சற்று நேர இலகுவான பேச்சுக்கள் ஓட, நவீன் விடை பெறுவதாகக் கூறி எழுந்தான்.
“அத்தை…ஒரு விஷயம்…. ரிக்வெஸ்ட்ன்னு கூட சொல்லலாம். ப்ளீஸ், ஸ்ரீயை அடிக்காதீங்க. அவ என்னை கல்யாணம் பண்ண மாட்டேன்னு சொன்னதுக்கான காரணம் எல்லாம் நியாயமான காரணம்தான். அது என்னன்னு கூட நீங்க கேட்காம அடிச்சு, போனை எடுத்து வெச்சிகிட்டு…. வேணாமே. அவ எங்கிட்ட பேசியிருந்தா இன்னிக்கு பெண் பார்க்க வந்த பொழுதை மிஸ் பண்ணியிருக்க மாட்டோம். அவளும் ரோஷக்காரிதான், இல்லன்னு சொல்லலை. பட் எங்கிட்ட சண்டை பிடிக்கப் போறான்னா தடுக்காதீங்க.”, நவீன் மரியாதையாக, அதை சமயம் சற்று கண்டிப்பாக சொல்லவும் வனரோஜா வாயடைத்துப் போனார்.
ஸ்ரீக்கு அவனது கரிசனம் பார்த்து இன்னும் இன்னும் பிடித்தது. கண்டிப்பாக தன்னை எப்போதும் விடமாட்டான் என்று ஒரு தைரியம் மனதின் சஞ்சலங்களை நெட்டித் தள்ளியது.
தொண்டையை லேசாக கனைத்த ரோஜா, “ஆகட்டும் மாப்பிள்ளை. “, என்று மட்டும் சொன்னார்.
அடுத்து வந்த நாட்கள் ஸ்ரீயின் வழக்கமான குறும்புகளை மீட்டெடுத்தது. ரோஜா வம்படியாக முல்லையிடம் அனுப்பி வைத்தார்.
“மா… அந்தம்மா நம்ம ஊர் சமையல் தெரியாதான்னா பாவமா கேட்டாங்க…அது வேணாமா?”, ஸ்ரீ கேட்க,
“ஒழுங்கா அத்தைன்னு சொல்லி பழகு.. அதென்ன அந்தம்மா ?”, மகளைக் கண்டித்தவர்,
“இங்க பாரு ஸ்ரீ. உங்கப்பா நான் என்னதான் புதினா துவையல் அரைச்சாலும், ஆனாலும் எங்க அம்மா பண்ற மாதிரி வரலைன்னுவார். இதுக்காக அவங்க மாதிரி அம்மியை வாங்கி அதுல ஜிம்மி கூட பார்த்துட்டேன். கை வலி வந்ததுதான் மிச்சம். உன் பாட்டி எல்லார் மாதிரியும்தான் துவையல் அரைப்பாங்க, ஆனாலும் அது உங்க அப்பாக்கு ஸ்பெஷல். அதனால உன் மாமியார் செய்யறதுல போட்டியே போடாதே. நீ ஏற்கனவே நார்த் இண்டியன் பண்ணுவ, கூட மெட்ராஸ் ஐட்டமா பார்த்து பண்ணு. போட்டியே இல்லாம உன் சாப்பாடு ஜெயிச்சிடும்.”
“அதான் எல்லாம் யூட்யூப்ல வீடியோவா இருக்கு. அடிப்படை தெரிஞ்சா நீயே பார்த்து பண்ணிடுவ. “, ரோஜா தெம்பூட்டினார்.
இரவுகள் நவீனுடனான வீடியோ கால்களால் இன்பமாகக் கழிந்தது. அவனை ஓட்டினாலும், அவன் அவளை ஓட்டினாலும் சந்தோஷமாகவே இருந்தது. இடையிடையே கல்யாண வேலைகள் பற்றியும் பேசினார்கள்.
“ஸ்ரீ… உனக்கு கல்யாணப் புடவை எடுக்கணும். அம்மா காஞ்சீபுரம் போகணும்னு சொல்றாங்க. எல்லாமே சென்னையிலயே கிடைக்கும்மான்னு சொன்னா கேட்கலை. இங்க ஒரு ரிலேடிவ் போயிட்டு வந்ததுலர்ந்து இதே பேச்சு. நீ எதுவும் ப்ளான் வெச்சிருக்கியா புடவை எப்படி வேணும்னு ?”, நவீன் கேட்க
அவனது ட்ரேட் மார்க்கு புன்னகை மின்ன, “டன்… காஞ்சிபுரம் புடவை அம்மா இஷ்டம், ரிசெப்ஷன் உன் இஷ்டம். “, புடவை பிரச்சனை எளிதாக முடிந்தது என்று நினைத்துக்கொண்டிருந்தான். பாவம் நகை எடுப்பதில் சிக்கப் போகிறான் என்று தெரியவில்லை. புடவை எடுக்கவே கோகிலா சோதிக்கப் போகிறார் என்று அவளுக்கும் தெரியவில்லை.
