அன்புள்ள கண்ணாளனே

இறுதி அத்தியாயம் 

சந்திரா ஊரில் இருந்து திரும்பி இருந்தார். அவரின் தாய் மற்றும் பிள்ளைகளைப் பார்க்க வேண்டும் என்று கடமைக்காக வந்து கொண்டிருந்த கணவனும் வருவதில்லை. மகனை இவரே தள்ளி வைத்திருந்தார்.

இப்படியே விட்டால் மகனுக்குச் சேர வேண்டியது கிடைக்காதோ என்ற எண்ணம் வர… அவரே சென்று மகன் மருமகளிடம் பேச ஆரம்பித்தார். ஆனால் வீட்டுக்கு வரும்படி அழைக்கவில்லை.

உங்க அப்பா இது தான் சாக்குன்னு உன்னை மொத்தமா கை கழுவிடப் போறாரு.” என மகனுக்கு வேறு சொல்லிக் கொடுத்தார்.

மாமியார் ராசி ஆகி விட்டார். இனி தங்களை அந்த வீட்டுக்கு அழைத்து விடுவார் என்று ஸ்ரீகாந்தின் மனைவி தேன்மொழி, மாமியார் வீட்டுக்குச் செல்லும் நாளை ஆவலாக எதிர்பார்த்தாள்.

பெரிய வீட்டில் இருக்கக் கசக்குமா என்ன? ஆனால் அவளுக்குச் சந்திராவை பற்றித் தெரியவில்லை. அப்படி எளிதில் ஏமாறும் ஆள் இல்லை சந்திரா. சந்திராவுக்கு மகன் மீது தான் கரிசனமே தவிர, மருமகள் மீது அல்ல… தன் வீட்டை அவர் வேறு யாரும் ஆள விட மாட்டார்.

ஸ்ரீமதியும் குழந்தை உண்டாகி இருக்க… சீதா சென்று சில நாட்கள் மகன் வீட்டில் தங்கி இருந்து மருமகளுக்கு வாய்க்கு ருசியாக ஆக்கி போட்டு விட்டு வந்தார்.

அடுத்தச் சில நாட்களில் சம்யுக்தாவுக்குச் சுகப் பிரசவத்தில் அழகான பெண் குழந்தை பிறந்திருக்க… ஆரியனின் பெற்றோருக்கு இருவரும் ஆண் வாரிசு தானே… அவர்கள் குடும்பத்தின் முதல் பெண் வாரிசு என்பதால்… சம்யுக்தாவின் புகுந்த வீடே புது வரவை கொண்டாடியது.

ஆரியன் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தான். அவனுக்குப் பெண் குழந்தை தான் வேண்டும் என்ற ஆசை இருந்தது. அவன் நினைத்தபடியே பெண் குழந்தை பிறந்ததில்… அவனைக் கையில் பிடிக்க முடியவில்லை.

ஸ்ரீகாந்த மனைவியுடன் மருத்துவமனைக்கே வந்து தங்கையையும் குழந்தையும் பார்த்து விட்டுச் சென்றான். இவர்கள் யாரும் அவனை அழைக்கவில்லை. அவன் வந்த போது, ஏன் வந்தாய் என்றும் கேட்கவில்லை. சக்ரவர்த்திக்கு இன்னும் அவன் மீது கோபம் தான். ஆனால் அவனை எதுவும் பேசவும் இல்லை.

சுகப் பிரசவம் என்பதால் சம்யுக்தாவின் பெற்றோரிடம் கேட்டுக் கொண்டு குழந்தைக்கு முப்பது நாள் ஆனதும், சரளா மருமகள் மற்றும் பேத்தியை தன்னுடன் ஊருக்கு அழைத்து வந்து விட்டார்.

ஊரில் விஷயம் தெரிந்து நிறையப் பேர் வந்து குழந்தையைப் பார்த்து விட்டு சென்றனர். சம்யுக்தா இங்கே வந்ததும், ஆரியன் மதுரையில் அவன் வீட்டிற்குச் சென்று விட்டான். வார இறுதியில் ஊருக்கு வருபவன், மேலும் இரண்டு நாட்கள் இருந்து விட்டு செல்வான்.

சக்ரவர்த்தி இந்தப் பக்கம் வருவதில்லை. மகனும் இப்போது உடன் இல்லை என்று தெரிந்து கொண்டு, மீண்டும் சந்திராவின் குடும்பம் வந்து ஒட்டிக் கொண்டது.

உடல் நிலை முடியாமல் இருக்கும் தாயை சந்திராவின் தலையில் கட்டி விட்டுச் செல்லலாம் என முத்துக்குமார் நினைக்க… “சந்திரா எனக்கே முடியலை, நான் எங்க பார்க்கிறது. என்னால இங்க வச்சு பார்க்க முடியாது. நான் வேணா அடிக்கடி உங்க வீட்டுக்கு வந்து பார்த்துக்கிறேன்.” என்று சொல்ல… இவரைப் பற்றித் தெரிந்தும், நாமே வந்து தலையைக் கொடுத்தோமே என முத்துக்குமாரின் மனைவி தன்னையே நொந்து கொண்டாள்.

