Advertisement

12
 
நான் இங்க இருக்க கொஞ்ச நாள் அவளை நல்லா புரிஞ்சுக்கணும்ன்னு விரும்பினேங்க. சோ அவளை கூட்டிட்டு தினமும் ஊர் சுத்தினேன். பெரும்பாலான நேரத்தை அவளோட கழிச்சேன்.
 
இன்னைக்கு நாங்க மகாபலிபுரம் போறோம்ங்க… நேத்து நைட்டே அவகிட்ட சொல்லிட்டேன், காலையில கிளம்பணும்ன்னு பாருங்க அம்மணி இன்னும் தூங்கிட்டு இருக்கா…
 
அவளை போய் எழுப்பப் போறேன் இப்போ… “வள்ளிக்கண்ணு… வள்ளிக்கண்ணு…”
 
“ஹ்ம்ம்…”
 
“எழுந்திரு…”
 
“எதுக்குங்கேன்??”
 
“இன்னைக்கு வெளிய போகலாம்ன்னு சொன்னேன்ல…”
 
“நா தான் அந்த இடம் பாத்திட்டேன்னு சொன்னம்லா”
 
“பார்த்த இடமா இருந்தா என்ன, என்னோட பார்க்க வரமாட்டியா…”
 
மெதுவாய் கண் விழித்தாள். “சரி போவோம்” என்றவள் எழ முயற்சி செய்தாள்.
நான் அவளை எழுப்ப போனவன் அவளுக்கு ரெண்டு பக்கமும் கையை வைச்சு அவளை அணைச்சா போல இருந்தேன்.
 
அப்போ தான் மறுபடியும் என்னை பார்த்தா, கொஞ்ச நேரத்துல அந்த கண்ணுல என்னென்ன வித்தையெல்லாம் காட்டுறா தெரியுங்களா… அப்படியே அசந்து போயிட்டேன் போங்க…
 
நான் கையை எடுக்கணுமாம் அதை கண்ணுலவே எனக்கு கம்யூனிகேட் பண்ணுறா… அது பார்க்கவே அவ்வளவு அழகா இருந்துச்சு.
 
நான் சும்மாயில்லாம நீ சொல்றது எனக்கு புரியலைன்னு பதிலுக்கு கண்ணசைக்க பொய் சொல்றீங்க அப்படிங்கற மாதிரி பார்க்கறா.
 
அவ்வளவு கிளோசா அவளை பார்த்திட்டே இருந்தனா, டேய் ஆரவ் ஒரு கிஸ்ஸை போட்டிறான்னு என்னோட மைன்ட் வந்து என்னை ரொம்ப டிஸ்டர்ப் பண்ணுச்சு…
 
நான் எப்பவுமே என்னோட எமோஷன்ஷை மைன்ட் வைச்சு தான் கண்ட்ரோல் பண்ணுவேன். இன்னைக்கு என்னடான்னா அது என் கண்ட்ரோல்லவே இல்லை.
 
துணிஞ்சு அவளை நெருங்கிட்டேன். அவளுக்கு என்னோட நெருக்கம் புரிஞ்சிடுச்சு போல சட்டுன்னு கண்ணை மூடிட்டா எனக்கு நெருக்கத்துல இருந்தது அவளோட உதடும் கன்னமும்.
 
ஆரம்பமே அவளை கஷ்டப்படுத்தக் கூடாதுன்னு அவளோட கன்னத்துல என்னோட முதல் முத்திரையை பதிச்சேன்.
 
நான் இப்போ எழுந்திட்டேன் அவ இன்னமும் அதே பொசிஷன்லவே படுத்திருக்கா கண்ணை திறக்காம…
 
“வள்ளிக்கண்ணு எழுந்திரு உன்னை எவ்வளவு நேரமா எழுப்பறதுன்னு…” சொன்னேன்.
 
அவ முழிச்சு அங்கிட்டும் இங்கிட்டும் பார்த்தா. அப்புறம் என்னையும் பார்த்தா அவ இதை கனவுன்னு நினைச்சுட்டா போல, கண்ணை கசக்கிட்டு எழுந்தா.
 
