Advertisement

10
 
அவங்க வீட்டுக்கு போயிட்டு எங்க வீட்டுக்கு வந்தாச்சு. வீட்டுக்கு வந்து படுத்த பிறகு கூட என்கிட்ட மன்னிப்பு கேட்டுட்டே இருந்தா.
 
எனக்கே கடுப்பாகிப் போச்சு. “எதுக்கு இப்போ நீ திரும்ப திரும்ப கேக்குறே??”
 
இல்லை எனக்கு நீங்க சொல்லலைன்னா புரிஞ்சிருக்காது. ரொம்ப உங்களை சங்கடப்படுத்திட்டேன்னு சொன்னா
 
“இங்க பாரு உனக்கு புரியணுமேன்னு தான் நான் அதைச் சொன்னேன். உன்னோட மன்னிப்பு எனக்கு வேணாம்…”
 
“நமக்குள்ள இந்த தேங்க்ஸ், மன்னிப்பு இதெல்லாம் இருக்க வேணாம்…”
 
“நீங்க மட்டும் அன்னைக்கு சொன்னிய”
 
இது எப்போ நடந்துச்சு… “என்னைக்கு…”
 
“காபி கொடுத்தப்போ”
 
“அப்படியா எனக்கு ஞாபகத்துல இல்லை…”
 
“நா கூட உங்களை முறைச்சுட்டே போயிட்டேன். காபி கொடுத்ததுக்கு எல்லாம் தேங்க்ஸ் சொல்லாவலான்னு…”
 
இப்போ எனக்கு ஞாபகம் வந்திடுச்சுங்க அவ என்னை எதுக்கு முறைச்சான்னு அப்போ எனக்கு புரியலை, இப்போ புரியுது.
 
“சரி தூங்கலாம்…”
 
“ஹ்ம்ம்…”
 
“எனக்கு உங்ககிட்ட ஒண்ணு கேக்கணும், கேக்கலாமா…” என்றாள்.
 
“என்னம்மா…”
 
“நீங்க எதுக்கு என்னைய பாக்க ஆத்துக்கு வந்தீய…”
 
“நான் ஆத்துக்கு வந்தேன், ஆனா உன்னைய பார்க்க வரலை…”
 
“அப்போ அன்னைக்கு என்ட்ட ஏதோ பேசணும்ன்னு சொன்னிய…”
 
“ஆத்துக்கு குளிக்க வந்தேன். தற்செயலா உன்னை அங்க பார்த்தேன்”
 
“பேசணுன்னு சொன்னது…”
 
“உனக்கு என்னை பிடிச்சிருக்கான்னு கேக்கலாம்ன்னு நினைச்சேன்… நீ தான் இங்க பேசற விஷயமான்னு கேட்டே, எனக்கும் அது சரின்னு தோணிச்சு. உன்னோட போன் நம்பர் வாங்கி பேசலாம்ன்னு பார்த்தேன்…” என்று சொல்லி அவளைப் பார்த்தேன்.
 
“சாரி…”
 
“இப்போ தானே சொன்னேன்…”
 
“பரவாயில்லை இந்த சாரியை நீங்க ஏத்துக்கிட்டு தான் ஆகணும்…”
 
“ஏன்??”
 
“அன்னைக்கு உங்கட்ட நா சும்மா தான் போன் இல்லைன்னு சொன்னேன்…”
 
“அதான் அன்னைக்கே எனக்கு தெரியுமே…”
 
“இருந்தாலும் நா அப்படி சொன்னது தப்பு தானே…”
 
“எனக்கு அப்படி தோணலை. முத நாள் பொண்ணு பார்த்திட்டு மறுநாள் நான் திடுதிப்புன்னு நடுவழியில உன்னை மறிச்சு போன் நம்பர் கேட்டா அது உனக்கு எப்படியிருக்கும்ன்னு எனக்கு தெரியும்…”
 