அந்தப் புறம் சக்கரவர்த்திக்கும் சமாளிக்க கடினமாக இருந்தது. எல்லா விஷயமும் தன் விருப்பப்படி இருக்க வேண்டும் என்று கோகிலா விரும்பினார். “ஒரே பிளளை கல்யாணம். மண்டபம் எப்படி இருக்குமோ? நாம போய் பார்த்துட்டு முடிவு செய்யலாங்க.”, என்று ஆரம்பிப்பார்.
“கோகி… நமக்கு ஒரே பையன்னா, அவங்களுக்கும் ஒரே பொண்ணு. பொண்ணு வீட்டுக்காரங்க விருப்பப்படிதான் கல்யாணம். எல்லாத்துக்கும் உங்கிட்ட முடிவு கேட்க முடியாது. நீ போய் பார்க்கற வரை காத்துகிட்டு இருக்க முடியாது. எதோ நல்ல வேளையா அந்த தேதியில புக்கானது கான்சல் ஆகியிருக்கு. அதான் நெட்ல போட்டு காமிச்சேன், பார்த்த. நல்லா இருந்துச்சா….அதோட விடு.”, என்று அடக்கினார்.
“அப்ப ரிசெப்ஷனுக்கு நாமதான் முடிவு பண்ணனும்.”, உரிமைக் குரல் கொடுத்தார் கோகிலா.
“இவளோட….. இன்னும் என்னல்லாம் பண்ணுவாளோ….’, என்று உள்ளுக்குள் புலம்பத்தான் முடிந்தது சக்கரவர்த்தியால்.
சம்மந்திக்கு உதவி செய்வதாகச் சொல்லி, ஹோட்டல்களை விசாரித்து. பாண்டியனிடம் பேசி, மனைவியையும் அழைத்துக்கொண்டு சென்று காண்பித்து, சம்மதிக்க வைத்து என்று திண்டாடினார்.
அடுத்து கல்யாண மெனுவிற்கும் கோகிலாவுக்கு ஆயிரம் சந்தேகம், ஆயிரம் ஐடியா.
“வசந்தா பொண்ணு கல்யாணத்துல காலையில டிபனுக்கே மூணு ஸ்வீட் போட்டங்க. சம்மந்தியம்மா குடுத்திருக்க லிஸ்ட்ல இரண்டுதான் இருக்கு. அதுவும் எப்படி இருக்கும்னு தெரியலை. வசந்தா போட்ட மாதிரி பாதாம் அல்வாவும், போளி, குலாப் ஜாமூன் போட சொல்வோமாங்க?”, என்றார் நடு இரவில் எழுப்பி.
“கோகி…. அப்படி போட்டா வசந்தா நீ காப்பி அடிச்சு அவ மாதிரி செஞ்சேன்னு சொல்லுவா… அது தேவையா? படு… சம்மந்தியம்மா போட்டிருக்க ஸ்வீட் பக்லாவா, அரபு நாட்டு ஸ்வீட். நாளைக்கு எங்க கிடைக்கும்னு பார்த்துட்டு வாங்கி தரேன். அப்பதான் உன்னைப் பார்த்து, கோகிலா கல்யாணத்துல போட்ட மாதிரி ஸ்வீட் போடணும்னு சொல்லுவாங்க. மூணு ஸ்வீட் எல்லாரும் வேஸ்ட் பண்ணாங்கன்னு நீதான் புலம்பின அப்போ. மறந்துட்டியா? கொஞ்ச நேரம் தூங்கும்மா. “, பொறுமையை இழுத்துப் பிடித்து சமாதானம் செய்தவர், ‘மகனே… உனக்காக என்னல்லாம் பொறுத்துக்கறேன் பாரு. இல்லைன்னா நேரா போனை உன் மாமியாருக்கு போட்டிருப்பா உங்க அம்மா.’ என்று மனதோடு மகனிடம் புகார் வாசித்தபடியே தூங்க முயன்றார்.
