அவன் என்ன தான் விளக்கம் கொடுத்தாலும், அவன் செய்தது மாபெரும் தவறல்லவா? அதனிமித்தம் அவள் அப்படி நடந்து கொண்டதை எண்ணி இப்போது அவனுக்கு கோபத்திற்கு மாறாக வேதனைதான் எழுந்தது.
‘என்ன செஞ்சு நான் இவளை சமதானப் படுத்துவேன்?! இங்கயே இருந்தாலாவது எப்படியாச்சும் கொஞ்ச நாள்ல அவளை சமாதானப் படுத்திடலாம்! ஆனா அடுத்த வாரம் மறுபடியும் ஊருக்குப் போயாகணுமே?!’ என்று எண்ணியவனுக்கு ஆயாசமாக இருந்தது.
‘ச்சே! எல்லா விஷயத்துலயும் இப்படி அவசரப்பட்டு அவசரப்பட்டே என் நிம்மதியோடு சேர்த்து இப்போ அவ நிம்மதியையும் அழிச்சி வச்சிருக்கேன்!’ என்று மனதிற்குள் தன்னையே திட்டித் தீர்த்தவன், உறங்கும் தன்னவளையே செய்வதறியாது பார்த்திருந்தான்.
ஏனோ அவனுக்கு அன்று தங்கள் சிறுவயதில் அந்த வயக்காட்டில் அவளைத் தன் மடியில் படுக்க வைத்து, தலைவருடிக் கொடுத்த நினைவு எழ, மனதில் நெகிழ்வோடு சேர்ந்து பாரமும் சூழ்ந்து கொண்டது.
‘அன்று மாமன் மகளாய் மட்டுமே அத்தனை உரிமை எடுத்து இருவரும் பழகி இருக்க, இன்று எனக்கே எனக்கானவளாய் அவள் ஆன பின்னும் அவளை நெருங்கக் கூட முடியாத அளவிற்கு தன் நிலை மாறி இருப்பது தான் செய்த முட்டாள்தனத்தின் விளைவைத் தவிர வேறு என்ன? தேடி வந்த பொக்கிஷத்தை வேண்டாம் என்று நிராகரித்ததன் பலனை இன்று நன்றாய் அனுபவிக்கிறேன்.’
நெடு நேரம் ஏதேதோ யோசனையில் மூழ்கி இருந்தவனுக்கு, லேசாய் கண்கள் செருகவும், அவளுக்கு சற்றுத் தொலைவில் மற்றொரு பாயை விரித்துப் படுத்துக் கொண்டான் அவளைப் பார்வையால் வருடியபடியே.
மறுநாள், கவி பிள்ளை உண்டாகி பெயருக்கென ஐந்தாம் மாதம் ஆரம்பித்து இருந்ததில், கண்ணன் ஊரில் இருக்கும் போதே அவளுக்கு பூமுடிப்பு சடங்கு நடத்த வீட்டினர் முடிவெடுத்து இருந்தனர்.
அதனிமித்தம் அந்த வாரத்தின் வெள்ளிக்கிழமை அன்றே விசேஷம் நடக்க இருக்க அதற்கான அழைப்பை நெருங்கிய உறவினருக்கும், அக்கம் பக்கத்துக்கு வீட்டினருக்கும் விடுத்துக் கொண்டிருந்தனர் வீட்டுப் பெரியவர்கள்.
அவனுக்கு தான் இங்கு இருக்கும் போதே சடங்கு நடப்பதில் ஒருபுறம் பெரும் மகிழ்ச்சி எழுந்தாலும், அவள் முகம் கொடுத்துக் கூடப் பேசாது இருந்தது பெரும் வருத்தத்தையும் கொடுத்தது.
இதனிடையே கார்த்திக், கங்கா இருவருக்கும் ஆடி போய் ஆவணி மாதத்தில் திருமணத்திற்கும் நாள் குறிக்கப்பட்டிருக்க திருமண பரபரப்பும் ஒட்டிக் கொண்டது இரு வீட்டினருக்கும். வீடே விசேஷ கலகலப்பில் இருக்க, அதன் மகிழ்ச்சி அவளையும் ஓரளவு ஆட்கொண்டிருந்தது. அவளின் அந்த மகிழ்வே அவனுக்கு இதம் கொடுக்க, அவளை மேலும் தொந்தரவு செய்யாமல் ஒதுங்கியே நின்றான் இருவரும் தனிமையில் இருக்கும் நேரம்.
ஆனால் அவள் இந்த நிலையிலும் காட்டிற்கும் தோப்பிற்கும் வேலைக்குச் செல்வது அவனுக்குக் கொஞ்சமும் பிடிக்கவில்லை! அதை வாய்விட்டுச் சொல்லியும் பார்த்துவிட்டான். ஆனால் அவன் பேசுவது எதுவுமே அவள் காதில் விழுந்ததாய்க் கூடத் தெரியவில்லை அவனுக்கு.
