Advertisement

13
 
அவிய இன்னும் ரெண்டு நாளுல ஊருக்கு போறாவ. அவிய துணியை எல்லாம் எடுத்து வைச்சுட்டு இருக்காவ.
 
நா கட்டில்ல படுத்திட்டு அவியளை சோகமா பாத்துக்கிட்டு கிடக்கேன். அவிய என்னைய திரும்பி கூட பாக்கலை. பிசியா இருக்காவ.
 
எனக்கு அழுகை முட்டிக்கிட்டு வருது. அப்படியே தலவனையில முகத்தை புதைச்சுக்கிட்டேன்.
 
எவ்வளோ நேரமாச்சுன்னு நா கவனிக்கலை, என் முதுகுல ஒரு கை விழுந்துச்சு. அடிச்சி பிடிச்சி எழுந்தேன்.
 
பாத்தா இவிய தான் என் மேல கையை வைச்சிருக்காவ, கொஞ்ச நேரத்துல நா பயந்தே போயிட்டேன்.
 
“என்னாச்சுன்னு…” கேட்டாவ
 
“ஒண்ணுமில்லைன்னு…” சொன்னேன்.
 
“டல்லாயிருக்கியே??”
 
“நீங்க ஊருக்கு போறியல்ல”
 
“நான் ஊருக்கு போனா நீ கவலையா இருக்கணுமா…”
“அப்படியில்லை இந்த வீட்டில எனக்கு உங்களை தான் தெரியும்…”
 
“பழக்கிக்கோ வள்ளிக்கண்ணு… அம்மா, அப்பா, தம்பி எல்லார்கூடவும் பேசு. அவங்க எல்லாரும் எனக்கு மட்டுமில்லை உனக்கும் இனி உறவு தானே…”
 
‘அப்போ ஊர்ல எங்கம்மா அப்பாவை இவிய பழக்கிக்கலாம் தானே. அன்னைக்கு ஏன் அப்படி சொன்னாவ, உன்னைய மட்டும் தான் எனக்கு தெரியும்ன்னு…’ நினைச்சேன்.
 
“நான் இல்லாத நேரத்துல நீ இவங்களோட தான் இருக்கப் போறே… அதுக்காக தான் சொன்னேன்… நான் ஊர்ல பேசினது வேற அப்போ நமக்கு கல்யாணம் ஆகி ஒரு நாள் தான் ஆகி இருந்துச்சு…”
 
“இப்போ அப்படியில்லை, நமக்கு கல்யாணம் ஆகி ஒரு மாசத்துக்கும் மேல ஓடிப்போச்சு… எல்லார் கூடவும் நீ பழகணும் வள்ளிக்கண்ணு…”
 
“ஹ்ம்ம்…”
 
‘என் மனசுல நா என்ன நினைச்சேன்னு கண்டுப்பிடிச்சிட்டாவ போல அதுக்கு உடனே பதில் சொல்லுதாவ…’
 
“வள்ளிக்கண்ணு…” மறுபடியும் கூப்பிட்டாவ, அவியளோட குரல் இதுவரைக்கும் இப்படி இருந்தேயில்லை.
“சொல்லுங்கன்னு…” சொல்லி அவியளை பார்த்தேன். என்னையவே பாத்திட்டு இருந்தாவ.
 
அவியளோட ஒரு விரலால என் முகத்துல கோலம் போட்டாவ. உள்ளுக்குள்ள படபடப்பா வந்துச்சு எனக்கு.
 
“எதுக்கு உனக்கு இப்படி ஜில்லுன்னு ஆகுதுன்னு…” கேக்காவ.
 
இவிய இப்படி தொட்டா எனக்கு வேற என்னாகுமாம்…
 
“இந்த மச்சம் உனக்கு ரொம்ப அழகா இருக்குன்னு…” சொன்னாவ.
 
நானும் கண்ணாடியில பாத்துருக்கேன், ஆனா இன்னைக்கு தான் இவிய சொல்லவும் தான் உள்ளுக்குள்ள என்னென்னவோ பண்ணுது. கண்ணாடியில போய் பாக்கணும் போல தோணிச்சு அந்த மச்சத்தை.
 
“வள்ளிக்கண்ணு…” எதுக்கு எப்படி குழையுதாவ.
 
என்ன தான் வேணுமாம், அதை சொல்லலாம்ல, இவிய பேசுறதே எனக்கு என்னவோ செய்யுதுலா.
 
