Advertisement

17
 
“இப்போ சொல்லுட்டி என்ன நடந்துச்சுன்னு” மறக்காம கேட்டா கல்யாணி.
 
“என்ன சொல்லணும்ட்டி??”
 
“நீ என்ன பண்ணி வைச்சேன்னு சொல்லுட்டின்னா, என்னையவே கேள்வி கேக்கா…”
 
நா நடந்து எல்லாம் அவகிட்ட சொன்னேன். என்னைய அவ ஒரு முறை முறைச்சா பாக்கணும் எனக்கு என்ன பதில் சொல்லன்னு தெரியலை.
 
“ஏட்டி உனக்கெல்லாம் கூறே கிடையாதாட்டி?? என்னட்டி இப்படி இருக்கவ??”
 
“எது வைஞ்சாலும் சொல்லிட்டு வை”
 
“இதுக்கு ஒண்ணும் குறைச்சலில்லைட்டி”
 
“ஏட்டி நா இப்படி வேலை வெட்டி பாக்காம இருந்தா என் மாமியா என்னைய சும்மா விடும்ன்னு நினைக்கே. ஆஞ்சிருவா ஆஞ்சி…”
 
“நா வேலை பாக்கலைன்னு உனக்கு தெரியுமா??”
 
“வேலை பாக்கறதுன்னா என்ன, வீடு கூட்டுறது, துடைக்கறது மட்டும் தான் வேலையா… மாமியாக்கு கூடமாட ஒத்தாசையா இருக்க வேணாமா…”
“உன்னைய சொல்லி என்ன பிரோஜனம் எல்லாம் என் பெரியம்மையை சொல்லணும், உன்னைய இப்படி கூறுகெட்ட குப்பாயியா வளர்த்துவிட்டிருக்கு”
 
“ஏட்டி கொஞ்சம் விட்டா நீ பாட்டுக்கு வைஞ்சுக்கிட்டு இருக்க”
 
“பின்ன உன்னைய கொஞ்சுவாங்களா. ஏட்டி பெரியம்மாவை பாக்குறல இந்த வீட்டில ஒத்தை ஆளா அது தான் எல்லா வேலையும் பாக்குது…”
 
“புள்ளைங்க புகுந்த வீட்டுல தான் போயி எல்லா வேலையும் பாக்கணுமேன்னு உன்னைய இங்க வேலை பாக்காம விட்டா நீ அங்கனையும் போயி இப்படியே இருந்தா எப்படிட்டி”
 
“நா எல்லா வேலையும் செஞ்சே எங்க அத்தை என்னைய அம்புட்டு ஏசும். ஒத்தை வார்த்தை நா உன் மாமன்கிட்ட சொன்னதில்லை. அவியளா தான் ஒரு நா பாத்திட்டு எனக்கு ஆறுதல் சொன்னாவ”
 
“நீ என்னடான்னா உன் புருஷன்கிட்டயே போய் அவிய அம்மாவை பத்தி குறை சொல்லியிருக்க, தப்பெல்லாம் உம் பேருல வைச்சுட்டு”
 
“நம்ம வீடுன்னு நினைப்பு இருந்தா நீயா செய்வ தானே. உன் மாமியாக்கு உடம்பு சரியில்லை, சரி அதை விடு நீயே தனியா குடித்தனம் பண்ணுற, அப்பவும் இப்படி தான் இருப்பியா…”
 
“நாம இடத்துக்கு தகுந்த மாதிரி நம்மளை மாத்தி தான்ட்டி ஆவணும். எல்லாத்தையும் அவியளே சொல்லணும்ன்னு நீ ஏட்டி எதிர்பாக்க. அவியகிட்ட கேட்டு இப்படி செய்யட்டுமான்னு நீயா கேட்டிருக்கா ஒருக்கா…”
 
கல்யாணி சொல்ல சொல்ல நா செஞ்ச தப்பு எனக்கு புரியுது. ரொம்ப மெத்தனமா இருந்திட்டேன் இம்புட்டு நாளும், அத்தை என்ன நினைச்சு இருப்பாவளோ. அவிய என்னைய ஒரு நா கூட நீ அதிகம் படிக்கலைன்னு எல்லாம் குத்தி காட்டி பேசினதில்லை.
 
