Advertisement

1
 
“எக்கா கொஞ்சம் சும்மாயிருக்கா… வர்ற மாப்பிள்ளை என்னைய இப்படி பார்த்தா போதும்”
 
“ஏட்டி அவங்க உன்னைய பார்த்திட்டு கோட்டிக்காரி மாதிரி இருக்குன்னு சொல்லிற போறாங்கட்டி…”
 
“சொன்னா சொல்லிட்டு போறாங்க… அதுக்காக எல்லாம் என்னால அலங்காரம் செஞ்சுக்க முடியாது…”
 
“என்னவோ பண்ணிக்கோட்டி…”
 
“இதோ போறால்ல அவதா எங்கக்கா பேரு ஸ்ரீவித்யா… நாந்தா ஸ்ரீவள்ளி… வீட்டுல எல்லாரும் வள்ளின்னு கூப்பிடுவாங்க… இன்னைக்கு என்னைய பொண்ணு பார்க்க வாறாவ…”
 
“அதுக்குதேன் எங்கக்கா என்னைய அலங்காரம் பண்ணிகிட சொல்லுதா… எனக்கு அதெல்லாம் புடிக்காதுங்க…”
 
“வாசல்ல ஏதோ சத்தம் கேக்குது. வண்டி வந்து நிக்குதுன்னு நினைக்கேன்… மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வந்திட்டாங்க போல… வாங்களேன் போய் எட்டிப்பார்ப்போம்…”
 
“இது தான் மாப்பிள்ளையோட அப்பான்னு நினைக்கிறேன், தலையில ஒரு கிரவுண்டுக்கு இடம் வாங்கி போட்டிருக்கார்…”
“ஆத்தி இந்த தடியங்கா (பூசணிக்கா) தான் மாப்பிள்ளையோட அம்மா போல, எம்புட்டு நகையை போட்டுட்டு சுத்துது… இது அக்காவோ இல்லை தங்கையாவோ இருக்கும் போல, சின்ன ரவுண்டாவும் இல்லாம பெரிய ரவுண்டாவும் இல்லாம தோராயமா ஒரு ரவுண்டுல இருக்கு…”
 
“இது யாருய்யா… ஓ!! மாப்பிள்ளை வீட்டுக்கு வந்த மாப்பிள்ளை போல அதாங்க அவியளுக்கு புருஷன்னு நினைக்கேன்… அடுத்து யாரு இவன் தான் மாப்பிள்ளையா, இல்லையே சின்னப்பையனா தோணுது…”
 
“மாப்பிள்ளைக்கு தம்பி போல, சோடாபுட்டி போட்டு இருக்கான். ரொம்ப படிப்பான் போல, மண்டை இப்போவே முன்னாடி ஏறிப்போச்சு…”
 
“அதென்னையா மாப்பிள்ளைன்னா முதல்ல உள்ள வரக்கூடாதா, எல்லார்க்கும் பின்னாடி தான் இவரு வருவாரோ, ரொம்ப தான்…”
 
“அச்சச்சோ மத்த எல்லாரை பத்தியும் சொன்னேன். இவரு பின்னாடி வந்திட்டார்ன்னு திட்டினதுல சரியா பாக்கலை… சரி நேர்ல போய் பார்க்கும் போது சொல்லுதேன் எப்படி இருந்தாவன்னு…”
 
“கொஞ்ச நேரத்துக்கு அடக்க ஒடுக்கமான பிள்ள போல  இருந்துகிடுதேன்… இல்லைன்னே எங்கம்மா ராஜம் வந்து பேயாட்டம் போடுவாவ…
“யாருய்யா கண்டுப்பிடிச்சது இந்த பொண்ணு பார்க்கற சடங்கை எல்லாம். ச்சை, முடியலை… பேசாம லவ்வே பண்ணியிருக்கலாம் போல…”
 
“என்ன பார்க்கறீங்க நான் சொல்றது சரி தானே… உங்களுக்கும் அப்படித்தானே தோணுது. பார்க்கற அந்த பொண்ணையே கட்டிக்கிட்டா பரவாயில்லை… அந்த பொண்ணு பிடிக்கலை, பேச்சு வார்த்தை ஒத்துவரலைன்னா வேற பொண்ணை பார்ப்பாங்க…”
 
