கடந்த மூன்று வாரங்களாக தொலைபேசியில் ஸ்ரீயுடன் கடலை போட்டுக்கொண்டிருந்தான். ஸ்ரீ இப்போது நிதி ஆகியிருந்தாள்.
“எல்லாரும் உன்னை ஸ்ரீன்னு கூப்பிடறாங்க… நான் நிதின்னு கூப்பிடறேன் ஹனி.”, என்று ஒரு நாள் உருக,
“ம்க்கும்… தில் இருந்தா ஹனின்னு கூப்பிடு பார்க்கலாம் ? “, என்று அதற்கும் ஓட்டினாலும், தந்தையின் பிரத்யேக வனா அழைப்பு போல தனக்கும் நவீன் நிதி என்று கூப்பிடுவது பிடித்தது. சொல்லிவிட்டால் அவள் கெத்து என்னாவது என்று போனால் போகிறது என்பதுபோல ஏற்றுக்கொண்டாள்.
இன்னொரு நாள், “இங்கருந்து என்ன நிதி வாங்கிட்டு வரட்டும் உனக்கு? ப்ர்ஃப்யூம் எதுவும்…?“ என்று கேட்க,
“அதெல்லாம் வேணாம்… அங்க லிக்கர் சாக்லேட் கிடைக்குமாமே…. அது வேணும்.”, என்றாள் அனாயசியமாக.
“ ஏய்…அதுல ஆல்கஹால் இருக்கும்மா…”
“ம்ம்… நான் என்ன கருப்பட்டி இருக்கும்னா சொன்னேன் ? அதுல வேற வேற ஃப்ளேவர்ல கோனியாக், விஸ்கி, வைன், சாம்பெயின்னுன்னு ஒவ்வொரு சரக்கு வெச்சு சாக்லேட் பண்றாங்க. அது மாதிரி கலந்து வாங்கிட்டு வா.”, என்று விலாவாரியாக ஆர்டர் பறந்தது.
“உனக்கு எப்படி இவ்ளோ டீடெய்ல் தெரியும் ?”, சந்தேகமாக ஸ்ரீயை பார்க்க,
“ராக்கி கசின் யாரோ இது வாங்கிட்டு வந்தாங்கன்னு எடுத்துகிட்டு வந்தான். சரக்குதான் அடிக்கலை… ஒரு டேஸ்ட் கூட பண்ணதில்லை இந்த 90ஸ் கிட்ன்னு நாள பின்ன வரலாறு தப்பா பேசக்கூடாதேன்னு சாப்பிட்டேன்… சும்மா சொல்லக் கூடாது… அட்டகாசமா இருந்துச்சு.”, ஸ்ரீ சப்பு கொட்டி சொல்லவும்,
பாவம் ராகுல் …இப்போது இரண்டு பேரிடமும் வாங்கிக் கட்ட, போன் வந்தாலே அலறும் அளவிற்கு பரிதாபமான நிலைமையில் இருந்தான்.
“சும்மா துள்ளாதேப்பா… கடங்காரன் ஒரு நாளைக்கு ஒரு சாக்லேட்தான் தருவேன்னு ரேஷன் பண்ணித்தான் குடுத்தான்… இல்லைன்னா அம்மாகிட்ட மாட்டிவிட்டுருவேன்னு மிரட்டல் வேற…இத்தனை ஹிட்லருங்க மத்தியில ஒரு பொண்ணு எப்படித்தான் சேட்டை பண்றது?”, அவள் கேட்ட பாவனையில் கலகலத்து சிரித்தான் நவீன்.
“ம்ம்… வாங்கிட்டு வரேன்… கல்யாணத்தன்னைக்கு நைட் ஸ்பெஷலா சாப்பிடலாம்.”, அவன் சப்புகொட்டி சொன்னதும் முழிப்பது ஸ்ரீயின் முறையானது.