“முதல்ல நீ சொன்னப்போ கொஞ்சம் கஷ்டமா இருந்துச்சு அப்புறம் யோசிச்சேன். போயும் போயும் குளிச்சுட்டு வீட்டுக்கு போயிகிட்டு இருக்க பொண்ணை வழிமறிச்சு பேசணும்ன்னு சொல்லியிருக்கியேடான்னு என்னை நானே திட்டிக்கிட்டேன்…”
 
“சோ நடந்ததுல உன் தப்பு எதுவுமில்லை…”
 
“தேங்க்ஸ்…”
 
நான் அவளை முறைத்தேன்… “நீங்க என்னைய புரிஞ்சுக்கிட்டதுக்கு தேங்க்ஸ் சொன்னேன்…”
 
“நீ அடங்கவே மாட்ட”
 
“இல்லை நீங்க எதை செய்யாதன்னு சொல்றீங்களோ நா அதை தான் செய்வேன். அது ரொம்ப பேட் ஹாபிட்ன்னு எனக்கு தெரியும்… சாரி…”
 
“யார் சொன்னா அது பேட் ஹாபிட்ன்னு” என்று விஷமமாய் சிரித்தேன்.
 
அவள் வெள்ளந்தியாய் “அப்போ அது பேட் ஹாபிட் இல்லையா??” என்றாள்.
 
“இப்போ நான் ஒண்ணு சொல்றேன் நீ செய்யாத…”
 
“ஏன்??”
 
“செய்யாதன்னா செய்யாத…”
 
“என்னன்னு சொல்லுங்களேன்…”
 
“என்னை நீ கிஸ் பண்ணக்கூடாது இங்க…” என்று என் கன்னத்தை காட்டினேன்.
 
அவளுக்கு முகமெல்லாம் ரத்த நிறமா ஆகிப்போச்சு. நான் இப்படி சொல்வேன்னு அவ எதிர்ப்பார்க்கலைன்னு எனக்கு தெரியும்.
 
“எனக்கு தூக்கம் வருதுன்னு…” சொல்லிட்டு படுத்திட்டா.
 
நானும் அதுக்கு மேல எல்லாம் அவளை ரொம்ப கலாட்டா பண்ணக் கூடாதுன்னு தூங்கிட்டேன்.
 
நாங்க மறுநாளும் அவ வீட்டுக்கு போகணும். நாங்க மூணு தடவை மறுவீடு போவோம். முத தடவை வீட்டில இருக்க எல்லாரும் அப்புறம் நானும் அவளும் மட்டும்.
 
நாங்க ஊருக்கு கிளம்புற நாளும் வந்திச்சு. முத நாள் அவ வீட்டுக்கு போயிட்டு அன்னைக்கு அங்க தங்கிட்டு வந்தோம்.
 
ஊருக்கு போகப் போறோம்ன்னு தெரிஞ்சதும் அவளுக்கு அப்படியொரு அழுகை வந்துச்சு. ஒரு வீட்டுல இருந்து இன்னொரு வீட்டுக்கு போகணும்ன்னாலே கஷ்டமாயிருக்கும்.
 
இதுல ஊருவிட்டு ஊரு போகணும்ன்னா கேட்கவா வேணும். எனக்கு அவளை புரிஞ்சுது.
 
அவ வீட்டுல இருந்து கிளம்பும் போது அவ அம்மா, அக்காவை கட்டிப்பிடிச்சுட்டு அப்படி அழுதா, எனக்கு மனசே கேக்கலை. அவங்க இவளுக்கு ஆயிரம் அறிவுரை சொன்னாலும் அவங்களும் கலங்கி போய் தான் இருந்தாங்க.
 
அவளோட அக்காவும் ஊருக்கு கிளம்ப போறாங்க, இவளும் இல்லை அவங்களுக்கு எவ்வளவு கஷ்டமாயிருக்கும்ன்னு புரிஞ்சுது.
 
