Advertisement

16
 
அவளோட இருந்த அந்த ரெண்டு நாளும் சொர்க்கமாவே இருந்துச்சு. என்னோட கோபத்தை எல்லாம் தள்ளிவைச்சுட்டு முழுசா அவளுக்காக நான் அங்க இருந்தேன்.
 
நான் முகத்தை தூக்கி வைச்சுக்கிட்டா அவளுக்கும் கஷ்டமா இருக்காதா. எனக்குமே கஷ்டமா தான் இருக்கும் அதான் அவளை சந்தோசமா பார்த்துக்கிட்டேன்.
 
அத்தை மாமாகிட்ட பேசிட்டு ரெஸ்ட் எடுக்க ரூமுக்கு வந்தோம். வள்ளிக்கண்ணுக்கு கண்ணுல தண்ணி தேங்கி நிக்குது.
 
எனக்கே பார்க்க பாவமா இருந்துச்சு. அவங்கம்மா அவளை திட்டுவாங்களோ நான் அவளை இங்க கூட்டிட்டு வந்திருக்க கூடாதோன்னு தோணிச்சு.
 
“வள்ளி…”
 
“ஹ்ம்ம்…”
 
“இங்க வா…” கை நீட்டி கூப்பிட்டேன்.
 
“சொல்லுங்கன்னு…” சொல்லி என் பக்கத்துல வந்து உட்கார்ந்தா.
 
“உங்கம்மா திட்டினாங்களா??”
தலையை மட்டும் இல்லைங்கற மாதிரி ஆட்டினா…
 
“திட்டுவாங்கன்னு நினைச்சு அழறியா??”
 
மறுபடியும் அதே தலையாட்டல் தான்.
 
“வாய் திறந்து சொல்லு என்ன பிரச்சனை உனக்கு??”
 
“நீங்க என்கிட்ட பேசலை…” அதை சொல்லும் போது அவ கண்ணுல தண்ணி வந்திடுச்சு.
 
எனக்கு ரொம்ப சங்கடமா போச்சு. இதே இடத்துல அவளை இரண்டாவது தடவையா நான் அழ வைக்கிறேன்.
 
ஊர்ல கூட அவ அழலை. மே பீ என் முன்னாடி அழுகலையோ என்னவோ. நான் ஊர்ல இருந்து வந்த அன்னைக்கு அழுதா. ஆனா அது எனக்காக அழுதது. என்னால அவ அழறது இது இரண்டாவது முறை. இன்னைக்கு அவ அழறா எனக்கு கஷ்டமா இருக்கு.
 
“நான் பேச மாட்டேன்னு நீயா நினைச்சுக்குவியா”
 
என்னை நிமிர்ந்து பார்த்தா, அதே குற்றம்சாட்டும் பார்வை தான். நீங்க பேசலைன்னு.
 
“இங்க பாரு நானும் கோபமா இருந்தேன் அன்னைக்கு, ரெண்டு பேருமே அதே கோபத்துல இருக்கும் போது வார்த்தையை விடுவோம். அன்னைக்கு நீ விட்ட மாதிரி…” சொல்லி தான் காட்டினேன் அவளுக்கு புரியணும்ல.
 
“நீ வார்த்தையை விட்ட மாதிரி நான் பேசினாலும் அதே தான் செய்வேன். ஒரு நேரம் போல ஒரு நேரம் இருக்க மாட்டேன். பொதுவா அதிகமா எனக்கு கோபம் வர்றதில்லை”
 
“வந்தா அது அடுத்தவங்களை நிச்சயமா பாதிக்கும்ன்னு எனக்கு தெரியும். நான் பேசுறது அவங்களுக்கு புரிய மாதிரி தெளிவாவே சொல்லிடுவேன். இது தான் காரணம்ன்னு”
 
“அது அவங்களை ஹர்ட் பண்ண தான் செய்யும். உண்மை கசக்கும் தானே. ஆனா நான் சொன்னதை கரெக்ட்டா புரிஞ்சா திரும்ப அந்த மாதிரி தப்பு நடக்காது அதனால தான் அப்படின்னு…” விளக்கம் சொன்னேன்.
 