சாந்தி முஹூர்த்தப் பட்டு என்று கோகிலா ஆரம்பித்தவுடனேயே நவீனிடம் தெளிவாக சொல்லியிருந்தாள் ஸ்ரீ. “உங்கம்மா என்னை சினிமால வரமாதிரி அலங்காரம் பண்ணி கையில் பால் சொம்பைக் குடுத்து, ஊரைக் கூட்டி வேடிக்கை பார்க்க வெச்சு அனுப்பினாங்க…. நான் ரூமுக்கு வரமாட்டேன்… வாசலுக்குத்தான் போவேன்… நீ என்ன செய்வியோ தெரியாது, இது எங்க வீட்ல நடக்கணும்னு சொல்லிடு, முக்கியமா உங்க அம்மாவை சாயந்திரமே பாக் பண்ணு… இல்லைன்னா இங்கேயும் வந்து, என் புள்ள ஃபர்ஸ்ட் நைட் ரூமுக்குள்ள போறதைப் பார்க்கணும்னு கனவு கண்டுகிட்டு இருந்தேன்னு சொல்லுவாங்க….. அப்பறம் வீணா வெட்டு குத்து ஆகிரும்.”
அவள் சொல்வதைப் போல செய்யக்கூடியவர்தான் கோகிலா. அதனால் நவீனால் ஸ்ரீயை கடிந்துகொள்ளவும் முடியவில்லை. முடிவில் சக்கரவர்த்தியிடம் சரணடைந்தான்.
“டேய் என்னை என்ன மகாபாரத கிருஷ்ண பரமாத்மா ரேஞ்சுக்கு தகிடுதத்தம் பண்ற சொல்ற? “, என்றவர் ஒரு நிமிடம் சிரித்துவிட்டு,
“டேய்… ஸ்ரீ பொண்ணு சொன்னதை கொஞ்சம் நினைச்சு பாரேன் ….ஹா ஹா… சொம்பு பாலையும் உன் தலையில் கொட்டி அதாலேயே உன் மண்டைமேல நங்ண்ணு ஒன்னு வெச்சிட்டு… ஹ ஹா ஹா…”, என்று கண்ணில் நீர வர சிரிக்க,
கலாய்த்தாலும், ஆபத்பாந்தவனாக சக்கரவர்த்தி கச்சிதமாக காய் நகர்த்தி, அன்று இரவு ரயிலில் பட்டாளங்களோடு கோயம்பத்தூர் திரும்ப டிக்கெட் போட்டுவிட்டார். கோகிலாவிடம், மகன் ஒரு நாள் இருந்து, கையோடு மறுவீடு முடித்துவிட்டு வந்துவிட்டால், அப்பறம் ரிசெப்ஷன் வரை இங்கேயே இருக்கலாம் என்று ஆசை காட்டியிருந்தார். அடுத்த இரு வாரங்களில் ஆஸ்திரேலிய பயணத்துக்கான காம்பிற்கு பெங்களூர் சென்றுவிடுவான் என்பதால் கோகிலாவும் சம்மதித்தார்.
கல்யாண நாள் காலை ஸ்ரீ பயங்கர கோபத்தில் இருந்தாள். “டேய் ராக்கி… என்னடா நினைச்சிட்டு இருக்காங்க? எங்கப்பா லட்ச லட்சமா செலவு பண்ணி கல்யாணம் பண்ணுவாரு, ஊரே சாப்பிடும், ஆனா மெனு போட்ட நான் பட்டினியா இருக்கணுமா? இப்படி கொலைப் பட்டினியா இருந்தா எங்கடா நான் கல்யாணத்தை அனுபவிக்க ? “, என்று காய்ந்தாள்.
“ஸ்ரீ… மெதுவா…. லன்ச் சாப்பிடலாம்டி… காலையிலதான் சாப்பிடக் கூடாதாம்.”, ராக்கி சமாதானம் செய்ய, “ அறிவு கெட்டவனே… பசியில சுருண்டு போயிருந்தா, லன்ச் எப்படிடா எஞ்சாய் பண்ண முடியும் ? அதுவும் காலையில பக்லாவா, கீரை வடை, செட்டி நாடு வெள்ளை பணியாரம், கார சட்னின்னு ஆசை ஆசையா சாப்பிட காத்திருந்தேனே… எனக்குத் தெரியாது…. நான் சாப்பிட்டாகணும். நீ ஏற்பாடு பண்றியா… இல்லை நானே போய் சண்டை பிடிக்கட்டுமா?”