என்னோட லீவ் முடியறதுக்குள்ள மறுபடியும் ஊருக்கு வந்து போகணும் அவங்களுக்காகன்னு முடிவு பண்ணேன்.
 
எனக்கே அப்போ தெரியாது நான் அவளை ஊருக்கு கூட்டிட்டு வந்து விட்டுட்டு போய்டுவேன்னு.
 
என் மாமனார் தன் மகளைப் பற்றி என்னிடம் சொன்னார். “எதுவும் சொல்ல வேணாம் மாமா, நான் பார்த்துக்கறேன் அவளை…”
 
“இல்லை மருமவனே நீங்க நல்லா படிச்சவுக…”
 
“அதெல்லாம் பேசாதீங்க மாமா. எனக்கு அவளை இப்படியே தான் பிடிச்சிருக்கு, எனக்கு அதைப்பத்தி எல்லாம் கவலையில்லை… கண்டதும் நினைச்சு குழம்பிக்காதீங்க…”
 
“உங்க பொண்ணா இல்லை என் மனைவியா அவளை நான் நல்லாவே பார்த்துப்பேன் மாமா…” என்று சொல்லி அவர் கைகளை பிடித்துக்கொண்டேன் ஆறுதலாய்.
 
அவளின் அக்காவின் கணவரும் என்னிடம் பேசிக் கொண்டிருந்தார். பெண்கள் மூவரும் அழுவதை பார்த்து எனக்கே என்னை பார்த்து வில்லன் போலத்தான் தோன்றியது.
 
ஒரு பொண்ணை அவ வீட்டுல இருந்து பிரிச்சு கூட்டிட்டு போறோமே அது சரிதானான்னு. என் அக்கா கல்யாணம் நடத்தப்போ இதெல்லாம் பார்த்திருக்கேன்ல அதுனால கொஞ்சம் என்னை நானே சமாதானப்படுத்திக்கிட்டேன்.
 
“வள்ளிக்கண்ணு” என்றழைத்தேன்.
 
“கிளம்பு அவிய கூப்பிடுதாவன்னு” சொல்லி அவளோட அக்கா சொன்னாங்க.
 
“போகலாமா…”
 
“ஹ்ம்ம்…” என்று சொன்ன அவள் குரலில் இன்னமும் அழுகை மிச்சமிருந்துச்சு புரிஞ்சுது.
 
அனைவரிடமும் விடைபெற்றோம். அவங்க ஈவினிங் ஸ்டேஷன்க்கு வர்றேன்னு சொன்னாங்க.
 
என்னோட கார்ல வந்து ஏறினா. வண்டியை எடுத்தேன், வீட்டுக்கு போகலை. நேரா சயின்ஸ் சென்டர்க்கு வண்டியை விட்டேன்.
 
திருநெல்வேலி மக்களுக்கு இந்த சயின்ஸ் சென்டர் தாங்க, சென்னையில உள்ள பிளானடோரியம் மாதிரி. சின்ன வயசுல ஆச்சி தாத்தாவோட பிக்னிக் போல இங்க வருவோம்.
 
அவளை அங்க தான் கூட்டிட்டு போறேன். அவ சோகமா இருந்ததால நாங்க எங்க போறோம்ன்னு அவ கவனிக்கவேயில்லை.
 
வண்டியை நிறுத்திட்டு அவளை இறங்கச் சொன்னேன். அப்போ தான் சுத்துமுத்தும் பார்த்தா, “இங்க எதுக்கு கூட்டியாந்திய” என்றாள்.
 
“உன் கூட பேசணும் வான்னு…” சொல்லி அவ கையோட என் கையை கோர்த்திட்டு நடந்தேன். நாங்க உள்ள போகலை.
 
