‘எது எப்படியோ, மாப்பிள்ளை நவீந்தானே?’, என்ற மனதுக்கு, ‘அதுதான் எப்பவோ தெரியுமே?  ஆனால் விருப்பப்பட்டு நடக்கும் கல்யாணம் இல்லையே’, என்றது  மற்றொரு மனது. நவீனுக்கும் தன்னை பிடிக்குமா என்பதும் ஒரு சந்தேகம். அன்று டின்னர் போய்விட்டு வந்த போது அப்படித்தான் என்று நினைத்த மனது, ‘அப்பவோ அதுக்கு அப்பறமோ எதுவுமே சொல்லலை. ஒரு வேளை நானா கற்பனை பண்ணிகிட்டேனா?  அப்பாக்கு போன் பண்ணதுக்கு முன்ன ஒரு வார்த்தை நவீன் எங்கிட்ட கேட்டிருக்கலாமே?  நேத்து மும்பை போறதுனால பேசல, அதுக்கு முன்னாடி பேசினப்போ வீட்ல என்ன சொன்னாங்க, வேற யார் என்ன சொன்னாங்கன்னு எல்லாம் பேச நேரம் இருந்துச்சு, இதை ஒரு வார்த்தை கேட்க நேரமில்லையா? நான் என்ன அப்படியா இளக்காராமா போயிட்டேன். இவ என்ன வேணாம்னா சொல்லப் போறான்னு அலட்சியமா அவருக்கு?’, எண்ணங்கள் சுற்றி சுழன்றடித்தது.
போன் செய்து அவனையே ஒரு பிடி பிடிக்கலாம் என்று தோன்றியது ஸ்ரீக்கு. சுற்று முற்றும் தேடியவளுக்கு கைபேசி அகப்படவில்லை. கீழேயே விட்டுவந்தோமோ, என்று நினைத்து, கண்களை துடைத்துக்கொண்டு இறங்கிச் சென்றாள்.
பாண்டியனும் ரோஜாவும் இன்னும் பேசிக் கொண்டிருந்தனர். ஸ்ரீ வந்து அங்கேயும் இங்கேயும் தேட, “ உன் போன் எங்கிட்டதான் இருக்கு, இருக்கட்டும். நீயா எதையாச்சம் பேசி கெடுத்து வைக்காதே.”, என்றார் ரோஜா.
அவர் பேச்சில் கண்கள் விரித்த ஸ்ரீ, “மா… இதென்ன சின்ன குழந்தை மாதிரி போனை எடுத்து வைக்கறது ?”, என்று முறைத்தாள்.
அதற்கு மேலும் அவளை முறைத்தவர், “உன்னை நம்பலைன்னு அர்த்தம். நவீன் அப்பா அம்மாகிட்ட சம்மதம்,  நீங்க கிளம்பி வாங்கன்னு சொல்லியாச்சு. இனி  நீ எது பேசினாலும் அது தப்பாகிடும். ஒழுங்கா லட்சணமா அன்னிக்கு வந்து அமைதியா நில்லு.”, என்று மிரட்டினார்.
“அப்பா… பாருங்கப்பா….”, தந்தையிடம் முறையிட்டாள்.
“எதுக்குமா போன் தேடற?”, மகளை அறிந்தவராக கேட்க, “ அது .. வந்து… வாட்சப் பார்க்க…”, என்று இழுப்பதிலேயே தெரிந்து போனது.
“இன்னிக்கு யார் கூடவும் எதுவும் நீ பேச வேணாம். நிதானமா யோசி. அப்படி கண்டிப்பா பேசணும்னா, நவீனுக்கு நாளைக்கு பேசு.”, பாண்டியன் கூறவும் பெண்ணிற்கு கண் மண் தெரியாத கோபம்.
“வேணாம்… எனக்கு யார் கூடவும்…எதுக்காகவும் பேச வேணாம். நவீன் கூடத்தான் கல்யாணம்னு சென்னைல ஐ.பி.எல் மாட்ச் பார்க்க போகும்போதே ஜக்கி காட்டி தொலைச்சிருச்சு.  அதனால நீங்க ஒன்னும் கவலை பட வேணாம். நான் இல்லை… நீங்களே முடியாதுன்னாலும் நவீனோடத்தான் எனக்கு கல்யாணம். போதுமா?”, பட்டென்று இரு கைகளையும் அடித்துக் கும்பிடு போட்டவள், போட்டிருந்த பாவாடை சுழல விருட்டென்று திரும்பிப்போனாள்.
“ஏய்… நில்லுடி…. இரு இரு…. என்ன பார்த்த ? எப்ப பார்த்த… முழுசா சொல்லிட்டு போடி?”, ரோஜா அவள் பின்னே ஓடினார்.