“இதெல்லாம் தாங்க எனக்கு பிடிக்கலை… வீட்டில என்ன சொன்னாலும் சரி, நான் அந்த பொண்ணுக்கிட்ட பேசத்தான் போறேன். பார்த்ததும் பிடிக்காம போற பொண்ணு கூட பேசினா பிடிக்கலாம்ல…”
 
“எல்லார்க்கும் முதல் பார்வையிலேயே பொண்ணை பிடிக்கணும்ன்னு என்ன அவசியம் சொல்லுங்க. பேசினா தானே அவங்களைப் பத்தி தெரிஞ்சுக்க முடியும். அதான் நான் முடிவு பண்ணிட்டேன் அந்த வள்ளிக்கண்ணுக்கிட்ட பேசணும்ன்னு…”
 
“என்ன நான் அந்த பொண்ணுக்கு செல்ல பேரு வைச்சு கூப்பிடறேன்னு பார்க்கறீங்களா… அதான் இல்லை, அந்த பொண்ணு பேரு சொன்னதுல இருந்து எனக்கு அந்த பேரு இப்படி தான் மனசுல பதிஞ்சு போச்சுங்க…” (நம்பிட்டோம்டா சாமி… நாங்க நம்பிட்டோம்…”
 
தலையை படிய வாரி சீவியவன் வலக்கை கொண்டு அந்த முடியை முன்னிச்சியில் லேசாய் கலைத்துவிட்டான்.
“இதுக்கு எதுக்கு சீவணும், இதானேங்க உங்க மைன்ட் வாய்ஸ்… எப்படி கேட்ச் பண்ணேன் பாருங்க…” (என்னவொரு அறிய கண்டுப்பிடிப்பு)
 
“அதெல்லாம் ஸ்டைல்ங்க… உங்களுக்கு சொன்னா புரியாது” என்று சொல்லிக்கொண்டே ஸ்ப்ரே எடுத்து அவன் மேல் அடித்துக் கொண்டான்.
 
“எங்கம்மா கூப்பிடுறாங்க, நான் ரெடியான்னு கேட்கத்தான்…”
 
“இதோ வந்திட்டேன்மா…” என்றவன் அவனறையில் இருந்து வெளியில் வந்தான்.
 
“நீ ஒருத்தன் கிளம்ப எவ்வளவு நேரம் பாரு… அவங்ககிட்ட பத்து மணிக்கு வர்றேன்னு சொன்னோம். இங்கவே ஒன்பதரை மணி ஆகிப்போச்சு…” என்று என் அம்மா என்னை செல்லமாய் வைதார்.
 
“சரி சரி போதும்… வாங்க கிளம்பலாம்…” என்றுவிட்டு நான் என்னுடைய காரை வெளியில் எடுத்தேன்.
 
“எனக்கு இந்த ஊர் ரொம்ப பிடிக்குங்க… அதுவும் குறிப்பா இந்த இடம் சிந்துப்பூந்துறை… எவ்வளவு அழகான பேருல… எந்த ஊருன்னே சொல்லாம நான் பாட்டுக்கு பேசிட்டு இருக்கேன் பாருங்க…”
 
“திருநெல்வேலி தாங்க எங்களோட சொந்த ஊர். நாங்க இப்போ இருக்கறது சென்னை தான். தாத்தா, ஆச்சி இங்க இருக்கும் போது வருஷா வருஷம் லீவுக்கு வருவோம்… இப்போ அவங்க யாரும் இங்க இல்லை. அவங்க கட்டி வைச்சிருந்த வீடு தான் இருக்கு…”
 
“நாங்க எப்பவும் போல வருஷத்துக்கு ஒரு முறையோ இல்லை ரெண்டு முறையோ வந்து போவோம்… கீழ இருக்க வீடு பழைய மாதிரி அப்படியே விட்டுட்டோம், மேல இருக்கறது நான் புதுசா லேட்டஸ்ட் மாடல்ல கட்டினது…”
 
“அவங்களாம் வந்து வண்டியில ஏறுறதுக்கு முன்ன இந்த ஊரோட அழகை கொஞ்சம் பார்த்திடலாமா…”
 
“இங்க பக்கத்துல தாங்க தாமிரபரணி ஆறு ஓடுது, பாருங்க பெண்கள் எல்லாம் கையில அன்னக்கூடையை தூக்கிட்டு ஆத்துக்கு குளிக்க போறதை…”
 
“அதுக்கு எதுக்கு அன்னக்கூடையை தூக்கிட்டு போறாங்கன்னு தானே யோசிக்கறீங்க… அதுல தான் துவைக்க வேண்டிய துணியை எல்லாம் போட்டு எடுத்திட்டு போவாங்க….”
 