ஒழுங்கா வேலை பாக்க மாட்டேங்கன்னு தான் சொல்லி இருப்பாவ. அவிய என்னைய மக மாதிரி நினைச்சு ஏசுனாவன்னு இப்போதேன் புரியது.
 
அன்னைக்கு தான் கொஞ்சம் கூட பேசிட்டாவ, ஏதோ டென்ஷனா இருந்திருப்பாவலா இருக்கும்.
 
“என்னட்டி நா பாட்டுக்கு பேசிக்கிட்டு இருக்கேன், எங்க யோசனையில கிடக்க”
 
“நீ சொன்னது சரின்னு தான்ட்டி யோசிக்கேன்”
 
கல்யாணி இப்போ என்னைய மெச்சுற மாதிரி ஒரு பார்வை பாக்கா. “உனக்கு சொன்னா புரியும்ன்னு எனக்கு தெரியும்ட்டி. அதுக்காக எல்லா நேரமும் யாராச்சும் சொல்லிட்டே இருக்க மாட்டாவ”
 
“அதை நீயும் புரிஞ்சுக்கணும்ட்டி. இவ்வளவு பிரச்சனை நடந்திருக்கு அத்தான் உன்னைய இங்க கொண்டு வந்து விட்டிருக்காவ. மேல எதுவும் சங்கடமாகிற கூடாதுன்னு. அவியளை நினைச்சா பெருமையா இருக்குட்டி, உனக்கு நல்லா புருஷன் கிடைச்சிருக்காவ”
 
“அவியளை புரிஞ்சு நடந்துக்க, எப்பவும் கஷ்டப்படுத்திறாத தாயி…”
 
“எனக்கு தெரியும்ன்னு” ரோஷமா சொன்னேன்.
 
“இந்த கோவத்துக்கு ஒண்ணும் குறைச்சலில்லைட்டி”
 
“நாளைக்கு அவியளுக்கு போன் போட்டு பேசு. உங்க அத்தைகிட்டயும் பேசு…”
 
நா மண்டையை மண்டையை உருட்டினேன். இன்னைக்கு அவ இருக்கவும் பேசிட்டே உறங்கிட்டேன். இல்லைன்னா இன்னைக்கும் எனக்கு தூக்கம் வந்திருக்காது. இங்க வந்ததுல இருந்தே எனக்கு எங்க வீட்டுக்கு போவணும்ன்னு தோணிட்டு இருக்கு.
 
அவிய ரெண்டு நாள்ல கிளம்புதாவ ஊருக்கு. காலையில பேசினப்போ சொன்னாவ. அத்தைகிட்டயும் பேசினேன். எல்லாரும் நல்லா இருக்காவலாம்.
 
கிளம்பும் போது போன் பண்ணச் சொன்னேன் இன்னும் செய்யலை. எப்போ பன்னுவாவன்னு போனையே பாத்துட்டு இருக்கேன்.
 
இந்நேரம் கிளம்பி இருப்பாவன்னு தெரியும். போன் பண்ணி அவியளை தொல்லை பண்ணக்கூடாதுன்னு பேசாம இருந்தேன்.
 
“வள்ளி…”
 
“என்னம்மா??”
 
“சாப்பிட வா…”
 
“கொஞ்ச நேரம் ஆகும்மா…”
 
“எட்டு மணியில இருந்து இதே தாம்ல சொல்லுத நீயி. மணி பத்தாவது வந்து சாப்பிட்டு படுல…”
 
“அம்மா ப்ளீஸ்ம்மா…”
 
“எதுக்கு இப்படி மூஞ்சியை வைச்சிருக்கவ”
 
“அவிய இன்னைக்கு ஊருக்கு கிளம்பிருப்பாவ, போன் பண்ணச் சொன்னேன். அதுக்கு தான் வெயிட் பண்றேன்…”
 