நாலு படி ஏறியிருந்தவள் அங்கிருந்தபடியே, நவீனை முதன் முதலாக பவுண்ட்ரி லைனில் பார்த்ததும், கல்யாண மேடையில் மாலையும் கழுத்துமாக இருவரும் அமர்ந்திருப்பதுபோல காட்சி விரிந்ததையும் கூறினாள்.
“உன்னைப் பத்தியே நீ பார்த்தியா? இதுக்கு முன்னாடி அப்படி தெரிஞ்சுதா எப்பவாவது?”, ரோஜா ஆச்சரியமாகக் கேட்டார்.
“மா… பார்த்ததில்லை. அதுக்குத்தான் அன்னிக்கு நானும் ராகுலும் உங்கிட்ட பவானி பாட்டி பத்தி கேட்டுகிட்டு இருந்தோம். நீயும் அவங்களுக்கு அப்படி எதுவும் தெரியலை, அதான் அந்த குடும்பத்துல மாட்டினாங்கன்னு சொன்னியே… இப்ப எனக்கு காட்டியிருக்கு.  எதுக்குன்னு தெரியலை. போறுமா விளக்கம்? இதுக்கு மேல எனக்கு ஒன்னும் தெரியாது.”, வள்ளென்று விழுந்துவிட்டு போனாள் ஸ்ரீ.
ஆனாலும் ரோஜா கோபப்படவில்லை. யோசனையாக வந்து சோஃபாவில் அமர்ந்தார்.
“என்ன வனா ? அவ அப்படி பார்த்தது நல்லதுக்கா? “, சற்று கவலையாகக் கேட்டார் பாண்டியன்.
“தெரியலைங்க. பவானி அத்தைக்கு கட்டிக்கப் போறவன் யாருன்னு தெரியறதுக்கு முன்னாடியே அவசரப்பட்டு கல்யாணம் செய்ததுனாலதான் அல்பாயுசுல போயிட்டாளோன்னு ஒரு வாட்டி அம்மா பேசும்போது சொன்ன மாதிரி ஒரு ஞாபகம். ஆனா ஒன்னு, ஸ்ரீ சொன்ன மாதிரி, அவளுக்கு விஷன் வந்திருக்குன்னா அதுதான் கண்டிப்பா நடக்கும்.  மனசை போட்டு குழப்பிக்க வேணாங்க. நல்லதே நடக்கும்னு நிறைஞ்ச மனசோட செய்வோம். “, ரோஜா திடமாக சொல்லவும், சற்று நம்பிக்கை பெற்றவராக தெளிந்தார் பாண்டியன்.
அன்று மாலை இந்திய அணிக்கு முதல் முறையாக விளையாடத் தேர்வானான் நவீன் சக்கிரவர்த்தி.  T20, ஒரு நாள் போட்டி என்று இரண்டு பட்டியலிலும் இருந்தான். ஆடப் போகும் பதினோரு பேரில் இருப்பானா தெரியாது, ஆனால் டீமில் எடுக்கப்பட்ட பதினெட்டு பேரில் இவனும் ஒருவன். ஆசைப்பட்ட ப்ளூ ஜெர்சி கனவு மெய்ப்படும் தருணம். மாலை பி.சி.சி.ஐ அறிக்கை வந்ததிலிருந்து வாழ்த்து மழையில் நனைந்து கொண்டிருந்தான் நவீன்.
சக்கரவர்த்திக்கு நவீன் போன் செய்து சொன்னதுமே இரட்டிப்பு மகழ்ச்சி.  “இப்பதான் ஸ்ரீயோட அப்பா பேசினார்டா. வீட்லயும் பேசிட்டேங்க. எங்களுக்கும் சம்மதம். நீங்க ஞாயிறு எப்ப வரீங்க, என்னன்னு சொன்னா அதுக்கு தக்கபடி ஏற்பாடு செய்யறோம்னு சொல்லி வெச்சாரு. நீ நல்ல செய்தியோட கூப்பிடற. ரொம்ப சந்தோஷம்டா… ஒன் டேக்கும் சேர்த்து எடுத்திருக்காங்க. நாம எதிர்பார்க்கவே இல்லை. எல்லாம் மருமக வர நேரம்.”, மகனுக்கு தெரிய வேண்டியதை தெரிவித்து, மனைவிக்கும் இது நல்ல சகுனம் என்பது போல பேசினார்.