அவர் மகன் அன்று முழுவதும் அணியுடன் நெட் ப்ராக்டீஸ் முடித்து, பெங்களூரில் கலர் கலராய் கனவு கண்டுகொண்டிருந்தான்.
காஞ்சீபுரத்தின் பட்டு மாளிகையில் இரு வீட்டாரும் இருந்தார்கள். நவீன் அஹமதாபாத்தில் மாட்ச் ஆடிக்கொண்டிருந்தான். நீங்களே எடுத்துக்கொள்ளுங்கள் என்று சொன்னால் வனரோஜா கேட்கவில்லை. வம்படியாக ஸ்ரீயை அழைத்து வந்திருந்தனர்.
கோகிலாவின் முழு பிம்பமும் அன்றுதான் தெரிந்தது ஸ்ரீக்கும் வனரோஜாவிற்கும். ஆரம்பம் என்னவோ சுமூகமாகத்தான் இருந்தது. ஆண்கள் வேட்டி , சட்டை எடுக்க வேண்டி ஒரு புறம் நகர, ரோஜா, கோகிலா, ஸ்ரீ கல்யாணப் புடவை எடுக்க அமர்ந்தனர்.
“எழுவதாயிரத்துக்கு குறையாம இருக்கணும்பா. அந்த மாதிரி காட்டுங்க.:, என்ற கட்டளையோடு அமர்ந்தார் கோகிலா.
“எங்க ஓர்படி பையனுக்கு போன வருஷம் கல்யாணம் . அறுபதாயிரம் ஆச்சுன்னு பெருமையா சொல்லிகிட்டா. இப்ப நான் திருப்பி சொல்ல வேணாமா? நவீன், உங்க ஆசைப்படி எடுங்கம்மா, விலையெல்லாம் பார்க்கணும்னு அவசியமில்லைன்னு சொல்லிட்டான்.”, பெருமை பொங்கியது குரலில்.
‘ஒரு நாள் கட்டப்போறேன். அதுக்கு இத்தனை செலவு செய்யணுமா?’, என்று எண்ணம் ஓடிய போதும் ஸ்ரீ வாயே திறக்கவில்லை.
‘அடக் கடவுளே ஊர் பெருமைக்கு இந்தம்மா ஆடுமா?’, என்று ஓடியது ரோஜாவின் எண்ணம்.
“அழகுன்னாலும், கலர் கொஞ்சம் கம்மிபா மருமக, அவ நிறத்துக்கு ஏத்த மாதிரி போடுங்க.”, என்றார் முதலில்.
விற்பனையாளர், ‘சரி லைட் கலர் கேட்கறாங்க’, என்ற நினைப்பில் வெளிர் நீலம், வெளிர் பச்சை என்று காட்ட,
“இப்படி லைட்டா இருந்தா சரிகை எடுப்பா தெரிய மாட்டெங்குது பாருப்பா. நல்லா பளிச்சுன்னு சரிகை தெரியணும்.”, என்றார் பத்து, இருபது புடவைகளை புரட்டிப் போட்ட பின்.
ரோஜாவிற்கு பொறுமை பறந்து கொண்டிருந்தது. மகளைப் பார்க்க, பராக்கு பார்த்துக்கொண்டிருந்தாள்.
“ஸ்ரீ … நீ இங்க பாரு. நான் போய் வெச்சு குடுக்க வேண்டியவங்களுக்கு பார்த்துட்டு வரேன்.”, என்று கிளம்பினார். அதற்கு மேல் இருந்தால், “நீ என்ன நிறம்? நீ கட்டலையா டார்க் கலர் புடவை?’, என்று கோகிலாவை கிழித்திருப்பார்.
ரோஜா அவர் தங்கை, ஓர்படி என்று அனைவருக்கும் புடவை எடுத்து முடித்துவிட்டு, கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் கழித்து வந்து பார்த்த போது புடவைகள் குவிந்து கிடந்தது, கோகிலா முழித்துக்கொண்டிருந்தார். ஸ்ரீ போனை பார்த்துக்கொண்டிருந்தாள். விற்பனையாளர், யார் முகத்தில் முழிச்சேனோ என்று விதியை நொந்தபடியே விட்டத்தைப் பார்த்துக்கொண்டிருந்தார்.
கோகிலா என்ன புடவை ஆசைப்படுகிறார். அதை ஏன் எடுக்க தயங்குகிறார் என்று இதற்குள் நன்றாக புரிந்திருந்தாள் ஸ்ரீ. ஆனாலும் கோகிலாவைக் காப்பாற்ற முன் வரவில்லை. ‘கலர் கம்மின்னு அதுவும் நீ சொல்ற பாரு… இன்னும் கொஞ்சம் படு’, என்று அமர்ந்திருந்தாள்.
