குளித்து விட்டு வந்ததும், மகளைத் தூக்கினான். அதற்காகத் தான் அவசரமாகக் குளித்து விட்டு வந்தது. கணவனும் மகளும் இருந்த அறைக்குச் சம்யுக்தா வர…
“உனக்கு நான் ஹீரோவா இல்லைனா பரவாயில்லை… என் பொண்ணுக்கு நான்தான் ஹீரோ… அப்படித்தானே டா பட்டு.” என மகளைக் கொஞ்சினான்.
மறுநாள் சந்திராவை வீட்டுக்கு அனுப்பி விட்டனர். ஸ்ரீகாந்தும் தேன்மொழியும் தான் அவரைப் பார்த்துக் கொண்டனர். என்ன தான் அவர்கள் பார்த்துக் கொண்டாலும், கணவன் தன்னை வந்து பார்க்கவில்லை என்ற வருத்தம் சந்திராவுக்கு இருந்தது.
சக்ரவர்த்திக்கு விஷயம் தெரிந்தும், அவர் வந்து சந்திராவை பார்க்கவில்லை. ஆனால் முத்துக்குமார் மீது காவல் நிலையத்தில் அவர் தான் புகார் கொடுத்தார். முத்துக்குமாரையும் கண்டித்தார். ஆனால் அதெல்லாம் சந்திராவுக்குத் தெரியாது.
இந்துஜாவும் சக்ரவர்த்தியிடம் சொல்லி பார்த்து விட்டார். ஆனால் சக்ரவர்த்திக் கேட்கவில்லை.
ஸ்ரீநிதி வந்து அம்மாவோடு சில நாட்கள் தங்கி இருந்தாள். அப்போது கணவனோடு சென்று சம்யுக்தாவையும் குழந்தையையும் பார்த்து விட்டு வந்தாள். அவள் அம்மாவிடம் சொல்லாமல் தான் சென்றாள். ஆனால் அவள் அங்கே தான் செல்கிறாள் என்று சந்திராவுக்குப் புரிந்தாலும், அவர் ஒன்றும் கேட்கவில்லை.
ஞானம் திரும்ப இளைய மருமகளிடமே சென்று விட்டார்.
சில நாட்களில் இனி கணவர் தான் இருக்கும் பக்கம் கூட வர மாட்டார் என சந்திரா புரிந்து கொண்டு விட்டார். அதனால் மகன் மருமகளைத் தன் வீட்டோடு சேர்த்துக் கொண்டு அவர்களிடம் ஒத்துப் போக ஆரம்பித்தார்.
தேன்மொழியின் பெற்றோருக்கு மகள் வசதியான வீட்டில் வாழ வேண்டும் என்ற ஆசையில் தான், வேறு ஆட்களாக இருந்தாலும், மகள் திருமணதிற்கு வெளியில் தெரியாத வகையில் சம்மதித்து இருந்தனர். ஆனால் சக்ரவர்த்தி மகனை விலக்கி நிறுத்தி இருந்ததால்… அவர்களால் அதிகமாக மகள் வீட்டில் இருந்து எதையும் பெற முடியவில்லை. சந்திராவும் மருமகளை ஏற்றுக் கொண்டாலும், அவள் வீட்டு ஆட்களிடம் விலகி தான் இருந்தார்.
ஐந்து மாதத்தில் தான் ஆரியன் சம்யுக்தா மகளுக்குப் பெயர் சூட்டினர்.
“ஒரு ஊர்ல இருந்திட்டு அண்ணியையும் ஸ்ரீகாந்தையும் கூப்பிடாம இருக்க முடியாது. நான் அவங்களையும் கூப்பிடுறேன்.” என சக்ரவர்த்தியிடம் சொல்லி விட்டு தான், சரளா சந்திராவையும் ஸ்ரீகாந்த்தையும் பேத்தியின் பெயர் சூட்டு விழாவுக்கு அழைத்தார்.
அம்மா என்ன சொல்வாரோ என ஸ்ரீகாந்தும், ஸ்ரீமதியும் நினைக்க…
“நீங்க போயிட்டு வாங்க.” என்றார்.
சந்திரா இப்படிச் சொன்னதும் எல்லோருக்கும் ஆச்சர்யம் தான்.
சடகோப்பன் அவர்கள் ஊர் மண்டபத்தில் விசேஷத்தை வைத்திருக்க… சக்ரவர்த்தியும் இந்துஜாவும் வந்திருந்தனர்.
