பின் மதிய வேளையில் மணி அடிக்கவும், யார் இந்த நேரத்தில் என்று எட்டிப்பார்த்த ரோஜா, அங்கே பாண்டியனைப் பார்க்கவும், அவசரமாக கதவைத் திறந்தார்.
“என்னங்க ? தீடீர்னு இந்த நேரத்துல வந்திருக்கீங்க ? உடம்புக்கு எதாவது செய்யுதா?”, சற்று படபடப்பாகக் கேட்டார்.
“ஹே… அதெல்லாம் இல்லை. பயப்படாதே. ஸ்ரீ எங்க?”, என்றார் பாண்டியன் அவர்கள் படுக்கை அறைக்கு சென்றபடி.
“அவ ரூம்ல இருக்கா. சாப்பிட்டு கொஞ்ச நேரம் இங்க இருந்தா. நான் படுக்கலாம்னு போகவும், அவளும் போனா. கூப்பிடவா?”
“இல்லை வனா. உங்கிட்ட பேசணும். உட்கார்.”, எனவும் ரோஜா கேள்வியாய் பார்த்தபடியே கட்டிலில் அமர்ந்தார்.
“ஸ்ரீயை பொண்ணு கேட்டு நவீன் வீட்டுலர்ந்து அவரோட அப்பா பேசினார்.”, பாண்டியன் சொன்னதும் ஆச்சரியமாகப் பார்த்தார் ரோஜா.
“என்னங்க ? என்ன திடீர்னு ?”
“ஹ்ம்ம்… இப்ப போன்ல பேசினது நாளைக்கு அஷ்டமி , அப்பறம் நவமின்னு வரதனாலயாம். ஞாயித்துகிழமை வீட்டுக்கு வராங்களாம். அதாவது நமக்கும் இஷ்டம்னா.”, மனைவியின் முக பாவனைகளைப் பார்த்தபடியே விளக்கம் கொடுத்தார் பாண்டியன்.
“ஸ்ரீ பத்தி நவீனுக்கு தெரியும். அப்போ …”
“இல்லை… நவீன் அவங்க அப்பா போன் பேசறதுக்கு முன்னாடியே கூப்பிடிருந்தார். ஸ்ரீ பத்தி மீடியால சொன்னது மட்டும்தான் அப்பாக்கு தெரியும். அப்படியே இருக்கட்டும் அங்கிள்னு சொன்னார். எதோ அவசர மீட்டிங்ன்னு இது மட்டும் சொல்லிட்டு வெச்சிட்டார்.”, பாண்டியன் இடைபுகுந்து சொல்லவும்,
வனரோஜாவின் முகத்தில் ஒரு திருப்தி. “ஓஹ்… ஆனா … நாம சொல்லணுமா?”, திரும்ப ஒரு சந்தேகம் வந்தது.
“ நவீன் தெரிய வேணாம்னு சொன்னதுக்கு அப்பறம் சொல்ல வேணாம். ஏன் தெரிய வேணாம்னு அப்பறமா கேட்டுகலாம் வனா. முதல்ல ஸ்ரீக்கு நவீனை பார்க்கறதை பத்தி என்ன நினைக்கற ?”
“நல்ல பிள்ளைங்க. பொறுப்பான பிள்ளையும் கூட. ஆனா இந்த கிரிக்கெட்ல … நிரந்தர வருமானம்னு ?”, ரோஜா தன் கருத்தைக் கூற,
“அவங்க அப்பா சக்ரவர்த்தி பொண்ணு கேட்ட கையோட அதை பத்திதான் பேசினார் வனா. இந்தியா டீம்ல எடுப்பாங்க இந்த முறைன்னு சொன்னார். அப்படி இல்லைன்னாலும், ஐ.பி.ல், டொமெஸ்டிக் மாட்ச், வெளினாட்டு லீக் மாட்ச், கிளப் மாட்ச்னு ஆடினாலும் காசுதான். பின்னாடி கோச்சிங், காமென்ட்ரின்னு நிறைய இருக்கு. வருமானத்துக்கு பஞ்சமில்லைன்னு சொன்னார்.”