அங்க பார்க் மாதிரி இருந்த இடத்துல ஓரமா கிடந்த கல் பெஞ்சுல போய் உட்கார்ந்தோம். அவ என்னையவே பார்த்தா…
 
“எதுக்கு என்னைய பார்க்குற??”
 
“இல்லை ஏதோ பேசணும்ன்னு…”
 
நல்ல மாற்றம் அவளிடம் அன்னைக்கு நான் அவகிட்ட பேசினதோட தாக்கம். நல்லது தான், இல்லைன்னா நீங்க தானே பேசணும்ன்னு சொன்னீங்க அப்போ நீங்களா தான் ஆரம்பிக்கணும்ன்னு பேசியிருப்பா…
 
“நீ பீல் பண்ணிட்டு இருந்தியா, வீட்டுக்கு போனா உன்னால இயல்பா இருக்க முடியாதுல. அதான் கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணலாம்ன்னு இங்க கூட்டிட்டு வந்தேன்…”
 
“தேங்க்ஸ்…”
 
நான் முறைத்தேன்… பின் மெதுவாய் “நான் செய்ய வேணாம்ன்னு சொன்னது எல்லாம் நீ செய்வேன்னு சொல்லிட்டு ஒண்ணை மறந்திட்டியேன்னு ஞாபகப்படுத்தினேன்”
 
“போங்க…” என்று அவள் சொன்னது அவ்வளவு அழகா இருந்துச்சு.
 
“அரசன் போகலாமா, ஐஸ்கிரீம் சாப்பிடறியா…”
 
“இப்போவா…”
 
“இப்போ தான்…”
 
“வீட்டில தேட மாட்டாவலா, சொல்லாம வந்திட்டோமே”
 
“நான் சொல்லிட்டேன்…”
 
“டிரஸ் எல்லாம் எடுத்து வைக்கணும்ல நைட் ஊருக்கு கிளம்புறதுக்கு…”
 
“எல்லாம் எடுத்து வைச்சுக்கலாம்ன்னு…” சொல்லிட்டு அவளை கூட்டிட்டு அரசன் பேக்கரி போய் ஐஸ்கிரீம் சாப்பிட்டு தான் நாங்க கிளம்பினோம்.
 
காரில் ஏறி வீட்டுக்கு கிளம்பினோம் “ஏங்க??” என்றாள்.
 
“சொல்லு வள்ளிக்கண்ணு…”
 
“ஆத்துக்கு கூட்டிட்டு போவீங்களா…”
 
“எதுக்கும்மா…”
 
“குளிக்கணும்ன்னு ஆசையா தான் இருக்கு, ஆனா எனக்கு இப்போ குளிக்கலாம் வேணா. சும்மா பார்த்திட்டு மட்டும் வந்திடலாமே…”
 
அவளின் ஆசை எனக்கு புரிந்தது. அவள் ஊரை அதிகம் நேசிக்கிறாள் என்று. ஒவ்வொரு விஷயத்தை மிஸ் பண்ணுவா, அதெல்லாம் பார்க்கணும்ன்னு ஆசைப்படுறான்னு புரிஞ்சுது.
 
சரி போகலாம், ஆனா ஒரு பத்து நிமிஷத்துல கிளம்பிடணும், மதிய சாப்பாட்டுக்கு வீட்டுக்கு போய்டணும் என்றேன்.
 
“தேங்க்ஸ்…”
 
“இந்த தேங்க்ஸ்க்கு பதிலா நான் செய்ய வேணாம்ன்னு சொன்னதையே நீ செஞ்சா எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கும்…”
 
“செய்தேன்…”
 
“என்னது என்ன சொன்னே??”
“ஆத்துக்கு போகணும்ன்னு…” என்று பேச்சை மாற்றிவிட்டாள் கள்ளி…
 
அவிய ரொம்ப கோவமா இருக்காவ, என்ட பேசணும்ன்னு உள்ள வரச்சொல்லிட்டு வீட்டுக்கு போகணுங்காவ…
 
எனக்கு என்னவோ பயமாகிடுச்சு… என்னாச்சுன்னு கேட்டேன்…
 
நான் வந்ததும் என்னைய இங்க உட்கார சொல்லிட்டு நீ பாட்டுக்கு வெளிய போய்ட்ட, என்னை என்னன்னு நினைச்சுட்டு இருக்கன்னாவ…
 
ஆத்தி நா செஞ்சு தப்பு தானேன்னு இருந்துச்சு எனக்கு.
 