ஆரியன் மகளுக்கு ஆராதனா எனப் பெயரிட… விசேஷம் சிறப்பாக நடந்து முடிந்தது.
“அப்பா எங்களை மன்னிக்கவே மாட்டீங்களா…” என ஸ்ரீகாந்தும்,
“நாங்க என்னப்பா பண்ணோம். வீட்டுக்கு வாங்கப்பா…” என ஸ்ரீநிதியும் அழைத்தனர். சக்ரவர்த்தி அப்போது எதுவும் சொல்லவில்லை.
ஆரியனும் சம்யுக்தாவும் பார்த்துக் கொண்டு தான் இருந்தனர். தந்தையை விட்டு விடும்படி சம்யுக்தா கேட்டால் தான். ஆனால் தந்தை இப்படி அவர்களை முற்றிலும் ஒதுக்கி வைப்பது பார்க்க கஷ்ட்டமாக இருந்தது.
“அத்தைக்குப் புத்தி வரணும் தான் மாமா. ஆனா அதுக்காக நீங்க இப்போ பண்றது ரொம்ப அதிகம். அத்தை ஆஸ்பத்திரியில் இருந்த போது கூட நீங்க போய்ப் பார்க்கலை.” என ஆரியனும் எடுத்துச் சொன்னான்.
விசேஷம் முடிந்து மற்றவர்கள் சென்றிருக்க சம்யுக்தா மாமியார் வீட்டில் தான் இருந்தாள். இந்த வாரம் தான் ஊருக்குச் செல்வதாக இருந்தது. அப்போது சந்திரா வீட்டுக்கு வந்தார்.
என்ன பேசப் போகிறாரோ… என ஆரியன் பார்க்க…
“நான் உன் மகளைத் தான் பார்க்க வந்தேன். ஏன் வரக் கூடாதா?” என அவர் அவனைப் பார்த்து கேட்க,…
“நான் அப்படிச் சொன்னேனான அத்தை. நீங்களே ஆரம்பிக்க வேண்டியது, அப்புறம் என்னைத் திட்ட வேண்டியது. உங்களைப் பேசினா என் பொண்டாட்டி வேற என்னை ரொம்பத் திட்டுறா… அதனால நான் என் பொண்டாட்டி பேச்சை கேட்கிறதா முடிவு பண்ணி இருக்கேன்.” என்றான்.
“உனக்கெல்லாம் எங்க வீட்டுப் பெண்ணைக் கொடுத்திருக்கோம் பார்த்தியா… எங்களைச் சொல்லணும்.” என சந்திரா சொல்ல… மகளை அவரிடம் கொடுத்த சம்யுக்தா கணவனைப் பார்த்து சிரித்தாள்.
“அப்போ இவளும் உன்னைப் போலவே பேசுவாளா…” என சந்திரா சந்தேகம் கேட்க…
“அத்தை உங்களுக்கே இது அநியாயமா இல்லை. உங்களை விடவா நான் பேசுறேன்.” என ஆரியன் பதிலுக்கு அவரைப் பார்த்து கேட்க…எல்லோருக்கும் சிரிப்பு வந்து விட்டது.
“அவங்ககிட்ட மல்லுக்கு நிற்கிறதே வேலை.” என்ற சரளா…
“அண்ணி அவன் கிடக்கிறான், நீங்க பேத்தியை பாருங்க.” என்றார்.
சந்திரா தங்கத்தில் செயின் வாங்கிக் கொண்டு வந்திருந்தார். அதை அவரே ஆராதனாவின் கழுத்தில் போட்டு விட்டார்.
“இவன் பேசுறதும் இல்லாம என் மாப்பிள்ளைக்கும் சொல்லி கொடுத்திருக்கான் போல… நான் என்ன சொன்னாலும் ஒத்துக்கக் கூடாதுன்னே அந்தப் பையன் இருக்கு.” என, ஐயையோ தெரிஞ்சிடுச்சா என ஆரியன் அங்கிருந்து நழுவி விட… சந்திரா மேலும் சிறிது நேரம் அங்கிருந்தார்.
அவர் கிளம்பும் போது அவருடன் வெளியே வரை சென்ற சம்யுக்தா, “நான் அப்பாகிட்ட சொத்தெல்லாம் கொடுத்திடலாம்னு தான் சொன்னேன் பெரியம்மா.” என்றாள்.