“ம்ம்… இல்லைன்னாலும் பிள்ளை இரண்டு டிகிரி படிச்சிருக்கு. வீட்டுக்கு ஒரே பிள்ளை. ஆனா இப்ப நம்ம ஸ்ரீயை கேட்க என்ன காரணங்க ? கேட்டீங்களா?”, ரோஜா வினவ,
“ம்ம்… அது தான்… அவங்க இப்ப கல்யாணம் பண்றதா இல்லையாம். ஒரு இரண்டு வருஷம் பொறுத்துதான் செய்யறதா இருந்தாங்களாம். இப்ப ஸ்ரீ கடத்தி, நவீன் காப்பாத்தின்னு ஊர் பூரா வீடியோ பரவினதுல, தன்னாலதான்னு நவீனுக்கு கஷ்டமா இருக்காம். நம்ம மாதிரியே அவங்க பக்கமும் நிறைய கேள்வி. அது கூட ஒதுக்கிடலாம், ஆனா அந்த வீடியோனால நவீனுக்கு ஆதாயம் அதே சமயம் ஸ்ரீக்கு சங்கடம். அது உறுத்தலா இருக்கு. என் பிள்ளை காப்பாத்தப் போய், அவன் பாப்புலாரிடியால உங்க பொண்ணு வாழ்க்கை பாதிச்சிருச்சு. அதான் நாங்க பேசி, ஸ்ரீயை நவீனுக்கு கல்யாணம் செய்யலாம்னு யோசிச்சோம்னு சொல்றார் வனா…”, சக்ரவர்த்தி அவரிடம் பேசியதை எல்லாம் ஒப்பித்தார் பாண்டியன்.
“அப்ப இந்த ஒரு கட்டாயத்துலதான் கல்யாணத்துக்கு கேட்கறாங்களா?”, என்ன விதமாக எடுத்துக் கொள்வது என்று தெரியாமல் தடுமாறினார் வனரோஜா.
“ம்ம்.. கல்யாண யோசனையில இல்லைங்கறவங்க, இப்ப பேசி, இரண்டு நாள்ல பொண்ணு பார்க்க வரேன்னு சொன்னா, இந்த வீடியோவாலதான்.”, பாண்டியன் சொல்லவும் தரையைப் பார்த்துக்கொண்டிருந்தார் ரோஜா.
சற்று நேரம் மனைவி யோசிக்கட்டும் என்று அமைதியாக இருந்தார் பாண்டியன். ஒரு ஆழ்ந்த மூச்சை எடுத்த ரோஜா, “எப்படியும் இரண்டு பேருக்கும் ஒரு பிடித்தம் இருக்குன்னு அவ டின்னர் போனபோதே நான் சந்தேகப்பட்டேன். அன்னிக்கு நீங்க கவனிச்சீங்களா தெரியாது, நவீன் கைலாஷ் ஆஃபீசுக்கு வந்ததுக்கு காரணமே, அவன் போன் நம்பர் ஸ்ரீயோட கால் லிஸ்ட்ல அதிகமா இருந்ததாலன்னு நவீனே சொன்னான். கொஞ்ச மாசம் போனா எப்படியும் காதலிக்கறேன்னு வந்து நின்னிருக்கும் இரண்டும். அதுக்கு பதிலா இப்ப இப்படி ஆகிருச்சு. ஸ்ரீயை பிடிக்காமலா நவீன் சம்மதம் சொல்லியிருப்பான் ?”, என்று தன் எண்ணத்தை சொன்னார்.
“அப்ப, ஒரு கட்டாயத்துனால கேட்கறது பரவாயில்லையா வனா. எனக்கு அதுதான் கொஞ்சம் உறுத்துச்சு. “
“இது பாருங்க…. நாம ஒன்னும் அவங்களை போய் கட்டாயப்படுத்தலை. அவங்களா கான்டாக்ட் பண்ற வரைக்கும் நாம அவங்ககிட்ட பேசக்கூட இல்லை. இது ஒரு பக்கம் இருக்கட்டும். ஸ்ரீ விஷயத்தை நவீன் வித்தியாசமா பார்க்கலை. அவங்க அப்பா அம்மாக்குக் கூட தெரிய வேணாம்னு நினைக்கறது எனக்கு நல்ல விதமா படுதுங்க. நாமளே புதுசா ஒரு வரன் தேடி போனாலும் இதை எப்ப, எப்படி சொல்றதுன்னு குழப்பம் இருக்கும். தெரிஞ்சதுக்கு அப்பறம் அவங்க அதை சரியா ஹாண்டில் பண்ணுவாங்களான்னும் நமக்கு பயம் இருந்துகிட்டேதான் இருக்கும். அதெல்லாம் இப்ப நமக்கு இல்லை. இதுக்காத்தான் இது எல்லாமே நடந்துச்சோ என்னவோ… ஆனா யோசிக்க யோசிக்க இது சரி வரும்னுதான் தோணுதுங்க.”, நம்பிக்கையாகப் பேசினார் ரோஜா.
