கற எண்ணத்தை துரத்தி அடிக்கும்ன்னு எனக்குள்ள ஒரு பட்சி சொல்ல நா உண்மை விளம்பி ஆகி பத்தாவதுல நான் பெயில் ஆன விஷயத்தை சொல்ல நா நினைச்ச மாதிரியே தான் அவர் ரியாக்ஷன் இருந்துச்சு.
 
அவியளை என் டென்த் ரிசல்ட் நெட்ல பார்க்க சொல்லி அதை அவிய பார்த்து நம்பி ஹா ஹா வள்ளி நீ மாப்பிள்ளையை ஓட வைச்சுடுவட்டி என்று எனக்கு நானே சபாஷ்ன்னு சொல்லிக்கிட்டேன்.
 
அடுத்து ஒரு சூப்பர் கேள்வி கேட்டாவோ சத்தியமா சொல்றேன் எனக்கு சிரிப்பை அடக்கவே முடியலை. ஆனாலும் கெத்தை மெயின்டெயின் பண்ணணுமே மறுபடியும் சிரிப்பை அடக்கிட்டேன்.
 
உன் வயசு என்னன்னு கேட்டாவ… கொஞ்சம் பாவமா தான் இருந்துச்சு. இருந்தாலும் நானும் சும்மாயில்லாம இருபது முடிஞ்சிருச்சுன்னு சொன்னேன்.
 
அப்பாடான்னு பெருமூச்சு விட்டாவ… அதெப்படி நான் சும்மவிடுவேணாம், உடனே அடுத்த பீதியை கிளப்பிவிட நான் சொன்னதை கேட்டு அவிய கோபமாகிட்டாவ போல எதுவும் சொல்லாம கிளம்பிட்டாக, நான் சும்மாயில்லாம ஒண்ணுமே சொல்லாம போறீங்கன்னு கேட்டுட்டேன்.
 
எனக்கு பதிலுக்கு பதில் கொடுத்திட்டாராம் என்னைய மாதிரியே எங்க வீட்டில சொல்லிகிடுதேன்னு சொல்லிட்டாவ… நானும் சரி தான் போய்யா ஆளும் முகரையும்ன்னு நினைச்சுட்டே அவிய முன்னாடி போவ நா பின்னாடியே போனேன்.
 
நாங்க இங்க பேசிக்கிட்டு இருந்த வேளைக்கு எங்க வீட்டு பெரிய மனுஷங்க எல்லாம் ஒண்ணு கூடி எங்க கல்யாணத்தை கிட்டத்தட்ட உறுதியே பண்ணிட்டாவ.
 
நாங்க ரெண்டு பேரும் கீழே வர அவிய எல்லாம் சேர்ந்து தட்டை மாத்திக்கிட்டாவ. அவியளோட அக்கா எனக்கு பூ வைச்சுவிட வீட்டை பொறுத்தவரை எல்லாமே சிறப்பா முடிஞ்சிருச்சு.
 
எனக்கு தான் உள்ளுக்குள்ள காந்துது. இதில மாப்பிள்ளையின் விருப்பம் என்னன்னு என் அப்பாவும், பொண்ணின் விருப்பம் என்று அவியளின் அம்மாவும் கேக்க எனக்கு ஏகக்கடுப்பு.
 
என்னைய பிடிக்காத மாதிரி கிளம்பிட்டு அவிய கிளம்பும் போது என்கிட்ட சொல்லிட்டு வேற கிளம்பினாவ. என்னத்தை சொல்ல எனக்கு ஒண்ணுமே புரியலை. அவ்வளவு தான் என்னை இனி கல்யாணம் பண்ணி தள்ளிவிட்டு தான் மறுவேலை பார்ப்பாவ எங்க வீட்டுல.
 
அவிய எல்லாரும் கிளம்பிட்டாவ. என் அம்மா அப்பாகிட்ட “என்ன இருந்தாலும் ருக்மணிக்கு ரொம்ப பெரிய மனசுங்க… நம்ம பொண்ணு விஷயம் எல்லாம் தெரிஞ்சும் அவ புள்ளைக்கு கல்யாணம் கட்டிக்கிட சம்மதிச்சிட்டாலே”
 
“அவியளாச்சும் உனக்கு சினேகிதி, ஆனா மாப்பிள்ளை தம்பிக்கு இதெல்லாம் அட்ஜஸ்ட் பண்ணிக்கணும் என்ன இருக்கு சொல்லுல”
 
“ஆமாப்பா அவங்க எல்லாம் நல்ல மாதிரியா தான் இருக்காவ…” என்று என் அக்கா வித்யா வேறு ஒத்து ஊதினாள்.
 
“இங்கவால” என்று அப்பா கூப்பிட கிட்ட போனேன்.
 
“உனக்கு சந்தோசம் தானேட்டி”
 
“எனக்கு பிடிக்கலைப்பா” அப்படின்னு சொல்லிட்டேன்.
 
“உனக்கு பிடிக்கலைன்னாலும் அவிய தான் உனக்கு மாப்பிள்ளை…” அப்படின்னு என்ட்ட சொன்ன அப்பா  என் அம்மாகிட்ட “ராஜம் என்னன்னு கேட்டு சரி பண்ணிவைல” அப்படின்னு சொல்லி கிளம்பிட்டாவ.
 
அப்பா போன பொறவு அம்மா என்னை பிலுபிலுன்னு பிடிச்சுட்டாவ. “நீ என்ன சொல்லியாவுது கல்யாணம் எங்க விருப்பம்ன்னு சொன்னதானே… அப்புறம் இப்போ வந்து புடிக்கலைன்னு சொல்லுத”
 
“எனக்கு வேற மாப்பிள்ளை பாருங்க…”
 
“ஏம்ல மாப்பிள்ளை எதுவும் கோட்டித்தனமா பேசிட்டாவளா”
 
“அதெல்லாமில்லை…”
 
“அப்புறம் என்ன??”
 
“அவுகளை பார்த்தா ரொம்ப படிச்சவுக மாதிரி இருக்கு…”
 
“ஆமா வெளிநாடு போய் படிச்சிருக்காவ…”
 
“நா என்ன படிச்சிருக்கேன் தெரியாதா உங்களுக்கு”
 
“அது தெரிஞ்சு தானே அவிய வந்தாவோ”
 
“அதெல்லாம் எதுவும் அவியளுக்கு தெரியலை”
 
“நீ சும்மா கிடட்டி எப்போ பார்த்தாலும் ஏதாச்சும் விதண்டாவாதமா பேசிட்டு. நல்லா கேட்டுகிடு இவிய தான் உனக்கு மாப்பிள்ளை” அப்படின்னு சொல்லிட்டு அம்மா வேற வேலை பார்க்க போயிட்டாவ.
 

Advertisement