அன்று காலை அவள் வேலைக்குக் கிளம்பும் போது, “கவி நான் அவ்ளோ தூரம் சொல்றேன்! நீ மறுபடியும் மறுபடியும் உன் இஷ்டத்துக்கு நடந்தா என்ன அர்த்தம்?!” என்றான் சற்றே கோபமாய்.
“நீ சொல்றதுக்கு முன்னாடியே நாங்களும் சொல்லிட்டோம்! அவ அதெல்லாம் கேட்குற மாதிரி தெரியலைய்யா!” என்று பாட்டியும் சேர்ந்து குறைபட,
அவனை நேருக்கு நேர் முறைத்தவள், “இங்க பல மனுஷங்க கொடுக்குற கஷ்டத்தை விட இந்த வேலை ஒண்ணும் எனக்கு பெரிய கஷ்டமா தெரியலை! அதோட என்னிக்குமே என் பூமிதான் எனக்குத் துணையாவும், ஆறுதலாவும் இருந்திருக்கு என்னோட எல்லாக் கஷ்ட காலங்கள்லயும்! இந்த மனுஷங்களை மாதிரி என்னை என்னிக்கும் என் பூமித் தாய் கஷ்டப் படுத்திட மாட்டா!” என்று அவள் பட்டெனச் சொல்ல அவன் முகம் வாடிப் போனது.
‘உண்மைதானே அவ சொல்றதுதானே நிஜம்?!’ என்று அவன் உள்ளமும் சுட்ட, அவனால் மறுவார்த்தைப் பேச முடியாமற் போனது.
“அட அப்படி என்னடி கஷ்டப் படுத்திட்டாங்க உன்னை மனுஷங்க?!” என்று பாட்டி குறைபட,
“அது கஷ்டப்படுத்தினவங்களுக்குப் புரிஞ்சா போதும்!” என்றுவிட்டு அவள் கிளம்ப,
“என்னய்யா இந்தப் பொண்ணு? பிள்ளையே வந்த பிறகும் இப்படி முட்டிக்கிட்டுத் திரியுது?! அப்படி என்னதான் தீராத பிரச்சனை உங்களுக்குள்ள?!” என்று பாட்டி நேரடியாகவே கேட்டுவிட்டார் அவனிடம்.
சட்டென என்ன சொல்வது என்று புரியாது விழித்தவன், “அ அது வந்து அப்பத்தா, நான், நான் வெளிநாடு போனதுல அவளுக்குக் கோபம், அதான் இப்படி எல்லாம் பேசிட்டுப் போறா” என்று சமாளித்தான் ஒருவாறாய்.
“ஆமாம்! அதுவும் சரிதான் அவ கோபத்துலயும் நியாயம் இருக்குதானே?! இப்படி கல்யாணம் ஆகியும், பட்டணமும், வெளிநாடுமா சுத்திக்கிட்டு இருந்தா எந்த பொஞ்சாதிக்கு தான் கோவம் வராது?!” என்று குறைபட்டவர்,
“புள்ளை பொறக்கும் போதாவது பக்கத்துல இருக்க மாதிரி பார்த்துக்கோ ய்யா” என்றார்.
“ம் கண்டிப்பா அப்பத்தா” என்றான்.
*****
பூமுடிப்பு நாள். வீடு பரபரப்பாகவும், உற்சாகமாகவும் இருந்தது. அவளுக்குமே மனம் சற்று உற்சாகமாகத்தான் இருந்தது. என்னதான் அவன் வலுக்கட்டாயமாய் தன்னை எடுத்துக் கொண்டதில் உருவான உயிரானாலும், அவள் உயிருக்கும் மேலாய் நேசித்தவனின் சிசுவல்லவா!
சடங்கிற்காய் அதிகாலையே எழுந்து தலை குளித்துவிட்டு வந்து முகுர்த்த புடவை உடுத்தித் தயாரானவள், தன் அறையில் இருந்த அந்தப் பழைய மரபீரோவின் கண்ணாடியில் தனது உருவத்தின் மாற்றத்தைப் பார்த்தவாறே, லேசாய் மேடிட்டிருந்த தனது வயிற்றை தடவிப் பார்த்தாள்.
அவள் கண்கள் லேசாய்ப் பனித்தது.“தங்கப்பா, அம்மா மேல எதுவும் கோவம் இல்லையே?!” என்றாள் உள்ளம் கலங்க.
அப்போது பாட்டி அவளை அழைத்து வரச் சொன்னதற்காய் அவள் அறை அருகே வந்த கண்ணன், அவளின் குரல் கேட்டு அப்படியே வெளியில் நின்றுவிட்டான்.