“ஹ்ம்ம்,,, நீ சொல்றதும் சரிதான்… அப்ப ஸ்ரீகிட்ட ஒரு வார்த்தை பேசிட்டு, அவங்ககிட்ட சண்டே வர சொல்லிடலாமா? நேர பார்த்து பேசலாம். எல்லாம் சரி வந்தா ப்ரோசீட் பண்ணலாம்.”, பாண்டியன் ஒத்துக்கொண்டார்.
“சரி… நான் போய் காபியை போட்டுட்டு அவளை கூப்பிடறேன். நீங்களே சொல்லுங்க.”, என்று எழுந்து சென்றார் ரோஜா.
காபி என்று வந்தவளிடம் கல்யாணம் என்று சொன்னதும், ஸ்ரீ மிரண்டாள்.
“அப்பா… இப்பவே கல்யாணம் வேணாம்ப்பா…. இந்த விஷயம் கொஞ்சம் ஆறட்டும்.”, யார் எவரென்று கேட்கும் முன்னரே இடைமறித்தாள்.
“நீ பண்ணி வெச்ச வேலைக்கு, எத்தனை வருஷமானாலும் உனக்கு கல்யாணம்னா தோண்டி எடுத்து பேசத்தான் செய்வாங்க. இப்ப பேச்சோட பேச்சா இதையும் பேசி முடிச்சிருவாங்க.”, ரோஜா அவள் வாயை அடைத்தார் காட்டமாக.
“மா… நீங்க வரன் பார்த்து, யாராவது இந்த வீடியோ வெச்சு திரிச்சு பேசி, அவங்க வேணாம்னு போவாங்க. இல்லை கோக்கு மாக்கா எதாவது கேள்வி கேட்பாங்க. இதெல்லாம் ரிஸ்க்மா…. வேணாம்.”, ஸ்ரீ தாயிடம் முறையிட்டாள்.
“எல்லார் வாயையும் அடைக்கறா மாதிரிதான் மாப்பிள்ளை பார்த்திருக்கு. ஒருத்தனும் ஒன்னும் திரிச்சு பேச முடியாது. “, பாண்டியன் கூறவும்,
“யாருப்பா ?”, என்று ஒரு வழியாக மாப்பிள்ளையைப் பற்றி கேட்டாள்.
“ம்ம்…. எங்களுக்கே தெரியாத உன் அத்தை பையன்…. உன்னை காப்பாத்தினவருதான்….”, ரோஜா நக்கலாகக் கூற,
“ம்மா… என்ன பேசறீங்க? ஒரு மனுஷன் உதவப் போனா ? அதுக்காக அவர் தலையில என்னை கட்டிருவீங்களா? நோ வே…”, ஸ்ரீ எழுந்துவிட்டாள்.
“நாங்களா ஒன்னும் கேட்கலை… அவங்களாத்தான் பொண்ணு கேட்கறாங்க.”, என்றார் ரோஜா ரோஷமாக.
“எதோ கட்டாயத்துனாலதான் அப்படி இருக்கும். எனக்கு நல்லா தெரியும், நவீனுக்கு இப்போ ரொம்ப க்ரூஷியல டைம். அவர் கவனம் விளையாட்டுல இருக்கணும். கண்டிப்பா விரும்பி கல்யாணத்துக்கு கேட்டிருக்க மாட்டார்.”, ஸ்ரீ வாதாடினாள்.
பாண்டியன் பொறுமையாக நவீன் தன்னிடம் பேசியதையும், அதை தொடர்ந்து அவர் தந்தை தன்னிடம் பேசியதையும் மகளுக்கு கூறினார்.
ஸ்ரீக்கு எப்படி எடுத்துக்கொள்வது என்றே ஒரு நிமிடம் புரியவில்லை. தந்தைக்கு அழைத்துச் சொன்னவன் ஒரு வார்த்தை தன்னை கேட்கவில்லை. அவன் பெற்றொர் எதோ குற்ற உணர்ச்சி, வாழ்க்கை பாதிப்பு என்று பினாத்துகிறார்கள். கோவம் சரசரவென்று ஏரியது அவளுக்கு.
