Advertisement

11
 
“ஹலோ… வெல்கம் டு சென்னைன்னு…” யாரோ ஒருத்தர் எங்க பக்கத்துல வந்து சொல்ல நான் பயந்து பின்னாடி நகர்ந்து என் மாமியார் மேல இடிச்சுக்கிட்டேன்.
 
“டேய் நீ இங்க என்னடா பண்ணுறேன்னு??” அவிய கேட்கவும் தான் எனக்கு புரிஞ்சுச்சு, அவியளுக்கு தெரிஞ்சவுக போலன்னு.
 
“அண்ணின்னு” அவிய என்னைய கூப்பிடணும் எனக்கு பொசுக்குன்னு போச்சு.
 
எனக்கு அவியளை விட நிறைய வயசு கம்மியதேன் இருக்கும், என்னைய போய் இப்படி கூப்பிடுதாவன்னு நா பாக்க இவிய என் பக்கத்துல வந்தாவ.
 
“என்னடா ரொம்ப நேரமா வெயிட் பண்ணுறியான்னு??” இவிய அவியகிட்ட கேட்க “இல்லை இப்போ தான் வந்தேன்னு…” அவிய சொன்னாவ.
 
நா அவிய ரெண்டு பேரையும்  மாத்தி மாத்தி பாக்குறதை பார்த்திட்டு இவிய அவியகிட்ட “என்னோட வைப் வள்ளின்னு” அறிமுகப்படுத்துனாவ.
 
நா அவியளை பார்த்து லேசா சிரிச்சேன். இவிய என்ட “என்னோட பிரண்டு இனியன்னு சொன்னாவ…”
 
“அப்போ ஏன் நம்ம கல்யாணத்துக்கு இவிய வரலை…”
“நான் கூப்பிடலை… இவனை மட்டும் கூப்பிட்டா எல்லாரும் சண்டைக்கு வருவாங்க… நம்ம ரிஷப்ஷன் தான் இந்த சண்டே நடக்கப் போகுதுல அதுக்கு எல்லாரும் வருவாங்க…”
 
“இவனுக்கு போன் பண்ணி நான் சொல்லிட்டேன். தவிர ஷ்ரவன் இவனுக்கு லைவ் டெலிகாஸ்ட் பண்ணிட்டான் நம்ம மேரேஜைன்னு…” சொன்னாவ.
 
அவிய பிரண்டு வண்டி எடுத்திட்டு வந்திருந்தாவ… வீட்டுக்கு வந்தாச்சு… காலனி மாதிரி இருந்துச்சு. நெறைய வீடுங்க உள்ள…
 
மேல ஒரு வீடு எதிர்க்க இன்னொரு வீடு அப்புறம் முதல் மாடியில இதே போல, அதுக்கு பொறவு மொட்டை மாடி போல…
 
நா சுத்தி சுத்தி பார்த்திட்டே வந்தேன். அத்தை எங்களை வெளியவே நிக்க சொன்னாவ, இவிய பிரண்டு அம்மா கையில ஆரத்தி தட்டோட வந்தாவ, மதினி தான் ஆரத்தி எடுத்து உள்ள கூப்பிட்டாவ.
 
அவங்க இனியனோட அம்மான்னு இவிய என்ட்ட சொன்னாவ. பார்த்தாலே தெரியுதுன்னேன்…
 
இவிய என்ட எப்படின்னாவ?? அதான் முக ஒத்துமை தெரியுதேன்னு சொன்னேன்.
 
உள்ள வான்னு கூப்பிட்டு போனாவ, நல்ல பெரிய வீடு தான் போல… பெரிய வராந்தா இருந்துச்சு கீழே ரெண்டு ரூம் இருந்துச்சு, அப்புறம் அடுப்படி அவ்வளவு தான் இருந்துச்சு. வீட்டுல இருந்தே மேல படி இருந்துச்சு.
 
மேல வேற வீடு இருக்கு போலன்னு நான் நினைச்சுட்டு இருக்க அது முழுக்க ஒரே வீடு போல, இவிய என்னைய ரூமுக்கு கூட்டிட்டு போனவ.
 
“நீங்க போய் குளிச்சுட்டு வந்து சாப்பிடுங்க… அப்புறம் வந்து ரெஸ்ட் எடுங்கன்னு” அத்தை சொன்னாவ.
 
இவிய என்னைய மாடிக்கு தான் கூட்டிட்டு போனவ “ஏங்க கீழே தான் ரூமு இருக்கேன்னு சொன்னேன்…”
 
“ஒண்ணு அம்மா அப்பாவோடது, இன்னொன்னு அக்கா வந்தா தங்குவான்னு சொன்னாவ…”
 
“இவ்வளவு பெரிய வீடுமா உங்கது…”
 
“நம்மதுன்னு…” என்னைய திருத்துனாவ.
 