போனை அவரிடமிருந்து பறித்த கோகிலா, “ராசா… சாப்பிட்டியாடா?”, என்று ஆரம்பிக்க,
“இல்லைமா. இப்பதான் காபி சாப்பிட்டேன். இன்னும் ஒரு மணி நேரம் கழிச்சுதான் எதாவது வாங்கணும். “, மகன் சொல்லவும்,
“கண்டதையும் சாப்பிட்டு உடம்பை கெடுத்துக்காதடா. உனக்குன்னு ஒருத்தி வந்தா, கூடவே இருந்து சமைச்சு குடுப்பா. ஸ்ரீக்கு நல்லா சமைக்க தெரியுமா நவீன் ?”, கோகிலா கேட்க, என்ன சொல்வது என்று முழித்தான் நவீன்.
“அது…. எனக்கு தெரியாதே மா.  அவங்க அம்மா நல்லா சமைப்பாங்க. “, உண்மையை சொன்னான்.
“ம்ம்… நான் போகும்போது கண்டிஷனா சொல்லிடறேன். சமையல் தெரியலைன்னா கத்துகுடுத்துடுங்க. என் பிள்ளை பாதி நாள் ஓட்டல்ல சாப்பிட்டு கஷ்டப்படுது. முடிஞ்ச வரை கூடவே இருந்து கவனமா சமைச்சு, அவனை பார்த்துக்கறதுதான் உங்க பொண்ணுக்கு ஒரே வேலைன்னு தெளிவா சொல்லிடறேன்.”, கோகிலா ஆரம்பிக்க, நவீனுக்கு கண்ணை கட்டியது.
அம்மா இப்படி பேச, ஸ்ரீயின் எதிர்வினை எப்படி இருக்கும் என்று யோசிக்கக் கூட முடியவில்லை. ‘ஐயையோ… நான் சாதாரணமா சொல்லப்போய் இப்படி ஆகிடுச்சே…. அம்மா இப்பவே இப்படி பேசினா கல்யாணமே நடக்காது போலருக்கே.’, என்று பயம் கவ்வியது.
“போனைக் குடு நீ. புள்ளைக்கு வாழ்த்து சொல்லுவன்னு பார்த்தா, மருமகளுக்கு ஆர்டர் போடறன்னு சொல்லுற ? போய் எதாவது ஸ்வீட் பண்ணு. எப்படியும் விசாரிக்க என் ப்ரண்டுங்க வருவாங்க.”, என்று மனைவியை அனுப்பியவர் போனில்,
“ஏண்டா… நான் கஷ்டப்பட்டு கல்யாண ஏற்பாடு பண்ணா, நீ உங்க அம்மாவைவிட்டு ஒரே நிமிஷத்துல கலைச்சிடுவ போலருக்கே ? கல்யாணம் வேணுமா வேணாமா?”, சக்ரவர்த்தி மகனை கலாய்த்தார்.
“நான் ஒன்னுமே தப்பா சொல்லலைப்பா. எனக்கு தெரியாதுன்னுதான் சொன்னேன். அது எப்படி அம்மாவை இந்த பேச்சுக்கு கொண்டு வந்துச்சுன்னு புரியலை. அப்பா… ப்ளீஸ் ப்பா…. இப்படியெல்லாம் ஸ்ரீகிட்ட பேசினா தெறிச்சு ஓடிருவாப்பா. ஏற்கனவே நான் அம்மாக்கு பயந்த பிள்ளைன்னு என்னை ஓட்டுவா.”, தந்தையிடம் கெஞ்ச,
“மருமக சரியாத்தானடா சொல்லியிருக்கு ? அம்மா கோண்டுதானடா நீ? “, அவர் பங்குக்கு அவரும் ஓட்ட,
“அப்ப்ப்பா… ரிவெஞ்ச் எடுக்க இது நேரமில்லை. நீங்கதான் என் செல்லம். அப்படி சொன்னா அம்மா கஷ்டப்படுவாங்களேன்னுதான் நான் சொல்றது இல்லை. சரியா? கல்யாணம் வரை அம்மாவை பார்த்துக்கோங்கப்பா…. ப்ளீஸ்ப்பா…”, மகனின் சரணாகதியில் மனம் குளிர்ந்தவராக,
“சரி… கல்யாணம் வரை நான் பார்த்துப்பேன். அப்பறம் உன் அம்மா, பொண்டாட்டி இரண்டு பேரையும் நீதான் சமாளிக்கணும்.  வந்த மறுனாளே உன் பொண்டாட்டி பொட்டியைக் கட்டிட்டு கிளம்பினா அது உன் பாடு. ஓக்கேவா?”, மகனின் பீதியைக் கிளப்பினார் குஷியாக.