அவியளோட  விரல் இப்போ புருவத்துல இருந்து இறங்கி என் மூக்குகிட்ட வந்துச்சு, மெதுவா இன்னமும் கீழே இறக்கினாவ எனக்கு கை காலெல்லாம் சில்லுன்னு ஆகிட்டு, ஆனா மேலுக்கு முடியாத மாதிரி காச்சலடிக்கு.
நா எச்சி கூட்டி விழுங்குனேன், அவியளை என்னால பாக்கவே முடியலை, தலையை குனிஞ்சுட்டேன்.
 
அவிய இப்போ இன்னும் நெருங்கி வந்தாவ, குனிஞ்சு என் நெத்தியில் முத்தம் கொடுத்தாவ, நா அப்படியே அவிய நெஞ்சுல சாஞ்ச்சுட்டேன்.
 
“வள்ளிக்கண்ணு உனக்கு நான் உன் பக்கத்துல இருக்கறதுக்கு கஷ்டமா இருக்கான்னு…” கேட்டாவ.
 
அவிய மேல சாஞ்சுட்டே தலையை இல்லைன்னு ஆட்டினேன்.
 
“என்னைய பார்த்து சொல்லு, நம்ம வாழ்க்கையை தொடங்கலாமான்னு…” கேட்டாவ.
 
எனக்கு என்ன பதில் சொல்லன்னே தெரியலை. பேசாம இருந்தேன்.
 
“பதில் பேசாம இருந்தா என்ன அர்த்தம்ன்னு…” கேட்டாவ.
 
எனக்கு இப்பவும் பதில் சொல்லத் தோணலை. அவியளுக்கு என்ன தோணிச்சோ, என்னைய தள்ளி நிறுத்திட்டு எழுந்து போயிட்டாவ.
 
அவிய என்ன சொல்ல வாறவன்னு புரியாத ஆளெல்லாம் இல்லை நானு. என்னவோ ஒரு கூச்சம் அவியகிட்ட வாயை திறந்து சரின்னு சொல்ல வரலை, ஆனா எதையும் நான் வேணாம்ன்னும் நினைக்கலை.
அவிய அங்க இருந்த பால்கனியில போய் நின்னுட்டாவ. கோவிச்சிருப்பாவளோ, நா பதில் பேசாததுனால. பயந்து வருது…
 
எனக்கு பொசுக்குன்னு இருக்கு இப்போ, என்ன சொல்லுவாவளோன்னு எழுந்து போனேன். பால்கனி கதவு திறந்து தான் இருந்துச்சு. அவிய பக்கத்துல போய் நின்னேன்.
 
நா வந்தது அவியளுக்கு தெரிஞ்சும் என்னைய திரும்பி கூட பாக்கலை. எனக்கு இப்போ தான் அழணும்ன்னு வருது.
 
“கோவமான்னு…” கேட்டேன்.
 
மெதுவா திரும்பி பார்த்தாவ சிரிச்சுட்டே இல்லைன்னு சொன்னாவ.
 
“ஆனாலும் நீ பதில் சொல்லியிருக்கலாம்ன்னு…” சொன்னாவ.
 
“எதுவுமே சொல்லாம இருந்தா எனக்கு என்ன நினைக்க தோணும். அதான் உன்னை கஷ்டப்படுத்த வேணாம்ன்னு எழுந்து வந்திட்டேன்னு…” சொன்னாவ.
 
எனக்கு அவியளுக்கு பதில் சொல்லணும்ன்னு ஒரு வேகம் வந்திச்சு. “நா உங்களுக்கு எந்த பதிலும் சொல்லலைன்னா நீங்க சம்மதம்ன்னு எடுத்துக்க மாட்டீயளான்னு…” சொன்னேன்.
 
என்னையவே பார்த்தாவ சட்டுன்னு என் இடுப்புல கைக்கொடுத்து அவியளை முட்டுற அளவுக்கு பக்கத்துல கொண்டு வந்தாவ. அவ்வளவு நெருக்கமா அவியளை கட்டிட்டு நிக்க எனக்கு வெக்கமா வந்துச்சு.
 