“இப்போ எனக்கு அது முக்கியமும் இல்லை. பணத்துக்காகத்தான் கூடப் பிறந்தவனே என்னை அடிச்சான். பணம் மட்டும் வாழ்க்கை இல்லைன்னு எனக்கு இப்போ தான் புரியுது. உங்க அப்பா எங்களுக்குச் செய்யுறது செய்வார் தான். ஆனா அவர் எங்களை ஒதுக்கி வச்சது பார்த்து, சம்பந்தி வீட்ல என்ன நினைப்பாங்க. அதுதான் வருத்தமா இருக்கு.”
“அப்பா அண்ணன் கல்யாணத்துல கோபமா இருக்கார்.”
“அவர்கிட்ட இப்போ சொத்துக் கொடுக்கச் சொல்லி கேட்கலை. அவர்கிட்ட இருக்கிறது தான் பாதுகாப்பும் கூட. ஆனா என்னைக்கோ ஒரு நாளாவது வந்து பிள்ளைங்களை விசாரிச்சிட்டுப் போகலாம் இல்ல…”
“யாரோ மாதிரி இருந்தா நல்லா இல்லை. ஆனா அதை நான் உங்க அப்பாகிட்ட சொல்ல முடியாது.” என்றவர் விடைபெற்று சென்று விட… பெரியம்மாவின் மாற்றம் சம்யுக்தாவுக்கு மகிழ்ச்சியாகவே இருந்தது. தந்தையையும் அவர் அருமையையும் இப்போதாவது புரிந்து கொண்டாரே என நினைத்தாள்.
சக்ரவர்த்திக்கு எல்லாம் தெரிந்தும், அவர் உடனே எல்லாம் சமாதானம் ஆகவில்லை. ஸ்ரீநிதிக்கு மகன் பிறந்திருக்க…. அப்போதுதான் வீட்டுக்கே வந்தார்.
அதன் பிறகு வாரத்தில் ஒருநாள் வந்து எல்லோரையும் பார்த்துவிட்டு செல்வார். சந்திராவோடு நேரடியாகப் பேச்சு வார்த்தை இல்லை தான். ஆனால் சந்திர பேசினால் கேட்டுக் கொள்வார். அதுவே சந்திராவுக்கு போதும் என்றிருந்தது. பிள்ளைகளும் மகிழ்ச்சியாக இருந்தனர்.
தேன்மொழி மாமனார் வரும் போது நன்றாகவே உபசரிப்பாள். அவளுக்குப் பெரிய இடத்தில் திருமணம் செய்து கொண்டு செல்ல வேண்டும் என்ற ஆசை. அதனால் பெற்றோர் வீட்டை தள்ளி வைத்து வைத்து விட்டு மாமியாரிடம் ஒத்து வாழவே முயன்றாள். இப்படியும் பெண்கள் இருக்கிறார்களா என்றால்… தன் வாழ்க்கை தான் முக்கியம் என நினைக்கும் பெண்களும் இருக்கிறார்கள் தான்.
ஆரியன் புது வீடு கட்ட துவங்கி இருந்தான். மகளின் முதல் பிரிந்த நாளுக்கு அங்கே இருக்க வேண்டும் என வேகமாகக் கட்டிக் கொண்டிருந்தான். வீட்டிற்கு வந்தாலும் மகளோடு தான்.
“உங்க பொண்ணு வந்ததும் நீங்க சுத்தமா என்னை மதிக்கிறதே இல்லை.”
“நீயும் தான் உங்க அப்பா அப்பன்னு இருக்க… ஆனா எங்களைப் பார்த்தா மட்டும் உனக்கு ஏன் கடுப்பாகுது.”
சம்யுக்தா பதில் சொல்லாமல் கணவனை முறைத்துப் பார்க்க…
“என்ன டி அப்படிப் பார்க்கிற?”
“நானும் எனக்குன்னு ஒரு பையனை சீக்கிரம் பெத்துகிட்டு… இதே மாதிரி பண்றேன்.”
“அப்படியா… இப்பவே கூட நான் அதுக்கு உதவி பண்றேன்.” என்றவன், மகளைக் கட்டிலில் விட்டு மனைவியை ஆசையாக நெருங்க….
“ஒன்னும் வேண்டாம்.” என சம்யுக்தா கணவனைத் தள்ளி விட…
“நான் இல்லாம எப்படி டி…. எங்களுக்கு எதிராவே நீ ஒரு ஆளை ரெடி பண்ணாலும், அதுக்கும் நான்தான் வேணும் தெரியும் இல்ல….” எனக் கணவன் பேச பேச சம்யுக்தாவுக்குச் சிரிப்பு தான் வந்தது.
