குழந்தையோடு விளையாடிக் கொண்டிருந்தவள்., அவளை அழைத்துக் கொண்டு வீட்டிற்குள் வரவும்., வீட்டிற்குள் அப்படி ஒரு நிசப்தமான சூழ்நிலை நிலவியது. வசந்தியோடு கலை கிச்சனில் நின்று உணவிற்கான ஏற்பட கவனித்துக் கொண்டிருக்க., வீட்டிற்கு வந்த விருந்தினர்கள் கூட தாத்தாவோடு அமர்ந்து பேசிக் கொண்டிருக்க இனியா மட்டும் தனியாக அமர்ந்திருந்தாள்.
சூர்யாவும் முகிலனும் முன்னறையில் அவர்கள் தந்தையுடன் இருக்க., ஏதோ அங்கு ஒரு வித்தியாசமான நிசப்தம் நிலவுவதாக அவளுக்கு தோன்றியது.
அதே நேரம் இவர்கள் உள்ளே வந்ததை பார்த்து விட்டு கலை அம்முவிற்கு பால் எடுத்துக்கொண்டு வந்து குடிக்க வைக்க முயற்சி செய்தாள்.
அம்மு விளையாட்டு சுவாரஸ்யத்தில் இரண்டு வாய் பாலை குடிப்பதும் பிறகு வைத்துவிட்டு ஓடிச் சென்று ஒவ்வொரு பொருளாக தொட்டு விட்டு வந்து மதியின் மடியில் ஏறி அமர்ந்து அதன் பெயர் சொல்லி விட்டு திரும்பவும் ஓடிச்சென்று அருகில் உள்ள ஒவ்வொன்றையும் தொட்டு விளையாடிக் கொண்டே பாலை கொஞ்சம் கொஞ்சமாக குடித்துக் கொண்டிருந்தாள்..
அப்படி விளையாடிக் கொண்டிருக்கும் போது., காலை நடந்த வாக்குவாதத்தில் மாத்திரை ஸ்ரிப்பை தூக்கி விசியதை யாரும் பிறகு எடுக்காமல் விட்டிருக்க.., விளையாட்டில் கீழே கிடந்ததை பார்த்து அம்மு கையில் எடுத்துக்கொண்டு வந்தாள்.
வந்தவள் சத்தமாக மதி இடம் “மதிம்மா மாத்ர இருக்கு., ஆறுக்கு காய்ச்சல்” என்று அவள் மழலை மொழியில் கேட்டாள்.
அனைவருக்கும் ஒரு நிமிடம் தூக்கி வாரிப்போட்டது., அனைவரும் அங்கு திரும்பிப்பார்க்க மதி அவள் கையிலிருந்து மாத்திரை வாங்கவும்., கலை அங்கிருந்து வேகமாக வரவும் சரியாக இருந்தது.
அதற்குள் கையில் மாத்திரையை வாங்கி விட்டாள்., அவள் வாங்கியதை பார்த்தவுடன் அந்த இடத்திலேயே நின்றுவிட்டாள்..
மாத்திரையை பார்த்தவுடன் அவளுக்கு தெரிந்து விட்டது. இது வயிற்றுப் போக்கிற்காக மருத்துவர் கொடுக்கக் கூடியது என்று., அந்த மாத்திரையின் பெயர் பிரபலமாக இருந்ததால் அதை பார்த்த உடன் அவளும் கண்டுகொண்டாள்.
ஆனால் எதுவும் சொல்லாமல் அதை பார்த்தவள்., அம்முவிடம் “குட்டிமா இந்த மாதிரி கீழே கிடக்கிறது எல்லாம் எடுக்கக்கூடாது, எடுத்தாலும் டஸ்ட் பின் ல போடணும்., யூஸ் பண்ண கூடாது” என்று சொல்லிக்கொண்டே அதை கொண்டு போய் குப்பை தொட்டியில் போட்டுவிட்டு வந்து அமைதியாக அவள் வந்து திரும்பவும் அதே இடத்தில் அமர்ந்து கொண்டாள்.