‘எதுக்கு இவ இப்படிக் கேட்குறா?!’ என்று அவன் யோசித்தபடி நிற்க,
“எதுக்கு கோவப்படணும்னு கேட்கறீங்களா?!” என்று அவளே மீண்டும் கேள்வி கேட்டவள்,
“நீங்க உண்டான போது, ஒரு நொடி நீங்க வேணுமா வேணாமானு யோசிச்சேன்ல, அதுக்குத்தான்!”
“தப்புதான்! அம்மா அப்படி நினைச்சத் தப்புதான்! உன் அப்பா பண்ண தப்புக்கு நீ என்ன செய்வச் சொல்லு?!” என்று அவள் பிள்ளையிடம் கேட்க, இவனுக்குதான் பெரும் குற்ற உணர்வாகிப் போனது.
“நான் உன்னைப் பத்தி எவ்ளோ கனவு கண்டிருக்கேன் தெரியுமா?! நானும் உன் அப்பாவும், ஒருத்தரை ஒருத்தரை காதலிச்சுப் புரிஞ்சிக்கிட்டு வர அந்நியோன்யத்துலயும், நேசத்துலயும் நீ உருவாகணும்னு நினைச்சேன்! ஆனா ஆனா?” என்றவளால் அதற்கு மேல் பிள்ளையிடம் எதையும் சொல்ல முடியவில்லை! அந்த நாளின் நிகழ்வில் அவள் மனம் கனத்துப் போனது. அதை எல்லாம் வெளியே நின்று கேட்டிருந்தவனின் மனமோ, அவளை விட துடித்துப் போக, வேகமாய் அவளருகே சென்று அவளைத் தன் மார்போடு அணைத்துக் கொண்டு ஆறுதல் கொடுத்து ஆறுதல் தேட வேண்டும் போல் இருந்தது.
ஆனால் அப்போதைய சூழ்நிலைக்கு அது சாத்தியமில்லை என்பது புரிய, மெல்ல,
“கவிம்மா” என்றான் உள்ளே சென்ற குரலில்.
அவன் குரல் கேட்டு சட்டென விதிர்விதிர்த்துத் திரும்பியவளை,
“ஒண்ணுமில்லை ஒண்ணுமில்லை. பதட்டப் படாத. பாட்டி கூப்பிட்டாங்க” என்று விட்டு சட்டென அங்கிருந்து சென்றுவிட்டான்.
‘நான் பேசினதைக் கேட்டிருக்குமோ?!’ என்று ஒரு நொடி யோசித்தவள்,
‘கேட்டா மட்டும் என்ன?! அப்படியே திருந்திடப் போகுதாக்கும்!’ என்று எண்ணிக்கொண்டு வெளியே வந்தவளின் நாசியை அந்த இனிய மணம் நிறைத்தது.
கூடத்தில் நிறைய உறவுக்காரப் பெண்மணிகளும், அக்கம்பக்கத்து வீட்டுப் பெண்மணிகளும் அமர்ந்திருக்க, பூக்கள் கொண்டு நேரடியாக பின்னளிலேயே ஜடை தைப்பதற்காய் அவர்கள் ஊர் ஜடை வேலைப்பாடு செய்யும் பெண்மணியும் வந்திருந்தார்.
கிராமங்களில் தைத்த ஜடையை வாங்கி வைப்பதைவிட, பூக்கள் கொண்டு அவர்களே பின்னலில் ஜடை தைப்பதுதான் வழக்கம். அதற்காக அங்கே வாங்கி வைக்கபட்டிருந்த பூவைப் பார்த்து பெண்கள் அனைவரும்,
“அட! இந்த பூ எப்படி உங்களுக்குக் கிடைச்சது?!” என்று ஆச்சர்யத்துடன் கேட்டுக் கொண்டிருக்க,
அவள் கண்கள் ஒரு நொடி பளிச்சிட்டு மறைந்தது. அந்த ஒரு நொடி சந்தோஷத்திற்காகவே காத்திருந்தவன், அவள் முகம் பார்த்தே நின்றிருக்க,
‘அப்பவும் சரி இப்பவும் சரி உன்மேல நான் வச்சிருக்க பாசம் மாறலடி!’ என்று மனதோடு முணுமுணுக்க, அவள் தன் முகத்தில் எந்த வித உணர்வையும் வெளிப்படுத்தாமல் அமைதியாய் சென்று அமர்ந்தாள்.
அவன் வாங்கி வந்திருந்த மகிழம் பூவை ஆசையாய்க் கையில் அள்ளியவள், அதன் மணத்தில் மெய்சிலிர்க்கக் கண்மூடினாள்.
தான் பூப்பெய்தியபோது இந்தப் பூவில்தான் ஜடை தைக்க வேண்டும் என்று அடம் பிடித்ததையும், அப்போதும் அவன்தான் எங்கெங்கோ தேடி அலைந்து அந்தப் பூக்களைப் பறித்து வந்ததையும் நினைவு கூர்ந்தவளின் முகம் சற்றே கனிந்தது.