Advertisement

14
 
எனக்கு இப்பவே அவளை பார்க்கணும்ன்னு இருக்கு, அதான் டிரைன் டிக்கெட் கேன்சல் பண்ணிட்டு பிளைட்ல கிளம்பிட்டேன். அவ என்னை தேடுவாளா நான் அவளை தேடுற மாதிரி.
 
ரொம்ப ரொம்பவே மிஸ் பண்றேன், பேசாம அவளையும் என்னோட கூட்டிட்டு வந்திருக்கலாம்ன்னு இப்போ தோணுது. அதான் எல்லாம் முடிஞ்சு போச்சே இன்னும் என்ன அதையே பேசிட்டு.
 
ஏர்போர்ட் வந்திட்டேன் பிளைட்டுக்கு இன்னும் இருபது நிமிஷம் இருக்கு, பிளைட் ஏறி அதுக்கு பிறகு ஒன்றை மணி நேரம் ஆகும். வீட்டுக்கு போக பத்து மணியாகிடும்.
 
என் பொண்டாட்டி நேரமாவே தூங்கிருவா, கொஞ்ச நேரம் போன்ல பாட்டு கேட்டேன், நேரத்தை எப்படி நெட்டித் தள்ளன்னு தான் எனக்கு தெரியலை.
 
யூடியூப் ஓபன் பண்ணி நம்ம இசைஞானியோட பாட்டை போட்டேங்க, ஒரே காதல் பாட்டா ஓடுது.
 
கண்மணி நீ வர காத்திருந்தேன்
ஜன்னலில் பார்த்திருந்தேன்
 
எனக்கு அந்த வரி கேட்கும்போது நான் அவளை பொண்ணு பார்க்கப் போனப்போ அவ என்னை ஜன்னல்ல இருந்து பார்த்தது தான் ஞாபகம் வந்திச்சு.
அதைப்பத்தி நான் அவகிட்ட இன்னும் கேட்கவே இல்லை, ஊருக்கு போனதும் கேட்டு கன்பார்ம் பண்ணிக்கணும். என்னைப்பத்தி என்ன நினைச்சான்னு கேட்கணும்…
 
அப்பாடா அனவுன்ஸ்மென்ட் வந்திடுச்சுங்க. பிளைட் ஏறிட்டேன், பெல்ட் போட்டாச்சா, பிளைட் டேக் ஆப் பண்ணப் போறாங்க…
 
ஊருக்கு போற வரைக்கும் கொஞ்ச நேரம் கண்ணை மூடி தூங்குவோம்ன்னு நினைச்சேன். எனக்கு போன வாரம் நடந்த ஒரு இன்சிடென்ட் ஞாபகத்துக்கு வருதுங்க…
 
என்னன்னு கேட்கறீங்களா?? அதுக்கு முன்னாடி எனக்கு நீங்க பதில் சொல்லுங்க, உங்களுக்கு பேய்ன்னா பயமா?? பார்த்து இருக்கீங்களா??
 
எனக்கு பயம் இல்லை, பார்த்தது இல்லைன்னு தானே சொல்வீங்க… எல்லாம் தைரியமா சொன்னாலும் நைட்ல நம்மோட நிழலே பயமுறுத்தும் இல்லையா, அதை பார்த்து ஒரு செகன்ட் ஆச்சும் நாம பயந்து இருப்போம்ல…
 
எனக்கும் அப்படி ஒண்ணு நடந்துச்சு. ஆனா நான் பயந்தது என் நிழலை பார்த்து இல்லை. அது என்னன்னு நாம வளையம் சுத்தி பார்ப்போம் வாங்க, அதாங்க பிளாஸ்பேக், வாங்க போவோம்…
 
நைட் படுக்க கொஞ்சம் லேட் ஆச்சு… சோ நான் காலையில் நல்லா தூங்கிட்டு இருந்தேன், அம்மணிக்கு தூக்கம் வரலை போல, சீக்கிரமே எழுந்திருக்கா…
 
வெளிய வேற மழை பெஞ்சு கிளைமேட் வேற சில்லுன்னு இருக்கு. கொஞ்சம் இருட்டாவும் இருக்கு ஆறு மணிக்கே.
 