இரண்டு மூன்று முறை கோகிலா ஸ்ரீயை யோசனை கேட்ட போதும், “அச்சோ… உங்க பிள்ளை கண்டிஷனா சொல்லியிருக்கார் அத்தை. கல்யாணப் புடவை நீங்கதான் செலக்ட் பண்ணனும்.”, என்று தவிர்த்து தவிக்க விட்டாள்.
“இன்னுமா எடுக்கலை?”, என்று ரோஜா கேட்கவும், “எனக்கு தெரியலை அண்ணி. ஸ்ரீயை கேட்டா, நவீன என்னைத்தான் எடுக்க சொன்னான், நீங்க எது எடுத்தாலும் சரிங்கறா. “, என்றார் பாவமாக.
“ஸ்ரீ…. நீயே எடு. அதுதான் அண்ணி எடுத்தாங்கன்னு சொல்லிக்கலாம் மாப்பிள்ளைகிட்ட. “, என்றார் ரோஜா சற்று அதட்டலாக.
ஸ்ரீ விற்பனையாளரைப் பார்த்து, தலையை அசைத்து கண்ணைக்காட்ட, மாமபழ வண்ணத்தில், அடர் சிவப்பு பார்டர், முட்டி வரை வர, பளிச்சென்று தங்க சரிகை எடுப்பாக தெரிய, முந்தானை முழுதுமாக சரிகை என்று கோகிலாவின் ஆசைகளில் பலதை பூர்த்தி செய்திருந்தது. அதைத்தான் நாலைந்து முறை பார்த்து பார்த்து பின் நிராகரித்திருந்தார் கோகிலா.
அதே புடவை என்றதும், அவர் முகம் பிரகாசமாக, “உனக்கும் இதுதான் பிடிச்சுதா ஸ்ரீ ? “, என்று கேட்டவர், அடுத்த நொடியே, “ ஆனா இது ரொம்ப பழைய கலர் காம்பினேஷனாச்சே. பார்க்கறவங்க ஏன் புதுசா எத்தனை கலர் இருக்கு இதுதானா உனக்கு பட்டுதுன்னு என்னைக் கேட்டா என்ன சொல்றது?”, என்று அவர் தயக்கத்தை வெளிப்படுத்தினார்.
“பொண்ணு வீட்ல மஞ்சள் சிவப்பு தான் கட்டணுமாம். வேண்டுதல்னு சொல்லுங்க அத்தை.”, என்றவள் எழுந்து கொள்ளப் போனாள்.
“இரு, இன்னும் சாந்தி முகூர்த்ததுக்கு எடுக்கலையே? அதுக்கும் எடுத்துடுவோம்.”, என்றார் அவசரமாக.
‘கல்யாணம் ஆனா அதுவும்தான் இருக்கும். அதுக்காக இப்படியா கடைகாரன் முன்னாடியே கேட்பாங்க? கூட அதுக்குப் போய் பட்டுப் புடவையா? வாட் ரப்பிஷ் ?’, என்று சுறுசுறுவென்று கோபம் கொண்டவள்,
“நீங்க உங்க சாந்தி முஹூர்தத்துக்கு என்ன கலர்ல எடுத்தீங்களோ, அதையே எடுங்க அத்தை. யாரும் கேட்டா, …”, ஸ்ரீ என்ன சொல்லப் போகிறாளோ என்று பயந்த ரோஜா,
“கல்யாணப் புடவை பில் போடப் போகுதுன்னு உன் மாமாகிட்ட சொல்லு ஸ்ரீ. நான் இங்க பார்த்துக்கறேன்.”, என்று அவசரமாக அனுப்பினார். தாயை ஒரு கண்டனப் பார்வை பார்த்தவள் திரும்பி நடக்க,
“அவ பட்டு கட்ட மாட்டா, நான் அங்க சென்னையிலயே சிம்பிளா வாங்கிடறேன் அண்ணி. மதியமாகிடுச்சு. எல்லாரும் பசியோட காத்திட்டு இருக்காங்க. போகலாம் வாங்க.”, என்று கிளப்பி கூட்டிச் சென்றார் ரோஜா.
இன்னும் எத்தனை பேர் வேண்டுமோ கோகிலாவிடமிருந்து இந்தக் கல்யாணத்தைக் காப்பாற்ற….