“என்னாச்சு வள்ளிக்கண்ணு??”
 
“இல்ல வந்துன்னு…” இழுத்தா.
 
“மணியாச்சும்மா நாம கிளம்பணும்ன்னு…” சொன்னேன்.
 
“ஹம்ம்ன்னு…” அரைகுறை மனசோட குளிக்கப் போனா.
 
பாவங்க நான் நிஜமா கிசா பண்ணேனா இல்லையான்னு அவளுக்கு குழப்பம் போல.
 
அவ கிளம்பி வரவும் நாங்க சாப்பிட்டு வீட்டில சொல்லிட்டு வெளிய கிளம்பினோம்.
 
“ஏங்க இன்னும் எம்புட்டு நேரமாவும்??”
 
“ஏன்??”
 
“வண்டி பாட்டுக்கு போய்க்கிட்டே இருக்கே, இன்னும் நீங்க சொன்ன இடம் வல்லையே…”
 
“அது கொஞ்சம் சிட்டில இருந்து தூரம்மா அவ்வளவு நேரம் ஆகும் தான்…”
 
“நா தான் எப்பவோ அங்கன போய்வந்தேன்னு சொன்னேன் நீங்க கேக்கலை… வேற எங்கனாச்சும் போய் இருக்கலாம்ன்னு…” சொன்னா.
 
அவளுக்கு நான் ஏன் அவளை அங்க கூட்டிட்டு போறேன்னு சொன்னா புரியாதுங்க… சிவகாமியின் சபதம்ல நான் ரசிச்சு ரசிச்சு படிச்சேங்க அந்த இடத்தை எல்லாம்.
 
எனக்கு மகாபலிபுரம் போறதுன்னா அவ்வளவு இஷ்டம். இப்போ அங்க அதை சரியா மெயின்டெயின் பண்ணலைன்னு எனக்கு அவ்வளவு வருத்தமிருக்கு.
 
எனக்கு என்ன ஆசைன்னா எனக்கு பிடிச்சவளோட நான் அந்த இடத்தை ரசிக்கணும்ன்னு தான். ஆனா அங்க போய் அவ எனக்கு கொடுத்த பல்புல உனக்கு இது தேவையான்னு என்னை நானே திட்டிக்கிட்டேங்க…
 
ஒரு வழியா மகாபலிபுரம் வந்து சேர்ந்தோம். அதுக்குள்ள அவ அவ்வளவு சோர்ந்து போய்ட்டா, என்ன தான் சீட்ல சாய்ஞ்சு உட்கார்ந்திட்டு வந்தாலும் ரொம்ப நேரமா ஒரே பொசிஷன்ல உட்கார்ந்திட்டு வந்தது ரெண்டு பேருக்குமே இடுப்பு வலியை கொஞ்சம் கொடுத்திச்சு.
 
நான் தான் காரை ஓட்டினேன். அவளை சீட்ல நல்லா பின்னாடி சாஞ்சுக்க சொல்லி சொன்னா அவ கேட்கலை.
 
வண்டியை பார்கிங்ல நிறுத்திட்டு உள்ளே போறதுக்கு டிக்கெட் வாங்கினேன்.
 
“ஜூஸ் குடிக்கறியம்மா??”
 
“ஹ்ம்ம்ன்னு…” சொன்னா.
 
பிரெஷ் ஜூஸ் வாங்கினேன், ரெண்டு பேரும் குடிச்சதும் தான் கொஞ்சம் தெம்பா பீலாச்சு.
 
“சரி வான்னு…” சொல்லி அவ கையோட கை கோர்த்துக்கிட்டேன்.
 
கொஞ்ச நேரத்துக்கு என்னை நான் நரசிம்ம பல்லவராவும் அவளை சிவகாமியாவும் நினைச்சுக்கிட்டேன்.
 
என்ன பீல்டா அது… அப்படியே கண்ணை மூடிட்டே நடந்தேன்.
 