யாரிடமும் எதுவும் கேட்கவில்லை., சூர்யாவும் முகிலனும் எப்படி சொல்வது, அவள் பார்த்து விட்டாள்.., இனி எப்படி இந்த விஷயத்தைப் பற்றி பேசுவது என்ற எண்ணம் இருவருக்குமே இருந்தது., இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு மதியை பார்க்க.,
அவள் யாரையும் கண்டுகொள்ளாமல் அம்முவோடு அவள் பேச்சை தொடர்ந்தாள். அம்மு பால் குடித்துக்கொண்டே விளையாடிக் கொண்டிருக்க…,
பேச்சை மாற்றி அம்மு மாத்திரை பேச்சை மறுபடியும் எடுக்க தொடங்கும் போது எல்லாம் அவள் பேச்சை மாற்றி வேறு வேறு விஷயத்தில் அவள் கவனத்தை திருப்பி விட்டாள்..
முகிலனிடம் சூர்யா கலையை விட்டுச் சொல்லச் சொல்லலாம் என்று சொல்லிவிட்டான்.
வசந்தியும் அதேபோல கலையிடம் நீயே அவளிடம் சொல்லி விடு., பார்த்த பிறகு மறைத்தால் அது தவறு என்று சொல்லிக்கொண்டிருந்தார்.
சற்று நேரத்தில் எல்லாம் அம்முவோடு பேசிக் கொண்டிருந்தவள். அம்முவை தூக்கிக்கொண்டு மாடிக்கு சென்று விட கலைக்கு தான் குற்ற உணர்ச்சியாக இருந்தது., இதை சொல்லாவிட்டால் மதி தன்னை தவறாக எண்ணுவாள் என்று எண்ணிக் கொண்டு சூர்யாவிடம் கேட்க சென்றாள். அங்கு இருந்த நெருங்கிய உறவினர்களும் தாத்தாவும் கூட அமைதியாக இருந்தனர்.
அவள் மாத்திரை பார்த்து விட்டால் என்று தெரிந்த பிறகு.,என்ன செய்வது என்று தான் யோசித்து கொண்டு இருந்தனர்.
அனைவருக்கும் அவளிடம் மறக்க நினைத்து தான் கதவெல்லாம் சாத்தி விட்டு பேசியது., ஆனாலும் இது தெரிந்த பிறகு கூட., அந்தப் பெண் இப்போது வரை வாயை திறந்து ஒரு வார்த்தை கேட்கவில்லை.
இந்த மாத்திரை அதற்கு தான் என்று தெரிந்தும்., அவள் பேசாமல் போகும் போதே தெரியவில்லையா., அவள் எதையும் கண்டு கொள்ளாமல் போய் விடுவாள்., வீட்டில் பிரச்சினை வருவதை விரும்பமாட்டாள். நல்ல பெண் தான் என்று அவர்களுக்குள் பேசிக் கொண்டனர். இருந்தும் கலை அவளிடம் சொல்வது என்ற முடிவோடு மாடிக்கு சென்றாள் …
மாடிக்கு சென்றவள் அம்முவிடம் அமர்ந்து ஏதோ கதை சொல்லிக் கொண்டு இருப்பதை பார்த்தவள். “அம்மு விடம் கீழே உன்னை பாட்டி கூப்பிடுகிறார்கள் போ” என்று அவளை அனுப்பிவிட்டு மதியிடம் உண்மையை சொன்னாள்.
“இதை வைத்து பெரிய பிரச்சினை ஏதும் வந்து விடக் கூடாது, என்று தான் நீ இல்லாத சமயத்தில் அவளிடம் கேட்க வேண்டியதாகி விட்டது தப்பாக எண்ணிக் கொள்ளாதே” என்று சொன்னாள்.