“மருமவன் எதுவும் வேலையா இருப்பாவ, போனதும் உனக்கு கூப்பிடுவாவ நீ வந்து சாப்பிடுலா…”
 
“அம்மா ப்ளீஸ்…”
 
“நா உனக்கு சாப்பாடு இங்க கொண்டு வந்து வைக்கேன். நீ சாப்பிட்டு படுக்கணும், நா வந்து பாப்பேன்…”
“கண்டிப்பா சாப்பிடுதேன்ம்மா…”
 
அம்மா நைட் சாப்பாடு கொண்டு வந்து வைச்சுட்டு உறங்க போயிட்டாவ. இவிய இன்னும் எனக்கு போன் பண்ணலை, மனசு படபடன்னு அடிச்சுக்குது.
 
பதினோரு மணி போல கூப்பிடுதாவ, நான் சாஞ்சாக்குல உறங்கிட்டேன். போன் அடிக்கிற சத்தம் கேட்டு வேகமா எடுத்து ஹலோன்னேன்
 
“என்னடி வள்ளிக்கண்ணு பண்ணுறேன்னு…” கேட்டாவ.
 
“உங்க போனு வருமேன்னு தான் உட்கார்ந்திருக்கேன்…”
 
“சாரிடா நான் வீட்டில இருந்து கிளம்பவே கொஞ்சம் லேட் ஆகிருச்சு. நேரா ஏர்போர்ட் போக தான் டைம் இருந்துச்சு”
 
“அவசரத்துல உனக்கு போன் பண்ணி பேச வேணாம்ன்னு தான் பேசலை. இப்போ தான் மும்பை வந்தேன். ரூம்ல இருக்கேன், இன்னும் ரெண்டு மூணு நாள்ல ஷிப்ல இருப்பேன்”
 
“ஹ்ம்ம்…”
 
“என்ன வள்ளிக்கண்ணு வெறும் ஹ்ம்ம் தானா, பேசேன்… உன் குரலை கேட்க ஆவலோடு ஓடிவந்த என்னை ஏமாற்றாதே பேசு வள்ளி… பேசு வள்ளி…”
 
“என்ன பேச??”
“ஐ லவ் யூ சொல்லு”
 
“சொல்ல மாட்டேன்…”
 
“இப்போவே சொல்லு அப்புறம் சொல்ல முடியலைன்னு வருத்தப்படுவ…”
 
“அதெல்லாம் வருத்தப்பட மாட்டேன்…”
 
“போடி…”
 
“ஹ்ம்ம்…”
 
“சாப்பிட்டியா??”
 
“நீங்க சாப்பிட்டியலா??”
 
“நீ பர்ஸ்ட் சொல்லு??”
 
“இன்னும் இல்லை…”
 
“ஏன்??”
 
“நீ… நீங்க போன் பண்ணுவீயன்னு வெயிட் பண்ணேன். அதான் சாப்பிடலை…”
 
“லூசாடி நீ?? நேரமாச்சுன்னா சாப்பிட வேண்டியது தானே… நான் எங்க போய்ட போறேன், ஊருக்கு வந்ததும் கூப்பிடுவேன் அவ்வளோ தானே…”
 
“நீங்க சாப்பிட்டாச்சா??”
 
“இப்போ தான் சாப்பிட்டேன்”
 
“சரி நீ சாப்பிட்டு தூங்கு, இப்போவே பதினோரு மணிக்கு மேல ஆகுது. நான் நாளைக்கு பேசறேன், வேலை இல்லாத போது நான் ப்ரீயா இருக்கும் போது தான் பேசுவேன் ஓகேவா…”
 
“ஹ்ம்ம்…”
 
“சாப்பிடாம எல்லாம் காத்திட்டு இருக்க வேணாம் சரியா…”
 
“ஹ்ம்ம்…”
 
“சரின்னு வாயை திறந்து சொல்லு”
 
“சரிங்க…”
 
“குட் கேர்ள், சரி போய் சமத்தா சாப்பிடு, நாளைக்கு வீடியோ கால் பண்றேன்…”
 
“குட் நைட்”
 
“ஐ லவ் யூ வள்ளிக்கண்ணுன்னு…” சொல்லிட்டு போனை வைச்சுட்டாவ.
 