அவள் காந்தியதில், தலையில் அடித்துக்கொண்டவன், “நான் போய் எடுத்துட்டு வரேன்… நவீன் சைட் சொந்தக்காரங்க யாரும் பார்த்துட்டா வம்பாகிரும். அதை நீ க்ளியர் பண்ணு.”, என்று சொல்லி, தன் தோள் பையை தூக்கிக் கொண்டு போனான்.
அடுத்து போன் நவீனுக்குப் பறந்தது. “ஷ்… நாந்தான்… இங்க எனக்கு சாப்பாடு போடாம விரதம்னு சொல்லி பட்டினி போடறாங்க.”, என்றாள் புகாராய். ஆனாலும் குரல் கிசுகிசுப்பாய் வந்தது.
“ஹி ஹி… நானும் தான் மா…கல்யாணம் முடிஞ்சதும் ஒரு பதினொரு மணிக்கெல்லாம் சாப்பிடலாம் நிதிமா…”, என்ற நவீனுக்கு அடுத்த ஒரு நிமிடம் காது தீய்ந்தது. பின்பு,
“இங்க உங்க அம்மா ஒரு ஸ்பை போட்டுட்டு போயிருக்காங்க. உனக்கு அக்காவாம். கீதாவோ சீதாவோ… கிளப்ப வை. மத்தவங்களை துரத்திட்டு நான் சாப்பிடணும்.”, ஸ்ரீ சொல்லவும், “அப்ப நானு ? எனக்கும்தான் பசிக்குது.”, என்றான் நவீன்.
“ம்ம்.. உனக்கும் ஒரு பார்சல் அனுப்பறேன்… சாப்பிட முடிஞ்சா சாப்ட்டுக்கோ.”, பெரிய மனதுடன் சொன்னாள்.
ராகுல் நவீனுக்கான பார்சலை கொண்டு போய் கொடுக்க, வை ப்ளட்..சேம் ப்ளட் என்று ஸ்ரீயின் வசை மழையை ஒப்பிட்டு தேற்றிக்கொண்டனர்.
இப்படியாக தன் கல்யாணத்திலேயே திருட்டுத்தனமாக சாப்பிட்டு, ஒரு வழியாக மண மேடைக்கு மனமும் வயிறும் நிறைய, சந்தோஷமாய் வந்தனர் தம்பதியர்.
அவள் முகத்தை வைத்தே கண்டுபிடித்த ரோஜா, தங்கை மல்லியிடம், “கண்டிப்பா கொட்டிக்கிட்டுதான் வந்திருக்கா. பாரு, முகம் ப்ரகாசமா இருக்கு. பட்டினியா இருந்தா எள்ளும் கொள்ளும் வெடிச்சிருக்கும். அந்த கூட்டுக் களவாணிய விட்டு எடுத்துட்டு வர சொல்லி மொக்கியிருப்பா. நீதான் பாவம்னு வருத்தப்பட்டுகிட்டு இருந்த.”, என்று நொடித்தார்.
ஸ்ரீயின் ஜக்கம்மா காட்டிய காட்சி மெய்பட, கல்யாண கோலத்தில் நவீனும் ஸ்ரீநிதியும் அமர்ந்திருந்தார்கள். ஒரே பிள்ளை, ஒரே பெண் என்று பார்த்து பார்த்து வளர்த்த பெற்றோர் மனம் நிறைக்க மாங்கல்யத்தை ஸ்ரீயின் கழுத்தில் முடிச்சிட்டு மனையாளாக சபையோர் முன் அடையாளப்படுத்தினான் நவீன்.
