Advertisement

 
நான் வள்ளிக்கண்ணுன்னு கூப்பிட்டது தான் தெரியும். ஓடி வந்து என்னை கட்டிக்கிட்டா, பர்ஸ்ட் டைம் அவளா வந்து என்னை கட்டிப்பிடிக்கிறா.
 
அதை வார்த்தையில சொல்லணுமா என்ன. நானே அவளை நினைச்சு ஏங்கி போய் வந்திருக்கேன். எனக்கு அல்வா சாப்பிட்ட மாதிரி இருந்துச்சு அவளே வந்து கட்டிக்கிட்டது.
 
நானும் பேக் எல்லாம் கீழே வைச்சுட்டு அவளை இறுக்கி கட்டிக்கிட்டேன். என்னைய ரொம்ப தேடியிருப்பான்னு நினைக்கிறேன்.
என் சட்டையை நனைச்சுட்டு இருந்தா. அதாங்க அழுதா, அதுல சட்டை ஈரமாச்சு.
 
என்னைய மிஸ் பண்ணியான்னு கேட்டேன். ஆமான்னு சொன்னா, அவளும் என்னை தேடினேன்னு சொன்னப்போ மனசுக்கு அப்படியொரு இதமா இருந்துச்சு.
 
எங்க என்னை மிஸ் பண்ணேன்னு சொன்னியே அதை எனக்கு காட்டுன்னு சொன்னேன். அதெப்படி காட்ட முடியும்ன்னு கேட்டா, நான் எப்படி காட்டணும்ன்னு சொல்லிக் கொடுத்தேன் விதவிதமா முத்தம் கொடுத்து.
 
என்னை பொறுத்தவரை அவளோட என்னோட வாழ்க்கை சுவாரசியமானதா நல்லாவே போச்சு. எங்க வாழ்க்கை எப்படி போகுமோன்னு எந்தளவுக்கு பயந்தேனோ அதெல்லாம் இல்லாம இப்ப நிம்மதியா இருக்கேன்.
 
இப்படி நான் நினைச்சது தான் தாமதம். பிரச்சனை ஒண்ணு வந்துச்சு. அம்மா அவளை திட்டாங்கன்னு மறுபடியும் ஆரம்பிச்சா.
 
அம்மா எப்பவும் பேசுறதைவிட கூட ரெண்டு வார்த்தை சேர்த்தே பேசியிருப்பாங்க போல. இவளுக்கு கோவம் வந்திடுச்சு என்கிட்ட வந்து புலம்பினா.
 
அதெல்லாம் கூட எனக்கு பிரச்சனையில்ல. என்கிட்ட சொல்லாம வேற யார்கிட்ட போய் அவ பேச முடியும். ஆனா பேச்செல்லாம் கொஞ்சம் கடுமையா வந்து விழுந்துச்சு.
 
அது தான் எனக்கும் கோபத்தை வரவைச்சுது. எங்கம்மா அவளோட அம்மா பத்தி எல்லாம் பேசியிருக்க வேணாம் தான், அதுக்காக அவ எங்கம்மாவை பேசுறதை நான் மட்டும் எப்படி கேட்டுட்டு பொறுமையா இருக்க முடியும்.
 
அதுவும் கடைசியில இதுக்கு மேல பேசினா ஒண்ணுகிடக்க ஒண்ணு ஆகிடும்ன்னு சொன்னா, அதுக்கு மேல என்னால என்னோட கோபத்தை கட்டுப்படுத்த முடியலை.
 
பொதுவா நான் கோபத்துல வார்த்தையை விடறது இல்லை. எனக்கு தோணினது ஒண்ணு தான் ரெண்டு பேரும் இப்போதைக்கு ஒண்ணா இருக்க வேணாம்ன்னு.
 
அதுவும் இல்லாம நான் இன்னும் பதினஞ்சு நாள்ல ஊருக்கு கிளம்பிருவேன். அதுக்கு பிறகு ரெண்டு பேரும் சண்டை போட்டுக்கிட்டா நல்லா இருக்காது.
 
நானும் இல்லை பஞ்சாயத்து அப்பாவுக்கு போகும், இல்லைன்னா அடுத்து அவளோட வீடு வரைக்கும் போகும். அது எனக்கு சுத்தமா பிடிக்காது.
 