“இப்போ தான் குளிக்க சிலர் போறாங்க. அந்தா கொஞ்ச பேரு குளிச்சுட்டு கைலியை கட்டிட்டு ஈரக்கூந்தல் காயவிட்டு வர்றாங்க பாருங்க… இதெல்லாம் பார்க்கறதே ஒரு சுகங்க…”
 
“அப்படிலாம் பார்க்காதீங்க, மீ குட் பாய் தான். நான் அவங்களை சைட் எல்லாம் அடிக்கலை, ஆனா இந்த மாதிரி சின்ன சின்ன விஷயங்களை ரசனையோட பார்ப்பேன்னு சொல்ல வந்தேன்…”
 
“ஏன்மா என்னை கிளம்பலைன்னு திட்டிட்டு நீங்க எல்லாம் ஆடி அசைஞ்சு வர்றீங்க… இப்போ மட்டும் லேட் ஆகலையா… நான் வண்டியை வெளிய எடுத்துவிட்டு பத்து நிமிஷம் ஆகுது…”
 
“அதெல்லாம் கரெக்ட்டா பத்து மணிக்கு நாம அங்க போய்டலாம்… இங்க இருக்க உடையார்பட்டி தானே…” என்று சொன்னது என் அம்மாவே தான்.
 
சிந்துப்பூந்துறையில் இருந்து உடையார்பட்டி மிக அருகிலேயே உள்ளது. ஒரு பத்து நிமிடத்திற்குள் சென்றுவிடும் தூரம் தான்.
 
வெளியில் பார்வையை ஓட்டியவாறே வண்டியை ஓட்டிக்கொண்டிருந்தேன். மனதில் அப்பெண்ணின் உருவத்தை கொண்டு வர முனைந்தேன்.
 
பெண் வீட்டில் இருந்து கொடுத்த போட்டோவை வீட்டினர் அவனுக்கு முன்பே காண்பித்திருந்தனர். ஆனால் அவனுக்கு முகம் அந்த அளவிற்கு ஞாபகத்திலேயே இல்லை.
 
“விடுங்க நான் நேர்ல போய் பார்த்திட்டு அவ எப்படி இருக்கான்னு உங்ககிட்ட சொல்றேன்”
 
“ஏலே அடுத்துவார முக்குல வண்டியை திருப்பணும்ல” என்றது என்னைப் பெற்ற மகராசியே.
பெண் பார்ப்பதற்கு வீட்டில் இருக்கும் அனைவருமே சென்றுக் கொண்டிருக்கிறோம். இப்படி எல்லாரும் மொத்தமாய் சென்று நின்றால் அந்த பெண்ணுக்கு கூச்சமாக இராதா…
 
நான் சொன்னா எங்கம்மா கேட்கவா போறாங்க… எதாச்சும் சொன்னா என் பால்ய சினேகிதியோட பொண்ணுடா… அவளைப் பார்க்க எல்லாரும் போனா தான் நல்லாயிருக்கும்… என்று சொல்லி என்னை ஆப் பண்ணிவிடுவார்.
 
“முன்னாடி வேப்பமரம் இருக்குல இந்த வீடு தான் நிறுத்து நிறுத்து…” என்றார் என் அம்மா.
 
“அம்மா அதோ நாலு வீடு தள்ளி கூட ஒரு வீட்டில முன்னாடி வேப்பமரம் இருக்கு…” என்றேன் நான் நக்கலாய்.
 
“என்னடா நக்கலா…”
 
“பின்னே வேப்பமர வீடு நிறுத்துன்னு சொன்னா, வேற எப்படி சொல்றதாம். இப்படி தான் அடையாளம் சொல்வாங்களா…” என்றேன் நான்.
 
“சரி சரி வாய் பேசாம உள்ள வா…” என்றுவிட்டு அவர்கள் கீழே இறங்கி நின்றனர்.
 
“எதுக்கு இங்க நிக்கறீங்க??” என்றேன்.
 