தனசேகர் அவர் அம்மாவுக்கு உடல் நிலை சரி இல்லை என்று காரணத்தை வைத்துப் பெயிலில் வந்தவர், “உனக்கு உதவப் போய்த் தான் எனக்கு இந்த நிலைமை.” என்று நீலிக் கண்ணீர் வடித்துப் பணம் பறித்துக் கொண்டு சென்றார்.

அவர் பணம் வாங்கியது தெரிந்து முத்துக்குமாரும் வந்து அடிக்கடி பணம் வாங்க ஆரம்பித்தான்.

இப்போது கேட்க ஆளா இருக்கிறார்கள் என்ற எண்ணத்தில்… சந்திராவிடம் அடிக்கடி முத்துக்குமார் பணம் கேட்க… ஒரு கட்டத்தில் சந்திரா கொடுக்க முடியாது என்று சொல்ல…

அது என்ன அண்ணன் கேட்டா கொடுக்கிற, நான் கேட்டா இல்லைன்னு சொல்ற. நீதான் உன் புருஷனை அவரை விட்டு கொல்ல சொன்னியா? அதுதான் அவர் கேட்கும் போதெல்லாம் பணம் கொடுக்கிறியா?” என முத்துக்குமார் கோபத்தில் கேட்டு விட…

நீ கேட்கும் போதெல்லாம் பணம் கொடுத்தேன் பாரு, எனக்கு இதுவும் வேணும். இனிமே இந்தப் பக்கம் வந்தேனா அவ்வளவு தான். முதல்ல வெளிய போ…” எனச் சந்திரா கத்த….

முத்துக்குமார் கோபத்தில் மேஜையில் இருந்த கனமான ஜாடியை எடுத்து சந்திராவின் தலையில் அடித்து விட்டு சென்று விட்டான்.

நடு மண்டையில் நச்சென்று வாங்கிய அடியில்… மண்டை உடைந்து ரத்தம் கொட்ட…. அவர் போட்ட சத்தம் வெளியே வரை கேட்க…

கொள்ளு பேத்தியை பார்த்துகொள்ள ஞானமும் மகள் வீட்டில் தான் இருந்தார். இந்த வாரம் ஆரியன் மதுரைக்குச் செல்லும் போது, அவரையும் அழைத்துச் செல்வதாக இருந்தது. அதற்குள் தன் வீட்டிற்கு ஒருமுறை சென்று விட்டு வர வேண்டும் என்றார்.

சரளாவும் சரி என… ஆரியன் அவரை விடுவதற்காகக் காரில் அழைத்து வந்தான்.

முத்துக்குமார் மாமாவின் வீட்டில் இருந்து வெளியே செல்வதை அவனும் பார்த்திருந்தான். இவன் எதற்கு வந்தான் என அவன் நினைக்கும் போதே… வீடு வந்திருக்க… ஞானத்திற்குக் கதவு திறந்து விட…. அவர் இறங்கும் போதே… சந்திராவின் குரல் வெளியே வரை கேட்க… இருவரும் பதட்டமாக வீட்டிற்குள் சென்று பார்த்தனர்.

சந்திரா தலையில் இருந்து ரத்தம் வழிந்தபடி தரையில் உட்கார்ந்திருக்க…

பாட்டி அவங்களைப் பாருங்க. இதோ வந்திடுறேன்.” என்றவன், வேகமாக முத்துக்குமார் சென்ற பக்கம் சென்றான்.

முத்துக்குமார் தனது வண்டியை முக்கியச் சாலையில் நிறுத்தி இருந்ததால்… நடந்து சென்று வண்டியில் ஏற…. அங்கே வேகமாகச் சென்ற ஆரியன், அவன் வண்டியை கிளப்பும் முன் வண்டியில் ஓங்கி உதைக்க… முத்துக்குமார் வண்டியில் இருந்து தடுமாறி கீழே விழுந்தான்.

அவன் சட்டையைப் பிடித்துத் தூக்கிய ஆரியன், அவனை அடி புரட்டி எடுக்க… அதற்குள் ஞானம் சொல்லி, ஸ்ரீகாந்த வீட்டிற்கு வந்தவன், ஆரியன் முத்துக்குமாரை அடிப்பதை பார்த்து அவனிடம் சென்றான்.

உங்க அம்மாவை மண்டை உடையுற மாதிரி அடிச்சு போட்டுட்டு வந்திருக்கான்.” என அவன் சொல்ல…. ஸ்ரீகாந்தும் முத்துக்குமாரை சேர்ந்து அடிக்க…

நான் கோபத்துல செஞ்சிட்டேன்.” என முத்துக்குமார் தன்னை விட்டு விடும் படி கெஞ்ச…

போ போலீஸ் வரும் உங்க அண்ணனோட துணைக்கு ஜெயில்ல போய் இரு.” என்ற ஆரியன் ஸ்ரீகாந்த்தோடு வீட்டுக்குச் சென்றான்.