பிரச்சனை பெரிசாக முன்ன அதை வளரவிடாம பண்ணுறது தானே சரி. நான் அதைத்தான் செஞ்சேன். அவளுக்கு நான் சொன்னது வருத்தமா கூட இருக்கலாம். எனக்கும் வருத்தம் தான்.
அதுக்காக அவ பேசினது எல்லாம் சரின்னு என்னால சொல்ல முடியலை. அவளோட பேசினா மனசங்கடம்வரும்ன்னு நான் அதிகம் பேசிக்கலை அவகிட்ட
 
எனக்குமே கஷ்டமா தான் இருக்கு என்ன செய்ய. காலையில தான் டிக்கெட் கன்பார்ம் ஆச்சு. சாப்பிடும் போது தான் அந்த பேச்சை ஆரம்பிச்சேன்.
 
“அம்மா ஞாயிற்றுக்கிழமை வள்ளியை ஊர்ல கொண்டு போய் விடலாம்ன்னு இருக்கேன்”
 
“என்னலே சொல்லுத, எதுக்கு இப்போ ஊருக்கு??”
 
“நான் இன்னும் பதினஞ்சு இருபது நாள்ல ஊருக்கு கிளம்பறேன். அதுக்கு பிறகு இவ இங்க என்ன செய்யப் போறா”
 
“அதான் நானும் சொல்றேன். நீ ஊருக்கு போக போற, அவ இங்க தானேடா இருக்கணும்…”
 
“அம்மா நான் திரும்பி வர்றதுக்கு கிட்டத்தட்ட பத்து மாசம் ஆகிடும்மா… அது வரைக்கும் இவ என்ன செய்வா இங்க…”
 
“நம்ம வீட்டுல இருக்க என்ன கஷ்டம் ஆரவ் எனக்கு புரியலை… அவ எதுவும் சொன்னாளா ஊருக்கு போறேன்னு…”
 
“அம்மா அவளை எதுக்கு பாக்கறீங்க. ஊருக்கு போகணும்ன்னு சொன்னது நான் தான். நான் இல்லாத நேரத்துல அவளுக்கு இங்க தனியா இருக்க முடியாதுல. அதான் ஊருக்கு போகட்டும்ன்னு…”
 
“நாங்க என்ன உம் பொண்டாட்டியை கொடுமையா படுத்துதோம், இப்படி பேசுற”
 
“அம்மாம்மா கொஞ்ச என்னை பேச விடுங்க… நீங்க கொடுமை படுத்தறீங்கன்னு நானும் சொல்லலை, அவளும் சொல்லலை…”
 
“நீங்களே யோசிச்சு பாருங்க, இப்போ தான் எங்களுக்கு கல்யாணம் முடிஞ்சது. அவளுக்கு இங்க என்ன பழக்கம் இருக்கும் சொல்லுங்க… இப்போ தான் பழக ஆரம்பிக்கறா, நானும் ஊருக்கு போறேன். கஷ்டமா தானே இருக்கும் அவளுக்கு”
 
“உலகத்துலேயே உன் பொண்டாட்டி தான் கஷ்டப்படுறா”
 
“அம்மா…” கத்தினேன்.
 
“இங்க பழக்கம் ஆகலைன்னு நீயே சொல்ற, அப்போ பழக்கம் ஆக வேணாமா. இது யாரு வீடு அவ வீடு தானே…”
 
“அம்மா நான் இல்லைன்னு சொல்லலை. அவ கொஞ்ச நாள் அங்க இருக்கட்டும். அப்புறம் வேணா நீங்க போய் கூட்டிட்டு வாங்கன்னு…” சொல்லி முடிச்சிட்டேன்.
 
என்னோட வள்ளிக்கண்ணு என்கிட்ட பேச முயற்சி பண்றா, எனக்கு அது புரியுது. நான் தான் அதுக்கு சரியா வாய்ப்பு கொடுக்கலை.
 
டிரைன்ல போனப்போ கூட எதுவும் பேசலை. எனக்கு போன முறை திருநெல்வேலில இருந்து சென்னைக்கு வந்தது தான் ஞாபகம் வந்திச்சு.
 
அவளோட வீட்டுக்கும் வந்தாச்சு. அவங்கம்மா அவளை கேள்வியா கேட்டுட்டே இருக்காங்க. நானும் பார்த்திட்டு தானே இருந்தேன்.
 