இவியளை கல்யாணம் பண்ணதும் அந்த வீடு என்னோடதா ஆகிடுமா… இப்படி தான் ஒரு ஒரு பொண்ணுக்கும் பொழைப்பே மாறுது போலன்னு நினைச்சுட்டு இவியளை பாத்து சரின்னேன்.
 
மாடியில வலது பக்கம் இருந்த ரூமுக்குள்ள கூட்டிட்டு போனவ “இது நம்ம ரூம்ன்னு…” அழுத்தி சொன்னாவ.
 
“நீ போய் குளிச்சுட்டு வா…”
 
நா குளிச்சுட்டு வெளிய வரவும் இவிய அங்க இல்லை, எங்க போயிருப்பாவன்னு நா வெளிய வந்து பார்க்க ஆளை காணோம்.
 
இந்த வீடு எனக்கு புதுசுல என்னைய இப்படி தனியா விட்டு போகலாமா இவிய (அன்னைக்கு நீயும் அவனை இப்படி தானே உன் வீட்டில விட்டுட்டு போனே)
 
அதெல்லாம் அன்னைக்கு அது வேற… பேசாம கீழே போய் பாப்போமா…
 
நைட்டியோட எப்படி போகன்னு கதவை அடைச்சிட்டு புடவை கட்டி முடிச்சேன்…
 
“என்ன முடிஞ்சுதான்னு” என் பின்னாடி இருந்து இவிய குரல் கேக்கு…
 
“எங்க போயிருந்திய??”
 
“இங்க தான் பால்கனில நின்னுட்டு இருந்தேன்… நீ என்னைய வெளிய போய் தேடினது எல்லாம் பார்த்திட்டு தான் இருந்தேன்…”
 
“என்னது??”
 
“நீ புடவை கட்டினதை எல்லாம் நான் பார்க்கலைன்னு…” கண்ணை சிமிட்டினாவ.
 
எனக்கு வெக்கமா போச்சு, அவியளை நிமிந்து பாக்கவேயில்லை நா.
நா கீழே போறேன்…
 
“நானும் குளிச்சுட்டு வர்றேன், சேர்ந்தே போவோம்… அது வரைக்கும் ரெஸ்ட் எடுன்னு சொன்னாவ…”
 
“ஹ்ம்ம்…”
 
அவிய குளிச்சுட்டு வாறதுக்குள்ள நா தலையை சீவி பின்னல் போட்டேன். கீழே போய் சாப்பிட்டு மறுபடியும் மேல வந்தோம்.
 
ரயில்ல வந்த அலுப்பு எல்லாருக்குமே இருந்துச்சு, பேசாம படுத்து தூங்கியாச்சு.
 
அவிய வீடு எனக்கு இப்போ தான் கொஞ்ச கொஞ்சமா பழக ஆரம்பிக்கு…
 
அவியளுக்கும் எனக்கும் முன்னைவிட இப்போ கொஞ்சம் பேச்சு வார்த்தை கூடிச்சு… அத்தை, மாமா கூட எல்லாம் பேச ஆரம்பிச்சேன்.
 
அத்தை தான் அப்பப்போ ஏதாச்சும் அட்வைஸ் பண்ணுறா போல பேசுதாவ, எனக்கு தான் அதெல்லாம் எப்பவும் ஒத்து போகாதே…
 
வழக்கம் போல அதெல்லாம் காதில நா வாங்கவே இல்லை… நாளைக்கு எங்கம்மா அப்பா, அக்கா, அத்தான்லாம் வாராவ என்னைப் பாக்க…
 
எங்க ரிஷப்ஷன் வேற இங்க நடக்க போகுதுல்ல அதுக்காவும் தான் வாராவ. எனக்கு எந்த சீரும் செய்ய வேணாம்ன்னு இவிய வீட்டுல சொல்லிட்டாவ, அதனால அப்பாவும் அம்மாவும் எங்க ரெண்டு பேரு பேருலயும் பேங்க்ல அமௌன்ட் டெபாசிட் பண்ணிட்டாவ.
 
பீரோவும் கட்டிலும் மட்டும் கண்டிப்பா கொடுப்போம்ன்னு சொல்லிட்டாவ, நாளைக்கு வந்ததும் கடைக்கு போவணும்ன்னு நேத்து போன்ல பேசும் போது அம்மா சொன்னாவ.
 