நா பதில் சொல்ல தயங்கிட்டு பேசாம நின்னேன். இப்பவும் சாப்பிட வாங்கன்னு உள்ள வந்து கூப்பிடாம வெளியவே நின்னு கூப்பிடுற என்ன நினைச்சுட்டு இருக்கன்னு கேட்டாவ
 
மரியாதை குறைவா நடந்திட்டோம்ன்னு எனக்கு புரிஞ்சுது. அம்மாவுக்கு தெரிஞ்சா அவ்வளவு தான், என் தோலை உரிச்சிடுவாவ.
 
ரொம்ப கோவமா வேற இருந்தாவ அவிய சொல்ல சொல்ல எனக்கு கண்ணுல தண்ணி வந்திட்டு.
 
நான் சாரின்னு சொன்னேன் என்ன நினைச்சாவளோ இதெல்லாம் வேணாம், எனக்கு இங்க உன்னைய தவிர யாரையும் தெரியாது. உங்கம்மாவும் எங்கம்மாவும் பிரண்டா இருக்கலாம்.
 
அவங்களை எனக்கு தெரியும் ஆனா நீ எனக்கு அப்படியில்லை. நீ என்னோட மனைவி அதை நல்லா புரிஞ்சுக்கோன்னு நல்லா மண்டையில உரைக்கிற மாதிரி சொன்னாவ.
 
ரெஸ்ட் எடுக்கறதுன்னா நான் நம்ம வீட்டுல செய்ய மாட்டனா, உங்க வீட்டுல வந்து தான் நான் ரெஸ்ட் எடுக்கணுமான்னு கேட்டாவ.
 
அவிய சொல்றது எல்லாமே சரி தானே. அவிய இங்க என்னைய தான் முதல் உறவா நினைக்காவ அது அவிய பேச்சுல எனக்கு புரிஞ்சுது.
 
உன்னைய வைச்சு தான் அவிய எல்லாம் எனக்கு உறவுன்னு சொல்றாப்போல இருந்துச்சு அவிய பேச்சு.
 
அது எனக்கு அப்படியொரு சந்தோசத்தை கொடுத்துச்சு. அவிய கையை பிடிச்சுக்கிட்டேன், மறுபடியும் சாரி சொன்னேன்.
 
சரி விடுன்னு சொன்னாவ,
 
சாப்பிட கூப்பிட்டேன், என் கையை பிடிச்சுட்டு வந்தாவ. நா செஞ்சதுன்னு அம்மா சொல்ல சொல்ல மறுபடியும் அவிய கேட்டு வாங்கி சாப்பிட்டது எனக்குள்ள என்னமோ செஞ்சுது.
 
மறுவீட்டுக்கு வந்து போனோம் மறுபடியும். நாங்க இன்னைக்கு ஊருக்கு கிளம்பணும், நேத்து நைட் அம்மா வீட்டில தான் தங்குனோம். இதோ இப்போ காலையில சாப்பிட்டு கிளம்பியாச்சு.
 
அம்மாவும், அக்காவும் அறிவுரை சொல்லிட்டு இருக்காவ. எனக்கு அதெல்லாம் எப்பவும் போல ஏறவேயில்லை.
 
அவியளை எல்லாம் விட்டு போகப் போறோம்னு ஒரு அழுகையா வந்துச்சு. இதே ஊரா இருந்தா கூட பரவாயில்லை, வேற ஊருக்கு போகப் போறோம்ன்னு நினைச்சு நினைச்சு அழுதேன்.
 
