Advertisement

19
 
ஒரு வாரம் ஓடிப்போச்சு ரெண்டு நாள் முன்னாடி தான் என்னால எழுந்து உட்காரவே முடிஞ்சது. இடது தோள்ல, கையில லேசான காயம் இருந்துச்சு. இடது முழங்காலுக்கு கீழே பெரிசா காயம்.
 
அதை இப்போ பிரிச்சு இருக்காங்க. எல்லாமே ஆறிடுச்சு. கால் காயம் தீப்பிடிச்சதுல என் மேல பட்டிருக்கணும்ன்னு நினைக்கிறேன்.
 
நல்ல காயம் ஆனா இப்போ ஆறியிருக்கு. ஆறாத வடுவா இனி அது எப்பவும் என் கூடவே இருக்கும்.
 
“ஆரவ் கிளம்பலாமா??”
 
“ஹ்ம்ம் போகலாம்ன்னு…” சொல்லிட்டு அங்க இருக்கவங்களுக்கு நன்றி சொல்லிட்டு கிளம்பினேன் அவனோட.
 
கார்ல ஏறினப்போ கேட்டேன் “என்னாச்சு தாமஸ் அன்னைக்கு??”
 
“அன்னைக்கு இன்னொரு ஆயில் டேங்க்கும் பயர் ஆகிடுச்சுடா. நீ அங்க ரொம்ப பக்கத்துல இருக்கவும் உஷ்ணம் அதிகமாகி நீ மயங்கி விழுந்திருக்க. அப்போ தான் உன் மேல கொஞ்சம் தீக்காயம் பட்டிருக்கு”
 
“நம்ம முன்னாடியே பேசிட்டு கிளம்பினதால, லைப் போட் எல்லாம் இறக்கிட்டு தயாரா தான் இருந்தோம். எல்லாரும் வந்தாச்சு உன்னை காணோம்ன்னு தேடிட்டு இருந்தப்போ தான் மார்டின் நீ மயங்கி கிடக்குறன்னு ஹெல்ப்க்கு எங்களை கூப்பிட வந்தார்…”
 
“உடனே வந்து உன்னை ரெஸ்கியூ பண்ணிட்டு உன்னையும் போட்ல ஏத்தினோம். இன்னொரு டேங்க்கும் வெடிக்கவும் தண்ணி மளமளன்னு உள்ளே ஏற ஆரம்பிச்சிடுச்சு…”
 
“கொஞ்சம் கஷ்டமா தான் இருந்துச்சு. நெருப்பு லைப் போட்ல வேற பிடிச்சிருமோன்னு பயந்திட்டே இருந்தோம். பொழைப்போமா மாட்டாமோன்னு அந்த நிமிஷம் தோணுச்சு…”
 
“நல்ல வேளை நாம ஷிப் ஆகப் போற போர்ட் நியர் பைனால அவங்களுக்கு இன்பார்ம் பண்ணோம். அவங்களும் பாதி வழியில வந்து நம்மளை ரெஸ்கியூ பண்ணி கூட்டிட்டு போனாங்க”
 
“நடுவுல நம்ம போட் வேற வழிமாறிடுச்சு. எனக்கு பயமே உன்னை உடனே ஆஸ்பிட்டல் கூட்டிட்டு போகணுமேன்னு தான். நம்ம ஷிப்ல இருந்த டாக்டர் உனக்கு முதலுதவி பண்ணார்…”
 
“நைட் நேரம் வேறய உயிரே இல்லை எனக்கு. பொண்டாட்டி, பிள்ளைகளை இனி பார்க்கவே மாட்டமோன்னு தோணிடுச்சு”
 
“எப்படியோ நாம போக வேண்டிய போர்ட்க்கு போய் சேர்ந்தோம், அங்க ரீச் ஆகவே இரண்டு நாள் ஆகிடுச்சு. அப்புறம் தான் உன்னை உடனே ஆஸ்பிட்டல்ல சேர்த்தோம்”
 
“நீ ஒரு மாசத்துக்கும் மேல அங்க தான் இருந்த. பத்து நாள் முன்னாடி நீ கண்ணு முழிச்சதேன்னு…” சொல்லி முடிச்சுட்டு “இப்போ உன்னால பெட்டரா பீல் பண்ண முடியுதான்னு…” தாமஸ் கேட்டான்.
 
“ஹ்ம்ம் ஓகேடா…”
 
“தாமஸ் எங்க வீட்டுக்கு பேசணுமே…”
 
“முதல்ல பேசுடா…”
 
“இந்தா போன்னு…” நீட்டினான் தாமஸ்.
 