கண்ணை திறக்க முடியலை எனக்கு, மெதுவா தூக்க கலக்கத்தோட கண்ணை திறந்தேன். எனக்கு எதிர்ல ஒரு உருவம் தலையை விரிச்சு போட்டுட்டு நிக்குது.
 
எனக்கு சுந்தர்சி படம் ஞாபகம் வந்திருச்சு. அரண்மனையில் ஹன்சிகா பேய் கூட இப்படி தானே தலை முடியை விரிச்சு போட்டு வரும்.
 
அதென்ன எல்லா படத்துலயும் பேய்ங்க தலையை விரிச்சு போட்டே வருது, கொஞ்சம் ஜடை போட்டு வந்தா தான் என்னவாம்…
 
சரி சரி நம்ம விஷயத்துக்கு வருவோம். எனக்கு அந்த உருவத்தை பார்க்கவும் திக்குன்னு இருக்கு. கண்ணையும் முழுசா திறக்க முடியலை. தூக்கம் வேற கண்ணு இழுக்குது.
 
இப்போ அந்த உருவம் ரெண்டு கையால அந்த முடியை ஒதுக்கிவிட்டு அம்மா… ஆஆஆஆ… நானே தாங்க கத்திட்டேன். எனக்கு முன்னாடி நின்னது வேற யாருமில்லை என் அருமை பொண்டாட்டிதான்.
 
தலைக்கு குளிச்சுட்டு தலை முடியை காய வைச்சுட்டு இருந்திருக்கா. அப்படியே எழுந்து உட்கார்ந்தேன். “என்னடி பண்ணிட்டு இருக்க??”
 
“என்ன கேக்குதியா??”
 
“முடியை விரிச்சுப்போட்டு என்ன செய்யறே??”
 
“காய வைச்சுட்டு இருக்கேன்…”
 
“நல்லா காய வைச்ச போ… ஏன் பின்னாடி போட்டா காயாதா. கொஞ்ச நேரத்துல எனக்கு பீதியை கிளப்பி விட்டுட்டியே…”
 
“அப்போ என்னைய பாத்தா உங்களுக்கு பேய் மாதிரி இருக்குன்னு சொல்லுதியலோ”
 
“தூங்கி எழுந்து ஒரு மனுஷன் இப்படி தலைவிரி கோலத்தை பார்த்தா வேற எப்படி தோணும்”
 
என்னைய முறைச்சா, ஆனாலும் என் பொண்டாட்டி முறைச்சா கூட ஒரு அழகு தாங்க… (தாமிரபரணில வெள்ளம் வந்தது போதாதா, கூவத்துல வேற வரணுமா, அப்புறம் ஊரே நாறிரும் பார்த்துக்க)
 
என் பொண்டாட்டியை பேய் படத்துல நடிக்க வைக்கலாம், விக் வைக்காமலே இவளுக்கு முடி நீளமா இருக்கு. முன்னாடி முடியை போட்டு இவளையே நடிக்க வைக்கலாம்…
 
ஆத்தி எனக்கு ஏன் இப்படி யோசனை தோணுது, இது மட்டும் அவளுக்கு தெரிஞ்சுது அவ்வளவு தான். எனக்கு ஒரு பெரிய கிளாஸ் எடுப்பா இதுக்கு…
 
பிளைட்ல ஏதோ அனவுன்ஸ்மென்ட் கொடுக்கறாங்க… இன்னும் அரை மணி நேரத்துல சென்னை ரீச் ஆகிடலாம்ன்னு சொல்றாங்க…
 