அவியட்ட பேசவும் தான் மனசு லேசா இருக்கு, சாப்பிட்டு உறங்கிட்டேன்.
நல்லா தான் போயிட்டு இருந்துச்சு அந்த நியூஸ் வர்ற வரைக்கும். நா நானாவே இல்லை. பைத்தியம் பிடிச்ச மாதிரி இருந்தேன்.
அவ வீட்டுல விட்டுட்டு கிளம்புனேன், அன்னைக்கு ரொம்பவே மிஸ் பண்ணேன் அவளை. டிரைன்ல போகும் போது அவ நினைப்பு தான்.
 
மறுபடியும் ஒரு வளையம் சுத்தலாம்ன்னு இருக்கேன். பிளைட் ஒன்றை மணி நேரத்துக்கே ரெண்டு வளையம் சுத்தினேன். இது எவ்வளவு நேரம் ஜர்னி வளையம் சுத்த வேணாமா.
 
எங்க கல்யாணம் முடிஞ்சு ரிஷப்ஷன் அந்த வாரம். என்னோட பிரண்ட்ஸ் கலீக்ஸ் எல்லாரும் வந்திருந்தாங்க. என்னோட வெல்விஷர் திமான் சார் வந்திருந்தாரு, அவரு வெஸ்ட் பெங்கால்ல இருந்து வர்றாரு.
 
நானும் வள்ளிக்கண்ணும் மேடையை நின்னுட்டு இருக்கோம். சொல்ல மறந்திட்டனே வள்ளிக்கண்ணு சேரி ரொம்ப அழகா இருந்துச்சு. நல்ல வெங்காய கலர் சேரி, அதுக்கு பொருத்தமா டிசைனர் பிளவுஸ் எல்லாம் போட்டு ஜம்முன்னு இருந்தா.
 
அழகா ஜடை பின்னி ஒரே ஒரு சுட்டி மட்டும் தான் வைச்சிருந்தா, வேற எந்த அலங்காரமும் இல்லை. அதுக்கே அவ்வளவு சூப்பரா இருந்தா (ஹோட்டல் ஹால் கூட்டத்துல மட்டுமில்லை உன் ஜொள்ளுலயும் நிரம்பி வழியுதுடா ஆரவ்)
அப்போ தான் என்னோட பாஸ் என்னோட வழிகாட்டியான திமான் சார் வந்தாரு. அச்சச்சோ இந்த மனுஷனுக்கு தமிழ் தெரியாதே, ஹிந்தி, இங்கிலீஷ் தானே, நம்ம பொண்டாட்டி என்ன செய்வான்னு அப்போ தான் எனக்கு யோசனை.
 
மெதுவா வள்ளிக்கண்ணை கூப்பிட்டேன். “என்னங்க??”
 
“என்னோட பாஸ் வர்றாரு…”
 
“சரிங்க…”
 
“அவருக்கு தமிழ் தெரியாது…”
 
“ஹ்ம்ம்”
 
“எது கேட்டாலும் சிரிச்சிடு சரியா, புரியலைன்னா என்கிட்ட கேளுன்னு…” சொன்னேன்.
 
எல்லாத்துக்கும் ஒரு மாதிரியா தலையை ஆட்டி வைச்சா. என்ன பண்ணுவாளோன்னு தெரியலை.
 
இங்க இருக்க ஒண்ணு ரெண்டு சொந்தமெல்லாம் ஆரம்பிச்சாச்சு பொண்ணு படிக்கலையாமேன்னு. அம்மா வந்து இப்போ தான் சொல்லிட்டு போனாங்க. யாராச்சும் ஏதாச்சும் பேசினா கண்டுக்காதன்னு.
 
என்னோட பிரண்ட்ஸ் ஒண்ணு ரெண்டு பேரு கேட்டாங்க நான் அதை பெரிசா எடுத்து பதில் சொல்லலை அவங்களுக்கு.
திமான் சார் மேடைக்கு வந்திட்டாரு, ஷ்ரவன் தான் கூட்டிட்டு வந்தான்.
 