அக்காவும் வேற இன்னும் பத்து நாள்ல ஊருக்கு கிளம்பிருவா, அம்மாவும் அப்பாவும் இனி தனியா இருப்பாவலேன்னு அதுக்கும் அழுகை வந்துச்சு.
 
அவிய என்னையவே பார்த்திட்டு இருந்தாவ. எங்க அப்பாகிட்ட பேசிட்டு இருந்தாலும் அவிய கண்ணு மொத்தமும் என் மேல தான் இருந்துச்சு.
 
அதை பார்க்கலைன்னாலும் எனக்கு புரிஞ்சுது. பொறுத்து பொறுத்து பார்த்தாவோ வள்ளிக்கண்ணுன்னு கூப்பிட்டாவ.
 
எல்லார்கிட்டயும் சொல்லிட்டு கிளம்புனோம். எனக்கு மனசுக்கு ஒரு மாதிரியா இருந்துச்சு, நா அமைதியா உட்கார்ந்து இருந்தேன்.
 
தனியா இருக்க மாதிரி தோணிச்சு. நா யோசிச்சுட்டு இருக்கும் போதே வண்டி நின்னுச்சு. அவிய என்னைய இறங்க சொன்னாவ நா அப்போ தான் இறங்கி சுத்தி முத்தி பார்த்தேன்.
 
சயின்ஸ் சென்டர்க்கு கூட்டிட்டு வந்திருக்காவ, சின்ன வயசுல அடிக்கடி வந்த இடம். கல்யாணி கல்யாண முடிய முன்னாடி நானும் அவளும் அடிக்கடி வருவோம் இங்க.
 
இங்க எதுக்குன்னேன், நீ ரிலாக்ஸ் பண்ண தான் கூட்டிட்டு வந்தேன்னாவ.
 
எனக்காக ஒவ்வொண்ணும் பாத்து பாத்து செய்யுதாவ எனக்கு என்ன சொல்லன்னே தெரியலை.
 
தேங்க்ஸ்ன்னு சொல்லவும் அன்னைக்கு போல நான் செய்யாதன்னு சொன்ன ஒண்ணை நீ செய்யவேயில்லைன்னு சொன்னாவ.
 
அவிய என்ன சொல்லுதாவன்னு எனக்கு புரிஞ்சுது போங்கன்னு சொன்னேன்.
 
அரசன் போய் ஐஸ்கிரீம் சாப்பிடுவோமான்னு கேட்டாவோ, நான் சரின்னு சொல்ல ரெண்டு பேரும் அங்க போனோம்.
 
திரும்ப வீட்டுக்கு போக முன்ன ஆத்துக்கு போவோமான்னு கேட்டேன். உங்களுக்கு தான் தெரியுமே எனக்கு ஆத்துக்கு போறதுனா ரொம்ப பிடிக்கும்ன்னு.
 
இனிமே அடிக்கடி ஆத்துக்கு போய் குளிக்கலாம் முடியாதுல. ஒரு வட்டம் போய் பார்த்திட்டு அந்த தண்ணியில காலை நனைச்சுட்டு வரணும்ன்னு ஆசையா இருந்துச்சு.
 
அவியகிட்ட சொல்லவும் சரின்னாவ, மறுபடியும் நான் தேங்க்ஸ் சொல்ல இந்த முறை அவிய நீ இத்தனை தடவை தேங்க்ஸ் சொன்னதுக்கு பதில் நான் செய்ய வேணாம்ன்னு சொன்னதை செஞ்சேயிருக்கலாம்ன்னு சொன்னவ.
 
என் வாய் சும்மாயில்லாம செய்யுதேன்னு சொல்லிட்டேன்.
 