“இனிமே நா எதும் சொல்ல மாட்டேன்…”
 
“தப்பு… மறுபடியும் நீ தப்பு பண்றே?? உன்னை என்கிட்ட எதுவும் சொல்ல வேணாம்ன்னு நான் சொல்லவே இல்லை. ஆனா கோபத்துல என்ன பேசுறோம்ன்னு இல்லாம பேசாத அதை தான் நான் சொல்ல வந்தேன்…”
 
“உங்கம்மாவை பேசிட்டாங்க எங்கம்மான்னு சொன்னல்ல. எங்கம்மாவை நீ அவ்வளோ பேசினே, நான் கேட்டுட்டு தானே இருந்தேன். நீ பேசுறது வரைமுறை இல்லாம போகவும் தானே நான் பேசினேன்”
“மன்னிச்சிருங்க”
 
“வேணாம் இந்த மன்னிப்பெல்லாம். புரிஞ்சு நடந்துக்கோ அது போதும்…”
 
“வெளிய போவோமா??”
 
“இப்போவா…”
 
“இப்போ தான் வேற எப்போன்னு நினைச்சே??”
 
“சரி…”
 
“ஆத்துக்கு போவோமா??”
 
“இந்த நேரத்துலய…”
 
“அப்போ சரி நாளைக்கு காலையில நாம குளிக்க போவோம்…”
 
“என்னது நாம ரெண்டு பேருமா, ஒண்ணா குளிக்கவான்னு!!” சொல்லி முழிச்சா.
 
“நம்ம ரெண்டு பேரும் ஒண்ணா சேர்ந்து குளிக்க ஆத்துக்கு போறோம் அவ்வளவு தான். அங்க நான் தனியா ஆம்பிளைக பக்கம் போயிருவேன், நீ தனியா பொம்பளைக பக்கம் போய்டலாம் ஓகே தானே…”
 
“ஹ்ம்ம்…” தலையாட்டினாள்.
 
“நாம ஒண்ணா சேர்ந்து குளிச்சா ஒண்ணும் தப்பில்லை, அதுக்கு ஆத்துக்கு போகணும்ன்னு எல்லாம் அவசியம் இல்லை, வீட்டில கூட சேர்ந்து குளிக்கலாம்…” சொல்லிட்டு அவளை பார்த்தேன். முகமெல்லாம் சிவந்து போச்சு. “மை வள்ளிக்கண்ணு இஸ் பேக்…”
 
“என்ன பேசுதியன்னு” சொல்லி எழுந்திட்டா, “ஹேய் எங்க போறே இரு இங்கவே…”
 
“இல்லை நான் வெளிய போறேன்…”
 
“உன்னோட தான் இங்க ரெண்டு நாளும் இருப்பேன். நீ இப்போ வெளிய போனா நான் இன்னைக்கே ஊருக்கு கிளம்பிருவேன்…” மிரட்டினேன்.
 
சட்டுன்னு உட்கார்ந்திட்டா. “சரி எனக்கு ஒரு உண்மை சொல்லு…”
 
“என்ன உண்மை??”
 
“பொண்ணு பார்க்க வந்த அன்னைக்கு நீ என்னை ஜன்னல் வழியா பார்த்த தானே..”
 
“இ… இல்லையே…”
 
“பொய் சொல்லாத நீ பார்த்ததை நான் பார்த்தேன்”
 
“இல்லை… அது வந்து மாப்பிள்ளை எப்படி இருப்பாவன்னு…”
 
“என்னை பத்தி என்ன நினைச்சே??”
 
“என்னைய ஏன் பொண்ணு பாக்க வந்தியன்னு நினைச்சேன்…”
 
“உனக்கு அப்போ என்னை பிடிக்கலை தானே…”
 
“அப்படிலாம் சொல்ல முடியாது. ஆனா அப்படி தான்…”
 
“இதென்ன பதில்”
 
“நீங்க அன்னைக்கு நா என்ன படிச்சிருக்கேன்னு கேட்டியளா, எனக்கு சங்கடமா போச்சு. நா என்ன படிச்சிருக்கேன்னு கூட தெரிஞ்சுக்காம வந்திருக்கியன்னு கோபம்”
 
“என்னைபத்தி தெரியாம பொண்ணு பார்க்க வந்திட்டியன்னு வைஞ்சுட்டு இருந்தேன். அம்மா வேற நீங்க நல்லா படிச்சவியன்னு சொன்னாவ, வெளிநாட்டுக்கெல்லாம் போய் படிச்சியலாம்…”
 
“உங்கம்மா என்னைப்பத்தி எப்போ உனக்கு சொன்னாங்க… நீங்க போன பிறகு எனக்கு உங்களை பிடிச்சிருக்கான்னு கேட்டாவ. நான் இல்லைன்னு சொன்னேன் அப்போ தான் சொன்னாவ”
 
“ஏன் என்னை பிடிக்கலைன்னு சொன்ன??”
 