“ஹலோ சார்… ஹவ் ஆர் யூ சார்??”
 
“ஐ யம் குட் ஆரவ், விஷ் யூ ஹாப்பி மேரிட் லைப் மேன்…”
 
“தேங்க்யூ சார்… மீ மை வைப் நொவ் மை லைப் வள்ளின்னு…” சொல்லி அவளை அவருக்கு அறிமுகப்படுத்தினேன்.
 
அவர் அவளுக்கும் கைக் கொடுத்தார். இவ கைக்கொடுப்பாளா இல்லை அவாய்ட் பண்ணுவாளான்னு யோசிச்சுட்டே அவளை பார்த்தேன்.
 
நல்ல வேளை கைக்கொடுத்தா. அவர் அவகிட்ட ஏதோ குசுகுசுன்னு பேசுறாரு. என்னைப்பத்தி தான் ஏதோ போட்டுக் கொடுக்கறார்ன்னு தெரியுது எனக்கு.
 
இவ புரிஞ்சு தலையாட்டுறாளா இல்லையான்னு தான் தெரியலை. ரெண்டு பேரும் ரகசியமா பேசிக்கறாங்க.
 
“வாட் சார் யூவர் கம்பிளைனிங் அபவுட் மீன்னு…” அவர்கிட்ட கேட்டேன்.
 
“எஸ் அப்கோர்ஸ், ஷி மஸ்ட் நோ யூ ரைட்ன்னு” சொன்னார்.
 
அவர் ஒரு வழியா பேசிட்டு கிளம்பினாரு. மறுபடியும் என் பக்கத்துல வந்திட்டு “லக்கி மேன், ஷி இஸ் வெரி இன்டலிஜன்ட் கேர்ள்ன்னு” சொல்லிட்டு போறாரு. என்னடா நடக்குதுன்னு நான் பாக்குறேன்.
 
மெதுவா வள்ளியை கூப்பிட்டேன். “அவர் உன்கிட்ட என்ன சொன்னாரு??”
 
“உங்களை பத்தி தான் சொன்னாரு…”
 
“அது தான் என்ன??”
 
“நீங்க ரொம்ப நல்லவங்கலாம், உங்களை நா நல்லா பாத்துகிடணுமாம்… உங்களுக்கு கோவம் கொஞ்சம் வருமாம், ஆனா கண்ட்ரோல் பண்ணிக்குவீங்கலாம்…”
 
“வேலையில கரெக்ட்டா இருப்பியலாம். வெள்ளைக்காரிங்களை பார்த்து ஓவரா சைட் அடிப்பீங்கன்னு வேற சொன்னாவ…”
 
“இவ்வளவும் அவரா சொன்னாரு…”
 
“ஆமா…”

“சும்மா சொல்றியா…”
 
“நிஜமா தான் அவரே கூப்பிட்டு கேளுங்க…”
 
“அவர் சொன்னது உனக்கு புரிஞ்சுதா…”
 
“ஏன் புரியாம??”
 
“அவர் இங்கிலீஷ் தானே பேசினார்…”
 
“ஆமா, நானும் இங்கிலீஷ்ல தான் பதில் சொன்னே…”
 
இது எனக்கு புதுசு, கிராமத்து பொண்ணுன்னு நான் கொஞ்சம் அவளை மட்டமா நினைச்சுட்டனோன்னு இப்போ தோணிச்சு.
 
திருநெல்வேலி ஒண்ணும் கிராமில்லை தான். ஆனா பேச்சு மட்டும் மாத்த முடியாது. இவ வேற பாதியில படிப்பை விட்டுட்டா, எப்படி பேசுவான்னு தான் எனக்கு தோணிச்சு.
 
எனக்கு தெரியும் திமான் சார் ரொம்ப சரளமா இங்கிலீஷ் பேசுவாரு. அவர்கிட்ட இவ பேசியிருக்கான்னா இவ எங்க படிச்சிருக்கான்னு அப்போ தான் எனக்கு கேக்க தோணிச்சு.
 