என்ன சொன்னேன்னு திரும்ப கேட்டாவ, ஆத்துக்கு போவணும்… சந்தைக்கு போகணும் ஆத்தா வையும் என்ற ரேஞ்சில் நா சொல்ல சிரிச்சுட்டே சரி போவோம்ன்னு என் கன்னத்தை தட்டினாவ.
 
எனக்கு சிலிர்த்து போச்சு ஒரு செகண்ட், நா ஆசைப்பட்ட மாதிரி ஆத்துக்கு வந்துட்டேன்.
 
வண்டியை தூரவே நிறுத்திட்டு ரெண்டு பேரும் இறங்கி நடந்தோம். இந்த நேரத்துலயும் சிலர் குளிக்க வந்திருந்தாவ.
 
நா ஒரு அஞ்சு நிமிஷம் தண்ணியில நின்னுட்டு வரேன்னு சொல்லிட்டு வந்திட்டேன்.
 
வீட்டுக்கு வந்தாச்சு. டிரெஸ் எல்லாம் எடுத்து வைச்சாச்சு. ஸ்டேஷன் போகணும், அவிய வண்டியை அவிய சொந்தக்காரங்க ஒருத்தங்க தான் ஓட்டிட்டு வந்தாவ.
 
இவிய இங்க வந்தா மட்டும் அவிய வண்டியை கொண்டு வந்து விடுவா போல. மத்த நேரத்துல எங்க இருக்கும்ன்னு எனக்கு தெரியலை.
 
ஸ்டேஷன்க்கு வந்தாச்சு. இவிய எல்லாத்தையும் வைச்சுட்டு அல்வா வாங்கிட்டு வர்றேன்னு போனவ.
 
எங்கம்மா, அப்பா, அக்கா, அத்தான் எல்லாரும் வந்தவ. மறுபடியும் அம்மா எனக்கு அட்வைஸ் பண்ண ஆரம்பிச்சவ. பொறவு அத்தைட்ட என்னைய பாத்துக்கிட சொல்லி சொல்லிட்டு இருந்தவ. அதுக்குள்ள இவிய வரவும் ட்ரைன் வரவும் சரியா இருந்துச்சு.
 
எல்லாத்தையும் எடுத்து வைச்சோம். அது கூபே மாதிரி இருந்துச்சு, நானு, இவிய, இவிய அக்காவும் அவிய புருஷனும் ஒண்ணா ஒரு கூபே. மத்தவிய ஒரு கூபேல இருந்தாவ. ட்ரைன் கிளம்புச்சு, எனக்கு மனசே கனத்து போச்சு.
 
அழுகையா வருது எல்லார்க்கும் பை சொன்னேன். இவிய என் பின்னாடியே அணைவா நின்னுட்டு இருந்தாவ.
அதுவே எனக்கு ஒரு பலத்தை கொடுத்துச்சு. “எதுக்கு பீல் பண்ணுறே நான் தான் இருக்கேன்லன்னு சொன்னாவ…”
 
அப்படியே அவிய மேல சாஞ்சுக்கிட்டேன். என்னைய தட்டிக் கொடுத்தாவ “உள்ள போலாம் வான்னு…” சொன்னாவ.
 
சாப்பிட்டு படுத்தோம். நீயும் அக்காவும் பர்த்ல படுத்துக்கோங்கன்னு சொன்னாவ.
 
“நான் மேலேயே படுத்துக்கறேனேன்னு சொன்னேன். சரின்னு சொல்லிட்டு அங்க இருந்த பெட்டி எல்லாம் ஒதுக்கி கொடுத்தாவ படுக்கச் சொல்லி.
 
எனக்கு தூக்கமே வரலை நாளைக்கு நினைச்சு புது ஊரு, புது மனுஷங்க, புது விடியல் எல்லாமே நல்லதா நடக்கணும்ன்னு நெல்லையப்பரை வேண்டிக்கிட்டு கண்ணசந்தேன்…

Advertisement