“உள்ளப் போகத்தான்…”
“அப்போ போக வேண்டியது தானே…”
 
“நீயும் வாடா…”
 
“முதல்ல நீங்க போங்க…” என்றுவிட்டு சற்று பின் தங்கி அனைவருமே சென்ற பிறகே உள்ளே சென்றேன்.
 
“இப்போ என்ன நான் எதுக்கு பின்னாடி போனேன்னு தெரிஞ்சுக்கணும் உங்களுக்கு அதானே. ரெண்டு விஷயத்துக்காக தாங்க அப்படி செஞ்சேன்…”
 
“ஒண்ணு முதல்ல நான் நேரா உள்ள போனா அவங்க என்ன நினைப்பாங்க… இதுவே அம்மா, அப்பா எல்லார் பின்னாடியும் போனா எனக்கும் கொஞ்சம் எம்பரசிங்கா இருக்காது அவங்களுக்கும் எதுவும் தோணாதுல”
 
“ரெண்டாவது விஷயம் கேட்டு என்னை ஒரு மாதிரி பார்க்காதீங்க…”
 
“ரகசியம் காதை கொடுங்களேன்… ஒரு வேளை பொண்ணு எங்காச்சும் ஒளிஞ்சு நின்னு என்னை பார்க்குறாளான்னு பார்க்கத்தான் நான் லேட்டா போகணும்ன்னு நினைச்சேன்…”
 
“பாருங்களேன் நான் நினைச்சது சரி தான். அந்த பொண்ணு என்னைய தான் பார்த்திட்டு இருக்கா. அப்படிலாம் பார்க்காதீங்க… நான் அவளை பார்க்கலை, ஆனா அவ என்னை பார்க்கறா அப்படிங்கறதை என்னால உணர முடியுதுங்க…”
 
“அந்த ஜன்னலை பாருங்க அந்த ஸ்க்ரீனை இப்போ லேசாய் இழுத்து மூடினது யாருன்னு தெரியுதா…”
 
“கண்டிப்பா அவளா தான் இருக்கும்… அவளுக்கும் என்னை பார்க்கறதுல ஆர்வம் வந்திருக்கு. எனக்குமே இப்போ தான் குளுகுளுன்னு இருக்கு. ரொம்ப எக்ஸ்சைடிங்கா இருக்குங்க…”
 
“உங்ககூட பேசிட்டே இருந்தேன் அப்புறம் எல்லாரும் வெளிய வந்திடுவாங்க… நான் உள்ளே போறேன்பா…”
 
“வாங்க தம்பி, நல்லா இருக்கியளா, சின்னப்போ பார்த்தது…” என்றார் அங்கிருந்த பெரிய மனிதர்.
 
வள்ளிக்கண்ணுவின் அப்பாவாக இருக்கும். அதே கண், அதே மூக்கு… (போட்டோவை பார்க்கலைன்னு சொல்லிட்டு என்ன வேலைடா பாக்க நீயி)
 
என் அம்மா அவரின் பால்ய சிநேகிதியுடன் அளவளாவ வள்ளிக்கண்ணுவின் தந்தை அவரை இடைமறித்தார்.
 
“ராஜம் அப்புறம் பேசிகிடு, வந்தவுகளுக்கு காபித்தண்ணி கொண்டா…” என்றவர் தன் மூத்த மகளை அழைத்தார் “வித்யா” என்று.
 
“அப்பா…” என்று வந்து நின்ற அப்பெண் எங்களை வரவேற்கும் விதமாய் பார்த்தாள்.
 
“இவ தான் என் பெரிய பொண்ணு. மாப்பிள்ளை கனடாவுல இருக்காரு… அடுத்த மாசம் இவளுக்கு விசா வாங்கிட்டு கூட்டிட்டு போறேன்னு சொல்லி இருக்காவ…” என்றார் அவராகவே.
 
‘இதெல்லாம் எங்களுக்கு எதுக்கு சொல்லிட்டு இருக்கீங்க…’ என்று நினைத்துக் கொண்டேன் நான்.
 
‘பொண்ணை எப்போடா கண்ணுல காட்டுவீங்க…’ என்ற என் மைன்ட் வாய்சை என் அம்மா கேட்ச் செய்துவிட்டார்.
 