“மா… கண்டிப்பா நான் ஒத்துக்க மாட்டேன். நானே போன் செய்யறேன் அவங்களுக்கு. என் வாழ்கை பாழாப்போற அளவுக்கு ஒன்னும் நடக்கலை. இதெல்லாம் தெரிஞ்சு கட்டிக்க வரவன் வரட்டும், இல்லாட்டியும் பரவாயில்லை. எனக்கு யாரும் வாழ்க்கை பிச்சை போட வேணாம். “, கோபமாக ஸ்ரீ கத்த, முதுகில் ஓங்கி ஒரு அடி வைத்தார் ரோஜா.
“ஆ…”, எதிர்பாராத இந்த அடியில் முதுகு எறிய கண்ணில் நீர் தளும்பியது ஸ்ரீக்கு.
“ம்ப்ச்…வனா… பேசி புரியவை… அடிச்சு என்ன சாதிக்கப்போற? கோவத்தை குறை.”, மனைவியை சிடுசிடுத்தார் பாண்டியன்.
“கோவம் இல்லை… பதட்டம். எல்லாம் கூடி வர நேரம் இவ கொட்டி கவிழ்க்கக் கூடாதேன்னு பயம்.”, ரோஜா இரைந்தார்.
“ஊஃப்”, என்று ஒரு பெருமூச்சு விட்டவர், “ நீ உட்கார். “, என்று மனைவியை சொன்னவர், மறுபுறம் அவர் புஜத்தை கட்டிக் கொண்டு கண்ணீர் வடித்த மகளை தட்டி, “ இங்க நிமிர்ந்து பார்த்து கவனமா கேளு ஸ்ரீம்மா. இன்னும் சின்ன பொண்ணு இல்லை நீ. “, என்றார்.
தந்தையின் குரலிலும் கண்டிப்பு தெரிய அவர் முகம் பார்த்தாள் ஸ்ரீநிதி, “ நவீன் நல்ல பிள்ளை. நீதான் அவனை நம்ம வீட்டுக்கே கூட்டிட்டு வந்த. இந்த சில மாசம் இரண்டு பேரும் பழகியிருக்கீங்க. பிடிக்கும்தானே ? நீ பேசின வீர வசனம் எல்லாம் சொல்றதுக்கும் கேட்கறதுக்கும் நல்லா இருக்கும். ஆனா நடைமுறைக்கு ஒத்து வராது. புதுசா யார் வந்தாலும் கேள்விங்க வரும். அதெல்லாம் கேட்கக் கூடாதுன்னு சொல்ல முடியாது. இரண்டாவது உன் விஷன். அதை வரவங்க எப்படி எடுத்துப்பாங்கன்னு தெரியாது. உங்கம்மாக்கு அதுவே பெரிய பயம். நவீன் அதை சாதாரணமாத்தான் எடுத்துகிட்டார். அவங்க வீட்ல கூட இதுபத்தி எதுவும் சொல்லிக்கலை. இதுவே பெரிய ப்ளஸ். சும்மா கல்யாணமே ஆகலைன்னா பரவாயில்லைன்னு சொல்றதெல்லாம் சுத்த பைத்தியக்காரத்தனம்.
அம்மா சொன்ன மாதிரி அவங்களாதான் தேடி வராங்க. நமக்கு அனுகூலம்னா ஒத்துக்கறதுல தப்பில்லை. நவீனுக்கு தெரியாம அவங்க கேட்கலை. அவரும் யோசிக்காம சரின்னு சொல்லியிருக்க மாட்டார். அதனால வேணாங்கறதுக்கு வேற எதாவது உருப்படியான காரணம் இருந்தா சொல்லு. “, என்ற பாண்டியனுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் முழித்தாள் ஸ்ரீ.
‘நீங்க போன் பண்ணி அவங்களை வர சொல்லுங்க. இவ தத்துபித்துன்னு உளறிகிட்டு இருப்பா. அதையெல்லாம் பார்த்துகிட்டு இருக்க முடியாது.”, ரோஜா நாளுக்கு நாள் வில்லி அவதாரம் எடுத்துக்கொண்டிருந்தார் போல் இருந்தது ஸ்ரீக்கு.
முதுகு, மனது, மூளை என்று எல்லாமாக எரிந்தது. இப்படியா தன் கல்யாணம் நடக்க வேண்டும்? ஜக்கி காட்டிய காட்சியை ஞாபகப்படுத்திப் பார்த்தாள். அதில் தான் சந்தோஷமாக அமர்ந்திருந்தோமா இல்லையா என்று நினைவில் இல்லை. பெண் மனம் எதையெல்லாமோ நினைத்திருக்க, இப்படி ஒரு கட்டாயத்தில் நடக்கும் ஒரு நிகழ்வாக சத்தியமாக எதிர்பார்க்கவில்லை.