இடுப்புல குறுகுறுன்னு இருக்கு, இவிய கையை எடுக்கலாம்ன்னு தோணிச்சு, எடுக்க வேணாம்ன்னு தோணிச்சு…
 
இப்போ ரெண்டு கையால என்னைய அணைச்சு பிடிச்சாவ, என் வாய் தன்னை போல “இது பால்கனி, எல்லாரும் பாப்பாவன்னு…” சொன்னேன்.
 
என் காதுகிட்ட வந்து “என் பொண்டாட்டியை தானே நான் கட்டிப்பிடிக்கேன் உங்களுக்கு என்ன வந்துச்சுன்னு கேட்பேன்னு…” சொல்லுதாவ.
 
அய்யோ எனக்கு வெக்கம் பிடிங்கி திங்கு… இவிய என்ன இப்படிலாம் பேசுதாவன்னு. நா நெளிஞ்சுட்டே நிக்கேன்.
 
என்னைய பார்த்தாவ, என்ன தோணிச்சோ “சரி வா உள்ள போவோம்ன்னு…” சொன்னாவ.
 
அப்பவும் என்னைய அணைச்சாப்புல தான் கூட்டிட்டு போனாவ. அன்னைக்கு நைட் முழுக்க என்னைய தூங்கவிடலை அவிய. காலையில நா பாட்டுக்கு தூங்கிட்டு இருக்கேன். மெதுவா கண்ணு முழிச்சு பாக்கேன், மணி எட்டாகிப் போச்சு. இவிய பக்கத்துல தான் படுத்திருக்காவ.
மணியாகி போச்சேன்னு நா எழ இவிய என்னைய பிடிச்சு இழுக்காவ, ஆளை விடுங்கன்னு சொல்லிட்டு குளிக்க போயிட்டேன்.
 
வெளிய வந்தா இவிய எழுந்து உட்கார்ந்திருக்காவ, “என்னங்க…”
 
“சொல்லு வள்ளிக்கண்ணு…”
 
“சேலை மாத்தணும்…”
 
“மாத்து…”
 
“நீங்க இங்க இருந்தா நா எப்படி மாத்துறதாம்…” அதை சொல்லும் போது எனக்கு அபத்தமா தான் தோணுச்சு. அவிய என்ன சொல்வாவளோன்னு யோசிச்சுட்டே அவியளை பார்த்தேன்.
 
“இங்க தான் மாத்தணும்…”
 
“இல்லை…”
 
“நீ ரொம்ப பண்ணேன்னு வை, நைட் ஷோ மார்னிங் ஷோவா மாத்திடுவேன் பரவாயில்லையான்னு சொல்லி என் பக்கத்துல வந்துட்டாவ”
 
“வேணாம் வேணாம் சாமி. ஏற்கனவே இன்னைக்கு எழுந்ததே லேட்டு. அதெல்லாம் நைட் மட்டும் தான்…”
 
“எதெல்லாம்??”
இவிய ஏன் இப்படி பேசுதாவ எனக்கு காது கூசுது வெக்க வெக்கமா வருது.
 
அவிய ஊருக்கு கிளம்பிட்டாவ, மனசே பாரமா இருக்கு. அவியளும் கிளம்ப மனசேயில்லாம தான் கிளம்பினாவ. அந்த ரூம்ல என்னால தூங்கவே முடியலை.
 
எம்புட்டு நாளு நா தனியா உறங்கியிருக்கேன் எங்க வீட்டில, இன்னைக்கு அவிய பக்கத்துல இல்லாம எனக்கு உறக்கமே வரமாட்டேங்கு…
 
புரண்டு புரண்டு படுத்திட்டு கிடந்தேன், போன் அடிச்சுது எந்திச்சு பாத்தா வீடியோ காலு இவிய தான் போடுதாவ… நா அவியட்ட பேச போகுதேன்…
நான் இன்னும் ரெண்டு நாளுல விசாகப்பட்டினம் கிளம்பறேன். வேலை விஷயமா கொஞ்சம் பேப்பர்ஸ் சைன் பண்ண வேண்டி இருக்கு.
 
இந்த முறை நான் ஷிப்க்கு போனா வர்றதுக்கு ஒன்பது மாசம் போல ஆகிடும்ங்க. அன்னைக்கு என்ன வேலைன்னு அவ கேட்டப்போ ஆறு மாசம்ன்னு சொல்லியிருந்தேன்.
 