“அது நீங்க என்னைய பிடிக்கலைன்னு சொல்லிட்டா எனக்கு மனசு தாங்காதுன்னு தோணிச்சு”
“அதான் நானே சொல்லிட்டேன், உங்களுக்கு தான் என் படிப்பு தெரியலை அன்னைக்கு. தெரிஞ்சதும் நீங்க வேணாம்ன்னு சொல்லுவியன்னு நா அப்படி சொன்னேன் வீட்டில…”
 
“நீ மட்டும் என்னை பத்தி தெரிஞ்சுட்டா அன்னைக்கு என்கிட்ட பேச வந்தே”
 
“பொண்ணுககிட்ட எல்லாம் மாப்பிள்ளை என்ன ஏதுன்னு எங்க முழுசா சொல்லுதாவ. அதும் நா படிக்காதவ வேற இவட்ட என்ன சொல்லன்னு நினைச்சுட்டாவ போல…” அவ இழுத்து சொன்னாலும் அவளோட மனசு எனக்கு அதுல தெரிஞ்சுது.
 
வருத்தப்பட்டிருப்பா போலன்னு அவளோட கையை என் கைக்குள்ள கோர்த்துக்கிட்டேன்.
 
“சரி எல்லாம் விட்டுத்தள்ளு… இந்த ரெண்டு நாள் நமக்கானது நான் ஊருக்கு போனா…”
 
“போதும் திரும்ப திரும்ப அதே சொல்லி என்னைய கலங்கடிக்காதிய…”
 
“இரு நான் சொல்லி முடிச்சிடறேன். நான் வர்றதுக்கு பத்து மாசம்கிட்ட ஆகிடும். கிட்டத்தட்ட ஒரு வருஷம் கூட ஆகலாம்” அவளோட முகமே மாறிடுச்சு நான் சொல்ல சொல்ல.
 
“நான் உன்னை இங்க கூட்டிட்டு வந்து விட்டுட்டேன்னு உனக்கு வருத்தமிருக்கும். இருந்தாலும் அதைப்பத்தி எனக்கு கவலையில்லை… நீ பழகின மனுஷங்களோட இருப்பேன்னு தான் இங்க விட்டுட்டு போறேன்…”
 
“எனக்கு தெரியும்…”
 
“என்ன தெரியும்??”
 
“நானும் அத்தையும் திரும்பவும் சண்டை போட்டுக்கிட கூடாதுன்னும் தான் என்னைய இங்க விட்டிய”
 
“தெரிஞ்சுதுல சந்தோசம்…”
 
அவளோட முகம் கூம்பிப் போச்சு. “நீ சின்னப்பொண்ணு இன்னும் பக்குவப்படணும்ன்னு…” சொன்ன நான் தான் பக்குவப்படலைங்க.
 
அதை நான் உணரும் போது நான் நானாவே இல்லை. அவளை திரும்பவும் பார்ப்போமாங்கற நிலைமையில நான் இருந்தேன். இந்த ரெண்டு நாள் என்னோட மன பெட்டகத்துல நான் சேமிச்சு வைச்ச பொக்கிஷம், என்னை அவளும் அவளை நானும் சந்தோசமா பார்த்துக்கிட்ட தருணம் அது.
 
அவளுக்கு பிடிச்சதை கேட்டு கேட்டு செஞ்சேன். அவளுக்கு பிடிச்ச இடத்துக்கு கூட்டிட்டு போனேன். அவளை சந்தோசப்படுத்தி நானும் சந்தோசமா இருந்தேன்.
 
ஊருக்கு கிளம்பிட்டேன் திருநெல்வேலில இருந்து மட்டுமில்லை இப்போ சென்னையில இருந்தும் கிளம்பிட்டேன். மும்பை போர்ட்ல இருந்து எங்க ஷிப் கிளம்புது…

Advertisement