“ஏங்க… ஏங்கன்னு…” இவளோட குரல் கேட்டுச்சு உடனே அவ என் கையை பிடிச்சு இழுத்ததும் தான் நான் கண்ணை திறந்தேன்.
“என்னாச்சு உங்களுக்கு, எங்கிட்டு பாத்து போவிய”
 
“என்னாச்சு கனா காங்கியல”
 
“சாரி வள்ளிக்கண்ணு…”
 
“வாங்க போவோம்…”
 
ஒவ்வொரு இடமா சுத்தி சுத்தி வந்தோம். “இதெல்லாம் பார்த்தா உனக்கு என்ன தோணுதுன்னு…” ஆசையோட கேட்டேன்.
 
“இங்க வந்திருக்க கூடாதுன்னு தோணுதுன்னு…” சொல்லி பல்பு கொடுத்தா.
 
“ஏன் வள்ளிக்கண்ணு உனக்கு இந்த இடம் பிடிக்கலையா??”
 
“வெறும் மொட்டப்பாறையாவுல்ல இருக்கு. வெயில் எப்படி அடிக்கி இங்க, எப்படி தான் வாரவளோ இங்கன… ஸ்கூல் படிக்கும் போது வந்தது ஒரு வட்டம் அப்போவே ஏன் வந்தேன் இருந்துச்சுன்னு…” சொன்னா.
 
“இது என்ன இடம்ன்னு தெரியுமா, இது எந்த செஞ்சுரில கட்டினதுன்னு தெரியுமா உனக்குன்னு…” கேட்டேன்.
 
“நா ஹிஸ்டரில கொஞ்சம் வீக்குன்னு” சொன்னா.
 
ஒரு மனுஷன் எம்புட்டு தான் பல்பு வாங்குறதுன்னு இல்லையா…
“இது நரசிம்ம பல்லவர் காலத்துல கட்டினதுன்னு” சொன்னேன்.
 
“நீ சிவகாமியின் சபதம் படிச்சிருக்கியான்னு” கேட்டேன்.
 
“என் பள்ளிக்கூடத்து பாடம் படிக்கவே எனக்கு பிடிக்காதுங்கேன், இதுல இதெல்லாம் எங்க நான் படிக்க”
 
டோடல் டேமேஜ்டா ஆரவ் நீ… எனக்கு நானே சொல்லிக்கிட்டேன்.
 
சரி நீ படிக்கலைன்னா போயிட்டு போகுதுன்னு நா ஒவ்வொரு இடத்தையும் காட்டி காட்டி அவளுக்கு விளக்கி சொல்லிட்டு இருந்தேன்.
 
கூடவே அந்த கதையையும் பத்தி சொல்லிட்டே வந்தேன்.
 
“அவிய ரெண்டு பேரும் தான் சேராம போய்ட்டாவளே, அப்புறம் இது அவிய நடமாடுன இடம்ன்னு என்னைய கூட்டிட்டு வந்து காட்ட வந்திருக்கியன்னு” சொன்னா.
 
அதுக்கு மேல நான் ஏன் கதை சொல்றேன். செம கடுப்பாகிட்டேன் “வா கிளம்புவோம்ன்னு…” சொன்னேன்.
 
“இங்க பீச் இருக்குல போயிட்டு போவம்…”
 
“அது ஒண்ணு தான் குறை…” முணுமுணுத்துக்கிட்டேன்.
 
பொண்டாட்டி ஆசைப்பட்டாலேன்னு அவளை கூட்டிட்டு பீச்சுக்கு போனேன். அங்க கொஞ்சம் அவ ப்ரீயா இருந்தா, தண்ணியில கால் நனைச்சு விளையாடிட்டு இருந்தா…
 
எனக்கு அவ கைப்பிடிச்சுட்டு தண்ணி லேசா கால்ல பட அப்படியே கொஞ்ச தூரம் நடந்து போகணும்ன்னு ஆசை.
 
அதை சொன்னா அவ அதுக்கும் ஒரு ஆப்பு வைப்பா எனக்குன்னு பேசாம இருந்திக்கிட்டேன்.
 
எப்படியும் ஒரு வழியா வீடு வந்து சேர்ந்தாச்சு. அவ தண்ணியில விளையாடினதுல நல்லா நனைஞ்சுட்டா… சொல்ல சொல்ல கேக்கலை, சரி சின்னப் பொண்ணாச்சேன்னு நானும் விட்டுட்டேன்.
 