இன்னும் அரைமணி நேரமிருக்கா, வேற எதாச்சும் ரொமான்டிக் சீன் எங்களுக்குள்ள நடந்தது ஞாபகப்படுத்தி பார்க்கறேன். எஸ் நினைவுக்கு வந்திடுச்சு. மறுபடியும் வளையம் சுத்தலாம் வாங்க…
 
மதியம் சாப்பிட்டு கொஞ்சம் நேரம் படுக்கலாம்ன்னு ரூமுக்கு வந்தோம். அவளுக்கு எப்பவும் மதியம் தூங்கற பழக்கம் இல்லை. நான் தூங்கினா என்னை டிஸ்டர்ப் பண்ண மாட்டா.
 
எங்க டிரெஸ் எல்லாம் எடுத்து நீட்டா மடிச்சு வைப்பா, இப்படி எதாச்சும் ஒரு வேலை பார்ப்பா, இல்லையா பால்கனியில போய் நின்னு வெளிய வேடிக்கை பார்த்திட்டு இருப்பா.
 
எங்க ரூம்ல ரெண்டு பால்கனி இருக்கு. ஒண்ணு ரோட்டை பார்த்து இருக்கும். இன்னொன்னு பிளாட் பார்த்த மாதிரி இருக்கும்.
 
இவ எப்பவும் ரோட்டை பார்த்து இருக்கற பால்கனிக்கு தான் போய்டுவா… பாருங்க நான் கதை சொல்ல வந்திட்டு என்னென்னவோ சொல்லிட்டு இருக்கேன்.
அன்னைக்கு அவ எங்கயும் போகலை. என் பக்கத்துல வந்து உட்கார்ந்திட்டா. இது நடந்தது பத்து நாளைக்கு முன்னாடி தான்.
 
“ஏங்க??”
 
“என்னங்கன்னு…” நான் அவ பாணியிலயே பதில் சொன்னேன்.
 
“நீங்க கப்பல்ல போவீயல்ல, உங்களுக்கு போரடிக்காதா??”
 
“எதுக்காக போரடிக்கணும், வேலை பார்க்கறது போரடிக்குமா என்ன??”
 
“நா வேலை பாக்கறது பத்தி கேக்கலை. அங்கன யாரும் இருக்க மாட்டாவ, சுத்தி தண்ணியா இருக்கும். நினைச்சா புதுசா ஒரு ஆளையும் பாக்க முடியாது. எப்படி அங்கன வேலை செய்திய”
 
“எனக்கு பிடிச்சிருக்கு”
 
“எப்படி உங்களுக்கு பிடிச்சுது??”
 
“உனக்கு தாமிரபரணி ஆறு பிடிக்குமா??”
 
“இதென்ன கேள்வின்னு கேக்குதிய, எனக்கு ரொம்ப பிடிக்கும்…”
 
“ஒரு நாளெல்லாம் அங்கவே இருந்து குளிக்கணும்ன்னா கூட குளிப்பியா…”
 
“கண்டிப்பா…”
 
“எனக்கும் அப்படி தான் என்னோட வேலை ரொம்ப பிடிக்கும். சுத்தி தண்ணி அதுக்குள்ள நீந்துற மாதிரியா உணர்வு தான் இதுவும்”
 
“என்ன சொல்லுதியன்னு எனக்கு விளங்கலை??”
 
“வா…”
 
“எங்க கூப்புடுதிய??”
 
“வா சொல்றேன்…”
 
ஹோம் தியேட்டர் இருக்க ரூம்க்கு கூட்டிட்டு போனேன். பெரிய ஸ்க்ரீன் உண்டு அங்க, ரூம்ல இருந்த ஸ்லைட் எல்லாம் இழுத்துவிட்டு டார்க் பண்ணேன் அந்த ரூமை.
 