ஞானம் ஒரு ஈர துணியை வைத்துத் தலையில் கட்டி ரத்தத்தை நிறுத்தி இருந்தாலும், நிறைய ரத்தம் வெளியேறி இருந்ததால்… சந்திரா மிகவும் சோர்வாக இருந்தார். அவரை உடனே ஆரியனும் ஸ்ரீகாந்தும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

சந்திராவுக்குச் சரியான அடி தான். நிறையத் தையல் போட்டிருந்தனர். அவர் புடவை எல்லாம் ரத்தம் தான். தேன்மொழி தான் மாமியாருக்கு மாற்று புடவை எடுத்து வந்து மாற்றி விட்டாள்.

விஷயம் தெரிந்து சடகோபப்னும் சரளாவும் உடனே மருத்துவமனைக்கு வந்து விட்டனர்.

சந்திரா மயக்கம் தெளிந்து உட்கார்ந்து இருக்க… ஆரியன் பேசிய பேச்சில் அவருக்கு மீண்டும் மயக்கம் வரும் போல இருந்தது. அப்படித்தான் அவரைக் கிழி கிழி எனக் கிழித்தான்.

இதுதான் நடக்கும்னு நினைச்சேன் அத்தை அதுதான் நடந்திருக்கு.”

இந்த அண்ணன் தம்பி இருக்கிற தைரியத்துல தான நீங்க மாமாவை மதிக்காம இருந்தீங்க. விட்டா உங்களைப் பணத்துக்காகக் கொன்னிருப்பான். மாமா கொஞ்ச நாள் இங்க வரலை… அதுக்கே உங்க நிலைமை இப்படி.”

மாமா இருந்திருந்தா… அவனுக்கு இப்படிச் செய்யத் தைரியம் வந்திருக்குமா?”

உங்க மாமியார் உங்களைக் காப்பாதினாங்க. நாங்க மட்டும் அந்த நேரம் வரலைனா… நீங்க வீட்டுக்குள்ள மயக்கம் போட்டு விழுந்திருந்தா… யாருக்குத் தெரிஞ்சிருக்கும். இந்நேரம் என்ன வேணா ஆகி இருக்கலாம்.” என அவன் சொல்ல வருவது புரிய… சந்திரா மிரண்டு தான் போனார்.

இப்போ நீங்க இவ்வளவு ராங்கியா இருந்து என்ன சாதிச்சீங்க? உங்களுக்குன்னு நாலு நல்ல மனுஷங்களையாவது சேர்த்து வச்சிருக்கீங்களா? நீங்க தான் மோசம்னு பார்த்தா… உங்களைச் சுத்தி இருக்கிறவங்களும் அப்படித்தான் இருக்காங்க.” ஆரியன் நாக்கை பிடுங்கி கொள்வது போலக் கேட்க… முதல் முறையாக சந்திரா பேச முடியாமல் போனார்.

என்ன இவங்க இப்படிப் பேசுறாங்க, அதுவும் தன் மாமியாரை இப்படி ஒருவர் பேசி விட முடியுமா என தேன்மொழி ஆச்சர்யமாகத்தான் பார்த்துக் கொண்டிருந்தாள். அவளுக்கு ஆரியனை பற்றித் தெரியாது அல்லவா…

சரி டா விடு.” என சரளா சொல்ல…

எதை விடச் சொல்றீங்க. இதை இழுத்து வச்சது இவங்க தானே… எதாவது ஆகி இருந்தா நாம அடக்கம் பண்ணிட்டு அதோட மறந்திடுவோம். நமக்கு ஒன்னும் நஷ்ட்டம் இல்லை. ஆனா இவங்க பிள்ளைங்களுக்காவது இருக்கணும் இல்ல…” என அவன் சொன்னதும்,

அடப்பாவி இதுக்கு என்னைக் இவன் காப்பாத்தாம அப்படியே விட்டிருக்கலாமே.. என்ன பேச்செல்லாம் பேசுறான்.” என்பது போலச் சந்திரா நினைக்க… பார்த்துக் கொண்டிருந்த அவினாஷுக்குச் சிரிப்பு வந்து விட்டது.

அவன் அண்ணனை இழுத்துக் கொண்டு வீடு வந்தான். ஏற்கனவே ஆரியன் முத்துக்குமாரை தெருவில் வைத்து அடி பின்னி எடுத்ததை… சம்யுக்தாவிடம் யாரோ வந்து சொல்லி இருந்தார்கள். இப்போது அவினாஷும் வந்து அவன் அண்ணன் பேசியதை சொல்ல…

பொம்பளை பிள்ளை பெத்து வச்சிருக்கோம். அதை நல்லபடியா வளர்க்கணுமேன்னு எல்லாம் உங்களுக்கு நினைப்பு இருக்கா இல்லையா… மண்டை உடைஞ்சா ஆஸ்பத்திரியில சேர்த்திட்டு வத்திட்டே இருக்கணும். நீங்க எதுக்கு அவங்களோட மல்லுக்கு நிற்கிறீங்க.”

பெரிய ஹீரோன்னு நினைப்பு.” என சம்யுக்தா கணவனிடம் எகிற…

மனைவி பேசியது காதில் விழுந்ததா என்று கூடத் தெரியவில்லை…. ஆரியன் குளிக்கச் சென்று விட்டான்.