புடவை ஈரம் முழுசா காயலை. “அச்சோ சேலை நல்லா நனைஞ்சுட்டு, காய லேட்டாவும் போல, வீட்டுக்கு எப்படி போவ…”
 
“இப்படியே போக வேண்டியது தான். நான் தான் சொன்னேன்ல ரொம்ப தண்ணியில நிக்காதன்னு நீ கேட்டா தானே பட்டிக்காடு இதென்ன தாமிரபரணி தண்ணின்னு நினைச்சியான்னு” சொன்னேன்.
 
அம்மிணிக்கு புசுபுசுன்னு ஒரு கோபம் வந்துச்சு பாருங்க. எதுக்கு இப்படி மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க நம்மளை பார்க்கறான்னு நான் பார்த்திட்டே நின்னேன்.
 
“சரி வா போவோம்ன்னு…” கிளம்பிட்டோம்.
காரை பார்க்கிங்ல இருந்து எடுத்திட்டு வந்தேன். “ஏறுன்னு” சொன்னேன். அவ்வளவு நேரமும் அவ என்கிட்ட வாயை திறந்து பேசவே இல்லை.
 
“போற வழியில சாப்பிட்டு கிளம்புவோம்ன்னு” சொன்னேன்.
 
பேசாமலே வந்தா “என்னாச்சு ஏன் ஒரு மாதிரியா இருக்க?? தலைவலிக்குதா…”
 
“எதுக்கு அப்படி சொன்னிய??”
 
“எப்படி??”
 
“அதான் பீச்ல வைச்சு சொன்னிய??”
 
நான் என்ன சொன்னேன் எனக்கு ஞாபகமில்லையே. “என்னம்மா சொன்னேன்னு…” கேட்டேன்.
 
“பட்டிக்காடுன்னு சொன்னிய…”
 
“அது சும்மா ஜாலிக்…” நான் முடிக்கவேயில்லை அவ நான் ஸ்டாப்பா பேச ஆரம்பிச்சிட்டா…
 
“என்னைய பாத்தா உங்களுக்கு பட்டிக்காடு மாதிரி தெரியுதா, எல்லாம் தெரிஞ்சு தானே கட்டினிய…”
 
“அந்த ஊரு தானே உங்களுக்கும். அது பட்டிக்காடு மாதிரியா இருக்கு…”
 
“அதில்லைம்மா இங்க மாதிரி அங்க ஒண்ணும் அப்படி வசதியில்…”
 
“என்ன வசதியில்லைங்கேன், எல்லாம் அங்கனையும் இருக்கத்தேன் செய்யுது…”
 
“பட்டிக்காடுன்னு கிண்டலா சொல்லுதிய… அந்த ஊருல இருந்து எல்லாரும் பொழைப்பை தேடித்தேன் இந்தூருக்கு வந்தது”
 
“சொந்த ஊருல பொழைக்க தைரியம் இல்லாம இங்கன வந்திட்டு, வந்த ஊரை பொழைக்க வைச்சுட்டு கேட்டா இது பட்டணம்பீங்களோ… உங்க கண்ணுக்கு எங்களை எல்லாம் பார்த்தா பட்டிக்காடு மாதிரி தெரியுது…”
 
“பட்டிக்காடுன்னு தெரியாம சொல்லிட்டேன் தாயே அதுக்கு எதுக்கு இம்புட்டு அலப்பறை, இனிமே சொல்ல மாட்டேன்…”
 
“நீங்க பட்டிக்காடுன்னு சொன்னதுல எனக்கு கோவமில்லை, அதை கிண்டலா சொன்னதுதேன் கோவம்…”
 
“பட்டிக்காடுன்னு சொல்லிகிட உங்களுக்கு வேணா பெருமை இருக்காது, எனக்கு அதே பெருமை, மண் வாசத்தோட சுத்தமான காத்தோட, சிலு சிலுன்னு ஓடுற ஆத்தோடன்னு எனக்கு சொல்ல சொல்ல நெறைய கிடக்கு…”
 
“எங்கே இதுல ஒண்ணை இந்த ஊருல இருக்குன்னு நீங்க காட்டிடுவியலா பாப்போம்…”
 
“போதும் வள்ளிக்கண்ணு மலை இறங்கு… உன்னோட பாசத்தை கண்டு நான் வியக்கேன்… இனிமே எப்பவும் இதைபத்தி பேச மாட்டேன்…” என்றவன் அப்புறம் ஏன் வாயை திறக்குறேன்.
 