இப்போ போய் இந்த முறை ஒன்பது மாசம்ன்னு சொன்னா ரொம்ப பீல் பண்ணுவாளேன்னு நான் சொல்லலை. அவகிட்ட இப்போதான் ரெண்டு நாளுல ஊருக்கு கிளம்பறதா சொல்லிட்டு எனக்கு தேவையான டிரஸ்எல்லாம் எடுத்து வைச்சுட்டு இருக்கேன்.
 
அம்மணி கட்டில போய் படுத்தவங்க தான். இப்படி அப்படி திரும்பலை, குப்புறடிச்சு படுத்திருக்கா, ஒரு வேலை தூங்கிட்டாலோன்னு யோசிச்சேன். பார்த்தா அப்படி தெரியலை.
 
ஒரு வழியா என்னோட பேக்கிங் எல்லாம் முடிச்சிட்டேன். அவளை பார்க்க இன்னும் அதே பொசிஷன்ல தான் படுத்திருக்கா, மெதுவா அவ பக்கத்துல போய் அவளைத் தொட்டேன்.
 
அவளோட ஜடை கட்டில்ல ஒரு பாம்பை போல நெளிஞ்சு கிடந்திச்சு. இதுல அப்படியே என்னை கட்டி வைச்சிருக்கான்னு தான் தோணுச்சு.
 
அவளோட இடுப்பு வேற கண்ணுல பட்டு என்னை உசுப்பேத்துது. இன்னைக்கு பார்த்து தான் எனக்கு ஹார்மோன் கன்னாபின்னான்னு வேலை செய்யணுமா…
 
கண்ட்ரோல் கண்ட்ரோல் பாவம் சின்னப் பொண்ணு பொறுமையா ஹாண்டில் பண்ணணும்ன்னு எனக்கு நானே சொல்லிக்கிட்டேன்.
 
அவளை எழுப்பி என்னாச்சுன்னு கேட்டா ஒண்ணும்மில்லை சொல்லிட்டா.
 
அப்புறம் ஏன் டல்லா இருக்கேன்னு கேட்டேன், நீங்க ஊருக்கு போறதுனாலன்னு சொன்னா. அப்போ அவ என்னை தேடுறான்னு தானே அர்த்தம். எனக்கு அதை கேட்டு சிலுசிலுன்னு இருந்துச்சு.
 
ஒரு பக்கம் அவளை நினைச்சும் கஷ்டமா இருந்துச்சு. நான் இல்லாத நேரத்துல நீ வீட்டில எல்லார்கூடவும் சேர்ந்து இரு, உனக்கு கஷ்டமாயிருக்காதுன்னு சொன்னேன்.
 
கொஞ்ச நாளாவே அவளுக்கும் அம்மாக்கும் ஏதோ பிரச்சனை ஓடுது. அடடா மாமியார் மருமகன்னா இப்படி தான் ஆகணுமான்னு இருந்துச்சு எனக்கு.
 
அவகிட்ட உங்கம்மா திட்டினா பொறுத்து போவ தானே அது போல போன்னு சொன்னேன். அம்மாகிட்ட எதுவும் சொல்லலை.
 
அவங்களும் என்கிட்ட அவளைப் பத்தி எந்த கம்பிளைன்ட் பண்ணலை. அப்படியே பண்ணாலும் நான் பேசியிருக்க மாட்டேன்.
 
குடும்பம்ன்னா சின்ன சின்ன உரசல்கள் இருக்கத்தானே செய்யும், அதை நாம எப்படி அணுகறோம் அப்படிங்கறதுல தானே இருக்கு வாழ்க்கையே!
 
அம்மா, பொண்டாட்டி ரெண்டு பேருமே எனக்கு முக்கியம். அவங்களுக்குள்ள சின்ன பிணக்குன்னா அது எனக்கு தான் கஷ்டமாயிருக்கும்.
 
தேவைப்பட்டா நான் தலையிட்டுக்கலாம்ன்னு தான் நான் பேசாம விலகி இருக்கேன். வள்ளிக்கண்ணு பேசுறது கொஞ்சம் சிறுப்பிள்ளைத்தனமா இருந்துச்சு எனக்கு.
 
சின்ன பொண்ணு தான் அட்வைஸ் பண்ணா பிடிக்கலை போல, அதான் இப்படி பண்றான்னு நினைச்சேன். சரி அந்த கதையை விடுவோம், இப்போ நம்ம கதைக்கு வருவோம்.
 