“ஐயோ தெய்வமே…. இப்படியெல்லாம் பொசுக்குன்னு சொல்லிடக் கூடாது. எனக்கு கொஞ்சம் ட்ரெயினிங் குடுத்துட்டு அப்பறமா கையை கழுவுங்க. அதுவரைக்கும் கைவிடாதீங்கப்பா.”, என்ற நவீனின் அலறலில், வாய்விட்டு சிரித்தவர்,
“இன்னிக்குத்தாண்டா என்ற மனசு குளு குளுன்னு இருக்கு…. உங்கம்மாவோட சேர்ந்துகிட்டு என்னா வெறுப்பேத்துவ என்னை. இப்ப அவ வில்லியாகிட்டா நான் உனக்கு தெய்வமாகிட்டேன்… இது நல்லா இருக்குடா மகனே…. ஐ லைக் இட்…”, சக்கரவர்த்தி கொக்கரிக்க, கடுப்பில் பல்லைக் கடித்தான் நவீன்.
“சரி… மாட்ச்சுக்கு என்ன ஃபீஸ்டா ? உன் பேர்ல நாம ஒரு ஃபளாட் ஒன்னு வாங்கிடலாம் சென்னை இல்லை மும்பைல. “, சக்கரவர்த்தி விளையாட்டை விட்டு விஷயத்திற்கு வந்தார்.
“ஒன் டே மாட்ச் ஒரு நாளைக்கு ஆறு லட்சம்ப்பா. T20 மூணு லட்சம். ஆடலைன்னா பாதி பணம் வரும். இது மூணு மாட்ச், T20 மூணு மாட்ச். இப்பவே ஃப்ளாட் வாங்கணுமாப்பா?”
“கல்யாணத்துக்கு முன்னாடி உன் பேர்ல ஒரு ப்ராப்பர்ட்டி இருக்கட்டும்டா. கார் வாங்கிட்ட, வீடும் இருக்குன்னு சொன்னாத்தானே ஒரு கவுரவம்.  ஐ.பி.எல் காசும் இருக்கு . பாதி முன்பணம் கட்டிட்டு மிச்சம் லோன் போயிக்கலாம். கல்யாணத்துக்கும் உனக்கு காசு வேணும். உன் ஃப்ரெண்ட்சுக்கு தனியா ரிசெப்ஷன் எதுவும் வைக்கணும்னா நீ யாரையும் எதிர்ப்பார்க்கக்கூடாது. இதுல எத்தனை மாட்ச் ஆடறன்னு பார்த்துட்டு ஒரு முடிவுக்கு வரலாம்.  கல்யாணம் எப்ப வைக்கறதுடா? உங்க அம்மாவை ரொம்பல்லாம் சமாளிக்க முடியாது.”
“நான் பார்த்துட்டு சொல்றேன்ப்பா. அடுத்து லண்டன் மாட்ச்சுக்கு செலக்ஷன் வரதை பொறுத்து.”, நவீன் அவன் பார்வையில் சொல்ல,
“டேய்… ஜூலைன்னா ஆடி மாசம் வந்துடும். அம்மா அப்பறம் ஆவணில வைக்கலாம்னு சொல்லிடுவா. அது ஆக்ஸ்ட் கடைசி, இல்லை செப்டம்பர்னு இழுத்துடும். அதையும் மனசுல வெச்சிட்டு ஒரு இரண்டு மூணு ஆப்ஷனோட வா சென்னைக்கு. ஸ்ரீ வீட்டுல எது வசதிபடும்னு சொல்றாங்களோ, அதை கேட்டுட்டு அதுல உங்க நட்சத்திரத்துக்கு ஒத்து வர தேதியா பார்த்து முடிவு பண்ணிக்கலாம்.”, சக்கரவர்த்தி சொல்ல, கல்யாண தேதியை முடிவு செய்யக்கூட இத்தனை பார்க்கணுமா என்று நினைத்தபடியே தலையாட்டினான்.
“அப்பா… கால்ஸ் வந்துட்டே இருக்கு. அப்பறம் கூப்பிடறேன்ப்பா.”, என்று ஒரு வழியாக வைத்தான்.
அங்கே ஒருத்தி எரிமலையாகக் கொழுந்துவிட்டு எரிவது தெரியாமல், ‘இந்த சீரீஸ் முடிஞ்சதுமே கல்யாணம் முடிச்சிட்டா, ஒரு வேளை இங்லாண்ட் சீரீஸ்க்கு செலக்ட் ஆனா ஸ்ரீயையும் கூட்டிட்டு போலாம். பாஸ்போர்ட் இருக்கான்னு கேட்கணும் அவளை.’, மனம் வேகமாக யோசிக்க, கை அடுத்து வந்த அழைப்பை ஏற்று அவன் கோச்சிடமிருந்து வந்த வாழ்த்துகளை பெற்றுக்கொண்டிருந்தது.