போற வழியில சாப்பிட்டு கிளம்பினோம், அதுக்கு வாயை திறக்க கூட எனக்கு பயந்து வந்திருச்சு அவ பேசின பேச்சுல.
 
அடுத்த வாரம் நான் ஆபீஸ் வேலையா வைசாக் போறேன். இடைப்பட்ட ஒரு வாரத்துல நாங்க எங்க வாழ்க்கைய ஆரம்பிச்சிட்டோம். எப்படின்னு அப்புறம் சொல்லுறேன்.
நா அவியகிட்ட நீங்க எப்போ வேலைக்கு வேலைக்கு போவியன்னு ஒரு நா கேட்டேன்…
 
எனக்கு அவிய என்ன வேலை பாக்காங்கன்னு தெரியாது, அவிய சொல்லவும் தான் எனக்கு புரிஞ்சுது…
 
அவிய கப்பல்ல வேலை பாக்காவ, நாடாறு மாசம் காடாறு மாசம்ன்னு சொல்லுதா போல இவிய இங்க ஆறு மாசம் கடல்ல ஆறு மாசம்ன்னு சொன்னாவ…
 
எனக்கு அதை கேக்கவும் ஒரு மாதிரியாகிப் போச்சு. இப்போதேன் அவிய கூட பேசவே ஆரம்பிச்சு இருக்கேன். இன்னும் கொஞ்ச நாள்ல அவிய என்னைய விட்டு வேலைக்கு போய்டுவாவ, நா என்ன செய்வேன்…
 
எனக்கு அழுகையே வர ஆரம்பிச்சுடுச்சு. அவிய பாக்க முன்ன கண்ணை துடைச்சிக்கிட்டேன்.
 
அப்புறம் என்ன நினைச்சாவளோ என்னைய தினம் ஒரு இடத்துக்கு கூட்டிட்டு போனாவ.
 
இதுக்கு நடுவுல எனக்கும் என் மாமியாக்கும் ஒரு சின்ன சடவா போச்சு.
 
என்னைய காலையில தினமும் சீக்கிரம் எந்திருக்க சொன்னாவ அது ஒண்ணும் தப்பில்லை தான்.
 
நானும் அவிய சொன்னாவன்னு எந்திச்சேன். அவிய வேலை பாப்பாவோ நா அவிய எல்லாருக்கும் சாப்பாடு பரிமாறுவேன்.
 
என் மாமியாக்கு நா வேலை செய்ய மாட்டேங்கேன்னு கோவம் போல.
 
நா அந்த வீட்டுக்கு புதுசு தானே என்ன வேணும்ன்னு சொன்னா நா என்ன செய்ய மாட்டேன்னா சொல்லுதேன்.
 
அப்படி தான் அன்னைக்கு காலையில் நான் குளிச்சுட்டு கீழே இறங்கி போனேன். மாமா ஹால்ல உட்கார்ந்திருந்தாவ அத்தை உள்ள அடுப்படில வேலை பாக்காவ.
“அத்தை மாமாக்கு காபி கொடுக்கவா??”
 
அவிய என்ட பேசவேயில்லை எனக்கு ஒரு மாதிரி ஆகிப்போச்சு. நா மறுபடியும் கேக்கேன் பதிலே இல்லை.
 
“அத்தை என்னாச்சுன்னு” கேட்டேன்
 
“நீ எப்பவும் இப்படி தான் இருப்பியா??”
 
“என்ன சொல்றியன்னு புரியலை அத்தை??”
 