மாலை ஸ்ரீயின் வீட்டில் எளிமையாக இரவு விருந்து பறிமாறப்பட்டு நவீனின் நெருங்கிய சொந்தம் உண்டு விட்டு இரயிலைப் பிடிக்கக் கிளம்பினார்கள். கோகிலா ரோஜாவிடம் சாந்தி முகூர்த்தத்திற்கு அறையை அலங்காரம் செய்ய, ஸ்ரீ புது புடவை கட்ட, வெள்ளி சொம்பில் பால் தர என்று அவர் ஆசையெல்லாம் சொல்லிக்கொண்டிருந்தார். கூடவே,
“இன்னிக்கு ஒரு பொழுது இருந்துட்டு கிளம்பியிருக்கலாம். இந்த மனுஷனுக்கு என்ன அவசரமோ, இப்படி சாயந்திரமே டிக்கெட்டை போட்டுட்டார். நீங்க முறையெல்லாம் பார்த்து செய்ங்க அண்ணி. “, என்று ரோஜாவிடம் சொல்ல,
“வீடு நிறைய ஆளுங்க இருக்கும்போது, இதெல்லாம் ஆரம்பிச்சா பிள்ளைங்களுக்கு கஷ்டம். நீங்க கிளம்பின கையோட எங்க பக்க சொந்தமும் கிளம்பிடும். அதுக்கு அப்பறம் நான் பார்த்துக்கறேன். இந்த காலத்து பிள்ளைங்க. அவங்க விஷயத்துல நாம ரொம்ப மூக்கை நுழைக்கக் கூடாது. அப்பறம், நமக்கு குடுக்கற மரியாதையை குடுக்க மாட்டாங்க அண்ணி. சில நேரம் பிள்ளைங்களை நாம நல்லா வளர்த்திருக்கோம். அவங்களுக்கு தெரியும்னு விலகி நில்லுங்க. நம்மை விட சிறப்பா பண்ணுவாங்க. “, ஏறின வரை ஏறட்டும் என்று தன்னாலானதைக் கூறினார் ரோஜா.
“ஆமாமா… நவீன் ரொம்ப பொறுப்பு.”, என்று கோகிலா ஆரம்பிக்கவும்,
“அதேதான். ஸ்ரீயும் ரொம்ப பொறுப்பு. அவங்களே சமைச்சு சாப்பிடற அளவு வளர்ந்தாச்சு. அப்பறமும் நாம ஊட்டி விடணும்னு நினைக்கக்கூடாது. நீங்க தைரியமா கிளம்புங்க.”, என்று புராணத்தை வெட்டி, கோகிலாவையும் குட்டி, அனுப்பினார்.
பத்து முறை பிள்ளையிடமும் மருமகளிடமும் சொல்லிவிட்டு, ஒரு வழியாக கோகிலா கிளம்பினார். நவீன் ரயிலேற்ற வருகிறேன் என்று சொல்ல, சக்கரவர்த்தி அவர் அண்ணன் மகன் வருவதே போதும் என்று தடுத்து விட்டார்.
அடுத்த அரைமணி நேரத்தில் வீடு காலியாகிக்கொண்டிருந்தது. நவீன், பாண்டியனுடன் வாசலில் வழியனுப்ப, ஸ்ரீ உள்ளே இருந்தாள். முல்லை அவளிடம் சொல்லிக்கொண்டு கிளம்ப, ராகுல் உள்ளே வந்தான்.
“ஏய்… ஜக்கி… என்னடி… ஒரு மாதிரி இருக்க ? என்னாச்சு?”, என்றான் தோழியை அறிந்தவனாக.
“ஹ்ம்ம்…. இல்லடா… அதெல்லாம் ஒன்னுமில்லை. கொஞ்சம் டயர்ட் “, என்றாள் ஸ்ரீ சமாளிப்பாக.
“என்னது டயர்டா…. அங்க ஒரு மனுஷன் கலர் கலர் கனவா கண்டுகிட்டு இருக்காரு. ஏமாத்திடதேடீ…. பாவம் உன் மாமியாரை எப்படியெல்லாம் சமாளிச்சு உன்ன கல்யாணம் பண்ணிருக்கார். அதுக்காகவாவது அவரை ஏமாத்தாம இருடி….”, என்றான் கிண்டலாக.
“ஏ… சீ.. பே…”, ஸ்ரீ அவன் வழக்கமான வசையைப் பொழிய,
“என்ன பிராப்ளம் ஜக்கி… எதுவும் பார்த்து தொலைச்சியா?”, என்றான் ராகுல் கிண்டலைக் கைவிட்டு.