“சின்னவளை பார்க்கலாமா… சின்னப்போ எங்க வீட்டுக்கு அடிக்கடி வருவா… அப்போ பார்த்ததுதேன்… அத்தை மாமா என்னை அடிச்சிட்டே இருக்காரு எப்போ பார்த்தாலும் சொல்லுவா…”
 
‘மாமாவா… எங்கப்பா எதுக்கு அவளை அடிச்சாரு…’ என்று நிமிர்ந்து முறைப்பாய் நான் அவரை பார்த்து வைத்தேன். அவரோ இவன் எதுக்கு இப்படி பார்க்குறான் என்று பதில் பார்வை பார்த்தார்.
 
“ஆமாங்க என்கிட்ட கூட வந்து கோளாறு சொல்வாப்புல. நான் அவளைத்தேன் ஏசுவேன்… நீதேன் அவுங்க சொல்ற பேச்சு கேட்டிருக்க மாட்டேன்னு…”
 
“நீ என்னடா பார்க்குற, உனக்கும் அவளுக்கும் தான் சின்னப்போ சண்டை வரும். எப்பவும் முட்டிக்கிடுவீங்க…”
 
‘அடப்பாவிகளா இவ்வளவு நேரமும் நீங்க மாமான்னு சொன்னது என்னைய தானா… நான் எப்போ இவ கூட சண்டை போட்டிருப்பேன். சத்தியமா அது என் ஞாபகத்துலவே இல்லவே இல்லைங்க…’
 
‘யோவ் உன் பொண்ணை கூப்பிடுய்யா…’ என்று நான் வாய்விட்டு முணுமுணுத்ததை என் அத்தான் பார்த்துவிட்டார்.
 
“கொஞ்சம் பொறு மாப்பிள்ளை. தங்கச்சி இப்போ வந்திரும்…” என்றார் அவர் பதிலுக்கு.
 
அவரைப்பார்த்து காது வரை இழுத்த புன்னகை ஒன்றை கொடுத்துவிட்டு வேறு புறம் திரும்பிக் கொண்டேன்.
 
“வித்யா வள்ளியை கூட்டிட்டு வாலே” என்று ஒருவழியாக தன் திருவாய் மலர்ந்தார் வள்ளிக்கண்ணுவின் தந்தை.
 
“காபி எடுத்துகிடுங்க தம்பி…” என்று என் கண்முன் ஒரு கோப்பை நீட்டப்பட அதை வாங்கிக் கொண்டேன்.
 
“எங்க ஆச்சி போடும் அதே கருப்பட்டி காபியின் மணம். மூச்சை இழுத்து நாசி வரை அதன் மணத்தை உள்வாங்கினேன்”
 
“கொஞ்சம் கொஞ்சமாய் அதை பருகிய வேளை அவள் வந்துவிட்டாள்…”
 
“எவ்வளவு நேரம் தான் உள்ளயே இருக்கறது. எனக்கெல்லாம் காலு வீட்டுலவே தங்காதுங்க… நடந்துக்கிட்டே இருப்பேன், இல்லை எதையாச்சும் உருட்டிக்கிட்டே கிடப்பேன்…”
 
“என்னைய போய் இம்புட்டு நேரம் காக்க வைச்ச அந்த மாப்பிள்ளை மண்டையை உடைக்கணும் போல இருக்கு இப்போ எனக்கு…”
 
“என்னடா இப்படி தனியா புலம்புறான்னு பாக்குறீங்களோ. வேற என்னதான் நான் இப்போ செய்ய… இந்த வித்தி அக்காவும் வெளிய போய்ட்டா… வந்தவுங்க முதல்ல என்னை பார்த்து உள்ள அனுப்பிடலாம்ல…”
 
“பாருங்க எனக்கு வேற டென்ஷன் ஆகுது. முகமெல்லாம் வேர்க்குது, பதட்டமா வேற இருக்கு. நெஞ்செல்லாம் படபடன்னு அடிச்சுக்குது… பாருங்க உங்ககிட்ட பேசும் போது காத்து தான் வருது…”
 
இருங்க வெளிய காது கொடுத்து கேட்போம், என்ன பேசுறாங்கன்னு. ‘அட அப்பாவே எதுக்கு இப்படி பேசிக்கிட்டு இருக்காரு…’
 