“தாமஸ் எங்க வீட்டுக்கு விஷயம் தெரியுமா??” எனக்கு கொஞ்சம் பயம் தான் வள்ளிக்கண்ணு சும்மாவே பயமா இருக்குன்னு சொல்லிட்டு இருந்தா, இதை கேட்டா என்னாகி இருப்பான்னு எனக்கு கவலை.
 
“அவங்களுக்கு இப்படி ஒரு ஆக்சிடென்ட் நடந்த விஷயம் மட்டும் தான் தெரியும். இங்க இருந்து நம்ம கண்ட்ரிக்கு போகவே ரொம்ப பார்மாலிட்டிஸ் எல்லாம் இருந்துச்சு. தகவல் கொடுக்கவே பத்து நாளாச்சு…”
 
“அப்புறம் தான் எல்லாம் முடிச்சு நான் இந்தியா போயிட்டு வந்தேன் நடுவுல. அங்க போய் ரிபோர்ட் பண்ணிட்டு அகைன் இங்க வந்தேன்”
 
“உன்னை இந்தியாக்கு ஷிப்ட் பண்ணிடலாமான்னு கேட்டுட்டு வர்றதுக்காகவும் தான் போனேன். ஆனா இவங்க நீ சரியானதும் தான் அனுப்புவேன்னு சொல்லிட்டாங்க”
 
“அதனால தான் இவ்வளவு நாளும் இங்க இருக்க வேண்டியதா போச்சு… உங்க வீட்டை பொறுத்தவரை இப்போ நம்ம ரெஸ்கியூ ஆகிட்டோம்ன்னு மட்டும் தான் தகவல் போயிருக்கு. எப்போ வருவோம் என்னாச்சுன்னு எதுவும் சொல்லலை”
 
“ஏன்டா தகவல் சொல்லலை?? நீயாச்சும் பேசி இருக்கலாம்ல…”
 
“எஸ் சொல்லி இருக்கலாம். நீ இப்படி இருக்கும் போது நான் என்ன செய்ய, நீ கண்ணு முழிக்காம எதையும் அவங்களுக்கு சொல்ல வேணாம்ன்னு தான் சொல்லலை…”
 
“இப்போ நீயே பேசு அவங்க சந்தோசப்படுவாங்கன்னு…” அவன் சொன்னதும் எனக்கு சரியா தான் இருந்துச்சு.
 
“சரி இப்போ நாம எங்க போறோம்??”
 
“இங்க போய் ரிபோர்ட் பண்ணிட்டு கிளம்ப வேண்டியது தான். உன்னோட பேப்பர்ஸ் எல்லாம் எடுத்திட்டு தான் வந்திருக்கேன்…”
 
எனக்கு ரொம்ப ஆவலா இருந்துச்சு வீட்டுக்கு பேச. அம்மாவோட நம்பருக்கு தான் கூப்பிட்டேன். யார் நம்பரோன்னு அவங்க எடுக்கலை போல. முழு ரிங் போய் லைன் கட் ஆகிடுச்சு.
 
“என்னாச்சு ஆரவ்??”
 
“ரிங் போகுது எடுக்கலைடா…”
 
“நாம இன்னைக்கே ஊருக்கு கிளம்பிடலாமான்னு…” கேட்டேன்.
 
“தெரியலைடா இவங்ககிட்ட பேசிட்டு நாம டிக்கெட் போட்டிறலாம் பிளைட்ல”
 
அம்மாக்கு மறுபடியும் கூப்பிட்டேன். அட்டென்ட் பண்ணிட்டாங்க, “அத்தை உங்களுக்கு போனு ஏதோ புது நம்பரா இருக்கு. முதல்ல ஒரு கால் வந்திச்சு நா எடுக்கலை”
 
“இந்தாங்க அத்தை அட்டென்ட் பண்ணிட்டேன்னு…” வள்ளிக்கண்ணு பேசுறது எனக்கு தெளிவா கேட்டுச்சு.
 
அம்மா போனை வாங்கி “ஹலோன்னு” சொன்னாங்க.
 
“அம்மான்னு…” நான் கூப்பிட்டதுமே அம்மாக்கு தெரிஞ்சிடுச்சு நான் தான் பேசறேன்னு.
 
போன்லவே ஓன்னு அழறாங்க. “ஆரவ்… ஆரவ்ன்னு…” மட்டும் தான் சொல்லிட்டு இருந்தாங்க.
 