“ம்ப்ச்… போன வாரம் வேலைக்காரம்மா காலை உடைச்சுக்கபோதுன்னு பார்த்து அம்மாகிட்ட சொன்னதோட சரி… அப்பறம் ஒன்னும் வரலை… இது வேற டா..”, என்றாள் லேசாய் ஒரு தவிப்புடன்.
“வேற என்ன?”
“ம்ம்… அது வந்து… நைட்டு… ம்ம்… கொஞ்சம் டென்ஷனா இருக்கு…”, என்று அவள் பயம் பற்றி கோடி காட்டவும்,
என்னவோ ஏதோ என்று நினைத்து பயந்து கொண்டிருந்தவன், “அடச்சே… நவீன் பத்தி தெரியாதா உனக்கு? நீ நீயா எப்பவும் போல ஜாலியா இரு. எல்லாம் தானா செட் ஆகும். நியாயமா அவருக்குத்தான் டென்ஷன் இருக்கணும். உன் மாமியார் உன்னை புடவை கட்ட சொன்னாங்கன்னியே… போ..போய் ரெடியாகற வழியப்பாரு. நான் கிளம்பறேன். “, என்று ஆறுதலும் சொல்லி, சீண்டியும் விட்டு, அவள் விட்டெறிந்த டம்பளரை காட்ச் பிடித்தபடி வெளியே சென்றான்.
“மேடம் கொஞ்சம் டென்ஷன்ல இருக்கா போல… நீ போய் கூல் பண்ணு ப்ரோ… ஹாப்பி நைட்…”, நான் நாளைக்கு பேசறேன், என்று விடை பெற்று சென்றான்.
அறைக்குள் நுழைந்தவன், கட்டிலில் அமர்ந்திருக்கும் ஸ்ரீயைப் பார்க்க, சற்று மருண்டுதான் அமர்ந்திருந்தாள். எதனால் என்று ஊகித்திருந்தவன்,
“ஓய்… என்ன… அப்படியே உட்கார்ந்திருக்க…? உங்க அம்மாகிட்ட பால் எல்லாம் வேணாம்னு சொல்லிடு… சாப்பிட்டதே ஹெவி. நான் குளிச்சுட்டு வரேன். நீ அப்பறம் குளிக்கறியா?”, என்றான் இலகுவாக.
“ம்ம்…”, என்று எழுந்தவளை…
“மாத்து துணி வெச்சிட்டு போறியா?”, என்று சேரில் இருந்த டவலை எடுத்துக்கொண்டு உள்ளே செல்ல,
“ஹோ… வெக்கலைன்னா? “, என்றாள் சிலிர்த்துக்கொண்டு.
“வெறும் டவலே போறும்னு நீ சொன்னதா நினைச்சுப்பேன். எனக்கு ஓக்கேதான் பேபி.”, என்று கண்ணடிக்க, மெத்தை ஓரம் இருந்த டெட்டி பேர் பொம்மை பறந்து வந்து, அதற்குள் அவன் மூடியிருந்த கதவில் பட்டு கீழே விழுந்தது.
அவசர அவசரமாக அவன் பெட்டியை திறந்து, ஷார்ட்ஸ், பனியன் உள்ளாடை என்று எடுத்து பெட்டில் வைத்தவள் கீழே ஓடி வந்தாள்.
கிச்சனை ஒதுங்க வைத்துக்கொண்டிருந்த ரோஜா, “என்னடி?”, என்று கேட்க
“ஓன்னுமில்லை… குளிக்கறாங்க… வந்து, பால் வேணாமாம். சாப்பிட்டதே ஹெவியா இருக்காம்.”, என்றாள் தரையை பார்த்துக் கொண்டே.
ஸ்ரீயைப் பார்த்து வந்த சிரிப்பை அடக்கியவர், “சரி… நீயும் வென்னீர்ல ஒரு குளியலைப் போடு… உடம்பு வலி போகும். நாளைக்கு ஒரு வேலையும் இல்லை. பொறுமையா எழுந்துக்கோ. போகும்போது சாமிக்கு ஒரு ஹலோ சொல்லிட்டு போ. “, என்றார் சாதாரணமாக.