“உங்ககிட்ட பேசி ஜெயிக்க முடியாது. உங்க உதவி தேவைப்படும் போது தெரிவிக்கப்படும். இப்போ அடங்குங்க.” என்றாள்.
“ஓகே…” என்றவன் மீண்டும் மகளைத் தூக்கிக்கொள்ள…
யப்பா இவனைச் சமாளிப்பது ரொம்பக் கஷ்ட்டம் டா… என நினைத்துக் கொண்டாள்.
முதல் முதலாக அவன் அவளைப் பார்த்த பார்வை மறக்கவே மறக்காது. அவளைப் பார்த்து அப்படி முறைத்திருந்தான். ஆனால் அவனையே விரும்பி திருமணம் செய்வோம் என்றெல்லாம் அவள் நினைத்ததே இல்லை. இப்போது மகள் வேறு வந்திருக்க… கணவனை நினைத்து மனதிற்குள் அவ்வளவு மகிழ்ச்சியும் பெருமிதமும்.
மகளின் முதல் பிறந்த நாளை புது வீட்டில் தான் கொண்டாடினர். ஆரியனின் அலுவலகமும் வீட்டின் கீழ் தளத்தில் தான். மேலே இரண்டு தளங்களில் வீடு கட்டி இருந்தனர். இவர்கள் வாங்கிய இடம் தெருமுனையில் இருந்ததால்… அலுவலகத்திற்குத் தனி வாயில் வைத்திருந்தான்.
அவினாஷ் அண்ணனுடன் தொழிலில் இணைந்திருக்க… சடகோப்பனும் சரளாவும் இங்கேயே மகன்களுடன் வந்து இருந்து கொண்டனர்.
பவித்ரன் ஆசைப்பட்டது போல அவனுக்கு வெளிநாடு வாய்ப்பு வந்திருக்க… அவன் மனைவி மகனோடு வெளிநாடு சென்றான்.
ஊருக்கு சென்றால் குடும்பத்துடன் சென்று சந்திராவையும் பார்த்து விட்டு வருவார்கள். அவரையும் விட்டுத் தருவது இல்லை.
சந்திராவும் வாயை அடக்கப் பழக்கி இருக்க… சக்ரவர்த்தியும் நிம்மதியாக இருந்தார்.
சம்யுக்தா அவள் அம்மாவிடம் தையல் கலை பயின்றிருந்தாள். அவளுக்கு அவள் அம்மாவை போல ஆடை வடிவமைப்பில் தான் ஆர்வம் என்பதை உணர்ந்த ஆரியன், “என் பொண்ணு என் கம்பனியை பார்க்கட்டும், நீ உனக்குப் பிடிச்சது பண்ணு.” என அவளைத் தையல் கலையில் ஒரு கோர்ஸ் முடிக்க வைத்து, அவளுக்கு என்று சொந்தமாகப் பொட்டிக் ஒன்றையும் வைத்துக் கொடுத்திருந்தான்.
இந்துஜாவும் மகளுடன் சேர்ந்து பார்த்துக் கொண்டார். திருமணப் புடவைகளுக்கு ஏற்ற வகையில் ரவிக்கை தைத்துக் கொடுப்பது மட்டும் அல்லாது, அந்த உடைக்குப் பொருத்தமாக மணமகளுக்குத் தேவையான அனைத்து ஆபரணங்களும், தலை முதல் கால் வரை தேவைப்படுவது அனைத்தும் அவர்களிடம் கிடைக்கும். தலையை அலங்கரிக்கும் பூக்கள் கூடப் புடவைக்கு ஏற்ற வகையில் செய்து கொடுப்பதால்… வாடிக்கையாளர்கள் குவிந்தார்கள்.
ஆரியன் அவன் இஷ்ட்டதிற்கு அவளை வளைப்பது போலத்தான் சம்யுக்தாவுக்கு இருக்கும். ஆனால் அவளுக்காக நிறையச் செய்திருக்கிறான். அவன் துறையில் அவன் வளர்வது போல… மனைவியின் விருப்பமான துறையில் அவளை வளரவிட்டது எல்லாம் அவளுக்குப் பெரிதாகத் தோன்றும். ஆனால் அவன் சாதாரணம் போல இருப்பான்.
முன்பு போல எதற்கெடுத்தாலும் கோபப்பாடுவதும் இல்லை. மனைவிக்காகவே கோபத்தையும் குறைத்திருந்தான், அவளின் அன்புக் கண்ணாளன். அவனை நினைக்க நினைக்க காதல் கூடியதே தவிர… சம்யுக்தாவுக்கு குறை ஒன்றும் இல்லை.