“ஐயோ அக்கா நான் இதெல்லாம் பெருசா எடுத்துக்கல விட்ருங்க” என்று சொல்லிக்கொண்டிருந்தாள்…
அதன்பிறகு வசந்தியும் பாலனும் மதியின் வீட்டிற்கு சென்று மறுவீடு சம்பிரதாயங்கள்., குலதெய்வம் கும்பிடுவது என்று மற்ற சாஸ்திர சம்பிரதாயங்களை பற்றி பேசிக்கொண்டு இருந்து விட்டு வந்து அதைப் பற்றி தாத்தாவிடம் பேசிக்கொண்டிருந்தனர்.
அன்று முழுவதும் மதிக்கும் முகிலனுக்கு தனியே பேசிக் கொள்ளும் சந்தர்ப்பம் வாய்க்கவில்லை.
இருவரும் அருகருகே இருந்தாலும் கூட பேசிக் கொள்ளும் சந்தர்ப்பங்கள் கிடைக்கப்பெறாமல் போயிற்று., ஒன்று வெளியில் இருந்து உறவினர்கள் யாராவது வந்து பார்த்துவிட்டுச் சென்றார்கள். இல்லையெனில் மதியின் வீட்டு ஆட்கள் வந்து பேசி விட்டுச் சென்றார்கள்.
அதைத்தவிர வீட்டில் இருந்த முக்கியமான உறவினர்கள்., திருமணத்திற்கு வர முடியாத உறவினர்கள் என திருமண வீட்டுக்கு உண்டான பரபரப்பில் அவர்களுக்கான பேசிக்கொள்ளும் நேரம் கூட வாய்க்கவில்லை.
அன்றைய இரவு முகிலனின் அறைக்கு மதியை கொண்டு விட்டு விட்டு வந்தால் கலை.
மதி “இதெல்லாம் இப்ப வேண்டாமே., வேலை முடிஞ்சு நான் வந்ததுக்கு அப்புறம் பார்த்துக்கலாம் கா”…. என்று சொல்லும் போது
“அது நீங்களே பேசிக்கோங்கம்மா என்று சொல்லிவிட்டு., சும்மா ரூம்மெட் மாதிரி இரண்டு பேரும் பேசிக்கலாம் இல்ல., எப்ப பழகுவீங்க ரெண்டு பேரும்”., என்று சொல்லிவிட்டு அவளை அங்கு விட்டுவிட்டு கலை அவளது அறைக்கு சென்றாள்.
அவர்கள் அனைவரும் மாடிக்கு செல்வதை பார்த்து விட்டு இனியாவும் மாடிக்கு அவள் அறைக்கு கிளம்ப., வசந்தி அவளை மாடிக்கு செல்ல அனுமதிக்கவில்லை..,
” ஏற்கனவே உடம்பு சரியில்ல ன்னு ஊரை கூட்டி கிட்டு இருக்க., அதனால பேசாமல் கீழே என் கூட ரூம்ல படு.., அப்பா தாத்தா கூட ரூம்ல படுத்துக்குவாங்க” என்று சொல்லி அவளை தன் அறையிலேயே வைத்துக் கொண்டார்…
முகிலனின் அறையில் கட்டிலில் ஒரு ஓரமாக தலையில் கைவைத்து அமர்ந்திருந்தாள்…, உள்ளே வந்தவன் அவள் அமர்ந்து இருப்பதை பார்த்தவுடன் சத்தமின்றி கதவை பூட்டி விட்டு.., “அப்படியே உட்கார்ந்து தூங்குற மாதிரி ஐடியாவா” என்று கேட்கவும்., அவசர அவசரமாக எழுந்தாள்.
அவனும் “எதுக்கு இவ்வளவு டென்ஷன்” என்று சொல்லிவிட்டு., “நான் தான் ஏற்கனவே சொல்லிட்டேன்ல, உன்னோட ஓர்க் எல்லாம் முடிச்சுட்டு வா அதுக்கு அப்புறம் பாத்துக்கலாம்., ஏன் அதுவரைக்கும் ஒரு ரூம்ல இருக்க கூடாதா” என்று கேட்கவும் அமைதியாக அவனைப் பார்த்துக் கொண்டே நின்றாள்.