“வள்ளி மெதுவா ஓடிவான்னு…” அம்மா சொல்றது கேட்டுச்சு.
 
“அத்தை போன்ல யாருன்னு கேட்டுட்டு அவ போனை வாங்கி “ஹலோ… ஹலோன்னு…” சொல்றா.
 
அவளோட குரலை முழுசா உள்வாங்கி என்னோட ஒவ்வொரு செல்லுக்கும் கடத்தினேன்.
 
“ஹலோ யாருங்க அவியளுக்கு என்னாச்சுன்னு…” கேட்குறா.
 
“வள்ளிக்கண்ணு…” அவ்வளவு தான் சொன்னேன்.
 
எனக்கே அவளோட குரலை கேட்டு என்னவோ செய்யுது. இப்போ எப்படி இருக்காளோன்னு மனசு தவிக்குது.
 
“எப்படி இருக்க??”
 
“நீங்க எப்படி இருக்கிய?? எனக்கு தெரியும் உங்களுக்கு எதுவும் ஆகாதுன்னு. நா சொன்னா யாரும் நம்பலை…”
 
“எப்போ பார்த்தாலும் என் முன்னாடியே அழுதிட்டு இருந்தாவ” அதை சொல்லும் போதே அவளோட குரல் உடையுது எனக்கு தெரியுது.
 
“நான் சீக்கிரம் ஊருக்கு வந்திடுவேன் இப்போ அதிகம் பேச முடியாது… இங்க இருந்து கிளம்பும் போது கால் பண்றேன்…”
“நல்லா இருக்கிய தானே??”
 
“நல்லா இருக்கேன்… வந்து பேசறேன்னு…” சொல்லிட்டு போனை வைச்சுட்டேன். என்னால பேச முடியலை, அவங்களை பார்க்கணும்ன்னு தோணுது. அம்மா அழற சத்தம் இன்னும் கேட்டுட்டே இருக்கு எனக்கு.
 
வள்ளிக்கண்ணு இவ்வளவு தைரியமா பேசுவான்னு நான் எதிர்ப்பார்க்கலை. கஷ்டம் சிலரை பலவீனப்படுத்தும் சிலரை தைரியமாக்கும்ன்னு புரிஞ்சுது.
 
“பாப்பா அம்மாவை ஏன் படுத்துதிய அம்மாக்கு முடியலைடா தங்கம்…” நா தான் பாப்பாட்ட பேசிட்டு இருக்கேன்.
 
ரொம்ப வாந்தியா வருது. ஐஞ்சு மாசம் முடியப் போகுது எனக்கு இன்னும் வாமிட் நிக்கலை. அம்மா இப்போ தான் ஊருக்கு போனாவ. அப்பா பாவம்ல தனியா சாப்பிட கஷ்டப்படுவாவன்னு நா தான் போக சொன்னேன்.
 
காலையில தான் செக்கப்க்கு போயிட்டு வந்தோம் நானும் அத்தையும். ஸ்கேன் பண்ணாவ, குழந்தை நல்லா இருக்குன்னு சொன்னாவ.
 
எனக்கு இவிய நினைப்பாவே இருந்துச்சு. இவிய இருந்து இதெல்லாம் பாக்க பக்கத்துல இல்லையேன்னு தேடுது எனக்கு. அத்தை ரொம்ப அழுவாதவ. அவியளுக்கு ரொம்ப பயம் வந்திட்டு.
இவிய எல்லாம் நல்லா இருக்காவன்னு தகவல் வந்து பதினஞ்சு நாள் ஆகுது. ஆனாலும் அத்தை அழாம இல்லை.
 
அவியளுக்கு என்னாகி இருக்குமோன்னு தினமும் சொல்லிட்டு இருக்காவ. நா ஒண்ணும் ஆகாது இவியளுக்கு சொல்லிக்கிட்டு தான் கிடக்கேன்.
 
அத்தையை சமாதானம் பண்ணவே எனக்கு நேரம் போவுது. அவிய மைன்ட் சேஞ் பண்ண அப்பப்போ எதாச்சும் சொல்லிட்டு கிடப்பேன்.
 
இல்லைன்னா அவிய புள்ளை நினைப்பாவே இருப்பாவ. அம்மா ஊருக்கு போகற வரை அம்மா பாத்துக்கிட்டாங்க அத்தையை சமாதானம் செய்யற வேலையை.
 
இன்னைக்கு மனசுக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு. ஏன்னு தெரியலை. ரொம்ப டயர்டா இருந்ததுனால ஹால் சோபாவில சாஞ்சுட்டு இருந்தேன்.
 