“நீ எங்க படிச்சே?? அதாவது எந்த ஸ்கூல்”
 
“கான்வென்ட்ல தான் படிச்சேன்…”
 
என்னது கான்வென்ட்டா அதான் இங்கிலீஷ் பொளந்து கட்டியிருக்கா போல. யாரையும் குறைச்சு மதிப்பிடக் கூடாதுன்னு அந்த நேரம் தான் எனக்கு முழுசா புரிஞ்சுதுங்க.
 
என் வள்ளிக்கண்ணு படிக்கலைன்னு எனக்கு இப்போ சுத்தமாவே கவலையில்லை. அவ மேல படிக்கணும்ன்னு எனக்கு ஆசை இருந்துச்சு, ஆனா இப்போ எனக்கு எதுவும் தோணலை. அது அவளோட இஷ்டம்ன்னு இருந்திட்டேன்.
 
டிரைன் திருச்சிஇல நிக்குது, லைட்டா பசிக்குது. என் பொண்டாட்டி நான் வெளிய சாப்பிடக்கூடாதுன்னு ஸ்ட்ரிக்ட் ஆர்டர்.
 
எனக்கு புடிக்கும்ன்னு சப்பாத்தி போட்டு கொடுத்து விட்டிருக்கா, கூடவே ஏதோ ஸ்வீட் வேற செஞ்சி வைச்சிருக்கா.
 
எனக்காக அவளே செஞ்சது. நமக்காகன்னு ஒருத்தர் செஞ்சு தரும் போது அதோட சுகமே தனி தான் இல்லை. அம்மா எல்லாம் நமக்காக தானே செய்யறாங்க. நாம ஒரு நாள் கூட அவங்களை பாராட்டினதே இல்லைன்னு தோணிச்சு.
 
என்னைவிட்டா நாள் முழுக்க பேசிட்டே இருப்பேன், இப்போ கொஞ்சம் தூக்கம் வருது தூங்கறேன்.
 
சென்னை வந்திட்டேன், அவளுக்கு போன் பண்ணி சொல்லிட்டேன். இங்க வந்து நாலு நாள் ஆச்சு. ரெண்டு நாளா அம்மா ஒரே புலம்பல்.
 
வள்ளி இல்லைன்னு. என்னன்னு கேட்டா “இல்லைடா ஆரவ் அந்த புள்ளை இங்க இருக்கும் போது அது செய்யலை இது செய்யலைன்னு சொல்லிட்டு இருந்தேன்…”
 
“பாரு தினமும் நம்ம வீட்டுல பூக்குற பூவை பறிச்சு அவளே கட்டி விளக்குக்கு போட்டுட்டு சாமிக்கு விளக்கு ஏத்துவா. வீடு எப்பவும் சுத்தமா வைச்சிருப்பா…”
 
“இதெல்லாம் அவ தானே செஞ்சுட்டு இருந்தா. அவ இல்லாம இருக்கவும் வீடே என்னவோ போல இருக்குன்னு” அம்மா சொல்லவும் எனக்கு மனசே ஒரு மாதிரி ஆகிப்போச்சு.
 
நான் அவளை ஊர்ல விட்டுட்டு வந்தது சரின்னு உறுதியா எனக்கு தோணிச்சு. இந்த பிரிவு அவசியம், பிரிவு தான் ஒருத்தரை பத்தி நினைக்க வைக்கும்.
 
அம்மா புரிஞ்சுக்கிட்டாங்க, அது போல அவளும் அம்மாவை புரிஞ்சுக்குவான்னு நினைச்சேன்.
 
அவ இல்லாம எனக்கும் கூட தனியா அந்த ரூம்ல தூங்க முடியலை. பக்கத்துல அவ இருக்கற உணர்வு திரும்பி பார்த்தா இருக்க மாட்டா, கஷ்டமா இருந்துச்சு.
 
அது தான் ரெண்டு நாள் முன்னாடியே மும்பைக்கு கிளம்பிட்டேன். இதோ ஷிப்லயும் போர்ட் ஆகிட்டேன். கிளம்ப முன்னாடி அவளுக்கு போன் பண்ணி பேசினேன்.
 