எங்களுக்குள்ள எல்லாமே நல்லா தான் போயிட்டு இருந்துச்சு. ரிஷப்ஷன் முடிஞ்சுது. அப்புறம் அவிய வேலைக்கு போக இல்லை.
 
எனக்கு ரொம்ப சந்தேகம் இவிய வேலைக்கு எப்போ தான் போவாவன்னு. ஒரு நாள் நா அதை அவியட்ட கேட்டேன். என்னைப் பாத்து சிரிச்சாவ.

 

வள்ளி ஆத்துக்கு போகணும்ன்னு சொல்லவும் கூட்டிட்டு போனேன். சின்ன குழந்தை மாதிரி அதுல கால் நனைச்சு விளையாடிட்டு இருந்தா. தண்ணியை கையில எடுத்து குடிச்சா…
 
“ஹேய் அதெல்லாம் குடிக்காதன்னு சொன்னேன்…”
 
“ஏன்??”
 
“சுத்தமா இருக்காது…”
 
“ஆர்ஓ ஆர்ஓன்னு சொல்லி சத்தே இல்லாத தண்ணியை குடிக்கறதுக்கு இந்த தண்ணி எம்புட்டோ தேவலாம்ன்னு சொன்னா…”
 
“போடி…” என்றுவிட்டு அவளை ரசிக்க ஆரம்பிச்சேன்.
 
மனசுக்குள்ள “சரியான பட்டிக்காடுன்னு” சொல்லிக்கிட்டேன்.
 
அந்த பட்டிக்காடுங்கற வார்த்தையை அவகிட்ட நேர்ல சொல்லி ஒரு நாள் நான் படப்போற பாட்டை நீங்க பார்க்க போறீங்க பாருங்க…
 
ஆனா அதுல இருந்து தான் நான் அவளை அதிகமா பட்டிக்காடுன்னு கூப்பிட ஆரம்பிச்சேன்…
 
ஊருக்கு கிளம்பியாச்சு, ஸ்டேஷன் வந்திட்டோம். அவங்கம்மா அப்பாக்கு எல்லாம் டாடா காமிச்சுட்டு இருந்தா மறுபடியும் அழுகாச்சி ஆரம்பிச்சாச்சு…
 
எனக்கு அவளோட கஷ்டம் புரியுது, ஆனாலும் இப்படி சும்மா சும்மா அழ வேணாம்ன்னு தோணிச்சு.
 
பாவம் அவங்களும் இவளைவிட்டு இருக்கணும்ல அவங்களுக்கும் கஷ்டம் தானே, இவ அழுதா அவங்களும் தானே பீல் பண்ணுவாங்க…
 
இந்த நேரத்துல அவளை எதுவும் சொல்லக் கூடாதுன்னு பேசாம இருந்தேன். அவளுக்கு தைரியம் சொல்ற மாதிரி அவளை அணைச்சு நின்னேன்.
அவ திரும்பி இப்போ என் மேல சாஞ்சுக்கிட்டா… நாங்க சென்னை வந்தாச்சு.
 
நாட்கள் மெதுவாய் நகர ஆரம்பிச்சது, ரிஷப்ஷன் முடிஞ்சு அவளோட பேரன்ட்ஸ் திரும்பவும் ஊருக்கு கிளம்பியாச்சு.
 
நான் இன்னமும் லீவ் தான் இருக்கேன். அதுனால அவளை தினமும் எங்காச்சும் கூட்டிட்டு போயிட்டு வந்திட்டு இருந்தேன்.
 
நாளைக்கு பீச்சுக்கு போகலாம் எல்லாரும்ன்னு சொல்லிட்டு அவ பக்கத்துல படுத்தேன்.
 
நான் பேசினதுக்கு மேடம்கிட்ட இருந்து எந்த ரிப்ளையும் இல்லை…
 
“வள்ளிக்கண்ணு…”
 
பதிலே இல்லை, மிக தீவிர யோசனையில இருக்கா போல…
 
“வள்ளிக்கண்ணு…”
 
“ஹான் என்னங்க…”
 
“என்ன யோசனை??”
 
“ஒண்ணும் இல்லை…”
 
“அப்போ ஏதோ இருக்கு, என்னன்னு நீ சொன்னா தானே எனக்கு தெரியும்…”
 
“நா கேட்டா தப்பா நினைச்சுக்க மாட்டீங்கல்ல…”
 
“மாட்டேன் சொல்லு…”
 
“நிசமா…”
 
“நிஜமா…”
 
“நீங்க வேலைக்கு போவ மாட்டியளா??”
 