அத்தை எனக்கு ஜூஸ் போட போயிருக்காவ. அப்போ தான் அத்தைக்கு ஏதோ புது நம்பர்ல இருந்து போன் வந்துச்சு.
 
அத்தை வேலையா இருக்காவல்ல அதான் போனை கொடுக்கலை. நா போன் எடுக்கவும் இல்லை. இப்போ தான் போன்ல மெசேஜ் வருதே, வெளிநாட்டு நம்பர்ல இருந்து போன் வந்தா எடுக்காதியன்னு நா அப்படி நம்பர்ன்னு தான் எடுக்கலை.
கொஞ்ச நேரம் கழிச்சு மறுபடியும் போன் அடிக்கி. எதாச்சும் முக்கியமான போனா இருக்கும்ன்னு அதை எடுத்திட்டே கிட்சன்க்கு போனேன்.
 
போனை அட்டென்ட் பண்ணிட்டு அத்தைகிட்ட கொடுத்தேன். அவிய பேசிட்டு ஆரவ் ஆரவ்ன்னு சொல்லிட்டு அழுவுதாவ.
 
எனக்கு பயம் வந்திட்டு போனை வாங்கி நா பேசுதேன், யாருன்னு கேட்குதேன் பதிலே இல்லை. என்னாச்சு அவியளுக்குன்னு கேக்கவும் வள்ளிக்கண்ணுன்னு சொல்லுதாவ.
 
எனக்கு ஒரு நிமிஷம் இதயமே நின்னு போச்சு அவிய குரலை கேட்டு. படபடன்னு பேசினேன், அவிய நேர்ல வந்து பேசறேன், நல்லா இருக்கேன்னு சொல்லி போனை வைச்சுட்டாவ.
 
பாப்பா பத்தி அவிய கேக்கவே இல்லை. பாப்பாக்கு கம்பிளைன்ட் பண்ணிட்டேன். “பாப்பா அப்பா உன்னைய கேக்கவே இல்லை தங்கம்…”
 
“நேர்ல வரட்டும் டிஸ்யூம் கொடுக்கலாம்ன்னு…” சொன்னேன்.
 
சாமி ரூமுக்கு போய் நின்னேன். ஏற்கனவே முடிஞ்சு வைச்ச காசு அங்க இருந்துச்சு. மறுபடியும் காசு முடிஞ்சு வைச்சேன். அவிய நல்ல படியா ஊருக்கு திரும்பி வரணும்ன்னு.
 
இவ்வளவு நாளும் தைரியமா இருந்த எனக்கு இந்த நாலு நாளை சமாளிக்க ரொம்பவே கஷ்டமா இருக்கு. அவிய குரலை கேட்டதுல இருந்து எப்போ பாப்பேன்னு இருக்கு எனக்கு.
 
இப்போ அத்தை அழுகறதை நிருத்திட்டாவ. ஆனா எனக்கு தான் அழுகையா வருது. நைட் தூங்கவே முடியலை.
 
நேத்து தான் போன் பண்ணாவ அங்க இருந்து கிளம்பிட்டாவலாம், இன்னைக்கு நைட்குள்ள வந்திருவேன்னு சொன்னாவ.
 
எத்தனை மணிக்கு வருவான்னு தெரியலை. இவிய வர்ற விஷயம் தெரிஞ்சு மதனியும் அண்ணனும் கூட வந்திட்டாவ.
 
மதினியும் இப்போ மாசமா இருக்காவ. நாங்க பாத்துக்க கூடாதாம் இப்போ. மதினி வேற ரூம்ல இருக்காவ. நா எங்க ரூம்ல இருக்கேன். காலையில தான் அவிய வந்தாவ. அவியளுக்கு இப்போ ஏழு மாசம் ஆகுது.
 
அண்ணனும் கொழுந்தனும் தான் இப்போ ஏர்போர்ட் கிளம்பிட்டு இருக்காவ. எனக்கு மனசெல்லாம் அங்க தான் இருக்கு. நானும் போகணும்ன்னு இருக்கு.
 
ஆனா என்னைய இந்த நேரத்துல அத்தை அனுப்ப மாட்டாவ. அம்மாவும் அப்பாவும் நாளைக்கு வர்றேன்னு சொன்னாவ.
 
நைட் டிரைன் ஏறி இருப்பாவ. அக்கா போன் போடுதா பேசிட்டு வர்றேன்.
 
“அக்கா சொல்லுக்கா எப்படி இருக்கே??”
 