ஷிப் எல்லா பார்மாலிட்டிஸ் முடிஞ்சு கிளம்புது, ஆங்கர் ரிமூவ் பண்ணியாச்சு, கிளம்பியாச்சு.
என்னோட பிரண்டும் அதே ஷிப்ல தான் இருந்தான். ரெண்டு பேரும் பேசிட்டே எங்க வேலைய பார்த்திட்டு இருந்தோம்.
 
ஆரவ் நீட் சம் டீ பிரேக்ன்னு” சொன்னான் என்னோட பிரண்ட் தாமஸ்.
 
“வா போகலாம்”
 
ரெண்டு பேரும் பேசிட்டே டீ குடிச்சோம். அப்படியே அந்த கடலோட அழகையும் அங்கிருந்த விண்டோ வழியா பார்த்திட்டே இருந்தேன்.
 
நான் இந்தியா பார்டர் கிராஸ் பண்ணியாச்சு. இது டேங்கர் ஷிப் இதுல ஆட்கள் அதிகம் இருக்க மாட்டாங்க. அதாவது பேசஞ்சர்ஸ் இருக்க வாய்ப்பில்லைன்னு சொல்ல வந்தேன்.
 
வேற கன்ட்ரிக்கு போயிட்டு இருக்கோம். எப்படியும் அங்க போய் ரீச் ஆக ஒரு நாலு மாசம் ஆகும். இடையில சில போர்ட் கிராஸ் பண்றோம், அங்க தேவையானதை பில் பண்ணிட்டு கிளம்புவோம்.
 
நாலு மாசம் போனதே தெரியலை. ஆனா ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பொழுதும் எனக்கு என்னோட வள்ளிக்கண்ணோட ஞாபகம் தான்.
 
எப்போ அவளை பார்ப்பேன்னு எனக்கு தோண ஆரம்பிச்சிடுச்சு. இன்னும் ஒரு நாள்ல நாங்க போக வேண்டிய போர்ட் ரீச் ஆகிடுவோம்.
 
நான் அதை யோசிச்சிட்டே வெளிய வேடிக்கை பார்த்திட்டு இருந்தேன். அப்போ திடிர்னு ஒரு சத்தம் கேட்டுச்சு. என்னை சுத்தி அனல் அடிக்கிற பீல் எனக்கு.
உஷ்ணம் ஏறுது மெல்ல மெல்ல, என்னன்னு விசாரிக்க போனப்போ தான் தெரிஞ்சுது. ஒரு ஆயில் டேங்க் வெடிச்சிருச்சுன்னு.
 
எப்படி பயர் ஆச்சுன்னு விசாரிக்க நேரமில்லை. இன்னும் கொஞ்ச நேரத்துல அடுத்த ஆயில் டேங்க்ல தீப்பிடிக்க அதிக வாய்ப்பிருக்கு.
 
தண்ணியும் கொஞ்ச நேரத்துல உள்ள வந்திடும். தாமஸ் எனக்கு கூப்பிட்டான், அவசரமான மீட்டிங் இருக்குன்னு. முக்கியமான சில பேர் மட்டும் தாங்க. சில மேப்ஸ் வைச்சுட்டு பேசினாங்க.
 
அடுத்து என்ன பண்ணப்போறோம்ன்னு பேசிட்டு உடனே அங்கிருந்து கிளம்பினோம். தாமஸ் எல்லாருக்கும் இன்ஸ்ட்ரக்ஷன்ஸ் கொடுத்திட்டு வந்தான். நான் ஒரு பக்கம் போயிட்டேன்.
 
இன்னும் சில நிமிஷத்துல நாங்க எல்லாரும் ஒரே இடத்துல ஆஜர் ஆகணும். இனிமே நான் வீட்டுக்கு போவேனான்னு யோசிச்சுட்டே போறேன். அடுத்து ஒரு சத்தம் கேட்டுச்சு படார்ன்னு.
 
அதுக்கு மேல என்ன நடந்திச்சுன்னு எனக்கு நினைவில்லை…
 

Advertisement