“அச்சோ என்ன செய்திய”
 
“பேசாம இரு. அதெல்லாம் இங்க செய்ய மாட்டேன், நம்ம ரூம்ல தான்…”
 
“உங்களை…” என்றவள் என் கையில் கிள்ளி வைத்தாள். அதெல்லாம் எனக்கு தூசு மாதிரி தட்டிவிட்டு பென் டிரைவ் அதுல போட்டு ரிமோட் எடுத்திட்டு வந்து அங்க இருந்த சோபால உட்கார்ந்தேன்.
என் பக்கத்துல உட்கார போனவளை இழுத்து என் மடியில உட்கார வைச்சுக்கிட்டேன்.
 
“விடுங்க…” என்று நழுவ பார்த்தாள்.
 
“இங்கவே இரு…”
 
ரிமோட்ல நான் தேடிட்டு இருந்தேன். எஸ் இதோ கிடைச்சிருச்சு…
 
“என்ன படம் காட்டுதிய எனக்கு??”
 
“ஆமாமா நான் படம் காட்டுறேன் ஏன்டி என்னை பார்த்தா உனக்கு எப்படி தெரியது…”
 
“அப்போ என்ன செய்தீயன்னு சொன்னா தானே எனக்கு விளங்கும்…”
 
“கடல் போரடிக்காதான்னு கேட்டல்ல. இந்த வீடியோ பாரு…” சொல்லிவிட்டு அதை பிளே செய்தேன்.
 
“வெயிட் வெயிட்…” என்று அருகில் இருந்த மேஜை இழுப்பறையில் இருந்து 3D கண்ணாடியை எடுத்தேன்.
 
“இதை போட்டுக்கோ…”
 
“இது மை டியர் குட்டிச்சாத்தான் படம் பாக்கறதுக்கு கொடுப்பாவளோ அது தானே…”
 
‘இவளோட அறிவுல தீயை வைக்க, நான் என்ன பீல்ல கொடுக்கறேன். இவ என்ன பீல்ல சொல்றா பாருங்க… ஆரவ் இவ அடங்கவே மாட்டாடா…’
 
“அது மாதிரி தான் போட்டுக்கோ…” சிரிச்சுட்டே சொன்னேன் (வேற வழி)
 
“நா இங்கன உட்காருதென, உங்களுக்கு மறைக்கும்லா”
 
அவளை முறைச்சிட்டே நானே அவளை என் பக்கத்துல இறக்கி உட்கார வைச்சேன். ஒருத்தனை எங்காச்சும் ரொமான்ட்டிக்கா பீல் பண்ண வைக்குறாளான்னு முணுமுணுத்துட்டே நானும் பார்க்க ஆரம்பிச்சேன்.
 
அது ஒரு ஷிப்ல இருந்து எடுத்த வியூ சுத்தி தண்ணி. நீலவானம் மாதிரி இது நீலக்கடல்…
 
கப்பலோட விளிம்புல நின்னுட்டு மெதுவா கேமரா திருப்பி திருப்பி எடுத்தது. கண்ணுக்கெட்டின தூரம் வரை கரையே பார்க்க முடியாது.
 
திடீர்ன்னு ஒரு இடத்துல பெரிய டால்பின் ஒண்ணு துள்ளி குதிக்குது, அது குதிச்சது என்னமோ கடல்ல தான் இங்க பொண்டாட்டி குதிச்சிட்டு தவ்விட்டு வந்து என் மடி மேல உட்கார்ந்தா…
 
இதை தானே நான் அப்போவே சொன்னேன். “இது என்ன எனக்கு பயந்து வருது, ஆப் பண்ணுங்க, எனக்கு இதெல்லாம் வேணாம்…”
 
“ஹேய் அது கடல்ல தானே வருது. என்னமோ நீ நேர்ல பார்த்த மாதிரி…”
 
“இது யாரு எடுத்த வீடியோ”
 
“நான் எடுக்கலை…”
 
“நிசத்துகுமே அங்க இப்படிலாம் வருமா, அது வந்து கடிச்சிறாது. அந்த ஜாஸ் மூவில வருமே… எதுக்கு சிரிக்கிய??”

Advertisement