அவ கேட்டதும் எனக்கு சிரிப்பு வந்திடுச்சு, பின்னே நான் என்ன வேலை பார்க்கறேன்னு கூட அவளுக்கு தெரியலையே அதை நினைச்சு தான்…
 
இருந்தாலும் நான் சிரிச்சது தப்பு தாங்க… நானாச்சும் அவகிட்ட நான் என்ன செய்யறேன் ஏது செய்யறேன்னு சொல்லியிருக்கணும்.
 
அவ எப்படி என்கிட்ட எதையும் மறைக்காம சொன்னா… நான் மறைக்கணும்ன்னு எல்லாம் நினைக்கலை, அவளுக்கு தெரிஞ்சிருக்கும்ன்னு நினைச்சேன்…
 
பேச்சு வாக்குல கூட நான் இதுவரைக்கும் எதையும் சொன்னதில்லை அவகிட்ட, அதான் அவளுக்கு தெரியலை…
 
“எதுக்கு சிரிக்கிய??”
“சாரி…”
 
“அதெல்லாம் சொல்லக் கூடாதுன்னு நீங்க தானே சொன்னிய??”
 
“அப்படியா ஆனா நீ ரூல்ஸ் எல்லாம் சரியா கடைப்பிடிக்க மாட்டியே?? என்னைய சொல்லுற??”
 
அவ இப்போ பதிலே பேசலை. “சரி அந்த கணக்கை அப்புறம் தீர்த்துக்கலாம், இப்போ இதுக்கு வருவோம்…”
 
“நான் வேலைக்கு போகலைன்னு உனக்கு கவலையா??”
 
“உங்களுக்கு எப்படி வேலைன்னு எனக்கு தெரியாது. எவ்வளவு நாள் லீவு போட்டிருக்கியன்னு தெரியாது. அதான் கேட்டேன்”
 
“நான் மரைன் என்ஜீனியர்…”
 
“ஓ…”
 
“அப்படின்னா என்னன்னு தெரியும்ல…”
 
“என்ஜினீயர் அதானே…”
 
“கப்பல்ல தான் எனக்கு வேலை… எனக்கு வீடாறு மாசம், கடலாறு மாசம்…”
 
“அதாவது ஆறு மாசம் இங்க இருப்பேன், ஆறு மாசம் கடல்ல இருப்பேன், ஐ மீன் கப்பல்ல…”
“என்னதூ??”
 
“நான் இங்க வந்து ஆல்ரெடி மூணு மாசம் முடிஞ்சுது. மிச்சம் மூணு மாசம் தான் இங்க இருப்பேன், அப்புறம் மிதக்க போய்டுவேன்…”
 
“உன் பாஷையில சொல்லணும்னா வேலைக்கு போய்டுவேன்…”
 
“கவலைப்படாதே இன்னும் ஒரு வாரம் தான் அப்புறம் இந்த வேலை விஷயம் அடிக்கடி வெளிய போயிட்டு வருவேன்… காண்டிராக்ட் எல்லாம் சைன் பண்ண வேண்டி இருக்குன்னு…” நான் பாட்டுக்கு சொல்லிட்டு இருக்க அவளோட முகத்துல ஏதோ சொல்ல முடியாத கவலை இருந்துச்சு இப்போ.
 
“என்னாச்சு வள்ளிக்கண்ணு??”
 
“அப்போ நீங்க என்னோட இருக்க மாட்டியளா??”
 
“உன்னோட தான் எப்பவும் இருப்பேன்…”
 
“நீ என்னைய நினைச்சுட்டு இருப்ப, நான் உன்னைய நினைச்சுட்டே இருப்பேன்…”
 
“சாதா வேலைக்கு எல்லாம் போக முடியாதா??”
 
“போகலாமே, ஆனா நான் ஆசைப்பட்டு இந்த படிப்பை படிச்சேன்… கொஞ்ச நாள் இதுல தான் இருக்க பிரியப்படுறேன்…”
அவ பதில் எதுவும் சொல்லலை, பேசாம படுத்திட்டா, அப்புறம் பேசி சரி பண்ணிக்கலாம்ன்னு விட்டுட்டேன். நான் ஊருக்கு போறதுக்கு முன்னாடி இப்படி ஒரு சண்டை எங்களுக்குள்ள வரும்ன்னு நான் நினைக்கவே இல்லைங்க…
 
அவ பேசினது ரொம்ப தப்புங்க, கோபத்துல அவளை கூட்டிட்டு போய் அவங்கம்மா வீட்டில விட்டுட்டு நான் ஊருக்கு கிளம்பிட்டேன்.

Advertisement