‘அய்யோ இந்த தடியங்கா, சாரி அத்தையம்மா என்ன புது கதைலாம் சொல்லுது. ஆத்தி சின்ன வயசுல நானும் அவரும் ஒண்ணா விளையாண்டு இருக்கோமா…’
 
‘இதென்னடா கூத்து… மாமாவாம்ல, இப்படி வேற கூப்பிட்டு தொலைச்சு இருக்கேனா… முதல்ல வாயை நல்லா வசம்பு வச்சு தேய்க்கணும்…’
‘அப்பா என்னைய கூட்டிட்டு வரச் சொல்லுதாவ. அக்கா வருவாளே’ என்று எண்ணிய மாத்திரத்தில் மீண்டும் முகத்தில் வியர்வை துளிகள் அரும்பியது எனக்கு.
 
“அவங்க முன்னாடி கையெடுத்து கூம்பிடணும்…” என்று என் அக்கா சொல்லிய போது, நான் சாமி முன்னாடி தான் கூம்பிடுவேன், சாக்கடை முன்னாடி இல்லை என்று விஜய் டயலாக்கை என் வாய்க்கு வந்தப்படி மனதிற்குள் ஓட்டினேன். இருந்தாலும் முகத்தை அப்பாவி போல வைத்துக்கொண்டு வெளியே வந்தேன்.
 
“என் பொண்ணு ஸ்ரீவள்ளி…” என்று என் தந்தை என்னை அவர்களுக்கு அறிமுகப்படுத்த தலை நிமிர்த்தி அவர்களுக்கு வணக்கம் வைத்தேன்.
 
கல்யாண வீட்டில் இப்போதெல்லாம் புதிதாய் ஒரு பொம்மை வைக்கிறார்களே கைக்கூப்புவது போல. அப்படி தான் உணர்ந்தேன் அக்கணம் என்னை நினைத்து.
 
‘இதோ வந்திட்டா, நிமிர்ந்து பாருடா ஆரவ்’ என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டேன். ‘வணக்கம் எல்லாம் வைக்குறா… அழகா தான் இருக்கா, அதே கண்ணு, அதே மூக்கு… இவ அவங்க அப்பா மாதிரியே தான் போல…’ நான் தான் அவளைக் குறித்து நினைத்துக் கொண்டேன்.
 
‘ஆமா நான் மட்டும் தான் பார்க்குறேன். அவ என்னை பார்த்தாளா இல்லையா… ஆரவ் காபி குடிச்சது போதும்டா, அவகிட்ட பேசணும்ன்னு சொல்லிடு…’ என்று நினைவுப்படுத்திக் கொண்டேன். அவள் என்னை பார்ப்பது போலவே தோன்றவில்லை. ‘ச்சே என்னடா’ என்றானது எனக்கு. “நான் உங்க பொண்ணுக்கிட்ட தனியா பேசணும்” சொல்லியேவிட்டேன்.
 
“ஏலேய் என்னலே இது…” என்று என் அம்மா என்னை கடியும் பார்வை பார்க்க அதையெல்லாம் புறந்தள்ளினேன்.
 
அவளின் தந்தையை தான் பார்த்தேன் என்ன சொல்வாரோவென்று. “தம்பியை எதும் சொல்லாதீய… அவுக பேசிக்கட்டும். நாளைக்கு வாழப்போறவுக அவுக தான்… அவுகளுக்கு பிடிக்க வேணாமா…” என்று சொல்லி அவர் என் வயிற்றில் பாலை வார்த்தார்.
 
‘ஐயோ இந்த அப்பா என் நெஞ்சுல ஆசிட் ஊத்துதாவா…’ என்று என் தந்தையை ஏசினேன் நான். பின்னே அவர் என்னிடம் தனியாக பேச வேண்டும் என்று சொன்னால் சரியென்று சொல்லிவிடுவாரா.
 
“வள்ளிம்மா தம்பியை மச்சிக்கு கூட்டிட்டு போடா…” என்று என் தந்தை சொல்ல வேண்டா வெறுப்பாய் தலையாட்டிவிட்டு நான் முன்னே செல்ல அவர் என் பின்னே வந்தார்.
 
‘என்ன சொல்வாவலோ’ என்று நான் படியேறினேன்.
 
“எப்படி பேசலாம்” என்று எண்ணிக்கொண்டே நான் அவளின் பின்னே சென்றேன்.

Advertisement