“உனக்கு இதெல்லாம் புரியாது, ஆனா தினம் அவன் கூட ஊர் சுத்த மட்டும் தெரியும்…”
 
இப்படி சொன்னா நா என்னன்னு நினைக்க, அவியளுக்கு என்ன சொல்லணுமோ அதை நேரா சொல்லலாம்ல…
 
எனக்கு அவிய பேசணும் கோவம் வந்திட்டு நேரா கிளம்பி எங்க ரூமுக்கு போய் கட்டில்ல படுத்துட்டேன்.
 
இவிய அங்க தான் இருந்தாவ, அன்னைக்கு என்னைய சினிமாக்கு கூட்டிட்டு போறேன்னு சொன்னவ.
 
மால்க்கு போயிட்டு போவோம்ன்னு சொல்லியிருந்தாவ
 
“என்ன வள்ளிக்கண்ணு இப்போ தான் போனே உடனே வந்திட்டன்னு…” கேட்டாவ.
 
“எல்லாம் உங்கம்மாவாலன்னு…” சொன்னேன்.
“என்ன சொன்னே??”
 
“அத்தையால…”
 
“சரி என்னாச்சு அம்மா என்ன சொனனாங்கன்னு…” பொறுமையா கேட்டாவ.
 
“என்னைய ஏசுதாவ…”
 
“எதுக்கு??”
 
“அது தான் எனக்கு தெரியலையே…”
 
“யாராச்சும் சும்மாவே திட்டுவாங்களா??”
 
“அது எனக்கும் தெரியும் ஆனா அவிய எதுக்கு திட்டுனாவன்னு எனக்கு தெரியலை. சொன்னா தானே தெரியும் எனக்கு…”
 
“மாமாக்கு காபி கொடுக்கவான்னு கேட்டேன் பதிலே சொல்லாம இருந்தாவ… திடிர்னு உனக்கு ஊர் சுத்த மட்டும் நல்லா தெரிஞ்சிருக்குன்னு ஏசுதாவ…”
 
“நானா ஊர் சுத்தணும்ன்னு நினைக்கேன், நீங்க தானே கூட்டிட்டு போறிய. வேணாம்ன்னா உங்கட்ட சொல்ல வேண்டியது தானே, என்னைய ஏன் பேசுதாவ…”
 
“இவிய அவிய அம்மாகிட்ட எதுவும் கேக்கலை. என்னைய சமாதானப் படுத்துனாவ…”
 
“உங்கம்மா திட்டினா என்ன செய்வேன்னாவ”
 
“அம்மா தானே திட்டுறாவன்னு இருப்பேன்…”
 
“உங்கம்மா வேற எங்கம்மா வேறன்னு நினைக்காத, ரெண்டு பேரும் ஒண்ணு தான்னு சொன்னாவ…”
 
‘எனக்கு கோபம் தான் இன்னும். எங்கம்மா என்னைய வைவா தான், அதுக்கு இப்படி பேசாம முகத்தை திருப்பறதுலாம் செய்ய மாட்டாவ, எதுனாலும் நேரா தான் சொல்லுவாவ…’
 
இவிய என்னைய மறுநா மகாபலிபுரம் கூட்டிட்டு போனவ, அங்க போய் என்னென்னவோ கதை சொன்னாவ, எனக்கு ஒன்னும் விளங்கலை. ஆளை விடுங்க சாமின்னு சொல்லிட்டேன்.
 
பீச்சுக்கு போனோம், ஜாலியா இருந்துச்சு. அங்க வைச்சு தான் இவிய என்னைய மூட் ஆப் பண்ணி விட்டுட்டாவ.
 
பின்னே என்னங்க என்னைய பாத்து பட்டுக்காடுன்னு நையாண்டியா சொல்லுதாவ.
 
நா நல்லா கேட்டுவிட்டேன் அதோட பேசாம ஆனவிய தான். வீட்டுக்கு வந்து கூட என்ட பேசலியே…
 
நைட் என்ட வந்து அடுத்த வாரம் வேலை விஷயமா விசாகப்பட்டினம் போறேன்னு சொன்னாவ, அங்க ஒரு வாரம் வேலை இருக்குமாம். காண்டிராக்ட் ஏதோ சைன் பண்ணணும்ன்னு சொன்னாவ.
 

Advertisement