நான் வந்து அவளை எழுப்பவுமே அவ எழுந்து உட்கார்ந்திட்டா, நான் இப்போ அவளையே தான் பார்த்திட்டு இருக்கேன்.
 
அவளோட அந்த மச்சம் என்னை தொட்டுப் பார்க்க சொல்லி டிஸ்டர்ப் பண்ணிட்டே இருந்துச்சு.
 
வள்ளிக்கண்ணுன்னு கூப்பிட்டேன். எனக்கே தெரியுது நான் கூப்பிட்ட டோனே வேறன்னு. என்னையறியாம அப்படி வந்திடுச்சு.
 
எனக்கு இன்னைக்கு பொறுமையா இருக்க முடியும்ன்னு தோணலை. கை வேற பரபரன்னு இருக்கு அந்த மச்சத்தை தொடச்சொல்லி.
 
ஒரு விரலால அதை தொட்டுப் பார்த்தேன். ரொம்ப அழகா இருக்கு இந்த மச்சம் உனக்குன்னு சொன்னேன். அவ நான் இப்படியெல்லாம் பேசுவேன்னு நினைச்சிருக்க மாட்டா போல.
 
உடம்பெல்லாம் கொஞ்சம் நடுக்கம் தெரிஞ்சுது அவகிட்ட, ஜில்லுன்னு இருந்துச்சு அவ கை. ஏன்னா அவளோட கை என் கையோட இறுக்கி இருக்கேன் அதனால தான் தெரிஞ்சுது.
 
ஏன் இப்படி இருக்குன்னு கேட்டா தெரியலைன்னு சொன்னா. என்னோட விரல் இன்னமும் அவ முகத்தை விட்டு இறங்கலை. புருவத்தை தாண்டி அவளோட முகவடிவை விரலால கோலம் போட்டுட்டே அளந்தேன்.
 
அவளோட மூக்கு அடுத்து அவளோட உதட்டை அளவெடுத்தேன். அவ சட்டுன்னு என் மேல சாஞ்சுட்டா, எனக்கு அதுவே பெரிய சம்மதமா தோணுச்சு.
 
நான் உன் பக்கத்துல வந்தா கஷ்டமா இருக்கா உனக்குன்னு கேட்டேன். என் மேல சாஞ்சுட்டே இல்லைன்னு சொன்னா…
 
நம்ம வாழ்க்கையை இன்னைக்கே தொடங்கலாமான்னு கேட்டுட்டேன். அவகிட்ட இருந்து பதிலே இல்லை திரும்பவும் கேட்டேன், அப்பவும் ஒண்ணும் சொல்லலை. சரி பிடிக்கலை போலன்னு அவளை விலகிட்டு எழுந்து வெளியே போயிட்டேன்.
 
கொஞ்சம் ஏமாற்றமா தான் இருந்துச்சு. என்னை நானே கண்ட்ரோல் பண்ணிக்கவும் என்னோட ஏமாற்றத்தை சரி பண்ணிக்கவும் தான் எழுந்து வெளியே போயிட்டேன்.
 
வீட்டு பால்கனி கதவை திறந்து அங்க போயிட்டேன். எனக்கு மட்டும் இஷ்டமிருந்து என்ன செய்ய ரெண்டு பேருக்குமே இஷ்டமிருந்தா தானே நல்லது.
 
அதனால தான் அவளோட அமைதியை நான் அவளுக்கு பிடிக்கலைன்னு எடுத்துக்கிட்டேன்.
ஆனா என்னோட எண்ணம் தப்புங்கற மாதிரி இருந்துச்சு அவளும் பின்னாடியே வந்து நின்னப்போ. எதுவா இருந்தாலும் அவளா பேசட்டும்ன்னு நான் பேசாம இருந்தேன்.
 
கோவமா இருக்கீங்களான்னு கேட்டா, இல்லைன்னு சொன்னேன்.
 
ஆனாலும் எனக்கு கொஞ்சம் மனத்தாங்கல் தான் அவ வாய் திறந்து பதில் சொல்லியிருக்கலாம்ன்னு அதை அப்படியே அவகிட்ட கேட்டேன், நீ சொல்லியிருக்கலாம்ன்னு…
 
பதில் சொல்லலைன்னா சம்மதம்ன்னு கூட எடுத்துக்கலாமேன்னு சொன்னா. அவளோட இந்த பதில் எனக்கு அவ்வளவு சந்தோசத்தை கொடுத்துச்சு.
 