என்னவோ முதலில் கணவன், பின்பு அன்னை என்று எல்லாரும் இலகுவாக எடுத்துக்கொள்ள, ஸ்ரீக்கும் நாம்தான் தேவையில்லாமல் யோசிக்கறோமோ? என்று தோன்றியது. தன் கலகலப்பை கொஞ்சம் மீட்டுக்கொண்டாள்.
மேலே செல்லவும், நவீன் அவள் வைத்திருந்த ஆடைகளை அணிந்திருந்தான். “என்ன, எல்லாத்தையும் எடுத்து வெச்சிருக்க ? டவல் வேணாமா?”, என்றான் ஸ்ரீயை வம்பிழுக்கும் விதமாக.
“ஹ்ம்ப்ஃப்…. இந்த சைட் பெட் என்னோடது.”, என்று காண்பித்துவிட்டு, அவள் உடைகளையும், நைட்டி டவல் என்று எடுத்துக்கொண்டு திரும்ப,
“அது வேணாம்… இது போட்டுக்கோ…”, என்று அவளிடம் இருந்த நைட்டியைப் பறித்து ஒரு கவரை திணித்து அனுப்பினான்.
“என்னாது…?”, என்று பிரிக்கப் போனவளை… “ லண்டன்ல ஆசையா வாங்கினேன்… போய் குளிச்சிட்டு போட்டுட்டு வா.”, என்று பிரிக்க விடாமல், பாத்ரூமுக்குள் தள்ளிவிட்டான்.
உள்ளே சென்று பிரித்துப் பார்த்தவள் ஆவென்று பார்த்திருந்தாள். பேபி பிங்க் சாட்டினில் வெள்ளைக்கார பாணியில் ஒரு நைட்டி. கை இருக்க வேண்டிய இடத்தில் இரண்டு நாடாக்கள். அணிந்தால் முட்டி வரை வரும் போல. மேலே போட்டுக்கொள்ள ஒரு லேஸ் அங்கி.
“அட… பாரேன்… கேடி. அங்க என்ன வேலையெல்லாம் பார்த்திருக்கு.”, என்று ஆச்சரியப்பட்டாலும், அவளுக்குமே போட்டுக்கொள்ள ஆசையாக இருந்தது.
மேல் அங்கியும் அணிந்து கொண்டு பார்க்கையில் ரசனையாகத்தான் இருந்தது. மெல்ல கதவை திறக்க, நைட் லைட்டோடு, இரண்டு மெழுகுவர்த்தி எரிந்துகொண்டிருந்தது. படுக்கை மேல் ரோஜா இதழ்கள் தூவி இருந்தன. மெல்லிதான இசை கசிந்து கொண்டிருந்தது.
விழி விரித்தவள், “ஹேய்… நீ…வாவ்…”, என்று ஆச்சரியமாக வர, அவள் அணிந்திருந்த நைட்டியில் அவன் கனவில் வந்தது போலவே வந்து கொண்டிருந்தவளைப் பார்த்தது பார்த்தபடியே இருந்தான்.
“நவ்வீன்..”, என்று அழுத்தி சொல்லவும்… கண்சிமிட்டியவன், “ ம்ம்… எங்களுக்கும் எல்லாம் வரும். நாள பின்ன 90ஸ் கிட்ஸ்க்கு ரொமான்ஸே வராதுப்பான்னு வரலாறு சொல்லிடக்கூடாது பாரு….அதான்…”, என்று அவள் முன்னர் கலாய்த்தது போலவே கூறியவன்,
“வா… நீ கேட்ட ஸ்பெஷல் ஐட்டம் …உனக்காக வெயிட்டிங்.”, என்று தலையணைக்கு அடியில் இருந்து அசார்ட்டட் லிக்கர் சாக்லேட் டப்பாவை கொடுத்தான்.
வாங்கிக்கொள்ள அருகே வந்தவளை வாகாக அணைத்தவன், கட்டிலில் தன்னோடு அமர வைத்து, “ தனியா சாப்பிட்டா சாமி குத்தமாகிடும். வா ஷேர் பண்ணிச் சாப்பிடலாம்.”, என்று கள்ளச் சிரிப்போடு , ஒன்றை எடுத்து பிரித்தான்.