அவளோட அப்பா வந்தாரு. எனக்கு அவரை ரொம்ப பிடிச்சிருக்கு ஏன்னு கேளுங்களேன். (கேக்கலைன்னா சொல்லாமலா இருக்க போறே)
 
கண்டிப்பா சொல்லுவேன். முதல்லயே நான் சொன்னது தான் திரும்பவும் சொல்றேன், அவருக்கு என் வள்ளிக்கண்ணோட அதே மூக்கு, அதே கண்ணு அதான் எனக்கு பிடிச்சிருக்கு. (மாமனாரை பிடிச்சிருக்குன்னு இப்படி ஒரு காரணத்தை சொன்ன ஒரே மருமகன் நீ தாம்லே)
 
காலை டிபன் சாப்பிட்டு முடிச்சோம். “மாமா நான் வள்ளிக்கண்ணை இங்க விட்டுட்டு போகலாம்ன்னு தான் வந்தேன்…” நானே பேச்சை ஆரம்பிச்சிட்டேன்.
 
நான் சொல்லவும் அவளோட அம்மா அவளைப் பார்த்து முறைச்சாங்க. “நான் அடுத்த சன்டே ஷிப்க்கு போய்டுவேன். திரும்பி வர்றதுக்கு டென் மந்த்ஸ் ஆகும். அவ அங்க தனியா தானே இருக்கணும். அதான்…”
 
“இவ சொன்னாளா அங்க இருக்க முடியாதுன்னு…” சொல்லி என் மாமியார் இப்பவும் வள்ளியை தான் முறைச்சாங்க.
 
“இல்லை அத்தை அவ எதுவும் சொல்லலை. நான் தான் அவளை இங்க கூட்டிட்டு வந்தேன். ஒரு மாசம் ரெண்டு மாசம்ன்னா பரவாயில்லை. இந்த முறை நான் போறது டென் மந்த்ஸ்கிட்ட”
 
“அதான் அவளை கூட்டிட்டு வந்தேன். உங்களுக்கு பிடிக்கலைன்னா…” இழுத்தேன்.
 
“ராஜம் என்ன இது மருமவன்னு பேசுத மாதிரியா பேசுதன்னு…” என் மாமனார் சொன்னார்.
 
“அதில்லை ருக்மணி தப்பா எடுத்துக்கப் போறான்னு”
 
“அம்மாகிட்ட சொல்லாம கூட்டிட்டு வந்திருப்பேன்னு நினைக்கறீங்களா அத்தை…”
 
“நான் ரிடர்ன் வர்றதுக்கு முன்னாடி அவளை அவங்க வந்து கூட்டிட்டு போவாங்க. இல்லன்னா நீங்க கூட்டிட்டு போய் விட்டிடுங்க… நான் போன் பண்றேன் அப்புறம் கிளம்பினா போதும்”
 
“இவ ஒண்ணும் தப்பு பண்ணிடலையே”
 
“அத்தை என்ன கேள்வி இது, உங்க பொண்ணை நீங்களே இப்படி பேசுவீங்களான்னு…” கண்டிப்பா கேட்டேன்.
 
“ராஜம் பேசாம இருக்க மாட்டியால. எம் பொண்ணையே எப்போ பாத்தாலும் குத்தம் சொல்லிட்டு…” என் மாமனாரு தான் மறுபடியும்.
 
“உங்களுக்கு இவ்வளவு கஷ்டமா இருக்கும்ன்னு எனக்கு தெரியாம போச்சு. அங்க இவளுக்கு எல்லாமே புது மனுஷங்களாச்சே, சங்கடமா இருக்கும்ன்னு இங்க கூட்டிட்டு வந்தேன்”
 
“தப்பு என்னோடது தான் கிளம்ப முன்னாடி உங்களுக்கு போன் பண்ணி சொல்லியிருக்கணும்”
 
“இல்லை நான் ஏதோ… மன்னிச்சிருங்க நீங்க சொல்லுதது எனக்கு இப்போ தான் விளங்குது. நீங்க சொன்னதும் சரி தான்… அவ இங்கனவே இருக்கட்டும்… நான் எதுவும் பேசியிருந்தா மன்னிச்சிருங்க…” என்றார் என் மாமியார்.
 
“வள்ளி சொல்லு மருமவன்ட்டன்னு…” வள்ளியை வேற கூப்பிட்டார்.
 
“அதான் அம்மா சொல்றாங்கல்ல நா… நான் இங்கவே இருக்கேன்…”
 
அடுத்த ரெண்டு நாள் அவ கூடவே இருந்தேன்.
 

Advertisement