என்னை அவ முழுசா ஏத்துக்கிட்டான்னு அவளோட பதில்ல தெரிஞ்சுக்கிட்டேன். அப்படியே அவளை என் பக்கமா இழுத்தேன்.
 
கொஞ்ச நேரம் முன்னாடி பக்கத்து பக்கத்துல உட்கார்ந்து இருந்தாலும் இவ்வளவு நெருக்கமில்லை. அவளையே பார்த்திட்டு இருந்தேன்.
 
பால்கனி எல்லாரும் பார்ப்பாங்கன்னு சொன்னா, என் பொண்டாட்டியை நான் கட்டிப்பிடிக்கறேன் யாரு என்ன சொல்வான்னு நான் கேக்க அவளுக்கு முகமே சிவந்து போச்சு.
 
அவளோட வெட்கம் எனக்கு பிடிச்சுது, அவளை ரொம்ப தவிக்க விடாம உள்ள கூட்டிட்டு போயிட்டேன். அப்புறம் என்னங்க எல்லார் மாதிரியும் நாங்களும் எங்களோட இல்லறத்தை தொடங்கினோம்.
 
காலையில இவளோட பெரிய இம்சைங்க ஒரு புடவை கட்ட ஓவர் அலப்பறை. நான் வெளிய போகணுமாம், இதெல்லாம் ஓவரா தெரியலை அவளுக்கு.
 
நான் போக மாட்டேன்னு சொல்லிட்டேன், ஏதோ இவ்வளோ நாள் நான் பொறுமையா இருந்ததே பெரிசு தானேங்க. அதும் நேத்து நைட்டுக்கு அப்புறம் இவ எப்படி அப்படி சொல்லலாம்.
 
நீ ரொம்ப பண்ணா நைட் ஷோ மேட்னி ஷோவாகிடும்ன்னு சொல்லவும் அவசர அவசரமா எனக்கு முதுகுகாட்டி நின்னுட்டு சேலையை கட்டிட்டு ஓடிட்டா.
 
நான் ட்ரைன்ல போயிட்டு இருக்கேன். எனக்குமே ஊருக்கு கிளம்ப மனசேயில்லை. அதும் அவ முகத்தை அப்படி வைச்சுட்டு இருக்கும் போது சுத்தம் முடியலை என்னால.
 
ஆனாலும் நான் கிளம்பியாகணும்ல, அதான் கிளம்பிட்டேன். என்னோட பர்த்ல ஏறி படுத்திட்டேன். பர்ஸ்ட் கிளாஸ்ல தான் டிக்கெட் போட்டிருந்தேன். சோ போன முறை வந்தது திருநெல்வேலில இருந்து சென்னை வந்தது ஞாபகம் வந்திச்சு,
 
இப்போ என்ன பண்ணிட்டு இருக்காளோன்னு நினைச்சுட்டு இருந்தேன். பேசாம அவளுக்கு போன் பண்ணிட்டா என்னன்னு போன்ல சிக்னல் இருக்கான்னு பார்த்தேன்.
 
நல்ல வேலையா சிக்னல் இருந்துச்சு. இங்க நியர் பை ஏதோ ஸ்டேஷன் ரீச் ஆகப் போகுதுன்னு நினைக்கிறேன். இல்லன்னா மூவிங்ல சிக்னல் ட்ராப் ஆகுமே!!
 
நெட் ஆன் பண்ணி வீடியோ கால் போட்டேன், உடனே எடுத்திட்டா, தூங்காம முழிச்சுட்டு இருந்திருப்பா போல. கொஞ்சம் நேரம் அவகிட்ட பேசிட்டு வைச்சுட்டேன்.
 
வந்த வேலை நாலு நாள்லையே முடிஞ்சது. ஒரு வாரம் ஆகும்ன்னு நினைச்சேன், எனக்கும் திருப்தியா வேலை முடிஞ்சது, பேப்பர்ஸ் எல்லாம் படிச்சு சைன் பண்ணிட்டேன்.
 
அவளுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கணும்ன்னு நான் ஊருக்கு வந்திட்டு இருக்கேன்னு சொல்லலை. போய் தான் பார்க்கணும் அவ எப்படி ரியாக்ட் பண்ணுவான்னு…

Advertisement