” இன்னைக்கு ஃபுல்லா ஒரு வார்த்தை உன் கூட பேச கூட எனக்கு சரியான சமயம் இல்லை., அட்லீஸ்ட் இப்பவாவது பேசலாம்னு பார்த்தா., நீ வேற உட்கார்ந்து தூங்குற” என்று சொன்னான்.
“இல்லை சொல்லுங்க” என்று சொல்லிக் கொண்டிருந்தாள்…
சிரித்துக்கொண்டே அருகில் வந்தவன் அவளை தன் கை அணைப்பில் வைத்துக் கொண்டு “கொஞ்ச நேரம் பேசிட்டு இருக்கலாம்” என்று அனுமதியோடு பேச தொடங்கினான்.
அவள் மெதுவாக நிமிர்ந்து சிரித்த முகமாக அவனை பார்த்துக் கொண்டிருக்க., அவன் பொதுப்படையாக அவன் வேலைகளை பற்றியும்., அவன் இருக்கும் ஊரின் சூழ்நிலைகள் பற்றியும் சொல்லிக் கொண்டிருந்தான்.
ராமேஸ்வரத்தில் வேலை அவனுக்கு எனவே அங்கிருக்கும் சூழ்நிலைகளையும் மற்ற விவரங்களையும் சொன்னான்.
” கோட்ரஸ் தான் நல்லா இருக்கும், பிரச்சினை இல்ல பாதுகாப்பான இடத்தில் தான் வீடு இருக்கு., புயல் உருவாகிற நேரம் மட்டும் தான் கொஞ்சம் மழை ஜாஸ்தியா இருக்கும்., அப்ப மட்டும் கஷ்டமா இருக்கும்., மத்தபடி தண்ணி தான் அங்க கொஞ்சம் பிரச்சனை., மத்தபடி நல்லா இருக்கும்” என்று சொல்லிக் கொண்டு இருந்தான்.
அதன் பிறகு மெதுவாக இன்று காலை நடந்த சம்பவத்தை பற்றி பேசிவிட்டு அதற்காக சாரி சொல்ல தொடங்கும் முன் அவள் கையால் அவன் வாயை மூடினாள்..,
ஏன் என்று கேட்டான்.
“நீங்க சொன்னத., நீங்களே மீறலாமா,” என்று கேட்டாள்.
அவன் யோசனையாக பார்க்கவும்..,
” நீங்க என்ன சொன்னீங்க இங்கு உள்ள விஷயங்கள் என்ட்ட பேச மாட்டேன்., அங்கு உள்ள விஷயங்கள் இங்கே பேச மாட்டேன்னு சொன்னீங்க இல்ல., அப்புறம் எதுக்கு பேசணும் விட்ருங்க., தப்புன்னு தெரிஞ்சிருக்கு, அப்புறம் அதை பத்தி திருப்பி பேசக்கூடாது, அவங்க தப்பு பண்ண நீங்க சாரி கேப்பீங்களா., அவங்க தப்பு அவங்க தான் சாரி கேக்கணும் மத்தவங்க கேட்கக்கூடாது. இப்ப நான் உங்களை சாரி கேக்கணும் சொல்லல.., உங்க கிட்ட எதுவும் குறை சொல்லவில்லை.., நான் எதாவது உன்கிட்ட கேட்டா தான் நீங்க அதுக்கு சாரி சொல்ல வேண்டும்.., மத்தபடி நீங்க இதை பத்தி பேசாதீங்க விட்ருங்க.” என்று சொல்லி அவன் வாயில் இருந்து கையை எடுக்காமல் பேசவும்., அவன் முதல் முதலாக மதியைப் பற்றிய ஒரு சந்தோஷமான மனநிலையில் இருந்தான்..