“நீ எப்படிட்டி இருக்கேன்னு” அக்கா கேக்குதா.
 
“நல்லா தான்க்கா இருக்கேன்…”
 
“குரல்ல சுரத்தே இல்லையேட்டி”
 
“அப்படில்லாம் இல்லைக்கா…”
 
“கொழுந்தன் போன் பண்ணாவலாமே அம்மா நேத்து தான் சொன்னாவ. இன்னைக்கு வீட்டுக்கு வந்திருவான்னு சொன்னாவ. அதான் உனக்கு இன்னைக்கே போன் பண்ணேன்”
 
“கொழுந்தன் நல்லாருக்காவல்ல…”
 
“நல்லா இருக்கேன்னு சொன்னாவ…”
 
“எத்தனை மணிக்கு வருவாவ??”
 
“டயம் தெரியலைக்கா…”
 
“சரிட்டி எதையாச்சும் நினைச்சு விசனப்பட்டுட்டு இருக்காதட்டி. சந்தோசமா இரு எல்லாம் நல்லதே நடக்கும். நம்ம குல தெய்வம் கோவிலுக்கு போய் பொங்கல் வைக்க சொன்னேன் அம்மாவை…”
“என்னோட வேண்டுதல்ட்டி குழந்தை பிறந்ததும் நீயும் கொழுந்தனும் ஒரு தடவை போயிட்டு வாங்கட்டி”
 
“சரிக்கா…”
 
பிளைட் ஏறிட்டேன், இப்போ எந்த வளையமும் சுத்துற மூட்ல நானில்லை. மனசுபூரா வள்ளிக்கண்ணு தான். இப்போ எத்தனை மாசமிருக்கும்ன்னு தெரியலை.
 
தோராயமா நாலோ அஞ்சோ இருக்கும்ன்னு நினைக்கிறேன். வயிறு தெரிய ஆரம்பிச்சிருக்கும்ல…
 
ஸ்கேன் பார்த்திருப்பாங்கல்லன்னு யோசனை போச்சு. அக்காவும் மாசமா இருக்கான்னு நான் ஊருக்கு கிளம்பும் போது தான் அம்மா சொன்னாங்க.
 
எல்லாரைப்பத்தியும் யோசனை ஓடிட்டு இருந்துச்சு. அப்படியே தூங்கி போயிட்டேன். தாமஸ் தான் எழுப்பி சாப்பிட சொன்னான். சாப்பிட்டு மறுபடியும் தூக்கம் தான்.
 
அனவுன்ஸ்மென்ட் வருது, இன்னும் சில மணி நேரத்துல சென்னை ரீச் ஆகிடுவோம்ன்னு. உள்ளுக்குள்ள பரபரன்னு இருக்கு எனக்கு. அதுக்கு பிறகு எனக்கு தூக்கமே வரலை.
 
இதோ சீட் பெல்ட் போடச்சொல்லி மறுபடியும் அனவுன்ஸ்மென்ட் வருது. ரொம்ப எக்சைட்டிங்கா இருக்கு.
 
யாரு இப்போ ஏர்போர்ட் வந்திருப்பாங்கன்னு பார்க்க ரொம்பவே ஆவலா காத்திட்டு இருக்கேன்.
 
செக்கிங் எல்லாம் முடிச்சு இதோ வெளியில வந்திட்டேன். தாமஸை கூப்பிட அவங்க வீட்டு ஆளுங்க வந்திருக்காங்க. அவன் கிளம்பிட்டான்.
 
நான் வெளிய வந்து பாக்குறேன், யாருமே வரலை. மனசுக்கு ஒரு மாதிரி ஆகிடுச்சு. தாமஸ் இப்போ என்னைப்பார்த்து ஓடிவந்தான்.
 
“ஆரவ்ன்னு…” கூப்பிட நான் திரும்பி பார்த்தேன்.
 
“சொல்லுடா”
 
“உங்க வீட்டுல இருந்து தான் வாய்ஸ் மெசேஜ்  வந்துச்சு… உங்க அக்காக்கு பெயின் வந்திட்டு போல அவங்களை கூட்டிட்டு ஆஸ்பிட்டல் போயிருக்காங்க போல…”
 
“வீட்டில யாருமில்லையாம் உன்னோட வைப் தம்பி மட்டும் தான் இருக்காங்க போல. நீ பேசுறியா அவங்களுக்கு…”
 
“தேங்க்ஸ்டா நான் பார்த்துக்கறேன்னு…” சொல்லிட்டு வீட்டுக்கு கிளம்பிட்டேன்.
 
 

Advertisement